தமிழ்மொழி இலக்கிய வரலாறு/சங்ககால இலக்கியம்

4. சங்ககால இலக்கியம்

சங்ககால இலக்கியம் தொல்காப்பியம், திருக்குறள், ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துப்பாட்டு சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன. எட்டுத்தொகையும். பத்துப் பாட்டும் ஏறத்தாழ 2280 செய்யுட்களை உடையவை. இப்பாடல்களை ஏறத்தாழ 500 புலவர்கள் பாடியுள்ளார்கள். அவர்களுள் பெண்பாற் புலவரும் இருந்தனர். 102 செய்யுட்களுக்கு உரிய ஆசிரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. இச்சங்ககால இலக்கியம் பற்றிய விவரங்கள் இந்நூலின் பல பகுதிகளில் உரைக்கப்படும். இவற்றுள் சில இன்பம் (இல்லற வாழ்க்கை) பற்றியவை; சில அறம், பொருள், வீடு பற்றியவை. இன்பம் பற்றியவை ‘அகம்’ என்றும், மற்றவை பற்றியவை ‘புறம்’ என்றும் பெயர் பெறும்.

வாழ்க்கையின் உயிர்நாடி

மனிதப் பேறுகள் ஆகிய அறம்—பொருள்—இன்பம்—வீடு என்னும் நான்கனுள் அகப்பொருள் என்னும் இன்பப் பகுதியே வாழ்க்கையின் உயிர்நாடியாக விளங்குவது. மனிதன் இன்பம் பற்றியே பொருளைத் தேடுகிறான்; பொருள் கொண்டு அறஞ் செய்கிறான். இம்முப்பேறுகளும் செம்மையுறச் செய்பவன் நான்காம் பேற்றை இயல்பாகவே, அடைவான். இதனாற்றான், பண்டைத் தமிழர் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையுமே வாழ்க்கையின் உயிர்நாடியாகக் கொண்டு வாழ்ந்துவந்தனர் என்பது சங்கப் பழம்பாடல்களால் அறியக்கிடைக்கிறது. தொல்காப்பியர்க்கு முற்பட்ட தொல்லாசிரியர்கள் வகுத்த அகம், புறம் என்னும் இரண்டு பகுதிகளையும் தழுவி, தம் காலத்திய மாறுதல்களையும் உள்ளடக்கித் தொல்காப்பியர் எழுதியுள்ள பொருள் இலக்கணம் ஒன்றே இன்றுள்ள சிறந்த அடிப்படை இலக்கண நூலாகும். அதனை இலக்கணமாகவும், அகநானுாறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலியவற்றையும், திருக்கோவையார் முதலியவற்றையும் இலக்கியமாகவும் கொண்டு ஆராயின், பழந்தமிழ்ப் பெருமக்கள் பகுத்தறிவோடு அமைத்த அகப்பொருளென்னும் அழகிய இன்பமாளிகையைக் கண்டு களிக்கலாகும். இவற்றுடன் சைவசமய ஆசிரியர்கள் பாடியருளிய திருமுறைகளையும் ஆழ்வார்கள் பாடியருளிய அருட்பாடல்களையும் பக்கத்தில் வைத்து உணர்ச்சியோடு படிக்கப் படிக்க, அப்பெரியோர்கள் அகப்பொருள் இலக்கணத்தைத் தமது பக்தி நெறிக்கே உயிர் நாடியாகக் கொண்டிருந்தனர் என்பதைத் தெள்ளிதில் உணரலாம்.

