தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)/இருபதாம் நூற்றாண்டு
1. பாரதியார்
இருபதாம் நூற்றாண்டில் கவிதை இலக்கியம், மக்கள் வாழ்வோடு இணைந்து வளர்ந்தது. நாட்டைப் பற்றியும். மக்களைப் பற்றியும், மொழியைப் பற்றியும் கவிதைகள் எழுந்தன. இந்நிலைக்கு வித்திட்டுப் புதுயுகப் புரட்சிக் கவிஞராக விளங்கியவர் சுப்பிரமணிய பாரதியாராவார். இவர் உணர்ச்சிமிக்க கவிதைகளைப் பாடி, மக்களை எழுச்சி பெறச் செய்து, நாட்டு விடுதலைக்கு வழி கோலினார்.
இவர் 1882-ல் எட்டயபுரத்தில் பிறந்தார்; தந்தை சின்னசாமி ஐயரிடமே தமிழ் பயின்றார், வடமொழி, இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளையும் கற்றார். இவர் பாடல்கள் தேசியம், மொழிப்பற்று, இறை வழிபாடு, குழந்தைகள், பெண் விடுதலை, மாந்தர் உயர்வு முதலியவற்றை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.
‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு'
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’
‘தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம்'
முதலிய அடிகள் இவருடைய நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் விளக்குவன.
‘ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா’
குழந்தைக்கு அவர் உண்ர்த்திய அறிவுரை இது.
‘கண்ணன் பாட்டு' என்னும் தலைப்பில் காதலி, காதலன், குரு, சீடன், வேலையாள், தலைவன் முதலாய பல கோணத்தில் கண்ணனைக் கண்டு பாடுதல் புதுமை பயப்பதாகும்.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’
என்றும்,
‘ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே’
‘பாஞ்சாலி சபதம்’ எனும் தலைப்பில் பாரதக் கதையினைப் புதுமை நோக்கோடு பாடியுள்ளார். இவர் பாடிய குயில் பாட்டு கற்பனை நயம்மிக்க காதற் காவியமாகும்.
பாரதியார் வாழ்வின் மலர்ச்சிக்கும் புதுயுகப் புரட்சிக்கும் வழிகோலினார்; மனிதன் சம உரிமை பெற்று வாழவேண்டும் எனக் கனவு கண்டார். 1921-ல் மறைந்தார்.
2 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
இவர் குழந்தைகளுக்காக எளிய இனிய பாடல்கனைத் தந்து ‘குழந்தைக் கவிஞர்' எனப் பாராட்டப்படுகிறார். உமர்கய்யாம் பாடல்களை மொழிபெயர்ப்பெனத் தோன்றா வகையில் தமிழாக்கம் செய்துள்ளார். எட்வின் ஆர்னால்டு எழுதிய 'திலைட் ஆஃப் ஏசியா' என்ற நூலை “ஆசிய ஜோதி" எனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.
‘உள்ளத்துள்ளது கவிதை-இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்-உண்மை
தெரிந் துரைப்பது கவிதை'
'மங்கைய ராகப் பிறப்பதற்கே-நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா'
எனக் கவிமணி பெண்ணின் பெருமையைச் சிறப்பித்துப் பாடுகிறார்.
பாரதியார் பாடல்கள் வீறு கொண்டவை; கவிமணியின் பாடல்களோ, மென்மையும்; கனிவும், இனிமையும் கொண்டு நெஞ்சை உருக்குபவை; அமைதியாக இயங்கி உள்ளத்திற்கு ஊக்கம் தருபவை: அருளறத்தை வற்புறுத்துபவை. கவிமணி 1876 முதல் 1954 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.
3. பாரதிதாசன்
புதுவைக் குயில்; கவி மதுவை அள்ளி வீசிய புரட்சிக்கவி பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுவையில் பிறந்தார். இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித் திட்டு முதலிய கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்; இரணியம், நல்ல தீர்ப்பு, கற்கண்டு, பிசிராந்தையார் முதலிய நாடகங்களையும் எழுதியுள்ளார். கைம்பெண்ணின் மறுமணம், குடும்பக் கட்டுப்பாடு, சாதிக்கொடுமை, பெண் கல்வி, உழைப்பின் பெருமை முதலியவற்றைத் தம் கவிதையில் வற்புறுத்தியுள்ளார்.
'தமிழுக்கு அமுதென்று பேர்-இன்பத்
தமிழெங்கள் உயிருக்கு நேர்’
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு'
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் மணத்தல் தீதோ
பாடாத தேனிக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்தது உண்டா'
இப்பாடல் கைம்மைத் துயரைக் காட்டுவதாகும்.
