தமிழ்ப் பழமொழிகள் 2/ச
சக்களத்தி அறுத்தால் தானும் அறுப்பாள்.
சக்களத்திக்கு ஆண்பிள்ளை பெற்றால் பொறாமை, மலடிக்கு எவள் பிள்ளை பெற்றாலும் பொறாமை.
சக்களத்தி பிள்ளை தலைமாட்டுக் கொள்ளி.
சக்களத்தி மாமியார்.
சக்கிலித் தெரு நாய் சமயத்துக்கு உதவாது. 10135
சக்கிலிப் பெண் நெற்றியிலே குஜ்ஜிலிப் பொட்டைப் பார்.
சக்கிலிப் பெண்ணும் சாமைக் கதிரும் பக்குவத்திலே பார்த்தால் அழகு.
சக்கிலியன் சாமிக்குச் செருப்படிதான் பூஜை.
சக்கிலியன் சாமியைச் செருப்பால் அடித்துக் கும்பிடுவானா?
சக்கு சக்கு என்று பாக்குத் தின்பான். சபை மெச்ச வீட்டிலே வந்து கடைவாய் நக்குவான். 10140
(பெண்டுகள் மெச்ச.)
சக்கை போடு போடுகிறான்.
சக்தி இருந்தால் செய்; சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு.
சக்தி இல்லா விட்டால் சிவனே என்று கிட.
சத்தியம் பயந்து சங்கீதம்.
சகசண்டி மாட்டுக்கு இரண்டொரு சூடு: நம் சைவப் பின்னைக்கு மேலெல்லாம் சூடு. 10145
சகத்தைக் கெடுத்துச் சுகத்தை வாங்குகிறார்.
சகத்தைக் கொடுத்தும் சுகம் வாங்கிக் கொள்.
- (தேடிக் கொள்.)
கல்லை விட்டு எறிந்தால் தன் துணி என்றும் பிறர் துணி என்றும் பாராது.
சகதியில் கல்லை விட்டு எறிந்தால் மேலே தெறிக்கும்.
- (சேறு முகத்தில் தெறிக்கும்.)
சகல தீர்த்தங்களுக்கும் சமுத்திரமே ஆதரவு. 10150
- (நதிகளுக்கும் காரணம்.)
சகல நட்சத்திரமும் ஒன்றாய்க் கூடினாலும் சந்திரனுக்கு இணை ஆகுமா?
சகலமும் கற்றவன்தன்னைச் சார்ந்து இரு.
சகலன் உறவில் சாண் கொடி பஞ்சமா?
- (சாண் கயிறு.)
சகுனம் சொன்ன பல்லி கழுநீர்ப் பானையில் விழும்.
சகுனம் நன்றாக இருக்கிறது என்று பொழுது விடிகிற வரைக்கும் கன்னம் வைக்கலாமா? 10155
சகுனம் பார்க்கப் போகும்போது மடியில் பூனையைக் கட்டிக் கொண்ட மாதிரி.
சகுனம் பார்க்காதவன் காத வழியில் மாண்டான்.
சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்.
சங்கஞ் செடி ஒணானைக் கண்டு சாகிற கிழவியைக் குத்தின கதை.
சங்கட சனியனே, சடுதியில் விட்டுத் தொலை. 10160
- (சகதியில்.)
சங்கடமான பிள்ளையைப் பெற்று வேங்கடராமன் எனப் பெயர் வைப்பார்.
சங்கட வேதனைக்கெல்லாம் தலையிட்டுக் கொள்கிறதா?
சங்கடப் பாட்டா, தங்கப் பாட்டா?
சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் விழுமா?
சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா? 10165
சங்கிலே வார்த்தால் தீர்த்தம்; செம்பிலே வார்த்தால் தண்ணீர்.
- (சட்டியிலே வார்த்தால்.)
சங்கீதம் தெரியாவிட்டாலும் இங்கிதம் தெரியும்.
சங்கு ஆயிரத்தோடு காசி போனாலும் தன் பாவம் தன்னோடே
(ஆயிரம் கொண்டு.)
சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால் பொன்பாளம் வந்தாலும் வந்தது: மண் பாளம் வந்தாலும் வந்தது.
சங்கு உடைந்தது; மண் கரைந்தது. 10170
சங்கு ஊதாமல் தாலி கட்டுவது உண்டா?
சங்கு ஊதிப் பொழுது விடியுமா?
சங்கு சுட்டாலும் தன் வெண்மை குன்றாது.
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சங்கு சூத்து ஆகிறது; ஆண்டி வாய் ஆகிறது. 10175
- (சங்கு சூத்தும் ஆண்டி வாயும்.)
சங்கூதிப் பண்டாரம், அங்கு ஊதி இங்கு வராதே, இங்கு ஊதி அங்கே போ.
- (பூஜை பண்ணும் பண்டாரத்தைப் பார்த்துச் சிவலிங்கம் சொன்னது.)
சங்கைச் சுட்டாலும் மங்குமா நிறம்?
சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை.
- (சங்கோசம் இல்லையென்றால்.)
சட்டி ஓட்டை ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
- (வேக வேண்டும்.)
சட்டி சுட்டது; கை விட்டது. 10180
சட்டி திருடும் நாய்க்குப் பெட்டி பணம் எதற்கு?
சட்டி பாலுக்கு ஒரு சொட்டு மோர் பிரை.
சட்டி புழைக்கடையிலே; அகப்பை வாசலிலே.
சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்?
சட்டியோடு அகப்பை தட்டாமல் போகுமா? 10185
சட்டியோடு தின்று பானையோடு கை அலம்புகிறது.
சட்டுவம் கறிச் சுவையை அறியுமா?
சட்டைக்காரன் நாயை எட்ட நின்று பார்.
சட்டைநாதபுரம் உழவு; சீகாழி இழவு: செம்மங்குடி வறட்டி.
- (எப்போதும் இருக்கும். சீகாழிக்கு 1 1/2 மைலில் உள்ளது செம்மங்குடி)
சடை கொண்ட இலுப்பையைத் தடிகொண்டு அடித்தாற்போல. 10190
சடை கொண்டு வெருட்டல் வேண்டா.
