தமிழ் இலக்கியக் கதைகள்/படைத்தவன் குற்றம்
23. படைத்தவன் குற்றம்!
‘இளமையில் விரும்பி விரும்பிப் படித்த தமிழின் பயன் எவ்வளவு வேதனை நிறைந்தது என்று இப்போதல்லவா தெரிகிறது! வளம் நிறைந்த வாழ்வுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால் தமிழைப் படித்த ‘குற்றத்திற்காகவும்’ நாலு பாடல்களைப் பாடத் தெரிந்ததற்காகவும் அந்த வளங்களெல்லாம் நம்மைப் புறக்கணிக்க வேண்டுமா என்ன? தமிழ்த் தாய்க்கும் திருமகளுக்கும் நிரந்தரமாக நிலைத்துவிட்ட பகை ஏதாவது இருக்கிறதோ என்னவோ? வாழ்க்கை வசதிகள், குறைந்தபட்சம் உண்ணவும் உடுக்கவும் போதிய அளவுகூட இல்லையானால் கற்றும் கவிபாடியும் காணும் பயன் என்னதான் வேண்டிக் கிடக்கிறது? இப்ப்டிப்பட்ட வேதனை கவிந்த நினைவுகளோடு கால் போன போக்கில் அந்த நீண்ட சாலையில் இராமச்சந்திர கவிராயர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவருடைய புலமையுள்ளம் மென்மையானது. மெய்யான திறமையை ஏமாற்றுபவர்களின் அலட்சியத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அவ்வளவு வன்மை அவருக்கு அந்த உள்ளத்தில் எப்படி ஏற்பட முடியும்? இரண்டொரு நாட்களாக உணவு கண்டறியாத தளர்ச்சியில் நடை கூடத் தள்ளாடியது. தொடர்ந்த ஏமாற்றத்தின் வரிசை வரிசையான அனுபவங்கள், தம் பேரிலும், சொல்லப் போனால் தாம் கற்றுத் தொலைத்த தமிழின் மேலும் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. பாடுகின்ற பாட்டைக் கேட்டுவிட்டுப் பொன்னையும் பொருளையும் வாரியிறைத்து விடவேண்டாம், மனமார ஒருவேளை உணவளித்து உபசரிக்கக் கூடாவா இவர்கள் உள்ளங்களில் கருணை மலரவில்லை?
சிந்தித்துக் கொண்டே நடந்த அவர் நிற்கும்படி செய்தான் பக்கத்து மரத்தடியிலிருந்து தொண்டிக்கொண்டே ஓடிவந்த அந்தப் பிச்சைக்காரன். அவருக்கு முன் வந்து நின்ற அவன், அவர் கையிலிருந்த சுவடி மூட்டையில் கண்களை ஓடவிட்டவாறே ஆவலோடு கட்கத்தில் இடுக்கிக் கொண்டிருந்த தன் திரு ஓட்டை எடுத்து நீட்டினான். அந்தப் பிச்சைக்காரன் முகத்தை நிமிர்த்து பார்த்த கவிராயருக்கு அழுவதா, சிரிப்பதர் என்று தெரியவில்லை. அந்த முகத்தில் நெளிந்த நம்பிக்கையின் சாயலும், கெஞ்சும் பாவமும், உதடுகள் அகல விரிந்து வெளித் தெரிந்த அத்தனை பற்களும் அவரையே சற்று வருந்தித் திகைக்கச் செய்து விட்டன. இரண்டு நாட்களாகச் சோறு காணாத அவர் எங்கே போவார் அவனுக்குச் சோறு கொடுக்க?
“அப்பனே! இது கட்டுச் சோற்று மூட்டையல்ல! வெறும் ஏட்டுச் சுவடிகள்!” என்று அவர் அவனை நோக்கிச் சொல்லி விட்டு நகர்ந்தபோது, அவனுடைய இளித்த பற்களிலும் இரங்கிய முகத்திலும் தெரிந்த நம்பிக்கையின் வீழ்ச்சி அவருக்கே வேதனையாக இருந்தது. ஏமாற்றத்தோடு மரத்தடியை நோக்கித் திரும்பினான் அந்தப் பிச்சைக்காரன்.
கவிராயர் சிந்தனை தொடர நடையையும் தொடர்ந்தார். இப்போது அவருக்கு ஒருவகையில் திருப்தி. “தமிழ் படிக்காத புலமையற்றவர்களிலும் கூடச் சோற்றுக்குத் திண்டாடுவோர் இருக்கத்தான் இருக்கிறார்கள்” என்பதுதான் அது. பொன்னையும் பொருளையும் கொடுத்து ஒரு சிலரை உயர்ந்த முறையில் இரட்சிக்கிறான் படைத்தவன். போகட்டும்! பொன்னும் பொருளும் கொடுத்து இரட்சிக்க முடியாதவர்களுக்குக் கல்லையும் மண்ணையும் உணவாகக் காய்ச்சிக் குடிக்கலாம் என்றாவது வழி செய்திருக்கக் கூடாதா? அவைகளை உணவாக ஏற்று உண்ணுவதற்கு ஒப்புக் கொள்ளும்படியாக வயிற்றைப் படைத்திருக்கக் கூடத் தெரியவில்லையே இந்த நான்முகனுக்கு? ஒருவன் மற்றொருவனிடம் பல்லைத் திறந்து பிச்சை கேட்கும்படியாக அல்லவா படைத்திருக்கிறான்? இது யார் குற்றம்? பல்லைத் திறந்து பிச்சை கேட்பவனுடைய குற்றமா? இல்லை, படைத்தவன் குற்றம்தான். இப்படி நினைத்துக்கொண்டு வரும்போதே இந்த எண்ணங்கள் ஒரு பாட்டாக உருவாகி ! வெளிப்படுகின்றன.
“கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான்
எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான்
ஆரைத்தான் நோவத்தான் ஐயோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில் தான் பண்ணினானே.”’
பதுமத்தான் = பிரம்மன், நோவா = வருத்த.
பாடிக்கொண்டே நடந்தார் புலவர். பாட்டில் வரும் ‘தான்’ ‘தான்’ என்ற ஒவ்வொரு சொல்லும் அவரது உள்ள உருக்கத்தை நன்கு உணர்த்துகிறது.