தமிழ்மொழி இலக்கிய வரலாறு

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

தமிழ்
மொழி – இலக்கிய வரலாறு

சங்க காலம்

 

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

 

விற்பனை உரிமை:


14, சித்திரக்குளம் மேற்கு,
மயிலாப்பூர், சென்னை-4.

நூலைப் பற்றி

கண்ணம்மாள் பதிப்பக வெளியீடு : 104
முதற்பதிப்பு : சனவரி, 1963
நான்காம் பதிப்பு : 1976
ஐந்தாம் பதிப்பு : டிசம்பர், 1996
நூலின் பெயர் : தமிழ் மொழி-இலக்கிய வரலாறு சங்க காலம்
ஆசிரியர் : டாக்டர் மா. இராசமாணிக்கனார்
உரிமை : மா. ரா. அரசு
நூலின் அளவு : கிரவுன் 1x16
பக்கங்கள் : 384
வெளியிடுவோர் : கண்ணம்மாள் பதிப்பகம்
796, 29ஆவது தெரு,
பெரியார் நகர், கொரட்டூர்,
சென்னை - 600 080.
தொலைபேசி : 651804
பொருள் : இலக்கிய வரலாறு
விலை : ரூ.75-00
அச்சிட்டோர் : சித்திரா பிரிண்டோ கிராபி
24, பொன்னுசாமி தெரு,
இராயப்பேட்டை, சென்னை - 600 014
தொலைபேசி : 8263349

முகவுரை

கி. பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் பெரிப்ளுஸ் ஆசிரியர், பிளைநி, தாலமி என்ற கிரேக்கர் மூவரும் தமிழகத்து உள்நாட்டு ஊர்களைப் பற்றியும் துறைமுக நகரங்களைப் பற்றியும் மேல் நாடுகள் தமிழகத்தோடு செய்து வந்த வாணிகத்தைப் பற்றியும் சில செய்திகளை எழுதியுள்ளனர். பழந்தமிழ் நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் யவனர் பாவைவிளக்கு, யவனர் வாணிகம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரைப் பிடித்து அடக்கினமை போன்ற செய்திகள் காணப்படுகின்றன. கி. மு. முதல் நூற்றாண்டிலும் பின் நூற்றாண்டுகளிலும் வழங்கப்பட்ட ரோம நாணயங்கள் மதுரை முதலிய இடங்களில் கிடைத்துள்ளன.

இச்சான்றுகளைக் கொண்டு எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளில் செய்யப் பட்டவை என்னலாம்; சங்ககாலமே கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகள் என்னலாம்[1] என்று வரலாற்று ஆசிரியர் சிலரும் தமிழ்ப் பேராசிரியர் சிலரும் தம் ஆராய்ச்சி நூல்களில் எழுதிவிட்டனர். அவர்கள் கூற்றை உறுதியாகக்கொண்டு பலரும் சங்ககாலம் கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்று கூறியும் எழுதியும் வருகின்றனர்.

தொகை நூல்களிலுள்ள செய்யுட்கள் ஒருவர் பாடியவை அல்ல. ஏறத்தாழப் புலவர் ஐந்நூற்றுவர் பாடியவை. அவற்றுள் யவனர் தந்த பாவை விளக்குப் பற்றியும், யவனரைப்பற்றியும் வருகின்ற செய்யுட்கள் மிகச் சிலவே யாகும். புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை இவற்றில் காணப்படும் பாரதப்போர், நந்தர்கள் பற்றிய செய்திகள், மோரியர் படையெடுப்பு ஆகியவற்றை நோக்க, இன்றுள்ள சங்கச் செய்யுட்களுள் சில கிறிஸ்தும் பெருமானுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளையும் சேர்ந்தவை என்னும் உண்மை உணரப்படும்.

மேலும் ஒரு மொழிக்குரிய நூல்கள் திடீரென்று கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளை மட்டும் குறிக்குமென்றோ, அந்நூற்றாண்டுகளில் செய்யப்பெற்ற பாடல்கள் மட்டுமே கிடைக்கக்கூடுமென்றோ எண்ணுதல் பொருத்தமற்றது.