- (திருவால. 16:26.)
சடைத் தம்பிரான் சோற்றுக்கு அழுகிறானாம்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறதாம்.
- (சாற்றுக்கு.)
சடைத் தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறான்; லிங்கம் பரமான்னத்துக்கு அழுகிறதாம்.
சடைத் தம்பிரானுக்குச் சாதம் இல்லாதபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்? .
சடையைப் பிடித்தால் சந்நியாசி தன்னாலே வருவான். 10195
- (பிடித்து இழுத்தால். கிட்டே வருவான். தம்பிரான் கூட வருவார்.)
சண்ட மாருதத்துக்குமுன் எதிர்ப்பட்ட சருகுபோல்.
சண்டிக்கு ஏற்ற மிண்டன்.
- (முண்டன்.)
சண்டிக் குதிரைக்கு ஏற்ற மொண்டிச் சாரதி.
- (நொண்டிச் சாரதி.)
சன்டி முறைத்தால் காடு கொள்ளாது.
- (புரண்டால்; மிரண்டால்; வெறிச்சால்.)
சண்டியிலும் சண்டி சகசண்டி. 10200
- (சண்டிக்கும் முண்டி படுசண்டி.)
சண்டைக்குச் சிங்காரம் இல்லை.
சண்டை செய்யும் இரண்டு கடாக்களில் நடுவில் நரி நின்று நசுங்கினது போல.
சண்டை நடந்ததற்குச் சாட்சி என் மகன் இருக்கிறான்.
சண்டை பிடிக்கிறவனுக்குக் கூடச் சனிக்கிழமை ஆகாது.
சண்டை முகத்திலே உறவா? 10205
- (உறவு ஏது?)
சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையை இறக்கு.
- (சாத மூட்டையை)
சண்டை வருகிறது மாமியாரே, சாதத்தை எடுத்து உள்ளே வையும்.
- (பானையை எடுத்து.)
சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவான்.
சணப்பன் கையில் அகப்பட்ட சீலைப் பேனைக் கொல்லவும் மாட்டான்; விடவும் மாட்டான்.
- (சணப்பன்-சமணன்.)
சணப்பன் வீட்டுக் கோழி தானாக வந்து மாட்டிக்கொள்ளும். 10210
- (தானே விலங்கு பூட்டிக் கொண்டது போல.)
சணப்பன் வீட்டு நாய் சணல் கட்டிலின் மேல் ஏறினாற் போல்.
சத்தத்துக்கு அளப்பதற்குமுன் பொதிக்கு அள.
சத்தம் பிறந்த இடத்தே சகல கலையும் பிறக்கும்.
சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற் போல.
சத்தாவரணம் சேவித்தால் செத்தவுடனே வைகுண்டம். 10215
- (ஸ்ரீவில்லிபுத்தூரில்.)
சத்தியத்தில் சிறந்தவன் அரிச்சந்திரன்.
சத்தியத்திலே சாமி சாட்சி என்கிற சத்தியம் பெரிது.
சத்தியத்துக்கு அரிச்சந்திரன்: சாந்தத்துக்குத் தருமராஜன்.
சத்தியத்துக்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டு அழப்போகிறானா?
சத்திய நெறியே சன்மார்க்க நெறி. 10220
சத்தியம் இல்லாத வாய் போலே.
அதிதியம் சத்தி: தத்துவம் சுத்தி.
- (சத்தியமே, சத்துவமே சித்தி.)
சத்தியம், தர்மம் நித்தியம்.
- (சத்திய தர்மம்.)
சத்தியம் தலை காக்கும்.
சத்தியம் நண்ணலை. சாவைத் தினம் நினை. 10225
சத்தியம் வெல்லும், அசத்தியம் கொல்லும்.
சத்தியமே கொல்லும்; சத்தியமே வெல்லும்.
சத்தியமே ஜயம்.
சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்.
- (நற்குணன்.)
சத்திரத்தில் இன்னும் நுழைய விடவில்லை; இலை கிழிசல் என்றானாம். 10230
சத்திரத்தில் சந்நியாசிக்குப் போஜனம், மடத்தில் நித்திரை.
சத்திரத்தில் சாப்பாடு; சாவடியில் நித்திரை.
- (மண்டபத்தில் படுக்கை.)
சத்திரத்தில் சாப்பாடு; மடத்தில் நித்திரை.
சத்திரத்தில் சோறு இல்லை என்றால் இலை பீற்றல் என்றானாம்.
சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பனையோ? 10235
- (அப்பனை ஆணை.)
சத்திரத்துச் சாப்பாட்டுக்கு அப்பணையங்கார் சிபாரிசா?
சத்திரத்துச் சாப்பாட்டுக்குச் தாத்தையங்கார் அப்பனையா?
- (உத்தரவா?)
சத்திரத்துச் சாப்பாட்டுக்கு நாயின் சிபாரிசா?
சத்திரத்துச் சோற்றுக்குத் தாத்தையங்கார் அப்பணையா?
- (கூழுக்கு.)
சத்திரத்து நாயை அடித்தால் கேட்பார் யார்? 10240
சத்திரத்துப் பாட்டுக்குத் தெருப்பாட்டு மேலா?
- (திருப்பாட்டு.)
சத்திரத்தைக் கட்டி நாயைக் காவல் வைத்தது போல.
சத்திரா போஜனம்; மடத்தில் நித்திரை.
சத்துக்களோடு சத்துக்கள் சேர்வர்: சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.
சத்துருக்களையும் சித்தமாய் நேசி. 10245
சத்துரு பகை; மித்துரு வதை.
சத்துரு பொறுமை தனக்கே தண்டனை.
- (சத்துரு பெருமை.)
சத்துருவைச் சார்ந்து கொல்ல வேண்டும்.
சத்ரா போஜனம், மடா நித்ரா.
சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயோ என்கிறது போல. 10250
சத சுவோகீ ஏக பண்டித.
சதி செய்கிறவர்களுக்குச் சமர்த்தர் என்று பெயர்.
