தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1/002-003

வீர அபிமன்யு

சுவாமிகளின் புலமைக்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றில் அதிசயிக்கத்தக்க ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் கூறுகிறேன் :

நான் நடிக்கத் தொடங்கிய காலத்தில் அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு நாள் நாடக சபையின் உரிமையாளர்களில் ஒருவரான திரு. பழனியா பிள்ளை அவர்கள் சுவாமிகளிடம், “சுவாமி ! சண்முகம் கதாநாயகனாக நடிப்பதற்கு ஏற்றபடி ஒரு நாடகம் எழுதுங்கள்” என்று

டி. கே. எஸ். சகோதரர்கள் எனக் குறிக்கப்படும் சங்கரன், முத்துச்சாமி, சண்முகம், பகவதி. கூறினார். அப்போது எனக்கு வயது ஏழு; என்றாலும் நன்றாக நினைவிருக்கிறது.

அன்று மாலை சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்று அபிமன்யுசுந்தரி அம்மானைப் பாடல் பிரதியொன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு ‘அரிக்கன்’ விளக்கை அருகில் வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினார். மறுநாள் பொழுது விடிந்து நாங்கள் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரது படுக்கையருகே அபிமன்யு நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப்பட்டிருந்தது.

இது வெறும் கட்டுக் கதையன்று; உயர்வு நவிற்சியுமன்று. கண்கண்ட உண்மை. இச் சம்பவத்தை உடனிருந்து பார்த்த எங்கள் சக நடிகர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். திரு. பழனியா பிள்ளை அவர்கள் எல்லோரையும் அழைத்து அபிமன்யு நாடகத்தைக் காண்பித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள்!...அதற்கேற்ற உரையாடல்கள்! ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அடித்தல் திருத்தல் கிடையாது!...ஒரு புத்தகத்தைப் பார்த்து நகல் எடுக்கும் வேலையைக்கூட இவ்வளவு விரைவாகச் செய்ய முடியாது. கற்பனையாக நான்கு மணிநேரம் நடைபெறக் கூடிய ஒரு நாடகத்தையே எழுதி முடித்து விட்டார் சுவாமிகள். அவருடைய புலமைத் திறனை என்னென்று கூறுவது ?

“அடே சின்னப் பயலே! இந்த ‘அபிமன்யு’ நாடகம் உனக்காக எழுதப்பட்டது” என்று கூறிச் சுவாமிகள் அன்று என் முதுகிலே தட்டியபோது எனக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. இன்று அதை நினைத்துப் பூரிப்படைகிறேன்; பெருமிதங் கொள்கிறேன்.

கற்பனைச் சிறப்பு

ஒரே இரவில் இவ்வளவு துரிதமாக எழுதி முடித்த ‘அபிமன்யு’ நாடகத்தில் உள்ள பாடல்களிலும் உரையாடல்களிலும் நிறைந்துள்ள கருத்துக்கள் எண்ணி எண்ணி இன்புறுதற்குரியன. சுவை மிகுந்த ஒரு வசனத்தைக் குறிப்பிடுகிறேன்:

சுந்தரியை அபிமன்யுவுக்குக் கொடுக்க மறுத்து, துரியோதனன் மகன் இலக்கணகுமாரனுக்கு மணமுடிக்கச் சகல ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. மணமகன் தனது பரிவாரங்களுடன் வந்து விட்டான். மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன. இன்னும் சிறிது நேரத்தில் மணப்பெண்ணை அழைத்துப் போக வந்து விடுவார்கள். இந்த மனமற்ற மணத்திற்காக நடக்கும் மேளதாள ஒலிகளைக் கேட்டுச் சுந்தரி உடல் நடுங்குகிறாள்; கண்ணீர் விடுகிறாள். இசைக் கருவிகளின் முழக்கம் அவள் இதயத்தில் அடிப்பது போலிருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் வழக்கம்போல் சுந்தரிக்கு மலர்கள் கொண்டு வந்த ஒரு பாட்டியின் மூலம் அத்தான் அபிமன்யு வந்துவிட்ட சேதி தெரிகிறது. பூச்செண்டுக்குள் காதலன் வைத்தனுப்பிய கணையாழியும் ஓலையும் அவள் கையில் கிடைக்கின்றன. ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள் சுந்தரி. முன்பு இதயத்தைக் தாக்கித் துன்பத்தைத் தந்த அதே மேளவாத்ய ஒலிகள் இப்போது அவள் இதயத்தை மகிழ்விக்கின்றன. வசனத்தைப் படியுங்கள். சுந்தரியின்வாயிலாகச் சுவாமிகளின் புலமை வெளிப்படுகின்றது.

