தான்பிரீன் தொடரும் பயணம்/அயர்லாந்து விடுதலைப் போராட்டம்
அயர்லாந்து விடுதலைப் போராட்டம்:
ஒரு சுருக்கமான வரலாற்று அறிமுகம்
- உதயன்
ஐரிஷ் விடுதலைப் போராட்டம் 750 வருடங்களுக்கு மேலான நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டது. துப்பாக்கி என்னும் ஆயுதம் உபயோகத்திற்கு வருமுன்னரே வெட்டுக் கருவி, குத்துக் கருவி என்பவற்றின் துணைகொண்டு ஆங்கிலோ-நார்மன்ஸினரால் அயர்லாந்து கைப்பற்றப்பட்டது. கத்தி, கோடரி கொண்டு நாட்டைக் கைப்பற்றியவர்களால், பின்பு வீறுகொண்டெழுந்த விடுதலைப் போராட்டத்தைத் துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணை என்பன கொண்டும் கூட நசுக்கிட முடியவில்லை. உலக வல்லரசான அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள் வியட்நாமில் மண்கவ்வின; ஈரானில் ஷா மன்னர் தரித்திரிந்த அமெரிக்க ஆயுதங்கள் ஈரானிய மக்களின் புரட்சிப் பிரவாகத்தாற் சரிந்து வீழ்ந்தன. ஆயுத பலத்தால் மக்களை ஒடுக்கி நசுக்கிவிட முடியாது; மக்களே வரலாற்றின் நாயகர்கள் என்ற உண்மையை ஆயுத பலம்கொண்ட சாத்தான்களுக்கு மக்கள் பலம் எப்போதும் பாடம் புகட்டிக் கொண்டே இருக்கின்றது. மக்கள் பலத்துடன் போராளிகளின் ஆயுதங்கள் ஒருபடி உயரும்போது சாத்தான்களின் ஆயுதங்கள் ஓராயிரம் படிகள் வீழ்கின்றன. இந்த வகையில் பிசாசுகளின் கையிலுள்ள ஆயுதங்களைச் சரியவைப்பதற்கு எழுந்த ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களுள் ஐரிஷ் விடுதலைப் போராட்டமும் ஒன்றாகும்.
அயர்லாந்து பிரிட்டனுக்கு மேற்கே 50 மைல் தொலைவிலுள்ள ஒரு தீவாகும். அயர்லாந்தில் அல்ஸ்டர் (Ulster), முன்ஸ்டர் (Munster), லீன்ஸ்டர் (Leinster), கொன்னாச் (Connacht) என நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இன்று இவ் அயர்லாந்து இரண்டு பகுதிகளாகப் பிரிவினை செய்யப்பட்டுள்ளது. ஒன்று அல்ஸ்டர் என்னும் பிராந்தியத்தைக் கொண்ட வட அயர்லாந்தும் மற்றது ஏனைய மூன்று பிராந்தியங்களையும் கொண்ட தென் அயர்லாந்துமாகும். வட அயர்லாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழுள்ள ஒரு பகுதியாகவும், தென் அயர்லாந்து, அயர்லாந்துக் குடியரசாகவும் இன்று அமைந்துள்ளன. அயர்லாந்துக் குடியரசின் பரப்பளவு 26,600 சதுரமைலாகும். மக்கள் தொகை 30,00,000 ஆகும். (1971ஆம் ஆண்டுக்கணிப்பீடு). வட அயர்லாந்தின் பரப்பளவு 5,462 சதுர மைல், சனத்தொகை 15,00,000 ஆகும். 1922 ஆம் ஆண்டு தென் அயர்லாந்து பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழான சுதந்திர அரசு (Irish Free State) என்ற உரிமையைப் பெற்றது. பின்பு இது 1948ஆம் ஆண்டு குடியரசாகியது. ஆனால் வட அயர்லாந்து ஆங்கில ஆதிக்கத்தின்கீழ் ஒரு மாகாணமாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
இனி அதன் வரலாற்றைச்சற்று நோக்குவோம். கி.பி. 1166 ஆம் ஆண்டு ஆங்கிலோ - நார்மன்ஸினர் அயர்லாந்தின் மீது படையெடுத்தனர். 1170ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் இரண்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தின் கீழ் அயர்லாந்து கொண்டு வரப்பட்டது. கடலரசியென்றும், உலக வல்லரசென்றும், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியமென்றும் நாம் கேள்விப்பட்ட ஆங்கில நாட்டை எதிர்த்து அயர்லாந்து மக்கள் தாம் கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து போராடிவந்தனர். காலத்துக்குக் காலம் சில கட்டங்களில் போராட்டம் உக்கிரமடைந்தும், சில கட்டங்களிற் தொய்வடைந்தும் வந்துள்ளது. இப்போராட்டத்தில் மிதவாதம், சமரசம், ஆட்சியாளரோடு கூட்டுச்சேர்வு, காட்டிக் கொடுப்பு, இயக்கங்களிடையேயான முரண்பாடு போன்ற பல அம்சங்கள் இருந்தன. இவற்றால் ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டபோதிலும் இவற்றையும் மீறி வரலாறு முன்னேறத்தான் செய்தது.