செங்குட்டுவன் செய்த பத்தினி விழாவிற்குக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் வந்திருந்தான் என்பது சிலப் புதிகாரம் கூறும் செய்தியாகும். அக்கயவாகுவின் காலம் கி. பி. 113-136 என்று அண்மையில் வெளிவந்த இலங்கை வரலாற்று நூல் தெரிவிக்கின்றது. எனவே, செங்குட்டுவன் காலமும் அவன் தம்பியாரான இளங்கோவடிகள் காலமும் அவ்விருவருக்கும் நண்பராகிய ‘மணிமேகலை’ ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் காலமும் அதுவேயாகும் என்பது வெள்ளிடை மலை.

மணிமேகலையில், “தெய்வம் தொழா அள்” என்று தொடங்கும் குறள் முழுமையும் ஆளப்பட்டுள்ளதை அனை வரும் அறிவர். மேலும், சிலப்பதிகாரத்தில் குறட் கருத்துக்களும் தொடர்களும் பல இடங்களில் ஆளப்பட்டுள்ளன. இவற்றை நோக்க, திருக்குறள் இவ்விரு நூல்களுக்கும் முற்பட்டது என்பது தெளிவாகும்.

திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சங்க நூல்களுக்கெல்லாம் முற்பட்டது தொல்காப்பியம் என்பதை மகாவித்துவான் இரா. இராகவய்யங்கார், டாக்டர் சோமசுந்தர பாரதியார், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் திரு. க. வெள்ளைவாரணனார், பேராசிரியர் சி. இலக்குவனார், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சியாளர் வே. வேங்கடராசுலு ரெட்டியார் ஆகிய அறிஞர்கள் தம் ஆராய்ச்சி மிக்க நூல்களில் நன்முறையில் வெளியிட்டுள்ளனர். வரலாற்று முறைப்படி ஆராயின், தொல்காப்பியத்தின் குறைந்தகால எல்லை ஏறத்தாழக் கி. மு. 300 என்று கூறலாம்.[2] இதற்குக் கீழே தொல்காப்பியத்தின் காலத்தைக் கொண்டு செல்வது வரலாற்று உண்மைக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் முரண்பட்டதாகும்.

ஏறத்தாழக் கி. மு. 300இல் செய்யப்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் தமக்கு முன்பும் தம் காலத்திலும் இருந்த இலக்கண நூல்களைச் செய்த ஆசிரியர் பலரை ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், “என்ப”, “என்மனார் புலவர்”, “யாப்பறி புலவர்” எனப் பலவாறு கூறியுள்ளார். எனவே, தொல்காப்பியம் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த இலக்கண நூல்கள் மிகப்பல என்பது தெளிவாகும். இங்ஙனமே தொல்காப்பியர் காலத்தில் மிகப்பல இலக்கிய நூல்களும் இருந்தன என்பதை அவருடைய செய்யுளியல் நூற்பாக்கள் நன்கு தெரிவிக்கின்றன. தொல்காப்பியர் காலத்திலேயே (கி. மு. 300) பல இலக்கண நூல்களும் பல இலக்கிய நூல்களும் இருந்தன எனில், தமிழ் மொழியின் தொன்மையை என்னென்பது!

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியினரான தமிழர்தம் மொழியாகிய தமிழின் தோற்றத்தை அறியவல்லார் யாவர்? இதனாலன்றோ கல்வியிற் சிறந்த கம்பர் பெருமான், “என்றுமுள தென்றமிழ்” என இயம்பி மகிழ்ந்தார்!

இத்துணை உண்மைகளையும் மறந்து அல்லது மறைத்துச் ‘சங்ககாலம்’ கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தது. தொல்காப்பியம் தொகை நூல்களுக்குப் பிற்பட்டது என்று தம் மனம் போனவாறு ஒரு சிலர் எழுதுதல் உண்மை ஆராய்ச்சிக்கு மாறுபட்டதாகும்.

கி. பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சியில் பல்லவ அரசு ஏற்பட்டது என்பது வரலாற்று உண்மை.

