தமிழ்மொழி இலக்கிய வரலாறு/சிலப்பதிகாரம்



19. சிலப்பதிகாரம்

(1) சிலப்பதிகார காலம்

சோழன் கரிகாலன்

கோவலன்-கண்ணகி திருமணத்தின் இறுதியில் 'இமயத்தில் புலிப்பொறி பொறித்த சோழன் தன் திகிரியை உருட்டுவோனாகுக ! , என்று சொல்லித் திருமணத்திற்கு வந்திருந்தோர் வாழ்த்தினர் என்னும் பகுதியில், அடியார்க்கு நல்லார், அச்சோழனைக் கரிகாலன் என்று குறித்துள்ளார். கரிகாலனது வடநாட்டு வெற்றி, இந்திர விழவூர் எடுத்த காதையில் (வரி 87-104) விரிவாய்க் குறிக்கப்பட்டுள்ளது. அடுத்துக் கானல் வரியில், சோழன் கங்கை வரையில் சென்று மீண்டமை குறிப்பாய் உணர்த்தப்பட்டுள்ளது: கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி' -இங்ஙனம் கங்கை வரையில் சென்று மீண்ட சங்க காலச் சோழன் கரிகாலன் ஒருவனே ஆவான். இவை அனைத்தையும் நோக்க, கோவலன்-கண்ணகி திருமணம் நடைபெற்ற போது கரிகாலனே சோழப் பேரரசனாய் இருந்தான் என்பதுதெளிவாகிறது.

சோழவேந்தன் ஒருவன், முதல் கயவாகு வேந்தனுக்கு முற்பட இருந்த வங்க நாஸிகதிஸ்ஸன் (கி. பி. 111-114) காலத்தில் இலங்கையின்மீது படையெடுத்துப் பன்னிராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோழ நாட்டுக்குக் கொண்டு சென்றான், அவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரையிடுவித்தான் என்று இலங்கை வரலாறு கூறுகின்றது.[1] இங்ங்னம் செய்தவன் கரிகாலனே என்பது

 

'சங்க காலம்' என்னும் பகுதியில் முன்பே கூறப்பட்ட தன்றோ? எனவே, சிலப்பதிகார வரலாற்றுத்தொடக்கத்தில் கரிகாலன் வாழ்ந்திருந்தான் என்று கொள்வது பொருத்தமாகும்.

இலங்கைக் கயவாகு சேரன் செங்குட்டுவன் பத்தினிக்குக் கோவில் கட்டிவழிபட்டபோது வந்திருந்த அரசருள். கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்' ஒருவன் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது (காதை 30,வரி 160). இவன் முதலாம் கஜபாகு என்று இலங்கை வரலாறு கூறும். இவன் ஆட்சிக்காலம் கி. பி. 114-186. இக்கயவாகு இலங்கையில் பத்தினி வணக்கத்தை ஏற்படுத்தினான் என்று இலங்கைக் கதைகளும் நாட்டுப் பாடல்களும் நவில்கின்றன. இன்றும் பத்தினி வணக்கம் இலங்கை மக்கள் சமயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது.[2]

'கயவாகு வேந்தன் சோழநாட்டின்மீது படையெடுத்துச் சென்றபோது யாழ்ப்பாண வழியே சென்றனன்; போரின்பின் திரும்பும்போது போர் வீரரைச் சிறைப்பிடித்து வந்தான். அவர்களுடன் பத்தினிக் கடவுளின் காற்சிலம்பும் வேறு சில அணிகளும் கொண்டுவந்தான் என்று இராசவழி’ என்னும் இலங்கை வரலாற்றுநூல் கூறுகிறது. கயவாகு வேந்தனே இலங்கையில் பத்தினி வணக்கத்தைத் தோற்றுவித்தவன் என்று கூறும் சிலப்பதிகாரச் செய்தி இதனால் உறுதி பெறல் காணத்தகும். இலங்கையில் உள்ள கண்ணகி

கண்ணகியம்மன் கோவில்களில் சிலம்பைத் தவிர வேறு உருவங்கள் வழிபாட்டிற்காக அமையவில்லை.

“தமிழகத்தில் கண்ணகிக்குக் கோயில் எடுப்பித்த வைபவத்தில் பிரசன்னமாயிருந்து திரும்பியதும் முதன் முதலாக அங்கனாக் கடவையில் கண்ணகிக்கு ஆலயமும் விழாவும் எடுப்பித்துத் தனது உருவச்சிலையை ஆலய முற்றத்தில் நிறுவினன் என்று “புராதன யாழ்ப்பாணம்’” என்னும் நூலில் முதலியார் சி. இராசநாயகம் அவர்கள் கூறிப் போந்தனர். ” “இங்குக் குறிப்பிட்ட கயவாகுவின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் சர் போல் ஈபீறிஸ் அவர்கள் நடத்திய புதை பொருள் ஆராய்ச்சியில் தலை வேறாகவும் உடல் வேறாகவும் உடைந்து காணப்பட்டமையின், யாழ்ப்பாணம் அரும் பொருட்சாலைக்கு அனுப்பப்பட்டது. கயவாகு மன்னன் காடெங்கும் பத்தினிக்குக் கோயிலும் விழவுஞ் செய்தல் வேண்டுமெனக் கட்டளையிட்டதையிட்டு, யாழ்ப்பாணத்திலும் ஆலயங்கள் எழுந்தனவென்றும் வேலம்பரவையிலுள்ள கண்ணகிக் கோயில் அக் காலத்தில் முதலில் அமைக்கப்பட்டதென்றும்; அதற்குப் பின்பு கட்டப்பட்டவைகளே களையோடை, அங்கனான் கடவு முதலிய இடங்களில் உள்ளவை என்றும் யாழ்ப்பான சரித்திரம்’ என்னும் நூலில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கூறியுள்ளார்.”[3]

நூற்றுவர் கன்னர்

செங்குட்டுவன் வடநாடு சென்ற பொழுது நூற்றுவர் கன்னர் என்னும் பெயர் கொண்ட மன்னன், கங்கையாற்றைக் கடக்க உதவி புரிந்தனன் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. சாதகர்ணி என்னும் வடமொழிப் பெயரின் மொழி பெயர்ப்பே நூற்றுவர் கன்னர் என்பது. சாதகர்ணிகள் என்று அழைக்கப்பட்டவர், 'சாதவாகனர் என்ற ஆந்திரப் பேரரசரேயாவர். அவர்கள் ஏறத்தாழக் கி. மு. 235 முதல் கி. பி. 220 வரையில் நடு இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவராவர்.[4] அவருட் சிலர் காலங்களில் ஆந்திரர் ஆட்சி கங்கை வரையிற் பரவியிருந்தது. அச் சிலருள் ஒருவனான கெளதமீபுத்திர சாதகர்ணி என்ற ஆந்திரப் பேரரசன் பெரும் புகழுடன் வாழ்ந்திருந்த காலம்தான் (கி. பி. 106130) கயவாகுவின் காலத்தோடு (கி. பி. 114-186) பொருந்துகிறது. அக்காலத்தில் கங்கைக்கு வடபால் சிறு சிறு நாடுகள் அரசால் ஆளப்பட்டுவந்தன என்பதும் வரலாறு கண்ட உண்மை.

ஒரே காலத்தவர்

சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் செங்குட்டுவனுக்குத் தம்பியாவார் என்று சிலப்பதிகாரம் வரந்தரு காதை (வரி 171-183) தெளிவாகத் தெரிவிக்கின்றது. செங்குட்டுவன், இளங்கோ ஆகிய இருவர் காலத்திலும் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் வாழ்ந்தனர் என்று சிலப் பதிகாரமே (காட்சிக் காதை) செப்புகிறது. மேலும்,

“உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டணன்”

என்று சிலப்பதிகாரப் பதிகமும்,

“இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப

வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்

மாவண் தமிழ்த்திற மணிமே கலைதுறவு

ஆறைம்பாட்டினுள் அறியவைத் தனனென்'

என்று மணிமேகலையின் பதிகமும் அவ்விருவரும் ஒரே காலத்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, கயவாகுவின் காலம் என்று துணியப்பட்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியே சிலப்பதிகாரம் செய்யப்பட்ட காலம் என்று கொள்வது பொருத்தமாகும்.