இங்கிலாந்து ஒரு பெரும் வல்லரசாக வளர்ச்சி அடைவதற்கு அயர்லாந்தை முழுமையாக இங்கிலாந்தின் பிடிக்குள் வைத்திருக்க வேண்டியது, புவியியல் இட அமைவு, யுத்தம் கேந்திரம் என்பன பொறுத்தும், இங்கிலாந்திற்குத் தேவையான உணவுப்பண்ட உற்பத்தி பொறுத்தும் அவசியமாயிருந்தது. மேலும் பிற்காலத்தில் இங்கிலாந்தின் தொழிலுற்பத்திப் பொருட்களுக்கான சந்தையாகவும் அயர்லாந்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்கான சகல முயற்சிகளையும் இங்கிலாந்து தொடக்கத்திலிருந்தே கையாண்டு வந்தது.
கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்தே ஆட்சியாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும், மக்கள் மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளையும், இங்கு சுருக்கமாகப் பொதுமைப்படுத்தி நோக்குதல் பொருத்தமானதாகும். கைப்பற்றிய ஆரம்ப காலத்தில் ஆங்கிலோ-நார்மன் படையினர் சூறையாடல்களில் ஈடுபட்டனர். இப்படைகளை எதிர்த்து மக்கள் ஆங்காங்கே தம்மாலியன்ற போராட்டங்களைச் செய்தனர். அணியணியாகக் குதிரைகளிற் செல்லும் இராணுவத்தினை பதுங்கியிருந்து மக்கள் கொலைசெய்வதில் ஈடுபட்டனர். இராணுவம் தனக்குத் தேவையான தானியங்களைச் சூறையாடிவிட்டு மிகுதியான தானியங்களுக்கும், பயிருக்கும், குடிசைகளிற்கும் தீவைப்பதுண்டு. இதனால் மக்கள் இராணுவத்தினரின் கையிற் தானியங்கள் அகப்படாதிருப்பதற்காகத் தமது தானியத்திற்கும் பயிருக்கும் தாமே தீவைப்பதுமுண்டு. மக்கள் பலவேளைகளில் இராணுவத்தை உணவின்றி இறக்க வைத்திருக்கிறார்கள். மக்களும் பஞ்சத்தால் இறந்திருக்கிறார்கள்.