அகப்பொருள் இலக்கணம்

இவ்வகப்பொருள் இலக்கணத்தை ஆராய்வதால் பண்டைத் தமிழ் மக்கள் மணம் செய்து கொண்ட முறைமை, அவர்தம் காதல் வாழ்க்கை, தலைவன் தலைவியரது இன்பத்திற்கு உதவும் பாங்கன் பாங்கியர், களவுப் புணர்ச்சியில் தலைவியும் தோழியும் தலைவனைச் சோதிக்கும் முறைகள், தனக்கு உண்டாகும் பல இடுக்கண்களைப் பொருட்படுத்தாமல் தலைவியை அடைவதில் தலைவன் கொள்ளும் முயற்சி, களவு வெளிப்பட்டபின் இருதிறத்துப் பெற்றோரும் நடந்துகொள்ளும் முறைமை, பெற்றோர் உடன்படாத போது தோழி தலைவியைத் தலைவனோடு கூட்டியனுப்புதல், அங்ஙனம் அனுப்பும்போது அவள் தலைவனிடம் கூறும் வாழ்க்கைக்கு இன்றியமையாத அறிவுரை, காதலர்க்குள் ஏற்பட்ட களவைத் தோழி தாய்மார்க்குக் குறிப்பாக உணர்த்தும் திறமை முதலியவற்றை நாம் அறிந்து மகிழலாம்.

களவொழுக்கம்

இனி இவை பற்றிய செய்தியைக் காண்போம்: இளைஞன் (தலைவன்) ஒருவன் பூம்பொழில் ஒன்றில் தனித்துப் பூக்கொய்யும் நங்கை (தலைவி) ஒருத்தியைக் காண்கிறான். இருவரும் ஒருவரையொருவர் நோக்குகின்றனர். இருவர் விழிகளும் சந்திக்கின்றன, இருவரும் மாறி இதயம் புகுகின்றனர். அவ்வமயம் உள்ளத்துத் தோன்றும் இன்ப உணர்ச்சியே அவர்தம் பிற்காலக் காதல் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றது. பார்வை ஒன்ற, உள்ளம் ஒன்ற, உணர்ச்சி ஒன்ற அவ்விருவரும் ஓருயிர் ஈருடல் ஆகின்றனர். அவ்வின்பப் பூங்காவில் உள்ள நறுமணமுள்ள மலர்களிடையே நங்கை-நம்பி ஆகிய இருவர்தம் காதல் அரும்பும் போதாகி மலர்ந்து மணம் வீசுகின்றது. அம்மட்டோ? தேனும் பிலிற்றுகின்றது. காதல் மணமும் காதல் தேனும் அப்பூங்காவைப் பொன்னுலகமாக்குகின்றது. அன்று முதல் அவர்தம் காதல் வாழ்க்கை களவிலேயே நடந்து வருகின்றது.

தலைவன் சிறுவயதிலிருந்தே தலைவியோடு விளையாடி உற்ற வயது வந்த பின்பு அவள்மீது காதல் கொள்வதும் உண்டு.

நீடித்த களவு வாழ்க்கைக்குத் தோழியும் தோழனும் உதவி செய்யும் பாத்திரங்களாக அமைகின்றனர். தோழி தலைவனது காதலைப் பரிசோதிக்கும் திறம் மிக வியந்து பாராட்டத்தக்கது. தலைவியைத் தலைவன் பெறமுடியாது என்பதற்குப் பல நியாயங்களைத் தோழி கூறுகிறாள். அவளைத் தான் பெறாவிடில் மடல் ஏறுவதாகத் தலைவன் சூள் உரைக்கிறான். இங்ஙனம் பலவாறு முதற்கண் அவனது உள்ளத்தைச் சோதித்த தோழி அவனோடு தலைவியைக் கூட்டுகிறாள். அக்கூட்டம் நடைபெறும் பொழுதே மீண்டும் அவனைச் சோதிக்கக் கருதி, பகலில் வருகின்றவனை இரவில் வரும்படியும், இரவில் வருகின்றவனைப் பகலில் வருமாறும் மாறி மாறி வரச்செய்து, அவனுக்குத் துன்பத்தைத் தருகிறாள்; “தலைவி வீட்டில் அடைக்கப்பட்டாள்; ஆதலின் அவளைப் பெற நள்ளிரவில் வருக” என்பாள். தலைவனும் அவள் சொற்படி நடப்பான். தோழி மீண்டும் நீ வரும் பொழுது நாய் குரைக்கிறது; காவலர் திருடன் என்றெண்ணித் தேடுகின்றனர்: ஊர் விழித்துக் கொள்கிறது” என்றெல்லாம் கூறி, அவனைத் துன்புறுத்துகிறாள். தலைவன் இத் துணைச் சோதனைகட்கும் உட்பட்டு அவள் சொற்படி நடந்து, தான் தலைவி மீது கொண்ட களங்கமற்ற காதலின் உறுதியை வெளிப்படுத்துகிறான்.