“தோழி! என்ன அதிசயமடீ ! சற்று நேரத்திற்கு முன் அந்த முட்டாள் இலக்கணனுக்கு நான் மனைவியாகப் போவதை அறிவித்து என் இதயத்தைத் துன்புறுத்திய அதே மேளதாள வாத்ய ஒலிகளெல்லாம் இப்போது எனக்குத் தேறுதல் கூறுவதுபோல் ஒலிக்கின்றனவே !”...

“துந்துபிகளெல்லாம் தும் தும் தும் என்றும், சங்குகளெல்லாம் பம் பம் பம் என்றும், தாளவகைச் சல்லரி மல்லரி கரடிகைகளோ தீம் தீம் தீம் என்றும், முரசு, பேரிகை, மிருதங்கங்களோ தோம் தோம் தோம் என்றும் தொனிக்கின்றன. ஆகவே, இவ்வகை வாத்திய ஒலிகள் எல்லாம் ஒன்றுகூடி தும் பம் தீம் தோம், தும்பம் தீம்தோம், துன்பம் தீந்தோம், துன்பம், தீர்ந்தோம் என்னும் பொருளைக் கொடுக்கலாயின. ஆஹா! நான் செய்த பாக்கியமே பாக்கியம். ”

இந்த வசனத்தைச் சுந்தரி பேசி முடித்ததும் அந்த நாளில் சபையோர் நீண்ட நேரம் கைதட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவிப்பார்கள். இந்த அருமையான கற்பனை ஒரே இரவில் எழுதி முடித்த ஒரு நாடகத்தில் இருந்தது என்பதை எண்ணிப் பார்க்கும்போது சுவாமிகளின் புலமை நன்கு புலனாகும்.

கோவலன்

சுமார் 43 ஆண்டுகளுக்குமுன் சுவாமிகளால் எழுதப்பட்ட கோவலன் நாடகம் மிகப் பிரசித்திபெற்றது. தமிழ் நடிகர்கள் அனைவரும் இந் நாடகத்தை நடித்திருக்கின்றனர். புகழ்பெற்ற இந்தக் கோவலன் நாடகத்தை இன்று புலவர்கள் சிலர் கண்டிக்கின்றனர்; குறை கூறுகின்றனர். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் பெருமை தெரியாத எவனோ ஒருவன் ‘கோவலன்’ என்ற பெயரால் ஒரு கூத்தைக் கி⚫⚫⚫ வைத்துவிட்டான் என்பது புலவர்களின் எண்ணம்.

கோவலன் கதை நாடகமேடைக்கு வந்த வரலாறும் சுவாமிகளின் பெரும் புலமைத் திறனும் இவர்களுக்குத் தெரியாது. தமிழ்மொழியிலே உள்ள அடிப்படை நூல்கள் அத்தனையும் சுவாமிகளுக்கு மனப்பாடம். அவருடைய பாடல்களிலும் வசனங்களிலும் திருக்குறளும் நாலடியாரும் வாரி இறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, குறுந்தொகை முதலிய சங்க நூல்களிலே புதைந்து கிடக்கும் சீரிய பேருண்மைகளெல்லாம் சுவாமிகளின் உரையாடல்களிலே எளிமையோடு வெளிவந்து உலாவுவதைக் காணலாம்.