பேராசிரியர் கூறும்தடைகள்

சிலப்பதிகாரம் கி. பி. 500க்குப் பிற்பட்டதாகும் என்பதற்குப் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் கீழ்வரும் காரணங்களைக் கூறியுள்ளனர் :

1. இளங்கோவடிகள் செங்குட்டுவன் தம்பி என்பது கூறப்படுகிறது. அதற்கு மணிமேகலையிலோ பதிற்றுப்பத்திலோ சான்றில்லை.

2. பத்தினி விழாவின்போது இலங்கைக் கயவாகு வேந்தன் சேரநாடு வந்திருந்தான் என்பதற்குச்சிலப்பதிகாரம் தவிர மணிமேகலை முதலிய வேறு நூல்களில் சான்றில்லை; இலங்கை வரலாறு கூறும் மகாவம்சத்திலும் கூறப்படவில்லை; கி. பி. 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற இராசவழி என்னும் நூலில்தான் கூறப்பட்டுள்ளது.

3. இளங்கோவடிகள் செங்குட்டுவன் தம்பியாயிருப்பின் அவர் காலம் சங்க காலமாகும். அவர் பாடிய பாடல் ஒன்றேனும் தொகை நூல்களில் இல்லை. அவர் மணிமேகலை பாடிய சாத்தனார் தவிர வேறு சங்கப் புலவர்களை அறிந்தவர் என்பதற்குச் சான்றில்லை.

4. மணிமேகலை ஆசிரியரான சாத்தனார் சீத்தலைச் சாத்தனாரல்லர். அவர் அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்.  இளஞ்செழியன் காலத்தவர். இந் நெடுஞ்செழியன்மீது ஒரு சங்கப்புலவரும் பாடவில்லை. எனவே, இந்நெடுஞ்செழியனை உண்மை அரசன் என்று கொள்வதற்கில்லை.

5. பத்தினி வணக்கம் சிலப்பதிகாரத்தில் கூறப்புட் டுள்ளதே தவிரப் பிற தொகை நூல்களில் கூறப்படவில்லை.

6. கண்ணகியால் குறிக்கப்பட்ட கற்புடை மகளிருள் ஒருத்தி கரிகாலன் மகள் ஆதிமந்தி என்பதற்குச் சான்றில்லை. ஏனைய பத்தினிப் பெண்களும் பிற தொகை நூல்களில் குறிக்கப்படவில்லை.

7. சிலப்பதிகாரத்தில் வேங்கடமலையில் திருமால் நின்ற கோலத்தில் இருப்பதாகச் சிலப்பதிகாரம் செப்புகிறது. ஆயின் தொகை நூல்களில் வேங்கடமலை சமயத் துறையில் சிறந்ததாகக் கூறப்படவில்லை. சிலப்பதிகாரத்திலும் மணி மேகலையிலும் கூறப்பட்டுள்ள சமய வளர்ச்சியைத் தொகை நூல்களில் காணுமாறு இல்லை. ஐந்தெழுத்தும் எட்டெழுத்தும் தொகை நூல்களில் கூறப்படவில்லை.

8. காவிரி என்னும் பெயரே காவேரி என்று சிலப்பதிகாரத்தில் மாறி வழங்கப்பட்டமையே சிலப்பதிகாரம் பிற்பட்டது என்பதை உணர்த்துகிறது. காவிரி பற்றிய புராணகதையும் மணிமேகலையில் காணப்படுகிறது.

9. அகநானூற்றில் காணப்படும் திருமண முறைக்கும் கோவலன் கண்ணகி திருமண முறைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

10. தொகை நூல்களில் கூத்தர், விறலியர் நடனங்களே கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வந்துள்ள மாதவியின் நடன அரங்கேற்றம் பரத நாட்டியத்தைப் பின் பற்றியது.

11. வரிப்பாட்டு முதலிய பாடல்கள், சிலப்பதிகாரம் தொகை நூல்களுக்குப் பிற்பட்ட வளர்ச்சியை உணர்த்து வனவாகும். 12. பார்ப்பனி கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை பஞ்சதந்திரத்தைச் சேர்ந்தது. அதனைக் கூறும் சிலப்பதிகாரம் மிகவும் பிற்பட்டதாகும். [5]

தடைக்குரிய விடைகள்

இனி, இத் தடைகள் பொருந்துவனவா என்பதை ஒவ்வொன்றாக எடுத்து இங்கு ஆராய்வோம்.

1. இளங்கோவடிகள் செங்குட்டுவனுக்கு இளவல் என்பதை, இளங்கோ துறவு பூண்ட வரலாற்றை எடுத்துக் கூறித் தெய்வம் விளக்கியதாக இளங்கோவடிகளே மிகத் தெளிவாக வரந்தரு காதையில் பன்னிரண்டு வரிகளில் (171-183) கூறியுள்ளார். இந்நிலையில் மணிமேகலையின் சான்றோ, பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் சான்றோ இதற்குத் தேவையில்லையே! மணிமேகலையிலோ ஐந்தாம் பத்திலோ இந்த உறவு முறையைக் கூறத்தக்க வாய்ப்பும் இல்லையே!


2.செங்குட்டுவன் இயற்றிய பத்தினி விழாவை முதன் முதல் எடுத்துக் கூறிய இளங்கோவடிகள் அதற்கு வந்திருந்த மாளுவ வேந்தரையும் கயவாகுவையும் குறிப்பிட்டார். இம் மாதிரியே மணிமேகலையிலும் குறிக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தல் உண்டா? அங்ஙனம் குறிக்கப்படாமையால் இஃது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று என்று கூறுவது பொருத்தமாகுமா? இலங்கை வரலாற்று நூல்களுள் காலத்தால் முற்பட்ட மகாவம்சத்தில் கயவாகு பத்தினி விழாவிற்கு வந்திருந்தது குறிக்கப்படவில்லை என்பது உண்மையே. ஆயின், பின் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட இராசவழியில் அச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கயவாகு வந்தமை சிலப்பதிகாரத்தில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது .. கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு

.  

நாள் பலிப்பீடிகைக் கோட்டம் முந்து உறுத்து, 'ஆங்கு அரந்தை கெடுத்து வரம் தரும் இவள்’ என ஆடித்திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மலை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று ’’

என்று இளங்கோ அடிகள் உரைபெறு கட்டுரையில் உரைத்துள்ளார்.