களவு வாழ்க்கையில் தலைவி இல்செறிக்கப்பட்டபோது தலைவனை முன்புபோல அடிக்கடி சந்திக்க முடியாது. அவன் சிலநாட்கள் தொடர்ந்து வாராமலிருப்பான் அந்நாட்களில் தலைவி கவலையால் உடல் மெலிவாள். அவளது உடல் மெலிவைக் கண்டு செவிலித்தாயும் நற்றாயும் கவலை கொண்டு வேலனை அழைத்து யோசனை கேட்பர். அவன் வீட்டின் ஓரிடத்தில் முருகனை எழுந்தருளச் செய்து அக் கடவுள் முன் கழற்சிக்காய்களைப் போடுவான். அவன் தன் தலையில் ஆடை சூடியிருப்பான்; பல கணுக்களையுடைய கோலை ஏந்தியிருப்பான். அக்கணுக்களில் சிறு பைகளைக் கட்டியிருப்பான். அவன் அக்கோலால் கழற்சிக்காய்களை வாரியெடுக்கும் போது அவன் உள்ளத்திற் பட்டதைக் குறியாகக் கூறுவான். இது கழங்கு பார்த்தல் எனப்படும் (நற்றிணை. செ. 47).

சேரியின் முதுபெண்டாகிக் குறிசொல்பவளை வீட்டில் அழைத்து வந்து முற்றத்தில் பிடி நெல்லையிட்டு எதிரில் தலைமகளை நிறுத்துவர். உடனே தெய்வத்திற்கு வழிபாடு செய்யப்படும். குறிசொல்பவள் அப்பிடி நெல்லை நந்நான்காக எண்ணி எஞ்சியவை ஒன்று, இரண்டு, மூன்று அளவும் முருகனால் நேர்த்த குறை என்றும், நான்காகின் வேறொரு நோய் எனவும் கூறுவாள். இது ஒருவகைக் குறியாகும்; ‘கட்டுக் கேட்டல்’ எனப்படும் (நற். செ.288).

கழங்கு பார்த்தலிலும் கட்டுக் கேட்டலிலும் தலைவியின் நோய் ஆராயப்படும். இந்த நிகழ்ச்சிக்கு முன்பு அல்லது பின்பு-தோழி தலைவியின் காதலைத் தாய்மார்க்குக் குறிப்பாகப் புலப்படுத்துவாள். அங்ஙனம் புலப்படுத்துதல் தோழி. அறத்தொடு நிற்றல்’ எனப்படும்.

அறத்தொடு நிற்றல்

களவுப் புணர்ச்சியால் தலைவியின் வேறுபாடு கண்ட தாய்மார் தோழியை வினவுவர். தோழி களவை வெளிப்படக் கூறாமற் கூறும் திறன் அறிந்து வியக்கற்பாலது.

(1), “தலைவியும் நாங்களும் சுனையில் நீராடுகையில் தலைவி கால் தவறிச் சுனையில் வீழ்ந்துவிட்டாள், நாங்கள் அலறினோம். அவ்வமயம் கட்டழகுள்ள இளைஞன் ஒருவன் அங்குத் தோன்றினான்; சரேரென நீரிற் குதித்தான்; தலைவியை அணைத்துக்கொண்டு சுனையினின்றும் வெளிப் போந்தான். தன் உயிரைக் காத்த அவ்வண்ணல்பால் தலைவி உள்ளம் நெகிழ்ந்தாள்.

