தமிழ்மொழி இலக்கிய வரலாறு/தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் மொழி— இலக்கிய வரலாறு

1. தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்

இத்தாலிமொழியைத் தாந்தே என்னும் கவிஞரும், ஆங்கில மொழியைச் சாஸர் என்னும் அறிஞரும், ஜெர்மன் மொழியை லூதர் என்பவரும், டச்சுமொழியைக் கிறிஸ்தியெர்ன் பெடெர்சன் என்னும் பெரியாரும் உண்டாக்கி வளர்த்தனர் என்று பழங்கால ஐரோப்பியர் நம்பி வந்தனர்.[1] இங்ஙனமே வடமொழியைப் பாணினிக்கும், தென்மொழியை அகத்தியருக்கும் சிவபெருமான் கற்பித்தார் என்று பழங்காலத் தமிழர் நம்பினர். ஆயின், மொழி மக்களது உள்ளூணர்விலிருந்து தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு கலை என்பது இன்றைய மொழிவல்லுநர் துணிவாகும்.

மொழியின் தோற்றம்

மலை நாட்டு மக்களாகிய கொண்டர், சவரர், துதவர் முதலியவர் உணர்ச்சிவயத்தால் ஆடுவர்; ஆடிக்கொண்டே பாடுவர். இவ்வாறே பழங்கால மக்களும் ஆடிய நேரங்களிலெல்லாம் வாய்க்கு வந்தவாறு பாடிவந்தனர். அவர்தம் பாடல்கள் முதற்கண் பொருளில்லா வெற்றொலிகளாக இருந்தன; நாளடைவில் படிப்படியாகப் பொருள்களை உணர்த்தத் தொடங்கின. ஒவ்வோர் ஒலியும் தான் தோன்றிய இடமும் காலமும் காரணமும் பற்றி ஒரு பொருளையோ தொழிலையோ உணர்த்தத் தொடங்கியது. இங்ஙனம் முதலில் பொருளில்லா வெற்றுரைகளாக இருந்த ஒலிகள் காலப்போக்கில் கருத்தை உணர்த்தும் சொற்களாயின என்பது அறிஞர் கருத்து.

முதலில் மனிதன் பாடுதற்கு மட்டும் அறிந்திருந்தான்; பின்புதான் பேசத்தொடங்கினான். அதனால் தான் ஒவ்வொரு நாட்டு இலக்கியத்திலும் பாட்டு முற்பட்டதாகக் காணப்படுகிறது, உரைநடை பிற்பட்டதாக அமைந்துள்ளது. என்று அறிஞர் கூறுகின்றனர்.[2]

சொற்களின் தோற்றம்

முதல் மனிதனுக்கு இயல்பான மலைக்குகையே வீடாகப் பயன்பட்டது. அக்காலத்தில் அவன் இயற்கையாகப் பெற்றிருந்தவை. ஒலியும் அதைப் பயன்படுத்த வல்ல அறிவுமேயாகும். அவனது குகைவீட்டில் இயற்கையான அறை ஒன்றே இருந்தது. அக்குகை வீடு போலவே, அவன் முதலில் பேசிய மொழி இயற்கையாக—அவனது வாயிலிருந்து பிறந்த ஒலித்தொடராக இருந்தது; அந்த ஒலித் தொடரில் எழுத்து, சொல், சொற்றொடர், அடிச்சொல் முதலிய பாகுபாடுகள் அப்போது அமையவில்லை.

