தான்பிரீன் தொடரும் பயணம்/ஆஷ்டவுன் போராட்டம்

ஆஷ்டவுன் போராட்டம்


அயர்லாந்துத் தலைநகரின் பெயர் டப்ளின், அந்நகரின் மத்தியிலிருந்து நாலு மைல்களுக்கு அப்பால் ஆஷ்டவுன் என்ற ரயில் நிலையம் இருக்கிறது. அது டப்ளினிலிைருந்து செல்லும் பெரிய தெருவிலிருந்து சுமார் 600 அடி தூரத்தில் உள்ளது. இரண்டுக்கும் இடையில் ஒரு கிளைவிதி செல்லும். ஆஷ்டவுன் பெரிய ஊர் அன்று. அங்கு வீடுகளும் சில; வசிப்பவர்களும் மிகச்சிலர். டப்ளின் நகரவாசிகளின் அநேகர் அதைப் பார்த்திருக்கமாட்டார்கள். இவ்வளவு சிறிய ஊரிலே ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருந்ததின் காரணம் பந்தய ஓட்டங்களுக்கும் வேட்டையாடுவதற்கும் குதிரைகளை இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவுமேயாகும். அப்பக்கத்தில் குதிரைப் பந்தயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மைதானங்கள் பல உண்டு. வேட்டையாடுவதற்கு ஏற்ற வனங்களும் அதிகம். பந்தயத் தோட்டங்களின் சொந்தக்காரர் சிலருடைய வீடுகளும் அநாதை விடுதிகளும் கன்னிகா மடங்களும் தவிர வேறு பெரிய மாடமாளிகைகளை அங்கே பார்க்க முடியாது.

ரயில் நிலையத்திற்குச்செல்லும் தெருவும் பெரிய தெருவும் கூடுகிற இடத்தில் அந்த விடுதி அமைந்திருந்தது. ரயிலுக்குப் போகவேண்டியவர்கள் பெரிய தெருவிலிருந்து வலது பக்கம் திரும்பவேண்டும். அதே இடத்தில் இடது பக்கமாக வேறோரு தெரு செல்லுகிறது. அந்தத் தெருவில் சிறிதுதூரம் சென்றால் புகழ்பெற்ற பீனிக்ஸ் தோட்டத்தைக் காணலாம். அந்தத் தோட்டத்தின் வாயிலில் முற்காலத்தில் எப்பொழுதும் ஒரு போர்ப்படை இருப்பது வழக்கம். பின்னால் அது நின்றுபோய் விட்டது.

அத்தோட்டத்தினுள்ளே வாசலிலிருந்து 300 அடி தூரத்தில் ஒரு பெரிய மாளிகை இருக்கிறது. ஆங்கில மன்னனின் பிரதிநிதியாக அயர்லாந்திலுள் வைசிராய் (Viceroy - பதில் ஆளுநர்) சில சமயங்களில் தங்குவதற்காக அது அமைக்கப்பட்டிருந்ததால் அதற்கு 'வைசிராய் லாட்ஜ்' என்று பெயர். ஆண்டவனையும் அதனையும் தெருக்களையும் ரயில் நிலையத்தையும் பற்றி மேலே விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதன் காரணம் என்னவெனில் வெகு சீக்கிரத்தில் அங்கு ஒரு போராட்டம் நடப்பதைக் காணப்போகிறோம். ஆதலால் முன்னதள்கவே திசைகளைத் தெரிந்துகொள்வது நல்லதல்லவா?