பல்லவர் ஏறத்தாழக் கி. பி. 300 முதல் கி. பி. 875 வரையில் தமிழகத்தில் பேரரசராய் இருந்தனர் என்பதும் வரலாறு கூறும் உண்மையாகும். தொல்காப்பியம் முதல் மணி மேகலை ஈறாக உள்ள சங்க நூல்களில் இப்பல்லவர்களைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதும் காணப்படவில்லை; காஞ்சியில் திரையர் இருந்தமைக்கும் சோழர் இருந்தமைக்குமே சான்றுகள் காணப்படுகின்றன. எனவே, இந்நூல்கள் அனைத்தும் பல்லவர்க்கு முற்பட்ட நூல்கள் என்பது தெளிவாகும். ஆகவே, சங்ககாலத்தின் இறுதி எல்லை ஏறத்தாழக் கி. பி. 300 என்று கொள்ளப்பட்டது. அதன் மேல் எல்லை இன்றுள்ள சான்றுகளைக் கொண்டு வரையறுக்க இயலவில்லை. புறநானூற்றின் துணையைக் கொண்டு அதன் மேலெல்லையை ஏறத்தாழக் கி. மு. 1000 என்று கூறலாம். அக்காலத்திலும் கடல் வாணிகம் சிறப்புற நடைபெற்றது. இன்று கிடைத்துள்ள இலக்கியம் முதலிய சான்றுகளைக் கொண்டு, ஏறத்தாழக் கி. மு. ஆயிரத்திலிருந்து கி. பி. 300 வரையில் இருந்த பரந்துபட்ட காலமே சங்ககாலம் என்று கூறலாம். இந்த அடிப்படை உண்மையை உள்ளத்திற் கொள்ளின், நூல்களின் காலத்தைப் பற்றிய குழப்புமே தோன்றாது. தொகை நூற்பாடல்கள் கி. மு.விலும் பாடப் பட்டிருக்கலாம், கி. பி.யிலும் பாடப்பட்டிருக்கலாம் என்னும் உண்மையை உணர்தல் நல்லது.

காய்தல் உவத்தல் இன்றித் தமிழ் இலக்கண இலக்கிய தூல்களை நன்கு கற்று, கிடைக்கும் உண்மைகளை ஒன்று சேர்த்து, பிற நாட்டார் குறிப்புகளையும் இந்திய வரலாற்றினையும் ஒப்புநோக்கிச் சாத்திரீய முறையில் (Scientific Method) ஒரு முடிவுக்கு வருதலே உண்மை ஆராய்ச்சி எனப்படும். அத்தகைய உண்மை ஆராய்ச்சியே என்றும் நிலைத் திருக்கும்.

மிகப் பழைய காலம் முதல் ஏறத்தாழக் கி. பி. 300 வரையில் தமிழகம் சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் இருந்தது என்பது தென்னிந்திய வரலாற்றால் தெளிவாகத் தெரிகின்றது. அப்பரந்துபட்ட காலத்தில் பாண்டியும் தமிழ்ச் சங்கத்தை வைத்துத் தமிழ் வளர்த்து வந்தனர் என்பது சங்க நூல்களால்[3] தெளிவாகத் தெரிகின்றது. ஆதலால் இக்காலம் சங்ககாலம் என்று ஆராய்ச்சியாளரால் கூறப்படுகின்றது.

ஏறத்தாழக் கி. பி. 300 முதல் கி. பி. 875 வரையில் தமிழகத்தில் பல்லவரும் பாண்டியரும் சிறப்புற்றிருந்தனர். அக்காலத்தில் சைவமும் வைணவமும் சமணத்தையும் பௌத்தத்தையும் எதிர்த்துப் போரிட்டன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் முறையே சைவத்தையும் வைணவத்தையும் தம் திருப்பாடல்களால் வளர்த்தனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை இப்பல்லவர் காலத்தில் தோன்றியவை.

பல்லவர்க்குப் பின்பு பேரரசராய் விளக்கமுற்ற பிற்காலச் சோழர்கள் சைவ வைணவ சமயங்களை நன்கு வளர்த்ததோடு சமணர்க்கும் பௌத்தர்க்கும் வேண்டிய அளவு உதவி செய்தனர். இச்சோழர் ஏறத்தாழக் கி. பி. 875 முதல் 1300 வரையில் நாடாண்டனர். இவர்கள் காலத்தில் சமய வளர்ச்சி மிகுதியாகக் கவனிக்கப்பட்டது. எனவே, பல்லவர் சோழர் காலங்களைச் சமய வளர்ச்சிக் காலம் அல்லது இடைக்காலம் என்று கூறலாம். இக்காலத்தில் சிந்தாமணி, பெரிய புராணம், கம்ப ராமாயணம் போன்ற பெரு நூல்கள் தோன்றின; இவற்றோடு அரசியல் தொடர்புடைய கலிங்கத்துப்பரணி, மூவருலா போன்ற சிறு நூல்களும் தோன்றின யாப்பருங்கலம், வீரசோழியம், தண்டியலங்காரம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களும் தோன்றின.