மனிதன் மலையைப் பெரிய கற்களாக உடைப்பது போலப் பழைய மனிதன் தான் பேசிவந்த நீண்ட ஒலித்தொடர்களைப் பிரித்துப் பிரித்துச் சில பொருள்களின் குறியீடுகளாகப் பயன்படுத்த அறிந்தான். இங்ஙனம் அமைந்தனவே சொற்கள் என்பவை. பெரிய கற்பாறைகளிலிருந்து சிறிய கற்களை வெட்டியெடுப்பது போல மனிதன் அச்சொற்களை நாளடைவில் குறுக்கி எளிய ஒலித்துணுக்குகளாக அமைத்துக்கொண்டான். அவையே இன்று அடிச்சொற்கள் அல்லது வேர்ச் சொற்கள் என்பவை.[3] குகையில் வாழ்ந்த மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெற்ற அறிவு வளர்ச்சியின் காரணமாகவே குடிசைவீடு கட்ட அறிந்தான்-கருங்கல் வீடு கட்டத் தெரிந்தான்-மண்ணைச் செங்கல்லாக்கிச் செங்கல் வீடு கட்ட அறிந்தான்-வானளாவிய மாடமாளிகை கட்டும் வன்மை பெற்றான். இவ்வாறு அவன் படிப்படியாகப் பெற்ற அறிவே மொழி வளர்ச்சியிலும் அவனுக்குத் துணைபுரிந்தது.

மனிதன் தனித்து வாழும்போது மொழி தேவையில்லை. அவன் பலருடன் கூடி வாழும் பொழுதே, அவருடன் கலந்து உறவாடவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் பொதுக்கருவி ஒன்று தேவைப்படுகிறது. அப்பொதுக்கருவியே மொழி எனப்படுவது. ஓரின மக்கள் தம் வாழ்க்கையை உயர்த்த உயர்த்த, அவ்வுயர் நிலைக்கு ஏற்பச் சொற்களும் தொகையில் பெருகுகின்றன; அஃதாவது, மொழி வளர்ச்சி அடைகின்றது. மனிதன் தன் தேவைக்குத் தக்கபடி அவ்வப் பொழுது பல பொருள்களைப் படைத்துக்கொள்வது போலவே அப்பொருள்களுக்குரிய சொற்களையும் படைத்துக்கொள்கிறான்; இங்ஙனமே பல்வேறு வகைப்பட்ட தன் செயல்களுக்கு உரிய சொற்களையும் ஆக்கிக்கொள்கிறான், நாகரிக வாழ்வும் கல்வி அறிவும் இல்லாது மலைப்பகுதிகளில் ஒதுங்கி வாழும் மக்களாகிய கொண்டர், சவரர், துதவர் முதலியோரிடம் அவர்தம் மொழிச் சொற்கள் தொகையில் சுருங்கி இருக்கின்றன. அவர்தம் அநாகரிக வாழ்வே இதற்குக் காரணமாகும். பல நாடுகளுக்கும் சென்று, பலரோடும் பழகிப் பெருவாழ்வு வாழ்ந்த தமிழர் தெலுங்கர் போன்றாரிடம் பல்லாயிரக்கணக்கான சொற்கள் இருக்கின்றன. இச்சொற்பெருக்கம் அவர்தம் நாகரிக வளர்ச்சியை நன்கு காட்டுகின்றது.

ஐவகை நிலம்

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். காடும் பசிய புல்வெளிகளும் உள்ள இடம் முல்லை எனப்படும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பெயர் பெறும், வளமற்றுப் புதர்களும் பருக்கைக் கற்களும் நிறைந்துள்ள இடம் பாலை எனப்படும்.

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் தம் பிழைப்புக்காக விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடினர்; தேன்கூடுகளை அழித்துத் தேன் எடுத்தனர்; இயற்கையாகக் கிடைத்த காய் கனிகளையும் கிழங்குகளையும் உண்டனர். இம்மக்கள் தாம் வாழ்ந்த குறிஞ்சி நிலத்தில் இருந்த மரங்களுக்கும் செடிகளுக்கும் கொடிகளுக்கும் தம்மளவில் வேறுபாடு அறிவதற்காக ஒவ்வொரு பெயரிட்டு அழைத்தனர். சந்தனம், கருங்காலி, மிளகுக் கொடி முதலிய பெயர்கள் குறிஞ்சி நில மக்களால் தமிழிற் சேர்ந்தன. குறிஞ்சிநில மலர்களின் பட்டியலைக் குறிஞ்சிப் பாட்டிற் காணலாம்.[4] அம்மக்கள் இவ்வாறே மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த பலவகை விலங்குகளுக்கும் பெயர்களை இட்டு வழங்கினர்; நாளடைவில் அறிவு பெற்றுத் தினை, சாமை முதலிய கூலங்களையும், கிழங்கு வகைகளையும் பயிரிட அறிந்தனர். அப்பொழுது உண்டான சொற்கள் பல. சுனை நீராடல், தேன் அழித்து எடுத்தல் முதலிய பல தொழில்களால் அவர்களிடம் தோன்றிய சொற்கள் பல. அவர்தம் தொழில்களுக்கேற்ற கருவிகளைக் குறிக்கும் பெயர்ச் சொற்கள் பலவாயின. காலப்போக்கில் ஆடல் பாடல் கலைகளைக் குறிக்கும் சொற்களும் அவர்களிடம் தோன்றின. இவ்வாறு குறிஞ்சி நிலத்தில் மட்டும் தோன்றி வளர்ந்த சொற்கள் பலவாகும்.