‘சித்திரச் சோலைகளே-உமைநன்கு
திருத்த இப் பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
ஓ உங்கள் வேரினிலே’
இவ்வரிகள் உழைப்பாளர் உழைப்பைக் காட்டுகின்றன.
4. நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை
பாரதி தேசியக் கவிஞர், கவிமணி குழந்தைக் கவிஞர்; பாரதிதாசன் புரட்சிக் கவிஞர்; நாமக்கல்லாரோ காந்தியக் கவிஞர்.
தமிழன் என்றோர் இனமுண்டு-தனியே
அவற்கொருகுணமுண்டு’
என இன உணர்வு ஊட்டும் கவிதை பல அவர் பாடியுள்ளார்.
‘தமிழன் இதயம்’ ‘சங்கொலி’ ‘தமிழ்த்தேர்' முதலிய தொகுப்புகள் தமிழுணர்வை ஊட்டுவனவாகும்.
‘அவனும் அவளும்’ என்பது கவிதை வடிவில் அவர் தீட்டிய குறுங்காவியமாகும். ‘மலைக்கள்ளன்' என்பது அவரெழுதிய நாவலாகும்.
'காந்தி அஞ்சலி' என்பதிலுள்ள பாடல்கள் அவர் கவிதைக் கோட்பாட்டை விளக்குவன.
கத்தி இன்றி ரத்தம் இன்றி
யுத்தம் ஒன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்”
இவ்வரிகள் இவர் ஒரு காந்தியக் கவிஞர் என்பதைப் பறைசாற்றும். பாரதியைப்போல இவர் பாடல்கள் சுதந்திர இயக்கத்திற்கும் பயன்பட்டன. இவரை அராவைக் கவிஞராக உயர்த்திப் பாராட்டினர்.
முத்தமிழுள் நடுநாயகமாக விளங்குவது இசைத்தமிழ்: அது சங்க காலத்தில் சிறந்து விளங்கிற்று; பண்ணொடு கலந்து மண்ணோடியைந்து இயங்கிற்று; நிலத்துக்கேற்ற பண்ணும், பறையும் அமைந்தன. இயம், கிணை, குளிர் தடாரி, தண்ணுமை, துடி, முழவு, ஆகுளி, முரசு முதலியன பல வகைகளாகும் குழல், வயிர், நெடுவங்கியம் முதலியன ஊதுகருவிகளாகும். இளி, கொளை, பாலை, விளரி முதலியன இசை வகைகளாகும். இறையனார் களவியல் உரை கடல்கோளுக் கிரையாகிய இசைநூல்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் பெருநாரை, பெருங்குருகு, பாரதீயம், பஞ்சமரபு, தாள சமுத்திரம், இந்திர காளியம், இசை நுணுக்கம், இசைத் தமிழ், தாளவகையோத்து முதலியன குறிப்பிடத்தக்கன.
சிலப்பதிகார அரங்கேற்று காதையும், வேனிற் காதையும் பண்களின் திறத்தைப் பாகுபடுத்திக் காட்டுகின்றன. ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவ வரியும் அவ்வந் நிலத்து மாந்தரின் இசைப்பாடல்களைக் குறிப்பிடுகின்றன. கானல் வரிப் பாடல் கற்பார் உள்ளத்தைக் கவர வல்லது.
சிந்தாமணியில் காந்தருவதத்தையின் கடிமணமே இசைப் போட்டியின் வாயிலாகத் திகழ்கிறது. பெருங்கதை மதங் கொண்ட யானையை யாழிசையால் மயக்கி அடக்கி உதயணன் வாசவத்தையை மணந்த வரலாற்றைக் கூறுகிறது.
ஞானசம்பந்தர் தமிழிசையால் தமிழ் பரப்பினார். தேவாரப் பாடல்கள் பண்ணோடு பாடப்பட்டன. அருகினாகிரி நாதரின் திருப்புகழ் சந்த இனிமை கொண்டது தாள அமைப்புக்குட்பட்டு அவை கோயில் தலங்களில் பாடப்படுகின்றன.
