தமிழ்மொழி இலக்கிய வரலாறு/எட்டுத்தொகை

9. எட்டுத் தொகை
(1) எட்டுத் தொகை

எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாம். இவை மேலே சொல்லப்பெற்ற பரந்துபட்ட காலத்தில் பல்வேறு புலவர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடப் பெற்றவை. இவை தொகுக்கப்பெற்ற காரணத்தால் 'தொகை நூல்கள்’ என்று பெயர் பெற்றன. இவற்றுள் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றிய செய்திகளை நன்கு புலப்படுத்துவன. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் ஐந்தும் அகப்பொருளாகிய இன்பத்துறை பற்றிய ஒழுக்க நிகழ்ச்சிகளை அழகுற எடுத்துக் கூறுவன. பரிபாடல் அகம், புறம் இரண்டையும் எடுத்துப் பேசுவது.

 வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் புபா நான்கு வகைப்படும். எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடல், கலித்தொகை ஒழிந்த ஆறின் பாடல்கள் ஆசிரியப் பாவால் இயன்றவை. ஆசிரியப்பா மூன்றடிச் சிறுமை உடையது; பலநூறு அடிகள் பெருமையுடையது. கலித்தொகை என்னும் நூற்பாடல்கள் கலிப்பாவினால் இயன்றவை. பரிபாடல் என்னும் நூற்பாக்கள் பரிபாடல் என்னும் பாவால் தொகுக்கப் பெற்றவை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி, பேரெல்லை நானுாறு அடி.
1. ஐங்குறுநூறு : இது மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய பாடல்களைக் கொண்டது. இது மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை ஆகிய ஐந்து  தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஒழுக்கங்களுள் ஒவ்வொன்று பற்றியும் நூறு குறும் (சிறிய) பாக்களை உடையது; ஆதலால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இதன் பாக்களை நூலாகத் தொகுத்தவர் புலத் துறை முற்றிய கூடலூர் கிழார் என்பவர். இவரைக்கொண்டு இந்நூலைத் தொகுப்பித்தோன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவன். கூடலூர் கிழார் இம்மன்னன் இறப்பைப் பற்றி வருந்திப் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் (229) இடம் பெற்றுள்ளது. எனவே, புறநானூற்றுப் பாடல்கள் தொகுக்கப்படுவதற்கு முன்பே இச் சேர வேந்தன் காலத்தில் ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்றது என்பது தெரிகிறதன்றோ? -

2. குறுந்தொகை : இந்நூலின் பாடல்கள் நானூறு. அவை நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. இந்நூலைத் தொகுத்தவன் யூரிக்கோ என்பவன். தொகுப்பித்தவர் இன்னவர் என்பது தெரியவில்லை. இந்நூல் ஐங்குறுநூற்றை அடுத்துத் தொகுக்கப் பெற்றிருத்தல் வேண்டும்.
3. நற்றிணை : இது ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்ட நானூறு பாடல்களை உடையது. இப்பாக்கள் பன்னாடு தந்த மாறன் வழுதி என்பவன் தொகுப்பித்தவையாகும். தொகுத்தவர் பெயர் தெரிய வில்லை. இவன் பாடிய பாடல்கள் குறுந் தொகையிலும் (270) நற்றிணையிலும் (97, 301) இருப்பதைக்காண, இவன் சங்ககாலப் பாண்டிய வேந்தன் என்பது தெளிவு. எனவே, இந்நூலும் சங்ககால இறுதிக்குள் தொகுக்கப் பெற்றது எனக்கொள்வதே பொருத்தமாகும்.
4. அகநானூறு : இது பதின்மூன்றடிச் சிறுமையும் முப்பத் தோரடிப் பெருமையும் உடைய நானூறு பாக்களைக் கொண்ட தொகுப்பு நூல். இது 'நெடுந்தொகை' எனவும் கூறப்படுவதால் முன்பு தொகுக்கப்பட்ட மூன்று நூல்களுக்கும் முன்பு தொகுக்கப்பட்டது என்று கருதுதல் பொருத்தமாகும். டாக்டர் மா. இராசமாணிக்கனார் 165

இதனைத் தொகுத்தவன் உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திர சன்மன்; தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெரு வழுதி. இவன் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும் (26) நற்றிணையிலும் (98) இடம் பெற்றுள்ளமையால் இவன் காலமும் சங்ககாலமேயாகும்.

5. கலித்தொகை : கலித்தொகையிலுள்ள பாலையைப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சியைக் கபிலரும், மருதத்தை மருதன் இளநாகனும், முல்லையைச் சோழன் நல்லுருத் திரனும், நெய்தலை நல்லந்துவனும் பாடினர் என்று வெண்பா ஒன்று விளம்புகின்றது. இவ்வெண்பா மிகவும் பிற்பட்டதென்றும், கலித்தொகை ஏடுகளில் காணப்படவில்லை யென்றும், இந்நூலை இயற்றியவர் நல்லந்துவனார் என்ற புலவர் ஒருவரே என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.1
6. பரிபாடல் : பரிபாடல்களைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் இன்னவர் என்பது தெரியவில்லை. 
7. பதிற்றுப்பத்து : இது சேரவேந்தர் பதின்மரைப் பற்றியது. இதனைத் தொகுப்பித்தவர் இன்னவர் என்பது தெரியவில்லை; தொகுத்தவர் பெயரும் தெரியவில்லை. இதன் கண் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இல்லை. இறுதிப் பத்து யானை கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையைப் பற்றியதாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். இஃது உண்மையாயின், இவனது இறப்பைப் பற்றிய பாடலைக் கொண்ட புறநானூறு தொகுக்கப்படுவதற்கு முன்பே இந்நூல் தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
8. புறநானூறு : புறநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் இன்னவர் என்பது தெரிய வில்லை.