(2) “தலைவியும் யாங்களும் பூப்பறிக்குங்கால் தலைவி விரும்பியதொரு பூவை நாங்கள் பறிக்கக்கூட வில்லை. தலைவி வாட்டமுற்றாள். அப்பொழுது நம்பி ஒருவன் தோன்றி அம்மலரைப் பறித்துத் தலைவியின் கையிற் கொடுத்தான். தலைவி அவன்பால் நன்றியறிதல் உடையவள் ஆயினாள்.

(3) “பண்டொருநாள் யாங்கள் விளையாடிக்கொண் டிருந்தபோது காட்டானை ஒன்று மதங்கொண்டு எங்களை நோக்கி ஓடிவந்தது. தலைவி அலறினாள். அவளது மையுண்ட கண்களிலிருந்து நீர் அருவிபோலப் பெருகியது. அவ்வமயம் கையில் வேலேந்திய இளைஞனொருவன் அங்குத் தோன்றினான். அச்சத்தால் அலறிய தலைவியைத் தன் இடக்கையால் அணைத்து நின்று, வலக்கையில் தாங்கிய வேலால் யானையைக் குத்தினான்; யானை பிளிறிக் கொண்டு ஓடியது. தன் உயிரைக் காத்த அத்தலைவன் பால் தலைவியின் உள்ளம் ஈடுபட்டது. இங்ஙனம் கூறுதல் முறையே புனல்தரு புணர்ச்சி, பூத்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி எனப்படும். இங்ஙனம் தோழி கூறுதலை ‘அறத்தொடு நிற்றல்’ என்று இலக்கணம் கூறும்.

மடலேறுதல்: காதலியை அடிக்கடி சந்திக்கத் தோழி வழி செய்யாது விடினும், தலைவியின் பெற்றோர் மணம் மறுப்பினும், தலைவன் மடலேறத் துணிவான். அவன் பனை மடலால் குதிரையைப்போல ஒர் உருவத்தையமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டுவான்; தலைவியின் உருவத்தை ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்துவான்; யாவரும் அறிய மடலூர்ந்து வருவான்; ஊர் மக்கள் உண்மையறிந்து பலவாறு பேசுவர். தலைவியின் பெற்றோர் மணத்திற்கு இசைவர்.

சில சமயங்களில் மடலூர்ந்து செல்லும் தலைவன் ஊர் அவையோரிடம் தன் காதல் நிலையைக் கூறி அவளைச் சேர்ப்பிக்கும்படி வேண்டுவான். இச்செய்திகளைக் கூறும் குறுந்தொகைப் பாடல்கள் பல (14, 17, 32, 173, 182, 276). தலைவியின் வீட்டில் உணவு நேரத்தில் அயலார் வருவர். தலைவன் அவர்களோடு தலைவியின் வீட்டினுள் நுழைந்து விடுவான். (குறுந்தொகை, செ. 118).

உடன்போக்கு: தான் காதல் கொண்ட காதலனுக்குத் தன்னைத் தன் பெற்றோர் தாராரென்பதை அறிந்ததும்; தலைவி தலைவனுடன் ஓடுதல் உண்டு. இஃது ‘உடன் போக்கு’ எனப்படும். அவன் அவளைத் தன் வீடு கொண்டு சென்று மணம் முடித்துக் கொள்ளலும் உண்டு; போகும் பொழுதே தலைவியைச் சேர்ந்தவர் இடைமறித்துக் கொண்டு சென்று தலைவி வீட்டில் திருமணம் நடத்தலுமுண்டு. சரியாகக் கூறுமிடத்து, இவ்வுடன் போக்கிலிருந்தே கற்புத் தொடங்கிவிடுகிறது. இதன் பின்பு நிகழ்வனவெல்லாம் கற்பியற் செயல்கள் எனப்படும். கற்பு என்பது ஒருவன் ஒருத்தியோடு உள்ளம் ஒன்றவாழ்க்கை நடத்தல்.

கற்பு வாழ்க்கை

உடன்போக்கு நிகழ்ந்த பின்பு அதுகாறும் தலைவி தன் காலில் அணிந்திருந்த சிலம்பு தலைவன் வீட்டில் நீக்கப் பெறும். கற்பு வாழ்க்கைக்குரிய புதிய சிலம்பு அணியப் பெறும். இவற்றுள் முதல் நிகழ்ச்சி சிலம்பு கழி கோன்பு எனப்படும் (நற்றிணை, 279).

இரவலர்க்குக் கொடுப்பதற்கும் இன்பம் நுகர்வதற்கும் பொருள் இல்லாத ஏழைகட்கு உதவுவதற்குமே கற்பு வாழ்க்கை (இல்வாழ்க்கை) விரும்பப்படுகிறது (குறுந் தொகை, 63).

பிரிவுகள்: தலைவி மிகுந்த கவனத்துடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுவாள்; தலைவனைப் பலபடப் பாராட்டுவாள் (நற்றிணை 1, 237). அவ்வாறே தலைவன் தலைவியின் சமையலைப் பாராட்டுவான். (குறுந்தொகை 127) அவளுடைய பண்புகளைப் பாராட்டி மகிழ்வான். (குறுந் தொகை 101).

கற்பு வாழ்க்கையில் தலைவன் உயர் படிப்புக்காகத் தலைவியை விட்டுப் பிரிவான்; தன் அரசனிடமிருந்து வேற்றரசன்பால் தூது போவதற்காகப் பிரிவான்; தன் அரசனுக்குத் துணையாகப் போக நேரும்பொழுதும் பிரிவான்; பொருள் ஈட்டவும் பிரிவான்; பரத்தைக் காரணமாகவும் பிரிவான்; அங்ஙனம் பிரிய விரும்பும் தலைவன் தலைவியைப் பலவாறு பாராட்டுதல் வழக்கம் (நற் 166).

பொருள் ஈட்டப் பிரிந்த கணவனை நினைந்து மனைவி வருந்துவாள்; ஆயினும், “பொருள்வயிற் பிரிதல் ஆடவர்க்கு இயல்பு” (நற். 243) என்று தானே கூறி அமைவாள்; தம்பால் வந்து இரந்தவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவருக்கு மகிழ்ச்சியை ஊட்டுவது இல்வாழ்க்கையின் நோக்கங்களில் ஒன்றாகும் (நற். 84). பரத்தையிற் பிரிவு: தலைவன் பரத்தையர் இன்பத்தை நாடிப் பிரிவதைத் தோழியும் தலைவியும் கண்டிப்பர் (குறுந்தொகை 196, நற்றிணை 170), தலைவன் பாணன் முதலியோரைத் தூது விடுத்துத் தலைவியை அமைதிப்படுத்துவான் (குறுந்தொகை 106). சில சமயங்களில் தலைவி வாயில் மறுப்பாள். வாயில் பெறாத தலைமகன் தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு கொஞ்சிக் குலாவி வீட்டினுள் நுழைந்து படுக்கையில் படுப்பான். தலைவி அவனது குறையை மறந்து ஊடல் தணிவாள் (குறுந்தொகை 359).

தலைவன் இங்ஙனம் தலைவியின் மனம் வருந்தும்படி பல தீமைகளைச் செய்யினும், அவள் பொறுத்து அவனை ஏற்றுக் கொள்வாள். “உழவர் தம் வயலில் முளைத்த நெய்தலைப் பிடுங்கி எறிவர். ஆயினும் அது மீட்டும் அவரது வயலிலேயே பூக்கும். அதுபோல எனக்குத் தீமை செய்த நின்னிடம் அன்புடையேன் ஆயினேன்”. என்று ஒரு தலைவி தலைவனை நோக்கிக் கூறினாள் (குறுந்தொகை 309).