கயவாகுவின் காலத்தில் அநுராதபுரம் தலைநகராய் இருந்தது. அவன் அதனில் ஆடிமாதத்தில் (சூலைஆகஸ்டு) பத்தினி விழாக் கொண்டாடியிருத்தல் வேண்டும்.[6]

இலங்கையில் கயவாகு வேந்தன் கட்டிய கண்ணகியின் கோவிலிலிருந்து அவனது உடைந்த சிலை கண்டெடுக்கப்பட்டது. கண்ணகியின் சிலை இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டு இங்கிலாந்து பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கண்ணகிக்குக் கோவிலோ விழாக்களோ இன்று இல்லை. ஆயின், இலங்கைத் தமிழரும் சிங்களவரும் ஆண்டுதோறும் பத்தினிக்கு இன்றும் விழா எடுக்கின்றனர். இச்செய்திகள் அனைத்தும் கயவாகுவுக்கும் பத்தினி வணக்கத்திற்குமுள்ள தொடர்பை ஐயமற விளக்குகின்றன அல்லவா??[7]

3. இளங்கோவின் தனிப்பாடல் எதுவும் தொகை நூல்களில் இல்லை என்பதனாலேயே அவர் காலத்தால் பிற்பட்டவராவரோ? முல்லைப்பாட்டைப் பாடிய காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் எட்டுத் தொகை நூற்களில் ஒரு பாடலையும் பாடினார் என்பதற்குச் சான்றில்லை. இது கொண்டு இவர்காலம் பிற்பட்டதென்று கூறலாமா! அடிகள் சேரநாட்டுச் சமணத் துறவியார். அவருடன் நெருங்கிப் பழகியவர் சாத்தனார் ஒருவரே போலும்![8] அதனாற்றான் சாத்தனார் முன்னிலையில் சிலப்பதிகாரம் அரங்கேற்றப் பெற்றது; அடிகள் முன்னிலையில் மணிமேகலை அரங்கேற்றப் பெற்றது.

4. மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் நெடுஞ் செழியன் காலத்தவர் என்பது உண்மையே. அவர் பாடிய பாடல் எதுவும் தொகை நூல்களில் இல்லை. எனினும் அது கொண்டு அவர்காலத்தால் பிற்பட்டவர் என்பது எங்ங்னம் பொருந்தும்?

சாத்தனார் காலத்தவன் நெடுஞ்செழியன் என்ற பாண்டியன். அவன் பேராசிரியர் குறிப்பிட்டபடி அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் அல்லன், வடஆரியர் படை கடந்த நெடுஞ்செழியன் என்றும் பெயர் பெற்றவன்' என்று இளங்கோவடிகளே மதுரைக் காண்டத்தின் இறுதிக் கட்டுரையில் தெளிவாய்க் கூறியுள்ளார். இந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் “உற்றுழி உதவியும்” என்று தொடங்கும் கல்வியின் மேம்பாடு பற்றிய செய்யுளொன்றைப் பாடியுள்ளான். அப்பாடல் புறநானூற்றில் (183) இடம் பெற்றுள்ளது. உண்மை இங்ங்னம் இருப்ப, இவன் கற்பனை அரசன் என்று பேராசிரியர் அவர்கள் எங்ங்னம் கூறத்துணிந்தார்களோ, தெரியவில்லை.

5. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் பத்தினி வணக்கம் வேறு தொகை நூல்களில் கூறப்படவில்லை என்பது உண்மையே. சங்கநூற் பாடல்கள் முழுமையும் நமக்குக் கிடைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அழிந்துபட்ட பாடல்களுள் பத்தினி வணக்கம் பற்றிய பாடல்கள் இடம் பெற்றிருக்கலாம். இன்றுள்ள தொகை நூல்களில் பத்தினி வணக்கம் இல்லை என்பது கொண்டு சிலப்பதிகார காலம் பிற்பட்டது என்று கூறுதல் எங்ங்ணம் பொருந்தும்? சிலப்பதிகாரத்திற்குப் பின்பு செய்யப்பட்ட நூல்களிலும் இப்பத்தினி வணக்கம் குறிக்கப்பட வில்லையே! அதனால் சிலப்பதிகாரம் தமிழ் நூல்கள் அனைத்திற்கும் காலத்தாற் பிற்பட்டது என்று கூறுதல் பொருந்துமா?

6 கண்ணகியால் குறிக்கப்பட்ட பத்தினிப் பெண்கள் பிற தொகை நூல்களில் இடம் பெறவில்லை என்பது உண்மையே. இன்றும் நம்நாட்டில் அறிவிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்தவர் பலர் உளர். எவரேனும் ஒருவர் அவர்களைப் பற்றிக் கூறினால் அல்லது எழுதினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் பிறர் அறிய வாய்ப்பு உண்டாகும். அவர்களை நேரில் அறியாதவர்கள் அவர்களைப் பற்றிப் பேசவோ, பாடவோ வாய்ப்பு உண்டாவதில்லை. இங்ங்னமே கண்ணகியால் அறியப்பட்ட பத்தினிப் பெண்டிர் பிறர்க்குத் தெரியாதிருக்கலாம். அவள் குறித்த அறுவருள் ஆதிமந்தி பற்றிய செய்தி பரணராலும் வெள்ளி வீதியாராலும் (அகம் 45) பல பாடல்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆதிமந்தி பரணர் ஒருவராலேயே பல செய்யுட்களில் பேசப்பட்டுள்ளாள் (அகம்-76, 222, 236, 376, 396). கரிகாலன் முன்னிலையில் கழாஅர்த்துறையில் நடனமாடியபோது அவள் கணவன் ஆற்று நீாரல் இழுத்துச் செல்லப் பெற்றான் என்று பரணர் குறித்துள்ளார். அந்த ஆதிமந்தி வரலாற்றையே அவளது பெயர் கூறாமல் செயலை மட்டும் கூறி, அவள் கரிகாலன் மகள் என்று இளங்கோவடிகள் வஞ்சினமாலையில் (வரி 11-15) கூறியுள்ளார்.

புலவர் சிலர் கூறாது விட்ட உறவுமுறையை அவர் காலத்துப் புலவரோ பிற்காலப் புலவரோ குறிப்பது தவறன்றே! மேலும் கரிகாலனை அடுத்து வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். அவர் ‘சேர அரசமரபினர். அவரே, சேர அரச மகன் (வஞ்சிக்கோன்) ஒருவன் மனைவியே கரி காலன் மகள்’ என்று கூறித் தொகைநூற் பாடல்களிற் கூறப்பட்டுள்ள ஆதிமந்தியின் கற்பின் திறத்தைக் கூறியுள்ளார். எனவே, அவரால் குறிக்கப்பட்டது ஆதிமந்தி வரலாறு என்று கோடலே பொருத்தமுடையது.

7. சங்க காலத்தில் வேங்கடம் மாமூலனாரால் “விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம் 61) என்று கூறப்பட்டுள்ளது. எனவே, வேங்கடமலையில் விழாக்கள் நடை பெற்றுவந்தன என்பது இதனால் தெரிகின்றதன்றோ! மலை மீது விழாக்கள் நடைபெற்றன என்பது கொண்டு, அங்குக் கோவில் இருந்தது என்பதை எளிதில் அறியலாமன்றோ! உண்மை இங்ங்னம் இருப்ப, சங்ககால வேங்கடம் சமயச் சிறப்புப் பெற்றிருக்கவில்லை என்று பிள்ளையவர்கள் கூறியிருப்பது உண்மைக்கு மாறுபட்டதாகும் மாமூலனார் அகப் பொருள் பற்றிய பாடலில் ஒர் எடுத்துக்காட்டுக்காக இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் வேங்கடத்தில் எத தகைய கோவில் இருந்தது என்று அவர் கூறவில்லை. அதனால் வேங்கடத்தில் கோவில் இல்லை என்று முடிவு கட்டுதல் தவறு. கோவிலைப்பற்றிப் பேசவேண்டிய இடம் அதுவன்று; ஆதலின் அவர் பேசவில்லை. கோவிலைப் பற்றிக் கூறவேண்டிய இடத்தில் மாங்காட்டு மறையவன், தன் கண்ணாற் கண்டு வழிப்பட்ட வேங்கடத்தானது நின்ற கோலத்தைத் தான் கண்டவாறு கூறியதாக அடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பித்து மகிழ்ந்தனர் என்று கோடலே ஏற்புடையது.