______________________________ 1. Prof. S. Vaiyapuri Pillai, History of Tamil language and literature, p. 27. -- -

2. Ibid. p. 26. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஏறத்தாழப் புலவர் ஐந்நூற்றுவர் பாடிய பாக்கள் இந் நூல்களில் இடம் பெற்றுள்ளன. அந்நல்லிசைப் புலவர் தமிழகத்துப் பல ஊர்களைச் சேர்ந்தவர்; பல்வேறு தொழிலினர் பல்வேறு காலத்தவர். அவருள் சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடை மூவேந்தரும் அரச மாதேவியரும் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறே சிற்றரசரும் அவர் தம் மக்களும், அந்தணர், வணிகர், வேளாளர் முதலி யோரும், ஆயர், மறவர், குறவர் முதலிய நிலமக்களும் இடம் பெற்றுள்ளனர். 
இத்தொகைநூற் பாடல்கள் பலதிறப் பொருளை உடையன. அரசர்களின் போர்த்திறங்களையும் வெற்றிச் சிறப்பையும் விரித்துக் கூறும் பாக்கள் பல; பேரரசர் சிற்றரசர் முதலியோர் வள்ளன்மையை எடுத்துரைக்கும் செய்யுட்கள் பல; கல்வியின் சிறப்பு, நல்லொழுக்கம், ஆட்சிமுறை, நாகரிகம் முதலியவற்றை அறிவுரை முறையில் அறிவிப்பன சில. மறக்குடி மகளிர் சிறப்பைத் தெரிவிப்பன சில; காதல் வாழ்வை விளக்குவன பல; குறிஞ்சி, பாலை, நெய்தல், முல்லை; மருதம் என்னும் ஐந்திணை ஒழுக்கங்களை அழகுற எடுத்துக் கூறுவன பலவாகும். இயற்கைக் காட்சிகளை இன்பம் ததும்ப எடுத்துரைப்பன பல. இவற்றுள் புராண இதிகாசச் செய்திகளும், தமிழர் பழக்க வழக்கங்களும், வேற்று நாட்டுச் செய்திகள் சிலவும், வரலாற்றுக் குறிப்புகள் பலவும் ஆங்காங்கு இடம் 

பெற்றுள்ளன.

இவ்வெட்டுத் தொகை நூல்களுள் வரலாற்றுக் குறிப்பு களை மிகுதியாகவுடைய புறநானூற்றின் காலத்தை அறியின், நாம் ஏறத்தாழச் சங்க காலத்தை அறிந்தவராவோம். ஆதலின் முதற்கண் புறநானூற்றின் காலத்தை இங்கு ஆராய்வோம். 

(2) புறநானூற்றின் காலம்

முன்னுரை --

வரலாறு (History) என்பது எல்லா நாடுகளிலும் முதன் முதல் பாக்கள், கதைகள் வாயிலாகவே தோன்றியது. அப்பாக்களும் கதைகளும் காலஞ்சென்ற வீரர், அரசர், நல்லோர்,தியோர் இவர்தம் வரலாறுகளையோ வரலாறுகளிற் காணத்தக்க சிறப்பான நிகழ்ச்சிகளையோ பற்றியனவாக இருந்தன. இங்ஙனம் முதன் முதலில் வரையப்பட்ட பாடல்களும் கதைகளும் பிற்கால அறிஞர்க்கு வரலாறு சுட்டும் அடிப்படையாக விளங்கின. மேல் நாட்டில் முதல்முதல் இனிய முறையில் வரலாறு எழுதத் தொடங்கிய ஆசிரியர் எரடோட்டஸ் (Herodotus) என்பவர். அவர் காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டாகும்.”

பின்னர்ப் படிப்பினை பயக்கத்தக்க முறையில் வரலாறுகள் எழுந்தன. அங்கனம் வரைந்தாருள் முதல்வர் துசிடியஸ் என்பவர். இம்முறையில் எழுதப்பட்ட வரலாறே சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ்க் காவியம். ஆயின், முற்கூறியவை அரசர்,அலுவலர், தலைவர் முதலியோர்களைப் பற்றிய அரிய நிகழ்ச்சிகளைக் கொண்ட வரலாறுகள் ஆகும். அவை இனிய செய்யுள் நடையிலும் உரைநடையிலும் யாக்கப் பெற்றவை. அத்தகைய வரலாற்று நூல்களை ஒரளவு ஒத்துக் காண்பன புறநானூற்றுப் பாக்கள் என்னலாம். என்னை? சேர, சோழ, பாண்டியர் ஆகிய நெடுநில மன்னர், மாரி போன்ற குறுநில மன்னர், கோவூர் கிழார் போன்ற புலவர் ஆகியோர் வரலாறுகளைப் புறநானூற்றுப் பாடல்களைக் கொண்டே ஏறத்தாழ வரைந்து முடிக்கலாம் ஆதலின் என்க. - புறநானூறு

புறநானூற்றுப் பாடல்கள், பழங்கால நிகழ்ச்சிகளைப் பிற்காலத்தார் பாடி வைத்தவை போன்றவை அல்ல.