தமிழ்ப் பண் வகைகள் பிற்காலத்துக் ககுநாடக இசை எனும் மாற்றுப் பெயரைப் பெற்றது; இவ்வகையில் தெலுங்குப் பாடல்களும் இயற்றப்பட்டன. தியாகையர் கீர்த்தனைகள் இசைமின் உச்சநிலையை எட்டிப்பிடித்தன. அருணாசல கவிராயரின் இராம நாடகமும், முத்துத் தாண்டவர் பாடிய கீர்த்தனைகளும், கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய நந்தனார் சரித்திரமும், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தும், இராமலிங்க அடிகளின் திருவருட்பாவும் இசைப் பாடல்களாகப் பாடப்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டுகள்
பாரதியும், பாரதிதாசனும், கவிமணியும் பாடிய பாடல்களும் இசைப்பாடல்களாயின. பெரியசாமித் தூரன். உளுந்துார்ப்பேட்டை சண்முகம், மின்னூர் சீனுவாசன் முதலியோர் இசைத் தமிழுக்கு ஆக்கம் தேடினர். திரைப்படப் பாடல்கள் புதிய மெட்டுகளையும், ஒலியமைப்புகளையும், கருத்துப் புரட்சிகளையும் கொண்டு விளங்குகின்றன. கண்ணதாசன், பட்டுக்கோட்டைக் கலியாண சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, பாபநாசம் சிவன், குயிலன், வாலி, சுரதா, புலமைப்பித்தன், கங்கை அமரன், காமராசன், வைரமுத்து முதலியவர்களின் பாடல்கள் திரையரங்கில் ஒலித்து மக்கள் உள்ளத்தைக் கவர்கின்றன.
இயல், இசை, நாடகம் எனத் தமிழ் முத்தமிழாக இயங்குகிறது. இவற்றுள் நாடகம் பண்டைக் காலத்தில் இசைப் பாடலுக்கு இசைய ஆடிய ஆடலைக் குறித்தது.
தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்ட குழு நாடகமாக நடிக்கப்பட்டமைக்குச் சோழர் காலத்தில்தான் கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. இராசராசன்வரலாறு, அவன் கட்டிய இரசேச்சுவரம் எனும் கோயிலில் ஆண்டுதோறும் நாடகமாக நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நாயக்கர் காலத்தில் பள்ளு, குறவஞ்சி நாடகங்கள் நடிக்கப்பட்டன.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இசை நாடகங்கள் சில தோன்றின. அருணாசல கவிராயர் எழுதிய இராம நாடகமும், கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தனார் சரித்திரமும் அவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகும்.
19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழ் நாடகம், முழு வளர்ச்சியை அடைந்ததெனக் கூறலாம். பரிதிமாற் கலைஞர், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் முதலியோர் மேலை நாட்டுப் பாணியில் தமிழ் நாடகங்களை எழுதி நடித்தனர்.
பரிதிமாற் கலைஞர் ‘நாடகவியல்’ எனும் நாடக இலக்கண நூல் ஒன்றையும், ருபாவதி, கலாவதி, மான விஜயம் எனும் மூன்று நாடகங்களையும் வெளியிட்டார். பம்மல் சம்பந்த முதலியார் தொண்ணுறு நாடகங்களை எழுதினார் ‘சுகுண விலாச சபா’ என்ற நாடகக் குழு ஒன்றினைத் தோற்றுவித்து, நடிப்புக் கலையை வளர்த்தார். அவர் எழுதிய நாடகங்களுள் 'மனோகரா’ என்பது புகழ் வாய்ந்த நாடகமாகும்.சங்கர தாசு சுவாமிகள் சுமார் 40 நாடகங்களை எழுதினார். பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, வள்ளித் திருமணம், சதி சுலோசனா முதலியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கன.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணியம் என்னும் செய்யுள் நாடகத்தை இயற்றினார், மறைமலையடிகளார் காளிதாசன் சகுந்தலத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். நாடகக் கலைஞர் எஸ். டி. சுந்தரம் ‘கவியின் கனவு’ எனும் நாடகத்தை எழுதி அதனைப் பல முறை நடிக்கவைத்தார்.
அறிஞர் அண்ணா வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி முதலிய பல நாடகங்களை எழுதினார். கலைஞர் கருணாநிதி மந்திரிகுமாரி, தூக்குமேடை, காகிதப்பூ முதலிய பல நாடகங்களை இயற்றினார். கிருஷ்ணமாமிப் பாவலர் பதிபக்தி; தேசியக் கொடி முதலிய நாடகங்களை எழுதிச் சுதந்திரப் போராட்டத்திற்கு வழிகோலினார்.
தமிழில் அங்கத நாடகங்களும் தோன்றின. சோவின் நாடகங்கள் அங்கதச்சுவை மிக்கன; பிறர் குறையைச் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடும் உரையாடல்கள் மிக்கன.
நாடக நடிகர்களுள் குறிப்பிடத் தக்கவர் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், அவ்வை டி. கே. சண்முகம், சகஸ்ரநாமம், மனோகர், சிவாஜிகணேர்ன், எம். ஆர். இராதா முதலியோராவர்.