முல்லை நிலத்தில் ஆடு, பசு ஆகிய பால் தரும் விலங்குகள் வாழ்ந்து வந்தன. அவற்றை மேய்த்து, அவற்றின் பாலைத் தயிராக்கிப் பின்னர் மோராக்கி, வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சி, அவற்றை விற்று வாழ்ந்த மக்களே முல்லை நில மக்களான ஆயர். அவர்கள் அமைதியான வாழ்வு நடத்தினர். கால்நடைகளை மேயவிட்டு, அந்த ஓய்வு நேரத்தில் ஆம்பற் குழலும் வேய்ங்குழலும் ஊதி ஆடிப் பாடினர். அந்நிலத்தில் வளர்ந்த மரம், செடி, கொடி, பயிர் வகைகளைக் குறிக்கவும் தங்களுடைய தொழில்களைக் குறிக்கவும், பழக்க வழக்கங்களைக் குறிக்கவும், அவர்கள் உண்டாக்கிய கலைகளைக் குறிக்கவும் பல சொற்கள் தோன்றின.

வயலும் வயல் சார்ந்த நிலமுமாகிய மருத நிலத்தில் ஒழுங்கான முறையில் பயிர்த்தொழில் நடைபெற்றது. அதனால் அத்தொழில் வளர வளர, அதற்குரிய பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் பெருகின. அந்நிலத்தில் பயிரான மரம் செடி கொடிகளுக்கும், பிற உணவுப் பயிர்களுக்கும் தனித்தனியே பெயர்கள் ஏற்பட்டன. இவ்வாறே அந்நிலத்தில் வாழ்ந்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெயர்கள் அமைந்தன. அந்நில மக்களுக்கும் அவர்கள் செய்து வந்த பலதுறைத் தொழில்களுக்கும் பெயர்கள் ஏற்பட்டன. ஓவியம், சிற்பம், நடனம், நாடகம், இசை, மருத்துவம் முதலிய பல கலைகளுக்கு உரிய சொற்களும் நாளடைவில் தோன்றின. மனித நாகரிகத்திற்கே மருத நிலம் தான் உயிர் நாடியானது. எனவே, பெரும்பாலான சொற்கள் மருத நிலத்தில்தான் தோன்றின என்பது உண்மையாகும்.

கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தலில் வாழ்ந்த மக்கள் மீன் பிடித்தல், மீன் விற்றல், உப்பெடுத்தல், மீனை உப்புப்படுத்தல், கடலாடுதல் முதலிய தொழில்களைச் செய்தனர். கடலில் வாழும் உயிரினங்களுக்குப் பெயர்களை இட்ட முதல் மக்கள் இந்நெய்தல் நில மக்களேயாவர். இவர்தம் ஆடல் பாடல் முதலிய தொழில்களால் உண்டான சொற்கள் பல. ஓடம், தோணி, கப்பல், பாய்மரக் கப்பல், கலம் முதலிய சொற்களை உண்டாக்கியவர்களும் இவர்களே. பலவகை மீன்களுக்கும் இவர்கள் வைத்த பெயர்களே இலக்கியத்திலும் பேச்சிலும் இன்றளவும் இருந்து வருகின்றன.