சதுரக் கன்னியில் அகில் உண்டாகும்.
சதை இல்லாமல் கத்தி நாடுமா?
சதை உள்ள இடத்திலே கத்தி நாடும். 10255
சதை கண்டு கத்தி நாட வேண்டும்.
சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்.
- (சந்தடியோ சந்தடி)
சந்தம் இல்லாக் கவிக்கு அந்தம் இல்லை.
- (அந்தம்-அழகு.)
சந்தனக் கட்டை தேய்ந்தது; சாதமும் வடித்தாச்சு.
சந்தனக் கட்டை தேய்ந்தால் கந்தம் குறையுமா? 10260
- (குறைபடுமா?)
சந்தனக் கருடன் வந்த வழி போனால் கங்கையில் போட்டதும் தன் கைக் கூடும்.
சந்தனக் குறடு தேய்ந்தாலும் மணம் குறையாது.
சந்தனக்கோல் குறுகினாலும் பிரப்பங் கோல் ஆகாது.
சந்தனம் கொடுத்த சரஸ்வதி.
சந்தனம் தெளித்த கையாலே சாணி தெளிக்கலாச்சுது. 10265
சந்தனம் தேய்ப்பவன் அலைவது போலே.
சந்தனம் மிகுந்தால் பிட்டத்தில் பூசிக் கொள்கிறதா?
சந்தன மரம் போல் பிள்ளை; சம்பங்கிப்பூப் போல் பெண்.
சந்தன வாள் போல.
சந்தனவிருட்சக் காட்டிலே சர்ப்பம் இருக்கிறது போல. 10270
சந்திக்குச் சந்தி நாய் அடிபடுவது போல.
சந்திக்கும் பொறையாற்றுக்குமாக அலையாதே.
- (இருக்கிறான்.)
சந்தி சிரிக்கிறது.
சந்தியில் அடித்தால் சாட்சிக்கு ஆர் வருவார்.
சந்தியில் நிற்கிறது. 10275
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
சந்திர சூரியர் உள்ள வரைக்கும்.
சந்திர சூரியர் உள்ள வரைக்கும் வார்த்தை பிசகான்.
சந்திரன் இல்லாத வானம் போல.
சந்திரன் இல்லா வானமும் மந்திரி இல்லா அரசும் பாழ். 10280
சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்ந்தாலும் சூரியனையே உலகத்தார் நாடுவார்கள்.
சந்திரன் கோயிலிலும் விளக்கு எரிகிறது.
சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்.
சந்திரன் மறைந்த பின் நிலா நிற்குமா?
சந்திரனுக்கு உண்டோ சண்டாளன் வீடு? 10285
சந்திரனுக்குச் சரியாக முட்டை தட்டினாளாம்.
சந்திரனுக்கும் களங்கம் உண்டு.
சந்திரனைப் பார்த்த கண்ணுக்குச் சனியனைப் பார்த்தாற் போல.
சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல.
- (குரைத்து ஆவதென்ன?)
சந்தில் சிந்து பாடுகிறான். 10290
சந்திலே சமாராதனை செய்ய முடியுமா?
சந்துக்குச் சந்து சதிராட்டம்.
சந்து விட்டால் வந்து விட்டேன்.
சந்தை இரைச்சலில் குடியிருந்து கெட்டேனே!
- (சந்தைக் கடையிலே.)
சந்தைக்குப் போகிறவன் வழித்துணை வாரான். 10295
சந்தைக்குப் போய் வந்த நாய் போல.
சந்தைக்கு வந்தவர்கள் வழிக்குத் துணையா?
- (வழித்துணை ஆவாரா?)
சந்தைக் கூட்டம், பொம்மலாட்டம்.
- (பொம்மை ஆட்டம்.)
சந்தைக் கோபாலம்; தந்தப் பல்லக்கா?
- (கோபாலம்-பிச்சை.)
சந்தையில் அடித்ததற்குச் சாட்சி ஏன்? 10300
சந்தையில் அடிபட்டவனுக்குச் சாட்சி ஆர்?
சந்தையில் கும்பிட்டால் வாழ்த்துவாரும் இல்லை; வைவாரும் இல்லை.
சந்தோஷம் சாண் பலம்.
- (சகல பலம்.)
சந்தோஷ வார்த்தை சமயத்தில் வந்தது.
சந்தியாசம் சகல நாசம். 10305
சந்நியாசிக்கு என்ன சம்சாரக் கவலை?
சந்நியாசிக்குச் சாப்பாட்டுக் கவலையா?
சந்நியாசிக்கும் பழைய குணம் போகாது.
சந்நியாசிக்கும் போகாது ஜாதி அபிமானம்.
சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சம்சாரம் மேலிட்டது போல. 10310
சந்நியாசி கோவணம் கட்டினது போல.
சந்நியாசி செய்த சத்திக்குள் அகப்பட்ட சடை.
- (சடை.)
சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்.
சந்நியாசி பிரயாணம் திண்ணை விட்டு இறங்கினால் ஆச்சு.
சந்நியாசி பூனை வளர்த்தது போல. 10315
சந்நியாசியார் சந்தையிலே கண்டவனே என்று ஆட்டினார்: தவசிப் பிள்ளை சந்நியாசியால் கண்டவனே என்று ஆட்டினான்.
சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம்; சந்நியாசிக்கு முன்னே மரணமாம்.
சந்தியாசியை நிந்தித்தவனுக்குப் பின்னாலே நரகமாம்.
சந்நியாசி வீடு திண்ணையிலே.
சப்தப் பிரம்மத்தில் அசப்தப் பிரம்மம் பிரகாசிக்கிறது. 10320
சப்தப் பிரம்மம் பரப்பிரம்மம், இரண்டையும் அறிய வேண்டியது.
சப்தம் பிறந்த இடத்திலே சகல கலைகளும் பிறக்கும்.
சப்த மேகங்களும் ஒன்று கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.
சப்பரத்துக்கு முன்னே வந்தாயா? பின்னே வந்தாயா?
