தம்ம பதம்/ஸஹஸ்ஸ வக்கம்

இயல் எட்டு

ஆயிரம்


(இந்த இயலிலுள்ள சூத்திரங்களில் ‘ஆயிரம்’ என்ற சொல் பலமுறை வருவதால் இயலின் பெயரே ‘ஆயிரம்'என்றாயிற்று)


100. அர்த்தமற்ற பதங்களைத் தொகுத்த நூறு பாடல்கள் ஒப்பிப்பதைப் பார்க்கினும், பொருளுள்ள ஒரே பாசுரம் மேலானது; அதைக் கேட்டதும் ஒருவன் உபசாந்தி [1] அடைகிறான். (1)


101. ஒருவன் ஆயிரம் பேர் கொண்ட ஆயிரம் படை களை வெற்றிகொள்கிறான்; மற்றொருவன் தன்னைத்தானே அடக்கி வெல்கிறான்; இவர்களுள் தன்னை வென்றவனே வெற்றி வீரருள் முதன்மை யானவன். (2)


102. மற்றவர்களை வெல்வதைப் பார்க்கினும், ஒருவன் தன்னைப் பண்படுத்திக் கொண்டு, எப்போதும் புல னடக்கத்தைப் பயிற்சி செய்து, தன்னைத்தானே வெல்வது மேலானது. (3)


103. அத்தகைய ஒருவனுடைய வெற்றியைத் தேவரோ, கந்தர்வரோ, பிரம்மாவின் துணை பெற்ற மாரனோ தோல்வியாக்க முடியாது. (4)


104. மாதந்தோறும் ஆயிரம் யாகங்களாக நூறு வருடம் யாகம் செய்பவன் தம்மைத் தாமே அடக்கிக் கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருட வேள்வியைவிட மேலானது. (5)  105. வனத்தில் நுாறு வருட வேள்வித் தீயை வணங்கி வந்தவன் , தம்மைத் தாமே அடக்கிக் கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருடப் பூசனையை விட மேலானது. (6)


106. புண்ணியம் பெறுவதற்காக ஒருவன் ஒரு வருடத்தில் எத்தனை வேள்விகள் செய்தாலும், அவை அனைத்தும் உத்தம ஞானி ஒருவரை வணங்குவதில் நாலில் ஒரு பகுதிக்கு ஈடாகாது. (7)

107. வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி மரியாதை செய்து வருவோனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை ஆகிய நான்கு பயன்களும், அதிகரிக்கும். (8)


108. தீயொழுக்கத்துடன் அடக்கமில்லாமல் ஒருவன் நூறுவருடம் வாழ்வதைக்காட்டிலும், நல்லொழுக்கத்துடன் தியானம் செய்து வரும் ஒருவன் ஒரு நாள் வாழ்வதே மேலானது. (9)


109. அறியாமையுடன் அடக்கமில்லாமல் நூறு வருடம் ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், ஞானத்தோடு தியானம் புரிந்துவரும் ஒருவன் ஒருநாள் வாழ்வதே மேலானது. (10)


110. ஒருவன் சோம்பலுடன் பலவீனமாக நூறு வருடம் வாழ்வதைக் காட்டிலும், வீரியத்தோடு ஒருவன் முயற்சி செய்து ஒருநாள் வாழ்வதே மேலானது. (11)


111. (பிறப்பு, இறப்பாகிய) ஆரம்பத்தையும் முடிவையும் அறியாமல் ஒருவன் நூறு வருடம் வாழ்வதைக் காட்டிலும், அவற்றை அறிந்த ஒருவன் ஒரு நாள் வாழ்வதே மேலானாது. (12)

112. (சாவேயில்லாத) அமுத நிலையாகிய முக்தியைப் பற்றி அறியாமல் ஒருவன் நூறு வருடம் வாழ்வதைக் காட்டினும், அந்த அமுத நிலையை அறிந்து ஒருவன் ஒருநாள் வாழ்வதே மேலானது. (13)


113. உத்தம் தருமத்தை அறியாமல் ஒருவன் நூறு வருடம் வாழ்வதைக் காட்டிலும், ஒருவன் உத்தம தருமத்தை அறிந்து ஒருநாள் வாழ்வதே மேலானது. (14)

  1. உபசாந்தி-இன்பத்திலும் துன்பத்திலும் சலிப்படையாத நிலை.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/ஸஹஸ்ஸ_வக்கம்&oldid=1381533" இலிருந்து மீள்விக்கப்பட்டது