அயர்லாந்தை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்குக் குடியேற்றங்களை ஸ்தாபிப்பதே சிறந்த வழியென ஆட்சியாளர் எண்ணி கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிற் குடியேற்றங்களை ஸ்தாபிக்க முற்பட்டனர். ஒரு மக்கள் கூட்டத்தின் தேசியத் தன்மையை அழித்தொழிப்பதற்கும் போராட்டங்கள் எழவிடாது ஊடறுப்பதற்கும் ஒரு சிறந்த வழியாக குடியேற்ற முறைமை அமைந்துள்ளதென்பது தெளிவாகும். அரசியற் சிந்தனையாளர் மாக்கியவல்லி என்பவர் குடியேற்றம் சம்பந்தமாகக் குறிப்பிட்ட கருத்தினை இங்கு நோக்குதல் பொருத்தமாகும். "அரசன், தான் கைப்பற்றிய பகுதியைத் தனது ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமாயின் அங்கு தனது குடியேற்றங்களை ஸ்தாபிப்பது, இராணுவ முகாம்களை ஸ்தாபிப்பதைவிட மேலானதாகும். ஏனெனில் இராணுவத்துக்கு அரசனே ஊதியம் கொடுக்க வேண்டும்; அதே வேளை இராணுவத்தினர் அந்த மண்ணுக்கு பரிச்சயமானவர்களல்ல; ஆனால் குடியேற்றம் அவ்வாறில்லை. அவர்கள் அந்த மண்ணுக்குப் பரிச்சயமாகிவிடுவார்கள். அவர்களுக்கு அரசன் ஊதியம் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் கூலிக்காக மாரடிப்பவர்களாகவன்றி சந்ததி சந்ததியாக தமது உயிர் வாழ்விற்காக உணர்ச்சியோடு நின்று தாக்குப்பிடிக்கக் கூடியவர்கள். எனவே குடியேற்றம் இராணுவத்தைவிட மேலான நிரந்தர இராணுவமாகும்“ என்று குறிப்பிட்டார். இந்த வகையில் குடியேற்றமென்பது கைப்பற்றப்பட்ட மக்கள் பொறுத்து மிகவும் அபாயகரமானதென்பது உண்மையாகும். பொதுவாக உலகிலுள்ள படையெடுப்பாளர்கள் அனைவரும் குடியேற்றங்களை ஸ்தாபிப்பதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார்கள். அவ்வகையில் இங்கிலாந்தும் அயர்லாந்திற் குடியேற்றங்களைத் ஸ்தாபிக்க முற்பட்டது.
ஆங்கிலேயர் அயர்லாந்திற் குடியேற்றங்களை ஸ்தாபிக்கும் போதெல்லாம் ஐரிஷ் மக்கள் தீரத்துடன் அதனை எதிர்த்துவந்தார்கள். குடியேற்றுபவர்களை ஆங்காங்கே கொலைசெய்தார்கள். பலரை உயிருடன் பிடித்து காது, நாக்கு என் பனவற்றை அறுத்து விடுவார்கள். இவ்வாறு காது, நாக்கு என்பவற்றை அறுத்துவிட்டு அனுப்புவதன் நோக்கமென்னவெனில் இவர்களைக் காணும் ஆங்கிலேயர் யாரும் குடியேற வரமாட்டார்கள் என்பதுதான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இராணுவத்தினரையும், குடியேற்றக்காரரையும் கொன்று தொலைப்பதில் மக்கள் அக்கறை காட்டினர்.
இங்கிலாந்திலிருந்து கொலைக் குற்றவாளிகள், திருடர்கள், காவாலிகள், வீதிகளில் அலைந்து திரிந்தோர் முதலான சனங்கள் அயர்லாந்திற் குடியேற்றப்பட்டும், இராணுவ சேவைகளில் அமர்த்தப்பட்டும் வந்தார்கள். இங்கிலாந்திலுள்ள குற்றவாளிகளின் வேட்டைக் களமாக அயர்லாந்தை ஆக்கினார்கள். ஆனால், ஐரிஷ் மக்கள் இந்த குற்றவாளிகளுக்கு தமது புனிதமண்ணில் தண்டனை வழங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். எப்படியோ ஆங்கிலேயரின் சவக்குழியாய் அயர்லாந்து இருந்தது.
மத்தியகால ஐரோப்பாவிற் தோன்றிய மதப்பிளவுக்கும் மதப்போருக்கும் அயர்லாந்து விதிவிலக்காகவில்லை. இங்கிலாந்து புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவியது. அயர்லாந்தில் ரோமன் கத்தோலிக்க மதமே வேரூன்றி இருந்தது. இந்த நிலையில் ஆங்கிலேயருக்கும் ஐரிஷ்காரருக்கிமிடையிலான போராட்டம் மதப்போராட்டமாகவும் மாறிவிட்டது. ஆட்சியாளர் புரட்டஸ்தாந்து மதத்தையும் ஆங்கில மொழியையும் ஐரிஷ் மக்கள் மீது திணிக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.
