தம்ம பதம்/சித்த வக்கம்

இயல் மூன்று

சிந்தனை

33. காப்பதற்கும், அடக்குதற்கும் அரிதான சபல சித்தத்தை அறிவாளி, வேடன் தன் அம்பை நிமிர்த்துவது போல, நோக்குகிறான். (1)

34. தண்ணீரிலிருந்து வெளியே தரையில் எடுத்தெறியப்பட்ட மீன் துடிப்பதுபோல், (ஆசை காட்டும் தீய) மாரனின் பிடியிலிருந்து தப்புவதற்காக நமது சித்தம் துடிக்கின்றது. (2)

35. அடக்குவதற்கு அரிதாயும், துடிப்புள்ளதாயும், தன் போக்குப்படி திரிவதாயுமுள்ள சித்தத்தை அடக்குதல் நல்லது; அடக்கியாளப்பெற்ற சித்தம் சுகமளிக்கும். (3)

36. அறிவதற்கு அரிதாயும், மிக நுணுக்கமானதாயும், தன் போக்குப்படி திரிவதாயுமுள்ள சித்தத்தை அறிஞன் காத்து வர வேண்டும்; காக்கப் பெற்ற சித்தம் சுகமளிக்கும். (4)

37. நெடுந்தூரம் தனியே சஞ்சரிப்பதாயும், உருவமற்றதாயும் இதயக்குகையுள் அமர்ந்துள்ள சித்தத்தை அடக்கியாள்பவர் மாரன் பிடியிலிருந்து விடுபட்டவராவர். (5)

38. நிலையில்லாத சித்தத்தையுடையவரும், உண்மையான தருமத்தை அறியாதவரும், மனத்தின் சாந்தி குழம்பியவரும் பூரண ஞானத்தைப் பெற முடியாது. (6)

39. எவனுடைய சிந்தை (குற்றங்களால்) கலக்கமடையாமல் இருக்கிறதோ, எவனுடைய சிந்தை குழப்பமற்றுள்ளதோ, எவன் புண்ணியம் பாவம் (இரண்டையும்) பற்றிச் சிந்திப்பதில்லையோ, எவன் விழிப்புடன் உள்ளானோ, அவனுக்கு அச்சமில்லை. (7)

40. உடல் மட்கலம்போல் (உடைவதாக) உள்ளதை அறிந்து ஒருவன் தன் சித்தத்தைக் கோட்டைபோல் அரண் செய்து, அறிவு என்னும் ஆயுதத்தால் மாரனை எதிர்த்துத் தாக்க வேண்டும்; வென்ற பின்னும் அவனிடம் கவனமாயிருந்து வென்றதைக் காக்கவேண்டும். (8)

41. அந்தோ ; வெகு சீக்கிரத்தில், எரிந்து பயனற்றுப் போன சுள்ளிபோல் இந்த உடல் உணர்ச்சியற்று, வெறுக்கப்பட்டுத் தரைமீது கிடக்கும்! (9)

42. பகைவன் பகைவனுக்குச் செய்யும் தீமையைப் பார்க்கினும், நிந்திப்பவன் எதிரிக்குச் செய்யும் தீமையைப் பார்க்கினும், தவறான வழியில் திரும்பிய சித்தம் அதிகக் கேடு விளைவிக்கும். (10)

43. தாயும், தந்தையும், சுற்றத்தாரும் நமக்குச் செய்யும் உதவியைப் பார்க்கினும், நல்ல வழியில் திரும்பிய சித்தம் அதிக உதவியளிக்கும். (11)