சப்பாணிக்கு நொண்டி குடுகுடுப்பை. 10325
சப்பாணிக்கு நொண்டி சண்டப் பிரசண்டன்.
சப்பாணிககு விட்ட இடத்திலே கோபம்.
சப்பாணி மாப்பிள்ளைக்கு சந்து ஒடிந்த பெண்டாட்டி.
- (பெண்சாதி.)
சப்பாணி வந்தால் நகர வேணும்; பல்லக்கு வந்தால் ஏறவேணும்.
சப்பை கட்டுகிறான். 10330
சபைக் கோழை ஆகாது.
சபையிலே நக்கீரன்; அரசிலே விற்சேரன்.
சம்சாரக் குட்டு, வியாதி ரெட்டு.
- (ரெட்டிப்பு.)
சம்சாரக் குட்டு வெளியிட்டால் நஷ்டம், சம்சாரம் சாகரம் துக்கம். 10335
சம்சாரம் பெருத்துப்போச்சு என்று சாலுக்குக் குறுணி விதைத்தானாம்.
சம்சாரமோ சாகரமோ?
சம்சாரி அகத்திலே சாதத்துக்கு என்ன குறைவு?
சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கின்றன.
சம்பந்தன் தன்னைப் பாடுவான்; அப்பன் என்னைப் பாடுவான்; சுந்தரன் பொன்னைப் பாடுவான். 10340
சம்பந்தி கிருகஸ்தன் வந்தான்; தவலையை எடுத்து உள்ளே வை.
சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று; கொட்டு மேளக்காரன் தனி.
சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று; கொட்டு மேளக்காரனுக்குக்கோணக் கோண இழுக்கும்.
சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனால் ஏச்சும் இல்லை; பேச்சும் இல்லை.
- (சத்திரத்தில் உண்டால்.)
சம்பந்தி வாய்க்கும் மாப்பிள்ளை குணத்துக்கும் இன்னும் ஒரு பெண்ணை இழுத்து விட்டாளாம். 10345
சம்பளம் அரைப்பணம் ஆனாலும் சலுகை இருக்க வேண்டும்.
- (சலுகை.)
சம்பளம் இல்லாத சேவகனும் கோபம் இல்லாத எசமானும்.
சம்பளம் இல்லாத மந்திரி; கோபம் இல்லாத ராஜா.
சம்பளம் இல்லாமல் ஆஜர் .
சம்பளம் குறைந்தாலும் சலுகை இருக்க வேண்டும். 10350
சம்பளம் சனிக்கிழமை; பெண்டாட்டி பேர் புதன் கிழமை.
சம்பள விதத்திலேயா குண்டு படுகிறது?
சம்பா விளைந்து காய்ந்து கிடக்கிறது: உண்பார் இல்லாமல் ஊர்க்குருவி மேய்கிறது.
- (அழிக்கிறது.)
சம்மன் இல்லாமல் ஆஜர்.
சமண சந்தியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தம் என்ன? 10355
சமண சந்நியாசி கையில் அகப்பட்ட சீலைப்பேன் போல.
- (சமணன் கைச் சிலைப்போன் போல)
சமய சஞ்சீவி.
சமயத்திலே காலைப்பிடி, தீர்ந்து போனதும் தலையைப் பிடி.
சமயம் வாய்த்தால் களவு செய்வான்.
சமயம் வாய்த்தால் நமனையும் பலகாரம் செய்வான். 10360
சமயம் வாய்த்தால் நமனையும் வெல்லலாம்.
சமர்த்தன் சந்தைக்குப் போனால் கொள்ளவும் மாட்டான், கொடுக்கவும் மாட்டான்.
- (வாங்கவும் மாட்டான்.)
சமர்த்தன் பெண் சதியும் சோரம் போவாள்.
சமர்த்தனுக்கு ஏதும் பெரிது அல்ல.
சமர்த்தி என்ன பெற்றாள்? சட்டிச் சோறு தின்னப் பெற்றாள். 10365
சமர்த்தி என்ன பெற்றாள்? தலைச்சன் பெண் பெற்றாள்.
சமர்த்தில் குண்டு பாயுமா?
சமர்த்தில் வாழ்ந்தவர்களும் இல்லை; அசட்டில் கெட்டவரும் இல்லை.
சமர்த்து உள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதம்.
சமர்த்துக்கிட்டே பேசி ஜயிக்கலாம்; அசட்டுக்கிட்டே சண்டை போட்டாலும் முடியாது. 10370
சமர்த்துச் சனியன்.
- (சமர்த்துக்குச் சனியன்.)
சமர்த்து சந்தியில் நிற்கிறது.
சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போகிறான்.
சமிக்ஞை அறியாதவன் சதுரன் அல்ல.
சமிக்ஞை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான். 10375
சமுத்திர அலைகள் ஓயப் போகிறதும் இல்லை; தம்பி தலை முழுகித் தர்ப்பணம் பண்ணப் போகிறதும் இல்லை.
சமுத்திரத்தில் ஏற்றம் போட்டது போல் இருக்கிறது.
சமுத்திரத்தில் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்தாற்போல.
சமுத்திரத்திலே பாய்கிற நதி வயலிலே பாயட்டுமே என்றாற் போல்.
சமுத்திரத்திலே பெருங்காயம் கரைத்தது போல. 10380
சமுத்திரத்துக்கும் சாண் துண்டுக்கும் எம்மாத்திரம்?
- (குண்டுக்கும்.)
சமுத்திரத்து ஜலத்தை முட்டை கொண்டு அளந்தாளாம்.
சமுத்திரம் பொங்கினால் கிணறு கொள்ளுமா?
சமுத்திரமும் சாக்கடையும் சரியா?
சமுத்திர வன்கணன் சண்டாளன். 10385
சமுத்திர ஜலம் தாகத்துக்கு உதவாது.
சமைக்கப் படைக்கத் தெரியாமல் போனாலும் உடைக்கக் கவிழ்க்கத் தெரியும்.
சமையல் தெரிந்தவனுக்கு உமையவள் உள்ளங்கையில்.
சமையல் பாகம் தெரிந்தவளுக்கு உமையவள் பாகன் உள்ளங்கையில்.
