தம்ம பதம்/தண்ஹா வக்கம்

இயல் இருபத்தி நான்கு

அவா


332. சிந்தனையில்லாமல் திரியும் மனிதனுக்கு அவா மாலுவக் கொடிபோல் வளர்கிறது. வனத்திலே வாநரம் பழத்தை நாடி அங்குமிங்கும் தாவித் திரிவது போல், அவன் எடுக்கும் பிறவிகளுக்கு அளவில்லை. (1)

333. (இவ்வுலகில்) எவனை இந்தக் கொடிய விஷம் போன்ற அவா பற்றிக்கொள்கிறதோ, அவனுக்குச் சோகம் காட்டுப் புல்லைப் [1] போல் வளர்ந்து பெருகிக் கொண்டேயிருக்கும். (2)

334. இவ்வுலகில் எவன் அடக்க அரிதான இந்தக் கொடிய அவாவை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய சோகங்கள், தாமரை யிலையில் நீர்த்துளிகள் ஒட்டாமல் சிதறுவதுபோல்,உதிர்ந்து ஒழிகின்றன. (8)

335. இங்கே கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்மையான இந்த உபதேசத்தைச் செய்கிறேன். வீரணப்புல்லின் கிழங்குக்காக [2] அப்புல்லையே தோண்டி எடுப்பதுபோல, அவாவின் வேரைத் [3] தோண்டி எடுங்கள்; ஆற்று வெள்ளம் (கரையிலுள்ள) கோரைப் புல்லை அழிப்பதுபோல், மாரன் உங்களைத் திரும்பத் திரும்ப அழிக்காதபடி காத்துக் கொள்ளுங்கள். (4)

336. மரத்தை வெட்டினாலும், அதன் வேர் சேதமில்லாமல் உறுதியாயிருந்தால், மீண்டும் தளிர்த்து விடுகிறது; அதுபோல, அவாவின் காரணங்களான வேர்கள் அழிக்கப்படாவிட்டால், துக்கம் திரும்பத் திரும்ப வளர்ந்துகொண்டேயிருக்கும். (5)

337. எவனுடைய முப்பத்தாறு நதிகளும் [4] புலன்களின் இன்பத்தையே நாடி வெள்ளமிட்டுச் செல்கின்றனவோ, எவனுடைய சிந்தனைகள் காம வெறியிலேயே நிலைத்திருக்கின்றனவோ, அத்தகைய தவறான காட்சியுள்ளவனை வெள்ளம் அடித்துக் கொண்டு போகிறது. (6)

338. நதிகள் நாற்புறமும் ஒடிப் பாய்கின்றன; அவா என்னும் கொடி முளைத்தெழுந்து நிலைத்துப் படர்கிறது. இக்கொடி முளை விடுவதைக் கண்டதும் மெய்யறிவின் துணையால் இதை வேரோடு பிடுங்கி எறியவும். (7) 339. உயிர்களுக்கு இன்பங்களும் பலவித ஆசைத் தொடர்புகளும் ஏற்படுகின்றன. அவை இந்த இன்பங்களில் பற்றுக் கொண்டு இவற்றிலேயே தோட்டமாயிருக்கின்றன. இத்தகைய மனிதர்களே (மீண்டும் மீண்டும்) பிறப்பையும் மூப்பையும் அடைகிறார்கள்.

340. அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள் வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப்போல், ஒடித் திரிகிறார்கள். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு அவர்கள் நெடுங்காலம் துயரத்தை அநுபவிக்கிறார்கள்; இப்படித் திரும்பத் திரும்ப நேருகின்றது. (9)

341. அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள், வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப்போல், ஒடித் திரிகிறார்கள். ஆதலால் மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு அவாவை ஒழிப்பானாக. (10)

342.(அவாவாகிய) வனத்திலிருந்து,[5] மீட்சி பெற்று வன மற்ற நிருவாணப் பிரதேசத்தை அடைந்தவன் (அவாவாகிய) வனத்திலிருந்து தப்பியபின் அதே வனத்திற்குத்திரும்பி ஒடுகிறான்-விடுதலை பெற்றுத் திரும்பவும் பந்தனத்துள் மாட்டிக் கொள்ளும் இந்த முத்தனைப் பாருங்கள் (11)