காவிரிப்பூம்பட்டினத்தில் சிறப்பாக இந்திரவிழா நடை பெற்றதைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரிவாகக் கூறியுள்ளன. இதே இந்திரவிழவு சிற்றுளிலும் அக்காலத்தில் நடைபெற்றுள்ளது என்பதை ஐங்குறுநூற்றுச் செய்யுள் ஒன்று (62) குறித்துள்ளது. ஆயின் அதுபற்றிய பிற விவரங்கள் அச்செய்யுளில் இல்லை. ஏன்? அப்பாடல், குறிப் பிட்ட ஓர் அகப்பொருள் கருத்தைக் கூறவந்ததே தவிர இந்திர விழாவினை விளக்கப் பாடப்பட்டதன்று. இவ்வாறே ஒவ்வொரு தொகை நூற்பாடலும் குறிப்பிடப்பட்ட அகப் பொருள் அல்லது புறப்பொருள் கருத்துக்காகப் பாடப்பட்டது. சிலப்பதிகாரம் கோவலன்-கண்ணகி வரலாறு கூறும் பெரிய காப்பியம். ஆதலின் தலைவன்-தலைவியர்

காலச் சமயச் செய்திகளையும் பிறவற்றையும் விரிவாக எடுத்துக் கூற ஆசிரியருக்கு வாய்ப்பு மிகுதியாகக் கிடைத்துள்ளது. மணிமேகலை பெளத்த சமயத்தைப் பற்றிய காவியம் ஆதலின் அதன்கண் பெளத்த சமயச் செய்திகள் நிரம்பப் பேசப்பட்டுள்ளன. காவியப் பாத்திரங்கட்கேற்பநிகழ்ச்சிகட்கும் ஏற்பச் சமயச் செய்திகளோ பிறவோ காவியத்தில் விரித்துப் பேசப்படல் இயல்பு. இந்த வேறுபாட்டை உள்ளங்கொள்ளுதல் வேண்டும். இதனாற்றான் தொகைநூற் பாடல்களில் சமயச் செய்திகள் விரிவாகப் பேசப்படவில்லை; காப்பியத்தில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

8. சிலப்பதிகாரத்தில் காவிரி-காவேரி என்று சொல்லப்பட்டது. இதனாலும் சிலப்பதிகாரகாலம் பிற்பட்டது என்பது தெளிவு, என்று பிள்ளையவர்கள் கூறியுள்ளனர். சிலப்பதிகாரம் கானல்வரியில், பாட்டைப் பாடுவோர் "காவேரி என்று காவிரியை அழைத்ததாக இளங்கோவடிகள் குறித்துள்ளாரே தவிர, பிற எல்லா இடங்களிலும் ‘காவிரி’ என்றே குறித்துள்ளமை நோக்கற்பாலது. சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம். ஆதலின் அவரவர் கையாளுகிற சொற்களை அவரவர் பேச்சில் அல்லது பாடலில் வைத்து வழங்குதல் உண்மைப் புலவர் இயல்பாகும். இளங்கோவடிகள் இம்முறையையே பின்பற்றியுள்ளார். கோவலன் யாழை வாங்கிக் ‘காவிரி’ என்று அழைத்துப் பாடத் தொடங்குகிறான் என்பதைக் கூறும் இடத்திலும் இளங்கோ வடிகள்,

“காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வசிப்பாணியும்
மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்”

என்று கூறியிருத்தல் கவனிக்கத்தகும்.

முருகன் கனவிற் கூறியபடி அரசன் ஓர் ஊரின் கிணற்றிலிருந்து வேலை எடுத்துத் தன் பகைவனை வென்றான். வேல் எடுக்கப்பட்ட கிணற்றைக்கொண்ட ஊர் “வேலூர்” எனப் பெயர்பெற்றது என்று சங்க நூலான சிறுபாணாற்றுப் படையிலேயே (வரி 172-173) புராணகதை இடம் பெற்றுள்ளதைப் புலவர் அனைவரும் அறிவர். சமயத்தொடர்பான இத்தகைய கதைகள் சங்க காலத்திற்குப் புதியவை அல்ல என்பதைப் புறதானுாற்றுப் பாடல்களாலும் (174 முதலியன) அறியலாம். இங்ங்னமே காவிரி பற்றிய புராண கதையும் எனக்கோடலே ஏற்புடையது.

9. நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் நகரத்துப் பழக்கவழக்கங்களுக்கும், சிற்றுார்ப் பழக்கவழக்கங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. நம்மிடையே புரோகித மனம் வழக்கிற்கு வந்து பல நூற்றாண்டுகள் ஆயினும், இன்றும் புரோகிதர் இன்றியே திருமணம் செய்யும் தமிழர் பலர் இத் தமிழ்நாட்டில் உண்டு. நகரத்தில் நடைபெறும் புரோகித மணமும், சிற்றுரர்களில் நடைபெறும் புரோகிதன் அற்ற மணமும் இந்த நூற்றாண்டுப் புலவர் இருவரால் பாடப்படுகின்றன என்று கொள்வோம். 21ஆம் நூற்றாண்டில் இப்பாடல்களைக் காணும் அறிஞர் ஒருவர், இவ்விரண்டிற்கும் வேறுபாடு காணப்படலால் இவ்விரண்டும் வெவ்வேறு காலத்தன என்று கூறுதல் எங்ங்னம் பொருத்தமற்றதோ, அங்ஙனமே பிள்ளையவர்கள் முடிவும் பொருத்தமற்றதாகும். மேலும், கோவலன் திருமணச் செய்திகள் சமண முறைப்படி அமைந்தவை என்பது அறிஞர் சிலர் கருத்தாகும்.

10. மேலே திருமணம் பற்றிக் கூறப்பெற்ற மறுப்பே இதற்கும் பொருத்தமாகும். 'பரதசாத்திரம் கி. மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 2ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்ட காலத்தில் இப்பொழுது காணப்படும் உருவை அடைந்திருக்கலாம் என்று அறிஞர் கூறுகின்றனர்8எனவே, கி. பி. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பெற்ற சிலப்பதிகாரத்தில் பரதநாட்டியம் பற்றிய செய்திகள் இருத்தலில் வியப்பில்லை அன்றோ?

8. கலைக்களஞ்சியம் 6, பக்.746. 11. சிலப்பதிகாரம் பொதுமக்கள் காப்பியம்-நாடகக் காப்பியம். ஆதலால் அதன்கண் ஆற்றுவரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, கன்றக்குரவை, ஊசல் வரி, அம்மானை முதலிய பலவகைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் - செய்யுளியலையும் அதன் உரைகளையும் காண்போர் இப்பாடல்கள் செய்யுளியற் செய்திகட்கு உட்பட்டவையே என்பதை எளிதில் உணர்தல் கூடும்.

12. பார்ப்பனி கீரிப்பிள்ளையைக் கொன்றது. பஞ்ச தந்திரக்கதையில் சொல்லப்பட்டுள்ளது என்பது ஒரு வாதம். பஞ்சதந்திர நூலைப்பற்றிய உண்மை வரலாறு கிடைக்கவில்லை. அதன் உருவம் காலப்போக்கில் மாறுதல் அடைந்ததா இல்லையா என்பதும் விளங்கவில்லை. அது. பாரசீக அரசன் கொச்ரெள அனோவர்ஷன் (கி.பி.531-579) என்பவனால் பஹ்லவி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிற நாட்டினரின் மதிப்பைப்பெறும் பெருமையை இந்நூல் அடைவதற்கு இந்நிலையில் நூறு ஆண்டுகளாவது சென்றிருக்க வேண்டுமாதலின் இது கி. பி. 5ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கலாம் என்று. அறிஞர்கள் கருதுகின்றனர். உபகதைகள் பல பெளத்த மத நூல்களில் காணப்படுகின்றன. புத்தரின் ஜாதகக் கதைகள் கூறும் நூல்களில் உள்ள உபகதைகளைத் தழுவி எழுந்த கதை நூல்களில் பஞ்சதந்திரம் சிறப்பானது.9

பிள்ளையவர்கள் கூறும் பஞ்சதந்திரக் கதைகளே புத்த சாதகக் கதைகள் முதலிய நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. எனவே, ஒவ்வொரு கதையின் காலம் இன்னது என்று எவராலும் கூறுதல் இயலாது. கீரிப்பிள்ளையின் கதை பஞ்சதந்திர நூல் உண்டாவதற்கு முன்னரே நாட்டில் வழங்கப்பட்ட கதையாய் இருக்கலாம். அது கோவலனோடு தொடர்புண்ட கதையாயிருந்து வடநாட்டுக் கதைகளில் உரு மாறியும் இருக்கலாம்.