சமையல் வீட்டிலே நாய் நுழைந்தாற் போல. 10390
சமையல் வீட்டிலே முயல் தானே வந்தது போல.
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
சர்க்கரை என்று எழுதி நக்கினால் தித்திக்குமா ?
- (என்று எழுதினால் நாக்கு ருசிக்குமா?)
சர்க்கரை தின்று பித்தம் போனால் கசப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும்?
சர்க்கரை தின்னக் கூலியா? 10395
சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்.
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போல.
சர்க்கரைப் பாகுத் தோண்டியிலே தாழ மொண்டாலும் தித்திப்பு: மேலே மொன்டாலும் தித்திப்பு.
சர்க்கரைப் பொங்கலுக்கு ஒரு சத்தியமா?
சர்க்கரைப் பொங்கலுக்குப் பத்தியம் இல்லை; சாண்வயிறு நிரம்பி விட்டால் வைத்தியம் இல்லை. 10400
சர்க்கரைப் பொம்மையில் எந்தப் பக்கம் தித்திப்பு?
சர்க்கரை முத்துக்குட்டி சாதம் குழைந்து போச்சு: எடுடா பல்லக்கை; பிறந்தகத்துக்குப் போகிறேன்.
- (தூக்கடா பல்லக்கை.)
சர்க்கரையும் தேனும் சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா.
சர்க்கரையும் நெய்யும் சேர்ந்தால் கம்பளத்தையும் தின்னலாம்.
சர்க்கரையும் மணலும் சரி ஆகுமா? 10405
சர்க்காரான் பணத்தை வெட்டியான் சுமந்தானாம்.
- (சுமந்த மாதிரி.)
சர்த்திக்கும் பிள்ளை வர்த்திக்கும்.
- (சர்த்திக்கும்-வாந்தி எடுக்கும். வர்த்திக்கும் - வளரும்.)
சர்ப்பத்தின் வாய்த் தவளை போல.
- (தேரை போல.)
சர்வ வில்லங்க சித்தி.
சரக்குக் கண்ட இடத்தில் பிள்ளைக்கு அமிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல. 10410
- (மருந்து கொடுக்கிறது போல.)
சரக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது போல.
சரக்கு மலிந்தால் கடைக்கு வரும்.
- (சந்தைக்கு வரும்.)
சரத்தைப் பார்த்து பரத்தைப் பார்.
சரசம் மிஞ்சி ரவிக்கையில் கை போடக் கூடாது.
- (ரவிக்கை மேலே.)
சரடு ஏறுகிறது கந்தைக்கு லாபம். 10415
சரப்பளி சந்திரஹாரம் தாங்க முடியவில்லை.
சரம் பார்த்தவனைச் சருகாதே; பட்சி பார்த்தவனைப் பகைக்காதே.
சரம் பார்ப்பான், பரம் பார்ப்பான்.
சரமாரியாய்ப் பொழிகிறான்.
சரி விற்கக் குழி மாறுகிறதா? 10420
சரீரப் பிரயாசை எதற்கு? சாண் வயிற்றுக்குத்தான். -
சருகு அரிக்க நேரம் இருந்ததன்றிக் குளிர் காய நேரம் இல்லை.
- (தீக்காய.)
சருகு உதிர்ந்த மரம் போல.
சருகைக் கண்டு தழல் அஞ்சுமா?
சல்லடைக் கண் போலச் சில்லுச் சில்லாய்த் துளைக்கிறது. 10425
சல்லி கட்டின மாட்டுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
சல்லி மோதக் கல்லி பறிக்கிறது.
சல்லிய சார்த்தியம்.
சல்லிவேர் அறக் கல்லி பறக்கிறது.
சலித்துக் கொடுத்த காரியம் சந்தோஷம் வந்தால் தீருமா? 10430
சலிப்போடு சம்பந்தி இழுத்தால் இலைப் பருக்கை.
- (ஏழு இலை.)
சலுகை உள்ள மாடு படுகை எல்லாம் மேய்ந்ததாம்,
சவ்வாதில் மயிர் வாங்கினது போல.
சவத்துக்கு அழுவாரும் தம் துக்கம்.
சவலைப் பிள்ளை முலைக் குத்து அறியுமா? 10435
சவுடால் பொடி மட்டை, தட்டிப் பார்த்தால் வெறு மட்டை
சவுண்டிக்குச் சாப்பிட்டவன் இருக்கச் செத்தது பொய்யா.
சளி பிடிக்காத மூக்கு இல்லை; சாராயம் குடிக்காத நாக்கு இல்லை.
சளி பிடித்ததோ. சனி பிடித்ததோ?
சளுக்கன் தனக்குக் சத்துரு; சவுரிக்காரனுக்கு மித்துரு. 10440
சற்குருவைப் பழித்தோர் சாய்ந்தே போவார்.
சற்சனர் உறவு சர்க்கரைப் பாகு.
சற்புத்திரன் இருக்கிற இடத்திலே தறிதலையும் இருக்கிறது.
சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?
- (எங்கே வரும்?)
சன்னம் சன்னம் பர்வதம்.
சனத்தோடு சனம் சேரும்: சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.
சனப்பலம் இருந்தால் மனப் பலம் வரும்.
சனமருளோ, சாஸ்திர மருளோ?
சனி ஒழிந்தது; சங்கடம் தீர்ந்தது.
சனிக்கிழமையும் புதன் கிழமையும் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பான். 10450
- (செட்டிநாட்டு வழக்கு; வேறு ஒன்றும் செய்வதில்லை என்பது கருத்து.)
சனி நீராடு.
சனிப்பயிர் சாத்திரத்துக்கு உதவும்.
சனிப் பிணம் தனிப் போகாது.
சனிப் பிணம் துணை தேடும்.
- (துணை கூட்டும்.)
சனிப் பெருக்கு. 10455
- (வேளாண்மைக்கு நல்லது.)
சனி பிடித்த நாரை கெளிற்றைப் பிடித்து விழுங்கினாற் போல.
சனியன் தொலைந்தது.