நாவல் இலக்கியம் தோன்றி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழகத்திற் சிறுகதை இலக்கியம் தோன்றியது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை தமிழில் உரை நடையில் படைப்பு இலக்கியம் தோன்றக் காரணமாய் அமைந்தது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீராசாமி செட்டியாரின் விநோதரச மஞ்சரியும் தாண்டவராய முதலியார் மொழிபெயர்த்த பஞ்ச தந்திரக் கதையும் சிறுகதையின் தோற்றத்திற்கு வழிவகுத்தன எனலாம்.
தொடக்க காலம்
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பத்திரிகைகள் சிறு கதைகளை வெளியிட்டன. தாகூரின் சிறுகதைகளை மொழி பெயர்த்தும், புதுக்கதைகளை எழுதியும் பாரதியார் சிறுகதை இலக்கியத்திற்குத் தொண்டாற்றினார், பாரதியார் எழுதிய தாகூர் சிறுகதைகளும், பாரதியார் கதைகளும் இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
வ. வே. சு. ஐயர் (வாகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்) எழுதிய கதைகள் அடுத்து வெளிவந்தன. அவர் கதைகளுள் எட்டு கதைகள் ‘மங்கையர்க்கரசியின் காதல்’ எனும் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. அதிலுள்ள ‘கதைகளுள் குளத்தங்கரை அரசமரம்’ சிறப்பு வாய்ந்ததாகும். இவர் பாரதியார் காலத்தவர்.
கல்கி
சாரதையின் தந்திரம், வீணை பவானி, ஒற்றை ரோஜா, கணையாழியின் கனவு, அமர வாழ்வு முதலிய சிறுகதைகளைக் கல்கி எழுதியுள்ளார். இவை கல்கி பத்திரிகையில் வெளிவந்தன. இவர் 1899 முதல் 1964 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.
புதுமைப்பித்தன்
வ. வே. சு. ஐயர் தொடங்கி வைத்த சிறுகதை மரபு புதுமைப் பித்தனால் வளர்ச்சியுற்றது. வாழ்வின் யதார்த்த நிலையை உணர்த்தவும், கலைப் பொருளைச் சுவைபடக் கூறவும் இவர் பேச்சுத் தமிழைக் கையாண்டார். இவர் கதைகளில் நாடகப் பண்பும், எள்ளல் சுவையும் மிகுதியாக உள்ளன. இவர் எழுதிய கதைகளுள் சாப விமோசனம், அகல்யை, கயிற்றரவு, காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், மகாமசானம் முதலியன குறிப்பிடத்தக்கன. இவர் 1906இல் தோன்றி 1940இல் மறைந்தார்.
கு. ப. ராஜகோபாலன்
புனர்ஜன்மம், கனகாம்பரம், காஞ்சனமாலை எனும் தொகுதிகளில் இவர் கதைகள் வெளியாகியுள்ளன. அவை குடும்ப வாழ்வின் இன்ப துன்பங்களைச் சித்திரிக்கின்றன; உள்ளத்துணர்வுகளை அழகாகப் படப்பிடித்துக் காட்டுகின்றன. இவர் எழுதிய ‘விடியுமா’ என்ற கதை மறக்க முடியாத கதையாகும். மரணப் படுக்கையில் கிடக்கும் கணவனை மருத்துவமனையில் காணும் மனைவியின் துயரைச் சித்திரிக்கும் கதை இது. இவர் 1921இல் மறைந்தார்.
அழியாச் சுடர் என்னும் பெயரில் தம் கதைகளை மெளனி வெளியிட்டுள்ளார். இதழ்கள் என்ற தொகுப்பு நூலை லா. ச ராமாமிர்தம் வெளியிட்டுள்ளார். தி. ஜானகி ராமன் தஞ்சை மண்ணின் மணமுப் அம்மக்கள் பேச்சு ஓட்டமும் அமையக் கதை எழுதுகிறார். நகைச்சுவையும் வஞ்சப் புகழ்ச்சியும் இவரது எழுத்தில் களி நடம் புரியும். கழுகு, சந்துரின் முடிவு, சிவப்பு ரிக்ஷா, அதிர்வு முதலியன இவர் எழுதிய சிறு கதைகளாகும். சாகித்திய அகாதமி இவர் சிறுகதைகளைப் பாராட்டிப் பரிசு தந்துள்ளது. அகிலன், நா. பார்த்தசாரதி, விந்தன் முதலியவர்களும் அரிய பல சிறுகதைகளைப் படைத்துப் புகழ் பெற்றுள்ளனர். ஒரு பிடிச்சோறு, யாருக்காக அழுதான், இனிப்பும் கரிப்பும், அக்கினிப் பிரவேசம் முதலிய கதைகளைச் செயகாந்தன் எழுதியுள்ளார். இவரைச் சிறுகதை மன்னன்' எனப் பலரும் பாராட்டுகின்றனர்.