9. கலைக்களஞ்சியம் 6, பக்.643. மிகத்தெளிவாகத் தெரியும் கயவாகு வேந்தன் காலத்தைக் காற்றில் பறக்கவிட்டுக் காலமே ஐயத்திற்கு இடமாகக் கூறத்தகும் பரிதாப நிலையிலுள்ள சான்றுகளைக் காட்டிச் சிலப்பதிகாரம் பிற்பட்டது எனக் கூறுதல் சிறிதும் பொருந்தாததாகும்.

தொகைநூற் பாடல்கள் சிலப்பதிகார காலத்தில் மட்டும் பாடப்பட்டவை அல்ல; அதற்கு முன்னும் பின்னும் பாடப்பட்டவை. அவை அகப் பொருள் புறப்பொருள் பற்றிய செய்திகளைக் கூற எழுந்த தனிப்பாக்களின் தொகுப்பாகும். சிலப்பதிகாரம் ஒரு பெரிய காவியம். அதனைப் பாடிய ஆசிரியரோ சமனத்துறவியார். சமணசமயம் வடநாட்டில் தோன்றியது. ஆதலால் சமண நூல்கள் வடமொழியில் எழுதப்பட்டன. எனவே, சமண சமயத் தொடர்பான செய்திகளும் அச்சமயத் தொடர்பான பெயர்களும் வடசொற்களில் அமைந்திருத்தல் இயற்கையேயாகும். இளங்கோ அடிகள் பரதநாட்டிய உண்மைகளை விவரமாகக் கூறுவதிலிருந்தும் அவரது வடமொழி அறிவை நாம் நன்கு அறியலாம்.

சேரநாடு மலைநாடு ஆதலால் தமிழ் நாட்டுடன் மிகுந்த தொடர்பு உடையதாக அமையவில்லை. அந்நாட்டில் வடமொழியின் செல்வாக்குச் சங்ககாலத்திலேயே மிகுந்திருந்தது. சேர மன்னர் வைதிக நெறியைப் பின்பற்றிப் பிற தமிழரசரை விட மிகுதியாக வேதவேள்விகள் செய்தனர்: வடமொழியாளரை நன்கு ஆதரித்தனர். சோழ பாண்டிய நாடுகளைவிடச் சேரநாடு வடமொழியை நன்கு ஆதரித்தது. நாம் இவற்றைப் பதிற்றுப்பத்தால் அறியலாம். இங்ங்னம் வைதிகநெறியிலும் சமணத்திலும் வடமொழி தனியரசு செலுத்தியமையால், சேரநாட்டு இளங்கோவடிகள் அச் சமயங்களைப் பற்றிக் கூறிய இடங்களிலெல்லாம் வடசொற்களைப் பெய்து வைத்தார் என்பது பொருந்தும்.

சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் ஆதலால் ஆசிரியர் அதனைச் சிறிது இளகல் நடையில் பாடினார் எனக் கொள்வது பொருத்தமாகும்.

நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில் மறைமலையடிகள் திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை பாடியுள்ளார். அஃது ஏறத்தாழச் சங்ககால நடையை ஒத்துள்ளது. அவர் காலத்தில் வாழ்ந்த பாரதியார் பாடல்கள் எல்லோருக்கும் புரியத் தகும் முறையிலும் பிறமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்த நிலையிலும் அமைந்துள்ளன. அன்று ஆண்டுகள் கழித்து இவ்விரு பாடல்களையும் ஆராய்ச்சி செய்யும் ஒருவர். மறைமலையடிகள் பாடல்நடை மிடுக்கும் தூய்மையும் கொண்டுள்ளதால், அவர் பாரதியாருக்கு முற்பட்டவர் என்று கூறுதல் பொருத்தமாகுமா?

இவை அனைத்தையும் ஆழ நினைந்து பார்ப்பின், தொகைநூற் பாடல்களின் நடை மிடுக்கிற்கும் சிலப்பதிகார நடையின் மிடுக்கற்ற தன்மைக்கும் வடசொற்கள் மிகுதியாக இருத்தற்கும் அடிப்படைக் காரணங்கள் நன்கு புலனாகும். மிடுக்குத் தளர்ந்த நடையையும் சொற்கள் மிகுதியையுமே கொண்டு, காலத்தை உணர்த்தும் வரலாற்று உண்மைகளை அறவே கைவிட்டுச் சிலப்பதிகாரம் தொகை நூல்களுக்குப் பிற்பட்டது என்று எளிதில் முடிபு கூறுதல் ஆராய்ச்சி அறமாகாது.

(2) சிலப்பதிகாரம்

காவியத்தின் சிறப்பு

சிலப்பதிகாரம் ஆசிரியப்பாவால் அமைந்த முப்பது நீண்ட பாடல்களைக் கொண்ட பெருநூல். ஒவ்வொரு நீண்ட பாடலும் ஒரு காதை எனப்படும்.

கோவலனும் கண்ணகியும் சோழநாட்டுப் புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்து வளர்ந்தனர்; பின்பு வறுமையுற்று வாணிகம் செய்யப் பாண்டியநாட்டு மதுரைக்குச் சென்றனர். கோவலன் மதுரையிற் கொலையுண்டான். கணவனை இழந்த கண்ணகி சேர நாட்டிற்குச் சென்றாள்; அங்கிருந்து விண்ணகம் புகுந்தாள்; அதனால் சேர நாட்டுத் தலைநகரான வஞ்சியில் இருந்த செங்குட்டுவனால் வணங்கப்பட்டாள். எனவே, கோவலன்-கண்ணகி வரலாறு சேர, சோழ, பாண்டிய நாடுகளோடும், அந்நாடுகளின் தலைநகரங்களோடும், அந்நாட்டு மன்னர்களோடும் தொடர்புடையதாயிற்று. தமிழகத்தில் சேர, சோழ,பாண்டிய நாடுகளே மிக்க சிறப்புடையவை. அச்சிறப்புடைய நாடுகள் மூன்றும் இவ்வரலாற்றில் பிணைக்கப்பட்டு விட்டன. அதனால் இவ்வரலாறு புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நூலில் உள்ள வேட்டுவவரி என்னும் பாடலால் பாலைநில மக்களுடைய பண்புகளையும், ஆய்ச்சியர் குரவை என்னும் பாடலால் முல்லைநில மக்களுடைய பண்புகளையும், குன்றக்குரவை என்னும் பாடலால் குறிஞ்சிநில மக்களுடைய செயல்களையும் பிறவற்றையும் நாம் நன்கு அறியலாம். இந்நூலிலிருந்து சைவம், வைணவம், சமணம் என்னும் சமயங்களைப் பற்றிய செய்திகளையும் அறியலாம். காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும், அக்கால இசை-நடனக்கலைகளைப்பற்றிய செய்திகளையும் விழாக்களையும் மக்கள் பழக்கவழக்கங்களையும் அரசியலையும் தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் இந்நூலின் உதவி கொண்டு நன்கு தெளியலாம்.