பாலை நிலத்தில் வேட்டுவர் வாழ்ந்தனர். வழிப்பறி செய்தல், பாலை நிலத் தெய்வமாகிய கொற்றவையை வழிபடுதல் முதலியன இவர்தம் தொழில்கள். இவர்களால் உண்டான சொற்கள் சிலவாகும்.

இந்த ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் நாளடைவில் வாணிகத்துறையில் கலக்கலாயினர். அப்பொழுது ஒரு நிலத்தாரே சிறப்பாக வழங்கிவந்த சொற்கள் பிற நிலங்களிலும் பரவத் தொடங்கின. உயர்ந்த பழக்க வழக்கங்களும் பிற நிலங்களில் பரவலாயின. மக்களுக்குப் பயன்படும் ஒரு நிலத்து விலங்குகள் பிற நிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இத்தகைய கலப்பு முறையால் நாளடைவில் பல சொற்கள் எல்லா நிலங்களிலும் பொது வழக்குப் பெறலாயின. இதுகாறும் கூறப்பெற்ற சொற்கள், பல்லாயிர ஆண்டுகள் கணக்கில்-மக்கள் நாகரிகம் தோன்றி வளர வளரத் தோன்றியவையாகும்.

மொழி வளர்ச்சி

குழந்தை தொடக்க நிலையில் நாவினை அசைத்துப் பேசத் தொடங்குகின்றது; அது முதலில் ஆ, ஊ, வா, போ போன்றவற்றை ஒலிக்கின்றது. இவ்வொலிகள் நாளடைவில் வளரத் தொடங்குகின்றன. பின்பு அக்குழந்தை, பெற்றோர் ஒலிப்பதைப் பார்த்துப் பார்த்து அவர் போலவே ஒலிக்கத் தொடங்குகிறது. இது ‘போலச் செய்தல்’ (Imitation) என்னும் சிறப்பியல்பாகும். இச்சிறப்பியல்பால் தான் ஒருவன் தன்னிடம் இல்லாத ஆற்றல்களைப் பிறரிடம் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கற்றுக்கொண்டு தன்னை உயர்த்திக்கொள்ளுகிறான். இந்தப் பண்பே மனிதனது தாகரிக வளர்ச்சிக்கு முதல் அடிப்படை என்னலாம், குழந்தையின் வளர்ச்சிக்கும் இந்த ஆற்றலே காரணமாய் அமைந்துள்ளது. முதலில் ‘பனை’ ஒன்றையே மரம் என்ற சொல்லால் உணர்ந்த குழந்தை, தென்னை மரத்தைப் பிறர் ‘மரம்’ என்று சொல்லும்போது ஏற்க மறுக்கின்றது. குழந்தை தன்னை ‘நல்ல பையன்’ என்று பாராட்டிய தமக்கையை, ‘நல்ல பையன்’ என்று பாராட்டுகின்றது. தன்னெதிரே மெல்ல நடந்து வரும் பூனையைப் பார்த்தும் ‘நல்ல பையன்’ என்றே கூறுகின்றது.

இவ்வாறு தொடக்க நிலையில் எந்த வேறுபாடும் உணராமல் திணை, பால் முதலியவற்றைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் இருக்கும் குழந்தை, காலப்போக்கில் தன்னை அடுத்துள்ளோர் பேசுவதைக் கேட்டுக் கேட்டுக் கற்கும் சொற்களைப் பெருக்கிக்கொள்கின்றது.