இன்று புதிய எழுத்தாளர்கள் பலர் சிறந்த சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். சு. சமுத்திரம், வண்ண நிலவன், வண்ணதாசன், செயந்தன், பொன்னிலவன் போன்றோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர்.
நாவல் இலக்கியம்
நாவல் (Novel) என்னும் சொல் ‘புதுமை’ என்னும் பொருளைத் தரும். இஃது உரைநடையில் அமைந்த நெடிய கதையைக் குறிக்கும். கதைப் பொருள். கதைப் பின்னல், பாத்திரங்கள், பின்னணி, காலம், இடம், உரையாடல், நடை முதலியவை நாவலின் இன்றியமையாக் கூறுகளாகும்.
முதல் தமிழ் நாவல்கள்
தமிழில் நாவல் இலக்கியம் தோன்றிச் சரியாக நூறாண்டுகள் ஆகின்றன. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தமிழில் தோன்றிய முதல் நாவலாகும். அவர் காலத்தில் வாழ்ந்த இராஜம் ஐயர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவலை 1893இல் வெளியிட்டார். மாதவய்யா அவர்கள் 1898இல் பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாட்சி முதலிய நாவல்களை எழுதினார். பண்டித நடேச சாஸ்திரி 1900இல் தீனதயாளு என்னும் நாவலை வெளியிட்டார் இவை நீதி போதனைகளையும், பெண்களின் துயரையும் சித்திரிக்கின்றன.
தழுவல் நாவல்கள்
ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மாள் ஆகிய மூவரும் ஆங்கில நாவல்களைத் தழுவிப் பரபரப்பும் மருமமும் நிறைந்த நாவல்களை எழுதினார்கள். ஆரணி குப்புசாமி முதலியார் 1911இல் ‘மதன காந்தி இரத்தினபுரி ரகசியம்’ முதலிய துப்பறியும் கதைகளையும், வடுவூர் துரைசாமி ஐயங்கார் ‘மேனகா', 'கும்பகோணம் வக்கீல்’ எனும் நாவல்களையும், மு. கோதைநாயகி அம்மாள் ‘சண்பக விஜயம்’ எனும் நாவலையும் எழுதினர். இம்மூவரும் சம காலத்தில் வாழ்ந்தனர்.
தேசியமும் சுதந்திரமும்
1927இல் கே. எஸ். வேங்கடாமணி ‘முருகன் ஓர் உழவன்' என்னும் நாவலையும் எழுதினார். இது தேச பக்தியை ஊட்டுவது; காந்தியக் கோட்பாடுகள் நிறைந்தது.
கல்கி
நாவல் வளர்ச்சியில் கல்கியின் பணி மிகப் போற்றத்தக்கது. அவர் எழுதிய ‘கள்வனின் காதலி' ஆனந்த விகடனில் வெளிவந்தது. இது சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது. "அலையோசை" என்னும் நாவலே அவர் இறுதியில் எழுதியதாகும். சுதந்திரத்திற்குப் பிற்பட்ட நாட்டு நிலையை இது சித்திரிக்கிறது.
வரலாற்று நாவல்கள்
பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் முதலியன அவர் எழுதிய வரலாற்று நாவல்களாகும். அவரைப் பின்பற்றிச் சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், நா. பார்த்தசாரதி, விக்கிரமன் முதலியோர் வரலாற்று நாவல்களை எழுதினர். சாண்டில்யனின் கடற்புறா, ஜெகசிற்பியனின் நந்திவர்மன் காதலி. நா. பார்த்தசாரதியின் மணிபல்லவம், விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி முதலியன அவற்றுள் குறிப்பிடத்தக்கன.
டாக்டர் மு. வ. அவர்கள் பதின்மூன்று நாவல்களைப் படைத்தார். அவையனைத்தும் குடும்ப வாழ்வையும், சமுதாயச் சிக்கல்களையும் கருவாகக் கொண்டன. செந்தாமரை, கள்ளோ காவியமோ, அகல்விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம், மண் குடிசை முதலியன அவர் எழுதிய நாவல்களுள் குறிப்பிடத்தக்கனவாகும்.
அகிலன் பெண், சிநேகிதி, நெஞ்சின் அலைகள், பாவை விளக்கு, சித்திரப்பாவை, பால்மரக் காட்டினிலே, எங்கே போகிறோம் முதலிய தலைசிறந்த நாவல்களைப் படைத்தார்; தாம் எழுதிய சித்திரப்பாவைக்காக ஞானபீடம் பரிசினைப் பெற்றார்.