ஒரு வல்லரசாக எழுச்சி பெற்று வந்த இங்கிலாந்து திட்டமிட்டு அயர்லாந்துக்கெதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதே வேளை ஐரிஷ் மக்கள் திட்டமின்றி, ஒருங்கிணைப்பின்றிச் சிதறுண்ட நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்ததால் ஆங்கிலேயர் மொழிமாற்றம், மத மாற்றம், குடியேற்றம் என்னும் அம்சங்களிற் குறிப்பிடத்தக்களவு வெற்றிகளை அடைந்தனர். வட அயர்லாந்து முழுவதிலும் ஐரிஷ் மொழி (Gaelic Language) கைவிடப்பட்டு ஆங்கில மொழி உபயோகத்திற்கு வந்தது. சிறு தொகையினர் புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவிக் கொண்டனர். இவ்வாறான மாறறங்கள் நிகழத் தொடங்கிய ஆரம்ப கட்டங்களில் ஐரிஷ் மொழியைக் கைவிட்டோர், ஆங்கிலக் கலாசாரம், உடைகள் என்பவற்றைப் பின்பற்றுவோர், மதம் மாறுவோர் என்போர்கத்தோலிக்க ஐரிஷ் மக்களால் ஆங்காங்கே கொல்லப்பட்டு வந்தனர். இவ்வாறான நடவடிக்கைகளால் இம்மாற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் இந்நடவடிக்கைகள் தடைகளை ஏற்படுத்த மட்டுமே உதவின.
ஐரிஷ் மக்கள் தமது சொந்தப் பூமியிலேயே தமது நிலங்களை இழந்து வந்தார்கள். கத்தோலிக்க ஐரிஷ் மக்களின் கையிலிருந்து முதலில் ஆங்கிலேயர் கைக்கும், புரட்டஸ்தாந்தினரின் கைக்கும் நிலங்கள் மாறிவந்தன. 1703 ஆம் ஆண்டு 14% நிலங்கள் மட்டுமே ரோமன் கத்தோலிக்க ஐரிஷ் மக்களின் கையிலிருந்தது. ஐரிஷ் மக்கள் தமது நாட்டைவிட்டுப் படிப்படியாக வெறியேறி அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறத் தொடங்கினர். 1847 ஆம் ஆண்டு அயர்லாந்திற் பெரும் பஞ்சமேற்பட்டது. இதில் இரண்டரை லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள். ஏறக்குறைய 7% இலட்சம் மக்கள் அயர்லாந்தைவிட்டுக் குடிபெயர்ந்தார்கள்.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தேசிய விழிப்புணர்ச்சி பெரிதும் ஏற்பட்டது. 1847ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் ஆங்கிலேயர் மீது அதிக வெறுப்புணர்ச்சியை ஐரிஷ் மக்களின் மத்தியில் உருவாக்கியது. ஐரிஷ் மொழி, கலாசாரம் என்பவற்றைப் புதுப்பித்தல் என்பதற்கான இயக்கம், நிலச்சீர்திருத்தங்களுக்கான இயக்கம் என்பன தோன்றின. அயர்லாந்து தனி அரசாக அமைய வேண்டுமென்ற சிந்தனை வலுவடையத் தொடங்கியது. அயர்லாந்து தனியரசாக அமையவேண்டுமா வேண்டாமா என்ற வாதப் பிரதிவாதங்கள் கூட எழுந்தன. அயர்லாந்து ஒரு தனியரசாக அமையக்கூடாதென்ற கருத்தினை கார்ல் மார்க்ஸ் 1850களில் 60களின் மத்தியிலும் கொண்டிருந்தார். ஆனால் அவர் 1857 ஆம் ஆண்டு இக்கருத்தினை மாற்றி அயர்லாந்து