தம்ம பதம்/யமகவக்கம்

இயல் ஒன்று

இரட்டைச் செய்யுட்கள்


[இந்த இயலில் ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்திரங்களால் விளக்கப் பெற்றிருத்தலால், இதற்கு 'இரட்டைச் செய்யுட்கள்' என்று பெயர்.]

1. மனிதரை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை: சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும், வண்டிச் சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வது போல், துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும். (1)

2. மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை; சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றறு. மனிதன் நல்லெண்ணத்துடன் பேசினாலும் செயல்புரிந்தாலும், நிழல் தொடர்ந்து செல்வதுபோல், இன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும். (2)

3. 'என்னை நிந்தித்தான், என்னை அடித்தான், என்னை வென்றான். என்னைக் கொள்ளையிட்டான்'–இத்தகைய எண்ணங்களை உடையாரிடம் துவேஷம் நீங்காது நிலைத்திருக்கும். (3)

4. என்னை நிந்தித்தான், என்னை அடித்தான், என்னை வென்றான், என்னைக் கொள்ளையிட்டான்’–இத்தகைய எண்ணங்கள் இல்லாதாரிடம் துவேவும் நில்லாது நீங்கும். (4) 8. இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை; பகைமை அன்பினாலேயே தணியும். இதுவே பண்டை அறநெறி. (5)

6. ‘தமக்கும் இங்கே முடிவுண்டு' என்பதைச் சிலர் அறிவதில்லை! ஆனால் அறிந்தவர்களுடைய பிணக்குகள் உடனே தீர்ந்துவிடும். (6)

7. புலன்களை அடக்காமல், உணவில் நிதானமில்லாமல், மடிமையில் ஆழ்ந்து , 'வீரியம் குறைந்து, இன்பங்களுக்காவே வாழ்ந்து வருவோனை, வலியற்ற மரத்தைக் காற்று வீழ்த்துவது போல, மாரன்[1] முறியடிக்கிறான். (7)

8. புலனடக்கத்தோடு, நிதான உணர்வுடனும், நல்லறத்திலே நாட்டத்துடனும், நிறைந்த வீரியத்துடனும் இன்பங்களை எதிர்பாராமல் வாழ்ந்து வருவோனை, பாறைகள் நிறைந்த மலையைச் சூறாவளி அசைக்க முடியாததுபோல மாரன் வெல்ல முடியாது. (8)

9. மனமாசுகள் நீங்காமல், எவன் அடக்கமும் உண்மையும் இல்லாதவனோ, அவன் சீவர உடைக்கு [2] அருகனல்லன். (9)

10. மனமாசுகள் நீங்கி, எவன் சகல சீலங்களிலும் நிலைத்து நின்று, அடக்கமும் உண்மையும் உள்ளவனோ, அவனே சீவர உடைக்கு உரியவன். (10)

11. பொய்யில் மெய்யைக் கற்பனை செய்துகொண்டு, மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார் மெய்ப் பொருளை ஒருபோதும் அடைவதில்லை; அவர்கள் வெறும் ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள். (11)

12. மெய்யை மெய்யாகவும், பொய்யைப் பொய்யாகவும் காணும் தெளிவுடையார், மெய்ப்பொருளை அடைவார்கள். அவர்களே மெய்யான வேட்கையுடையவர்கள். (12)

13. கூரை செம்மையாக வேயப்படாத வீட்டினுள் மழை நீர் பாய்வது போல் நன்னெறிப் பயிற்சியில்லாத மனத்தினுள் ஆசைகள் புகுந்துவிடுகின்றன. (13)

14. கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழை நீர் இறங்காததுபோல், நன்னெறிப் பயிற்சியுள்ள மனத்தினுள் ஆசைகள் நுழைய முடியா. (14)

15. தீய கருமத்தைச் செய்தவன் உலக வாழ்வில் வருந்துகிறான். மறுமையிலும் வருந்துகிறான்; இரண்டிலும் அவனுக்குத் துயரமே. தானே செய்த தீய கருமத்தின் விளைவைக் கண்டு இவன் வருந்திப் புலம்புகிறான். (15)

16. நற்கருமத்தைச் செய்தவன் உலக வாழ்வில் இன்பமடைகிறான், மறுமையிலும் இன்பமுறுகிறான்; இரண்டிலும் அவனுக்கு இன்பமே. தான் செய்த நற்கருமத்தின் விளைவைக் கண்டு அவன் மகிழ்ந்து இன்பமடைகிறான். (16)

17. தீய கருமத்தைச் செய்தவன் உலக வாழ்வில் வருந்துகிறான், மறுமையிலும் வருந்துகிறான்; இரண்டிலும் அவனுக்குத் துயரமே. 'நான் செய்த பாவம்!' என்று அவன் வருந்துகிறான். நரகத்திலும் அவன் அதிகமாய் வேதனைப்படுகிறான். (17)

18. நற்கருமத்தைச் செய்தவன் உலக வாழ்வில் இன்பமடைகிறான், மறுமையிலும் இன்பமுறுகிறான்; இரண்டிலும் அவனுக்கு இன்பமே. ‘நான் செய்த புண்ணியம்!' என்று அவன் இன்பமடைகிறான். பேரின்ப வீட்டிலும் அவன் மேலும் அதிகமாய் இன்புறுகிறான். (18)

19. சாத்திரங்கள் அனைத்தையும் கற்று ஒப்பித்தாலும், வாழ்க்கையில் அவற்றின்படி நடக்காதவன், ஊரார் பசுக்களைக் கணக்கிட்டு எண்ணும் ஆயனைப் போன்றவன். சமய வாழ்வில் சமணன்[3] அடைய வேண்டிய பயனை அவன் பெறமுடியாது. (19)

20. சாத்திரங்கள் சிலவற்றையே கற்றவனாயினும் வாழ்க்கையில் அவற்றின்படி நடப்பவனாயும், ஆசை, துவேஷம், மோகம் முதலியவற்றைக் களைந்து, மெய்யறிவும் தெளிந்த சித்தமும் பெற்று, இவ்வுலகிலும் பரத்திலும் உலக ஆசைகளிலிருந்து நீங்கப் பெற்றவனாயும் உள்ளவனே சமணன் அடைய வேண்டிய பயனைப் பெறுவான். (20)

  1. மாரன்–சன்மார்க்க விரோதி, சைத்தானைப் போன்றவன்; மாரன் என்று கூறப்படும் மன்மதன் அல்லன்.
  2. சீவர உடை - காஷாயம், துறவிகளின் மஞ்சள் ஆடை.
  3. சமணன்–சிரமணன்–சிரத்தையோடு பௌத்த தருமத்தைப் பின்பற்றுவோன்: தமிழில் சமணன். ஜைன சமயத்தோரையும் சமணர் என்பது வழக்கம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/யமகவக்கம்&oldid=1381514" இலிருந்து மீள்விக்கப்பட்டது