தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/ஞானியாரெனும் சமரசச் சமுதாயத் துறவி


சிவசிவ
ஞானியாரெனும் சமரசச்சமுதாயத் துறவி
பேராசிரியர், 'சிந்தாந்தசரபம்’
டாக்டர் வை. இரத்தினசபாபதி, ஆசிரியர் 'சித்தாந்தம்’

அருளியல் நெறிப்பாட்டுடன் இணைந்த உலகியல் வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன் மனிதன். ஆனால், உலகியல் வாழ்க்கையின் தரத்தினை, ஏற்றத்தாழ்வுகளை வரையறைப் படுத்திப் பார்ப்பது போல அவனால் அருளியல் பின்னணியை வரையறை செய்து பார்த்து மகிழ இயலவில்லை.

உலகியல் வாழ்க்கையானது அவனுக்கு ஏற்றத்தாழ்வுடன் கூடி அமைகிறது. ஆனால், அருளியற் பின்னணியோ அவனுக்கு ஏற்றத்தாழ்வுடன் அமைதல் இல்லை. ஒருபடித்தாக நின்று அவனை நெறிப்படுத்தி வரும் அருளியற் பின்னணியை உணருவதில் அவனுக்கு ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். உண்மையில் அருள் நெறிப் பின்னணியில் ஏற்றத் தாழ்வு அமைதல் இல்லை.

அருள்நெறிப் பின்னணியில் எளியேனுக்குப் பிறப்பிடம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் திருமடம். யான் புகுந்த இடம் மயிலம் சிவத்திரு சிவஞான பாலயசுவாமிகள் திருமடம். அருள்நெறி பின்னணியில் இரண்டும் என்னை இடைவிடாது இயக்கி வருவதையான் வாழ்க்கையில் அனுபவித்து வருகிறேன்.

'ஞானியார்' என்ற ஒரு பெயராலேயே உலகத்து ஞானியார்கள் எல்லாராலும் உணர்ந்தும் தெளிந்தும் ஓதியும் வழிபட்ட ஒப்பற்ற அருளாளரே புலிசைஞானியார் அடிகள்.

ஞானி ஞானி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
ஞானி ஒருவனும் அல்லன்
வாணியும் உண்டு ஈண்டு அறிவு சிறந்தோளே”

என்று அறிஞர்கள் பலரும் புகழ்ந்து கூறும் அளவில் சமரசச் சமுதாயத் துறவியாகத் திகழ்ந்தவர் தவத் திரு ஞானியாரடிகள்.

தமிழ் நாடெங்கணும் இறைவனளித்த முத்துச் சிவிகையிலேயே வலம் வந்து ஞானத் தமிழ்பரப்பிய பரசமய கோளரியென விளங்கிய ஞானசம்பந்தப் பெருமான் சிவசாயுச்சியப் பெரு வாழ்வைத் தம்முடன் வந்த அனைவருடனும் சென்று எய்திய வைகாசி மூலத்தில் தான் ஞானியாரடிகள் என்னும் குழந்தை இறைவனால் மீளவும் வருவிக்கப்பெற்றது. சிவிகையூர்ந்து சமயத்தையும் சமுதாயத்தையும் வளர்த்த திருஞான சம்பந்தரேயான் என உலகவர் போற்றுமாறு வாழ்நாள் முழுவதும் சிவிகையூர்ந்தே தமிழையும் சைவத்தையும் வளர்த்ததுடன் எந்த ஒரு சமயத்தையும் கண்டித்துக் கூறுதல், வாதம் செய்தல், போன்ற செயல்களை முற்றாகத் தவிர்த்து, சைவ சமயத்தை மேலும் மேலும் விளக்கமாக எடுத்துக்கூறி மாற்றாரும் மனமகிழ்ந்து ஏற்றுக் கொள்ளுமாறு சமரச உண்மைகளைப் பேசிச் சமுதாயத் தொண்டாற்றிய மாபெருஞ் சாதனையாளர் ஞானியார் சுவாமிகள்.

மனிதனை மனிதன் வணங்குவது தவறு என்றும், அதிலும் மனிதன் காலில் மனிதன் விழுவது தவறு என்றும் நாள்தோறும் மேடையில் முழங்கியும் தம் பத்திரிகையில் விரிவாக எழுதியும் இது என்னுடைய வாழ்வியற் கொள்கை என்று முழங்கியும் வந்த மாமனிதர்கள் எல்லாம் இந்த அருளாளர் திருவடிகளில் விழுந்து வணங்கவில்லையென்றால் அதுதான் ஆணவம் எனக் கூறி பெருங்கூட்டம் சான்றாக நிற்க, அடியற்ற மரம் போல் விழுந்து வணங்கும் வண்ணம் அருளாட்சிச் செங்கோல் அரசாய், திருமடத்தின் தலைவராய் வாழ்ந்த அருளாளரே ஞானியார் அடிகள்.