இந்நூல் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப்பெற்றது; இனிய-எளிய நடையில் இயன்றது; உவகை, அவலம், வீரம் முதலிய ஒன்பான் சுவைகளையும். ஒருங்கே பெற்றது. இத்தகுதிகள் அனைத்தும் பெற்ற ஒப்பற்ற தமிழ்க்காவியம் என்று இதனைக் கூறலாம். அதனாற்றான் காலஞ்சென்ற கவியரசர் பாரதியார், “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்”, என்று இதனைப் பாராட்டி மகிழ்ந்தார்.

திருமணச் சடங்குகள்

கோவலன்-கண்ணகி திருமணத்தை வணிக மகளிர் யானைமீது அமர்ந்து ஊரார்க்கு அறிவித்தனர் என்ற செய்தி கவனிக்கத்தகும். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து குடியேறிய பூவாளூர் (பூவலூர்)ச் செட்டிமாரிடை இவ்வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்துவந்தது என்பது தெரிகின்றது. இது பிற நூல்களில் காணப்படாத செய்தியாகும். அகநானூற்றுப் பாடல்கள் இரண்டனுள் கூறப்பட்ட திருமணமுறை எளிமை வாய்ந்தது. கோவலன்— கண்ணகி திருமணத்தில் மாமுது பார்ப்பான் வேதவிதிப்படி திருமணம் செய்தான்—மணமக்கள் தீவலம் வந்தனர்—முளைப்பாலிகை வைக்கப்பட்டு இருந்தது. எனவே, திருமணத்தில் வேதியர் நுழைவு கி. பி. 2ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது என்பது சிலப்பதிகாரத்தால் தெரிகின்றது.[9]

நடனக்கலை

சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்று காதை அக்கால நடனக்கலை வளர்ச்சியை அறியப் பெருந்துணை செய்வதாகும். அரங்கின் அமைதி, கூத்தியின் அமைதி, ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, கவிஞன் அமைதி. தண்ணுமை ஆசிரியன் அமைதி, குழலோன் அமைதி, யாழாசிரியன் அமைதி, கூத்தி ஆடும் இயல்பு என்பன போன்ற பல செய்திகள் அரங்கேற்று காதையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சேர நாட்டில் கூத்தச் சாக்கையன், சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் நடனத்தை நடித்தான் என்பதைக் கூறும் பகுதி படித்துப் படித்து வியத்தற்குரியதாகும் (காதை 28,வரி 67-77).

இசைக்கலை

பூம்புகாரின் கடற்கரையில் கோவலனும் மாதவியும் பாடிய கானல்வரிப் பாடல்கள் இசைக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இளங்கோவடிகள், தனித்திருந்த மாதவி யாழ் வாசித்த திறத்தினை வேனிற் காதையில் (வரி 23-44) கூறியுள்ளமை இக்கலையின் சிறப்பினை அறிவிக்கும் மற்றோர் சான்றாகும்.

இந்திரவிழா

மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலுமே இந்திரவிழா விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதையில் விழா நிகழ்ச்சிகள் தெளிவாய்த் தரப்பட்டுள்ளன. அவ்விழா இருபத்தெட்டுநாள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். விழா முடிந்த அடுத்த நாள் அனைவரும் கடலாடுதல் வழக்கம். அவ்விழாவில் மாதவி பலவகை நடனங்களை ஆடிக்காட்டினாள். சமயவாதிகள் தத்தம் சமயக்கொள்கைகள் பற்றி விரிவுரையாற்றினர். வடநாட்டினரும் இவ்விழாவைக் காண வந்திருந்தனர்.

தமிழர் வீரம்

செங்குட்டுவன் மான உணர்ச்சி மிகுந்த தமிழன்; கங்கைக்கு வடபால் இருந்த கனகன் விசயன் என்ற வேந்தர் தமிழர் ஆற்றலைப் பழித்துரைத்தனர் என்பதை முனிவர் வாயிலாய் உணர்ந்த செங்குட்டுவன் கடுஞ் சீற்றம் கொண்டான்; அவ்வேந்தரைத் தக்கவாறு தண்டிக்க விரும்பினாள்; அவரைத் தண்டிக்கும் நோக்குடனேயே செல்வதாய் நூற்றுவர் கன்னர் விடுத்த அரசியல் தூதுவனிடமும் கூறினாள்; தான் விரும்பியபடியே அவ்வேந்தரை வென்று அவர்தம் தலைகள்மீது பத்தினியின் உருவம் பொறிக்கத்தக்க சிலையை ஏற்றி வஞ்சிமாநகர்க்குக் கொண்டு வந்தான். இது சிலப்பதிகாரம் கூறும் செய்தியாகும். தாய் மொழிப்பற்று மிகுந்த இளங்கோவடிகள் இதனைப் பல இடங்களில் உணர்ச்சியோடு கூறியுள்ளார்.

அக்காலப் பெருவழிகள்

காடுகாண் காதையில், மாங்காட்டு மறையவன், கொடும் பாளூரிலிருந்து மதுரைக்குச் சென்ற மூன்று வழிகளைக் கூறும் பகுதி மிக்க சுவையுடையது. கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கொடும்பாளூர் வரையில் சென்ற வழியும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறே, சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரிலிருந்து கங்கையாறு வரையிலும் சென்ற பெருவழியும் கவனிக்கத்தக்கது. அக்காலத்தில் மாடலன் போன்ற மறையவரும் பிறரும் கங்கையிலிருந்து குமரிவரையிலும் தலயாத்திரை செய்தனர் என்பதனை நோக்க, வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் இணைத்த பெருவழிகள் இருந்தன என்பது தெளிவாகும்.

சிறப்புச் செய்திகள்

(1) திருமணம் முடிந்தவுடன் கோவலனும் கண்ணகியும் தனிக் குடித்தனம் வைக்கப்பட்டனர் (காதை 2). இவ்வழக்கம் இன்றும் நகரத்தாரிடம் இருந்து வருகின்றது. அவர்களும் பூம்புகாரிலிருந்து குடியேறியவராவர்.

(2) திருமண முடிவிலும் (காதை 1), வழிபாட்டு இறுதியிலும் (காதை 12, 17, 24) அரசனை வாழ்த்துதல் குடிகள் வழக்கம். யாத்திரிகர் ஒரு நாட்டு எல்லையுள் புகும்போது அந்த நாட்டு மன்னனை வாழ்த்திக்கொண்டே புகுதல் மரபு (காதை 11). மன்னனிடம் பேசுவோன் தன் பேச்சின் முன்னும் பின்னும் மன்னனை வாழ்த்துதல் மரபு; தன் பேச்சு நீண்டதாயின் பேச்சின் இடையிலும் மன்னனை வாழ்த்துதல் மரபு (காதை 27,28).

(3) மனைவி, கணவனையே சிறப்புடைய கடவுளாக வழிபடுவாள் (காதை 9). அவள் அறவோர்க்கு அளித்தல் அந்தணர் ஒம்பல், விருந்தெதிர்கோடல் ஆகியவற்றைத் தவறாது செய்வாள் (காதை 16).

(4) மழை பெய்வது தவறினும், உயிர்கள் யாதானும் ஒன்றால் வருந்தினும், அரசன் வெறுக்கப்படுவான். அதனால் குடிமக்களால் பாராட்டத்தகும் நிலையில் அரசுபுரிதல் துன்பந்தருஞ் செயலேயாகும் (காதை 25).

(5) வஞ்சி மாநகரில் பல நாட்டு ஒற்றரும் இருந்தனர் (காதை 25). சங்ககாலத்தில் ஒல்வொரு பேரரசன் தலை நகரிலும் பல நாட்டு ஒற்றரும் இருந்தனர் என்பது இதனால் தெரிகின்றது.

(6) அக்காலத்தில் அரச முத்திரை யிடப்பெற்ற முடங்கல் (முடக்கப்பட்ட பனையோலை) 'மண்ணுடை முடங்கல்’ எனப்பட்டது (காதை 26).