ஜெயகாந்தன் தமிழ் நாவல்களுள் புதுமையும், இலக்கியத் தரமும், கருத்தோட்டமும் மிக்க நாவல்களை எழுதி வருபவர். சில நேரங்களிம் சில மனிதர்கள், பாரிசுக்குப் போ, சினிமாவுக்குப்போன சித்தாளு, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன், அட சும்மா கிட புள்ளே, ஊருக்கு நூறு பேர், ஜெய ஜெய சங்கரா முதலிய நாவல்களை இவர் எழுதியுள்ளார். மேலும் தொடர்ந்து எழுதும் தலைசிறந்த எழுத்தாளர் இவர்.
நா. பார்த்தசாரதி கல்கியின் பணியைப் பின்பற்றி எழுதினார்; சத்திய வெள்ளம், ஆத்மாவின் ராகங்கள், நெஞ்சக் கனல், நெற்றிக்கண் முதலிய சமுதாய விமரிசன நாவல்களை எழுதியுள்ளார். இலட்சிய மாந்தர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட குறிஞ்சி மலரும், பொன் விலங்கும் இவருடைய அற்புதப் படைப்புகள்.
நீல. பத்மநாபனின் உறவுகள், தலைமுறைகள், பள்ளி கொண்டபுரம் ஆகியவை சிறந்த நாவல்களாம். இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் படகர் வாழ்க்கையைச் சித்திரிப்பதாகும். இலட்சுமியின் பெண்மனம், ரகுநாதனின் பஞ்சும் பசியும், ராசியின் நனவோட்டங்கள், ஜானகி ராமனின் அம்மா வந்தாள் முதலியன குறிப்பிடத்தக்க சிறந்த நாவல்களாகும்.
இதழ்கள் தமிழ்மொழி வளர்ச்சியிலும் இலக்கிய வளர்ச்சியிலும் சிறப்பிடம் பெறுகின்றன. நாளிதழ், வார இதழ், திங்கள் இதழ் என இவை பலவகைப்படும், இவ்விதழ்கள் செய்திகளைத் தருவதோடு தலையங்கங்களும், சிறு கதைகளும். நாவல்களும் வார இதழ்களிலும் திங்கள் இதழ்களிலும் இடம்பெறுகின்றன. மற்றும் சிறுவர்களுக்கான தனி இதழ்களும், மகளிர்க்கு எனத் தனி இதழ்களும் வெளிவருகின்றன.
தமிழில் வெளிவந்த முதல் இதழ் சுதேசமித்திரனாகும். அது 1883ஆம் ஆண்டு ஜி. சுப்பிரமணிய ஐயர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வார இதழாக வெளிவந்தது; 1888ஆம் ஆண்டு முதல் நாளிதழாக மாறியது.
திரு. வி. கலியாணசுந்தரனார் தேசபக்தன், நவசக்தி எனும் இரண்டு நாளிதழ்களை நடத்தினார். அடுத்துக் குறிப்பிடத்தக்க நாளிதழ் தினமணியாகும். டி. ஏ. சொக்கலிங்கம் முதலில் இதன் ஆசிரியராக விளங்கினார். அடுத்து ஏ. என். சிவராமன் பணியாற்றிவந்தார்.
சி. பா, ஆதித்தனாரை ஆசிரியராகக் கொண்ட தினத்தந்தி 1942ஆம் ஆண்டு முதல் வெளிவருகிறது. எளிய தமிழில் உணர்ச்சிகளைத் துண்டும் வகையில் கவர்ச்சி மிக்கதாக விளங்குவதால் இஃது அதிக அளவில் விற்பனையாகிறது. நாட்டு நடப்புகளைத் தக்க படங்களாலும், தலைப்புகளாலும் விளக்குகிறது. இதே செய்திகளை மாலை முரசும் தருகிறது. முன்னது காலையிதழ்; பின்னது மாலையிதழ்.
மக்கள்குரல், மக்கள் செய்தி, தினகரன் முதலிய நாள் ஏடுகள் இப்பொழுது அரசியல் விமரிசனங்களைத் தாங்கி வெளிவருகின்றன. முதல் தமிழ் நாளிதழான சுதேசமித்திரன் இப்பொழுது வெளிவரவில்லை.
பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் குடியரசு, விடுதலை எனும் இரண்டு நாளிதழ்களை நடத்தினார். இன்று அரசியல் உணர்வுகள் பெருகிவிட்ட காரணத்தால் கட்சிக் கொள்கைகளைப் பரப்பும் நாளிதழ்களும் வார இதழ்களும் வெளிவருகின்றன. ஜனசக்தி பொதுவுடமைக் கட்சிப் பத்திரிகையாகும்; முரசொலி தி. மு. க.வின் பத்திரிகையாகும்; ‘அண்ணா’ அண்ணா தி.மு.க.வின் பத்திரிகையாகும்.