மணிமேகலையைச் சிறிதும் மாற்றம் செய்யாமல் காப்பியப்படியே நாடகமாக்கித் தந்த சுவாமிகள், சிலப்பதிகாரக் கோவலனுக்கு வேறு வடிவம் கொடுத்திருப்பாரா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாடகமேடைக் கோவலனை அந்தக் காலத்தில் பண்டிதர்களும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். அவர்களில் எவரும் சிலப்பதிகாரத்தோடு நாடகக் கோவலனை இணைத்துப் பார்த்துக் குறைகூற முன் வரவில்லை.

அந்த நாளில் சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்தபோது மாபெரும் புலவர்கள் நிறைந்த யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தில் சுவாமிகளின் புலமையை ஆராயப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அக் கேள்விகளுக்கெல்லாம் மிக எளிதாகச் சுவாமிகள் விடையளிக்கவே, அவரது முத்தமிழ்ப் புலமையைப் பாராட்டிச் சங்கத்தார் வலம்புரிச் சங்கம் ஒன்றைப் பரிசாகத் தந்து சுவாமிகளைப் போற்றினார். இத்தகைய ஒரு பெரும் புலவர் மீது சிலப்பதிகாரத்தை அறியாதவர் என்ற குற்றச்சாட்டை வீசுதல் முறையன்று. கோவலன் நாடகம் தோன்றிய வரலாறு இது:

‘நளவெண்பா’ பாடிய புகழேந்திப் புலவர் பெயரால் அம்மானைப் பாடலாக நங்கைக் கதைகள் பல நமது நாட்டில் உலவி வந்தன. இக் கதைகள் நமது தாய்மார்களைப் பெரிதும் கவர்ந்தன. அல்லி அரசாணிமாலை, அபிமன்யு சுந்தரிமாலை, புலந்திரன் தூது, பவளக்கொடி மாலை, காத்தவராயன் கதை முதலிய பல கதைகள் இந்த வரிசையில் இடம் பெற்றவை. புலமைக்கடல் புகழேந்திப் புலவருக்கும் இந்தக் கதைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க முடியாது. ஆனால், இந்தப் புத்தகங்களில் எல்லாம் “புகழேந்திப் புலவர் அம்மானைப் பாடல்கள்” என்றே குறிப்பிட்டிருக்கும். தன்னை மறைத்துக் கொள்ள விரும்பிய யாரோ ஒரு புண்ணியவான் புகழேந்திப் புலவர் மீது இப் பழியைச் சுமத்தினார் என்றே கொள்ள வேண்டும்.

சுவை மிகுந்த இக் கதைகள் பெரும்பாலும் நாடகமாக்கி நடிக்கப்பட்டன. இந்த நங்கைக் கதைகளிலே ஒன்றுதான் கோவலன் என்ற பெயரால் நாடக மேடைக்கு வந்த கண்ணகி கதை.

முதலில் கோவலனை நாடக மேடைக்குக் கொண்டு வந்தவர்கள் ஆலந்தூர் ஒரிஜினல் நாடகக் கம்பெனியார் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் இந்நாடகத்தை இரண்டு பாகமாக இரண்டு இரவுகள் நடத்தினர்களாம்.

