தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1/003-003

நடிப்பைக் கைவிட்ட கதை

இரணியன், இராவணன், எமன் முதலிய பாத்திரங்களைத் தாங்கிச் சுவாமிகள் நடித்து வந்தாரெனக் குறிப்பிட்டேனல்லவா? அந்த நாளில் இவ்வேடங்களை நடிப்பதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையெனச் சுவாமிகள் பெயர் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

நல்ல உடற்கட்டும், எடுப்பான தோற்றமுமுடைய சுவாமிகள் வேடந்தாங்கி மேடையில் நிற்கும்போதே பார்ப்பதற்குப் பயமாக இருக்குமாம். ஆவேசத்துடன் நடித்துத் தமது கெம்பீரமான குரலை உயர்த்திப் பேசும் போது சிறு குழந்தைகள் அலறி விடுவார்களாம்.

சுவாமிகள் இவ்வேடங்களில் நடித்த காலத்தில் நிகழ்ந்த சில அதிசயமான சம்பவங்களைப்பற்றிச் சுவாமிகளின் மாணாக்கர்களில் ஒருவரான எனது தந்தையார் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எதிர்பாராத நிலையில் யாராவது திடீரென்று வந்து பயமுறுத்தும் போதோ, அல்லது அதிர்ச்சி யுண்டாக்கத் தக்க பெரும் சத்தத்தைக் கேட்கும்போதோ, “அப்பா ! கர்ப்பம் கலங்கி விடும் போலிருக்கிறதே!” என்று கூறுவதுண்டல்லவா ?

ஒருமுறை சுவாமிகள் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் நடித்தபோது, சத்தியவானுடைய உயிரைக் கவர்ந்துவர முடியாமல் திரும்பிய கிங்கரர்களைக் கோபித்துக்கொள்ளும் கட்டத்தில் ஆவேசத்துடன் கூச்சலிட்டுக் கையிலிருந்த சூலாயுதத்தை ஓங்கித் தரையில் அடித்தவுடன் உண்மையாகவே சபையிலிருந்த ஒரு அம்மையாருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு விட்டதாம். அன்று முதல் மேற்சொன்ன காட்சி நடைபெறுமுன் கம்பெனியார் மேடைக்கு வந்து, “கர்ப்பிணிகள் யாராவது இருந்தால் தயவுசெய்து இந்தக் காட்சி முடியும் வரை வெளியே சென்று விடுங்கள்” எனக் கேட்டுக் கொள்வார்களாம்.

மற்றொரு சமயம் ‘பிரகலாதன்’ நாடகத்தில் சுவாமிகள் இரணியனாக நடித்தபோது, “நாராயணாய நம” என்று கூறிய பிரகலாதனை இரணியன் தன் மடியிலிருந்து கீழே தள்ளிக் கோபித்துக்கொள்ளும் காட்சியில், சுவாமிகள் பிரகலாதனாக நடித்த சிறுவனைத் தமது வலது கையால் தூக்கிக் கீழே எறிந்து கர்ஜித்தாராம். சபையிலிருந்த ஓர் அம்மையார், “ஐயோ பாவி பிள்ளையைக் கொன்னுட்டானே” என்று அலறி மூர்ச்சையுற்றுச் சாய்ந்து விட்டாராம்.

‘நள தமயந்தி’ நாடகத்தில் சுவாமிகளின் சனீசுவர பகவான் வேடம் பார்க்க மிகப் பயங்கரமாக இருக்குமாம். உடம்பெல்லாம் கறுப்பைப் பூசிக்கொண்டு அதன்மேல், எண்ணையும் தடவிப் பளபளப்பான கருநிற மேனியுடன் சுவாமிகள் மேடைக்கு வரும்போது, பயந்த சுபாவமுடையவர்கள் கண்களை மூடிக் கொள்வார்களாம்.

ஒரு நாள் சனீசுவரனாக நடித்துவிட்டு விடிய நான்கு மணிக்கு அப்படியே வேடத்தைக் கலைக்காமலேயே எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சுவாமிகள் வெளியே சற்று தொலைவிலிருந்த ஒரு கிணற்றுக்குச் சென்றாராம். கருக்கிருட்டில் கிணற்றிலிருந்து தண்ணீ ரெடுத்துக்கொண்டு எதிரே வந்த ஒரு மங்கை இவரது தோற்றத்தைக் கண்டு அந்த இடத்திலேயே மாரடைப்பினால் உயிர் துறந்தாராம்.