ஆனந்தவிகடன் 1928 முதல் வார இதழாக வெளிவருகிறது. ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அவர்கள் 1941 ஆகஸ்டில் கல்கி எனும் வார இதழைத் தொடங்கினார். இன்று தமிழ் வார இதழ்களுள் மிகுதியாக விற்பனையாவது குமுதமாகும். தினமணிகதிர், தராசு, குங்குமம், இதயம் பேசுகிறது. நக்கீரன், ஜூனியர் விகடன் முதலான வார இதழ்கள் இப்பொழுது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.
திங்கள் இதழ்களுள் இலக்கிய இதழாகச் செந்தமிழ்ச் செல்வி வெளிவருகிறது; தீபம் பார்த்தசாரதி வெளியிட்ட 'தீபம்' சிறந்த இலக்கிய விமரிசன இதழாகும்.
அழ. வள்ளியப்பாவின் பூஞ்சோலை, மற்றும் அம்புலி மாமா, கல்கண்டு, பொம்மை வீடு முதலான இதழ்கள் சிறுவர்களுக்காக வெளிவருகின்றன.
ஜீ. ஆர். தாமோதரன் அவர்கள் கலைக்கதிர் என்னும் விஞ்ஞான இதழ் ஒன்றனை வெளியிடுகிறார். பேசும் படம், பொம்மை முதலியன திரைப்பட விமரிசன இதழ்களாகும் துக்ளக் எனும் அரசியல் விமரிசன இதழைச் சோ வெளியிடுகிறார். அஃது எள்ளலும், நையாண்டியும் மிக்கது. மங்கை, மங்கை மலர் முதலான இதழ்கள் மகளிர்க்காக வெளிவருகின்றன.
வடக்கே வேங்கடமும், தெற்கே குமரிமுனையும் தமிழகத்தின் சங்க கால எல்லைகளாகும். இதனைப் பண்டு மூவேந்தர் ஆண்டு வந்தனர். குறுநில மன்னர்களும் அக் காலத்தில் வாழ்ந்தனர். அடுத்துப் பல்லவரும் நாயக்கரும் தமிழகத்தை ஆண்டனர். தமிழக மன்னர்கள் தம் ஆட்சியில் கல்வெட்டுகளை வெட்டுவித்தனர். அக்கல்வெட்டுகளும். இலக்கியங்களும் பண்டைத் தமிழக வரலாற்றை அறியப் பெரிதும் துணை புரிகின்றன.
தொடக்கத்தில் தமிழ்நாட்டு வரலாற்றைச் சரித்திரப் பேராசிரியர்கள் சிலர் ஆங்கிலத்தில் வெளியிட்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கே.ஏ. நீலகண்ட சாத்திரியும், இராமச்சந்திர தீட்சதரும், மீனாட்சியுமாவர்.
அன்மைக் காலத்தில் வரலாற்று நூல்களுள் சில தமிழில் வெளிவந்துள்ளன. டாக்டர் கே. கே. பிள்ளை “தமிழக வரலாறும் பண்பாடும்” எனும் நூலை வெளியிட்டுள்ளார். சதாசித பண்டாரத்தார் எழுதிய பிற்காலச்சோழர் வரலாறும் பாண்டியர் வரலாறும், இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் பாண்டிய வரலாறுகளும் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் வரலாறுகளும், டாக்டர் நாகசாமி எழுதிய இராசராசன், மாமல்லவன் வரலாறுகளும், அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை எழுதிய பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறும்" குறிப்பிடத்தக்க நூல்களாகும்.
இஃது இப்போது வளர்ந்து வரும் புதிய துறையாகும். கிரேக்கரே முதன்முதலாக இத் துறையைத் தொடங்கினர். அரிஸ்டாட்டில் தொடங்கி வைத்த திறனாய்வுக் கலையை ஹட்சன், வின்செஸ்டா, ஆபர்கிராம்பி, பிராட்லி, பெளரா, ஜான்சன் முதலிய ஆங்கிலப் புலவர்கள் வளர்த்தனர்.
தொல்காப்பியத்தை முதல் தமிழ் இலக்கியத் திறனாய்வு நூலாகக் கூறலாம், எழுத்ததிகாரத்தாலும் சொல்லதிகாாத்தாலும் மொழி நிலையைப் பற்றியும் பொருளதிகாரத்தால் அகப்பொருள், புறப்பொருள் மரபுகளையும் உவமையணியையும் செய்யுள் இலக்கணத்தையும் அது விளக்குகிறது.