‘அல்லி பரமேஸ்வர ஐயர்’ அவர்கள் கம்பெனியில் சுவாமிகள் இருந்தபோது கோவலன் நாடகம் ஒரே இரவில் நடிக்கும் முறையில் புதிதாக எழுதப்பெற்றது. விலை மாதர் கூட்டுறவால் அல்லற்படும் இளைஞர்களுக்கு நீதி புகட்ட ஒரு புதிய கதையை எழுதுவதை விட நாடு நன்கறிந்த ‘கோவலன்’ கதையை எழுதுவது நல்ல பயனைத் தரும் என்பது சுவாமிகளின் நோக்கமாயிருந்திருக்க வேண்டும். முதலில் கோவலனாக நடித்த திரு. சூரியநாராயண பாகவதர் அவர்கள் சிறந்த பாடகராயிருந்ததால் அவருக்கென்றே பெரும்பாலும் வசனங்கள் தேவை யில்லாத முறையில் எளிய நடையில் முழுதும் பாடல்களாகவே எழுதிக் கொடுத்தார் சுவாமிகள். அதன் பிறகு திரு. வேலு நாயர் அவர்கள் கோவலனாக நடித்தபோது வசனங்களும் எழுதப்பட்டன. திரு. பரமேஸ்வர ஐயர் அவர்கள் குழுவில் என் தந்தையாரும் நடிகராயிருந்தமையால் இச்செய்திகளை அவர் மூலம் நான் அறியமுடிந்தது.

கோவலன் நாடகத்தை முதன் முறை மதுரையில் அரங்கேற்றியபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் சுவாமிகளின் புலமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

‘கோவலன்’ நாடகக் கதை எல்லோருக்கும் தெரிந்திருப்பதால் விளக்கமாகக் குறிப்பிட வேண்டியதில்லை. கண்ணகி கொடுத்த காற்சிலம்பை விற்றுவர மதுரை நகருக்குப் போவதாகக் கூறுகிறான் கோவலன். அப்போது கண்ணகியின் வாய் மொழியாக,

“மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு
மன்னா போகாதீர் இன்று”

என்ற பாடல் பாடப்படுகின்றது. மதுரை நகரில் அவர்கள் முன்னிலையிலேயே மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்குப் போகவேண்டாம் என்று பாடினால் அவர்கள் மனம் எப்படியிருக்கும்?...இந்தப் பாடலைப் பாடத் தொடங்கியதும் சபையோர் கூச்சலிட்டு “எங்கே சங்கரதாஸ் ? கொண்டு வா மேடைக்கு” என்று ஆரவாரம் செய்தார்கள்.

சுவாமிகள் மேடைக்கு வந்து கெம்பீரமாக நின்றார், சபையிலிருந்து கேள்விகள் சரமாரியாகக் கிளம்பின. “மாயாவியோர் கூடி வாழும் மதுரை” என்று குறிப்பிட்டு எழுதியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென மக்கள் குழப்பம் செய்தனர். சுவாமிகள் தமது கரங்களை உயர்த்தி அமைதியாக இருக்கும்படி வேண்டிக் கொண்டு தமது கருத்தை விளக்கத் தொடங்கினார் :

மா என்ற சொல் திருமகளாகிய இலக்குமியையும், பா என்ற சொல் கலைமகளாகிய பாரதியையும், வி என்ற சொல் மலைமகளாகிய பார்வதியையும் குறிக்கிறது” என்று கூறி, அதற்கு ஆதாரமாகப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலிருந்து சில செய்யுட்களைப்பாடி விளக்கம் தந்தார். “மாபாவியோர் கூடி வாழும் மதுரை என்றால், திருமகளும் கலைகளும் மலைமகளும் சேர்ந்து வாழும் மதுரை என்று பொருள் படுகிறது. அதாவது, சகல செல்வங்களும் நிறைந்து விளங்கும் மதுரையில், செல்வம் கொழிக்கும் அத்திரு நகரில் இந்தச் சிலம்பை வாங்க ஆள் கிடைக்காதே என்ற கருத்துப்பட “மா பாவியோர் கூடி வாழும் மதுரைக்கு மன்ன போகாதீர்” என்று மதுரை நகரைப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” என்றார். சபையோர் சுவாமிகளின் புலமையை வியந்து கை தட்டிப் பாராட்டினர்கள். முன் வரிசையில் இருந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் ஒருவர் எழுந்து, “சுவாமிகளே ! நீர் எந்தக் கருத்தில் எழுதியிருந்தாலும் சரி; உமது புலமைக்குத் தலை வணங்குகிறோம்” என்றார்.