இவ்வாறு பல நிகழ்ச்சிகள் அடிக்கடி ஏற்பட்டு வந்ததின் விளைவாகச் சுவாமிகள் நடிப்பதைக் கைவிட்டு ஆசிரியப் பணியை மட்டும் மேற்கொண்டதாகத் தெரிகிறது.

சுவாமிகள் வேடம்பூண்டு நடிப்பதைப் பார்க்கக் கொடுத்து வைக்காவிட்டாலும், மற்றவர்களுக்குப் பயிற்சி யளிப்பதற்காக நடித்துக் காட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். அதுவும் எமன், இரணியன், சிறுத்தொண்டரில் காள பைரவர், கடோத்கஜன் முதலிய வேடங்களைத் தாங்குவோருக்கு அவரேதான் நடித்துக் காட்டுவார். கண்களை உருட்டி விழித்துக் கோபக்கனல் தெறிக்கப் பற்களை ‘நற நற’ வென்று கடிக்கும்போது எங்களுக்கெல்லாம் சுவாமிகளைப் பார்ப்பதற்கே அச்சமாயிருக்கும். சாதாரணத் தோற்றத்திலேயே இவ்வாறு அச்சமேற்படுமானால் வேடத்தையும் போட்டுக்கொண்டு நிற்கும்போது எப்படி யிருந்திருக்கும் ?

முத்துச்சாமி சேர் சங்கரதாசர்

ஒரு புலவரை மற்ருெரு புலவர் பாராட்டுவது அபூர்வமாக இருந்த அந்தக் காலத்தில் சுவாமிகளுக்கும் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் அவர்களுக்கும் இருந்த அன்புத் தொடர்பைப் பற்றிப் பல பெரியார்கள் வியந்து கூறக் கேட்டிருக்கிறேன். இரு பெரும் புலவர்கள், அதுவும் ஒரே துறையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒற்றுமையோடு பழகிய பான்மையைக் கண்டு எல்லோரும் அதிசயப் பட்டிருக்கிருர்கள்.

சுவாமிகள் காலஞ்சென்றபின் தத்துவ மீனலோசனி சபையில் கவிராயர் அவர்கள் சில மாதங்கள் ஆசிரியப் பொறுப்பை ஏற்று மதுரைவீரன், மன்மத தகனம் முதலிய நாடகங்களைப் பயிற்றுவித்தார். எங்களெல்லோரையும் கூட்டி வைத்துக்கொண்டு கவிராயர் அவர்கள் சுவாமிகளுக்கும் தமக்கும் உள்ள தொடர்பைப் பற்றி அடிக்கடி பேசுவதுண்டு.

கவிராயர் அவர்கள் பெரும்பாலும் பாட்டின் கடைசி வரியில் தனது பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதேயில்லை. அக்காலத்திலிருந்த புலவர்களிற் பலரும் இவ்வாறு ‘முத்திரை அடி’ பொறித்துத்தான் பாடலை முடிப்பது வழக்கம். சுவாமிகள் ஒருவர் மட்டும் இதில் மாறுபட்ட கருத்துடையவர். தமது பாடல் ஒன்றில் கூட பெயர் முத்திரை வைத்ததேயில்லை. பிற்காலத்தில் பெயர் விளங்குவதற்காகவாவது ஆசிரியன் பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியமெனக் கவிராயர் அவர்கள் சுவாமிகளிடம் அடிக்கடி வற்புறுத்துவாராம். சுவாமிகள் இதற்கு அடியோடு மறுத்து விடவே கவிராயர் அவர்கள் தாம் எழுதிய இராமாயண நாடகப் பாடல்கள் சிலவற்றில், " முத்துச்சாமி சேர் சங்கரதாசர் ” என்று இருவர் பெயரையுமே ‘முத்திரை அடி’ யாக வைத்து விட்டார். இலங்கா தகனம் நாடகத்தில் ‘அனுமான்’ பாடும் சில பாடல்கள் இவ்வாறு இருவர் பெயரையும் தாங்கி நிற்கின்றன.