3. H.F. G. Teggart, Theory of History, pp. 18–22. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

அவை புலவர் பலரால் தத்தம் கால அரசர், வள்ளல்கள் முதலியோரைப் பற்றிப் பாடப்பெற்றவை; அக்காலப் போர் களைப் பற்றியவை அறம், பொருள், வீடு என்னும் மூன்றையும் பற்றியவை. ஆதலின், அவற்றுள் நம்பத். தகாதன' என்று ஒதுக்கித் தள்ளத்தக்க செய்திகள் இருத்தல் அருமையினும் அருமை. -

 சுருங்கக் கூறின், புறநானூறு. மிகப் பழைய காலத் தமிழ் மக்கள்-சிற்றரசர்-பேரரசர்-கொடையாளிகள்-புலவர். வீரர் இவர்தம் வாழ்க்கைகளையும் நாகரிகப் பண்புகளையும் நன்கு விளக்கும் வரலாற்று நூலாகும். அதனை நன்கு ஆராய்ந்து முறைப்பட வைத்து எழுதப்புகின், பண்டைத் தமிழக வரலாறு' என்னும் வரலாற்று நூலை ஒருவாறு எழுதி, முடிக்கலாம். இது நிற்க. -
அறம், பொருள், வீடு என்னும் புற ஒழுக்கம் பற்றிய நானூறு பாக்களின் தொகுதியே புற-நானூறு என்பது. இதில் உள்ள பாடல்களைப் பாடிய அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் முதலிய புலவர், பல்வேறு காலங்களில் வாழ்ந்தவர் ஆவர். இந்நூல் தொகுக்கப் பெற்ற பிற்காலத்தில் இப்புலவர் சிலருடைய பெயர்களே புலனாக, வில்லை. ஆதலின் தொகுத்தவர்கள், பாவடிகளிற் பயின்று வரும் தொடர்களையும், பாக்களிற் காணப்படும் சிறப்பியல்பு களையும் கொண்டு தம் மனம் போனவாறு அடிக்குறிப்பில் புலவர் பெயர்களை, ஆக்கியிருத்தல் அறிவுடையார் அறிந்ததேயாகும். சான்றாக, ஒருஉத்தனார், ஒருசிறைப் பெயரியனார், ஒரேர் உழவர், கூகைக் கோழியார், தொடித்தலை விழுத்தண்டினார், தும்பிசொகினனார், வெள்ளெருக்கிலையார், வெள்ளைமாளர் முதலிய பெயர் களைக் காண்க. மொழி ஆராய்ச்சியிற் புகினும், சில 

பாக்களின் நடை வேறுபட்டிருப்பதை நன்குணரலாம். செய்யுட்களிற் கூறப்பட்டுள்ள செய்திகளை நோக்கினும் இஃது, உண்மையாகிறது.

தமிழர்க்கே உரிய தனிப்பட்ட நாகரிகப் பண்புகளும் அவருடன் பிற்காலத்தே கலந்த வடமொழியாளர்க்கே உரிய பண்புகளும் இந்நூற்கண் இடம் பெற்றுள்ளன. வேள்வி, அந்தணர், முத்தி, இதிகாச கதைகள், இந்திரன் பிரமன் பலராமன் முதலியோர் வழிபாடுகள் முதலியன புதியன வாய்த்தமிழகத்தில் நுழைந்தனவாகும். இராயசூயம் (இராஜசூய யாகம்) வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி என்ற மன்னர்களைப் பற்றிய பாடல்கள் புறநானுற்றில் இடம் பெற்றுள்ளன. எனவே, தமிழ் மன்னர்கள் வேதவேள்விகளைச் செய்யத் தலைப்பட்டு விட்டனர் என்பது இத்தொடர்களினால் நன்கு புலனாகிறது. தமிழகத்தில் வேத ஒழுக்கமும் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கியது என்பது தெளிவாகிறது. ஆகவே, சமயத் தொடர்பான வடசொற்கள் தமிழில் நுழையலாயின என்பது வெளிப்படை.

புறநானூற்றின்

சங்க நூல்களின் இறுதிக் காலம் ஏறத்தாழக் கி.பி. 300 என்பது முன்பே பல இடங்களில் கூறப் பட்டுள்ளது. எனவே புறநானூற்றுப் பாடல்களின் இறுதிக்கால எல்லையும் அதுவேயாகும். ஆதலால் புறப்பாடல்களின் காலப் பேரெல்லையைக் காண முயல்வது நமது கடமையாகும்.

