தமிழ் இலக்கியக் கதைகள்/கொடுப்பவர் பெருமை
22. கொடுப்பவர் பெருமை
கொடையின் பயன்தான் கேட்டுப் பெறுகின்றவர்களுக்கு உரியது. கொடையின் பெருமை, கொடுப்பவர்களுக்கு மட்டுமே உரியது. உதவி நாடி வந்து கேட்கின்றவர்கள் எதைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்வார்கள். கொடுக்கப்பட்ட பொருளை உயர்வு தாழ்வு ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். “தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்ப்பதா?” என்று ஒரு பழமொழி கூட உண்டு.ஆனால் கொடுக்கின்றவன் தான் தராதரம் அறிந்து தன்னுடைய தகுதியையும் கேட்கின்றவருடைய தகுதியையும் சீர்தூக்கி நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் கொடுப்பவனுடைய தகுதியின் உயர்வு-தாழ்வு கொடுக்கின்ற கொடையின் தரத்தையே பொறுத்ததாக இருக்கிறது!
ஒளவையாருடைய வாழ்வில் நிகழ்ந்த இரு சம்பவங்களைப் பற்றி அவரே பாடியனவாகக் கிடைக்கும் இரண்டு பாடல்களில் கொடுப்பவர், கொடுக்கப்படுபவர் ஆகிய இருவருக்கும் இடையில் உள்ள இத் தராதரம் அற்புதமாக விளக்கப் பெற்றிருக்கின்றது.
மலைவளம் நிறைந்த சேர நாட்டையும் சேர அரசனையும் காண வேண்டும் என்ற அவாவுடன் ஒளவையார் ஒருமுறை சேரநாடு சென்றிருந்தார். சேரநாட்டின் தொடக்கத்தில் ‘நாஞ்சில் நாடு’ என்ற வளமும் வனப்பும் பொருந்திய பகுதி இருக்கின்றது. அப்போது இந்த நாஞ்சில் நாட்டுப்பகுதியை நாஞ்சில் வள்ளுவன் என்ற சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒளவையார் சேர நாட்டிற்கு வர இருக்கிறார் என்பதை அறிந்த அவ்வரசன் அவரைச் சிறந்த முறையில் வரவேற்பதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான்.
ஒளவையாருடன் பாணர் குடியைச் சேர்ந்த வேறு சில விறலிய மகளிரும் வந்திருந்தனர். நாஞ்சில் வள்ளுவன் எல்லோரையும் அன்போடு வரவேற்றுத் தன் விருந்தினர்களாகத் தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அவன் ஒளவையாரிடம் மிக்க அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டான். அவனது விருந்தினர்களாகத் தங்கியிருந்தாலும் ஒளவையாரும் உடன் வந்த பெண்களும் தாங்கள் உண்ணுவதற்குப் போதுமான உணவை தங்கள் கையாலேயே சமைத்துக் கொண்டுவிட வேண்டும் என்று விரும்பினர். ஒளவையாரும் அதற்குச் சம்மதித்துவிட்டார். அவர்கள் விருப்பப்படியே அரண்மனையில் உணவு சமைத்துக் கொள்வதற்கு ஒரு பகுதியில் அவர்களுக்கு வசதி செய்து கொடுத்தான் நாஞ்சில் வள்ளுவன்.
நாஞ்சில் நாட்டிலே கீரை மலிந்து கிடைக்கும் காலம் அது. மனைக்கு மனை கீரை பயிரிட்டிருந்தார்கள். விறலியர்கள் தங்கள் வளையணிந்த கைகள் சிவக்க நிறையக் கீரை பறித்து வந்து சமைத்தார்கள். கீரைக் கூட்டுக்குத் தாளிதம் செய்வதற்கு முன்னால், வறுத்த அரிசியைப் பொடி செய்த மாவைச் சிறிது தூவிவிட்டுத் தாளிப்பது வழக்கம். கூட்டு தண்ணீராக நெகிழ்ந்து போய்விடக்கூடாது என்பதற்காகவும், வாசனைக்காகவும் இப்படி ‘மாவு’ தூவுவது அவசியமாக இருந்தது. விறலியர்கள் இதைக் கூறவும் ஒளவையார் அரண்மனை உக்கிராணத்திலிருந்து ஒரு சிறங்கை அரிசி வாங்கி வருமாறு ஆள் ஒருவனை அனுப்பித்தார். அந்த ஆள் உக்கிராணத்திற்குச் செல்லும்போது நாஞ்சில் வள்ளுவனே ஏதோ காரியமாக அங்கே வந்திருந்தான். ‘ஒளவையார் ஒரு சிறங்கை அரிசி கேட்டு விட்டார்’ என்று வந்த ஆள் கூறியதும், உக்கிராணத்து மேற்பார்வையாளன் ஒரு பிடித்த பிடி அரிசியை எடுத்து, வந்தவனுடைய மேலாடையில் இடுவதற்குச் சென்றான். அப்போது நாஞ்சில் வள்ளுவன் சட்டென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்தான்.