கி. பி. 1300க்குப் பிறகு தமிழகம் விசயநகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது; பின்பு நாயக்கர் ஆட்சிக்கும் கருநாடக நவாபுகள் ஆட்சிக்கும் உட்பட்டது; இறுதியில் ஆங்கிலேயர்

ஆட்சிக்கு உட்பட்டது. இக்காலத்தில் (1300-1947) தமிழைத் தக்கவாறு ஆதரித்தவர் மிகச் சிலர். அதனால் எண்ணிறந்த தலபுராணங்கள், உலா, தூது போன்ற சிற்றிலக்கியங்கள், இசுலாத்தையும் கிறிஸ்துவத்தையும் பற்றிய பெருநூல்கள் சிறு நூல்கள், திருவருட்பா, மனோன்மணியம் போன்ற நூல்கள் தோன்றின. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பின்பு அச்சுப் பொறியின் வாயிலாகச் செய்தித் தாள்களும் நூல்களும் அச்சிடப் பெற்றன. பள்ளிக் கூடங்கள் பெருகப் பெருக உரைநடை நூல்களும் பெருகின. 20ஆம் நூற்றாண்டில் உரைநடை நூல்களும் மொழி பெயர்ப்பு நூல்களும் பெருங் கதைகளும் சிறு கதைகளும் கவிதைகளும் வளர்பிறைபோல வளர்வனவாயின. இக் காலத்தைத் தமிழிலக்கிய வரலாற்றில் பிற்காலம் என்னலாம்.

எனவே, தமிழ் இலக்கிய காலத்தைச் (1) சங்ககர்லம், (2) இடைக்காலம், (3) பிற்காலம் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிப்பது பொருத்தமாகும். இம்மூன்று பிரிவு களுள் சங்ககாலமாகிய முதற் பிரிவில் அமைந்த நூல்களைப் பற்றிய விளக்கத்தை இந்நூலிற் காணலாம்.

தொல்காப்பியம் இன்னது-அதன் காலம் இன்னது-அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் இன்னவை-அவற்றாலறியப்படும் தமிழர் வாழ்க்கை முறை நாகரிகம் பண்பாடு இன்னவை-தொல்காப்பியத்தால் அறியப்படும் மொழி வரலாறு இது-இலக்கிய வரலாறு இது என்பன போன்ற பல விவரங்களும் இலக்கிய வரலாற்றில் இடம் பெற வேண்டும்; ஒவ்வொரு நூலைப்பற்றிய இத்தகைய விவரங்கள் இலக்கிய வரலாறு படிப்பவர்க்கு அந்நூலைப்பற்றி ஒரளவு அறிவைத் தரும். இந்த முறையில் இலக்கிய வரலாறு எழுதல் வேண்டும் என்ற எண்ணம் பல்லாண்டுகளாக என்னுள்ளத்தில் வேரூன்றி வளர்ந்து வந்தது.

ஆங்கில இலக்கிய வரலாறு பற்றிய நூல்களில் ஒரு நூலின் ஆசிரியர் பெயர், அவரது வாழ்க்கைச் சுருக்கம், காலம், அவர் செய்த நூல்கள், அந்நூற் செய்திகளின் சுருக்கம், அவை பற்றிய இலக்கிய வரலாற்று ஆசிரியர் கருத்துக்கள் என்னும் முறையில் செய்திகள் காணப்படுகின்றன. இம்முறை வரவேற்கத்தக்கது.

ஏறத்தாழ இம்முறையைத் தழுவி வங்கமொழி இலக்கிய வரலாறு திருவாளர் தினேஷ் சந்திர சென் என்பவரால் 840 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் விலை ரூபாய் 25. மேலே காட்டப்பெற்ற முறையைத் தழுவித் தமிழிலக்கிய வரலாற்றை எழுத வேண்டும் என்னும் எண்ணம் எனக்குண்டாயிற்று.