தலைவன் பரத்தையைப் பிரிந்து மீண்டும் வந்த பின்பு தலைவிக்கு முன்பு இருந்த ஆற்றாமை நீங்கும். அவள் அவனோடு அளவளாவி

“இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை;
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே”

(குறுந்தொகை-49)

என்று தன் மனமார்ந்த விருப்பத்தை வெளியிடுவாள். இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் அவனே கணவனாதல் வேண்டும் என்ற தலைவியின் விருப்பம் அவர்தம் காதல் பிணிப்பை அன்றோ எடுத்துக்காட்டுகின்றது!

தலைவன் சில சமயங்களில் பரத்தையரோடு ஆற்றுநீரிலும், மணற்குன்றுகள் மீதும், பூம்பொழிலிலும் விளையாடுவான். அதுபற்றித் தலைவி கேட்கும்போது தலைவன் மலைமீதும் பொழில்மீதும் மலைச்சாரல்மீதும் ஆணையிட்டுத் தான் அவ்வாறு விளையாடவில்லை. என்று கூறுவாள். ஒழுக்கம் கெட்ட தலைவன் இவ்வாறு பொய்யாக ஆணை கூறுவது வழக்கம். இதனைப் பரிபாடலில் காணலாம்.

ஒரு தலைவன் பரத்தை வீட்டில் இருந்தபொழுது அவன் தலைவி பிள்ளை பெற்றாள்; வெண் கடுகை அப்பி எண்ணெய் தேய்த்து நீராடிக் குளித்து நெய்பூசி உறங்கினாள். தனக்கு மைந்தன் பிறந்தான் என்பதைக் கேள்வியுற்று மகிழ்ந்த தலைவன் இடையாமத்து இருளில் கள்வனைப் போல வீடுவந்து சேர்ந்தான் (நற்றிணை-40).

தொல்காப்பியர்க்கு முற்பட்ட தமிழரும், தொல்காப்பியர்க்குப் பிற்பட வாழ்ந்த சங்ககாலத் தமிழரும் காதல், வீரம் ஆகிய இரண்டையும் தம் இரு கண்களாகப் போற்றினர் என்பது தொல்காப்பியப் பொருளதிகாரத்தாலும் எட்டுத்தொகை நூல்களாலும் அறியக்கிடக்கின்றது. ஆதலின் அப்பெருமக்கள் இவ்விரண்டிற்கும் இலக்கணங்களை வகுத்தனர். அவை முறையே அகப்பொருள் இலக்கணம், புறப்பொருள் இலக்கணம் என்று பெயர் பெற்றன. இங்ஙனம் அகப்பொருளுக்கும் புறப்பொருளுக்கும் வேறு எம்மொழியிலும் இலக்கணம் வகுக்கப்படவில்லை என்பது இங்கு அறியத்தகும். தொல்காப்பியர் களவியல், கற்பியல், பொருளியல் என்னும் மூன்று இயல்களில் பல அசுப்பொருள் துறைகளை விளக்கியுள்ளார். அத்துறைகளுக்குரிய செய்திகளை ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களிலும் காணலாம்.

புறப்பொருள் இலக்கணம்

தம்மாட்சி நிலவியுள்ள நாட்டிலே தான் மனிதனது: காதல் வாழ்க்கை சிறப்புறும். ஒரு நாடு தம்மாட்சி பெற்று விளங்கவேண்டுமாயின், அந்நாட்டு மக்களுள் பலர். மறவராயிருத்தல் வேண்டும்: அங்ஙனம் இருத்தற்கு அவர்க்குப் போர்ப் பயிற்சி இன்றியமையாதது. ஆதலின், பண்டைத் தமிழர் அதனை ஒரு கலையாகவே வளர்த்துவந்தனர் என்பது தொல்காப்பியப் புறத்திணை இயலால் நன்கு தெளிவாகும்.

