தான்பிரீன் தொடரும் பயணம்/தான்பிரீன் பற்றி



தான்பிரீன் பற்றி

- உதயன்




போராட்டம் வளர்ச்சியடையும்போது அதனைத் தணிப்பதற்குக் காலம் கடத்தல், சில சலுகைகளைக் கொடுத்தல் போன்ற ஏமாற்றுக்களை செய்வதில் ஆங்கில ஆட்சியாளர் மிகவும் கைவந்தவர்கள். Kill by Kindness என்ற கன்சர்வேடிவ் கட்சியின் சொற்றொடர் இங்கு கவனிக்கத்தக்கது. முதலாளித்துவ வர்க்கம் பற்றிப் பொதுவாகவும், அதில் ஆங்கில ஆட்சியாளர் பற்றிக் குறிப்பதாகவும் வி. ஐ. வெனின் தனது The Task of the Proletariat in our Revolution என்னும் நூலிற் குறிப்பிட்ட கருத்தினை இங்கு அவதானித்தல் பொருத்தமுடையதாகும் : "பூர்சுவா, நிலப்பிரபுத்துவ அரசாங்கங்கள் உலகளாவிய அனுபவத்திலிருந்து அவை பொது மக்களை அடக்கி ஆள்வதற்கு இரண்டுவித வழிகளைக் கையாள்கின்றன. முதலாவது வழி பலாத்காாமாகும். முதலாம் நிக்கலஸ், இரண்டாம் நிக்கலஸ் ஆகிய ரஷ்ய மன்னர்கள் கையாண்ட அலுகோஸ் நடைமுறைகள் எதெதனை இந்தப் பலாத்கார வழி மூலமும் சாதிக்கலாம், அதன் எல்லை வரம்புகள் என்ன என்பதை இரத்தம் தோய்ந்த முறையில் எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால் இன்னொரு வழியும் இருக்கின்றது. இதனை ஆங்கில, பிரஞ்சு பூர்சுவா வர்க்கங்களே மிகவும் நேர்த்தியாக வளர்ந் தெடுத்துள்ளன. இவர்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த மாபெரும் புரட்சிகள் மூலம் ஜனங்களின் புரட்சிகர இயக்கங்களின் மூலமும் பாடத்தைக் கற்றுக் கொண்டனர். ஏமாற்று வித்தைகளையும் முகஸ்துதிகளையும், அழகான சொற்தொடர்களை இந்தவழி இலட்சக்கணக்கில் வாக்குறுதிகளை அள்ளிவீசும். ஆனால், கொடுப்பதோ ஒரு சில எலும்புத் துண்டுகள், சில சலுகைகள். அதேவேளை இன்றியமையாதவற்றை பூர்சுவா வர்க்கத்தினர் கைவிடாது தம்வசமே வைத்துக்கொள்வர்.“ என்று குறிப்பிட்டார்.

இங்கு லெனின் சுட்டிக்காட்டிய இந்த இரண்டாவது வழிமுறை மிகவும் ஆபத்தானது. இது மாயாஜால வலைகளை விரித்துப் பல மூடுமந்திரங்களைக் கொண்டிருக்கும். போராட்டத்தின் கூர்மையைத் தனிப்பதிலும், மக்களை ஏமாற்றுவதிலும் இம்முறை கணிசமானளவு வெற்றிகளை ஈட்டுவது. எனவே, பூர்சுவாக்களின் இந்தக் கபடத்தனமான சூழ்ச்சியை உடைப்பதில், அவற்றைக் குழப்புவதில் கெரில்லாப் போர்முறை ஒரு பலம் பொருந்திய மார்க்கமாய் உள்ளது. இந்த வகையில் அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்திற்கெதிராக தான்பிரீன் மேற்கொண்ட கெரில்லா நடவடிக்கைகள் ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளையும், சமரசங்களையும் குழப்புவதில் ஒரு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது. அதாவது 1900 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை ஆங்கிலேயர், ஐரிஷ் மிதவாதத் தலைவர்களையும், ஐரிஷ் மக்களையும் தொடர்ந்து காலம் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் ஏமாற்றி வந்தனர். இந்த நிலையில் விரக்தியுற்ற இளைஞர், ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் தீவிரமாய் ஈடுபடத் தொடங்கினர். அந்த வகையில் 1913 ஆம் ஆண்டு தொடங்கிய ஆயுதம் தாங்கிய இயக்கமே ஐரிஷ் தொண்டர்படை (Irish Volunteers). இதனை அடியொட்டி ஐரிஷ் குடியரசு இராணுவம் (Irish Republican Army - IRA) மலர்ந்தது.

