தம்ம பதம்/அப்பமாத வக்கம்
இயல் இரண்டு
கருத்துடைமை
21. கருத்துடைமையே நித்தியமான நிருவாண மோட்சத்திற்கு[1] வழி;மடிமையே மரணத்திற்கு வழி. கருத்துடையவர் இறப்பதில்லை; மடிமையுடையவர் இருக்கும்போதே இறந்தவராவர். (1)
22. கருத்துடைமையின் நன்மையைத் தெளிவாக உணர்ந்த அறிவாளர்கள் அதிலே களிப்படைகின்றனர்; ஆன்றோர் காட்டிய நெறியில் ஆனந்தமடைகின்றனர். (2)
23. அறிவாளர்கள் எப்போதும் தீவிர முயற்சியுடனும், தளராத உறுதியுடனும், தியானத்துடனும், மகோன்னதமான விடுதலைப் பேறும் ஆனந்தமுமாகிய நிருவாணத்தை அடைகின்றனர். (3)
24. கருத்துடைய ஒருவன், விழிப்படைந்து, நினைவு குன்றாமல், நற் கருமங்களைச் செய்து கொண்டும், ஆலோசனையுடன் வினை புரிந்து கொண்டும், தன்னடக்கத்தோடு தருமத்தை அநுசரித்து வாழ்ந்தால், அவன் புகழ் ஓங்கி வளரும். (4)
25. அறிஞன் விழிப்படைந்து, கருத்துடனும், நிதானத் துடனும், அடக்கத்துடனும், ஒழுக்கத்துடனும், வெள்ளத்தால் சேதமடையாத ஒரு தீவைப்போல் தன்னைப் பலப்படுத்திக் கொள்கிறான். (5)
26. அறிவில்லாத மூடர்கள் மடிமையுள் வீழ்கின்றனர்; அறிஞன் கருத்துடைமையைத் தனது முதன்மையான அருந்தனமாகப் பாதுகாக்கிறான். (6)
27. மடிமையுள் விழவேண்டாம். காமத்தோடு புலன்களின் இன்பங்களில் புகவேண்டாம். கருத்தோடு தியானம் செய்பவன் எல்லையற்ற இன்பத்தை அடைவான். (7)
28. அறிவாளி, விடாமுயற்சியால் மடிமையை விரட்டி விட்டு, ஞானமாகிய கோபுரத்தில் ஏறிச் சோகமற்ற நிலையில் இருந்து கொண்டு, கீழே சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களைக் காண்கிறான். மலைமேலிருந்து கீழே சமவெளியைப் பார்ப்பதுபோல், அவன் மற்றையோரைப் பார்க்கிறான். (8)
24. அறிவாளி, மடிமையில் ஆழ்ந்தவர் நடுவே முயற்சிடையோனாகவும், உறங்குவோர் நடுவே விழிப்புள்ளவனாகவும் இருப்பான்; பந்தயக் குதிரை வாடகைக் குதிரையைப்பிந்த விட்டு விட்டு முன்னேறிப் பாய்வது போல், அவன் மற்ற யாவர்க்கும் முன்னால் செல்கிறான். (9)
30. மகவான்[2] கருத்துடைமையால் தேவர்களின் அதிபதியாக உயர்ந்தான். மக்கள் கருத்தில்லாமையைப் போற்றிப் புகழ்கின்றனர்; கருத்தில்லாமை எப்பொழுதும் இகழப்படுகிறது. (10)
31. மடிமையைக் கண்டு அஞ்சி, கருத்துடைமையில் களிப்படையும் பிக்கு[3], உள்ளத்தைப் பிணிக்கும் சிறிய, பெரிய தளைகளை யெல்லாம் அனலைப்போல் எரித்துக்கொண்டு செல்கிறான். (11)
32. மடிமையைக் கண்டு அஞ்சிக் கருத்துடைமையில் களிப்படையும் கண்டு, அஞ்சிக் கருத்துடைமையில் நிருவாண மோட்சத்தின் அருகில் இருப்பவன். (12)
- ↑ நிருவாணம்-பௌத்த தருமத்தின் முடிவான இலட்சியமான முக்தி. உலக வாழ்வில் இருக்கும்போதே ஒருவர் நிருவாணமடைய முடியும். ஆசை, துவேஷம், அறியாமை என்னும் மலங்களை அறுத்து, 'நான்' 'எனது என்ற பற்றற்று, எல்லா ஜீவராசிகளிடத்தும் தாயன்பு கொண்டு, வாழும் நிலை அது. இந்த நிலையிலுள்ளார் பூத உடலை நீத்துப் புகழுடம்பு பெறுதல் பரி நிருவாணம்' எனப்படும்.
- ↑ மகவான் - இந்திரன்.
- ↑ பிக்கு-பிக்ஷ-பௌத்தத் துறவி.