343. இரும்பு விலங்கையும், மரக்குட்டையும், கயிற்றுக் கட்டையும் அறிஞர் பலமான தளை என்று கூறுவதில்லை; ஆனால், பொன்னாலும், இரத்தினங்களாலும் செய்யப் பெற்ற நகைகளிலும் மனைவியிடத்தும் மக்களிடத்தும் வைக்கும் பாசமே மிகவும் பலமுள்ளது என்பர். (12) 344. இந்தப் பாசம் (கழற்றவோ, அறுக்கவோ) எளிதான முறையில் தளர்ச்சியாகவும், உறுதியற்றும் இருந்தாலும், இதை அவிழ்ப்பதோ அறுப்பதோ கஷ்டம். இதுவே பலமான தளை என்று அறிஞர் கூறுவர். ஆசைகளற்றுப் புலன்களின் இன்பங்களைக் கைவிட்டு உலகைத் துறப்பவர்கள் இதையும் அறுத்து விடுகிறார்கள். (13)

345. சிலந்தி தானே அமைத்த வலைக்குள் சுற்றுவது போல, ஆசைகளில் அழுந்திய மக்கள் வெள்ளத்தின் போக்கில் மிதந்து செல்கின்றனர். அறிவு பெற்றவர்கள், (அவா என்னும்)இந்தத் தளையை அறுத்துக் கொண்டதும் உலகைத் துறந்து, கவலைகளில்லாமல், துக்கங்களை யெல்லாம் விட்டுக் கடந்து போகின்றனர். (14)

346. முன்னால் இருப்பதையும், பின்னால் இருப்பதையும் நடுவில் இருப்பதையும் கடந்து பிறவியின் மறுகரையை அடைவாயாக. மனம் முழுவதும் விடுதலை யடைந்து விட்டால், நீ மறுபடி பிறப்பும் மூப்பும் பெறமாட்டாய். (15)

347. கலங்கிய சிந்தனைகளும், உணர்ச்சி வெறிகளும், இன்பத்தில் தேட்டமும் உள்ள மனிதனுக்கு அவா வளர்ந்து கொண்டேயிருக்கும்; அவன் தன் கட்டைப் பலப்படுத்திக் கொள்கிறான். (16)

348. சிந்தனைகளைச் சாந்தப் படுத்துவதில் நாட்டமுள்ளவன், எப்பொழுதும் விழிப்புள்ளவன், (உலகில்) இன்பமில்லை என்பதில் கருத்தைச் செலுத்துபவன், மாரனின் மரணத்தளையிலிருந்து விடுபடுவான்-அதை முறித்தெறிவான். (17) 349. எவன் தியானத்தின் முடிவான உபசாந்தியை அடைந்துள்ளானோ, எவன் பயத்தையும், பாசத்தையும், பாவத்தையும், ஒழித்துவிட்டானோ, அவன் பிறவியாகிய முட்களைக் களைந்தெறிந்தவன், (பல ஸ்கந்தகங்களால் அமைந்த) இந்தச் சடலமே அவன் (எடுக்க நேர்ந்த) கடைசி உடம்பாம். (18)

350. எவன் அவாவை அழித்து, எதையும் தேடி வைத்துக் கொள்ளாமல் இருக்கிறானோ, எவன் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் உணரும் சக்தியுள்ளானோ, எவன் எழுத்துக்களின் சேர்க்கையை (முன்னும் பின்னும் இருக்க வேண்டிய முறையை)த் தெரிந்துள்ளானோ, அவனே மகா ஞானி, அவனே மகான். இந்தச் சடலமே அவன் (எடுக்க நேர்ந்த) கடைசி உடம்பாம். (19)

351. நான் யாவற்றையும் வென்றவன், நான் யாவற்றையும் அறிந்தவன், வாழ்வின் நிலைகள் யாவற்றினும் நான் ஒட்டுப் பற்றில்லாதவன். எல்லாவற்றையும் நான் துறந்தாயிற்று, அவாவை அழித்ததால் நான் முக்தி அடைந்தவன். எல்லாவற்றையும் நானே கற்றுக் கொண்ட பின், எவரை என் குருவென்று காட்டுவேன்? [6] (20) 352. ‘சகல தானங்களையும் தரும தானமே [7] வெல்கிறது; சகல இனிமைகளையும் தரும இனிமை வெல்கிறது; சகல இன்பங்களையும் தரும அநுபவம் வெல்கிறது; சகல துன்பங்களையும் அவாவின்மை வெல்கிறது. (21)