(7) அரசனுக்குக் குருவாய் அமைந்தவன் ஆசான் எனப்பட்டான். அவனும், பெருங்கணி. அறக்களத்து அந்தணர், காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்கள், மந்திரக் கணக்கர் என்பவரும் அரசனோடு அரசியலில் தொட்ர்பு கொண்டவர் ஆவர் (காதை 22).

(8) பாண்டியன் அரண்மனையில் பணியாளராய்க் கூனர், குறளர், ஊமர் இருந்தனர் (காதை 20). இவ்வாறே சேரன் அரண்மனையிலும் கூனர், குறளர், பேடியர் பணி யாளராய் இருந்தனர் (காதை 28).

இளங்கோவடிகள் சிறப்பு

இளங்கோ அடிகள் சமணத்துறவியார் குற்றமற்ற பண்பாடு உடையவர். கோவலனும் கண்ணகியும் இன்பம் துய்த்தனர் என்பதை

"தாரும் மாலையும் மயங்கிக் கையற்று"

(காதை 2 வரி 35)

என்னும் தொடரைக்கொண்டு விளக்கிய திறம் அவரது குற்றமற்ற பண்பாட்டை நன்கு தெரிவிப்பதாகும். நூலாசிரியர் தமது இனம், நாடு, சமயம் என்னும் பற்று மிக்கவராய் நடுவுநிலை தவறிப் பிறநாடு, மொழி, சமயங்களைத் தமது நூலுள் இழிவுபடுத்தலாகாது. இது சிறந்த நூலாசிரியர் கடமையாகும். இச்சிறந்த கடமையுணர்ச்சி இளங்கோவடிகளிடம் வெள்ளிடைமலையோல் விளக்கமாய்த் தெரிகின்றது.

(1) ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும் அக்காண்டத்திற்குரிய நாட்டு மன்னர்களையும், அவர்தம் நாட்டையும், அவர்தம் சிறப்பியல்புகளையும், ஒருபடித்தாய்ப் பாடியுள்ளமை இளங்கோவடிகளின் நடுவுநிலைமைக்குச் சான்றாகும். அவர் புகார்க் காண்டத்தில் சோழரையும், மதுரைக் காண்டத்தில் பாண்டியரையும், வஞ்சிக் காண்டத் தில் சேரரையும் நடுவுநிலை பிறழாமல் பாராட்டியுள்ளமை படித்து இன்புறத்தக்கது.

(2) வேட்டுவ வரியில் பாலைநில மக்கள் கொற்றவையை வழிபடும் முறை மிகவும் விளக்கமாய்க் கூறப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் வேட்டுவராய் இருந்தே அக் காதையைப் பாடியுள்ளார் என்று கூறுவது பொருத்தமாகும்; இங்ஙனமே ஆய்ச்சியர் குரவையும் அமைந்துள்ளது. ஆய்ச்சியர் குரவையில் கீழ்வரும் செய்யுளைக் காண்க:

"மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் காற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே."

சிறந்த வைணவர் உருக்கமாய்ப் பாடியுள்ளது போலச் சமணத்துறவியாகிய இளங்கோவடிகள் இதனைப் பாடியுள்ளதை நோக்க, அவரது உண்மை ஆசிரியப் பண்பு

த-23 குன்றின்மேலிட்ட விளக்கென ஒளிர்தலைக் காணலாம். அவர் இங்ங்னமே குன்றக் குரவையில் முருகனைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் விரிவாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்.

கண்ணகி வரலாறு முழுமையும் கூறிய ஆசிரியர் வாழ்த்துக் காதையில் மூவேந்தர் ஆறுகளையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்; சோழன் சிறப்புக்களை அம்மானை வரியிலும், பாண்டியன் சிறப்புக்களைக் கந்துக வரியிலும், சேரன் சிறப்புக்களை ஊசல்வரியிலும் அமைத்துப் பாடியிருத்தல் அருமைப்பாடுடையது. வாழ்த்துக் காதையின் இறுதியில் அமைந்துள்ள வள்ளைப்பாட்டில் மூவேந்தர்களையும் பாராட்டியுள்ளமை அவரது நடுவுநிலைமையை மிகுத்துக் காட்டுகிறது.

கானல்வரிப் பாடல்கள் அடிகளாரது இசைப் புலமையினை நன்கு விளக்குவதாகும்; அரங்கேற்று காதைச் செய்திகளும் கூத்தச்சாக்கையன் நடனம் பற்றிய பகுதிகளும் ஆசிரியரது நடனக்கலை அறிவை நன்கு தெரிவிப்பனவாகும். மலைநாட்டில் கேட்கப்படும் ஒசைகள், மலைவாணர் செங்குட்டுவனுக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்த மலைநாட்டுப் பொருள்கள் பற்றிக் கூறும் பகுதி அடிகளாரது குறிஞ்சிநில அறிவைத் தெற்றெனத் தெரிவிக்கின்றது. செங்குட்டுவன் கனகவிசயரோடு புரிந்த போரினை வருணிக்கும் பகுதி (காதை 26) ஆசிரியரது போர் பற்றிய அறிவை வெளிப்படுத்துவதாகும். ஆசிரியர் கவுந்தியடிகள் வாயிலாகச் சமண சமயக் கொள்கைகளை ஆங்காங்கு வற்புறுத்தியுள்ளார். ஆசிரியர் கோவில்களைப் பற்றிக்கூற நேர்ந்தபோது முதலில் சிவபெருமான் கோவிலைக் குறிப்பிடுதல் அவரது பரந்த சமயப் பொதுமையை அறிவுறுத்துவதாகும் , ஆசிரியர் இந்நூலின் இறுதியில் கூறியுள்ள அறிவுரை, அவரது மேம்பட்ட ஒழுக்கத்தை உணர்த்துகிறது. இத்தகைய சிறப்புக்கள் பல கொண்டுள்ள நூலாதலின், சிலப்பதிகாரம் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமாய் விளங்குகிறது. சிலப்பதிகாரத்தில் முப்பது காதைகள் உள்ளன: அவற்றுள் சில காதைகளின் ஈற்றில் சொல்லழகும் பொருளழகும் அமைந்த வெண்பாக்கள் சில காட்சியளிக்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க:

(1) "காலை யரும்பி மலருங் கதிரவனும் மாலை மதியமும்போல் வாழியரோ-வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார்".

(2) "நண்ணும் இருவினைபும் கண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன்கேள்வன் காரணத்தால்-மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை விளைவாகி வந்த வினை".

(3) "காவி யுகுருேங் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்-பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான்".

(4) "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்புங் கண்ணிரும் வையைக்கோன் கண்டளவே தோற்றானக் காரிகைதன் சொற் செவியில் உண்டளவே தோற்றான் உயிர்".

வடமொழியின் செல்வாக்கு

சேர வேந்தர், தம் தாய்மொழியாகிய தமிழை வளர்த்தாற் போலவே வடமொழியையும் வளர்த்தனர்; வேத நெறி யில் நின்று வேள்விகள் செய்தனர். தமிழ்ப் புலவராய் விளங்கித் தம்மைப் பாடிய வேதியர்க்கு நிலங்களையும் பிறவற்றையும் வழங்கிச் சிறப்பித்தனர். சுருங்கக் கூறின், சேர வேந்தர் தம்காலச் சோழ பாண்டியரினும் மிகுதியாக வைதிக நெறியை ஆதரித்தனர் என்னலாம். அதனால் சேர நாட்டில் வடமொழியின் செல்வாக்கு மிகுந்தது. அச்சூழ்நிலையில் வளர்ந்த இளங்கோவடிகள் தமது சிலப்பதிகாரத்தில் வடமொழிக் கதைகளையும், வடவர் சமய நம்பிக்கைகளையும் ஆங்காங்குப் பொருத்தியுள்ளார். பாாசரன் கதை, பார்ப்பணி கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை போன்ற கதைகளும் யமன் எருமை ஊர்தியில் வருதல் போன்ற செய்திகளும் வடவர் செல்வாக்கை உணர்த்துவனவாகும்.