புலமை விளையாட்டு

ஒருமுறை கவிராயர் அவர்கள் சுவாமிகளை நோக்கி. “சங்கரதாஸ் சுவாமிகளே!” உம்முடைய பாடல்கள் முள்ளும் முரடும் போல் இருக்கின்றன” என்றாராம், உடனே சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “ “கவிராயர் பாடல்கள் கல்லும் கரடும் போல் இருக்கின்றனவே!” என்றாராம். புலவர்களின் விளையாட்டுப் பேச்சுக்களிலே கூட இனிமை சொட்டுவதைக் காண்கிறோம். முள்ளும் முரடும், கல்லும் கரடும் என்பவற்றை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் முரட்டுத்தனமான பாடலென்றும் கடினமான பாடலென்றும்தான் பொருள் தோன்றும், ஆனால், உட்பொருள் அதுவன்று. முள்ளும் முரடும் போல் என்றால் பலாச் சுளையைப் போல் இனிக்கிறது என்றும், கல்லும் கரடும் போல் என்றால், கற்கண்டைப் போன்றது என்றும் பொருள் கொள்ளவேண்டும்.

இருவரும் பாடிய பரதன் பாட்டு

கவிராயர் அவர்கள் ஒரு நாள் இராமாயணப் பாடல்களைப் புனைந்து கொண்டிருந்தார். கேகய நாடு சென்றிருந்த பரதன், தீய கனாக் கண்டு தம்பி சத்துருக்கனிடம் தான் கண்ட கனவைச் சொல்லுகிறான். பரதனுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார் கவிராயர் அவர்கள்.

நான் கண்டேன் பல தீங் கண்டும் கனவு
ஓங்கி எங்கெங்கும் உலகம்இருள

.........பாடல் தடைப்பட்டது. அடுத்த வரி பொருத்தமாக வராததால் வெளியே சென்று உலவிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கே வந்த சுவாமிகள் கவிராயர் எழுதியிருந்த பாடலைப் பார்த்துவிட்டு அதன் கீழே,

‘ஒலி இடியுடன் மலைகள் உருள’

என்றெழுதிப் பாடலின் அடுத்த அடியைப் பூர்த்திசெய்து விட்டு உள்ளே போய்விட்டார். கவிராயர் அவர்கள் தொடர்ந்து எழுதுவதற்காக விரைந்து வந்தவர் தமது பாடல் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதைக் கண்டதும், அவ்வாறு எழுதியவர் சுவாமிகள்தாம் என்பதை ஊகித்துக்கொண்டு, “எங்கே சங்கரதாஸ் சுவாமிகள்? வந்து எவ்வளவு நாழியாயிற்று?” என்று கேட்டாராம்.

உள்ளத் தொடர்பு

கவிராயர் அவர்களிடம் பாடம் கேட்கும் மாணாக்கர்கள் சுவாமிகளையும், சுவாமிகளிடம் பாடம் கேட்கும் மாணாக்கர்கள் கவிராயர் அவர்களையும் தங்கள் குருநாதராகவே எண்ணிப் போற்றுவது வழக்கம்.

கவிராயரவர்களின் மாணாக்கர்களில் ஒருவராகிய உடுமலை நாராயணக் கவி அவர்கள் சுவாமிகளிடமும் வெண்பா, கலித்துறை முதலியவற்றைப் பாடம் கேட்டாராம்.

சுவாமிகளின் மறைவைக் கேட்டுக் கவிராயர் அவர்களும் அவரது மாணாக்கர்களான திருவாளர்கள் சந்தான கிருஷ்ண நாயுடு, சங்கரலிங்கக் கவிராயர் முதலியோரும் ‘இரங்கற் பாக்கள்’ எழுதியனுப்பி யிருந்தனர். சுவாமிகளின் பெருமையை விளக்கும் அப் பெரியார்களின் உருக்கமான பாடல்கள் ஒன்று கூட இன்று நமக்குக் கிடைக்கவில்லை. கவிராயர் அவர்கள் பாடியவற்றில் இரண்டு வரிகள் மட்டும் எங்களுக்கு நினைவிலிருக்கின்றன.

“நான் சாக நீகாண வேண்டுமென
        நினைத்திருந் தேன்
தான் சாக மருந்துண்ட
       சங்கரதாஸ் ஐயனே”

என்ற அந்த இரண்டு வரிகளிலேயே கவிராயர் அவர்களுக்கும் சுவாமிகளுக்கும் இருந்த உள்ளத் தொடர்பு வெளிப்படுகிற தல்லவா ?.........