மனிதன் தான் கற்ற சிலவற்றைக்கொண்டு மற்றவற்றை அமைத்துக்கொள்ளும் தன்மை ஒன்று உண்டு. அஃது ஒப்புமையாக்கம் (Anology) எனப் பெயர் பெறும். இவ்வொப்புமையாக்க முறையினால் பல வாக்கியங்கள் குழந்தையின் மூளையில் பதிகின்றன. ‘அக்காள் வந்தாள்’, ‘அது வந்தது’ போன்ற வாக்கியங்களைப் பல நாள் கூறக் கேட்டுப் பயின்று பெண்பால் வினைமுற்றும் ஒன்றன்பால் வினைமுற்றும் குழந்தைக்குப் பழக்கமாகின்றன. குழந்தை தனது இளமைக்காலத்தில் ‘எடு’ என்பதன் இறந்தகாலச் சொல்லாக ‘எடுத்தார்’ என்பதை அறிகிறது. பின்னர் அது ‘தடு’ என்பதற்குத் ‘தடுத்தார்’ என்றும், ‘கொடு’ என்பதற்குக் ‘கொடுத்தார்’ என்றும் தானே சொற்களை அமைத்துக்கொள்ளும் நிலையைப் பெறுகின்றது. இதே நிலையில் பல வாக்கியங்களை அமைக்கவும் குழந்தை கற்றுக் கொள்ளுகின்றது. நாளடைவில் எழுவாய் முதலிலும் பயனிலை. இறுதியிலும் செயப்படுபொருள் இடையிலும் அதற்கு அடையான எண்ணுப் பெயர் அதற்கு முன்னும் அமையும் அமைப்பு நன்றாக அதன் மூளையில் பதிந்து விடுகின்றது; ‘இவ்வாறு பெயர்ச்சொல்லின் வேறுபாடுகள் (Declensions), வினைச்சொல்லின் வேறுபாடுகள் (Conjugations)

(Conjugations), சொற்றொடர் அமைப்புகள் முதலிய எல்லாவற்றையும் ஒப்புமையாக்க முறையினால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய ஒப்புமையாக்க முறை இளம்பருவத்திலேயே நன்றாகப் பதிந்து பழகிவிடும் வாய்ப்புத் தாய்மொழியில் உள்ளது.[5]

அச்சம், ஆவல், நாகரிக வளர்ச்சி முதலியவை பற்றியும் புதிய சொற்கள் தோன்றுவது உண்டு. பண்டை மக்கள் இறப்பை அஞ்சினர்; அதனால் இறந்தார், செத்தார் என்னும் சொற்களைச் சொல்லவும் தயங்கினர்; இவற்றுக்குப் பதிலாகத் ‘துஞ்சினார்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தினர்; பின்பு தத்தம் சமயத்திற்கேற்றவாறு ‘சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்’ எனவும், ‘திருநாட்டுக்கு எழுந்தருளினார்’ எனவும், ‘பரமபதம் அடைந்தார்’ எனவும், ‘காலமானார்’ எனவும் கூறலாயினர். ‘உயிர் போய்விட்டது’ என்று சொல்லத் தயங்கி, அக்கருத்தையே உணர்த்தும் ‘குளிர்ந்துபோய்விட்டது’ என்பதை மக்கள் கூறுகின்றனர். மக்களுடைய ஆட்சியே இலக்கண வழக்கில் ஏறுவது மரபு ஆதலின், மக்கள் இவ்வாறு சொல்வது ‘தகுதி’ என்றும், ‘மங்கல வழக்கு’ என்றும் சான்றோர் இவற்றை ஏற்றுக்கொண்டனர்.

திருமகளின் பொலிவு என்று விளக்கைப் போற்றும் வழக்கம் நம்நாட்டில் உண்டு. பெண்கள் விளக்கேற்றியவுடன் அதற்கு வணக்கம் புரிதலைக் காணலாம். இதனால், ‘விளக்கை அணை’, ‘நிறுத்து’ என்று கூறுதல் அமங்கலம் என்றும், அவ்வாறு கூறுவதால் திருமகளின் அருள் நீங்குமென்றும் மக்கள் அஞ்சுகின்றனர். இந்த அச்சத்தால் (விளக்கை) அமர்த்து, (விளக்கைக்) குளிரவை என்பன போன்ற புதிய சொற்கள் தோன்றியுள்ளன.[6] ஒவ்வொரு கூட்டத்தார் யாதாயினும் ஒரு காரணம் பற்றி ஒரு சொற்குறியை ஒழித்து, அதனை வேறொரு சொற்குறியால் சொல்லி வந்தமையாலும் சொல்வழக்குகள் பெருகலாயின. இவ்வழக்குக்குக் ‘குழுஉக்குறி’ என்பது பெயர். பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றும், யானைப்பாகர் ஆடையைக் ‘காரை’ என்றும், வேடர்கள்ளைச் ‘சொல் விளம்பி’ என்றும் வழங்கும் இவை முதலானவை குழுஉக்குறி என்பர் நன்னூலார். ஆடை விற்பவர் வாங்குவோர்க்கு விளங்காமல் தம்முள் பேசும் சொற்களும் பலவாகும். இவ்வாறே ஒவ்வொரு குழுவினரும் பிறர் உணராத வகையில் பேசும் சொற்கள் தேவை பற்றி உண்டானவையாகும்.