சனியன் பிடித்தவள் சந்தைக்குப் போனாலும் புருஷன் அகப்படமாட்டான்.
சனியன் பிடித்தவனுக்குச் சந்தையிலும் கந்தை அகப்படாது.
- (பிடித்தவளுக்கு.)
சனியனை அடிமடியில் கட்டியது போல. 10460
சனியனை விலைக்கு வாங்கினது போல.
சனியும் புதனும் தங்கும் வழி போகக் கூடாது.
சனியும் புதனும் தன்னை விட்டுப் போகாது.
சனியைப் போலக் கொடுப்பவனும் இல்லை: சனியைப்போலக் கெடுப்பவனும் இல்லை.
சஜ்ஜனர் உறவு சர்க்கரைப் பாகுபோல. 10465
சாக்கடைக்குப் போக்கிடம் எங்கே?
சாக்கடைக் கும்பிக்குப் போக்கிடம் எங்கே?
சாக்கடைக்குப் போக்கிடம் இல்லை.
சாக்கடைச் சேறு என்றாலும், சக்களத்தி என்றாலும் சரி.
சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தி என்றாலும் போதும். 10470
சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப் போகாது.
சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் எங்கே?
சாக்கிரி செய்யப் போனாலும் போக்கிரித் தனம் குறைவாது.
சாக்குப் போக்குச் சொல்லுதல்.
சாக்கும் போக்கும் ஏற்கா ஐயன்முன். 10475
சாக்கோ, நாக்கோ, அம்மையார் வாக்கோ?
சாகக் காசிக்குப் போ: சாப்பிடச் சூரத்துக்குப் போ.
சாகத் திரிகிறான் சண்டாளன்; சாப்பிட்டுத் திரிகிறான் பெண்டாளன்.
சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.
- (சமுத்திரம் நீச்சு மட்டும்.)
சாக தேரம் ஒழிய, வேக நேரம் இல்லை. 10480
சாகப் பயந்தவள் சுடுகாட்டை முறைக்க முறைக்கப் பார்த்தாளாம்.
சாகப் பிறந்தாயோ? பேசப் பிறந்தாயோ?
சாகப் போகிற நாய் கூரைமேல் ஏறின மாதிரி.
சாகப் போகிற நாளில் நாய் வீட்டின்மேல் ஏறினாற் போல.
சாகப் போது இருந்தாலும் வேகப் போது இல்லை. 10485
சாக மாட்டாத மாடு கொம்பைக் கொம்பை அலைத்தாற் போல.
சாக மாட்டாமல் சங்கடப்படுகிறது,
சாக வேண்டும் என்கிற சதுரையை விட்டு விட்டு வா; வாழ வேண்டும் என்கிற வந்தியை அழைத்து வா.
சாகாத் தலை, வேகாக் கால்.
சாகாப் பேருக்கு ஆகாரம் ஏன்? 10490
சாகாமல் கற்பதே கல்வி; பிறரிடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.
சாகாய வாஸ்யாத், லவணாய வாஸ்யாத்.
சாகிற காலத்தில் சங்கரா. சங்கரா என்கிறது போல.
சாகிறது போல் இருந்து வியாதி தீருகிறதும் உண்டு.
சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற் போல. 10495
- (வீட்டின் மேல் ஏறினாற் போல)
சாகிற நாளைக்கு வாதம் பலித்ததாம்.
- (சாகிற வயதில். வாதம்.ரஸவாதம்.)
சாகிற பேருக்குச் சமுத்திரம் கால்வாய்.
சாகிற வரைக்கும் சங்கடம் ஆனால் வாழ்கிறது எக்காலம்?
சாகிறவரைக்கும் சங்கடம் என்றால் சந்தோஷம் எக்காலம்?
சாகிற வரைக்கும் சஞ்சலம் போனால் போகிறது எக்காலம்? 10500
சாகிற வரைக்கும் பட்டினி இரு என்றால் ஒரு நாளாவது பட்டினி இருக்கும் நிலை வரும்.
சாகிற வரையில் கஷ்டம் ஆனால் சுகம் எப்போது?
சாகிற வரையில் மருந்து கொடுக்க வேண்டும்.
சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
சாகிற வரையில் துன்பம் ஆனால் சுகம் எப்போது? 10505
சாகிறவன் சனியனுக்குப் பயப்படுவானா?
- (அஞ்சுவானா?)
சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டும்.
சாகிறவனைப்போல் இருப்பான் பிழைப்பான்; பிழைப்பானைப் போல் இருப்பான் சாவான்.
சாகிறேன், சாகிறேன் என்ற பெண்ணும் போகிறேன், போகிறேன் என்ற புருஷனும் போல் மிரட்டாதே.
சாகுந்தனையும் சங்கடம் ஆனால் வாழ்கிறது எப்போது? 10510
சாகும்போது வாணியனிடம் அகப்பட்டுக் கொண்டது போல.
சாகையிலே வந்தால் பாடையிலே பார்க்கலாம்.
சாட்சிக்காரன் காலில் விழுகிறதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
- (கட்சிக்காரன் காலில் விழலாம்.)
சாட்டு இல்லாமல் சாவு இல்லை.
- (சாக்கு.)
சாட்டை அடியும் சவுக்கடியும் பொறுக்கலாம்; மூட்டைக்கடியும் முணுமுணுப்பும் ஆகா. 10515
சாட்டை இல்லாப் பம்பரத்தை ஆட்ட வல்லார் உண்டோ?
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டி வைக்க வல்லவன்.
சாட்டை இல்லாமல் பம்பரம் ஆடுமா?
சாடிக்கு ஏற்ற மூடி.
சாடிக்கு மூடி வாய்த்தது போல. 10520
சாடி சட்டி சூளையிலே கோடை இடி விழுந்தாற் போலே.
சாடை தெரியாதவன் சண்டாளன்.
சாண்அடி இன்டியோ மூனடி கட்டடா,
- (கட்றா.)
சாண் உழவு முழ எருவுக்குச் சமம்.
சாண் ஏற முழம் சறுக்குகிறது. 10525
சான் கல் அலம்பினால் முழம் சோறு.