ஞானியார் அடிகள் வீரசைவத் திருமடத்தின் அருளாட்சித் தலைவர். சைவசமய அருளாளர்களின், தத்துவவாதிகளின் கொள்கைகளைச் சாதாரணமக்களும் புரிந்து கொள்ளுமாறு பேசினார். அடிகளுக்குக் கிறித்துவமும் முஸ்லீம் கொள்கையும் வைணவத் திருவும் மிகமிக நன்றாகத் தெரியும். எந்த ஒரு கொள்கையையும் தாக்கியோ அக்கொள்கையாளர்களின் மனம் புண்படுமாறு பேசியோ சைவத்தை அவர் வளர்க்கவில்லை. சைவ சமயத்தின் உள்ளார்ந்த அற்புதங்களையும் கொள்கை உயர்வையும் கேட்போர் உளங்கொளுமாறு பேசியே சைவத்தை வளர்த்தார்.

அனைத்து மதத் தலைவர்களும் அடிகளிடம் நட்புப்

பேணியதோடன்றி, கிடைத்த நட்பைப் போற்றிப் பேணவும் தலைப்பட்டனர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சமயவாதிகளின் சமய அறிவையும் அவர்கள் நாள்தோறும் சமயச் சண்டை நிகழ்த்தும் முறையையும் குறிப்பிட்ட கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

“இதெல்லாம் பொதுவாக நாம் பார்த்திருக்கும் விஷயங்கள். ஆனால் விதிவிலக்காக சைவத்திலும் வைணவத்திலும் சில பெரியார்கள் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே சமய தத்துவங்களை உணர்ந்தவர்கள்; சமய வாழ்க்கை நடத்துபவர்கள். இப்படி விதிவிலக்காயுள்ள சமயப் பெரியார்களுக்குச் சிறந்த உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீஞானியார் சுவாமிகளைத்தான் குறிப்பிட வேண்டும்”

அடிகளின் உருவத்தோற்றத்தைப் பார்த்ததுமே “இதோ ஒரு பெரியார் இருக்கிறார்” என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகும். அவருடைய வாய்மொழியைக் கேட்டு அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். “அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா? என்று எண்ணி எண்ணி வியப்போம்” என்று குறிப்பிட்டுள்ளமையை நோக்கி உணரலாம்.

ஞானியாரடிகள் பன்மொழிப் புலவர். புலமை தோன்றப் பேசுவது வேறு; மொழிவன்மை தோன்றப் பேசுவதும் வேறு. சுவாமிகள் மொழிக்காழ்ப்பு இல்லாமல் பேசும் திறன் கொண்டவர்கள். கேட்பவர் பலதிறத்தவராக இருப்பார்கள். பலமொழியினராக இருப்பார்கள். அவரவர்தம் தகுதிக்கேற்பப் பல்வேறு கட்டங்களில் சாதாரணச்செய்தி முதல் ஆய்வுச் செய்தி வரையில் அடுக்கடுக்காக வரிசைப் படுத்திக் கூறும் ஆற்றல் அடிகளுக்கு மட்டுமே உண்டு. காரணம் அவர் தம் பேச்சானது அன்பையும் கருணையையும் ஆர்வத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சமுதாய வளர்ச்சிக்காகவே தொண்டாற்றினார். எம்முடைய கடவுளை அடையவேண்டும் வாருங்கள் என அழைப்பதாக அவர் பேசுவதில்லை.

“சமய வாழ்க்கையை இந்தச் சமுதாயம் பெற வேண்டும் என்பதும் சமுதாயம் சிறப்பதற்காகவே சமய வாழ்வு அமைய வேண்டும் என்பதும் அதற்குத் தொண்டு ஒன்றே தலைமையான கருவி” என்பதும் ஆயமூவகை உண்மைகளை உணர்ந்தும் உணர்த்தியும் தொண்டாற்றிய காரணத்தால் புலிசைத் திருமடத்துக்கேயன்றிப் பொதுமை உலகச் சமுதாயத்துக்கே நலம் வளர்க்கும் ஞானியாராகத் திகழ்ந்தவர் ஞானியார் அடிகள்.

தந்தைப் பெரியார் அவர்களின் ‘குடியரசு’ப் பத்திரிகையைத் தொடங்கி வைத்த ஞானியாரடிகள் “பல்லக்குச் சாமியார்” என்று பிறசமயத்தார்களாலும் பாராட்டப் பெற்ற பெருமையுடையவர்.