தம்ம பதம்/நாக வக்கம்

இயல் இருபத்து மூன்று

யானை


(சூத்திரங்கள் பலவற்றில் யானையை உபமானமாகக் கூறியிருத்தல் பற்றி இயலுக்கே ‘யானை' என்று பெயர் வந்துள்ளது.)

318. யுத்தத்தில் யானை வில்லிலிருந்து தெறித்து வரும் அம்புகளைத் தாங்குவதுபோல, நான் பிறர் உரைக்கும் நிந்தை மொழிகளைத் தாங்கிக் கொள்வேன்; ஏனெனில் பெரும்பாலான ஜனங்கள் பண்பற்றவர்களாகவே இருக்கின்றனர். (1)

319. பழகிய யானையையே போருக்கு அழைத்துச் செல்வர்; பழகிய யானை மீதே அரசர் அமர்ந்து செல்வர். மக்களிலும் நல்வழியில் பழகியவனே, நிந்தை மொழிகளைப் பொறுத்துக் கொள்வோனே சிறந்தவன். (2)

320. கோவேறு கழுதைகளும், சிந்து நாட்டு உயர்ந்த சாதிக் குதிரைகளும், பெரிய போர் யானைகளும் பழக்கிய பின்னால் சிறந்தவைகளாம். ஆனால் தன்னைத் தானே அடக்கியாள்பவன் இவை அனைத்திலும் சிறந்தவன். (3)

321. ஏனெனில், இந்தப் பிராணிகள் உதவியால் எந்த மனிதனும் எவரும் சென்றறியாத நிருவாண நாட்டுக்குச் செல்ல முடியாது; மனப்பயிற்சியுள்ள மனிதன் புலனடக்கமுள்ள தன் இயல்பையே வாகனமாய்க் கொண்டு அந்த நாட்டை அடைகிறான். (4) 322. தனபாலகன் என்ற பெயருள்ள யானையானது மத நீர் பொழியும் காலத்தில் அடக்கமுடியாததாகிறது. கட்டிவைத்தால், அது ஒரு கவளம் (உணவு) கூட உண்ணாது. அதன் நினைவெல்லாம் யானைகள் வசிக்கும் வனத்திலேயே இருக்கும் - (5)

323. மலத்தைத் தின்று வரும்பெரும் பன்றியைப்போல், ஒருவன் உடல் கொழுத்துப் பெருந்தீனியில் பற்றுள்ளவனாகி, நீங்காத சோம்பலிலும் நித்திரையிலும் ஆழ்ந்து, படுக்கையிலே புரண்டுகொண்டிருந்தால், அந்த அறிவிலி திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க நேருகிறது. (6)

324. முற்காலத்தில் எனது மனம் தன் விருப்பம் போல் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது. யானை மதம் கொள்ளும்போது பாகன் அங்குசத்தால் அதனை அடக்குவதுபோல, இப்போது என் மனத்தை நான் அடக்கியாள்வேன். (7)

325. கருத்தில்லாமல் இருக்கவேண்டாம்; மனத்தில் சிந்தனைகளை அடக்கிக் காக்கவும், சேற்றில் விழுந்த யானையைக் கரையேற்றுவது போலத் தீய வழியிலிருந்து உன்னை மீட்டுக் கொள்க. (8)

326. அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப்பழகக் கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்கமுடையவனாயும் ஒரு தோழன் கிடைப்பானாகில், எல்லா இடையூறுகளையும் கடந்து, அவனுடன் கருத்தோடும் மகிழ்ச்சியோடும் நட்புக் கொள்வாயாக. (9) 327. அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப் பழகக் கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்கமுடையவனாயும் ஒரு தோழன் கிடைக்கவில்லையானால், தன்னை வென்ற பகையரசனிடம் நாட்டைவிட்டு வெளியேறும் மன்னனைப் போலவும்,யானைகளின் வனத்திலே யானை (சுயேச்சையாய்த்) திரிவது போலவும், நீ தனியாகவே வாழ்வாயாக. (10)

328. மூடனுடைய நட்பைப் பார்க்கிலும் ஒருவன் தனியே வசிப்பது நலம். ஆசைசகளைக் குறைத்துக் கொண்டு, யானைகளின் காட்டில் யானை (சுயேச்சையாகத்) திரிவது போல், அவன் தனியே செல்வானாக; பாவகருமம் எதையும் செய்யாதிருப்பானாக. (11)

329. அவசியம் ஏற்படும்போது நண்பர்கள் வாய்ப்பது இனிமையாம்; ஒருதலையாக இல்லாத திருப்தி இனிமையாம்; மரண காலத்தில் (முன் செய்த) புண்ணியம் இனிமையாம்; எல்லாத் துக்கங்களையும் விட்டொழித்தல் இனிமையாம். (12)

330. இந்த உலகில் தாயை பேற்றுதல் இனிது; தந்தையைப் போற்றுதல் இனிது; துறவியைப் போற்றுதல் இனிது; இனிதே மெய்ஞ்ஞானியைப் போற்றுதல். (13)

331. வயோதிகம்வரை நல்லொழுக்கம் நிலைத்திருத்தல் இனிது; (அறத்தில்) உறுதியான நம்பிக்கை இனிது; ஞானத்தை அடைதல் இனிது; இனிதே பாவங்களை விலக்கல். (14)

"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/நாக_வக்கம்&oldid=1381702" இலிருந்து மீள்விக்கப்பட்டது