மொழி நிலைகள்

மொழி ஆராய்ச்சி அறிஞர் உலகமொழிகளை நன்கு ஆராய்ந்து, (1) தனிநிலை மொழிகள், (2) ஒட்டுநிலை மொழிகள், (3) உட்பிணைப்புநிலை மொழிகள் என மூன்று வகையாகப் பகுத்துள்ளனர்.


(1) ஒரு மொழியில் உள்ள பெரும்பாலான சொற்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் தனித்தனியே நின்று வாக்கியமாக அமைந்து பொருள் உணர்த்தும் நிலை தனிநிலை (Isolation) என்று பெயர் பெறும். இத்தகைய மொழியில் அடிச்சொற்களே சொற்களாகும்; விகுதி இடைநிலை முதலியன இல்லை, சீனமொழி, திபெத்து மொழி, பர்மியமொழி, சயாம் மொழி ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை.

(2) அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது அவற்றில் ஒன்று சிதையாமல் நிற்க, மற்றொன்று சிதைந்து நிற்கும். இவ்வாறு அடிச்சொற்கள் இரண்டும் பலவும் பொருந்தி நிற்றல் ஒட்டுநிலை (Agglutination) எனப்படும்.

அறிஞன்-அறி+ஞ்+அன்

உண்டான்-உண்+ட்+ஆள் இங்கு அறி, உண் என்பவை அடிச்சொற்கள். ஏனையவை இடைச்சொற்கள் எனப்படும். இந்த இடைச்சொற்கள் மொழியின் தொடக்க நிலையில் உண்டாக்கப்பட்டவை அல்ல; பெயர்ச் சொற்களும் வினைச்சொற்களுமே நாளடைவில் சிதைந்து இவ்வாறு பயன்படுகின்றன என்பது மொழி நூலார் கருத்து. ஒரு காலத்தில் முழுச்சொற்களாக இருந்த இவை, காலப்போக்கில் உருச்சிதைந்து இடைச் சொற்களாய்ப் பெயர் வினைகளோடு ஒட்டி நிற்கலாயின, இந்நிலையே ஒட்டுநிலை என்பது. தமிழும் பிற திராவிட மொழிகளும் இவ்வொட்டு நிலையைச் சேர்ந்தவை.

(3) அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது, இரண்டும் - சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையே உட்பிணைப்புநிலை (Inflection) என்பது. இவ்வகை மொழியில் அடிச்சொல் தெளிவாய் நிற்பது இல்லை; பகுதி விகுதி முதலியவற்றை எளிதில் பிரித்தறிதலும் இயலாது. வடமொழியும் ஐரோப்பிய மொழிகள் பலவும் இவ்வகையைச் சேர்ந்தவை.[7]. இவை நிற்க.

விகுதி இடைநிலை முதலிய இடைச்சொற்களைப்பற்றி இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியமே பேசுகின்றதெனின்,[8] தொல்காப்பியத்திற்கு முன்னரே இவ்விடை நிலைகள் இருந்திருத்தல் வேண்டு மென்பது தெளிவு. இவை தனித்தனிச் சொற்களாகப் பன்னெடுங்காலம் வழக்கிலிருந்த பின்னரே, காலப் போக்கில் சிதைந்து பெயரோடும் வினையோடும் ஒட்டி வாழும் நிலை ஏற்பட்டிருத்தல் வேண்டும். இந்நிலையை ஆழ்ந்து எண்ணிப் பார்ப்பின், தமிழின் பழைமை காலங் கடந்த ஒன்றாகிறது அன்றோ? எழுத்து வளர்ச்சி