யான் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாகவும் தமிழ்த்துறைத் தலைவனாகவும் இருந்த போது, தமிழிலக்கியம் பற்றி ஆறு சொற்பொழிவுகள் மதுரை மாவட்ட ஆசிரியர்களுக்கு ஆற்றவேண்டும் என்று கல்வித்துறை இயக்குநர் பத்மஸ்ரீ நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் ஆணை பிறப்பித்தனர், யான் அவ்வாணையின்படி மதுரை யூனியன் கிறிஸ்தியன் உயர் நிலைப்பள்ளியில் 1956 ஏப்ரலில் ஆறு சொற்பொழிவுகள் ஆற்றினேன். என் சொற்பொழிவு முறையில் நூலை எழுதும்படி ஆசிரியர் பலர் வற்புறுத்தினர். யான் அவர்கள் விருப்பத்திற்கிசைந்து அச்சொற்பொழிவுகளை அடிப்படையாகக்கொண்டு விரிந்த முறையில் தமிழிலக்கிய வரலாற்றை எழுதத் துணிந்தேன்.

பெரும்பாலரான தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு தமிழிலக்கியத்தையும் படித்துச் செய்திகளையறியப் போதிய நேரமோ வாய்ப்போ இல்லை ஆதலின் ஒவ்வொரு நூலைப்பற்றியும் சுருங்கிய முறையில் செய்திகளையறிய இலக்கிய வரலாற்று நூல் துணைபுரிய வேண்டும்-அந்நிலையிற்றான் அவர்கள் ஒவ்வொரு காலத் தமிழர் நாகரிகத்தையும் மொழி வளர்ச்சியினையும் மொழி மாறுதல்களையும் அறிதல் கூடும் என்னும் எண்ணம் உந்தியதால், ஒவ்வொரு நூலைப்பற்றியும் தேவையான செய்திகளை மட்டும் தருதல் நன்றெனத் துணிந்தேன்.

இம்முறையினால் நூல், அளவில் பெருகலாயிற்று. அதனால் சங்ககால இலக்கிய வரலாறு மட்டும் 600 பக்க்

அளவில் ஒரு தனி நூலாக உருவெடுத்தது. நூல் அளவில் பெருகின் விலையும் மிகும். ஆதலால் யான் முதலில் விரிவாய் எழுதிய நூலை மிகத் தேவையான செய்திகளை மட்டும் கொண்ட நூலாகச் சுருக்கினேன். அங்ங்னம் சுருக்கப்பட்ட நூலே இது.

இந்நூலில் மொழியின் தோற்றம் வளர்ச்சி-இலக்கியம்-இலக்கியத் தோற்றம் என்பவை முன்னுரைச் செய்திகளாகத் தரப்பட்டுள்ளன. அடுத்துச் சங்ககால இலக்கியத்திற்கு இந்திய வரலாறும் இலங்கை வரலாறும் அயல்நாட்டார் குறிப்புகளும் எந்த அளவு துணை செய்கின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து முச்சங்கங்கள் வரலாறு-மதுரையில் தமிழ்ச் சங்கம் என்பவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இவற்றையடுத்துத் தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் காலமும், நூற் செய்திகளும் பிறவும் விளக்கப்பட்டுள்ளன.

"இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு நூலின் காலத்தையும் ஆராய்ந்து முடிவு கட்டுதல் இன்றியமையாதது. ஆயின், இக்கால ஆராய்ச்சி மட்டும் இலக்கிய வரலாறு ஆகாது. வரலாற்றில் பல காலங்கள் உண்டு ஒருகால இலக்கியத்திற்கும் அடுத்தகால இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுதல் வேண்டும். ஒரு காலத்து இலக்கிய நூல்கள் எவ்வெச்சூழ்நிலையில் உருவாகியுள்ளன என்பதும் விளக்கப்படல் வேண்டும். ஒரு காலத்துக்கு உரிய நூல்களை அக்கால அரசியல், பொருளாதார இயல், சமூகஇயல் முதலியவை எங்ங்னம் வளர்த்தன என்னும் உண்மையும் விளக்கப்படல் வேண்டும்.

“காலக் கணக்கு மட்டும் கூறுவது நன்றன்று. ஒரு மொழி பேசிய மக்களினம், அவ்வினத்துப் பிரிவுகள், அவ்வினத்தவர் தொழில்கள், வாழ்க்கை முறை இவற்றை ஆராய்ந்து சமூக மாறுதலுக்குரிய நிலைமைகளை விளக்கி, வரலாற்றுப் பின்னணியில் இலக்கிய வளர்ச்சியை விளக்குதல் வேண்டும்.