இவ்வாறு 1913ஆம் ஆண்டு தோன்றிய அயர்லாந்துத் தொண்டர்படையில் 1911ஆம் ஆண்டு தான்பிரீன் ஓர் உறுப்பினராகச் சேர்த்து கொண்டார். தொடர்ந்தும் காலம் கடத்தி ஏமாற்ற முடியாதென்ற அளவிற்குப் போராட்டம் வெடித்து வந்ததும் ஆங்கில ஆட்சியாளர் சில விட்டுக் கொடுப்பு ஏமாற்றுதல்களைச் செய்ய முன்வந்தனர். அந்தவகையில்தான் 1914ஆம் ஆண்டு சுயாட்சிச் சட்டம் (Home Rule Act) நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா 1886ஆம் ஆண்டு முதல் முறையாக ஆங்கில ஆட்சியாளரால் பொதுமக்கள் சபையிற் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் 1914 ஆம் ஆண்டுவரை நிறைவேற்றாது காலம் கடத்தி வந்தனர் என்பது குறிப்படத்தக்கது. இந்த ஏமாற்றை ஏற்று ஐரிஷ் மிதவாதத்தலைவர்களும் பின்செல்லத் தொடங்கினர். காரணம் இச்சட்டத்தில் அவர்களுக்குச் சில எலும்புத்துண்டுகள் கிடைத்தமையாகும். எனவே இந்த ஏமாற்றையும், சமரசத்தையும், மிதவாதத்தையும் உடைத்து நீறு பூத்த நெருப்பாய் உள்ளே மறைந்திருக்கும் பிரச்சனையின் நீறைத் தட்டி நெருப்பை வெளிக்காட்டவேண்டியது ஒரு தலையாய பணியேயாகும். இந்த வகையில் தான்பிரீன் இந்தச் சமரசங்களையும், மாயாஜாலங்களையும் உடைத்துப் பிரச்சினையை எரிநிலைக்குக் கொண்டு வர கெரில்லா நடவடிக்கைகள் மூலம் பெரும்பணியாற்றினார்.

தூங்கிக்கிடந்த மக்களைத் தட்டி யெழுப்பியதிலும், எதிரியை நெருக்கடிக்குத் தள்ளியதிலும், மிதவாதத்தலைமையை சீர்குலைத்ததிலும், பிரச்சினையை எரிநிலைக்குக் கொண்டுவந்ததிலும், சர்வதேசரீதியாகப் பிரச்சனையைப் பிரபல்யப்படுத்தியதிலும் தான்பிரின் 1914ஆம் ஆண்டு தொடக்கம் 1922ஆம் ஆண்டு வரை கையாண்ட கெரில்லா நடவடிக்கைகள் மகத்துவமான பங்களிப்பை ஆற்றியுள்ளன. அதேவேளை அவர் மறுபக்கத்தில் ஸ்தாபன அமைப்பிலும், சோசலிச சிந்தனையிலும் சரியான கவனம் செலுத்தாமை அவரிடமிருந்த ஒரு பக்கக் குறைபாடாகும். எனினும் பொதுவாகச் சொல்லப்போனால் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கால்களை உடைத்து முடமாக்குவதில் தான்பிரீன் கையாண்ட கெரில்லா நடவடிக்கைகள் தந்திரோபரீதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவே.