ஆ ஆ என்பவருக்கு என்ன? அன்னம் படைப்பவர்க்கல்லவா தெரியும். 1720

ஆ என்ற ஏப்பமும் அலறிய கொட்டாவியும் ஆகா.

ஆ என்று போனபிறகு அள்ளி இடுகிறதா?

(பி-ம்.) இடுவது யார்?

ஆக்க அறியாவிட்டால் புளியைக் கரை; அழகு இல்லாவிட்டால் மஞ்சளைப் பூசு.

(பி-ம்.) அறியாதவள் புளியைக் குத்தினானள், இல்லாதவள் மஞ்சளைப் பூசினாள்.

ஆக்கப் பிள்ளை நம் அகத்தில்; அடிக்கப் பிள்ளை அயல் வீட்டிலோ?

(பி-ம்.) நம் வீட்டில், அடிக்கிற பிள்ளை.

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கல் ஆகாதா? 1725

(பி-ம்.) பொறுத்தவனுக்கு ஆறப் பொறாதோ? பொறுத்த உனக்கு.

ஆக்கம் கெட்ட அக்காள் மஞ்சள் அரைத்தாலும் கரி கரியாக வரும்.

ஆக்கம் கெட்ட அண்ணன் வேலைக்குப் போனால் வேலை கிடைக்காது; வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது.

ஆக்க மாட்டாத அழுகல் நாரிக்குத் தேட மாட்டாத திருட்டுச் சாவான்.

ஆக்க மாட்டேன் என்றால் அரிசியைப் போடு.

ஆக்கவில்லை, அரிக்கவில்லை; மூக்கெல்லாம் முழுக்கரியாக இருக்கிறதே! 1730

ஆக்க வேண்டாம், அரிக்க வேண்டாம் பெண்ணே; என் அருகில் இருந்தால் போதுமடி பெண்ணே.

(பி-ம்.) கண்ணே.

ஆக்கி அரித்துப் போட்டவள் கெட்டவள்; வழி காட்டி அனுப்பினவள் நல்லவள்.

ஆக்கிக் குழைப்பேன்; அரிசியா இறக்குவேன்.

ஆக்கிப் பெருக்கி அரசாள வைத்தேன்; தேய்த்துப் பெருக்கித் திரிசமம் பண்ணாதே.

ஆக்கினவள் கள்ளி; உண்பவன் சமர்த்தன். 1735

ஆக்கினையும் செங்கோலும் அற்றன அரை நாழிகையிலே.

ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ்; குத்துகிறவள் சலித்தால் குந்தாணிபாழ்.

(பி-ம்.) அன்னம் பாழ்.

ஆக்குகிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண்.

ஆகட்டும் போகட்டும், அவரைக் காய் காய்க்கட்டும்; தம்பி பிறக்கட்டும்; தம்பட்டங்காய் காய்க்கட்டும்; அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும்; உன்னைக் கூப்பிடுகிறேனா, இல்லயா பார் என்றானாம்.

ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான். 1740

ஆக வேணும் என்றால் காலைப் பிடி; ஆகா விட்டால் கழுத்தைப்பிடி.

ஆகாசக் கோட்டை கட்டியது போல.

ஆகாசத் தாமரை.

ஆகாசத்தில் எறிந்தால் அங்கேயே நிற்குமா?

ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்லுகிறேன்; என்னை ஆற்றுக் கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு. 1745

ஆகாசத்திலிருந்து அறுந்து விட்டேன்; பூமி தேவி ஏற்றுக் கொண்டாள்.

ஆகாசத்தக்கு மையம் காட்டுகிறது போல்.

ஆகாசத்துக்கு வழி எங்கே என்றால் போகிறவன் தலைமேலே.

ஆகாசத்தைப் பருந்து எடுத்துக் கொண்டு போகிறதா?

(பி-ம்.) பருந்தா எடுத்துக் கொண்டு போகிறது?

ஆகாசத்தையும் வடிகட்டுவேன். 1750

(பி-ம்.) வடிகட்டுவான்.

ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்றான்.

(பி-ம்.) கடிக்காலாமா?

ஆகாசம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா?

ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி.

ஆகாசம் பெற்றது, பூமி தாங்கினது

ஆகாசமே விழுந்தாற் போலப் பேசுகிறாயே! 1755

ஆகாச வர்த்தகன்.

ஆகாச வல்லிடி அதிர இடித்தது.

ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம்; அஷ்ட தரித்திரனுக்குப் பெண்ணும் பிள்ளையும்.

ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம் வந்தால் பிரம்மகத்திக்காரனுக்குப் பிள்ளை பிள்ளையாய்ப் பிறக்குது.

ஆகாத்தியக்காரனுக்குப் பிரம்மகத்திக்காரன் சாட்சி. 1760

ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு; அதிலும் கெட்டது குருக்களுக்கு,

ஆகாத நாளில் பிள்ளை பிறந்தால் அண்டை விட்டுக்காரனை என்ன செய்யும்?

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்.

ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக் கொள்.

ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்க வேண்டும். 1765

ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அடுத்த வீட்டுக்காரனை என்ன செய்யும்?

ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்?

ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அப்பனையும் ஆத்தாளையும் கொல்லுமேயொழிய, பஞ்சாங்கம் சொன்ன பார்ப்பானை என்ன செய்யும்?

ஆகாதே உண்டது நீலம் பிறிது.

(பழமொழி நானூறு.)

ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா? 1770

ஆகாயத்தில் கூட அரைக் குழிக்கு அவகாசம் இல்லை.

ஆகாயத்தில் போகிற சனியனை ஏணி வைத்து இறக்கின மாதிரி.

ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல.

ஆகாயததைப் படல் கொண்டு மறைப்பது போல.

ஆகாயத்தை வில்லாக வளைப்பான்; மனலைக் கயிறாகத் திரிப்பான். 1775

ஆகாயப் புரட்டனுக்கு அந்தரப் புரட்டன் சாட்சி சொன்னானாம்.

ஆகாயம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா?

ஆகாயம் போட்டது; பூமி ஏந்திற்று.

ஆகாயம் மணல் கொழித்தால் அடுத்தாற் போல் மழை.

(பி-ம்.) மணல் கொண்டிருந்தால்.

ஆகாயம் விழுந்து விட்டது போல. 1780

ஆகாயம் மட்டும் அளக்கும் இருப்புத் தூணைச் செல் அரிக்குமா?

ஆகிற காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்.

ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும்.

ஆகிற காலத்திலெல்லாம் அவிசாரி ஆடி, சாகிற காலத்தில் சங்கரா என்றாளாம்.

ஆகிறது அரைக் காசில் ஆகும்; ஆகாதது ஆயிரம் பொன்னாலும் ஆகாது. 1785

ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்; ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் ஆகான்.

(பி-ம்.) விடியாது.

ஆகும் காய் பிஞ்சிலே தெரியும்.

ஆகும் காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்.

ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.

ஆகும் காலம் எல்லாம் அவிசாரி போய் விட்டுச் சாகும் காலத்தில் சங்கரா சங்கரா என்றாளாம். 1790

(பி-ம்.) அங்கும் இங்கும் ஆடி.

ஆகும் காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்,

ஆங்காரத்தாலே அழிந்தவர் அனந்தம் பேர்.

ஆங்காரிகளுக்கு அதிகாரி,

ஆங்காரியை அடக்குபவன் அதிகாரி.

ஆச்சாபுரம் காட்டிலே ஐம்பது புலி குத்தினவன் பறைச்சேரி நாயோடே பங்கம் அழிகிறான். 1795

ஆச்சா விதைத்தால் ஆமணக்கு விளையுமா?

ஆச்சானுக்குப் பீச்சான் ; மதனிக்கு உடன் பிறந்தான்,

ஆச்சானுக்குப் பீச்சான்; மதனிக்கு உடன் பிறந்தான்; நெல்லுக் குத்துகிறவளுக்கு நேர் உடன் பிறந்தான்.

(பி-ம்.) நெல்லுக்குத்துக்காரிக்கு.

ஆச்சி, ஆச்சி, மெத்தப் படித்துப் பேசாதே.

ஆச்சி திரளவும் ஐயா உருளவும் சரியாக இருக்கும். 1800

ஆச்சி நூற்கிற நூல் ஐயர் பூணூலுக்குச் சரி.

ஆச்சி நூற்பது ஐயர் பூணூலுக்கும் காணாது.

ஆசந்திரார்க்கம்.

(சந்திரர் சூரியர் உள்ளவரையில்.)

ஆசரித்த தெய்வமெல்லாம அடியோடே மாண்டது என்கிறான்.

(பி-ம்.) ஆசிரயித்த.

ஆசன கீதம் ஜீவன நாசம். 1805

ஆசாபாசம் அந்தத்தில் மோசம்.

ஆசாரக் கள்ளன்.

(தண்டலையார் சதகம்.)

ஆசாரத்துக்கு ஆசாரம்; கைத்துக்குச் சுகம்.

ஆசாரப் பார்ப்பான் ...............க்குப் போனானாம்; பறையன் கோசம் தலையில் அடிபட்டதாம்.

ஆசாரப் பூசைப்பெட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி. 1810

(பா-ம்.) தோசைபெட்டி.

ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்து போனேனே!

ஆசாரி குத்து.

ஆசாரி செத்தான் என்று அகத்திக் கழி கட்டி அழுகிறாற்போல்.

(செத்தான்-செதுக்கமாட்டான்.)

ஆசாரி பெண்ணுக்கு அழகா பார்க்கிறது?

ஆசாரியருக்கு ..............தலை அம்பட் ........................................... 1815

(தென் கலை வைணவ விதவைகள்.)

ஆசாரி வீட்டுக்கு அடுப்பு இரண்டு.

ஆசானுக்கும் அடைவு தப்பும்; ஆனைக்கும் அடி சறுக்கும்.

ஆசிரியர் சொல் அம்பலச் சொல்,

ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.

ஆசை அண்டாதானால் அழுகையும் ஆண்டாது. 1820

ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்.

ஆசை அதிகம் உள்ளவனுக்கு ரோசம் இருக்குமா?

ஆசை அவள் மேலே; ஆதரவு பாய் மேலே.

ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்; தொண்ணுாறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி.

ஆசை இருக்கிறது. ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கிறது கழுதை மேய்க்க. 1825

ஆசை இருக்கிறது தாசில் பண்ண; அதிருஷ்டம் இருக்கிறது மண் சுமக்க.

(பா-ம்.) ஆடு மேய்க்க, கழுதை மேய்க்க.

ஆசை உண்டானால் பூசை உண்டு.

ஆசை உள்ள இடத்தில் பூசை நடக்கும்.

ஆசை உள்ள இடத்தில் பூசையும் அன்பு உள்ள இடத்தில் தென்பும்.

ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு. 1830

ஆசை உறவு ஆகுமா? ஆதரவு சோறு ஆகுமா?

ஆசை எல்லாம் தீர அடித்தான் முறத்தாலே.

ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை.

ஆசைக்கு அளவு இல்லை.

(பா-ம்.) ஓர் அளவில்லை, தாயுமானவர் பாடல்.

ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை. 1835

ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும்.

ஆசைக்கு ரோசம் இல்லை.

ஆசை கடுக்குது; மானம் தடுக்குது.

ஆசை காட்டி மோசம் செய்கிறதா?

ஆசை கொண்ட பேருக்கு ரோசம் இல்லை. 1840

ஆசை தீர்ந்தால் அல்லல் தீரும்.

ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?

(ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாங்கொலோ, கம்பராமாயணம்.)

ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் ஆண்பிள்ளை அடுத்த கண்ணும் பாரான்.

ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று.

(பி-ம்.) ஆசைப்பட்டது.

ஆசைப்பட்டு மோசம் போகாதே. 1845

ஆசைப்படுவது அவ்வளவும் துன்பம்.

ஆசை பெரிதோ? ஆனை பெரிதோ?

(பா-ம்.) மலை பெரிதோ?

ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.

ஆசை மருமகன் தலைபோனாலும் ஆதிகாலத்து உரல் போகக் கூடாது.

ஆசையினால் அல்லவோ பெண்களுக்கு மீசை முளைப்ப தில்லை? 1850

ஆசையும் நாசமும் அடுத்து வரும்.

ஆசை ரோசம் அறியாது.

ஆசை வெட்கம் அறியுமா?

ஆசை வைத்தால் நாசந்தான்.

ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக் கொடுக்கும். 1855

(பா-ம்.) பிடித்துக் கொடுக்கும்.

ஆட்காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனோ? அவன் கால் அடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ?

ஆட்சி புரிய அரண்மனை வாசலிலே பாரக் கழுக்காணி பண்ணிப் புதைத்திருக்கிறது.

ஆட்டத்துக்குத் தகுந்த மேளம்; மேளத்துக்குத் தகுந்த ஆட்டம்.

ஆட்டம் எல்லாம் ஆடி ஓய்ந்து நாட்டுப் புறத்துக்கு வந்தான்.

ஆட்டம் நாலு பந்தி; புறத்தாலே குதிரை.

ஆட்டம் போட்ட வீட்டுக்கு விட்டம் ஒரு கேடா? 1860

ஆட்டமும் கூத்தும் அடங்கின அத்தோடே.

ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்; அடைப்பக் கட்டைக்கு ஒரு துடைப்பக் கட்டை.

(பா-ம்.) சீட்டாள், அடுப்புக் கட்டிக்கு, துடுப்புக் கட்டை.

ஆட்டி அலைத்துக் காசு வாங்கினேன்; செல்லுமோ செல்லாதோ? அதைக் கொண்டு எருமை வாங்கினேன்; ஈனுமோ, ஈனாதோ?

ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம்; வீட்டிலே கரண்டிபால் இல்லை.

ஆட்டிலே பாதி ஓநாய். 1865

ஆட்டி விட்டால் ஆடுகிற தஞ்சாவூர்ப் பொம்மை.

ஆட்டின் கழுத்து உறுப்புப் போல.

ஆட்டு உரம் ஒராண்டு நிற்கும்; மாட்டு உரம் ஆறாண்டு நிற்கும்.

ஆட்டு உரம் பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும்.

ஆட்டு எரு அந்த வருஷம்; மாட்டு எரு மறு வருஷம். 1870

(பா-ம்.) அந்தப் போகம், மறு போகம்.

ஆட்டு எரு அவனுக்கு; மாட்டு எரு மகனுக்கு.

ஆட்டுக்கடாச் சண்டையிலே நரி அகப்பட்டதுபோல.

(பா-ம்) ஆட்டுக்கிடா, நரி செத்தது போல.

ஆட்டுக்கடா பின் வாங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

ஆட்டுக்கடா முறைத்தது போல முறைக்கிறான்.

ஆட்டுக் கறியும் நெல்லுச் சோறும் தம்மா கும்மா; அந்தக் கடன் கேட்கப் போனால் கிய்யா மிய்யா. 1875

ஆட்டுக்கிடையிலே ஓநாய் புகுந்ததுபோல.

(பா-ம்.) ஆட்டுக்கிடா புகுந்தது போல.

ஆட்டுக்கு அதர் உண்டு.

ஆட்டுக்கு ஒத்தது குட்டிக்கு.

ஆட்டுக்குச் சுகமானபின் ஆட்டுமயிரைக்கூட இடையன் சாமிக்குக் கொடுக்க மாட்டான்.

ஆட்டுக்குட்டி எவ்வளவு துள்ளினாலும் ஆனைஉயரம் வருமா? 1880

ஆட்டுக்குட்டிக்கு ஆனை காவு கொடுக்கிறதா?

ஆட்டுக்குட்டிமேல் ஆயிரம் பொன்னா?

ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக்கொண்டு ஊர் எங்கும் தேடினது போல.

(பா-ம்.) காடு எங்கும்.

ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது.

ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி? 1885

(பா-ம்.) தோற்ற கிழப்புலியா?

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; அறிவு இல்லாதவனுக்கு மூன்று கொம்பு.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; இந்த மதிகெட்ட மாட்டுக்கு மூன்று கொம்பு.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; ஐயங்காருக்கு மூன்று கொம்பு.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; ஐயம் பிடாரிக்கு மூன்று கொம்பு.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் முறையா? காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா? 1890

ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கிறது: (+ மாட்டுக்கு வால் மட்டந்தட்டி வைத்திருக்கிறது.)

ஆட்டுக்கு வேகம் பள்ளத்திலே; ஆனைக்கு வேகம் மேட்டிலே.

(பா-ம்.) அலைகிறது போல.

ஆட்டுத்தலைக்கு ஓச்சன் பறக்கிறது போல.

ஆட்டுத் தலைக்கு வண்ணான் பறக்கிறதுபோல.

ஆட்டு மந்தையிலே கோனாய் புகுந்தாற் போல. 1895

ஆட்டுமந்தையைக் காக்கும் நாய் வீட்டுப் புழுக்கையைக் கூடத்தான் காக்க வேணும்.

ஆட்டு வாணிகர் ஆலிங்கனத்தைவிடக் கூட்டு வாணிகர் குட்டு நல்லது.

(கூட்டு-வாசனைத் திரவியம்.)

ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.

ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளையே கடித்ததாம். 1900

(பா-ம்.) மனுஷனையே.

ஆட்டைக் கழுதையாக்கிய அரிட்டாப் பாடி.

(அரிட்டாப்பாடி-மேலூருக்கும் அழகர் கோவிலுக்கும் இடையே உள்ள சிற்றுார்.)

ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்க வேண்டும்.

(பா-ம்.) பிடிக்கப் பார்க்கிறான்.

ஆட்டைக்கு ஒரு முறை காணக் கோட்டை இல்லையோ?

ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுகிறான்.

ஆட்டைத் தேடி அயலார் கையில் கொடுப்பதைவிட வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது மேல். 1905

ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டு காடெங்கும் தேடினது போல.

ஆட்டை வீட்டுச் சொண்டே, மாமியார் வீட்டேயும் வந்தையோ?

ஆடடா சோமாசி, பெண்டாட்டி பாடையில் போய்ப் படுத்தாளாம்.

ஆடத் தெரியாத தேவடியாள் கூடம் கோணல் என்றாளாம்.

(பா-ம்.) கோணம், காணாது, போதாது.

ஆடப் பாடத் தெரியாதவருக்கு இரண்டு பங்கு உண்டு (+ என்ற கதை.) 1910

ஆடப்போன கங்கை அண்டையில் வந்தாற் போல.

ஆடம்பரம் டம்பம், அபிஷேகம் சூன்யம்.

ஆடமாட்டாத தேவடியாள் பந்தல் கோணல் என்றாளாம்.

(பா-ம்.) கூடம்.

ஆட மாட்டேன், பாட மாட்டேன், குடம் எடுத்துத் தண்ணீர்க்குப் போவேன்.

(வம்புப்பிரியை என்பது கருத்து.)

ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல. 1915

ஆடவன் செத்த பின்பு அறுதலிக்கும் புத்தி வந்தது.

ஆடவிட்டு நாடகம் பார்ப்பது போல்.

(பா-ம்.) வேடிக்கை பார்க்கிறதா

ஆடாச் சாதி ஊடாச் சாதியா?

ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு.

(பா-ம்.) அறுத்தாச்சு.

ஆடாததும் ஆடி ஐயனாருக்குக் காப்பும் அறுத்தாச்சு. 1920

ஆடாதே, ஆடாதே, கம்பங்கதிரே; அதற்கா பயந்தாய் சிட்டுக்குருவி?

ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும்.

(-ஆடி மாதம் மழை பெய்து, ஈரமண்ணில் காலடி புதையுமானால் கார்த்திகையிலும் அதற்குப் பின்னும் மழை இல்லை.)

ஆடி அடி பெருகும்; புரட்டாசி பொன் உருகும்.

ஆடி அமர்ந்தது ஒரு நாழிகையில்.

ஆடி அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலை நெல் விற்கும். 1945

ஆடி அரை மழை.

ஆடி அவரை தேடிப் போடு.

ஆடி அழைக்கும்; தை தள்ளும்.

(பண்டிகைகளை.)

ஆடி அறவெட்டை, அகவிலை நெல் விலை.

ஆடி அறவெட்டை, போடி உன் ஆத்தாள் வீட்டுக்கு. 1930

(பா-ம்.) அரை வட்டை.

ஆடி ஆனை வால் ஒத்த கரும்பு, புரட்டாசி பதினைந்தில் விதைத்த வித்து.

ஆடி இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா.

ஆடி ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை ஒரு சட்டி கறி.

ஆடி ஓடி நாடியில் அடங்கிற்று.

ஆடி ஓடி நிலைக்கு வந்தது. 1935

ஆடி ஓய்ந்த பம்பரம் போல.

ஆடி ஓய்ந்தால் அங்காடிக்கு வர வேண்டும்.

ஆடிக்கரு.

(-கர்ப்போட்டம்.)

ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்து போம்.

ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும். 1940

ஆடிக் காற்றில் அம்மி ஆகாயத்தில் பறக்கும்.

ஆடிக் காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது இலவம் பஞ்சு என்ன சேதி என்று கேட்டதாம்.

(பா-ம்.) அம்மியே மிதக்கும் போது.

ஆடிக் காற்றில் அம்மியும் நகரும்.

ஆடிக் காற்றில் ஆலாய்ப் பறத்தல்.

ஆடிக் காற்றில் ஆனையும் அசையும் போது கழுதைக்கு என்ன கதி? 1945

ஆடிக் காற்றில் இலவம் பஞ்சு பறந்தது போல.

ஆடிக் காற்றில் உதிரும் சருகு போல.

ஆடிக் காற்றில் எச்சில் இலைக்கு வழியா?

(பா-ம்.) எச்சிற் கல்லைக்கு.

ஆடிக் காற்றில் பூளைப்பூப் பறந்தாற்போல்.

ஆடிக் காற்று எச்சிற் கலைக்கு வழியா? 1950

ஆடிக் காற்று நாடு நடுக்கும்.

ஆடிக் கீழ்காற்றும் ஐப்பசி மேல்காற்றும் அடித்தால் அவ்வாண்டும் இல்லை, மறு ஆண்டும் இல்லை மழை.

(பா-ம்.) காற்றும் ஆகாத நாளைக்கு.

ஆடிக்கு அடைபட்டவளே, அமாவாசைக்கு வெளிப்பட்டவளே!

ஆடிக்கு அழைக்காத மாப்பிள்ளையைத் தேடிச் செருப்பால் அடி.

ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்து அடி. 1955

ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி.

ஆடிக்கு ஒரு தடவை, ஆவணிக்கு ஒரு தடவை.

ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்.

ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்.

ஆடிக்குத் தை ஆறு மாசம். 1960

ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்துக் கும்பிட்டானாம்.

ஆடி கழிந்த ஐந்தாம் நாள் கோழி அடித்துக் கும்பிட வந்தான்.

ஆடிச்சீர் தேடி வரும்.

ஆடிச் செவ்வாய் தேடிக் குளி; அரைத்த மஞ்சளைத் தேய்த்துக் குளி.

ஆடிச் செவ்வாய் நாடிப் பிடித்தால் தேடிய கணவன் ஓடியே வருவான். 1965

ஆடித் தவித்த குரங்கு மத்தளத்தில் ஏறி இருப்பது போல.

ஆடித் தென்றல் நாடு நடுங்கும்.

ஆடி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்தது.

ஆடிப் பட்டத்து மழை தேடிப் போனாலும் கிடைக்காது.

ஆடிப் பட்டம் அஞ்சு விதை; அக்கிரகாரம் நிறைய நெல். 1970

ஆடிப்பட்டம் தேடி விதை.

ஆடிப் பண்டிகை தேடி அழை.

ஆடிப் பருத்தியைத் தேடி விதை.

ஆடி பதினைந்தில் ஐம்மூன்று நாழிகையில் ஓடும் கதிரோன ஒளிகுறைந்தால் நாடு செழிக்கும்; நல்ல மழை பெய்யும்.

ஆடிப் பனங்காய் தேடிப் பொறுக்கு. 1975

ஆடிப் பிள்ளை தேடிப் புதை.

(பிள்ளை-தென்னம்பிள்ளை.)

ஆடிப் பிறை தேடிப் பார்.

(பா-ம்.) தேடிப் பிடி.

ஆடிப் பெருங் காற்று.

ஆடி பிறந்தால் ஆசாரியார்; தை பிறந்தால் தச்சப்பயல்.

ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற. 1980

ஆடி பிறந்து ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை பிறந்தால் ஒரு சட்டி கறி ஆகும்.

ஆடி மாதத்தில் குத்தின குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு எடுத்ததாம்.

(பா-ம்.) வலி எடுத்ததாம்.

ஆடி மாதத்தில் நாய் போல.

ஆடி மாதத்தில் விதைத்த விதையும் ஐயைந்தில் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்.

ஆடி மாதம் அடி வைக்கக் கூடாது. 1985

ஆடிமாதம் அவரை போட்டால் கார்ர்த்திகை மாதம் காய்காய்க்கும்.

ஆடி முதல் பத்து, ஆவணி நடுப்பத்து, புரட்டாசி கடைப்பத்து, ஐப்பசி முழுதும் நடலாகாது.

ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா.

(பா-ம்.) மிடறும், வாயும்.

ஆடிய கூத்தும் பாடிய ராகமும்.

ஆடியில் ஆனை ஒத்த கடா, புரட்டாசியில் பூனைபோல ஆகும். 1990

ஆடியில் போடாத விதையும் அறுநான்கில் பிறக்காத பிள்ளையும் பிரயோசனம் இல்லை.

ஆடியில் விதை போட்டால் கார்த்திகையில் காய் காய்க்கும்.

ஆடி வரிசை தேடி வரும்.

ஆடி வாழை தேடி நடு.

ஆடி விதை தேடி நடு. 1995

(பா-ம்.) தேடிப்போடு; விதைக்க வேணும்.

ஆடி விதைப்பு, ஆவணி நடவு.

(பா-ம்.) ஆவணி முளைப்பு.

ஆடி வெப்பல் ஆட்டுக் கிடைக்குச் சமம்.

ஆடி வெள்ளம் ஓடி வர.

ஆடினது ஆலங்காடு; அமர்ந்தது தக்கோலம்; மணக்கோலம் பூண்டது மணவூர்.

ஆடு அடித்த வீட்டில், நாய் காத்தாற் போல. 2000

ஆடு அடித்தால் அந்தப் பக்கம்; அகப்பை தட்டினால் இந்தப் பக்கம்.

ஆடு அடித்தாலும் அன்றைக்குக் காணாது; மாடு அடித்தாலும் மறு நாள் காணாது.

(பா-ம்.) மத்தியான்னம் காணாது.

ஆடு அப்பூ, ஆவாரை முப்பூ.

(பா-ம்.) ஆடி ஆப்பு, ஆவிரை மூப்பு.

ஆடு அறியுமோ அங்காடி வாணிபம்?

ஆடு அறுபது என்பானாம்; வெள்ளாட்டைக் கண்டால் விலுக்கு விலுக்கு என்பானாம். 2005

ஆடு இருக்க இடையனை விழுங்குமா?

ஆடு இருக்கப் புலி இடையனை எடாது.

ஆடு இருந்த இடத்தில் அதர் இல்லை; மாடு இருந்த இடத்தில் மயிர் இல்லை.

ஆடு இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா.

ஆடு உதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறான். 2010

ஆடு ஊடாடக் காடு விளையாது.

ஆடு எடுத்த கள்ளனைப் போல் விழிக்கிறான்.

(பா-ம்.) அகப்பட்டு விழித்த கதை.

ஆடு ஓடின காடும் அடி ஓடின வெளியும் விருத்தி ஆகா.

ஆடு ஓடின காடும் அரசன் போன வீதியும் அம்மா வீடு தேடிப் போன பெண்ணும் அடுத்த மாதம் குட்டிச் சுவராம்.

ஆடு கட்ட வீடு இல்லை; ஆனை வாங்கப் போனானாம். 2015

ஆடு கடிக்கிறதென்று அறையில் இருப்பாளாம்; அகமுடையான் சம்பாதிக்கப் பேயாய்ப் பறப்பாளாம்.

ஆடு கடிக்கிறதென்று இடையன் உறி ஏறிப் பதுங்கிடுவானாம்.

ஆடு கடிக்கிறதென்று தீயில் விழுந்தாற் போல் ஆச்சுது.

ஆடுகளின் சட்டியை நாய் உருட்டுவது போல.

ஆடு கறக்கவும் பூனை குடிக்கவும் சரியாக இருந்தது. 2020

ஆடு கால் பணம், கோசம் முக்கால் பணம்.

ஆடு கிடந்த இடத்தில் அதன் மயிரும் கிடவாமல் அழிந்து போவார்.

ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.

ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா.

ஆடு கெட்டவன் ஆடித் திரிவான்; கோழி கெட்டவன் கூவித் திரிவான். 2025

ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?

ஆடு கொண்டவன் ஆடித் திரிவான்; கோழி கொண்டவன் கூவித் திரிவான்.

ஆடு கொண்டு உழுது ஆனை கொண்டு போர் அடித்தாற் போல் இருக்கிறது.

ஆடு கொழுக்கக் கொழுக்கக் கோனானுக்குச் சந்தோஷம்.

ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம். 2030

(பா-ம்.) இடையனுக்குத் தானே?

ஆடு கொழுத்தால் என்ன? ஆனை கட்டி வாழ்ந்தால் என்ன?

ஆடு கொழுத்தால் ரோமத்தில் தெரியும்.

ஆடு கோழி ஆகாது; மீன் கருவாடு ஆகும்.

ஆடு கோனான் இன்றித் தானாய்ப் போகுமா?

ஆடு தழை மேய்ந்தாற் போல. 2035

(பா-ம்.) தின்பது போல.

ஆடுதன் துருப்புச் சொல்லி ஆர் வாழ்ந்தார் அம்மானை?

ஆடுதன் துருப்புச் சொன்னால் அடிப்பது டைமன் தானே?

ஆடுதன் ராஜா மாதிரி.

ஆடு திருடிய கள்ளன் போல விழிக்கிறான்.

ஆடு திருடுகிற கள்ளனுக்கு ஆக்கிப் போடுகிறவள் கள்ளி. 2040

ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீசீ என்பாளாம்.

(பா-ம்.) இரண்டு ஆடு தின்பாளாம்.

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.

{பா-ம்.) கோனாய்.

ஆடு நனைகிறதென்று தோண்டான் அழுகிறதாம்.

ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?

ஆடு பகை, குட்டி உறவா? 2045

ஆடு பட்டியிலே இருக்கும் போதே கோசம் தன்னது என்கிறான்.

ஆடு பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும்.

ஆடு பிடிக்கக் கரடி அகப்பட்டது போல்.

ஆடு பிடிக்கப்போய் ஓநாயிடம் அகப்பட்டுக் கொண்டது போல்.

ஆடு பிழைத்தால் மயிர்தானும் கொடான். 2050

(பா-ம்.) கொடேன்.

ஆடு போல் சாப்பிட வேண்டும்; ஆனைபோல் குளிக்க வேண்டும்.

ஆடும்காலத்தில் தலைகீழாக நடந்தால் ஓடும் கப்பறையும் ஆவான்.

ஆடும் காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.

ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன் ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.

ஆடு மந்தையிலே இருக்கும்போதே கோசம் என்னுடையது என்றானாம். 2055

ஆடு மிதித்த தொழியை விட்டு ஆறின தொழியை வாங்கு.

ஆடு மலைமேல் மேய்ந்தாலும் குட்டி கோனானது.

ஆடு மலையேறி வந்தாலும் குட்டி கோனானோடே.

ஆடு மறித்தவன் செய் விளையுமா? அங்கலாய்த்தவன் செய் விளையுமா?

ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா; பெண்டு பிள்ளை இல்லாதவன் தண்டுக்கு ராஜா. 2060

(தண்டு - சேனை.)

ஆடு மிதியாக் கொல்லையும் ஆளன் இல்லாப் பெண்ணும் வீண்.

ஆடு மேய்த்த இடத்தில் அரை மயிர்கூட இல்லை.

ஆடு மேய்த்தாற் போலவும் அண்ணனுக்குப் பெண் பார்த்தாற் போலவும்.

ஆடு மேய்ந்த காடு போல.

ஆடு மேய்வது போல். 2065

ஆடு யாரை நம்பும்?

ஆடுவதும் ஆடி அவரைக் காயும் பறித்தாச்சு.

ஆடுவதே மணியமாய் இருக்கிறான்.

ஆடு வரும் பின்னே, தலை ஆடி வரும் முன்னே.

ஆடு வாங்கப் போனவன் ஆனை விலை கேட்டானாம். 2070

ஆடு வீட்டிலே, ஆட்டுக்குட்டி காட்டிலே.

ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?

ஆடு வைத்தவன் செய் விளையுமா? அங்கலாய்த்தவன் செய் விளையுமா?

ஆடு வைப்பதிலும் ஆழ உழுவதே நலம்.

ஆடே பயிர், ஆரியமே வேளாண்மை. 2075

(ஆடே படைப்பு, ஆரியம் - கேழ்வரகு.)

ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்.

ஆடை இல்லாப் பெண்பிள்ளை அரைப் பெண்பிள்ளை.

ஆடை உடையான் அவைக்கு அஞ்சான்.

ஆடைக்கும் கோடைக்கும் ஆகாது.

ஆடை பாதி, அமுத்தல் பாதி. 2080

ஆடை பாதி, அழகு பாதி.

ஆடையைத் தின்றால் வெண்ணெய் இல்லை.

(பா-ம்.) உண்டா?

ஆடை வாய்க்கவும் ஆபரணம் வாய்க்கவும் அதிர்ஷ்டம் வேணும்.

ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிர்ஷ்டம்.

ஆண் அவலம், பெண் அவலம், ஆக்கி வைத்த சோறும் அவலம். 2085

ஆண் அழகனும் சோறும் அடைவாய் இருந்தால் வீடெல்லாம் பிள்ளை விட்டெறிந்து பேசும்.

ஆண் ஆயிரம் ஒத்தாலும் பெண் நாலு ஒவ்வாது.

ஆண் இணலிலே நின்று போ; பெண் இணலிலே இருந்து போ.

(யாழ்ப்பாண வழக்கு. இணல் - நிழல்.)

ஆண் இன்றிப் பெண் இல்லை; பெண் இன்றி ஆண் இல்லை.

ஆண் உறவும் உறவல்ல; வேலி நிழலும் நிழலல்ல. 2090

ஆண் கேடு அரசு கேடு உண்டா?

(பா-ம்.) கேடும் இல்லை.

ஆண் சிங்கத்தை ஆனை அடுக்குமா?

ஆண்ட பொருளை அறியாதார் செய் தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.

ஆண்டவர் தரிசனம் அன்பர் விமோசனம்.

ஆண்டவன் ஒருவன் இருக்கிறான். 2095

ஆண்டவன் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்.

ஆண்டவன் விட்ட வழி.

ஆண்டார் அன்னத்தை அதிரப் பிடிக்கவும் போகாது; செட்டியார் எட்டிக் கன்னத்தில் அடிக்கவும் போகாது.

ஆண்டார் இருக்கும் வரையில் ஆட்டும் கூத்தும்.

ஆண்டாருக்குக் கொடுக்கிறாயோ? சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ? 2100

ஆண்டாருக்கும் பறப்பு; கோயிலுக்கும் சிறப்பு.

ஆண்டாரைப் பூதம் அஞ்சும்; மாண்டால் ஒழியப் போகாது.

ஆண்டால் அம்மியும் தேயும்.

ஆண்டி அடித்தானாம்; கந்தை பறந்ததாம்.

ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம். 2105

(பஞ்சநதம்-திருவையாறு.)

ஆண்டி அன்னத்துக்கு அழுகிறான்; அவன் நாய் அப்பத்துக்கு அழுகிறது.

ஆண்டி ஆனைமேல் ஏறிவர நினைத்தது போல.

ஆண்டி எப்போது சாவான்? மடம் எப்போது ஒழியும்?

ஆண்டிக்கு அரண்மனை இருந்தால் என்ன? எரிந்தால் என்ன?

ஆண்டிக்கு இடுகிறாயோ? சுரைக்குடுக்கைக்கு இடுகிறாயோ? 2110

ஆண்டிக்கு அம்பாரக் கணக்கு என்ன?

(பா-ம்.) நமக்கு என்ன?

ஆண்டிக்கு அவன் பாடு; தாதனுக்குத் தன் பாடு.

(தாசனுக்கு.)

ஆண்டிக்கு இடச் சொன்னால் தாதனுக்கு இடச் சொல்வான்.

ஆண்டிக்கு இடுகிறதே பாரம்.

ஆண்டிக்கு எதற்கு அரிசி விலை? 2115

ஆண்டிக்கு எதற்கையா ஆனை?

ஆண்டிக்கு எந்த மடம் சொந்தம்?

ஆண்டிக்கு என்ன பித்து? கந்தல் பித்து.

ஆண்டிக்கு ஏன் அம்பாரக் கணக்கு?

ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ? அவன் சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ? 2120

ஆண்டிக்குப் பிச்சையா? அவன் குடுவைக்குப் பிச்சையா?

ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு அதுவும் இல்லை.

(பா-ம்.) பார்பபானுக்கு அதுவும் இல்லை.

ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதும் நாய் போர்வை வாங்கியதும் போல.

ஆண்டி கிடக்கிறான் அறையிலே; அவன் சடை கிடக்கிறது தெருவிலே.

(பா-ம்.) அவன் தோண்டி கிடக்கிறது தெருவிலே.

ஆண்டி கிடப்பான் அறையிலே; கந்தை கிடக்கும் வெளியிலே. 2125

ஆண்டி கிடப்பான் மடத்திலே; சோளி கிடக்கும் தெருவிலே.

(சோளி - பை.)

ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.

ஆண்டி கையில் அகப்பட்ட குரங்குபோல் அலைதல்.

ஆண்டிச்சி பெற்றது அஞ்சும் குரங்கு

(பா-ம்.) அவலம்.

ஆண்டி சங்கை ஏன் ஊதுகிறான்? 2130

ஆண்டி செத்தான்; மடம் ஒழிந்தது.

ஆண்டி சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போச்சு?

ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்.

ஆண்டி சோற்றுக்கு அழுகிறான்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறது.

ஆண்டி பெற்ற அஞ்சும் அவலம். 2135

ஆண்டி பெற்ற அஞ்சும் குரங்கு; முண்டச்சி பெற்ற மூன்றும் முண்டைகள்.

ஆண்டி பெற்ற அஞ்சும் பேய்; பண்டாரம் பெற்ற பத்தும் பாழ்.

(பா-ம்.) அஞ்சும் பிடாரி.

ஆண்டி மகன் ஆண்டி.

ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

ஆண்டி மடம் கட்டினது போலத்தான். 2140

ஆண்டியும் ஆண்டியும் கட்டிக் கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக் கொள்ளும்.

(பா-ம்.) முட்டிக் கொண்டால்.

ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.

ஆண்டியும் பார்ப்பானும் தோண்டியும் கயிறும் போல.

ஆண்டியே சோற்றுக்கு அலையும் போது லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்.

(பா-ம்.) அன்னத்துக்கு.

ஆண்டியை அடித்தானாம்; அவன் குடுவையைப் போட்டு உடைத்தானாம். 2145

ஆண்டியைக் கண்டால் லிங்கன்; தாதனைக் கண்டால் ரங்கன்.

(+ என்கிறான்.)

ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரவில்லை.

ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில்.

(பா-ம்.) மாண்டார் திரும்புவார்களா?

ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான்.

ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது. 2150

(பா-ம்.) ஊனக் கண்ணுக்கு.

ஆண்டைக்கு ஆளைக் காட்டுகிறான்; ஆண்டை பெண்டாட்டிக்கு ஆள் அகப்படுவது இல்லை.

ஆண்டை கூலியைக் குறைத்தால் சாம்பான் வேலையைக் குறைப்பான்.

ஆண்டைமேல் வந்த கோபத்தைக் கடாவின்மேல் காண்பித்தான்.

(பா-ம்.) ஆற்றினான்.

ஆண் தாட்சண்யப் பட்டால் கடன்; பெண் தாட்சண்யப் பட்டால் விபசாரம்.

ஆண் நிழலில் நின்று போ; பெண் நிழலில் இருந்து போ. 2155

ஆண்பிள்ளை அழுதால் போச்சு; பெண்பிள்ளை சிரிச்சால் போச்சு.

ஆண் பிள்ளைக்கு அநியாயப்பட்டால் தீரும்; பெண் பிள்ளைக்கு அழுதால் தீரும்.

(அநியாயப்பட்டால் வெளிப்படையாகச் சொன்னால்.)

ஆண் பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருந்தாலும் அக்காளும் தங்கையும் ஒத்திரார்கள்.

ஆண் பிள்ளைச் சிங்கத்திற்கு யார் நிகர்?

ஆண்பிள்ளையை அடித்து வளர்; முருங்கையை ஒடித்து வளர். 2160

ஆண் முந்தியோ? பெண் முந்தியோ?

ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்.

ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தைப் பழிப்பான்.

(பா-ம்.) ஆயுதத்தின் மேல் குறை சொல்லுவான்.

ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.

ஆணவம் அழிவு. 2165

ஆணன் உறவுண்டானால் மாமி மயிர் மாத்திரம்.

ஆணாய்ப் பிறந்தால் அருமை; பெண்ணாய்ப் பிறந்தால் எருமை.

ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை கேடு செய்யாதே.

(பா-ம்.) பிழை சொல்லாதே.

ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.

ஆணுக்குக் கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை செய்தல் ஆகாது. 2170

ஆணுக்குப் பெண் அழகு.

ஆணுக்குப் பெண் அஸ்தமித்துப் போச்சா?

ஆணுக்கு மீசை அழகு; ஆனைக்குத் தந்தம் அழகு.

ஆணும் அவலம்; பெண்ணும் பேரவலம்.

ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர். 2175

(பா-ம்.) பிடித்து வளர்; தட்டி வளர்.

ஆணையும் வேண்டாம்; சத்தியமும் வேண்டாம்; துணியைப் போட்டுத் தாண்டு.

(பா-ம்.) சந்தியும் வேண்டாம்.

ஆத்தாடி நீலியடி, ஆயிரம் பேரைக் கொன்றவன்டி,

(நீலி-ஔரி; அது மருந்தை முறிக்கும்.)

ஆத்தாள் அம்மணம்; அன்றாடம் கோதானம்.

ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.

(பா-ம்.) அன்றாடம் வீட்டில் கோதானம்.

ஆத்தாள் என்றால் சும்மா இருப்பான்; அக்காள் என்றால் மீசைமேல் கை போட்டுச் சண்டைக்கு வருவான். 2180

ஆத்தாள் படுகிற பாட்டுக்குள்ளே மகள் மோருக்கு அழுகிறாள்.

ஆத்தாள் வீட்டுப் பெருமை அண்ணன் தம்பியோடே சொல்லிக் கொண்டாளாம்.

ஆத்தாளும் மகளும் காத்தானுக்கு அடைக்கலம்; அவன் காத்தாலும் காத்தான்; கை விட்டாலும் விட்டான்.

ஆத்தாளை அக்காளைப் பேசுகிறதில் கோபம் இல்லை; அகமுடையாளைப் பேசுகிறதற்குத்தான் கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது.

ஆத்தாளோடு போகிறவனுக்கு அக்காள் எது? தங்கச்சி ஏது? 2185

ஆத்தி நார் கிழித்தாற்போல் உன்னைக் கிழிக்கிறேன்.

ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?

(பா-ம்.) அறியான்.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

(+ஆவேசம் கொண்டவனுக்கு மதியூகம் தட்டு.)

ஆத்திரத்துக்கு அவிசாரி ஆடினால் கோத்திரம் பட்ட பாடுபடுகிறது.

ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்; மூத்திரத்தை அடக்க முடியாது. 2190

(பா-ம்.) பொறுத்தாலும் பொறுக்காது; அடக்கப்படாது.

ஆத்திரப் பட்டவனுக்கு அப்போது இன்பம்.

ஆத்திரம் உடையான் தோத்திரம் அறியான்.

(பா-ம்.) கோத்திரம்.

ஆத்திரம் கழிந்தால் ஆண்டவன் ஏது?

ஆத்திரம் கஷ்டத்தைக் கொடுக்கும்.

(பா-ம்) நஷ்டத்தை.

ஆத்திரம் பெரிது; ஆனாலும் புத்தி மிகப் பெரிது. 2195

ஆத்திரம் பெரிது; ஆனாலும் மூத்திரம் பெரிது.

ஆத்தும சுத்தியாகிய நெஞ்சில் இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லக்ஷணம் தெரிந்து பலன் என்ன?

ஆத்துமத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.

ஆத்தூர் பாலூர் அழகான சீட்டஞ்சேரி, அழகு திருவானைக் கோவில் இருந்துண்ணும் விச்சூரு முப்போகம் நிலம் விளைத்தாலும் உப்புக்காகாத காவித்தண்டலம்.

(இவை செங்கற்பட்டுக் கருகிலுள்ள ஊர்கள்.)

ஆத்தூரான் பெண்டாட்டி ஆரோடோ போனாளாம்; சேத்தூரான் தண்டம் அழுதானாம். 2200

ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.

ஆத்தை வீட்டுச் சொண்டே, மாமியார் வீட்டேயும் வந்தாயோ.

(யாழ்ப்பாண வழக்கு.)

ஆத்ம சுத்தி என்கிற நெஞ்சிலக்கணம் தெரியாதவனுக்கு பஞ்ச லக்ஷணம் தெரிந்து என்ன பயன்?

ஆத்ம ஸ்துதி ஆறு அத்தியாயம்; பர நிந்தை பன்னிரண்டு அத்தியாயம்.

(பகவத்கீதையைப் பற்றியது.)

ஆதரவு அற்ற வார்த்தையும் ஆணி கடவாத கை மரமும் பலன் செய்யாது. 2205

ஆதரவும் தேவும் ஐந்து வருஷத்திலே பலன் ஈயும்.

ஆதவன் உதிப்பதே கிழக்கு; அக்கம நாயக்கர் சொல்வதே வழக்கு; அதைக் கேட்டு நடத்தல் மினுக்கு; எதிர்த்துப் பேசினால் தொழுக்கு.

ஆதவன் உதிப்பதே கிழக்கு; கணக்கன் எழுதுவதே கணக்கு.

ஆதனக் கோட்டைக்கும் செவ்வாய்க் கிழமையாம்.

ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா? 2210

ஆதாயம் இல்லாத செட்டியார் ஆற்றோடே போவாரோ?

(பா-ம்.) செட்டி ஆற்றோடே போகிறானாம்.

ஆதாயம் உள்ளவரை ஆற்றைக் கட்டி இறைத்து விட்டுப் போகிறான்.

ஆதாயமே செலவு; அறை இருப்பதே நிலுவை.

ஆதி அந்தம் இல்லா அருமைப் பொருளே கர்த்தன்.

ஆதி கருவூர், அடுத்தது. வெஞ்சமாக் கூடலூர். 2215

ஆதி கருவூர், அழும்பப் பயல் வேலூர்.

ஆதித்தன் தெற்கு வடக்கு ஆனாலும் சாதித்தொழில் ஒருவரையும் விடாது.

(பா-ம்.) சனித்தொழில்.

ஆதி முற்றினால் வியாதி.

ஆதீனக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?

ஆந்தை சிறிது; கீச்சுப் பெரிது. 2220

ஆந்தை பஞ்சையாய் இருந்தாலும் சகுனத்தில் பஞ்சை இல்லை.

ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான்.

ஆந்தை விழி விழித்தால் அருண்டு போவாரோ?

ஆப்பக்காரியிடம் மாவு விலைக்கு வாங்கின மாதிரி.

ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்தது போல. 2225

ஆபத்தில் அறியலாம் அருமைச் சிநேகிதனை.

(பா-ம்.) நண்பனை.

ஆபத்தில் காத்தவன் ஆட்சியை அடைவான்.

ஆபத்தில் காத்தவன் ஆண்டவன் ஆவான்.

ஆபத்தில் சிநேகிதனை அறி.

ஆபத்துக்கு உதவாத நண்பனும் சமயத்துக்கு உதவாத பணமும் ஒன்றுதான். 2230

ஆபத்துக்கு உதவாத பெண்டாட்டியை அழகுக்கா வைத்திருக்கிறது?

(பா-ம்.) ஆகாத.

ஆபத்துக்கு உதவினவனே நண்பன்.

(பா-ம்.) பந்து.

ஆபத்துக்கு உதவுவானா அவிசாரி அகமுடையான்.

(பா-ம்.) விலைமாது புருஷன்.

ஆபத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினது போல.

ஆபத்துக்குப் பாபம் இல்லை. 2235

(பா-ம்.) தோஷமில்லை.

ஆபத்து சம்பத்து.

ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு?

ஆபஃபுனந்து, ஒருபிடி நாகக் கொழுந்து.

ஆபால கோபாலம்.

ஆபீஸ் பண்ணி ருபீஸ் வாங்கி ஜோபியில் போடுகிறான். 2240

ஆபீஸில் ஐயா அதிகாரம்; அகத்தில் அம்மா அதிகாரம்.

ஆம் என்ற தோஷம், கனத்தது வயிற்றிலே.

ஆம் என்றும் ஊம் என்றும் சொல்லக் கூடாது.

ஆம் காலம் ஆகும்; போம் காலம் போகும்.

ஆம் காலம் எல்லாம் அவிசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்றாளாம். 2245

ஆமணக்கு எண்ணெய் வார்த்துப் புட்டம் கழுவினாற் போல.

ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தல் ஆகாது.

ஆமணக்கு முத்து ஆணி முத்து ஆகுமா?

ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?

ஆமை அசையாமல் ஆயிரம் முட்டையிடும். 2250

ஆமை எடுக்கிறது மல்லாத்தி; நாம் அதைச் சொன்னால் பொல்லாப்பு.

(பா-ம்.) ஆமை சுடுகிறது.

ஆமைக்குப் பத்து அடி என்றால் நாய்க்கு நாலு அடி.

ஆமை கிணற்றிலே, அணில் கொம்பிலே.

ஆமை தன் வாயால் கெட்டது போல.

ஆமை திடலில் ஏறினாற் போல. 2255

ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்; நாம் அதைச் சொன்னால் பாவம்.

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த விடும் உருப்படா.

ஆமை புகுந்த வீடும் வெள்ளைக்காரன் காலடி வைத்த ஊரும் பாழ்.

ஆமை மல்லாத்துகிறாற் போல.

ஆமையுடனே முயல் முட்டையிடப் போய் கண் பிதுங்கிச் செத்ததாம். 2260

ஆமையைக் கவிழ்த்து அடிப்பார்களோ; மல்லாத்திச் சுடுவார்களோ? நான் சொன்னால் பாவம்.

ஆமை வேகமா, முட்டை வேகமா?

ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழை பெய்கிறது.

ஆய்ந்து ஓய்ந்து அக்காளிடம் போனால் அக்காள் இழுத்து மாமன்மேல் போட்டாளாம்.

ஆய்ந்து ஓய்ந்து பாராதான் தான் சாவக் கடவான். 2265

ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.

ஆய் பார்த்த கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும்.

ஆய் பிச்சை எடுக்கிறான்; பிள்ளை ஜட்ஜ் வேலை பார்க்கிறான்.

ஆய உபாயம் அறிந்தவன், அரிது அல்ல வெல்வது.

ஆயிரக் கல நெல்லுக்கு ஓர் அந்து போதும். 2270

ஆயிரத்தில் ஒருவனே அலங்காரப் புருஷன்.

ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கண் விழிக்கிறது.

ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கால் நீட்டினது போல.

(பா-ம்.) ஐந்நூற்றிலே விழித்தாள்; காலை வைக்கிறது.

ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனைப்பலம்.

ஆயிரம் அரைக் காசு. 2275

ஆயிரம் ஆனாலும் அவிசாரி சமுசாரி ஆகமாட்டாள்.

ஆயிரம் ஆனாலும் ஆரணிச் சேலை ஆகாது.

ஆயிரம் ஆனாலும் பெண் புத்தி பின்புத்தி.

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது.

(பா-ம்.) ஆகுமா?

ஆயிரம் ஆனாலும் மாயூரம் வெண்ணெய் ஆகுமா? 2280

ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார்; துணி பொறுக்கி தோம் தோம் என்று கூத்தாடுவான்.

(பா-ம்.) தொந்தோம் தொந்தோம் என்று.

ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்; அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.

ஆயிரம் உளி வாய்ப்பட்டு ஒரு லிங்கம் ஆக வேணும்.

ஆயிரம் எறும்பும் ஆனைப்பலம்.

ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்கும். 2285

ஆயிரம் கட்டு ஆனைப் பலம்.

ஆயிரம் கப்பியில் நழுவின சுப்பி.

ஆயிரம் கல நெல்லுக்கு ஓர் அந்துப் பூச்சி போதும்.

ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.

ஆயிரம் காக்கைக்குள் ஓர் அன்னம் அகப்பட்டது போல. 2290

ஆயிரம் காலத்தில் ஆனி அடி அருகும்; தேக்கு நீர் வற்றும்; தேவதாரு பால் வற்றும்.

ஆயிரம் காலத்துப் பயிர்.

ஆயிரம் காலம் குழலில் இட்டாலும் நாயின் வால் நிமிர்ந்து விடுமா?

ஆயிரம் காலே அரைக்காற் பணம்.

ஆயிரம் காலே மாகாணி. 2295

ஆயிரம் குணத்துக்கு ஒரு லோப குணம் தட்டு.

ஆயிரம் குணம் ஒரு லோப குணத்தால் தட்டும்.

ஆயிரம் குதிரையை அற வெட்டின சிப்பாய்தானா இப்போது பறைச் சேரியில் நாயோடு பங்கம் அழிகிறான்?

ஆயிரம் குருடர்கள் சேர்ந்தாலும் சூரியனைப் பார்க்க முடியுமா?

ஆயிரம் கொடுத்து ஆனை வாங்கி அங்குசம் வாங்கப் பேரம் பண்ணினானாம். 2300

ஆயிரம் கொடுத்து ஆனை வாங்குகிறோமே, அது பல் விளக்குகிறதா?

ஆயிரம் கோவிந்தம் போட்டாலும் அமுது படைக்கிறவனுக்கு அல்லவோ தெரியும் வருத்தம்?

ஆயிரம் கோழி தின்ற வரகு போல்.

ஆயிரம் செக்கு ஆடினாலும் அந்திக்கு எண்ணெய் இல்லை.

ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து. 2305

ஆயிரம் சொன்னாலும் அவிசாரி சமுசாரி ஆவாளா?

ஆயிரம் தடவை சொல்லி அழுதாச்சு.

ஆயிரம் தலை படைத்த ஆதிசேடனாலும் சொல்ல முடியாது.

ஆயிரம் நட்சத்திரம் கூடிச் சந்திரன் ஆகுமா?

ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது. 2310

(பா-ம்.) ஆகுமா?

ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும்.

ஆயிரம் நாள் இருந்தாலும் அநியாயச் சாவு.

ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா?

(பா-ம்.) உதைத்துக் கொண்டால் என்ன?

ஆயிரம் பட்டும் அவம் ஆச்சு; கோயிலைக் கட்டியும் குறை ஆச்சு.

ஆயிரம் பனை உள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஓர் ஈர்க்கு இல்லை. 2315

ஆயிரம் பாட்டுக்கு அடி தெரியும்; நூறு பாட்டுக்கு நுனி தெரியும்.

(பா-ம்.) சொல்வான்.

ஆயிரம் பாம்பில் ஒரு தேரை பிழைக்கிறாற் போல.

ஆயிரம் பாம்பினுள் அகப்பட்ட தேரைபோல.

ஆயிரம் பேர் கூடினாலும் ஓர் அந்துப்பூச்சியைக் கொல்லக் கூடாது.

ஆயிரம் பேர் இடத்தில் சிநேகம் பண்ணினாலும் ஆண்பிள்ளைகளுக்கென்ன? 2320

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

(பா.ம்.) வேரைக் கண்டவன்; அரைப் பரியாரி.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்து வை.

(பா-ம்.) ஒரு தாலி கட்டி வை.

ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.

ஆயிரம் பொன் பெற்ற ஆணை பல் விளக்குகிறதா?

ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பனத்தில் சவுக்கு. 2325

(பா-ம்.) கழுதைக்கு.

ஆயிரம் பொன் பெற்ற குதிரையானாலும் சவுக்கடி வேண்டும்.

ஆயிரம் பொன் போட்டு ஆனை வாங்கி அரைப் பணத்து அங்குசத்துக்குப் பால் மாறுகிறதா?

(பா-ம்.) ஆயிரம் வராகன் அழுவதா?

ஆயிரம் பொன்னுக்கு ஆனை வாங்கினாலும் அரைக் காசுக்குத் தான் சாட்டை வாங்க வேணும்.

ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.

ஆயிரம் முடி போட்டாலும் ஆனைப் பலம் வருமா? 2330

ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆனை வாங்கி ஆறு காசு கொடுத்துச் சவுக்கு வாங்கவில்லை.

(பா-ம்.) அரைக்காசு.

ஆயிரம் ரூபாய் முதலில்லாமல் பத்து ரூபாய் நஷ்டம்.

ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது.

ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.

ஆயிரம் வந்தாலும் கோபம் ஆகாது. 2335

ஆயிரம் வருஷம் ஆனாலும் ஆனை மறக்குமா?

ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதிச் சாவு ஆகாது.

ஆயிரம் வித்தை கற்றாலும் உலகத்தில் ஆடம்பரம் வேண்டும்.

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

(பா-ம்.) கண்டவன்.

ஆயில்யத்தில் மாமியார் ஆசந்தியிலே. 2340

ஆயுசுக்கும் வியாதிக்கும் சம்பந்தம் இல்லை.

ஆயுசு கெட்டியானால் ஒளடதம் பலிக்கும்.

ஆயுசு பூராவாக இருந்தால் மாந்தம் மயிரைப் பிடுங்குமா?

ஆயுதப் பரீக்ஷை அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவன்.

(பா-ம்.) நூற்றில்.

ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா? 2345

ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறது போல.

(ஆயோதனம்-யுத்தம்)

ஆர் அடா என் கோவிலிலே ஆண் நாற்றம், பெண் நாற்றம்?

ஆர் அடா விட்டது மான்யம்? நானே விட்டுக் கொண்டேன்.

ஆர் அற்றுப் போனாலும் நாள் ஆற்றும்.

ஆர் ஆக்கினாலும் சோறு ஆகவேணும். 2350

ஆர் ஆத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரியும்.

ஆர் ஆர் என்பவர்கள் எல்லாம் தீக் குளிப்பார்களா?

ஆர் ஆருக்கு ஆளானேன், ஆகாத உடம்பையும் புண்ணாக்கிக் கொண்டு.

(பா-ம்.) நான் ஆவேன்.

ஆர் இட்ட சாபமோ அடி நாளின் தீவினையோ?

ஆர்க்காட்டு நவாபு என்றாலும் அரைக்காசுக்குப் பயன் இல்லை. 2355

ஆர் கடன் ஆனாலும் மாரி கடன் ஆகாது.

ஆர் கடன் நின்றாலும் மாரி கடன் நிற்காது.

ஆர் கடன் பட்டாலும் மாரி கடன் வைக்கக் கூடாது.

(பா-ம்.) பட்டாலும்.

ஆர் குடியைக் கெடுக்க ஆண்டி வேஷம் போட்டாய்?

ஆர் குத்தினாலும் அரிசி ஆவது ஒன்று. 2360

ஆர் குத்தினாலும் அரிசி ஆனால் சரி.

(பா-ம்.) ஆகவேண்டும்.

ஆர் கெட்டால் என்ன? ஆர் வாழ்ந்தால் என்ன?

ஆர் சமைத்தாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

(பா-ம்.) அடுப்புக் கல்.

ஆர் சுட்டாலும் பணியாரம் ஆகவேண்டும்.

ஆர்த்தார் எல்லாம் போருக்கு உரியவர் அல்லர். 2365

ஆர் புருஷனை ஆர் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்?

ஆர்மேல் கண்? அனந்திமேல் கண்.

ஆர் வாழ்வு ஆருக்கு நின்றது?

ஆர் வாழ்வுதான் சதம்?

ஆர் வைத்த கொள்ளியோ வீடு பற்றி எரிகிறது. 2370

ஆரக் கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.

ஆரணியமான அழகாபுரிக்கு ஒரு கோரணியான குரங்கு வந்து தோன்றிற்று.

ஆரம்ப சூரத்தனம்.

(பா-ம்.) சூரத்வம்.

ஆரல்மேல் பூனை அந்தண்டை பாயுமோ இந்தண்டை பாயுமோ?

ஆராகிலும் படி அளந்து விட்டதா? 2375

(பா-ம்.) அடி.

ஆராய்ந்து பாராதவன் காரியம் தான் சாந் துயரம் தரும்.

ஆராய்ந்து பாராமுன் தலையிடாதே.

ஆரால் கெட்டான் நோரால் கெட்டான்.

(நோரு-வாய்: தெலுங்கு.)

ஆரால் கேடு, வாயால் கேடு.

ஆராவது என்னைத் தூக்கி மாத்திரம் பிடிப்பார்களானால் நான் பிணக்காடாக வெட்டுவேன் என்று முடவன் கூறியது போல. 2380

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்.

ஆருக்கு அழுவேன் அப்பா ஹைதர் அலி.

ஆருக்கு ஆகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாள் பொறுத்துக் கேட்கும்; ஆத்மத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.

(பா-ம்.) பொறுக்கும்.

ஆருக்கு ஆர் சதம், ஆருக்கு என்று அழுவேனடா ஹைதர் அலி?

(பா-ம்.) ஆடுவேன்.

ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்? 2385

ஆருக்கும் அஞ்சான், ஆர் படைக்கும் தோலான்.

(பா-ம்.) பகைக்கும்.

ஆருக்கும் பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.

ஆருக்கும் மாட்டாதவன் பெண்டுக்கு மாட்டுவான்.

ஆருக்கு வந்ததோ, எவருக்கு வந்ததோ என்று இருக்காதே.

ஆருக்கு வந்த விருந்தோ என்று இருந்தால் விருந்தாளி பசி என்னாவது ? 2390

ஆரும் அகப்படாத தோஷம், மெத்தப் பதிவிரதை.

ஆரும் அற்றதே தாரம்; ஊரில் ஒருத்தனே தோழன்.

ஆரும் அற்றவருக்குத் தெய்வமே துணை.

ஆரும் அறியாத அரிச்சந்திரன் கட்டின தாலி.

ஆரும் அறியாமல் கொண்டு கொடுத்தானாம்; காடு மேடெல்லாம் கரி ஆக்கினானாம். 2395

ஆரும், ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.

ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதம் செய்தான்.

(பா-ம்.) ஆகுமா?

ஆரும் இல்லாப் பெண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் மாப்பிள்ளை.

ஆரே சாரே என்கிறவனுக்குத் தெரியுமா? அக்கினி பார்க்கிறவனுக்குத் தெரியுமா?

ஆரை இறுக்கி முகம் பெறுகிறது? பிள்ளையை இறுக்கி முகம் பெறுகிறது. 2400

ஆரைக் காது குத்துவது?

ஆரைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.

ஆரை நம்பித் தோழா, ஆற்றுக்கு ஏற்றம் போட்டாய்?

(பா-ம்.) காருக்கு

ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக் கூடாது.

ஆரை பற்றிய நஞ்சையும் அறுகு பற்றிய புஞ்சையும். 2405

(களைபோக்கல் கடினம்.)

ஆரோக்கியம் பெரும் பாக்கியம்.

ஆரோக்கியமே ஆயுசு விருத்தி.

ஆரோ செத்தாள்? எவளோ அழுதாளாம்.

(பா-ம்.) எவனோ; ஏனோ.

ஆரோடு போனாலும் போதோடு வந்துவிடு.

(குறவர் பேச்சு.)

ஆல் என்னிற் பூல் என்னுமாறு 2410

(பழமொழி நானூறு.)

ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி.

ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்.

(பா-ம்.) ஆல்போல் கிளைத்து விழுது விட்டு.

ஆலகால விஷம் போன்றவன் அந்தரம் ஆவான்.

ஆலங்காட்டுப் பேய் மாதிரி அலைகிறான்.

ஆலசியம் அதிக விஷம். 2415

(பா-ம்.) அமுதமும் விஷம்.

ஆலம்பாடி அழகு எருது; உழவுக்கு உதவா இழவு எருது.

ஆலமரத்துக்கு அறுகம்புல்லின் வேரா?

ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தது போல.

(பா-ம்.) தடவிப் பார்த்தது போல.

ஆலமரத்தைப் பிடித்த பேய் அத்தி மரத்தைப் பிடித்ததாம்.

ஆலமரத்தை விழுது தாங்குவது போல. 2420

ஆலமரம் பழுத்தால் பறவைக்குச் சீட்டு அனுப்புவார்களா?

(பா-ம்.) ஆர் சீட்டு அனுப்புவது?

ஆலயத்துக்கு ஓர் ஆனையும் ஆஸ்தானத்துக்கு ஒரு பிள்ளையும்.

ஆலயம் அறியாது ஓதிய வேதம்.

ஆலயம் இடித்து அன்னதானம் பண்ணப் போகிறான்.

(பா-ம்.) எடுத்து,

ஆலயம் தகர்த்து அன்னதானம் பண்ணுகிறான். 2425

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

(கொன்றை வேந்தன்.)

ஆலின்மேற் புல்லுருவி.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

(தாலும் இரண்டும்; எண்கள்; நாலடியாரும் குறளும். )

ஆலூரு, சாலுரு, அறுதலிப் பாக்கம், முண்டை களத்துாரு; மூதேவி முறப்பாக்கம்.

(இவை செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊர்கள்.)

ஆலே பூலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது. 2430

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.

(பா-ம்.) கருப்பட்டி.

ஆலைக் கரும்பு போலவே நொந்தேன்.

ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போல ஆனேன்.

(வேலை-கடல்.)

ஆலைக்குள் அகப்பட்ட சோலைக் கரும்பு போல.

ஆலை பாதி; அழிம்பு பாதி. 2435

ஆலை வாயிலே போன கரும்பு போல்.

ஆலை விழுது தாங்கினது போல.

ஆவணி அவிட்டத்திற்கு அசடியும் சமைப்பாள்.

(நிதானமாகச் செய்யலாம் என்பது கருத்து.)

ஆவணி அழகன்.

(வெற்றிலை.)

ஆவணி அழுகல் தூற்றல். 2440

(பா-ம்.) ஆவணி மாதம் அழுகைத் தூற்றல்.

ஆவணி இலை அசையக் காவேரி கரை புரள.

(பா-ம்.) இலை உதிர.

ஆவணி தலை வெள்ளமும் ஐப்பசி கடை வெள்ளமும் கெடுதி.

ஆவணி பறந்தால் புரட்டாசி வரும்; தாவணி பறந்தால் புடைவையாகி வரும்.

ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்.

ஆவணி மாதம் அழுகைத் துாற்றல். 2445

ஆவணி மாதம் ஐந்தாந் தேதி சிங்க முழக்கம், அவ்வருஷம் மழை.

ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு போனாளாம்.

ஆவணியில் அகல நடு; ஐப்பசியில் அனைத்து நடு.

ஆவணி முதல் நட்ட பயிர் பூவணி அரசன் புகழ் போலும்.

ஆவணியில் நெல் விதைத்தால் ஆனைக் கொம்பு தானாய் விளையும். 2450

ஆவத்தை அடரான் பாவத்தைத் தொடரான்.

ஆவதற்கும் அழிவதற்கும் பேச்சே காரணம்.

ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே.

ஆவர்க்கும் இல்லை; தேவர்க்கும் இல்லை. 2455

ஆவர் மாத்திரம் இருந்தால் என்ன? அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்.

ஆவாரை இலையும் ஆபத்துக்கு உதவும்.

ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?

(உள்ள இடத்தில் சாவார் உண்டா?)

ஆவுடையார் கோயில் அடங்கலுக்குப் புறத்தி.

ஆவுடையாரையும் லிங்கத்தையும் ஆறு கொண்டு போகச்சே சுற்றுக் கோயில் சுவாமி எல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுகின்றனவாம். 2460

ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்.

ஆவென்று போனபின் அள்ளி இடுவது ஆர்?

ஆ வேறு நிறம் ஆனாலும் பால் வேறு நிறம் ஆகுமா?

ஆழ்வார் சாதித்தது ஆயிரம்; அம்மையார் சாதித்தது பதினாயிரம்.

(ஆழ்வார், நம்மாழ்வார்.)

ஆழ்வாரே போதாதோ? அடியாரும் வேண்டுமோ? 2465

(ஐயங்காரும் வேண்டுமோ?)

ஆழ அமுக்கினாலும் நாழி நானாழி கொள்ளாது.

ஆழ உழுதால் ஆட்டுரத்துக்கும் அதிகம்.

ஆழ உழுதாலும் அடுக்க உழு.

ஆழ உழுது அரும் பாடு பட்டாலும் பூமி விளைவது புண்ணியவான்களுக்கே.

ஆழங்கால் சேற்றில் அழுந்தியிருக்கிறான். 2470

ஆழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டார்கள்.

ஆழம் அறியாமல் காலை விட்டுக் கொண்டேன்; அண்ணாமலை அப்பா காலை விடு.

(+ என்ற கதை)

ஆழம் அறியாமல் காலை விடாதே.

(இடாதே.)

ஆழம் அறியும் ஓங்கில்; மேளம் அறியும் அரவம்.

(ஓங்கில்-ஒரு வகை மீன்.)

ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டது போல. 2475

ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம்.

ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பைப் பார்.

(மூழாக்கு-மூன்று ஆழாக்கு.)

ஆழாக்கு அரிசி வாங்கி ஐந்து கடை மீனை வாங்கிப் பொல்லாத புருஷனுக்குப் போட நேரம் இல்லை.

ஆழி எல்லாம் வயல் ஆனால் என்ன? அவனி எல்லாம் அன்னமயம் ஆனால் என்ன?

ஆழி கொண்டாலும் காழி கொள்ளாது. 2480

(காழி-சீகாழி.)

ஆழுக்கும் பாழுக்கும் ஒருவந்துாரான்; கடா வெட்டுக்கு மோகனுராான்.

(நாமக்கல் தாலுக்காவில் உள்ள ஊர்கள் இவை.)

ஆழும் பாழும் அறைக்கீரைப் பாத்தியும்.

ஆழும் பாழும் ஆகிறது.

ஆள் அகப்பட்டால் மிரட்டுகிறதா?

ஆள் அண்டிப் பேசாதவனும் செடி அண்டிப் பேளாதவனும் ஒன்று. 2485

ஆள் அரை முழம்; கோவணம் முக்கால் முழம்.

ஆள் அற்ற பாவம் அழுதாலும் தீராது.

ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு.

ஆள் ஆளும் பண்ணாடி எருது ஆர் மேய்க்கிறது?

ஆள் ஆளை இடிக்கும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரை இடிக்கும். 2490

ஆள் ஆளைக் குத்தும்; பகரம் பத்துப் பேரைக் குத்தும்.

ஆள் ஆனையை மறந்தாலும் ஆனை ஆனை மறக்குமா?

ஆள் இருக்கக் குலை சாயுமா?

(கொலை)

ஆள் இருக்கும் இளக்காரத்தில் ஆவாரையும் பீயை வாரி அடிக்கும்.

ஆள் இல்லா ஊருக்கு அழகு பாழ். 2495

ஆள் இல்லாத இடத்தில் அசுவமேத யாகம் பண்ணினது போல.

(இல்லாத ஊரில்.)

ஆள் இல்லாப் படை அம்பலம்.

ஆள் இல்லாப் பத்தினி, இடம் இல்லாப் பத்தினி, ஆளைக் கண்டால் ஈடு இல்லாப் பத்தினி.

ஆள் இல்லாமல் அடிக்கடி ஓடுமா?

ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா? 2500

ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.

(இளந்தலை-குறைவு; கனம் இன்மை.)

ஆள் இளந்தலை கண்டு தோணி மிதக்கும்.

ஆள் இளப்பமாய் இருந்தால் எமனையும் நமனையும் பலகாரம் பண்ணுவான்.

ஆள் இளப்பமாய் இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.

ஆள் இளைத்ததைக் கண்டால் ஆவாரையும் பீ வாரி அடிக்கும். 2505

ஆள் உள்ளுக்குள்ளே இருக்கிறான்.

ஆள் ஏற நீர் ஏறும்.

ஆள் ஏறினால் உலை ஏறும்; உலை ஏறினால் உப்பு ஏறும்.

ஆள் கண்ட சமுத்திரம்.

ஆள் கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டு நரி. 2510

(மிரட்டுமாம்.)

ஆள் காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் பிடித்துக கொடுக்கும்.

ஆள் காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனா? அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனா?

ஆள் காட்டிய விரலுக்கும் அன்னதானப் பலன்.

(விதுரன்.)

ஆள் கால், வாய் முக்கால்.

ஆள்கிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண். 2515

ஆள் கொஞ்சம் ஆகிலும் ஆயுதம் மிடுக்கு.

ஆள் பஞ்சையாய் இருந்தாலும் ஆயுதம் திறமாய் இருக்க வேண்டும்.

ஆள் பாதி, அலங்காரம் பாதி.

ஆள் பாதி, ஆடை பாதி.

ஆள் பாதி, ஏர் பாதி. 2520

ஆள் பாரம் பூமியிலே.

ஆள் போகிறது அதமம்; மகன் போகிறது மத்தியமம்; தான் போகிறது உத்தமம்.

ஆள் போனால் சண்டை வருமென்று நாயை விட்டு ஏவின மாதிரி.

ஆள் மதத்தால் கீரை; ஆனை மதத்தால் வாழை.

ஆள் மறந்தாலும் ஆனை மறக்காது. 2525

ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.

ஆள் ஜம்பமே தவிர வேலை ஜம்பம் கிடையாது.

ஆளத் தெரியாத அண்ணாக்கள்ளன் ஒரு குழம்பு வைக்கத் தெரியவில்லை என்றானாம்.

ஆள மாட்டாதவனுக்குப் பெண்டாட்டி ஏன்?

(பெண்டு ஒரு கேடு.)

ஆளவந்தாரும் உடையவரும் சேர்ந்தால் வைகுண்டத்துக்குப் படி கட்டியிருப்பார்கள். 2530

ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது;

(+சீர் இல்லாக் கல்யாணம் செய்தாலும் நிறக்காது.)

ஆளன் இல்லாத பெண்ணுக்கு வாழ்வு இல்லை.

ஆளன் இல்லாத மங்கைக்கு அழகு பாழ்.

ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.

ஆளன் உறவு உண்டானால் மாமி மயிர் மாத்திரம். 2535

ஆளனைப் பிரிந்திருத்தல் அரிவையர்க்கு அழகன்று.

ஆளான ஆள் புகுந்தால் ஆமணக்கு விளக்கெண்ணெய் ஆகும்.

ஆளான ஆளுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காக்காய்ப் பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.

ஆளில் கட்டை அரண்மனைக்கு உதவான்.

ஆளிலும் ஆள் அம்மாப் பேட்டை ஆள். 2540

(ஆற்றல் உள்ளவன் என்பது பொருள். அம்மாப்பேட்டை தஞ்சை மாவட்டத்தில் உள்ளது.)

ஆளுக்கு ஆள் வித்தியாசம்.

ஆளுக்கு ஒத்த ஆசாரமும் ஊருக்கு ஒத்த உபசாரமும்.

(+வேண்டாமா?)

ஆளுக்கு ஒரு குட்டு வைத்தால் அடியேன் தலை மொட்டை.

(ஆண்டியின் தல.)

ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.

ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை. 2545

ஆளுக்குக் கீரைத்தண்டு; ஆனைக்கு வாழைத்தண்டு.

ஆளுக்குத் தக்கபடி வேஷம் போடுதல்.

ஆளுக்குத் தகுந்த சொட்டுக் கொடுக்கிறது.

ஆளுக்குத் துக்குணி ஆள் பாரம்.

(ஆளுக்குச் சற்றே.)

ஆளுக்குள்ளே ஆளாய் இருப்பான். 2550

ஆளும் அம்பும்.

ஆளும் கோளும் படைத்தவனை வேலும் கோலும் என்ன செய்யும்?

ஆளை அடித்தால் அரைப்பணம்.

ஆளை அறிந்து தாண்டுகிறதா?

ஆளை அறிந்துதான் அறுக்கிறான். 2555

ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனைப் புளியங்காய் அறிய வேண்டும்.

ஆளை ஆள் குத்தும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.

ஆளை ஏய்க்குமாம் நரி: அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு.

ஆளைக் கண்ட சமுத்திரம்.

ஆளைக் கண்டால் ஆறு மணி; ஆளைக் காணா விட்டால் மூன்று மணி. 2560

ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய்.

(ஏய்க்குமாம் பிசாசு.)

ஆளைக் கண்டு மலைக்காதே; ஊது காமாலை.

ஆளைச் சுற்றிப் பாராமல் அளக்கிறதா?

ஆளைச் சுற்றிப் பாராமல் அழுகிறாள் ஒரு காலே.

ஆளைச் சேர்த்தாயோ? அடிமையைச் சேர்த்தாயோ? 2565

ஆளை நீட்டிப் போடு.

ஆளைப் பார் சோளக்காட்டிலே.

(சோளக் கொல்லையிலே.)

ஆளைப் பார், சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி.

ஆளைப் பார்த்தால் அழகுதான்; ஏரில் கட்டினால் குழவுதான்.

ஆளைப் பார்த்தால் அழகுபோல; வேலையைப் பார்த்தால் குழவு போல. 2570

ஆளைப் பார்த்தால் அழகு மலை; வேலையைப் பார்த்தால் குழவு மலை.

ஆளைப் பார்த்தான்; தலையில் அடித்தான்.

ஆளைப் பார்த்தான் வாயால் ஏய்த்தான்.

(பார்த்துத்தான்.)

ஆளைப் பார்த்து ஆசனம் போடுவான்.

ஆளைப் பார்த்துக் கூலி கேட்கிறது; அவனைப் பார்த்துப் பெண்டு கேட்கிறது. 2575

ஆளைப் பார்த்து மலைக்காதே; ஊது கணை.

ஆளைப் பார்; முகத்தைப் பார்.

ஆற்றங்கரை மரம் விழும்.

(மரம் போலே.)

ஆற்றங்கரையில் தண்ணீர்; அடுப்பங்கரையில் வெந்நீர்.

ஆற்றப் புழுதி ஈரம் தாங்கும். 2580

ஆற்றாக் குலைப் பொல்லாப்பு அடித்துக் கொள்ளுகிறான்.

ஆற்றித் தூற்றி அம்பலத்திலே வைக்கப் பார்க்கிறான்.

(அம்பலத்திலே கொண்டு வந்தானாம்.)

ஆற்றில் இருந்து அரஹராப் பாடினாலும் சோற்றில் இருக்கிறான் சொக்கப்பன்.

ஆற்றில் கரைத்த புளியும் அங்காடிக்கு இட்ட பதரும் ஆயிற்று.

(போல.)

ஆற்றில் கரைத்த பெருங்காயம் போல். 2585

ஆற்றில் கரைத்த மஞ்சள்.

(அரைத்த மஞ்சள்.)

ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்?

ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.

ஆற்றில் பெரு வெள்ளம் நாய்க்கு என்ன? சளப்புத் தண்ணீர்.

ஆற்றிலே ஆயிரம் காணி தானம் பண்ணினாற் போலே. 2590

(ஆற்று மணலிலே ஆயிரம் குழி.)

ஆற்றிலே இறங்கினால் ஐம்பத்தெட்டுத் தொல்லையாம்.

ஆற்றிலே ஊறுகிறது, மணலிலே சுவருகிறது.

ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்.

ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடக்க வேண்டும்.

ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி. 2595

(அம்மாகுடி, ஆத்தாகுடி.)

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

(கொட்டினாலும் கொட்டு.)

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு.

ஆற்றிலே போட்டுக் குளத்திலே தேடுவது போல.

(சுந்தரர் கதை.)

ஆற்றிலே போனாலும் போவேனே அன்றித் தெப்பக்காரனுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்றானாம்.

ஆற்றிலே வந்தது மடுவிலே போயிற்று. 2600

ஆற்றிலே வருகிறது, மணலிலே சொருகுகிறது.

ஆற்றிலே விட்ட தர்ப்பை போல் தவிக்கிறேன்.

ஆற்றிலே விட்ட தெப்பத்தைப் போலத் தவிக்கிறேன்.

ஆற்றிலே விளைகிறது மணலிலே சிதறுகிறது.

ஆற்றிலே வெள்ளம் போனால் அதற்கு மேலே தோணி போகும். 2605

ஆற்றிலே வெள்ளம் வந்தால் ஆனை தடுக்குமா?

ஆற்று அருகில் இருந்த மரமும் அரசு அறிந்த வாழ்வும் நிலை அல்ல.

(இருந்த வாழ்வும், அரசன் அருகில் இருந்த.)

ஆற்றுக்கு அருகில் குடியிருந்த கதை.

ஆற்றுக்கு ஒரு நாணல்; நாட்டுக்கு ஒரு பூணல்.

ஆற்றுக்குச் செய்து அபத்தம்; கோயிலுக்குச் செய்து குற்றம். 2610

ஆற்றுக்கு நெட்டையும் சோற்றுக்குக் குட்டையும் வாசி.

ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா?

(பார்ப்பான் துணை அல்ல, பயற்றங்காய் கறியா?)

ஆற்றுக்குப் போகிறதும் இல்லை; அழகரைக் கும்பிடுகிறதும் இல்லை.

ஆற்றுக்குப் போவானேன்? செருப்பைக் கழற்றுவானேன்?

ஆற்றுக்குப் போன ஆசாரப் பாப்பாத்தி துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம். 2615

ஆற்றுக்கும் பயம்; காற்றுக்கும் பயம்.

ஆற்றுக்கும் போகவேண்டாம்; செருப்பையும் கழற்ற வேண்டாம்.

ஆற்றுக்கு மிஞ்சி அரஹராப் போட்டாலும் சோற்றுக்கு மிஞ்சித் சொக்கேசன்.

ஆற்றுக்குள்ளே போய் அரஹரா சிவசிவா என்றாலும் சோற்றுக்குள்ளே இருக்கிறானாம் சொக்கலிங்கம்.

(ஆற்றுக்குள்ளே நின்று.)

ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே என்றான். 2620

ஆற்றுநீர் ஊற்றி அலசிக் கழுவினாலும் வேற்று நீர் வேற்று நீர் தான்.

ஆற்று நீர் பித்தம் போக்கும்; குளத்து நீர் வாதம் போக்கும்; சோற்று நீர் எல்லாம் போக்கும்.

ஆற்று நீர் வடிந்த பின் ஆற்றைக் கடக்க நினைத்தானாம்.

ஆற்று நீரில் அலசிக் கழுவினாலும் அலை.

ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ? எடுத்துக் குடிக்குமோ? 2625

ஆற்றுப் பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழிகை.

ஆற்று மண்ணுக்கு வேற்று மண் உரம்.

(மாற்று மண்.)

ஆற்று மணலிலே தினம் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.

ஆற்று மணலை அரைத்துக் கரைத்தாலும் வேற்று முகம் வேற்று முகந்தான்.

ஆற்று மணலை அளவிடக் கூடாது. 2630

ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அருச்சுனன் மனைவியரை எண்ண முடியாது.

ஆற்று மணலையும் ஆகாசத்து நட்சத்திரத்தையும் அளவிடப்படுமோ?

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.

ஆற்றுவார் இல்லாத துக்கம் நாளடைவில் ஆறும்.

ஆற்றுவாரும் இல்லை; தேற்றுவாரும் இல்லை. 2635

ஆற்று வெள்ளம் ஆனையை என்ன செய்யும்?

ஆற்றுார் அரிசியும் வேற்றூர் விறகும் இருந்தால் சாத்தூர் செளக்கியம்.

ஆற்றுார் சேற்றுார் ஆற்றுக்கு அடுத்த ஊர், ஆறுமுக மங்கலம் ஆர் ஒருவர் போனாலும் சோறு கொண்டு போங்கள் சொன்னேன், சொன்னேன்.

(ஆண்டாள் கவிராயர் கூற்று.)

ஆற்றை அடைக்கும் அதிவிடையம்.

(ஆற்றுடைப்பை, கிராணி வயிற்றுப் போக்கிற்கு அதி விடையம் மருந்து.)

ஆற்றைக் கட்டிச் செட்டியார் இறைத்தால் சும்மாவா இறைப்பார்? 2640

ஆற்றைக் கடக்க ஒருவன் உண்டானால் அவனைக் கடக்கவும் ஒருவன் உண்டு.

ஆற்றைக் கடக்கும்வரையில் அண்ணன் தம்பி; அப்புறம் நீ ஆர்? நான் ஆர்?

ஆற்றைக் கடத்தி விடு; ஆகாசத்தில் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான் மந்திரவாதி.

ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.

ஆற்றைக் கண்டாயோ? அழகரைச் சேவித்தாயோ? 2645

ஆற்றைக் காணாத கண்களும் அழகரை வணங்காத கைகளும் இருந்தும் பயன் இல்லாதவை.

ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணுால்.

ஆற்றைத் தாண்டியல்லவோ கரை ஏறவேண்டும்?

ஆற்றோடு போகிற பிள்ளையில் பெண்ணுக்கு ஓர் அகமுடையான் கருப்பாகப் போச்சோ?

(கருப்பு-பஞ்சம்.)

ஆற்றோடு போகிறவன் நல்ல வேலைக்காரன்.

ஆற்றோடு போனாலும் ஆற்றூரோடே போகாதே. 2650

(திருநெல்வேலி மாவட்டப் பழமொழி.)

ஆற்றோடு போனாலும் கூட்டோடு போகாதே.

ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன்.

ஆற்றோடு போனாலும் போவான் செட்டி; தோணிக்காரனுக்கு அரைக்காசு கொடுக்கமாட்டான்.

(தெப்பக்காரனுக்கு ஒரு காசு.)

ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன். 2655

ஆற்றோடு வந்த நீர் மோரோடு வந்தது.

ஆற்றோடே போனாலும் போவேன்; தெப்பக்காரனுக்குக் கூல கொடுக்க மாட்டேன் என்றானாம்,

(போகிறதே அல்லாமல் தெப்பக்காரனுக்கு ஒரு காசு கொடுக்கிறது இல்லை.)

ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ஆனான குடித்தனமும் நீறாய் விடும்.

ஆறாம் திருநாள் ஆனை வாகனம்.

ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆனான வாழ்வு நீறாய் விடும். 2660

(ஆனான குடித்தனம்.)

ஆறாம் மாசம் அரைக் கல்யாணம்.

ஆறா மீனின் ஓட்டம்.

ஆறாவது பிள்ளை ஆனை கட்டி வாழ்வான்.

ஆறாவது பிள்ளை பிறந்தால் ஆனை கட்டி வாழலாம்.

(ஆண்பிறந்தால்.)

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. 2665

ஆறிலே செத்தால் அறியா வயசு; நூறிலே செத்தால் நொந்த வயசு.

ஆறின கஞ்சி பழங்கஞ்சி.

ஆறின சோறு ஆளனுக்கு மிஞ்சும்.

ஆறின சோறு பழஞ் சோறு.

ஆறின புண்ணிலும் அசடு நிற்கும். 2670

(அசடு-பொறுக்கு.)

ஆறினால் அச்சிலே வார்; ஆறாவிட்டால் மிடாவிலே வார்,

ஆறு அல்ல, நூறு அல்ல, ஆகிறது ஆகட்டும்.

ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.

(இல்லை, வாக்குண்டாம்.)

ஆறு இல்லா ஊருக்குக் கேணியே கங்கை.

ஆறு எல்லாம் கண்ணீர்; அடி எல்லாம் செங்குருதி. 2675

ஆறு எல்லாம் பாலாய் ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்?

ஆறுக்கு இரண்டு பழுதில்லை.

ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி; ஆறு கடந்தால் நீ ஆர்? நான் ஆர்?

ஆறு கடக்கைக்குப் பற்றின தெப்பம் போகவிடுமாப் போலே.

ஆறு கல்யாணம்; மூன்று பெண்கள்; மார்போடே மார்பு இடிபடுகிறது. 2680

(தள்ளுகிறது.)

ஆறு காதம் என்கிறபோது கோவணத்தை அவிழ்ப்பானேன்?

(அரைச் சீலையை, அவிழ்த்துக் குடுமியிலே கட்டிக் கொண்டானாம்.)

ஆறு காதம் என்கிற போதே கோவனம் கட்டினானாம்.

ஆறு காதம் என்ன, அவிழ்த்துக் கொண்டானாம் அரைத்துணியை.

ஆறு கெட நாணல் இடு; ஊறு கெடப் பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலியை விடு.

(முதலையை.)

ஆறு கெடுத்தது பாதி; தூறு கெடுத்தது பாதி. 2685

ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி.

ஆறு கொத்து, நூறு இறைப்பு; ஆறு சீப்பு, நூறு காய்.

(வாழை.)

ஆறு கொத்து, நூறு தண்ணீர்.

(வாழை.)

ஆறு கோணலாய் இருந்தாலும் நீரும் கோணலோ? மாடு கோணலாய் இருந்தாலும் பாலும் கோணலோ?

ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவு மேல். 2690

ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்?

ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் பாய்கிறது கொஞ்சம், சாய்கிறது கொஞ்சம்.

ஆறு நிறைய நீர் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.

(ஜலம், வெள்ளம்.)

ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?

ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு? 2695

ஆறு நூறு ஆகும்; நூறும் ஆறு ஆகும்.

ஆறு நேராய்ப் போகாது.

ஆறு நேரான ஊர் நில்லாது.

ஆறு நேரான ஊரும், அரசனோடு எதிர்த்த குடியும், புருஷனோடு ஏறு மாறான பெண்டிரும் நீறு நீறு ஆகிவிடும்.

ஆறு பாதிக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே. 2700

ஆறு பார் ஒத்து வந்தாலும் நாய் நக்கிக் குடிக்கும்.

ஆறு பார்க்கப் போக ஆய்க்குப் பிடித்தது சளிப்பு.

ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கண்.

ஆறு பிள்ளை அழிவுக்கு லட்சணம்.

ஆறு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவமாம். 2705

ஆறு போவதே கிழக்கு; அரசன் செல்வதே வழக்கு.

(சொல்வதே.)

ஆறு போவதே போக்கு; அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆறும் கடன்; நூறும் கடன், பெரிசாச் சுடடா பணியாரத்தை,

ஆறும் கருவில் அமைத்தபடி.

(ஆறு-பேர், இன்பம், தாரம், பிணி, மூப்பு, சாக்காடு.)

ஆறும் நாலும் பத்து; நாலும் ஆறும் பத்து. 2710

ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா?

ஆறு மாசம் பழுத்தாலும் விளா மரத்தில் வௌவால் சேராது.

ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற் போல.

ஆறு மாதத்துக்கு வட்டி இல்லை; அப்புறம் முதலே இல்லை.

ஆறு மாதம் வீட்டிலே; ஆறு மாதம் காட்டிலே. 2715

ஆறுமுக மங்கலத்துக்கு ஆர் போனாலும் சோறு உண்டு போங்கள், சொன்னேன்; சொன்னேன்.

(சோறு கொண்டு; ஆன்டான் கவிராயர் கூற்று.)

ஆறு வடியும் போது கொல்லும்; பஞ்சம் தெளியும் போது கொல்லும்.

(கருப்பு.)

ஆறு வடிவிலேயும் கருப்புத் தெளிவிலேயும் வருத்தும்.

ஆன காரியத்துக்கு மேளம் என்ன? தாளம் என்ன?

ஆன குலத்தில் பிறந்து ஆட்டை மாட்டை மேய்க்காமல் ஓலைவாரியாய்ப் போனானே! 2720

ஆனது அல்லாமல் ஆவதும் அறிவமோ?

ஆனதுக்கு ஓர் ஆகாதது; ஆகாததற்கு ஓர் ஆனது.

ஆன தெய்வத்தை ஆறு கொண்டு போகிறது; அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருவிழாவா?

ஆனந்த தாண்டவபுரத்தில் எல்லோரும் அயோக்கியர்கள், உங்களைத் தவிர.

ஆனந்த பாஷ்பத்துக்கு அரைப்பலம் மிளகு. 2725

(புதிய தர்மகர்த்தா சொன்னது.)

ஆனமட்டும் ஆதாளி அடித்துப் போட்டு ஆந்தை போல் விழிக்கிறான்.

(விழிக்கிறேன்.)

ஆன மாட்டை விற்றவனும் அறுகங் காட்டைத் தொட்டவனும் கெட்டான்.

ஆன முதலை அழிப்பவன் மானம் இழப்பது அரிதல்ல.

ஆனவன் ஆகாதவன் எல்லாவற்றிலும் உண்டு.

(எங்கும் உண்டு.)

ஆனாங் கோத்திரத்துக்கு ஏனாந் தர்ப்பயாமி. 2730

(துரத்து உறவுக் குறிப்பு.)

ஆனால் அச்சிலே வார்; ஆகா விட்டால் மிடாவிலே வார்.

ஆனால் ஆதி வாரம்; ஆகாவிட்டால் சோம வாரம்.

(ஆதித்த வாரம்.)

ஆனால் தெரியாதா? அழுகைக் குரல் கேட்காதா?

ஆனால் பிரம்ம ரிஷி; ஆகாவிட்டால் ரோம ரிஷி.

ஆனால் விட்டு அடுப்பு எரியும்; போனால் விட்டுப் புத்தி வரும். 2735

ஆனான ஆளெல்லாம் தானானம் போடுகிறபோது, கோணல் கொம்பு மாடு கொம்பைக் கொம்பை அலைக்கிறது.

ஆனானப்பட்ட சாமி எல்லாம் ஆடிக் காற்றில் பறக்குது; அநுமந்தப் பெருமாளுக்குத் தெப்பத் திருநாளாம்.

ஆனானப் பட்டவர்கள் எல்லாம் தானானம் அடிக்கறச்சே அழுகற் பூசணிக்காய் தெப்பம் போடுகிறதே!

ஆனி அடி எடார்; கூனி குடி புகார்.

(அடிஇடாதே, குடி போகாதே, கூனி-பங்குனி மாதம்.)

ஆனி அடி வைத்தாலும் கூனி குடி புகாதே. 2740

(அடியிடாதே.)

ஆனி அடை சாரல், ஆவணி முச்சாரல், ஆடி அதி சாரல்.

ஆனி அரணை வால் பட்ட கரும்பு, ஆனை வால் ஒத்தது.

ஆனி அரை ஆறு; ஆவணி முழு ஆறு.

ஆனி அறவட்டை, போடி உங்கள் ஆத்தாள் வீட்டுக்கு.

ஆனி ஆவணியில் கிழக்கு வில் பூண்டால் பஞ்சம் உண்டு. 2745

ஆனி ஆனை வால் ஒத்த கரும்பு.

ஆனித் தூக்கம்.

ஆனி மாதம் போடுகிற பூசணியும் ஐயைந்து வயசிற் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்.

ஆனி முற்சாரல்; ஆடி அடைசாரல்.

(திருக்குற்றாலத்தில்.)

ஆனியில் அடி கோலாதே; கூனியில் குடி போகாதே. 2750

ஆனியும் கூனியும் ஆகா.

ஆனை அசைந்து உண்ணும்.

ஆனை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும்.

ஆனை அசைந்து வரும்; அடி பெயர்ந்து வரும்.

ஆனை அசைந்து வரும்; அடி மேகம் சுற்றி வரும். 2755

ஆனை அசைந்து வரும்; பூனை பாய்ந்து வரும்.

ஆனை அசைந்து வாங்கும், வீடு அசையாமல் வாங்கும்.

ஆனை அடம் பிடிக்கிறது போல.

(அடம் வைத்ததுபோல.)

ஆனை அடம் வைத்தாற்போல் அமர அமரப் பதித்த வைத்திருக்கிறார்.

ஆனை அடமும் பூனைப் பாய்ச்சலும். 2760

ஆனை அடியில் அடங்கா அடி இல்லை.

ஆனை அடியும் சரி, குதிரை குண்டோட்டமும் சரி.

ஆனை அத்தனை தீப்போட்டாலும் பானை அடியிலேதான்.

ஆனை அத்தனை தீப்போட்டாலும் பானையத்தனை தீத்தான்படும்.