“மனிதனது வாழ்க்கையில் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. அவ்வாறே இலக்கிய உலகத்திலும் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. மாறுதல்கள் இருப்பினும் ஒருமைப்பாடும் காணப்படும். மணிகள் பல நிறத்தனவாயினும் அவை கோக்கப்பெறும் நூல் ஒன்றியிருப்பது போல-வேறுபாடுகளுக்கிடையே ஒருமைப்பாடு இருக்கும். இலக்கிய உலகிலும் அவ்வொருமைப்பாடு உண்டு. அதனைச் சுட்டிக் காட்டுவது இலக்கிய வரலாற்றாசிரியரது கடமையாகும்.”

திரு. வி. சுப்பராவ் என்ற தெலுங்குப் புலவர் 1920 இல் எழுதிய “ஆந்திர வான்மய சரித்திரம்” என்னும் தெலுங்கு இலக்கிய வரலாற்று நூலுக்குத் தாம் வரைந்த முன்னுரையில் காலஞ்சென்ற பேரறிஞர் டாக்டர் சி. ஆர். ரெட்டி அவர்கள் மேற்கண்ட கருத்தினைத் தெரிவித்துள்ளனர். தெலுங்கிலுள்ள இச்செய்தியைப் படித்து, யான் எழுதியுள்ள முறை தக்கதே என்பதை எனக்குத் தெரிவித்து ஊக்கியவர் என் கெழுதகை நண்பர் வேதம் வேங்கடராய சாஸ்திரியார், M. A. ஆவர். அவருக்கு எனது நன்றி உரியது.

கல்வித்துறை இயக்குநரவர்கள் மதுரையில் என்னைத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிப் பேசுவித்தமையே இந்நூல் வெளிவரச் சிறந்த அடிப்படையாகும். தமிழகத்துக் கல்வித் துறையில் ஓய்வின்றி உழைத்து வரும் அப்பெருமகனார்க்கு என் வணக்கமும் நன்றியும் உரியவாகும்.

இவ்வாராய்ச்சி நூலை வெளியிட இசைவு தந்த சென்னைப் பல்கலைக் கழக ஆட்சியாளர்க்கு (Syndicate) எனது நன்றியும் வணக்கமும் உரிய.

கல்விக்கும் மருத்துவத்திற்கும் அருந்தொண்டாற்றி வருபவரும், உலகப் பெரியாருள் ஒருவரும், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான டாக்டர் சர். ஆ. இலக்குமணசுவாமி முதலியார் அவர்கட்கு இந்நூலை உரிமையாக்க இசைவு நல்கும்படி அப்பெரியாரவர்களை வேண்டினேன், அருள் உள்ளம் கொண்ட அவர்கள் எனது வேண்டுகோளுக்கு இசைந்ததே யான் பெற்ற பெரும் பேறாகும். அம் மூதறிஞரவர்கட்கு என் வணக்கமும் நன்றியும் உரியவாகும்.

இங்ஙனம் விரிவான முறையில் இலக்கிய வரலாறு வருவது நல்லதே எனக் கூறி எனக்கு ஊக்கமளித்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித்துறைத் தலைவராயுள்ள பேரறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கட்கு என் உளமார் நன்றியும் வணக்கமும் உரிய.

என் திருமகன் மா. ரா. இளங்கோவன் (M.A.) என் திருமகள் மா. ரா. தமிழரசி (M.A.) ஆகிய இருவரும் இந்நூலைப் பிழையறப் படியெடுத்தனர். அச்சுப் படிகளைப் படித்துத் திருத்தினர். இவ்விருவர்க்கும் நல்லாசி வழங்கும் படி அங்கயற்கண்ணியோடமர்ந்த ஆலவாயண்ணலை வேண்டுகிறேன்.

மா. இராசமாணிக்கம்

உள்ளுறை

எண்

பொருள்

பக்கம்


1.  17
மொழியின் தோற்றம்-சொற்களின் தோற்றம்-ஐவகை நிலம்-மொழி வளர்ச்சி-மொழி நிலைகள்-எழுத்து வளர்ச்சி-தமிழ் எழுத்துக்கள்-பிறமொழிக் கலப்பு.
2.  30
திராவி மொழிகள்-வட இந்தியாவில் திராவிடம்-வேறு சான்றுகள்-முடிவுரை.
3.  39
இலக்கியம்-இலக்கியத் தோற்றம்
4.  43
வாழ்க்கையின் உயிர்நாடி-அகப்பொருள் இலக்கணம்-களவொழுக்கம்-அறத்தொடு நிற்றல்-கற்பு வாழ்க்கை-புறப்பொருள் இலக்கணம்.
5.  54
முச்சங்கங்கள் பற்றிய செய்தி-சங்கம் இருந்தமைக்குப் பிற்காலச் சான்றுகள்-சங்கநூல் சான்றுகள்-சங்ககாலம்.
6.  65

1. கடல் வாணிக வரலாறு
2. இந்திய வரலாறு

3. இலங்கை வரலாறு
7.  91

1. தொல்காப்பியத்தின் பழைமை
2. தொல்காப்பியத்தின் காலம்
3. தொல்காப்பியத்தின் சிறப்பியல்புகள்

எழுத்ததிகாரம்-சொல்லதிகாரம்-பொருளதிகாரம்.

4.தொல்காப்பியருக்கு முற்பட்ட நூல்கள்
5.தொல்காப்பிய உரையாசிரியர்கள்: இளம்பூரணர்
  -சேனாவரையர்-பேராசிரியர்-நச்சினார்க்கினியர்

  -தெய்வச்சிலையார்-கல்லாடர்.
8.  138

திருக்குறளும் மணிமேகலையும்-மணிமேகலை
யின் காலம் என்ன?-திருக்குறளின் பழைமை-
திருக்குறளும் சங்க நூல்களும்-திருவள்ளுவர்

காலம்-திருக்குறட்சிறப்பு.
9.  163

1. எட்டுத்தொகை:ஐங்குறுநூறு-குறுந்தொகை-
    நற்றிணை-அகநானூறு-கலித்தொகை-
    பதிற்றுப் பத்து-பரிபாடல்-புறநானூறு.
 2. புறநானூற்றின் காலம்:முன்னுரை-புறநானூறு
    -புற நானூற்றின் காலம்-பெருஞ்சோற்று உதியன்
    சேரலாதன்-தருமபுத்திரன்-வான்மீகியார்-
    நெடியோன்-கரிகாலன்-நெடுமுடிக்கிள்ளி-பிற

    சோழ வேந்தர்.
10.  182

முன்னுரை-ஐங்குறுநூற்றுப் புலவர்கள்-பேரரசரும்
 சிற்றரசரும்-ஊர்கள்-சிறப்புச் செய்திகள்-அணி
 கள்- விளையாட்டுகள்-மேற்கோள்- அந்தணர்

 கூட்டுறவு.
11.  191

முன்னுரை-குறுந்தொகையைப் பாடிய புலவர்கள்-
பெண்பாற் புலவர்கள்-அரசர்-சிற்றரசர்-ஊர்கள்-
சிறப்புச் செய்திகள்-அணிகள்-பண்பாடு-மேற்

கோள்-வடசொற்கள்.
12.  206

முன்னுரை-நற்றிணையில் செய்யுட்களைப்

பாடிய புலவர்கள்-அரசரும்

சிற்றரசரும் —அரசியல்-ஆயன்- ஊர்கள்-உடை-
வாணிகம்-கலைகள்-சமயம்-பண்பாடு-மேற்கோள்-

உவமை முதலியன-வடசொற்கள்.
13.  221

முன்னுரை-அகநானூற்றில் இடம்பெற்ற
புலவர்கள்-நந்தர்கள்-மோரியர் படை யெடுப்பு-
பேரரசர்-சிற்றரசர்-பாணர்கள் (Banas)-கங்கர்-திரையர் -ஊராட்சி-தமிழர் திருமணம்-சமயச்
செய்திகள்-நாகரிகம்-பண்பாடு-புராணக் கதைகள்

-வட சொற்கள்.
14.  235

கலித்தொகையின் புதுமைகள்-கலித் தொகை ஆசி
ரியர்-ஐவரல்லர்-கலித் தொகையின் காலம்-ஏறு
தழுவல்-தமிழ்ச் சங்கம்-கல்வி-அணிகள்-சமயச்
செய்திகள்-சில உண்மைகள்-உவமை முதலியன-