பேச்சுமொழிக்குப் பன்னெடுங்காலம் பின்னரே எழுத்து மொழி தோன்றியது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. முதலில் பேசத்தொடங்கிய மக்கள் முழுக்கருத்து அமைந்த வாக்கியங்களை ஒலித்தாற் போலவே, அவற்றைக் குறிக்க ஓவியங்களை எழுதினர். இங்ஙனம் தீட்டப் பெற்றவை ஓவிய எழுத்துகள் (Ideographs) எனப்படும். ஓவிய எழுத்துத் தமிழில் ‘உருவெழுத்து’ எனப்படும்

“காணப் பட்ட உருவம் எல்லாம்
மாணக் காட்டும் வகைமை நாடி
வழுவில் ஓவியன் கைவினை போல
எழுதப் படுவது உருவெழுத் தாகும்”[9]

முதலில் கண் என்னும் உறுப்பைக் குறிக்க ஓவியம் தீட்டப்பட்டது. மனிதன் அறிவு வளர வளரப் பார்த்தல், பார்வை முதலிய கருத்துகளை உணர்த்தக் கண்ணைக் குறிக்கும் ஓவியத்தால் முடியவில்லை. இவற்றைக் குறிக்கப் புதிய ஓவியங்கள் தேவைப்பட்டன. பின்பு திணை, பால், எண், இடம் ஆகிய பாகுபாடுகளையும் காலவேறுபாடு முதலியவற்றையும் உணர்த்த ஓவிய எழுத்துகள் ஓரளவு பயன்பட்டன. கருத்தும் கற்பனையும் வளர வளர, எல்லா வற்றையும் உணர்த்த ஓவியங்களால் முடியவில்லை. எனவே, ஓவியங்களாக இருந்தவை நாளடைவில் அடையான எழுத்துகளாக (Hieroglyphs) மாறத் தொடங்கின, இங்ஙனம் மாறத்தொடங்கிய, அடையாள எழுத்துகள் பிற்காலத்தில் ஒலி எழுத்துகளாக மாறின.

ஒவ்வோர் எழுத்தும் முதலில் ஓவியமாக எழுதப்பட்டுப் பொருளை நேரே உணர்த்தியது; பிறகு அந்தப் பொருளின் பெயராகிய ஒலியை உணர்த்தியது; அதன் பின்பு ஓர் அசையை உணர்த்தியது; இறுதியில் ஓர் உயிரெழுத்தை அல்லது ஒரு மெய்யெழுத்தை மட்டும் உணர்த்தும் நிலையை அடைந்துவிட்டது.[10]

தமிழ் எழுத்துகள்

தமிழகத்துக் கல்வெட்டுகள் பிராமி எழுத்திலும், வட்டெழுத்திலும், கிரந்த எழுத்திலும் அமைந்திருக்கின்றன. தொல்காப்பியத்தையும் சங்க நூல்களையும் துண்ணறிவோடு படியாத பலர் வட்டெழுத்துகள் பிராமியிலிருந்து வந்தவை என்று எழுதி விட்டனர். வட்டெழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து பிறந்தவை அல்ல, கிரந்த எழுத்துகளின் திரிபும் அல்ல. வட்டெழுத்துகள் தமிழரே தமது முயற்சியால் கண்டு வளர்த்தவையாகும்.

தமிழில் இன்றுள்ள மிகப்பழைய இலக்கணம் தொல்காப்பியம். அஃது இற்றைக்குச் சற்றேறக்குறைய 2,300 ஆண்டுகட்கு முற்பட்டது என்பது அறிஞர் கருத்து. அப்பழங்காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியரே, தம் காலத்திலும் தமக்கு முன்னரும் இலக்கண ஆசிரியர் பலர் இருந்தனர் என்பதையும், பலவகை நூல்கள் இருந்தன என்பதையும் தெளிவாகக் குறிக்கின்றார். எனவே, தொல்காப்பியர்க்கு முன்னரே இலக்கண இலக்கிய நூல்கள் பல இருந்தன என்பது தெளிவு. கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் அசோகனால் பொறிக்கப் பெற்ற பிராமி எழுத்துகளைக் கொண்டு வட்டெழுத்துகள் தோன்றின என்று கூறுவோர் இந்த உண்மையை உணர்தல் வேண்டும்; உணரின், தமிழ் எழுத்துகளாகிய வட்டெழுத்துகள் தமிழராலேயே பேணி வளர்க்கப்பட்டவை என்னும் உண்மையை எளிதில் உணர்வர். மேலும், இது பற்றிய உண்மைகளை அறிய விரும்புவோர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் எழுதியுள்ள மொழிவரலாற்றைப் படித்துத் தெளிவு பெறுவாராக.[11]

