தம்ம பதம்/லோக வக்கம்

இயல் பதிமூன்று

உலகம்

165. அதருமத்தில் செல்ல வேண்டாம்; அசட்டையாக வாழ வேண்டாம். தவறான கொள்கையைக் கைக்கொள்ள வேண்டாம். உலகத்தின் (பற்றோடு) உறவு கொள்ள வேண்டாம். (1)

166. விழித்தெழுக! கருத்தில்லாமல் இருக்க வேண்டாம் தரும ஒழுக்கத்தைக் கடைப்பிடி. தரும வழியில் நடப்பவனுக்கு இகத்திலும் சுகம். பரத்திலும் சுகம். (2)

167. தரும ஒழுக்கத்தில் நடப்பாயாக, தீயொழுக்கத்தில் செல்லவேண்டாம், தரும வழியில் நடப்பவனுக்கு இகத்திலும் சுகம், பரத்திலும் சுகம். (3)

168. வையகத்தை நீர்க் குமிழியாகவும், கானல் நீராகவும் காண்பவனை எமதர்மன் கண்டு கொள்ள முடியாது. (4)

169. இந்த உலகம் அரசனுடைய அலங்கரிக்கப் பெற்ற தேர் போல் ஜொலிப்பதை வந்து பார்! பேதைகள் இதிலே ஆழ்ந்து விடுகிறார்கள். ஞானிகளுக்கு இதிலே பற்றில்லை. (5)

170. முன்னால் சிந்தனை யற்றிருந்து, பின்னால் விழிப் படைந்து தெளிந்தவன், மேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப்போல் இந்த உலகை ஒளிபெறச் செய்கிறான். (6)

171. பாவத்தை நல்வினையால் மறைக்கும் ஒருவன் மேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப்போல், இந்த உலகை ஒளிபெறச் செய்கிறான். (7)

172. இருளே இவ்வுலகின் இயற்கை; இங்கு சிலரே (விழி பெற்று) உண்மையைக் காண முடியும். வலையிலிருந்து தப்பிய பறவைகள் போல, சிலரே சுவர்க்கம் செல்கின்றனர். (8)

173. அன்னங்கள் கதிரவன் வழியில் செல்கின்றன; அவை தங்களுடைய அற்புத ஆற்றலால் ஆகாய வழியே செல்கின்றன. மாரனையும் அவன் படைகளையும் வென்ற ஞானிகள் (அவ்வாறே) இந்தஉலகை விட்டு வெளியே செல்கிறார்கள். (9)

174. ஒப்பற்ற தருமத்தைக் கைவிட்டுப் பொய்யே பேசியும், பரலோகத்தைப் பரிகசித்தும் வருவோன் செய்யத் தகாத பாவம் எதுவுமில்லை. (10)

175. கருமிகளே தேவர் உலகை நண்ணுவதில்லை மூடர்களே ஈகையைப் போற்றுவதில்லை. ஆனால் ஞானி ஈகையில் இன்புற்று, [அதனால்] மறு உலகிலும் சுகமடைகிறான். (11)

176. பாருலகை ஒரு குடைக்கீழ் ஆள்வதைப் பார்க்கினும் சுவர்க்கம் புகுவதைப் பார்க்கினும், எல்லா உலகங்களின் மீதும் ஆதிக்கியம் செலுத்துவதைப் பார்க்கினும் உயர்வானது சோதாபத்திப்[1] பயன் அடைவது. (12)

  1. சோதாபத்தி- நிருவாண வழியில் முதற்படி.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/லோக_வக்கம்&oldid=1381546" இலிருந்து மீள்விக்கப்பட்டது