மேற்கோள்-வடசொற்கள்.
15.  254

முன்னுரை-பரிபாடல் நூல்-பரிபாடலின் காலம்-முப்
பொருள் பற்றிய பாடல்கள்-இருங்குன்றம்-இருந்
தையூர்-தன்பரங்குன்றம்-வையை-தமிழ் வையை-
தைந்நீராடல்-அடியார் வேண்டுதல்-ஓவியம்-
பேரெண்கள்-மேற்கோள்-புராண கதைகள்-வட

சொற்கள்-வடமொழிப் பெயர்கள்-மொழிபெயர்ப்பு.
16.  275

முன்னுரை-பாடல் பெற்ற சேரர்-சேரர் கொடை-
பதிற்றுப்பத்தின் காலம்-பதிகங்கள் - சேரர் வீரம்-
கொடைச் சிறப்பு-ஆட்சிச் சிறப்பு-படையெடுப்பு
உழிஞைப் போர்-பாசறை-சமயச் செய்திகள்-நக
ரங்கள் - வருணனை -வாழ்த்து முறை-மேற்கோள்

-வட மொழியாளர் செல்வாக்கு.

17.  289

முன்னுரை-புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய
புலவர்கள்-பேரரசரும் சிற்றரசரும்-ஆட்சிச் சிறப்பு-
அரசர் ஒழுக்கம்-தமிழ்ப் புலவர்கள்-தமிழரசரும்
புலவரும்-சிற்றரசர்-தமிழ் வீரர்-சமயம்-தமிழர் வட

நாட்டு அறிவு-பண்பாடு-அந்தணர்-வடசொற்கள்.
18.  304

முன்னுரை-பத்துப் பாட்டின் காலம்-திருமுரு
காற்றுப் படையின் காலம்-பத்துப் பாட்டு என்னும்
பெயர்-திருமுருகாற்றுப்படை-பொருநராற்றுப்
படை-சிறுபாண் ஆற்றுப்ப்டை-பெரும்பாண்
ஆற்றுப்படை-முல்லைப்பாட்டு-மதுரைக்
காஞ்சி-நெடுநல்வாடை-குறிஞ்சிப் பாட்டு-பட்டினப்
பாலை-மலைபடுகடாம்-உயிர் காட்சிச் சாலை-
வாணிகம்-அந்தணர் செல்வாக்கு-புராண

கதைகள்-வடசொற்கள்.
19.  331

சிலப்பதிகார காலம்- சிலப்பதிகாரச் சிறப்பு-திரு
மணச் சடங்குகள்-நடனக் கலை-இசைக்கலை-
இந்திர விழா-தமிழர் வீரம்-அக்காலப் பெரு
வழிகள்-சிறப்புச் செய்திகள்-இளங்கோவடிகள்

சிறப்பு-வட மொழியின் செல்வாக்கு-வடசொற்கள்.
20.  358

ஆசிரியர்-நூலின் அமைப்பு-இந்திர விழா உடலின்
இழிவு-உடல் அடக்க முறைகள்-அரசியல் அறிவுரை
-பசிப்பிணி என்னும் பாவி-உண்டி கொடுத்தோர்-
சிறப்பு-தலயாத்திரை-கணிகையர் இயல்பு-
கணிகையர்க்குத் தண்டனை-அறம் செய்யக்
காரணம்-அரச நீதி-தீயவை பத்து-அரசர்க்கு அறி
வுரை-சமயக் கருத்துகள்-பாண்டுகம்பளம்-
விருப்பப்படி பிறப்பு-அறத்தின் சிறப்பு-வருணனை

-கதைகள்-பிறமொழிச் சொற்கள்-முடிவுரை.

  1. சங்க காலம் கி. பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளாகலாம். சங்ககாலம் கி. பி. முதல் நாள்கு நூற்றாண்டுகளாகலாம் என்பர் வரலாற்றாசிரியர் திரு. K. A. நீலகண்ட சாஸ்திரியார். - A History of South India, pg. 112-113
  2. ‘தொல்காப்பியம்’ என்னும் தலைப்புடைய பகுதியிற் காண்க.
  3. இந்நூலில் உள்ள ‘மதுரையில் தமிழ்ச் சங்கம்’ என்னும் பகுதியைக் காண்க.