  இந்திய வரலாற்றோடு தொடர்பு கொண்ட சில நிகழ்ச்சிகளும் பெயர்களும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் உணவு கொடுத்தது, வால்மீகியார் என்பவரின் பாடல் புறநானூற்றில் காணப்படுவது மோரியர் படையெடுப்பு. கரிகாலன் இமயப்படையெடுப்பு என்பவை குறிக்கத் தக்கவை. இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி இங்கு ஆராய்வோம். 1. பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்,

அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ கிலந்தலைக் கொண்ட பொலம்பூங் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்'

என்று புறப்பாடல் ஒன்றில் (2) பாராட்டப்பட்டுள்ளான். இச்சேரர் பெருந்தகை பாரதகாலத்தவன் என்று பொருள் படும்படி இப்பாடலுக்கு உரை கண்ட பழைய புலவர் எழுதியுள்ளார். தம் செய்யுட்களில் வரலாற்றுச் செய்திகளைப் புகுத்திப்பாடும் இயல்புடைய மாமூலனார் என்ற சங்ககாலப் புலவர்,

"துறக்க மெய்திய தொய்யா கல்லிசை

முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை யிரும்பல் கூளிச் சுற்றங் குழீஇயிருந் தாங்கு' என்று உதியன் சேரலாதன் பெருஞ்சோறு கொடுத்த திறத்தை அகநானூற்றுச் செய்யுள் ஒன்றில் (278) பாராட்டியுள்ளார்.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தைச் செய்த இளங்கோவடிகள்,

"ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ வூசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ வூசல்' என்று (காதை 29 செ. 24) புறநானூற்றில் கூறப்பெற்ற நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இளங்கோவடிகள் தமக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து செயற்கரும் செயலைச் செய்த தமது முன்னோனை உளமாரப் டாக்டர் மா.இராசமாணிக்கனார்

                         171


பாராட்டியுள்ளார் எனின் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தில் உதியன் சேரலாதன் செய்த செயற்கருஞ்செயல் (பெருஞ் சோறு வழங்கியமை) சேரமரபினராலும் சேரநாட்டுக் குடி மக்களாலும் வழிவழியாகப் போற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருத்தமாகும்.

பாரத நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலம் ஏறத்தாழக் கி. மு. 1400-800 என்பர் பேராசிரியர் ஆர். சி. டட்.:வேறு சில வரலாற்று ஆசிரியர் ஏறத்தாழக் கி. மு. 1000 என்பர்." எனவே, பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் காலமும் ஏறத்தாழக் கி. மு. 1000 என்று கூறலாம். அவனை மேலே கண்டவாறு பாராட்டிப் பாடிய முரஞ்சியூர் முடிநாகனார்" முதற்சங்கப் புலவர் என்று களவியலுரை கூறுகின்றது. இடைச் சங்கத்தின் இறுதிக் காலம் தொல்காப்பியர் காலம் (கி. மு. 4ஆம் நூற்றாண்டு) என்பது முன்னரே கண்டோம் அல்லவா? எனவே, தலைச் சங்கப் புலவராகிய முடிநாகனார் காலம் ஏறத் தாழக் கி. மு. 1000 என்று கோடல் பொருத்தமாகும். இச்சேரலாதனும் முடிநாகராயரும் பாரத காலத்தவரே என்பதை மகாவித்துவான் ரா. இராகவையங்கார்

4. Ancient India, pp. 15–20.

5. R. Sathyanatha Aiyar, History of India, Vol. I.,

p. 45. . .

6. முடியில் நாகவுரு தரித்த நாகர்குல அரசர் என்பது தோன்ற முடிநாகராயர்’ எனப்பட்டார். சேரர் மரபின்ரான கொச்சி அரசர் கிளைகள் ஐந்தனுள் ஒன்றற்கு அமுரிஞயூர் தாய்வழி' என்பது பெயர். உதியஞ் சேரலைப் பாடிய இப்புலவர் பெருமானது.ஊர் அம் முரிஞியூர் போலும், -மு. இராகவையங்கார், சேரவேந்தர் செய்யுட் கோவை 1, பக். 2-3 . * . . அவர்கள் தெளிவுற விளக்கி எழுதியிருத்தல் படித்து இன்புறத் தக்கது.[1]

வரலாற்றுப் பேராசிரியராகிய திரு. பி. டி. சீநிவாச அய்யங்கார், ‘உதியன் சேரல் பாரத வரலாற்றைக் கதகளி போன்ற நடிப்பு நாடகமாக நடத்தி அதன் இறுதியில் நடித்தவர்க்கும் பொதுமக்களுக்கும் பெருஞ்சோறு வழங்கி மிருத்தல் வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.[2] இக்கருத்துத் தவறு என்பதை மகாவித்துவான் அவர்கள் ‘தமிழ் வரலாறு’ என்னும் தமது நூலில் தக்க காரணம் காட்டி மறுத்துள்ளார்.[3]

உதியன் சேரலின் முன்னோன் ஒருவன் பெருஞ்சோறு கொடுத்த செயலை முடி நாகனார், பின்னோனாகிய உதியன் சேரல்மீது ஏற்றிக் கூறினார் என்று கூறுவாரும் உளர்.[4] இங்ஙனம் கருதுவதும் தவறு என்பதை மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.[5] உதியன் சேரல் சேர மன்னருள் காலத்தால் மிகவும் முற்பட்டவன் என்பதை நினைவூட்டவே புறநானூற்றில் அவனைப் பற்றிய பாடல் கடவுள் வாழ்த்தை படுத்து முதற் பாடலாக வைக்கப்பெற்றுள்ளது போலும்! இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆகிய இருவருக்கும் தந்தையான உதியஞ்சேரல் என்பவன் வேறாவான்.[6]

2. தருமபுத்திரன் (கி. மு. 1000)