அக்காலத்தில் அந்தணர் செல்வாக்கு அரசரிடம் மிகுந்திருந்தது என்பதற்குச் செங்குட்டுவன் மாடலன் சொற்படி சோழ பாண்டியர்மீது சீற்றம் தணிந்தான் என்பதும், வேத விதிப்படி வேள்வி செய்தான் என்பதும், அவனுக்குத் தன் நிறையளவு பொன்னைத் தந்தான் என்பதும் ஏற்ற சான்றுகளாகும் (காதை 27, 28, 29, 30).

வடசொற்கள்

சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள வடசொற்களுள் கீழ் வருவன குறிப்பிடத்தக்கவை:

மேரு, இமயம், நாகம், நிதி, பணிலம், விதானம், நித்திலம், பாலிகை, அருந்ததி (காதை 1) , மயன், வாசம், மாதவி, தாது, தாமம். அரமியம், பரிசாரம் (காதை 2), தெய்வம், சாபம், தேசிகம், கவி, வக்கிரி, கரணம், சித்திரம், வஞ்சனை, பாகம், உத்தரம், சயந்தன், வந்தனை, புண்ணியம், தாமந்திரிகை, அந்தரம், மண்டிலம் (காதை 3), மேகலை, குணதிசை மந்தமாருதம், ஆரம், மங்கலம், அஞ்சனம், பவளம், மகரம் (காதை 4) , உதயம், காருகர், கஞ்சம், சூதர், மாகதர், வைதாளிகர், கணிகையர், வச்சிரம் மகதம், கிம்புரி, பூரணகும்பம், சுந்தரம், கணம், கமலம் (காதை 5) .

அவுணர். அமாபதி, நாரதன், உருப்பசி, நாடகம், உஞ்சை, அடவி, வருணம், வாரிதி, பாண்டரங்கம், கஞ்சன், வாணன், பேடி, அயிராணி, கண்டிகை, பரியகம், நூபுரம், பாடகம், சூடகம், சந்திரபாணி, தெய்வவுத்தி, அத்திரி, தாசி, விதானித்து, வசந்தம் (காதை 8) , பரிவட்டனை. கங்கை (காதை 7), மதுரகீதம், பாதகை (காதை 8) , இடாகினி, தேவந்தி, சோமகுண்டம், சூரிய குண்டம், போகம், பூமி, (காதை 9), அந்தரசாரிகள், இந்திர விகாரம், அருகத்தானம், சாரணர், சிலாதலம், கவுந்தி, தருமம், சினேந்திரன், சித்தன், பகவன், புனிதன், சினவரன், கதி, பரமன், குணவதன், பரம், தத்துவன், சாதுவன், காரணன், சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன். அங்கம், தேவி (காதை 10) .

வரோத்தமை, சிந்தை, வந்தனை, வனசாரிணி (காதை 11), குமரி, கண்டி, அமரி, கவுரி, சமரி, சூலி, நீலி. ஞானம், மயிடன் (மகிஷாசுரன்) , அரி, அரன், சோதி, அசுரர், அமரர், சங்கரி, அந்தரி, சடா (முடி) (காதை 12), கெளசிகன், கோசிகன், தந்திரி, கரம் (18), திரேயம், பாதம், தக்கணம், ஒசனி, சாமரை, உய்யானம், அபிநயம், சாதரூபம், சந்திரன், குரு, அங்காரகன், சாம்பூநதம், வீதி, அந்தி (14), கெளரியர், விஞ்சையன், தானம், பத்தினி, மத்திமம், உத்தர கெளத்தன், வாரணம், வாரணாசி, தேவகுமரன், துலாம் (15), கேவணம், மந்திரம் (16), கோகுலம் சேவகன், உந்தி, ஆரணம், நாராயணா (17) , அதிபதி, அங்குலி குங்குமம், அங்குசம் (22), கார்த்திகை, சங்கமன், பரதன், விரதம், விருத்தி (23), சரவணம், திகிரி (24), மதுகரம், சிந்துரம், களபம். நகுலம், சேனாமுகம் (25): தாபதர், தானவர், நீலகிரி (26), சூடகம் (27), போதி (அரசமரம்) (29), செட்டி, மாலதி, தவம் (30).


  1. 1. The History of Ceylon, Vol. I, Part I, pp. 175– 182, -
  2. 2. History of Ceylon, Vol. I, Part I, pp. 183—185; சிலப்பதிகார நிகழ்ச்சிகள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டி னது ஆகலாம்; ஆயின் அந் நூல் கி.பி. ஐந்தாம் நூற்றாண் டுக்கு முன்பு செய்யப்பட்டதென்று கூற இயலாது என்று வர லாற்றாசிரியர் திரு. K. A. நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள் ளார்; ஆயின் அதற்குரிய காரணங்களைக் காட்டவில்லை. —A History of S. India, p. 112.
  3. 3. தினகரன்', 13-7-62-திரு. ம. பொ. செல்வரத் தினம் அவர்கள் எழுதிய கட்டுரை. இலங்கை அரசினர் தமிழில் நடத்தும் பூரீலங்கா என்னும் திங்கள் தாளிலும் இக் கட்டுரை இவ்யாண்டு 9ஆம் இதழில் வெளிவந்துள்ளது: இலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றிய எல்லா விவரங்களையும் எனக்கு உதவிவரும் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அவர்கட்கு எனது உளமார் நன்றி உரியது. .
  4. 4. R. Satyanatha Aiyar, History of India, Vol. І, pp. 206–207.
  5. 5. History of Tamil Language and Literature, pp. 143-152.
  6. 6. According to Silappatikaram, King Gajababu or his return to Ceylon raised temples and altars to make daily offerings to Pattini-Devi and instituted the conduc ting of grand and gorgeous processions along the streets of his capital city of Anuradhapura in the month of Adi (July-August). The annnal perahera now conducted at Kendy is obviously a continuance of the festival of Pattini-Devi. It would be interesting to note that the present Kandy Perahera always begins in the month of Adi (July-August) as stated in the Yamil classical poem of Silappatikaram. This common worship of Pattini-Devi by both the Sinhalese and the famils appears to have engendered a certain amount of religious and cultural fellow-feeling between the two communities. The classical name. Pattini-Devi is largely in use among the Sinhalese and Tamil name Kannaki Devi or Kannakai Amman among the Tamils –T. Sadasiva lyer, Wasanthan Kavithirattu, Int. pp. 16-17.
  7. 7. (1) “Gajababu brought away from the Choli capital the most venerated relics, of the chosians, the gelden anklats, the image and the books used in the worship of goddess Pathini. The origin of the Devaias in Ceylon and of the Pathini ceremonies now current among the Kapuvas of Ceylon can be traced to this time. Gajababu has ever since become a national hero.”— W.A. de Silva, Ceylon National Review for Jan, 1907.
  8. (2) இலங்கையில் பத்தினி வணக்கம் பற்றிய விவரங் களை அறிய திரு. M. D. இராகவன் என்பார் எழுதியுள்ள பத்தினி வணக்கம் பற்றிய ஆங்கிலக் கட்டுரையை Ethnological Survey of Ceylon No. 3. 1951 srcirgith வெளியீட்டிற் காணலாம். -
  9. கோவலன் சிராவகன் ஆதலால் திருமணத்தை நடத்தியவன் சமண சமயத்துப் புரோகிதன் என்றும் அறிஞர் கூறுவர்.