பிரிட்டனியாவிடமிருந்து ஒரு தனியரசாகப் பிரிய வேண்டுமென்ற கருத்தினை வெளியிட்டார். [Previously I thought Ireland's separation from England impossible: Now I think it inevitable..." Marx(1967)] மேலும் மார்க்ஸ் 1869 ஆம் ஆண்டு இதுபற்றி குறிப்பிடுகையில் ஆழமான ஆய்வின் மூலம் அயர்லாந்து பிரிவதுதான் சரியென்ற நம்பிக்கை என்னிடம் ஏற்பட்டுள்ளது என்றார். [Deeper study has now convinced me of the opposite"... Marx (1869)] இதனைத் தொடர்ந்து மார்க்ஸ் அயர்லாந்து விடுதலை அடையவேண்டுமென்பதற்காகத் தன்னாலானவரை உழைத்தார். அயர்லாந்துப் போராட்டம் தனியரசுக் கோரிக்கையை நோக்கி வளர்ந்து சென்றது.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அயர்லாந்தில் பல இயக்கங்கள் தோன்றின. அவற்றைப் பண்புரீதியாக மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, அயர்லாந்து பிரிட்டனுடன் ஐக்கியமாக இருக்கவேண்டுமென்ற ஐக்கியவாதிகள் (Unionists); சுயாட்சி கோரிக்கை அணியினர் (Home Rule Party); அடுத்து குடியரசுவாதிகள் (Republicans) என்பனவாகும். போராட்டம் அதிகாரித்துவரும் வேளையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்கலாமென லிபரல் அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் 1880களின் நடுப்பகுதிகளில் குறிப்பிட்டனர். இதற்காக 1886 ஆம் ஆண்டு சுயாட்சி மசோதா (Home Rule Bill) பொதுமக்கள் சபையில் (House of commons) கொண்டுவரப்பட்டது. இம்மசோதா பொதுமக்கள் சபையிலே தோற்கடிக்கப்பட்டது. ஆயினும் இதனை நிறைவேற்றத்தான் முயலப் போவதாக லிபரல் அரசாங்கப் பிரதமர் குறிப்பிட்டார். பின்னர் 1893ஆம் ஆண்டு பொதுமக்கள் சபையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்ட போதிலும் பிரபுக்கள் சபையில் இது நிராகரிக்கப்பட்டது. பரிவுகாட்டும் முறையால் சுயாட்சிக் கொள்கையை அழித்துவிடு' (Kill Home Rule by Kindness) என்ற கருத்தினை முன்வைத்து கன்சர்வேட்டிவ் கட்சியினர் செயற்பட்டனர்.
இதன் மத்தியில் பேச்சு வார்த்தையாற் பயனில்லையென்றும் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அயர்லாந்தை விடுவிக்க முடியுமென்ற கொள்கை உறுதிபெறுகின்றது. இளைஞர் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினர். ஐரிஷ் மக்களின் உரிமைகளை முற்றாக மறுப்பதன் மூலம்போராட்டம் உக்கிரடைந்து இறுதியில் அயர்லாந்து விடுதலை அடைந்து விடுமென்பதையும் உணர்ந்த ஆங்கில ஆட்சியாளர் போராட்டத்தை தணிப்பதற்காகச் சில உரிமைகளைக் கொடுக்கும் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்தனர்.