‘அறவோர் மகனே, மறவோர் செம்மால்’ என்று புறப்பாட்டில் (366) கோதமனார் என்பவரால் பாடப்பெற்ற தருமபுத்திரன் தமிழ் நாட்டு அரசனாகக் காண்கிலன். இவன், யமதருமன் மகன், பாண்டவருள் மூத்தவன் என்பதே பொருத்தமாகத் தெரிகிறது. பாரத வரலாறு ஏறத்தாழக் கி. மு. 1000த்தில் நடைபெற்றதாக முன்பு கொள்ளப் பெற்றது. இங்ஙனம் கொள்ளின், இப்புறப் பாட்டிற் கண்ட தருமபுத்திரன், அவனைப் பாடிய கோதமனார்[7] ஆகிய இவர்தம் காலம் ஏறத்தாழக் கி. மு. 1000 என்னல் தவறாகாது, ...... இவற்றால் வடநாட்டுப் பாண்டவர் ஐவர்க்கும் தமிழரசர்க்கும் பலவகையினும் தொடர்புண்மை நன்கு தெளியலாம். இத் தொடர்புண்மையால், கோதமனார் தருமபுத்திரர்க்கு அறிவுறுத்தியதென்று நந்தமிழ்ப் பெருமக்கள் துணிந்த இச் செய்யுளின் பழமை நன்கு துணியலாம்[8] என்று பெரும்புலவர் ரா. இராகவையங்கார் குறித்திருத்தல் காண்க.

பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் “அருச் சுனனும் பாண்டிய மரபும்” என்னும் ஆராய்ச்சி மிக்க கட்டுரையில், வியாச பாரதம். மெகஸ்தனீஸ் வரைந்த ‘இண்டிகா’ இவற்றைக் கொண்டு பாண்டவர்க்கும் பாண்டி தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

யர்க்கும் இருந்த நட்புறவை மெய்ப்பித்து, தென்னாட்டுப்

பாரதப் பிரதிகளில் கண்ட செய்திகள் இடைச் செருகல் என்று சிலராற் கூறப்படுவது எவ்வாற்றானும் பொருந்தா தென்பது கண்டுகொள்க' என்றும் கூறியுள்ளனர்.

மேலும் அப் பெரியார், தருமபுத்திரனைக் கோதமனார். பாடினார் எனவரும் செய்யுளைப் பற்றிப் பேசுகையில், இச்

செய்தியை மேற்குறித்த விஷயங்களோடு சேர்த்து நோக்கும்போது, அசுவமேத யாகம் போன்ற சந்தர்ப்பு மொன்றில், தமிழரசருடன் சென்ற தமிழ்ப் புலவர் ஒருவர் பாண்டவரின் முன் தோன்றலையே அவ்வாறு பாடினரோ

என்று சங்கிக்க இடந் தருகின்றது. அப் புறப்பாட்டில் அறவோர் மகனே எனத் தருமபுத்திரர் அக்கோதமனாரால் அழைக்கப்படுதலும், தலைச் சங்கத்தவர்களில் கோதமனார்

என்ற பெயருடைய புலவர் ஒருவர் காணப்படுதலும் இங்கு அறியத்தக்கன," என்று எழுதியிருத்தல் கவனிக்கத் தக்கது.

3. வான்மீகியார் (கி. மு. 600)

பாரத நிகழ்ச்சிகட்குப் பிற்பட்டது இராமாகாதை என்பது அறிஞர் கருத்து:" இராமகாதையை வடமொழியில் பாடியவர் வான்மீகியார் என்பவர். புறநானூற்றில் 358ஆம் பாடலைப் பாடியவர் வான்மீகியார் என்ற புலவர், அவர் இப்பாட்டில் துறவறத்தின் சிறப்பினைப் புகன்றுள்ளார். இராமாகாதை செய்த வான்மீகியாரும் இப் பாடலைப்பாடிய வான்மீகியாரும் ஒருவரே என்று "செந்தமிழ்’ இதழாசிரியராகிய பெரும்புலவர் திரு நாராயணையங்கார் ஏறத்தாழ எண்பது பக்கங்களில் விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்.17 இம்முடிவு கொள்ளற்பாலதாயின், புறப்பாட்டிற் கண்ட

15. ஆராய்ச்சித் தொகுதி, பக் 70-78. 16. Dr. S. K. Ayyangar, Ancient India, pp. 1–5. 17. செந்தமிழ், 1939-40. டாக்டர் மா. இராசமாணிக்கனார் 芷75

வான்மீகியார் காலம் ஏறக்குறையக் கி. மு. 600 என்ன abirth, 18

4. கெடியோன் (கி. மு. 850-300)

  • எங்கோ வாழிய குடுமி, தங்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் - நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

என வரும் புறநானூற்று அடிகளிற் குறிக்கப்பெறும் நெடியோனைப் பற்றிச் சிலப்பதிகாரம்,30 முல்லைக்கலி(4). மதுரைக் காஞ்சி (வரி 768-781) முதலிய நூல்களிலும் குறிப்புகள் பலவாகக் காண்கின்றன. இவனே சயமா கீர்த்தி எனப்பட்டவன். இவன் பாக்கள் நற்றினையில் (105, 228) இரண்டுண்டு. இவன் 'கவியரங்கேறிய பாண்டியன்’ எனக் களவியல் உரை கூறல் காண்க. சயமா கீர்த்தி அல்லது ஐயமாகீர்த்தி என்பதில் உள்ள ஜய 21 என் பது யவத் (ஜாவா) தீவத்தின் பெயரால் கல்வெட்டு வல்லார் அறிந்தது. அங்குள்ள பிற்காலத்துக் கல்வெட்டு ஒன்று மின் இலச்சினையுடன் கிடைத்துள்ளது. இதனால், சயமா கீர்த்தி' என்பது ஐயஸ்தானத்து மகா கீர்த்தியன்’ என்னும் பொருளுடையதேயாகும்......இவன் அடியில் தன்னளவு