புலவனைப் போற்றிய புலவர்

சுவாமிகள் மிகுந்த உதார குணமுடையவர். எளியோர்க் கிரங்கும் உள்ளம் படைத்தவர். பொருள் திரட்டும் போக்கு அவரிடம் இறுதிவரை இருந்ததேயில்லை. தன்னிடம் இருப்பதை எல்லோருக்கும் கொடுத்து இன்புறும் பண்பு சுவாமிகளிடம் நிறைந்திருந்தது.

அந்தக் காலத்தில் தமிழகத்தின் வட பகுதியிலே நாடாகாசிரியராகத் திகழ்ந்தவர் திருவாளர் ஏகை—சிவ சண்முகம் பிள்ளை அவர்கள். இராமாயணம், கண்டி ராஜா, ஹரிச்சந்திரன் முதலிய நாடகங்கள் இப்பெரியாரால் இயற்றப் பெற்றவை. வேலூர் தி. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் கம்பெனி முதல் இன்று வரை சம்பூர்ண இராமாயணத்தை நடிக்கும் எல்லாச் சபையினரும் திரு. சிவ சண்முகம் பிள்ளை அவர்களின் பாடல்களையே பாடிவருகிறார்கள் என்பது இப்பெரியாருக்குப் பெருமை தருவதாகும்.

சுவாமிகள் ஒருமுறை இவரைச் சென்னையிலே சந்தித்தபோது இவருடைய கண்டி ராஜா நாடகத்திலுள்ள சந்தப் பாடல்களைப் புகழ்ந்து வெகுவாகப் பாராட்டினர். பிள்ளை அவர்கள் அப்பொழுது கையில் பொருளில்லாது மிகவும் வறுமை வாய்ப்பட்டிருந்தார். இதை அருகிலிருந்த அன்பர்களின் வாயிலாக அறிந்த சுவாமிகள், அந்த இடத்தில் அவரிடம் நேரில் பணம் கொடுத்தால் காசு வாங்கக் கூசுவாரென்றெண்ணி நூறு ரூபாய் நோட்டுக்களை ஓர் உறையில் வைத்துப் பிள்ளையவர்களின் பையில் போட்டுவிட்டார். சுவாமிகளிடம் பேசிவிட்டு வண்டியேறிப் புறப்பட்ட திரு. சிவசண்முகம் பிள்ளை அவர்கள் சற்று தூரம் சென்றதும் எதற்கோ பையை எடுத்தவர் ‘சங்கரதாசனின் அன்புக் காணிக்கை’ என்றெழுதப்பட்ட உறையையும், அதனுள் வைக்கப்பட்டிருந்த நூறுருபாய் நோட்டுக்களையும் பார்த்துத் திரும்பி வந்து “புலவனைப் புலவனே அறிவான்; ஆனால், புலவனைப் புலவன் போற்றுவதில்லை. தாங்கள் அதற்கு விதி விலக்கு!” என்று கண்கலங்கக் கூறிச் சுவாமிகளைத் தழுவிக் கொண்டார்.

ஆண்ட சக்கரவர்த்தி

கம்பெனியில் திங்கட்கிழமை தோறும் பஜனை நடைபெறுவது வழக்கம். நாங்களெல்லோரும் கூட்டமாகவும் தனித் தனியாகவும் சுவாமிகளின் பாடல்களைப் பாடுவோம். மதுரையில் ஒரு நாள் புட்டுத் தோப்பிலுள்ள கம்பெனி வீட்டில் திங்கட்கிழமை பஜனை வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயம். இரவோடு இரவாக சுவாமி ஊர்வலம் புறப்பட்டுப் புட்டுத் தோப்புக்கு வருகிற நாள். பஜனையில் நாங்களெல்லோரும் பாடி முடித்த பிறகு, வந்திருந்த சில நண்பர்களும் தனித் தனியே பாடினார்கள். கடைசி



தலைமையாசிரியர் சடலத்தின் முன் தம்பி பகவதி.