பெரும் வரையறைகளுடன் 1914ஆம் ஆண்டு சுயாட்சி மசோதா (Home Rule Act) சட்டமாக்கப்பட்டது. இச்சுயாட்சிச்சட்டம் குடியரசுவாதிகளைத் திருப்திப்படுத்தவில்லை. அவர்கள் பூரண குடியரசுக் கொள்கையையே முன்வைத்தனர். இச்சட்டம் அயர்லாந்துக்குள் பிரச்சினையைத் தோற்றுவித்து விட்டது. சுயாட்சிவாதிகளுக்கும், குடியரசுவாதிகளுக்கும் இடையே முரண்பாடுகள் பெரிதும் ஏற்பட்டன. சமரசத் தலைமை மக்களைப் பெரிதும் ஏமாற்ற முனைந்தது. குடியரசுக் கொள்கையை முன்னணிக்குள் கொண்டுவரக் குடியரசுவாதிகள் பெரிதும் முயன்றனர். இந்நிலையில் 1916ஆம் ஆண்டு குடியரசைவிரும்பும் தீவிர இயக்கங்கள் சில ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டன. இவ்வாயுதம் தாங்கிய எழுச்சி அடக்கப்பட்டது. இக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட முக்கிய முன்னணிப் பேராளிகள் 15 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுக் கொள்கை பெரிதும் செல்வாக்குப் பெற்றது. இதன் பின்பு 1918ஆம் ஆண்டு அயர்லாந்தில் பொதுமக்கள் சபைக்கான பொதுத் தேர்தலின்போது மொத்தம் (அயர்லாந்தில்) 105 இடங்களில் 73 இடங்கள் குடியரசுவாதிகளுக்கும், 26 இடங்கள் ஐக்கியவாதிகளுக்கும், 6 இடங்கள் சுயாட்சிவாதிகளுக்கும் சிடைத்தன. இதனைத் தொடர்ந்து குடியரசுவாதிகள் பொதுமக்கள் சபையைப் பகிஷ்கரித்து டி வலெரா (De Valera) என்பவரை ஜனாதிபதியாகக் கொண்ட அயர்லாந்துக் குடியரசைப் பிரகடனப்படுத்தினர். ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றன. 1919 - 21 வரை Anglo-Irish War என வர்ணிக்கப்படும் யுத்தம் நிகழ்ந்தது.
குடியரசுப் பேராளிகள் கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பதினைந்து பேர் முதல் இருபத்தைந்து பேர் வரையான வீரர்கள் அடங்கிய குழுக்கள் ஒவ்வொரு தாக்குதலிலும் ஈடுபடுத்தப்பட்டன. மறைந்திருந்து இராணுவத்தைத் தாக்குதல், அரசின் பிரதான மையங்களைத் தகர்த்தல், அரசுப் படைகளுக்கான தொடர்புகளைத்துண்டித்தல், இராணுவத்தினருக்கான உணவு விநியோகங்களைத் தடைசெய்தல் போன்ற தாக்குதல்கள் இடம்பெற்றன. அரசுப்படை வெறிநாய்போல நடந்துகொண்டது; கிலிகொண்டது. கெரில்லாக்கள் என்ற சொல்லைக் கேட்டாலே அரசுபடை திகைக்குமளவு கெரில்லாத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்நிலையில் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் குடியரசுவாதிகளின் பிரதான கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதாயும் அரசாங்கம் அறிவித்தது. குடியரசுவாதிகளும் பேச்சு வார்த்தையிற் கலந்து கொள்ள முன்வந்தனர்.
பேச்சுவார்தையிற் கலந்துகொள்ள ஆர்தர் கிரிபித் (Arthur Griffith), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) ஆகிய தலைவர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு பேச்சுவார்த்தையின் கலந்துகொள்வதற்கு டி வலெராவும் சம்மதித்தார். பேச்சுவர்த்தையின்போது முழு அயர்லாந்துக்கும் சுதந்திரம் தரமுடியாதென்றும், வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து மதத்தினரே பெரும்பான்மையினர், ஆகையால் அது பிரிட்டனுடன் இணைந்ததொரு மாகாணமாகவே இருக்குமென்றும், கனடாவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைப்போல (பிற்காலத்தில் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பிரிட்டிஷார் வழங்கிய சுதந்திரம் போல) பிரிட்டிஷ் முடியாட்சியின்கீழ் தென் அயர்லாந்துக்கு சுதந்திரம் வழங்கலாமெனவும் ஆட்சியாளர் குறிப்பிட்டனர். இது Irish Free State திட்டம் என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு அயர்லாந்து வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்படுவதையும், தொடர்ந்தும் பிரிட்டிஷ் முடியாட்சியின்கீழ் அயர்லாந்து இருக்கவேண்டுமென்பதையும் அயர்லாந்திற் பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் இருப்பதையும் டிவலெரா உட்படக் குடியரசுவாதிகளின் ஒரு பிரிவினர் வன்மையாக எதிர்த்தனர். ஆர்தர் கிரிபித், மைக்கேல் காலின்ஸ் போன்றோர் Irish Free State திட்டத்தை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று வாதிட்டனர். இறுதியில் குடியரசுவாதிகளின் பெரும்பான்மையினரால் Irish Free State திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1921ஆம் ஆண்டு irish Free State உடன்படிக்கையை ஏற்று ஆர்தர் கிரிபித், மைக்கேல் காலின்ஸ் என்போர் கையெழுத்திட்டனர். 1922ஆம் ஆண்டு Irish Free State என்ற பெயரில் தென் அயர்லாந்தில் கிரிபித், காலின்ஸ் ஆகியோரின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டது. வட அயர்லாந்து (Ulster) பிரிட்டனுடனேயே இணைக்கப்பட்டது. டிவலெரா உட்படக் குடியரசுவாதிகளின் ஒரு பிரிவினர் Irish Free State ஐயும் வட அயர்லாந்து தென் அயர்லாந்திலிருந்து பிரிக்கப்பட்டதையும் எதிர்த்துப்போராட்டத்தில் ஈடுபட்டனர். iris, Rupublican Army யில் (IRA) ஒரு பிரிவினர் புதிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இராணுவமாகினர். மறுபிரிவினர் இத்திட்டத்தினை எதிர்த்து ஆயுதம்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் ஓர் உள் நாட்டுபோர் உருவாகிவிட்டது. இதுதான் irish Civil War (1922-23) என வரலாற்றாசிரியர்களால் வர்ணிக்கப்படும் போராய் இடம்பெற்றது. உள்நாட்டுப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கையிலே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த இரு தலைவர்களில் ஒருவான கிரிபித் 1922 செப்டம்பர் முதல்வராத்தில் இயற்கை மரணமெய்தினார். அதேமாதம் பிற்பகுதியில் மற்றவரான காலின்ஸ் அரச இராணுவ முகாமினைப் பார்விையடச் சென்றுகொண்டிருக்கையில் குண்டுத்தாக்குதலுக்கிலக்காகி மரணமடைந்தார். விடுதலைக்காக ஒன்றாக இணைந்து தோளோடுதோள் நின்று போராடியவர்கள் இரு அணிகளாகப் பிரித்து ஒருவரை ஒருவர் கொல்வதில் ஈடுபட்டனர். இந்த உள்நாட்டுயுத்தத்தில் எதிர்ப்புக்குழுவினர் தோல்வியுற்றனர். ஆயினும் அவர்கள் தமது கோரிக்கைகளை முற்றாகக் கைவிடவில்லை.
1932ஆம் ஆண்டு டி வலெரா அயர்லாந்தின் பிரதமரானார். பிரிட்டிஷ் முடியாட்சிக்கு விசுவாசப் பிரமாணம் செலுத்துதல் என்பது நீக்கப்பட்டது. மேலும் 1938 ஆம் ஆண்டு, அயர்லாந்திலிருந்த பிரிட்டிஷ் தளங்கள் அகற்றப்பட்டதுடன் தேசாதிபதிக்குப் பதிலாக அயர்லாந்துக்குப் பொறுப்பான ஜனாதிபதி என மாற்றம் கொண்டுவரப்பட்டது. 1938 ஆம் ஆண்டு irish Free State என்பதற்குப்பதிலாக அயர்லாந்து என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக 1948 ஆம் ஆண்டு அயர்லாந்துக் குடியரசு என பிரகடனப்படுத்தப் பட்டது. டி வலெரா 1932 முதல் 1948 வரை தொடர்ந்து பிரதமராயிருந்தார். டிவலெரா பதவிக்கு வந்தபோதிலும் இவரையும் IRA எதிர்த்தது. இவரின் ஆட்சியின் கீழ்க்கூட பல IRA உறுப்பினர் கைது செய்யப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டனர். இறுதியாக 1948 ஆம் ஆண்டு குடியரசுப் பிரகடனத்தைத் தொடர்ந்து தமது ஒரு நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கூறி அயர்லாந்து அரசுக்கெதிரான போரை விடுத்து வட அயர்லாந்தை தென் அயர்லாந்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் IRA தொடர்ந்து ஈடுபடத் தொடங்கியது. இந்தவகையில் வட அயர்லாந்துப் பிரச்சினை தொடர்ந்தும் நீடிக்கும் ஒரு பிரச்சினையாக இன்று வரை இருந்து வருகின்றது.