தம்ம பதம்/அத்த வக்கம்

இயல் பன்னிரண்டு

ஆன்மா

155. ஒருவன் தன்னைத்தான் நேசிப்பானாகில், அவன் தன்னையே கவனமாய்க் காத்துவரவேண்டும். இரவில் மூன்று யாமங்களில் ஒன்றிலாயினும் ஞானி விழிப்புடன் கவனமாயிருப்பானாக. (1)

156. ஒவ்வொரு மனிதனும் முதலில் தான் நன்னெறியில் நிலைபெறவேண்டும்; பிறகுதான் மற்றவர்களுக்குப் போதிக்கவேண்டும். இத்தகைய ஞானி கிலேசமடைவதில்லை. (2)

157. மற்றவர்களுக்குப் போதிக்கிறபடி ஒருவன் தன்னைப் பண்படுத்திக் கொள்ளட்டும். தன்னை நன்கு அடக்கி யாண்ட பிறகு, பிறரை அடக்கியாள முடியும். ஏனெனில் தன்னை அடக்கிக் கொள்வதே கடினமான காரியம். (3)

158. ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனாயிருக்க முடியும்? தன்னை நன்கு அடக்கி வைத்துக் கொண்டால், ஒருவன் பெறுதற்கரிய தலைவனைப் பெற்றவனாவான். (4)

159. மூடனுடைய பாவம் அவனிடமே பிறந்தது, அவனே படைத்தது. வயிரம் மற்ற மணிகளை அறுப்பதுபோல், அவன் செய்த பாவமே அவனை அழித்து விடும். (5)

160. மாலுவக் கொடி கடம்பமரத்தைச்சுற்றிப் படர்ந்து மரத்தையே அமுக்கி விடுவதுபோல், ஒருவனுடைய தீவினையே அவனை அமுக்கிவிடுகிறது; பகைவர் செய்ய விரும்பும் தீமையை அவன் தானாகவே செய்து கொள்கிறான். (6)

161. தீமை பயக்கும் தீவினைகளைச் செய்தல் எளிது; நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தலே மிகவும் கஷ்டமாகும். (7)

162. முனிவர்களும், மேலோர்களும், தரும வழியில் நடப்பவர்களும் போதிப்பதை மடமையுள்ள மனிதன் புறக்கணித்துவிட்டுத் தீய நெறியில் செல்கின்றான்; (அதனால்) கட்டகப்புல்[1] (தன் கனியாலே தன்னை அழித்துக் கொள்வது) போல், தன்னையே அழிக்கும் கனியை-வினைப்பயனை-அடைகிறான். (8)

163. ஒருவன் தானாகவே பாவம் செய்கிறான், தானே தனக்குக் கேடு தேடுகிறான். ஒருவன் தானாகவே பாவத்தை விலக்குகிறான், தானே தன்னைப் புனிதமாக்குகிறான். சுத்தமும் அசுத்தமும் அவன் செயலே; எவனும் பிறனைப் புனிதமாக்குவதில்லை. (9)

164. எவ்வளவு உயர்ந்ததாயினும் பிறருடைய கடமைக்காக எவனும் தன் கடமையைக் கைவிடலாகாது; தன் கடமையைக் கண்டறிந்த பின்பு, அவன் அதையே நன்றாக ஆற்றி வருவானாக. (10)

  1. கட்டகப் புல்-நாணல் கொறுக்கைப் போன்ற ஒருவகைப் புல்; அதன் பூ கனியாக முதிர்ந்ததும் அது அழிந்துவிடும் என்பர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/அத்த_வக்கம்&oldid=1381544" இலிருந்து மீள்விக்கப்பட்டது