தம்ம பதம்/பாப வக்கம்
இயல் ஒன்பது
தீயொழுக்கம்
114. நல்லதை விரைவாக நாடவேண்டும்; பாவத்திலிருந்து சித்தத்தை விலக்கவேண்டும். புண்ணிய கருமத்தைச் செய்வதில் தாமதித்தால், மனம் பாவத்தில் திளைக்க ஆரம்பித்து விடும். (1)
115. மனிதன் பாவத்தைச் செய்துவிட்டால், அதையே திரும்பத் திரும்பச் செய்யாதிருப்பானாக. அவன் அதில் திளைத்திருக்க வேண்டாம்; பாவ மூட்டை மிகவும் துக்ககரமானது.
(2)
116. மனிதன் புண்ணியத்தைச் செய்வானாக. அவன் அதில் திளைத்திருக்கட்டும். புண்ணிய மூட்டை மிகவும் இன்பகரமானது.
(3)
117. பாவம் பயனளிக்க ஆரம்பிக்காதவரை இன்பமாய்த்தான் தோன்றும்; ஆனால் பயனைக் கொடுக்கும் போது, பாவி தன் பாவத்தை உணர்கிறான்.
(4)
118. நல்லவனும் தன் புண்ணியம் பயனளிக்க ஆரம்பிக்காதவரை துன்பத்தையே காண்கிறான். ஆனால் பயனைக் கொடுக்கும்போது, அவன் நன்மையையே உணர்கிறான்.
(5)
119, ‘என் பக்கம் அண்டாது' என்று பாவத்தைச் இலேசாக எண்ணவேண்டாம். துளித்துளியாக விழும் தண்ணீராலேயே குடம் நிரம்பிவிடும். பேதை கொஞ்சம் கொஞ்சமாகப் பாவத்தைச் சேர்த்தாலும், அவன் பாவத்தால் நிரம்பி விடுகிறான்.
(6)
120. ‘என் பக்கம் அண்டாது’ என்று புண்ணியத்தை இலேசாக எண்ண வேண்டாம். துளித்துளியாக விழும் தண்ணீராலேயே குடம் நிரம்பிவிடும். ஞானி கொஞ்சம் கொஞ்சமாகப் புண்ணியத்தைச் சேர்த்தாலும் அவன் புண்ணியத்தால் நிரம்பி விடுகிறான். (7)
121. போதிய வழித்துணையில்லாத வணிகன் மிகுந்த பொருளுடன் பயமுள்ள பாதையிலே செல்ல மாட்டான்; வாழ்வில் ஆசையுள்ளவன் விஷத்தை விரும்பமாட்டான்; இவர்களைப்போலவே, ஞானி பாவச் செயல்களை விலக்க வேண்டும்.
(8)
122. கையில் புண்ணில்லாதவன் விஷத்தைக் கையால் தொடலாம்; புண்ணில்லாதவனை விஷம் பாதிப்பதில்லை. தீயகாரியத்தைச் செய்யாதவனைப் பாவம் பாதிக்காது.
(9)
123. நிரபராதியான ஒருவனுக்கு எவன் தீங்கு செய்தாலும், பாவமற்ற பரிசுத்தமான ஒருவனுக்கு எவன் தீங்கு செய்தாலும், காற்றுக்கு எதிராகத் தூவிய மண் மேலேயே வந்து சாடுவது போல், அந்த மூடனைப் பாவம் பற்றிக்கொள்கிறது.
(10)
124. சிலர் கருக்குழியை அடைந்து (மறுபடி) பிறக்கிறார்கள்; பாவ கருமத்தைச் செய்தவர்கள் நிரயத்தை அடைகிறார்கள்; நற்கருமத்தைச் செய்தவர்கள் சுவர்க்கத்தை அடைகிறார்கள்;
ஆஸவங்களை ஒழித்த பற்றற்றவர்கள் பரிநிருவாணத்தை அடைகிறார்கள்.
(11)
125. மனிதன் தன் பாவகருமத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது; தப்பித்துக் கொள்ளும் இடம் பரந்த வானிலும் இல்லை, ஆழ்ந்த கடலிலும் இல்லை, மலையின் குகைகளிலும் இல்லை. (12).
126. , மனிதன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது; தப்பித்துக்கொள்ளும் இடம் பரந்த வானிலும் இல்லை, ஆழ்ந்த கடலிலும் இல்லை, மலையின் குகைகளிலும் இல்லை.
(18)