18. T. R. Sesha Ayyangar, Dravidian India, p.15.

19. முதற் கடல் கோளில் மதுரை அழிந்தது. அதன் நினைவாக இன்றைய மதுரை ஏற்பட்டது. அது போல்வே பஃறுளியாறும் நிலமும் கடலில் அழுந்திய பின்பு, நெடியோன், பஃறுளி என்னும் பெயர் கொண்ட புதிய யாற்றைத். தோற்றுவித்தான். அப் பெயர் காலப் போக்கில் பறளியாறு’ என மருவியது. அவ்யாறு நாஞ்சில் நாட்டிற் பாய்கிறது. அவ்யாறே இப்பாட்டிற் குறிக்கப்பட்டது எனல் பொருந்தும்.

20. சிலப் 11, வரி 17-22; அழற்படு காதை,

வரி 56-61. - -

21. G. E. Gerlni, Further India, p. 646. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

அரசர்க்கு உணர்த்தி' எனச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப் பெறல்-நெடுந் தூரம் கடலிற்சென்று நிலங் கண்டு, அந் நிலத்துத் தன் அடிகளை வைத்து, ஆண்டுள்ள கடல் அலம்பும்படி நின்றதேயாம்.பேரரசன் தன் அடிகளைப் பாறைகளிற் பொறித்து அவற்றை நீர் அலம்பும்படி வைக்கும் செய்தி ஜாவாவில் ரீ பூர்ணவர்மன் கல்வெட்டுகளிற் காணப்படுகிறது.

பூரீமானும் பூர்ணவர்மனும் அவனிக்குப் பதியும் அடி வைத்தவனுமாகிய தருமா நகரத் தலைவனுடைய விஷ்ணு அடிகளை ஒத்த இணை அடிகள்' (Ind. Ant. II. 355 -358). இது யவத்வீபத்துச் சீர் அருடன் யாற்று நடுவிலுள்ள பெரும் பாறையில் நீர் அலம்பு நிலையில் உள்ளது. இங்ஙனம் அடி பொறிக்கும் வழக்கம் நெடியோன் கால முதல் அங்கு உண்டாயிற்று என்று உய்த்துணரலாம்.

இங்ஙனம் நெடியோன் பெருங் கடலகத்து நிலங் கொண்ட செய்தி மதுரைக் காஞ்சியுள்,

" வானியைந்த இருமுந்நீர்ப்

பேஎநிலைஇய இரும்பவ்வத்துக்

கொடும்புணரி விலங்குபோழ சீர்சான்ற வுயர்கெல்லின் ஊர்கொண்ட உயர்கொற்றவ'

என்று (வரி 75-88) குறிக்கப்படல் காண்க. நெல்-சாலி; நெல்லின் ஊர். சாலியூர். இன்றைய சாரியூர் (Sarhl). இது ஜாவாத் தீவில் மதுரை என்ற தலைநகர்க்கு நான்கு கல் தொலைவில் உள்ள கடற்றுறைப் பட்டினம்.

"ஈண்டு மிகப் பிற்பட்ட காலத்தும் இந்நாட்டை வென்று கொண்ட மாறன் பெயரும் அவன் மதுரையும் (சுமதுரா) பாண்டியர் நூலில் குறித்த சாலியூரும் சேர வருவதலான், இந்நாடு முதலில் தென்னாட்டுப் பாண்டியராலே கொள்ளப்

பட்டதாக நன்கு தெளியலாம்...இவன் பொன்படுதீவங் கொண்ட சிறப்பையே போற்றி இவன் சய மாகீர்த்தி' எனவும், நெடியோன்' எனவும் புகழ் பெற்றனன்... இவன் வென்றுகொண்ட பிறநாடு மலயம் என இன்றுவரை வழங்குதலும் இவனுடைய பொதியப் பொருப்பாகிய 'மலயம்' பற்றியதாகும். மதுரை என்பது, கீழ்க்கடலகத்து யவத்தீவத்தை அடுத்து இப்போதுள்ள தீவாகும். இது முன்னர் ஒன்றாக இருந்ததென்ப. இச் சாவகத் தீவுடன் சங்க காலத்தில் வாணிகம் சிறக்க நடந்தது என்பதை மணி மேகலையால் அறியலாம்...சாவகத் தீவில் பல படியாகப் பகுப்புண்ட பெருநிலப் பெயர்கள் இன்றைக்கும் பாண்டியன், மதியன், புகார், பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி, செம்பூட்சேஎய்' என வழங்குதல் காணலாம். குறிஞ்சி, செங்கரை' என்பன ஆண்டுள்ள குளங் களின் பெயர்கள்... நெடியோன் எனப்பட்ட பாண்டியன், அக்கரையில் உள்ள ஆழி, தன் பாதத்தை அலம்பும்படி நின்றவன்’ என உணர்தலே பொருந்திய தென்க. இக் காரணத் தானே. மூவுலகும் ஈரடியால் அளந்தவனாகிய நெடியோனை ஒப்ப நின்றான் என்பது பற்றி, நெடியோன்" என்றார். இத்தகைய சிறந்த நெடியோன் வழித் தோன்றலாதல் பற்றியே, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன், - " முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்துபட்ட வியன்ஞாலம்

தாளில் தந்து தம்புகழ் கிறீஇ

ஒருதா மாகிய வரவோ ரும்பல்” எனக் குடபுலவியனாரால் புறப்பாட்டில் (18) ஏத்தெடுக்கப் பெற்றான் என்க."