“வட்டெழுத்து ஒரு காலத்தில் இத்தமிழ்நாடு முழுமை யிலும் வழக்கில் இருந்திருத்தல் வேண்டும். பல்லவர் காலத்தில் அவர்கள் ஆண்ட தொண்டை நாட்டிலும், சோழ நாட்டிலும் பிராமி எழுத்துகளின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் ஏற்பட்டன. பல்லவர்கள் வழங்கிய கிரந்த எழுத்துகளும் நாகரி எழுத்துகளும் மிகுந்த காலம் வழக்கில் இல்லை. பல்லவர்க்குப் பின்வந்த சோழர்கள் கிரந்தத்தமிழ் எழுத்து களை நாடு முழுமையும் பரப்பினார்கள். விசய நகரப்பேரரசு தமிழகத்தைக் கைக்கொண்ட காலத்தில் நாகரி எழுத்து களைத் தமிழகத்தில் வழக்கிற்குக் கொணர்ந்தனர். இப்பொழுது அவையே மிகுதியாகப் பயிலப்படுவனவாகும்.”[12]

பிற மொழிக் கலப்பு

தமிழ்மொழி மிகப்பழைய காலத்தில் தமிழகத்தில் தனிநிலை பெற்று வளர்ந்துவந்தது. தமிழர் இந்தியாவில் இருந்த பல மொழி மக்களோடு காலப்போக்கில் வாணிகம், சமயம், அரசியல் இவற்றில் கலந்து உறவாடத் தொடங்கியமையால், வடமொழி, பிராக்ருதம் முதலிய மொழிச் சொற்கள் தமிழிற் கலந்தன. தொல்காப்பியர் போன்ற இலக்கண ஆசிரியர்கள் தமிழின் பழைய நிலையையும் தொன்னூலுடைமையையும் ஆராய்ந்து இயற்சொல், திரிசொல் இவையென்று சிறப்பித்துக் காட்டிப் பிறசொற்கள் தமிழின்கட் புகுதலை உடன்பட்டு, வடசொல், திசைச்சொற்கள் புகுதற்கும் விதி வகுத்தனர். இதனால் தமிழ் மொழிக்குக் கலப்பற்றுத் தனிநின்ற இயற்சொல் நிலை முன்பே உண்டென்பதும், அது பல்வகையானுந் தன்னோடொத்த ஆரியமாகிய வடதிசைச் சொல்லையும், பிற திசைகளில் வழங்கிய பழஞ்சொற்களையும் தன்னிடங்கொண்ட தென்பதும்,

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

என்னும் தொல்காப்பியச் சூத்திரம் கொண்டு துணியலாம்.[13]


  1. 1. Otto Jespersen, Mankind Nation and Individual, p. 51,
  2. Otto Jespersen, Language, etc., pp. 436-437.
  3. டாக்டர் மு. வரதராசனார், மொழி வரலாறு, பக், 223-224
  4. வரி. 61-95.
  5. டாக்டர். மு. வரதராசனார், மொழி வரலாறு, பக். 34-35.
  6. ௸, பக். 49-50.
  7. டாக்டர் மு. வரதராசனார், மொழி வரலாறு, பக், 244-249.
  8. “இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும்
    நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே.”

  9. யாப்பருங்கல விருத்தி, நூற்பா 96, உரை
  10. டாக்டர் மு. வரதராசனார், மொழிவரலாறு, பக். 399-409.
  11. பக். 426-439.
  12. தி. ந. சுப்பிரமணியன், பண்டைத் தமிழ் எழுத்துகள், பக். 105-106.
  13. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக். 14.