ஆனை அம்பலம் ஏறும்; ஆட்டுக்குட்டி அம்பலம் ஏறுமா? 2765

ஆனை அயர்ந்தாலும் பூனை அயராது.

ஆனை அரசன் கோட்டையைக் காக்கும்; பூனை எலிவளையைக்காக்கும்.

ஆனை அரசு செய்த காட்டிலே பூனை அரசு செய்வது போல.

ஆனை அரைக் காசுக்குக் கிடைத்தாலும் வேண்டாம்.

ஆனை அழிகுட்டி போட்டாற் போல. 2770

ஆனை அழிப்பது தெரிய வில்லையாம்; ஆடுஅழிப்பது தெரிகிறதாம்.

ஆனை அழுக்கு அலம்பினால் தெரியும்.

ஆனை அழுதால் பாகன் பழியா?

ஆனை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும்.

ஆனை அறிவு பூனைக்கு ஏது? 2775

ஆனை ஆங்காரம் அடி பேரு மட்டும்.

ஆனை ஆசார வாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும்.

ஆனை ஆயிரம் கேட்டாலும் கொடுப்பானே கர்ணப்பிரபு.

ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?

ஆனை ஆனை என்றால் தந்தம் கொடுக்குமா? 2780

ஆனை இருக்கும் இடத்தைக் காட்ட வேண்டாம்.

ஆனை இருந்த இடமும் அரசன் இருந்த இடமும் ஒரு நாளும் பொய்யாகா.

ஆனை இருந்தால் சேனைக்குப் பலம்.

ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.

ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது. 2785

ஆனை இல்லாத ஊர்வலம் பருப்பு இல்லாத கல்யாணம்.

ஆனை இல்லாத ஊர்வலம் மாதிரி.

ஆனை இளைத்தால் ஆடு ஆகுமா?

ஆனை இளைத்தால் எவ்வளவு இளைக்கும்?

ஆனை உண்ட விளாங்கனி போல. 2790

ஆனை உயரம் பூனை ஆகுமா?

ஆனை உறங்குவதும் ஆட்டுக்கிடா பிந்துவதும்.

ஆனை ஊர்வலத்தில் அடைபட்டதாம் காவேரி.

ஆனை ஊற்றுக்குக் கொசு எம்மட்டோ?

ஆனை எதிர்த்து வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே. 2795

(வைணவர் சொல்வது.)

ஆனை எவ்வளவு பெரிதானாலும் அங்குசக் குச்சிக்கு அடக்கந்தானே?

ஆனை ஏற அங்குசம் இல்லாமல் முடியுமா?

ஆனை ஏற ஆசை; தாண்டி ஏறச் சீவன் இல்லை.

ஆனை ஏறிச் சந்தின் வழியாக நுழைவானேன்?

(ஏறியும்.)

ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவதுபோல. 2800

(ஏறியும்.)

ஆனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்தாற்போல.

ஆனை ஏறினால் மாவுத்தன்; குதிரை ஏறினால் ராவுத்தன்.

ஆனை ஏறினால் வானம் எட்டுமோ?

ஆனை ஏறினாலும் அம்பலத்தில் இறங்கத்தான் வேண்டும்.

ஆனை ஏறும் பெரும்பறையன் ஆரூரில் இருப்பான். 2805

ஆனை ஒட்டினாலும் மாமி ஒட்டான்.

ஆனை ஒரு குட்டி போட்டும் பலன்; பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை.

ஆனை ஒரு குட்டி போடுவதும் பன்றி பல குட்டி போடுவதும் சரி ஆகுமா?

ஆனைக்கண் ஐசுவரியம்.

ஆனைக் கண்ணிலே மோதிரம் பண்ணி வானக் கண்ணி போட்டாளாம். 2810

ஆனைக்கண் விழுந்த பலாக்காய் போல.

ஆனைக் கவடும் பூனைத் திருடும்.

ஆனைக் கறுப்பைக் கண்ட அட்டை, எனக்கு என்ன குறைச்சல் என்று சொல்லிக் கொண்டதாம்.

ஆனைக் கன்றும் வளநாடும் கொண்டு வந்தானோ?

ஆனைக்காரன் ஆனைக்குத் தன் வீட்டைக் காண்பித்துக் கொடாதது போல. 2815

ஆனைக்காரன் பெண் அடைப்பைக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம்.

ஆனைக்காரன் பெண்டாட்டி பூனைக்குட்டியைப் பெற்றாளாம்.

ஆனைக்காரன் மனைவி ஆண் பிள்ளை பெற்றால் காச்சு மூச்சென்றிருக்கும்.

ஆனைக்காரனுக்கு ஆனையாலே சாவு.

ஆனைக்கால்காரன் மிதித்து விடுவதாகப் பயங்காட்டலாம்; மிதிக்கக் கூடாது 2820

ஆனைக் காலில் அகப்பட்ட செல்லுப் போல.

ஆனைக் காலில் பாம்பு நுழைந்தாற் போல.

ஆனைக் காலில் மிதிபட்ட சுண்டெலி போல.

ஆனைக் காலின்கீழ் எறும்பு எம்மாத்திரம்?

ஆனைக்கு அகங்காரமும் பெண்களுக்கு அலங்காரமும். 2825

ஆனைக்கு அடி தூரம், எறும்புக்கு ஏழு காதம்.

ஆனைக்கு அம்பாரி அழகு; அரசனுக்கு முடி அழகு.

ஆனைக்கு அரைஅடி; எலிக்கு எட்டு அடி.

ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.

(அறுபது அடி, அருங்குள்ளனுக்கு எழுபது அடி.)

ஆனைக்கு ஆயிரம் பாத்தி வேணும்; தோட்டக்காரன் என்ன செய்வான்? 2830

ஆனைக்கு ஆயிர முழம் அகல வேணும்,

(நீதி வெண்பா.)

ஆனைக்கு ஆறு அடி; பூனைக்கு இரண்டு அடி.

ஆனைக்கு ஆனை கைகொடுத்தாற் போல.

ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.

(வெற்றி வேற்கை.)

ஆனைக்கு உடல் எல்லாம் தந்தம்; மனிதனுக்கு உடல் எல்லாம் பொய். 2835

ஆனைக்கு எதிரி நெருஞ்சி முள்.

ஆனைக்கு ஏற்ற கண்ட்ர கோடாலி.

ஆனைக்கு ஒரு கவளம்; ஆளுக்கு ஒரு வேளைச் சோறு.

ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம்.

ஆனைக்கு ஒரு பிடி; எறும்புக்கு ஒன்பது பிடி. 2840

ஆனைக்குக் கட்டிய கூடாரம் போல.

ஆனைக்குக் கண் அளந்தார்; ஆட்டுக்கு வால் அளந்தார்.

ஆனைக்குக் கண் அளந்து வைத்திருக்கிறது.

ஆனைக்குக் கண் சிறுத்து வர, காது அசைந்து வர.

ஆனைக்குக் கரும்பு; கழுதைக்குத் தாள்; நாய்க்குக் கருப்புக் கட்டி. 2845

ஆனைக்குக் கரும்பும் நாய்க்கு வெள்ளெலும்பும் போல,

ஆனைக்குக் கால் குட்டை; பானைக்குக் கழுத்துக் குட்டை.

ஆனைக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் போதுமா?

ஆனைக்குக் கோபம் வந்தால் அகத்தைப் பிளக்கும்; பூனைக்குக் கோபம் வந்தால் புல்லுப்பாயைப் பிறாண்டும்.

(தின்னும்.)

ஆனைக்குக் கோவணம் கட்ட ஆராலே முடியும்? 2850

ஆனைக்குச் சிட்டுக்குருவி மத்தியஸ்தம் போனாற்போல.

ஆனைக்குச் செருப்புத் தைத்தாற்போல.

ஆனைக் குட்டிக்குப் பால் வார்த்துக் கட்டுமா?

ஆனைக் குட்டி கொழுக்கவில்லையே என்று உட்கார்ந்து அழுததாம் சிங்கக் குட்டி.

ஆனைக்குத் தலை மட்டம்; தவளைக்குத் தொடை மட்டம். 2855

ஆனைக்குத் தீனி அகப்பையில் கொடுத்தால் போதாது.

ஆனைக்குத் தீனி இடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?

ஆனைக்குத் தீனி வைத்துக் கட்டுமா?

ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.

ஆனைக்குத் தெரியுமா அங்காடி விலை? 2860

ஆனைக்குத் தேரை இட்டது போல,

(தேரையூன் இரை இட்டது போல.)

ஆனைக்கு நீச்சம், முயலுக்கு நிலை.

ஆனைக்குப் பகை சுள்ளெறும்பு.

ஆனைக் குப்பத்தான் போலே,

(ஆனைக்குப்பம்-திருவாரூருக்கு அருகில் உள்ள ஓர் ஊர், போக்கிரி என்று பொருள்.)

ஆனைக்குப் பனை சர்க்கரை. 2865

ஆனைக்குப் புண் வந்தால் ஆறாது.

ஆனைக்குப் பூனை போலவும் வால் இல்லையே!

ஆனைக்கும் அசையாதது ஆட்டுக்கு அசையும்.

ஆனைக்கும் அடி சறுக்கும்.

ஆனைக்கும் அடி தவறும்; பூனைக்கும் எலி தவறும். 2870

ஆனைக்கும் அடி தவறும்; வேடனுக்கும் குறி தவறும்.

ஆனைக்கும் உண்டா ஏழரை நாட்டுச் சனி?

ஆனைக்கும் உண்டு அவகேடு.

ஆனைக்கும் சரி, பூனைக்கும் சரி.

ஆனைக்கும் பானைக்கும் சரியாய்ப் போச்சு. 2875

ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.

ஆனைக்கு மங்கள ஸ்நானம்; கிண்ணத்தில் எண்ணெய் எடு.

ஆனைக்கு மதம் பிடிக்க, பாகனுக்குக் கிலி பிடிக்க.

ஆனைக்கு மதம் பிடித்தால் காடு கொள்ளாது.

ஆனைக்கு முன் முயல் முக்கினது போல. 2880

ஆனைக்கு ராஜா மூங்கில் தடி.

ஆனைக்கு லாடம் அடித்ததைக் கண்டதுண்டா?

ஆனைக்கு வாழைத்தண்டு; ஆளுக்குக் கீரைத்தண்டு.

ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்குச் சோறு இல்லையா?

(வேகிற சோற்றில் பூனைக்குப் பங்கு இல்லையாம்.)

ஆனைக் கூட்டத்தில் சிங்கம் புகுந்தது போல. 2885

ஆனைக் கூட்டம் எதிர்த்தால் பூனைக்குட்டி என்ன செய்யும்?

ஆனைக் கேடும் அரசு கேடும் உண்டா?

ஆனை கட்டச் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுக்கும்.

(கயிற்றைக் கொடுத்தது போல.)

ஆனை கட்டத் தாள்; வானை முட்டப் போர்.

ஆனை கட்டி ஆண்டால் அரசனும் ஆண்டி ஆவான். 2890

ஆனை கட்டி ஆளும் அரசனோ?

ஆனை கட்டி உழுகிறான்.

ஆனை கட்டித் தீனி போட முடியுமோ?

ஆனை கட்டியார் வீட்டில் வாழ்க்கைப்பட்டால் ஆறு கலம் அரிசி யாவது சிறப்பு வைக்க வேண்டாமா?

ஆனை கட்டி வாழ்ந்தவன் வீட்டில் பானை சட்டிக்கு வழி இல்லை. 2895

ஆனை கட்டின மரம் ஆட்டம் கொடுக்கும்.

ஆனை கட்டும் தொழுவத்தில் பூனை கட்டலாமா?

ஆனை கண்ட பிறவிக் குருடன் அடித்துக் கொள்கிறது போல,

ஆனை கண் பருத்தால் அகிலத்தை ஆளாதா?

ஆனை கலக்குகிற குட்டையில் கொக்கு மீனைப் பிடிக்கச் சென்றதாம். 2900

ஆனை கவுளில் அடக்கிய கல்லைப்போல.

(அடக்கியது போல.)

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்; அட்டைகறுத்தால் உதவி என்ன?

(பூனை கறுத்தால் உதவி என்ன?)

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன், பூனை கறுத்தால் என்ன பெறும்?

(ஆகும்?)

ஆனை கறுத்தால் என்ன? அசல் வீடு வாழ்ந்தால் என்ன?

ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும். 2905

ஆனைகறுப்போ வெள்ளையோ, கொம்பு வெள்ளைதான்.

ஆனை காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் பாகனுக்கு அடிமை.

ஆனை காணாமற் போனால் இரண்டு சட்டியில் தேடினால் அகப்படுமா?

ஆனை காதில் கட்டெறும்பு புகுந்தாற் போல.

ஆனை கிட்டப் போக ஆசையாக இருக்கிறது; மாணி எட்ட வில்லை. 2910

(இடக்கர்.)

ஆனை குட்டி போட்டாற் போல்.

ஆனை குட்டி போட்டதென்று முயல் முக்கினாற்போல.

ஆனை குட்டி போடுகிறது என்று ஆடும் போட்டால் புட்டம் கீறி விடும்.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

ஆனை குட்டி போடும் போடும் என்று எண்ணி லத்தி போட்டதாம்.

(என்று நம்பி.)

ஆனை குட்டையைக் குழப்புவது போல. 2915

ஆனை குடிக்கும் ஜலம் பூனை குடிக்குமா?

ஆனை குண்டு சட்டியிலும் குழிசியிலும் உண்டோ?

ஆனை குப்புற விழுந்தால் தவளைகூட உதைத்துப் பார்க்குமாம்.

ஆனை குளிக்கச் செம்பு ஜலமா?

ஆனை குளித்த குளம் போல. 2920

ஆனை குறட்டில் அவல் அடக்குகிறதுபோல எந்த மட்டும் அடக்குகிறது?

ஆனை கெட்டுக் குடத்தில் கை இடுகிறதா?

ஆனை கெட்டுப் போகக் குடத்தில கைவிட்டுப் பார்க்கிறதா?

ஆனை கெடுத்தவன் குடத்தில் கை இட்டாற் போல.

ஆனை கெடுத்தவன் பானையில் தேடினாற் போல. 2925

(குடத்தில்.)

ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா?

ஆனை கேடு, அரசு கேடு உண்டா?

ஆனை கொடுத்தவன் அங்குசம் கொடானா?

ஆனை கொடுத்து ஆடு வாங்கினான்.

ஆனை கொடுத்தும் அங்குசத்துக்குப் பிணக்கா? 2930

(கொண்டும்.)

ஆனை கொழுத்தால் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும்,

ஆதுை கொழுத்தால் வாழைத்தண்டு; மனிதன் கொழுத்தால் கீரைத்தண்டு.

ஆனை கொடிற்றில் அடக்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது?

ஆனைச் சிவப்பிலும் அதிகச் சிவப்பு!

ஆனைக் கவடும் பூனைத் திருடும். 2935

ஆனைச் சொப்பனம் கண்டவருக்குப் பானைப் பொன்.

ஆனை சிங்கக்குட்டி போடுவது போல.

ஆனை சிந்திய சிறு கவளம் எறும்புக் கூட்டத்துக்குப் பெருவளம்.

ஆனை சீர் தந்த எங்கள் அம்மான் கத்திரிக்காய்க்குக் குண்டா கரணம் போடுகிறான்.

ஆனை செத்தாலும் ஆயிரம் பொன். 2940

ஆனை சொற்படி பாகன்; பாகன் சொற்படி ஆனை.

ஆனைத் தலையளவு பெருங்காயம் கரைத்த வீடா?

ஆனைத் துதிக்கையில் எலும்பே கிடையாது.

ஆனைத் தோலை எலி கரண்டினது போல.

ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம். 2945

ஆனை தரைக்கு ராஜா; முதலை தண்ணீருக்கு ராஜா.

ஆனை தழுவிய கையால் ஆட்டுக்குட்டியைத் தழுவுகிறதா?

ஆனை தன் கோட்டிடை வைத்த கவளம் போல.

ஆனை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்வது போல.

(தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல.)

ஆனை தன் பலம் அறியாது. 2950

ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல.

ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தை மதில் சுவரில் முட்டிக் கொண்டது போல.