- (கழுவினால்..கோயிற் குருக்களுக்கு.)
சாண் காட்டிலே முழத்தடி வெட்டலாமா?
சாண் குருவிக்கு முழம் வாலாம்.
சாண் சடைக்கு முழக் கயிறா?
- (முழத் துணியா?)
சாண் சடை; முழம் சோறு. 10530
சாண் செடியிலே முழத்தடி வெட்டலாமா?
சாண் தண்ணீரிலே முழப்பேய்.
சாண் தள்ளிப்படுத்தால் இந்த வினை இல்லை.
சான் பண்டாரத்துக்கு முழத் தாடி.
- (முழ விபூதி.)
சாண் பண்டாரத்துக்கு முழம் இலிங்கம். 10535
சாண் பறையனுக்கு முழத் தடி.
சாண் பாம்பு ஆனாலும் முழத் தடி வேண்டும்.
சாண் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை.
- (+ இருக்க வேண்டும்.)
சாண் போனால் என்ன? கழுத்துமட்டும் போனால் என்ன?
சாண் முறியும் முழம் புரியும் பொத்தல் ஒன்று. 10540
சாண் வீட்டுக்கு முழத்தடி.
சாணான் உறவு சாக்கடை வரையில்.
சாணான் எச்சில் கருப்புக் கட்டி, சர்க்கரை வெல்லம் உழவன் எச்சில்.
- (கருப்பட்டி.)
சாணான் புத்தி தட்டிக்குள்ளே, பெட்டிக்குள்ளே.
சானான் புத்தி சாணுக்குள்ளே. 10545
சாணான் வந்தால் என்ன? சவரி முத்து வந்தால் என்ன? சடகோபத்தை ஒழுங்காகச் சாதி.
சாணானுக்கு ஏறும்போது ஒரு புத்தி; இறங்கும்போது ஒரு புத்தி.
சாணானுக்குக் கிணை சட்டிக்குள்ளும் பெட்டிக்குள்ளும்.
சாணி ஒரு கூடை சவ்வாது ஒரு பண எடை.
சாணிக் குழியையும் சமுத்திரத்தையும் சரியாய் நினைக்கலாமா? 10550
சாணிச் சட்டியும் சருவச் சட்டியும் ஒன்றா?
- (சரியாமா?)
சாணிச் சட்டி வைக்கிற இடத்தில் சாணிச் சட்டி வைக்க வேண்டும்; சருவச் சட்டி வைக்கிற இடத்தில் சருவச் சட்டி வைக்க வேண்டும்.
சாணி சுமக்கிற சிறுமிக்குச் சந்தனப் பூச்சு எதற்கு?
சாணிப் புழு.
சாணியும் சவ்வாதும் சரி ஆகுமா? 10555
சாணியைக் கொடுத்து மெழுகு என்றாளாம்.
சாணுக்கு ஒரு பாம்பு முழத்துக்கு ஒரு பேய்.
சாணோ வயிறு? சரீரம் எல்லாம் வயிறோ?
சாத்தாணி குடுமிக்கும் சந்நியாசி பூணூலுக்கும் முடி போடுகிறாற் போல.
சாத்திரத்துக்குத் திருமந்திரம்; தோத்திரத்துக்குத் திருவாசகம். 10560
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவது எக்காலம்?
சாத்திரம் கற்றவன் தானே காசு?
சாத்திரம் படித்தாலும் ஆத்திரம் போகாது.
சாத்திரம் பார்த்தால் மூத்திரம் பெய்ய இடம் இல்லை.
சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள்; கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு. 10565
சாத்திரம் பாராத வீடு சமுத்திரம்; பார்த்த வீடு தரித்திரம்.
சாதத்துக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே தொங்குகிறதா?
சாதத்துக்குப் புனுகும் சந்தனத்துக்குப் பெருங்காயமும் போடலாமா?
சாதி அந்த புத்தி: குலம் அந்த ஆசாரம்.
சாதிக்கு அடுத்த புத்தி: தீனிக்கு அடுத்த லத்தி. 10570
சாதி அபிமானமும் சமய அபிமானமும் சந்நியாசிக்கும் உண்டு.
- (போகா.)
சாதி ஒளிக்குமா? சதகுப்பை நாற்றம் போகுமா?
சாதிக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.
சத்திக்குத் தக்க புத்தி; குலத்துக்குத் தக்க ஆசாரம்.
சாதிக்குத் தகுந்த புத்தி, சாப்பாட்டுத் தகுந்த லத்தி.
- (தீனிக்கு.)
சாதி குணம் காட்டும்; சந்தனம் மணம் காட்டும். 10575
சாதி சாதியைக் கொள்ளும், சதகுப்பை நாற்றத்தைக் கொள்ளும்.
- (சாதி சனத்தைக் கொள்ளும், வழக்கத்தைக் கொள்ளும்.)
சாதித் தொழில் விடுமா? சர்க்கரை கசக்குமா?
சாதிப் பழக்கமும் சதகுப்பை நாற்றமும் போகா.
சாதி பேதம் சண்டாளர் வேதம்.
சாதியபிமானமும் சமயாபிமானமும் சந்நியாசிக்கும் உண்டு. 10580
சாதியில் கெட்டது கிள்ளை; சாமியில் கெட்டது மாரியம்மன்; காயில் கெட்டது கத்தரிக்காய்.
சாதி வாக்கு ஜங்கிட வாக்கு: இலுப்பைப்பூத் தொளை வாக்கு.
சாது சாது என்கிற சந்நியாசிக்குத் தடிபோல ஐந்து குழந்தைகளாம்.
- (சாமியாருக்கு நாலு பிள்ளைக் குழந்தைகளாம். நாலு பிள்ளை.)
சாதுப் பசுவையும், ஏழைப் பிராமணனையும் நம்பாதே.
சாதுப் பாம்பு சாகக் கடித்தது. 10585 சாதுப் பெண்ணுக்கு ஒரு சூதுப்பிள்ளை வந்தது போல.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
சாதுரியப் பூனை தயிர் இருக்கச் சட்டியை நக்கியதாம்.