யாகச் சுவாமிகளைப் பாடவேண்டு மென்று எல்லோரும் வற்புறுத்தினர்கள். “எவ்வளவு நேரம் பாடவேண்டும்?” என்று கேட்டார் சுவாமிகள். தங்கள் மனம் போல் பாடுங்கள்” என்றார் ஒருவர். திருவாளர் பழனியா பிள்ளை அவர்கள், “சுவாமி ஊர்வலம் இங்கு வருகிறவரை பாடுங்கள்” என்றார்,

திருப்புகழ்ச் சந்தத்தில் ஆண்ட சக்கரவர்த்தி என்று பாடத் தொடங்கினர் சுவாமிகள். பாடிக்கொண்டேயிருந்தார். ஏற்கெனவே நெட்டுருப் போட்டிருந்த பாடலன்று ; அப்போதுதான் கற்பனையாக எழுந்த பாடல். எல்லோரும் வியப்பே வடிவாக வீற்றிருந்தனர். பாடல் முடியவில்லை. மேலும் தொடர்ந்து பாடிக்கொண்டே பரவச நிலையிலிருந்தார் சுவாமிகள். சற்று நேரத்தில் சுவாமி ஊர்வலம் வருவதை அறிவிக்கும் நாதசுர இன்னிசை கேட்டது. மேளச் சத்தம் தனது பாட்டுக்கு இடையூறாக வந்த நிலையில் பாடலை முடித்தார் சுவாமிகள். சுமார் ஒரு மணி நேரம் சுவாமிகள் பாடியதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

புகழ் பாட மறுத்தல்

அக்காலத்தில் தமிழறிஞர்களையும் புலவர்களையும் ஆதரித்து வந்த வள்ளல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் சுவாமிகளைக் காண விரும்பினர். மன்னருடைய காரியதரிசி ஒருவர் சுவாமிகளை அணுகி, “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவருமில்லையே! சுவாமிகள் மட்டும் ஏன் இன்னும் மன்னர் மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினால் உங்களுக்குக் ‘கனகாபிஷேகம்’ செய்வாரே மன்னர்!” என்றார்,

சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்து பாடுவதில்லை யென்று நோன்பு கொண்டவர். ஆதலால் மன்னர் மீது புகழ்மாலை பாட மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பலர் வந்து இதுபற்றி வற்புறுத்தியபோது சினங் கொண்டு, “மன்னனும் மறவன்; நானும் மறவன்; என்னைவிட மன்னன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்லன். எதற்காக நான் அவனைப் புகழ வேண்டும் ? மன்னன்மீது பாடினால் தான் எனது புலமை மன்னனுக்குப் புரியுமோ ?” என்று கூறிவிட்டார். சுவாமிகள் இறுதி வரையில் ‘நரஸ்துதி’ பாடவே யில்லை யென்பது குறிப்பிடத் தக்கது.

தமிழை விற்கச் சம்மதியேன்

சுவாமிகள் அவ்வப்போது எழுதிய பக்தி ரசப் பாடல்களை யெல்லாம் திரட்டி ஒரு சிறு நூலாக வெளியிடச் சில அச்சகத்தார் முயன்றனர். சுவாமிகளிடம் அனுமதி கேட்டபோது, “இலவசமாகக் கொடுப்பதானால் அச்சிட்டுக் கொள்ளுங்கள். தமிழை விலைக்கு விற்கச் சம்மதிக்க மாட்டேன்” என்று கூறி மறுத்து விட்டார்.

முடிவுரை

திறமை வாய்ந்த ஒரு பெரும் புலவரிடம் இத்தகைய நற்பண்புகளும் குடிகொண்டிருந்தமையால் தமிழ் நாடக உலகம் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றி வணங்குகிறது.

சுவாமிகள் மறைந்தார். அவரது பாடல்கள் என்றும் மறையா; அழியா. சுவாமிகளின் திருப்பெயர் தமிழ் உலகம் உள்ளவும் மங்காது நின்று ஒளி வீசுமாக !

வணக்கம் !

சுவாமிகள் எழுதியுள்ள
நாடகங்கள்
——

அபிமன்யு சுந்தரி
பார்வதி கல்யாணம்
பிரபுலிங்க லீலை
வள்ளி திருமணம்
பாதுகா பட்டாபிஷேகம்
இலங்கா தகனம்
அல்லி அர்ஜுனா
சிறுத்தொண்டர்
சதி அனுசூயா
பவளக்கொடி
சுலோசனா சதி
மணிமேகலை
மிருச்சகடி
சீமந்தனி
சாவித்திரி
கோவலன்
பிரகலாதா
ரோமியோவும் ஜூலியத்தும்