ஆனை தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுத்தது போல.

ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது.

ஆனை திரும்ப அரைக்கால் நாழிகை. 2955

ஆனை தின்ற விளாங்கனி போல.

ஆனை தும்பிக்கையில் வீசுகிறது என்று கழுதை வாலால் வீசினது போல.

ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது.

(ஆனைக்காவில்.)

ஆனை துறடு அறியும்; பாகன் நோக்கு அறிவான்.

ஆனை தொட்டாலும் மரணம் வரும். 2960

ஆனை தொடுவுண்ணின் மூடும் கலம் இல்லை.

ஆனை நடைக்கும் குதிரை ஓட்டத்துக்கும் சமம்.

ஆனை நிழல் பார்க்கத் தவளை அழித்தாற் போல.

(ஆனை கலைத்த கதை, அழுவதைப் போல, தவளை கனைத்ததாம், தவளை கலைத்த கதை.)

ஆனை நிற்க நிழல் உண்டு; மிளகு உருட்ட இலை இல்லை.

ஆனை நீட்டிப் பிடிக்கும்; பூனை தாவிப் பிடிக்கும். 2965

ஆனை நுழைய அடுக்களை பிடிக்குமா?

ஆனைப் பசிக்கு ஆத்திக் கீரையா?

ஆனைப் பசிக்குச் சோளப் பெரியா?

(சோளப் பொரி தாங்குமா?)

ஆனைப் பாகன் மனைவி ஆறுமாசத்துக்கு விதவை.

ஆனைப் பாகன் வீட்டை ஆனைக்குக் காட்ட மாட்டான். 2970

ஆனைப் பாகனுக்கு ஆனையால் சாவு.

ஆனைப் பாகனும் குதிரைப் பாகனும் சவாரி செய்தாற் போல.

ஆனை பட்டால் கொம்பு; புலி பட்டால் தோல்.

ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டி உயரமாவது இருக்காதா?

ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா? 2975

ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

ஆனை படுத்தால் குதிரை உயரம் வராதா?

(குதிரைப் பிரமாணம், குதிரை மட்டம்.)

ஆனை பழக்க ஆனை வேண்டும்.

ஆனை பாய்ந்தால் ஆர் பிடிப்பார்?

ஆனை பார்க்க வெள்வெழுத்தா? 2980

ஆனை பிடிக்கப் பூனைச் சேனை.

ஆனை பிடிப்பவனுக்குப் பூனை எம்மாத்திரம்?

ஆனை புக்க புலம் போல.

(புறநானுாறு.)

ஆனை புகுந்த கரும்புத் தோட்டமும் அமீனா புகுந்த வீடும் உருப்படா.

ஆனை புலி வந்தாலும் தாண்டுவான். 2985

ஆனை பெரிது, ஆனாலும் அதன் கண் சிறிது.

ஆனை பெருத்தும் ஊனம் உதறாதே.

(உதிராதே.)

ஆனை பெருமாளது; ஆர் என்ன சொன்னால் என்ன?

ஆனை போக அதன் வால் போகாதோ?

ஆனை போகிற வழியிலே எறும்பு தாரை விட்டது போல். 2990

ஆனை போய் ஆறு மாசம் ஆனாலும் தாரை மறையுமா?

ஆனை போல் ஐந்து பெண் இருந்தாலும் பூனை போல் ஒரு நாட்டுப் பெண் வேண்டும்.

(ஆயிரம் பெண் இருந்தாலும்.)

ஆனை போல வந்தான்; பூனை போலப் போகிறான்.

ஆனை போனதே வீதி.

ஆனை போன வீதியிலே ஆட்டுக்குட்டி போகிறது வருத்தமா? 2995

(வழியிலே.)

ஆனை போன வீதியையும் கேட்க வேண்டுமா?

ஆனை போனாலும் அடிச்சுவடு போகாது.

ஆனை மதத்தால் கெட்டது; அரசன் பயத்தால் கெட்டான்.

ஆனை மதம் பட்டால் அழகாகும்; பூனை மதம் பட்டால் என்ன ஆகும்?

ஆனை மதம் பட்டால் காடு கொள்ளாது; சாது மதம் பட்டால் ஊர் கொள்ளாது. 3000

ஆனை மதர்த்தால் வாழைத்தண்டு; ஆண் பிள்ளை மதர்த்தால் கீரைத்தண்டு.

ஆனை மயிர் கட்டின ஆண் சிங்கம்.

ஆனை மிதித்த காசு பானை நிரம்பும்.

ஆனை மிதித்தால் பிழைப்பார்களா?

ஆனை மிதித்து ஆள் பிழைக்கவா? 3005

ஆனை மிதித்துக் கொல்லும்; புலி இடிந்து கொல்லும்.

ஆனை முட்டத் தாள்; வானம் முட்டப் போர்.

ஆனை முட்டத் தேர் நகரும்.

ஆனை முதல் எறும்பு வரைக்கும்.

ஆனை முன்னே ஆட்டுக்குட்டி; பின்னே சிங்கக்குட்டி. 3010

ஆனை முன்னே முயல் முக்கினது போல.

ஆனை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்த்தானாம்.

ஆனை மேய்கிற காட்டில் ஆட்டுக்குட்டிக்குப் புல் கிடைக்காமல் போகுமா?

(தழை கிடைக்காமல்.)

ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா?

ஆனைமேல் அங்கு மணி எடுத்தாலும் ஆனை வால் கூழை வால். 3015

ஆனைமேல் அங்குமணிச் சீர் எடுத்துக் கொண்டு வந்தாலும் மாமியார் இல்லை என்பாள்.

ஆனைமேல் அம்பாரி போனால் பூனைக்கு என்ன புகைச்சலா?

ஆனைமேல் அம்பாரி வைத்து வரிசை வந்தாலும் ஆனை வால் கூழை என்பார்.

ஆனைமேல் இடும் பாரத்தைப் பூனை மேல் இடலாமா?

(இடுகிறதா?)

ஆனைமேல் இருக்கிற அரசன் சோற்றைக் காட்டிலும் பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறு மேல். 3020

ஆனைமேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டாற் போல.

(போகிறவனை)

ஆனைமேல் உட்கார்ந்திருப்பவன் வெறிநாய் கடிக்குமென்று அஞ்சுவானா?

ஆனைமேல் ஏறிப் பாறை மேல் விழுவதா? நாயின் மேல் ஏறி மலத்தின்மேல் விழுவதா?

ஆனைமேல் ஏறினால் ஆருக்கு லாபம்?

ஆனை மேல் ஏறு என்றால் பானை மேல் ஏறுவார்? பானைமேல் ஏறு என்றால் ஆனைமேல் ஏறுவார். 3025

ஆனைமேல் ஏறுவேன்; வீரமணி கட்டுவேன்.

ஆனைமேல் திருமஞ்சனம் வருவதென்றால் பெருமாளுக்கு யோகந்தான்.

ஆனைமேல் போகிறவன் அந்து காலன்; குதிரை மேல் போகிறவன் குந்து காலன்.

(வருகிறவன்.)

ஆனைமேல் போகிறவனையும் பானையோடு தின்றான் என்கிறது.

(போகிறவன் பானையோடு தின்றான்.)

ஆனைமேல் வந்தானா? குதிரை மேல் வந்தானா? 3030

ஆனையின் அதிகாரம் சிற்றெறும்பினிடம் செல்லாது.

ஆனையின் கண்ணுக்குச் சிற்றெறும்பும் மலையாம்.

ஆனையின் கரும்புக்குக் காட்டெருமை வந்ததாம்.

ஆனையின் காதில் எறும்பு புகுந்தது போல.

ஆனையின் மூச்சில் அகப்பட்ட கொசுப் போல. 3035

ஆனையின்மேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டால் அகப்படுமா?

ஆனையின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாமா?

ஆனையும் அறுகம் புல்லினால் தடைப்படும்.

ஆனையும் ஆனையும் உரசிக் கொள்ளக் கொசுவுக்குப் பிடித்ததாம் அனர்த்தம்.

ஆனையும் ஆனையும் முதுகுரைஞ்ச இடையிலிருந்து கொசு நசுங்குகிறது. 3040

ஆனையும் ஆனையும் மோதும் போது இடையிலே அகப்பட்ட கொசுவைப் போல.

(முட்டும் போது கொசுவின் கதி என்னாவது?)

ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன.

ஆனையும் பானையும் ஒன்றானால் பானையே நல்லது.

(ஆனையும் பூனையும்.)

ஆனையை அடக்கலாம்? அடங்காப் பிடாரியை அடக்க முடியாது. 3045

ஆனையை அடக்கலாம்? ஆசையை அடக்க முடியாது.

ஆனையை அடக்குபவனும் அகமுடையாளுக்கு அடக்கம்.

ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இரும்பு அங்குசத்துக்கு ஏமாந்து நிற்பானேன்?

ஆனையை இடுப்பிலே கட்டிச் சுளகாலே மறைப்பான்.

ஆனையைக் கட்ட ஊணான் கொடி போதுமா? 3050

ஆனையைக் கட்டி ஆள ஆண்டியால் முடியுமா?

ஆனையைக் கட்டி ஆளலாம்; அரைப் பைத்தியத்தைக் கட்டி ஆள முடியாது.

ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.

ஆனையைக் கட்டித் தீனி போட முடியுமா?

(போட்டாற் போல.)

ஆனையைக் கண்டு அஞ்சாதவன் ஆனைப் பாகனைக் கண்டால் அஞ்சுவானா? 3055

ஆனையைக் குடத்தில் அடைக்க முடியுமா?

ஆனையைக் குத்தி முறத்தினால் மறைப்பாள்.

(சுளகாலே மறைக்க முடியுமா?)

ஆனையைக் குளிப்பாட்ட அண்டா ஜலம் போதுமா?

ஆனையைக் கெடுத்தவன் பானையில் தேடினாற் போல்.

ஆனையைக் கொட்டத்தில் அடைத்தாற் போல. 3060

ஆனையைக் கொடுத்துத் துறட்டுக்கு மன்றாடினாற் போல.

ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா?

ஆனையைக் கொன்று அகப்பையால் மூடினாற் போல்.

ஆனையைச் சுளகால் மறைப்பது போல.

ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை பூனையைத் தரையில் இழுக்குமா? 3065

ஆனையைத் துரத்த நாயா?

(யாழ்ப்பாண வழக்கு.)

ஆனையைத் தேடப் பானையில் கை விட்டது போல.

(குடத்துள்.)

ஆனையை நம்பிப் பிழைக்கலாம்; ஆண்டியை நம்பிப் பிழைக்க முடியுமா?

ஆனையை நோண்டினால் அது உன்னை நோண்டிவிடும்.

ஆனையைப் படைத்த பகவான் பூனையையும் படைத்திருக்கிறார். 3070

ஆனையைப் பார்க்க ஆயிரம் பேர்.

ஆனையைப் பார்க்க வெள்ளெழுத்தா?

ஆனையைப் பார்த்த கண்ணுக்குக் கரடியைப் பார்ப்பதுபோல் இருந்ததாம்.

ஆனையைப் பார்த்துவிட்டுப் பூனையைப் பார்த்தால் பிடிக்குமா?

ஆனையைப் பிடிக்க ஆனைதான் வேண்டும். 3075

ஆனையைப் பிடிக்க எலிப் பொறியா?

ஆனையைப் பிடித்துக் கட்ட அரை ஞாண் கயிறு போதுமா?

ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் அடைப்பதும் அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம்.

(பானையில் அடைப்பதும்.)

ஆனையைப் பிடிப்பான் ஆண் பிள்ளைச் சிங்கம்; பானையைப் பிடிப்பாள் பத்தினித் தங்கம்.

ஆனையைப் புலவனுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு. 3080

(வித்துவானுக்கும்.)

ஆனையைப் பூனை மறைத்ததாம்.

ஆனையைப் போக்கினவன் குடத்திலே தேடின மாதிரி.

ஆனையைப் போல் சுவர் எழுப்பினால் ஆர் தாண்டுவார்கள்?

ஆனையைப் போல வஞ்சனை; புலியைப் போலப் போர்.

ஆனையை முறுக்கி ஆளச் சாமர்த்தியம் இருந்தாலும் அகமுடையாளை அடக்கி ஆளத் திறமை இல்லாதவன் இருந்தென்ன பிரயோசனம்? 3085

ஆனையை வாங்கலாமா லஞ்சம்?

ஆனையை வாங்கிவிட்டுத் துறட்டுக்கு மன்றாடுகிறான்.

ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.

ஆனையை விழுங்குவான்; கடைவாயில் ஒட்டிய ஈயைக் கண்டு நடுங்குவான்.

ஆனையை விற்றா பூனைக்கு மருத்துவம் பார்ப்பது? 3090

(வைத்தியம்.)

ஆனையை விற்றுத் துறட்டுக்கு மன்றாடுகிறான்.

ஆனையோடு பிறந்த அலங்காரி, சேனையோடு பிறந்த சிங்காரி.

ஆனை லத்தி ஆனை ஆகுமா?

ஆனை லத்தி போடுகிற மாதிரி குதிரை லத்தி போட்டால் குண்டி கிழிந்து போகும்.

ஆனை வந்தால் ஏறுவேன்; சப்பாணி வந்தால் நகருவேன். 3095

(சப்பாணி கண்டால் தவழ்வேன்.)

ஆனை வந்தாலும் ஏற வேண்டும்; சப்பாணி வந்தாலும் ஏற வேண்டும்.

ஆனை வந்தாலும் தாண்டுவான்; புலி வந்தாலும் தாண்டுவான்.

ஆனை வந்து விரட்டினாலும் ஆனைக் காவில் நுழையாதே.

(வைணவர் கூற்று.)

ஆனை வயிறு ஆனாலும் பானைக்குள்ளேதான்.

ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டுக் குட்டிக்கு வயிறு நிறையாது. 3100

ஆனை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே:

ஆனை வலம் கிடைத்தாலும் பூனை வலம் கிடைக்காது.

(ஆனை வலம் போனாலும் பூனை வலம் போகக் கூடாது.)

ஆனை வாகனம் ராஜ லட்சணம்.

ஆனைவாய்க் கரும்பும் பாம்பின் வாய்த் தேரையும் யமன்கைக் கொண்ட உயிரும் திரும்பி வரா. 3105

ஆனை வாயில் அகப்பட்ட கொசுவைப் போல்.

ஆனை வாயில் போன கரும்பு போல.

(கரும்பு மீளுமா?)

ஆனை வாயில் போன விளாம் பழம் போல.

ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்துக் கரை ஏறலாமா?

(பூனை வால் பிடித்துக் கரை ஏறலாமா?)

ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; நாய் வால் பிடித்து ஆவது என்ன? 3110

ஆனை வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன?

ஆனை விலை, குதிரை விலை.

ஆனை விழுங்கிய அம்மையாருக்குப் பூனை ஒரு சுண்டாங்கி.

ஆனை விழுந்தால் அதுவே எழுந்திருக்கும்.

ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம். 3115

ஆனை விற்றால் ஆனை லாபம்; பானை விற்றால் பானை லாபம்

ஆனை விற்றும் துறட்டுக்குப் பிணக்கா?

ஆனை வீட்டிலே பிறந்து அடைப்பக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம்.

ஆனை வெளுக்கத் தாழி செய்தது போல.

ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தால். 3120

ஆஜ்யம் பூஜ்யம்.

(ஆஜ்யம் - நெய்.)

ஆஷ்டுக் குட்டி வந்து வேஷ்டியைத் தின்கிறது; ஓஷ்டு ஓஷ்டு.

ஆஷாட பூதிக்கு ஆயிரம் சொர்க்கம்.

ஆஸ்தி இல்லாதவன் அரை மனிதன்.

(மனிதன் அல்லாதவன்.)

ஆஸ்தி உள்ளவன் ஆஸ்திக்கு அடிமை. 3125

ஆஸ்தி உள்ளவனுக்கு நாசம் இல்லை.

ஆஸ்திக்கு ஓர் ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும்.

ஆஸ்திக்கு மிகுந்த அபராதமும் இல்லை; தலைக்கு மிஞ்சின தண்டமும் இல்லை.

ஆஸ்தி பாஸ்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_1/ஆ&oldid=1156431" இலிருந்து மீள்விக்கப்பட்டது