போர் முறைகள்: பண்டைத் தமிழர் போரில் அறநெறியைக் கையாண்டனர். ஒரு நாட்டின் மீது படையெடுக்க விரும்பிய அரசன் முதலில் பகைவனது நாட்டிலுள்ள ஆனிரைகளைக் கவர்வான். இம்முயற்சி வெட்சித்திணை எனப்படும் (திணை-ஒழுக்கம்). இம்முயற்சியின் போது பகை வீரர் வெட்சி வீரரின் முயற்சியைத் தடுப்பர். இங்ஙனம் தடுக்கும் முயற்சி கரந்தைத் திணை எனப்படும். வெட்சித் திணையார் வெட்சி மலர்களைச் சூடுவர்; கரந்தைத் திணையார் கரந்தை மலர்களைச் சூடுவர்.

நாட்டின்மீது நடைபெறும் படையெடுப்பு வஞ்சித்திணை எனப்படும். அப்படையெடுப்பை எதிர்த்து நிற்றல் காஞ்சித்திணை எனப்படும். கோட்டையை முற்றுகையிடல் உழிஞைத்திணை எனப்படும். கோட்டையுள் இருந்து எதிர்த்தல் நொச்சித் திணை எனப்படும். கோட்டைக்கப்பால் வெட்ட வெளியில் நடைபெறும் கடும்போர் தும்பைத் திணை எனப்படும். போரில் வெற்றி பெறுதல் வாகைத் திணை எனப்படும். ஒவ்வொரு திணைச் செயலிலும் ஈடுபட்ட வீரர்கள் அத்திணைக்குரிய மலர்களை அணிந்து கொள்ளுதல் மரபு.

மேலே கூறப்பெற்ற ஒவ்வொரு திணைப்போரும் பல படிகளையுடையது. அப்படிகள் துறைகள் எனப்படும். இப்போர்களைப் பற்றிய விளக்கம் தொல்காப்பியம்-புறத்திணை இயலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. இக்கலை வளர்ச்சி தொல்காப்பியர் காலத்தில் திடீரென ஏற்பட்டிருத்தல் இயலாது. தொல்காப்பியர்க்கு முன்னரே-பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வாழையடி வாழையாக வளர்ந்து வந்த போர்க்கலையின் விரிவே தொல்காப்பியத்தில் காணப்படுகின்றது என்று கொள்ளுதலே அறிவுடைமையாகும். பிற திணைகள்: இங்ஙனம் காதலையும் போரையும் இரு கண்களாகக் கருதின சங்க காலத் தமிழர், யாக்கை நிலையாமையையும் செல்வம் நிலையாமையையும் நன்கு அறிந்திருந்தனர். சான்றோர் அவ்வப்போது அரசனுக்கு நிலையாமையை விளக்கிக் கூறி வீடு பேற்றுக்குரிய அறவழியில் செலுத்திவந்தனர். இங்ஙனம் நிலையாமையைப் புலப்படுத்துவது காஞ்சித் திணை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இத்திணையில் இருபது துறைகள் அமைந்துள்ளன.

தலைவன் புகழை விரும்புவதும், புலவன் பரிசில், வீடு பேறு முதலியவற்றை விரும்புவதும் உலக இயற்கை . இவ்வாறு அவரவர் விரும்பும் செய்திகள் பாடாண் திணை எனப்படும். இத்திணையிலும் பல துறைகள் உண்டு. தலைவனுக்கு அறிவுறுத்தல், தலைவனை வாழ்த்துதல், ஒருவனை ஒருவன் ஆற்றுப்படுத்தல், மன்னன் தன் புகழைக்கருதி மாற்றான் நாட்டை அழித்தல் முதலிய செயல்கள் எல்லாம் இத்திணையைச் சேர்ந்தவையாகும். தொல்காப்பியர் இத்திணை பற்றிய செய்திகளைப் பல நூற்பாக்களில் விளக்கியுள்ளார். பரிபாடலில் புறத்திணை பற்றிய பாடல்களும், பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ள பாடல்களும், பத்துப்பாட்டில் பலவும் புறப்பொருள் இலக்கணத்திற்குரிய செய்யுட்களாகும். தொல்காப்பியத்தையும் தொகை நூல்களையும் படித்து இவ்விருவகை இலக்கணங்களின் சிறப்பையும் உள்ளவாறு அறிதலே ஏற்புடையது.