22. இப்புதிய-அரிய செய்தியை விளக்கிய பெருமை பெரும்புலவர் ரா. இராகவையங்கார் அவர்கட்கே உரியது.-- தமிழ் வரலாறு. பக். 322-343

த-12 - . . . . . தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

இந் நெடியோன் தொல்காப்பியர் காலத்தவன் என்று. மகா வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் ஆராய்ந்து முடிவு கூறியுள்ளனர்.* தொல்காப்பியர் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு என்பது முன்பே குறிக்கப்பட்டது. எனவே, இவன் காலமும் அதுவே எனல் பொருத்தமாகும்.

கரிகாலன் (கி. பி. 75-115)

இவன் சிலப்பதிகாரம் கூறுமாறு. இமயம் சென்று மீண்ட பேரரசன். இவனே தொண்டை நாட்டை வளப்படுத்திச் சோணாட்டைப் பெருக்கிய பெருவீரன். இலங்கை அரசனான வசபன் (கி. பி.67-111) காலத்தில் சோழ மன்னன் தனது ஆட்சியை விரிவாக்கினான். அவன் இலங்கை மீது படையெடுக்கலாம் என்று அஞ்சிய வசபன் தன் படைகளைப் பெருக்கினான்: பாதுகாப்பை மிகுத்தான். வசபன் எதிர்பார்த்த சோழனது படையெடுப்பு அவன் மகனான வங்க நாசிக திஸ்ஸன் (கி. பி. 111-114) காலத்தில் நடை பெற்றது. அச்சோழன் பன்னிராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோழ நாட்டிற்குக் கொண்டு சென்றான். அந்த அவமானத்தை நீக்க வங்கநாசிக திஸ்ஸன் மகனான கயவாகு வேந்தன் (கி. பி. 114-186) சோழ நாட்டின்மீது படையெடுத்துப் பன்னிராயிரம் தமிழரைச் சிறை செய்து இலங் கைக்குக் கொண்டுவந்தான் என்று இலங்கை வரலாறு கூறு கிறது.* ... "

சங்க காலத்தில் நாட்டை விரிவாக்கியவன் கரிகாலனே என்பது சங்கப் பாடல்களால் தெரிகிறது.

இப்பொழுதுள்ள கடப்பை, கர்நூல் மாவட்டங்கள் என்னும் பகுதி கரிகாலனால் செம்மைப்படுத்தப்பட்டது.

28. தமிழ்மொழி வரலாறு, பக்.922-848. 24. History of Ceylon, Vol 1, pp. 175—195.

போலும்!” அப்பகுதி கி. பி.7ஆம் நூற்றாண்டில் ரேநாடு" எனப்பட்டது. அதனை ஆண்டவர் தம்மைச் சோழர்" என்றும் கரிகாலன் மரபினர்' என்றும் பட்டயங்களிற் கூறிப் பெருமை கொண்டனர்." அந்த நாட்டைச் சூழிய (சோழ நாடு) என்று ஆம் நூற்றாண்டில் யுவான் சுவாங்கு என்ற சீன வழிப்போக்கன் குறித்துள்ளான். காகந்தி என்பது சோழர் துறைமுக நகரான காவிரிப்பூம் பட்டினத்தின் பெயர். அப்பெயர் நெல்லூர் மாவட்டத்துக் கூடுர்ப் பகுதிக்குப் (கடல் கொண்ட காகந்தி நாடு எனப்) பெயரிடப்பட்டது. அப் பகுதியை ஆண்டவர் தம்மைச் சோழர்- கரிகாலன் மரபினர் என்றனர். இவர்கள் வழிவந்த தெலுங்குச் சோழர் (சோடர்) பின் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசர்க்கடங்கிக் குண்டுர், நெல்லுரர். வடஆர்க்காடு, செங்கற்பட்டு, கடப்பை மாவட்டங்களை ஆண்டுவந்தனர் என்று கல்வெட்டுகள் தெரிவிக் கின்றன. விசயநகர வேந்தர்க்கடங்கிய சிற்றரசர் சிலரும் தம்மைக் கரிகாலனின் மரபினர் என்று கூறிக்கொண்டதை நோக்க, கரிகாலன் ரே நாட்டையும் தொண்டை நாட்டையும் வென்றவன் என்பது தெளிவாகிறதன்றோ?