“இதைக் கேட்டு அனுப்பிய தமிழ்ப் புலமை அரசி இவ்வளவு கொடுத்தாலும் பெற்றுக் கொண்டு விடுவார். பிடி அரிசியாயிற்றே என்று அவர் மறுக்கப் போவதில்லை. ஆனால் ஒரு பெரும் புலமைச் செல்வி வாய் திறந்து கேட்டு விட்டிருக்கும் போது, நாம் ஒரு சிறங்கை அரிசியை மட்டும் கொடுத்தோம் ஆயின் அது நமக்கு எவ்வளவு பெரிய இழிவு தெரியுமா? போய் உடனே பட்டத்து யானையை இங்கே கொண்டு வா! கொண்டுவந்து, அது சுமக்கும் அளவு அரிசிப் பொதிகளை அதன்மேல் ஏற்றித் தாமதம் செய்யாமல் ஒளவையாரிடம் அனுப்பு நம் பெருமையை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? நான் சொன்னபடி உடனே செய்” என்று உக்கிராண மேற்பார்வையாளனுக்கு அப்போதே நாஞ்சில் வள்ளுவன் கட்டளை இட்டான். ‘கொடையின் பெருமை அதைக் கொடுப்பவர்க்கே’ என்பதை அவன் நன்கு உணர்ந்து கொண்டவனாக இருக்க வேண்டும். எனவேதான் கீரைமேல் தூவும் மாவுக்கு அவருக்கு ஒரு சிறங்கை அரிசி போதும் என்று அறிந்திருந்தும் இவ்வாறு செய்தான் அவன். இந்தச் சம்பவத்தைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் ஒளவையார் நயமாகப் பாடியுள்ளார். (புறம்.140)
இன்னொருமுறை, சேரநாடு முழுவதையுமே ஆண்டு வந்த வேறு ஒரு பேரரசனைக் கானச் சென்றிருந்தார் ஒளவையார். புலவர்களைப் போற்றும் இயல்புமிக்கவன் ஆகையால் அவனும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தான்.தமிழ் விருந்து போல அவர் பாடிய பாடல்களையும் கூறிய நல்லுரைகளையும் செவியாரப் பருகி இன்புற்றான் அவன்.
அந்தச் சமயத்தில், தொண்டை வலியும் இருமலுமாக ஒளவையார் சற்றே நோய்வாய்ப்பட்டிருந்தார். விவரமறிந்த மருத்துவர் ஒருவர் வெள்ளாட்டுப் பால் மிகுதியாக உண்டு வந்தால் அந்த நோவு விரைவில் நீங்கிவிடும் என்று கூறினார்.
ஒளவையார், சேர அரசனிடம் பால் ஆடு ஒன்று வேண்டும் என்று கேட்டார். சேரன் உடனே தருவதாக வாக்களித்து விட்டுத் தனக்குள் சிந்திக்கலானன். “ஒளவையார் போன்ற ஒரு பெரும்புலவர் ஒரு கறவை ஆடு கேட்டார். அவருக்கு ஒரு கறவை ஆட்டை மட்டுமே நாம் பரிசிலாகக் கொடுத்தோம் என்று நாளைக்கு மற்ற அரசர்கள் நம் கொடைப் பெருமையை இழிவாக மதிப்பிட்டு விடக் கூடாது! எனவே நாம் வெறும் கறவை ஆடு மட்டும் அவருக்குக் கொடுப்பதில் பயனில்லை. கறவை ஆட்டையும் கொடுத்து அதோடு கண்டவர் வியக்கத்தக்க வேறு ஒரு பெரும் பரிசிலையும் அவருக்கு அளிக்க வேண்டும்” என்று அவன் முடிவு செய்து வைத்துக் கொண்டான்.
மறுநாள் ஒளவையார் ஆட்டைப் பெற்றுக்கொண்டு போவதற்காக அவைக்கு வந்தார்.சேரன் முதலில் அவருக்கு அவர் கேட்டபடி கறவை ஆடு ஒன்றை அளித்தான். அடுத்தபடியாக அவன் அளித்த பரிசிலைக் கண்டு ஒளவையாரே திகைத்துப் போனார். அவருக்கு முதலில் கொடுத்த கறவை ஆடு எவ்வளவு நிறை இருந்ததோ அவ்வளவு நிறை பொன்னால் அதேபோல் ஒர் ஆடு செய்து இரண்டாவதாக அவருக்கு அளிந்திருந்தான் சேரன்! கேட்பவர் எதையும் பெற்றுக்கொள்வர் என்றாலும் கொடுக்கின்ற தன் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவன் அவன்!சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
கரப்பாடு யான் கேட்பப் பொன் ஆடு ஒன்று ஈந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவார் தம் கொடையின் சீர்
சிரப்பால் = தலையில், மணமவுலி = அழகிய கிரீடம், சீர் = பெருமை
என்று ஒளவையாரே இதைப் பாடியுள்ளார்.