பேராசிரியர் ஆ. முத்துசிவன் எழுதிய அசலும் நகலும், என்பதை முதல் தமிழ் இலக்கியத் திறனாய்வு நூலாகக் கூறலாம். அ. சா. ஞானசம்பந்தன் அவர்களின் இலக்கியக் கலையும், டாக்டர் மு. வ. வின் 'இலக்கிய ஆராய்ச்சி', 'இலக்கியத் திறன்' 'இலக்கிய மரபு' எனும் நூல்களும்தமிழிலுள்ள காவியம், நாடகம், சிறுகதை, நாவல் ஆகியவற்றைத் திறனாய்வு நோக்கோடு விளக்குகின்றன.
டாக்டர் சு. பாலச்சந்திரனின் ‘இலக்கியத் திறனாய்வு' என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட திறனாய்வு நூலாகும். அகிலனின் கதைக்கலை, மணவாளனின் அரிஸ்டாட்லின் கவிதையியல், டாக்டர் க. கைலாசபதியின் ‘இலக்கியமும் திறனாய்வும்’ இத் துறையில் எழுந்த பொதுத் திறனாய்வு நூல்களாகும்.
டாக்டர் மு. வ. வின் 'சங்க இலக்கியத்தில் இயற்கை ' டாக்டர் வ. சுப. மாணிக்கத்தின் 'தமிழ்க் காதல்', டாக்டர் முத்துக் கண்ணப்பரின் "நெய்தல் நிலம்”, டாக்டர் ரா சீனிவாசனின் - ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்' முதலியவை சங்க கால இலக்கியத்தின் திறனாய்வு நூல்களாகும்.
டாக்டர் கே. மீனாட்சிசுந்தரமும், மு. கோவிந்தசாமியும் பாரதி பா நலம் பற்றிய திறனாய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். சு. பாலச்சந்திரன் தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளைத் திறனாய்வு செய்து வெளியிட்டுள்ளார்.
டாக்டர் மா. செல்வராசன், பாரதிதாசன் கவிதைகளைத் திறனால்வு செய்து வெளியிட்டுள்ளார்.
டாக்டர் தா. வே. வீராசாமி சமுதாய நாவல்கள், நாவல் வகைகள் எனும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். டாக்டர் மா. இராமலிங்கம் 'நாவல் இலக்கியம் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பிலும், சிட்டி சிவபாத சுந்தரம் தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலும், ப, கோதண்டராமன் 'சிறுகதை ஒரு கலை' எனும் தலைப்பிலும், கா. சிவத்தம்பி தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலும் நூல்களை வெளியிட்டுள்ளனர்.
டி.கே. சண்முகம் ' நாடகக் கலை' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். டாக்டர் ஏ. ஏன். பெருமாளும் டாக்டர் இரா. குமரவேலனும் தமிழ் நாடகத்தைப் பற்றிய திறனாய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர்.
வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஓர் ஆய்வு நூல் வெளியிட்டுள்ளார். இந் நூலுக்குச் சாகித்திய அகாதமி பரிசு கிடைத்துள்ளது.உரைநடையாக்கம்
வட மொழி வான்மீகி இராமாயணத்தையும், வியாசர் பாரதத்தையும் மூதறிஞர் இராசாசி உரை நடையில் தந்துள்ளார். மூலக்கதைகளை அறிய இவ் உரைநடை நூல்கள் மிகவும் பயன்படுகின்றன. காவியங்கள் மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதனை அடுத்துக் கம்பராமாயணத்தையும், வில்லி பாரதத்தையும், சீவக சிந்தாமணியையும் அழகிய இனிய எளிய நடையில் டாக்டர் ரா, சீ. உரைநடை நூல்களாகத் தந்துள்ளார்.
திருக்குறளுக்குப் பழைய உரை பரிமேலழகர் உரை புலவர்க்கு மட்டும் விளங்குவதாக இருந்தது: திருக்குறள் தெளிவுரை ஒன்று தந்து யாவரும் திருக்குறளை அறிய உதவும் வகையில் டாக்டர் மு.வ. நூல் தந்தார்; அதனை அடுத்துப் பல தெளிவுரை நூல்கள் வெளி வந்துள்ளன. ‘திருக்குறள் செய்திகள்' என்னும் உரைநடை நூல் புதுக்கவிதை நடையில் டாக்டர் ரா. சீ. தந்துள்ளார். மூல நூல் படிக்காமலேயே திருக்குறள் கருத்துகளை அறிய இது உதவுகிறது. இதுவரை யாரும் செய்யாத புது முயற்சி; ஆற்றொழுக்காகத் திருக்குறள் செய்திகளை அனைவரும் அறியும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.
காவியங்கள் உரை நடையாக்கம் பெறுவதால் அவை எளிதில் பரவுகின்றன. இது புது முயற்சியாக அமைத்துவருகிறது.