கரிகாலன் காவிரியின் கரைகளை உயர்த்தியவன் என்று தெலுங்குச் சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற கலிங்கத்துப் பரணியும் (197) இச்செய்தியைக் குறித்துள்ளது. சோழன் ஒருவன் பன்னிராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோணாடு கொண்டு சென்று காவிரிக்குக் கரையிடுவித்தான் என்று. இலங்கை வரலாறு கூறுகின்றது. பராந்தகன் முதலிய சோழப் பேரரசர் காலக் கல்வெட்டுகளில் காவிரியின் கரை கரிகாலக்கரை' என்று குறிக்கப்பட்டுள்ளது. .

  • թ. 7. 3. Ayyangar, History of the Tamils, pp. 84s

—347. ; : ,

25. к. А. м. Sastry, Cholas, Vol. 1, pp. 121–1a2. கரிகாலனே இமயம் வரையில் சென்று மீண்டதாகச் சிலப்பதிகாரம் செப்புகிறது, அவன் காலத்தில் கடல் வாணிகம் சிறந்திருந்தது என்பது பட்டினப்பாலையால் தெரிகிறது. எனவே, படை வலிமை மிகுந்த அவனே இலங்கை மீது படையெடுத்திருக்கலாம். அங்ஙனமாயின் (அவன் படையெடுத்த காலம் கி. பி.111-114 என்று இலங்கை வரலாறு கூறுவதால்) கரிகாலன் காலம் கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதி கி. பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியுமாக (கி.பி. 115 வரையில்) இருக்கலாம்.

நெடுமுடிக்கிள்ளி (கி.பி. 115-136)

இவன் மணிமேகலை காலத்தவன். மணிமேகலை செய்த சாத்தனார் செங்குட்டுவன் காலத்தவர். செங்குட்டுவன் கய வாகுவின் (கி.பி.114-136) காலத்தவன். எனவே, இந் நெடுமுடிக்கிள்ளியும் அக் காலத்தவனே யாவன். அக்காலத்தில்தான் பாண்டிய நாட்டை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆண்டுவந்தான். அவனுக்குப் பின்பு மதுரை யின் ஒருபகுதி அழிந்தது. இந்நெடுமுடிக்கிள்ளியோடு பூம்புகாரின் ஒரு பகுதி அழிவுற்றது என்று மணிமேகலை கூறு கிறது.

பிற சோழ வேந்தர் (கி. பி.136-300)

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான், கிள்ளிவள வன், இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருதற்கிள்ளி, வேல்பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி, முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளி, கோப்பெருஞ்சோழன், நல்உருத்திரன் முதலியோர் சோணாட்டை ஆண்டவர் என்று புறநானூற்றுப் பாடல்கள் புகழ்கின்றன. இவருட் சிலரேனும் கரிகாலனுக்கு முற்பட்டவர் ஆகலாம், பலர் பிற்பட்டவர் ஆக

பிளைநி, பெரிப்ளுஸ் ஆசிரியர், தாலமி போன்றோர் குறித்துள்ள வாணிகச் செய்திகள் யாவும் உண்மை என்பதைப் புறநானூற்றுப் பாக்களும் கரிகாலனைப் பற்றிய பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை என்னும் நெடும் பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன.

புறநானூற்றின் காலம்

இதுகாறும் கூறப்பட்ட செய்திகளைக் காண, புற நானுற்றில் உள்ள பாக்களின் காலம் ஏறத்தாழக் கி. மு. 300 என்னலாம்.


வேதகாலத்தில் சொல்லப்பட்ட செய்திகளையும், புராண செய்திகளையும் கொண்டு வரலாறு எழுதி வரும் வரலாற்று ஆசிரியர்கள் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், நெடியோன், வான்மீகியார், கோதமனார், கரிகாலன் இமயப் படையெடுப்புப் பற்றிய பாடல்களைக் கட்டுக் கதை என்று தள்ளுதல் ஆராய்ச்சி அறமன்று. இவை பற்றிய ரா. இராகவையங்கார், மு.இராகவையங்கார், திரு.நாராயணையங்கார் போன்ற புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் செய்துள்ள ஆராய்ச்சிகளைத் தம் நூலிற் குறிப் பிடாமல் விட்டதும் அறமாகாது; இங்ஙனம் கூறவேண்டுவன வற்றைக் கூறாது, சங்க காலம் கி. பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்பதை மட்டும் பல இடங்களில் விடாமல் எழுதுதலும் அறமாகாது.


  1. தமிழ் வரலாறு, பக். 236-238
  2. History of the Tamils, pp. 491-494.
  3. பக். 233.
  4. K. A. N. Saatry, History of India, p. 113; History of s. India, p. 113; ‘முன்னோன் செய்த செயல்’ என்று இவரே ஒப்புக்கொள்வதால், பாரத காலத்தில் சேரர் இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்கிறார் என்பது இங்கு அறியத்தகும். எனவே, சேர, சோழ, பாண்டியர் பாரத காலத்துப் பழைமையுடையவர் என்பது கூறாமற் கூறிய வாறாகும்.
  5. தமிழ் வரலாறு, பக். 228-230.
  6. மு. இராகவையங்கார், சேர வேந்தர் செய்யுட்கோவை 1. முன்னுரை, பக். 9.
  7. இக் கோதமனார் வேறு, பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கோதமனார் வேறு என்பது, முன்னவர்க்குப் 'பாலை' என்ற அடை இன்மையால் அறியப்படும்.
  8. தமிழ் வரலாறு