சாதுரியப் பூனை மீனை விட்டுப் புளியங்காயைத் தின்றதாம்.
சாந்துப் பெட்டி பாம்பு ஆயிற்று. 10590
சாப்பாட்டுக்கு நான்; மோதிரப் பணத்துக்கு முத்தண்ணா.
சாப்பிட்ட சோற்றுக்கு ஊறுகாய் தேடுவார்களா?
சாப்பிடுகிற அழகைப் பார். நாய் போல.
சாப்பிடும் கலம் பொன் ஆனாலும் ஊறுகாய் இல்லாமல் முடியுமா?
சாப்பிணி மருந்து ஏற்காது. 10595
சாப்பிள்ளை பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?
சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சி கூலி தப்பாது.
சாப்பிள்ளை பெற்றுத் தாலாட்டவா?
சாப்பிள்ளை பெறுவதிலும் தான் சாவது நலம்.
சாபம் இட்டார் உண்டோ? தலையின் திருவெழுத்தோ? வேகவிட்டார் உண்டோ? எழுத்தின்படிதானோ? 10600
சாம் அளவும் இருந்தால் கல்யாணம் செய்து வைக்கிறேன்.
சாம்பல் மேட்டு நாய்க்குத் தன் பூர்வஜன்ம ஞாபகம்.
சாம்பலில் பண்ணின ஆருதி போலே.
சாம்பலில் புரளும்போது நாய்க்குப் பூர்வஞானம் உதயமாகும்.
சாம்பலைக் கிளறிக் கோழி தானே விலங்கிட்டுக் கொண்டது போல் 10605
சாம்பலைத் தின்று வெண்ணெயைப் பூசினது போல.
சாமத்து நாய் ஊளை தெருவுக்குக் கேடு.
சாமர்த்தியர் கோழி சாமம் போலக் கூவிற்றாம்.
சாமி இல்லை என்றால் சாணியைப் பார்: மருந்து இல்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் நேர்வாளத்தைப் பார்.
சாமி கை காட்டும்; எடுத்து ஊட்டுமா? 10610
சாமி சக்தி பூசாரிக்குத் தெரியாதா?
சாமி மலையேறிப் போச்சு.
சாமியார் நாய் சிஷ்யனுக்குப் பயப்படுமா?
சாமியாருக்குச் சாமியார் வேண்டும்.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான். 10615
- (இடம் கொடுக்கமாட்டான்.)
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிற்பது போல.
சாமைப் பயிரும் விளைந்தால் தெரியும்; சக்கிலியப் பெண்ணும் சமைந்தால் தெரியும்.
சாமைப் பயிரைக் கதிரில் பார்.
சாய்ந்த பக்கம் சாய்வது.
சாய்ந்த மரத்தில் ஓடி ஏறலாம். 10620
சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம்.
சாயந்தரத்தில் கல்யாணம்; பிடி தாம்பூலம்.
சார்வு இல்லாதவனுக்கு நிலை இல்லை.
சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்து விடுவது போல.
சாராயத்தைத் தினம் குடித்தால் காராளனும் கடைமகன் ஆவான். 10625
சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேள்.
- (கேட்பான்.)
சாராயம் குடித்த நாய்போல.
சாரை கொழுத்தால் மாட்டுக்காரனிடம் போகும்.
சாரை தின்னும் காட்டுக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கு.
- (ஊருக்குப் போனால் தடுக்கண்டம் நடுமுறி.)
சாரையும் சர்ப்பமும் இழைவது போல. 10630
சால்போல் வயிறும் சப்பரக் கட்டைக் காலும்.
சால்போல வயிறு: ஊசி போலத் தொண்டை.
சால் வயிறு நிறைந்தாலும் சவலை வயிறு நிறையாது.
சாலாய் வளைந்தால் எனன? சட்டியாய் வளைந்தால் என்ன?
சாலாய் வைத்தாலும் சரி; சட்டியாய் வைத்தாலும் சரி. 10635
சாலை வழியே போகிற சனியனைச் சாயங்காலம் வீட்டுக்கு வா என்றானாம்.
சாலோடு அகப்பை தட்டாமல் போகுமா?
சாலோடு தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தீர்க்கும்.
- (தண்ணீரால் தாகம் தெளியும்.)
சாலோடு முழவைத் தட்டு.
சாவாமற் கற்பதே கல்வி; பிறர் ஏவாமல் உண்டதே ஊண். 10640
- (பிறரிடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.)
சாவாரைப் போலே வாழ்வார்; வாழ்வாரைப் போலே சாவார்.
சாவுக்குப் பிடித்தால் லங்கணத்துக்கு வரும்.
- (சாவுக்குப் போட்டால்.)
சாவுக்கு வாடா என்றால் பாலுக்கு வருவான்.
- (வந்தது போல.)
சாவுப் பானை விடியாது; சங்கடப் பானை விடியும்.
சாவேரியே ராகம்; காவேரியே தீரம். 10645
சாளக்கிராமம் சாமியாருக்குச் சோறு போடுமா?
சாற்றிலே பீ; இறுத்தாற் போல வாரு.
சாற்றிலே வேண்டாம்; தெளிவிலே வாரு.
- (கீற்றிலே போடு.)
சாற்றுக்குப் புளியங்காய் நறுக்கினாற் போல.
சாறு மிஞ்சினால் பாறை: சாந்து மிஞ்சினால் குப்பை. 10650
சான்றோர் அவைப்படிற் சாவாதாம் பாம்பு.
- (சாவாதாம்.)
சான்றோர் இல்லாத சபை குறவர் சேரி.
சான்றோர் கயவர்க்கு உரையார் மறை.
- (மறை-இரகசியம். பழமொழி தானுாறு.)
சாஸ்திர உறுதிக்குக் கிரகணம்; மந்திர உறுதிக்குப் பாம்பு.
சாஸ்திரத்துக்குச் சாஸ்திரம்; சுகத்துக்குச் சுகம். 10655
சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள்; கோத்திரம் பார்த்துப் பெண்னைக் கொடு.
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
சாஸ்திராயச சுகாயச.