353. போக வாழ்க்கை மூடனை அழித்துவிடுகின்றது; ஆனால் எதிர்க்கரையை நாடுவோரை அழிப்பதில்லை. மூடன் போக ஆசையால் பிறரால் அழிக் கப்படுவதுபோல் [8] தானே தன்னை அழித்துக் கொள்கிறான். (22)

354. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை ஆசை; ஆதலால் ஆசையற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும்பயனை அளிக்கும். (23)

355. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத் திற்குத் தீமை துவேஷம்; ஆதலால் துவேஷ மற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும்பயனை அளிக்கும். (24)

356. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை மயக்கம்; ஆதலால் மயக்கம் நீங்கியவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும். (25)

357. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை இச்சை; ஆதலால் இச்சையற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும். (26)

  1. காட்டுப்புல்-பீரணம் அல்லது வீரணம் என்ற ஒருவகைப் புல் இங்கே கூறப்படுகிறது.
  2. இக்கிழங்கு ‘உஸீரம்’ என்று குறிக்கப்பெற்றிருக்கிறது; இது, வாசமுள்ளது.
  3. அவாவின் வேர்-உலக வாழ்வின் துக்கம். துக்க காரணம் துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய உண்மைகளை அறியாதிருத்தலே அறியாமை (அவித்தை).அவித்தையிலிருந்து செய்கை(ஸம்ஸ்காரம்) தோன்றுகிறது. செய்கையிலிருந்து உணர்ச்சி (விஞ்ஞானம்), உணர்ச்சியிலிருந்து அருவும் உருவும் (நாமரூபம்), அருவுருவிலிருந்து ஆறு பொறிகளின் வாயில்கள் (ஷடாயதன்ங்கள்), வாயில்களிலிருந்து ஊறு (ஸ்பரிஸம்)ஊற்றிலிருந்து நுகர்ச்சி (வேதனை) நுகர்ச்சியிலிருந்து அவா அல்லது வேட்கை (திருஷ்ணை உண்டாகின்றன. எனவே அவாவின் (திருஷ்ணையின்) ஆணிவேர் அறியாமை (அவித்தை.)
  4. இவற்றின் விவரம் அனுபந்தம் இரண்டில் காண்க.
  5. வளம்-காடு என்றும் அவா என்றும் இரு பொருளுடையது.
  6. கெளதம சித்தார்த்தர் போதியடைந்து புத்தரானதும் காசிக்கு அருகே சாரநாத்திலிருந்த தம் தோழர் ஐவருக்கு உபதேசிப்பதற்காகச் செல்லும்போது ஜைன சமயத்தைச் சேர்ந்த உபாகர் என்ற பிராமணர் அவரைச் சந்தித்தார். புத்தரின் முகப்பொலிவும் கண்களின் ஒளியும் புனிதப் பண்பையும் பூர்ண ஞானத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டியதைக்கண்டு உபாகர், அவருடைய குரு யார் என்று வினவினார். அதற்குப் பதிலாகப் பகவர், 'எனக்கு நானே குரு!’ என்று அறிவுறுத்த இதைக் கூறினார்.
  7. தருமதானம்-தரும உபதேசம்.
  8. மூடனைப் பிறர் அழிக்கவேண்டியதில்லை. அந்த வேலையைத் தானே பார்த்துக் கொள்கிறான். ‘மற்றவர்களை அவன் அழிப்பது போல’ என்றும், மற்றவர்களை அவன் அழிப்பதாக எண்ணிக்கொண்டு’ என்றும், பிறன் ஒருவனைக் கொல்வது போல்’ என்றும் இந்த இடத்திற்குப் பொருள் கூறுவர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/தண்ஹா_வக்கம்&oldid=1381704" இலிருந்து மீள்விக்கப்பட்டது