1919ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியிருக்கும். டப்ளின் நகரிலிருந்து வாலிபர்கள் சிலர் துப்பாக்கி முதலிய ஆயுதங்களைத் தங்கள் உடைகளில் மறைத்து வைத்துக் கொண்டு சைக்கிள் வண்டிகளில் விரைவாக ஆஷ்டவுனை நோக்கி வந்தார்கள். எல்லோரும் வந்தால் பிறர் சந்தேகித்து விடுவார்கள் என்ற காரணத்தால் அவர்கள் தெருவில் இருவர் இருவராகப் பிரிந்து வந்தார்கள். ஆஷ்டவுனுக்கு வந்தவுடன் அவர்கள் யாவரும் கெல்லியின் விடுதிக்குள் சென்று அமர்ந்தார்கள். அவர்கள் மொத்தம் பதினொருபேர். மிகுந்த கம்பீரத்துடனும் வானமே இடிந்து விழுந்தாலும் கலங்காத உள்ளத்துடனும் விளங்கிய தான்பீரின் அவர்களுக்குத் தலைவன். அவன் முப்பது வயதுக்குள்ளிட்ட பிராயத்தினன். தலைவனுக்குரிய அருங்குணங்களையெல்லாம் அணிகலன்களாய் பெற்றவன். ஸின்டிரிஸ், ராபின்லன், வேராகன், டாலி, மக்டொன்ன, கியோக், லியனார்டு, கில்காயின், வைரன், லாவேஜ் என்பவர்கள் மற்ற பதிர்மர்கள். இவர்களில் லாவேஜ்தான் வயதில் மிக இளையவன். அவன் பால்மனம் மாறாத பச்சிளங் குழந்தை. வீர உள்ளமும் தாய்நாட்டின் மீது தணியாத காதலும் பெற்று விளங்குவது போன்ற முகத்தோற்றமுடையவன். அவனுடைய முழுப்பெயர் மார்டின் லாவேஜ்.

இந்தக் கூட்டத்தினரைச் சூழ்ந்து வேறு பல தொழிலாளர்களும் குடியானவர்களும் குடித்துக் கொண்டிருந்தார்கள். யாரும் அவர்களைக் கண்டு சந்தேகப்படவில்லை. அவர்கள் எந்த நோக்கத்துடன் கூடியிருக்கிறார்கள் என்றோ அவர்கள் அனைவரும் ஒரே கூட்டத்தார் என்றோ எவருக்கும் தெரியது. இனிய பாணவகைகளை வாங்கிக் குடிப்பதில் நேரத்தை போக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவரை ஒருவர் அப்பொழுதுதான் சந்தித்தவர்களைப் போல் அவர்களது சம்பாஷணை இயற்கையாயிருக்கவில்லை. முழுதும் செயற்கையாகப்பட்டது. ஆடு, மாடுகள், உழவு, நாற்று நடுகை, நிலங்கள் முதலிய பல விஷயங்கள் பற்றி அவர்கள் பேசினார்கள். ஆனால் மறந்தும் அரசியலைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. எல்லோரும் வெகு ஜாக்கிரதையுடன் இருந்தார்கள். ஏனெனில் பேசியவர்களுக்கு விவசாயத்தில் ஒன்றுமே தெரியாது. ஆனால் சூழ வீற்றிருந்தவர்களோ வாழ்நாள் முழுதும் விவசாயத்தில் திளைத்த வாலிபர்கள். தவறுதலான வார்த்தைகள் வெளிவராது மிகுந்த நிதானத்துடன் பேசினார்கள். பேச்சு ஒருபுறமிருக்க யாவருடைய உள்ளமும் ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருந்ததாகக் காணப்படவில்லை. இவர்களிற் சிலர் அடிக்கடி தங்கள் கைக்கடிகாரங்களில் நேரத்தைப் பார்த்தனர். வெளியில் வீதிகள் கூடுமிடத்தில் கண்னோட்டஞ் செலுத்திபோகிறவர்களையும் வருகிறவர்களையும் நுட்பமாய்க் கவனித்தனர். முதலாவதாக டப்ளின் நகரப் போலீஸ்காரன் ஒருவன் தனது பருத்த உடலைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு பீனிக்ஸ் தோட்ட வாயிலிருந்து வெளியே வந்தான். அவன் உருவம் பார்க்கத்தக்கதுதான் திண்ணமான சரீரம். ஈட்டிபோல் ஆகாயத்தில் துருத்திக்கொண்டிருந்த முனையுள்ள தொப்பி. பளபளவென்று ஒளிவிடும் பொத்தான்கள். மாசுமறுவற்ற பூட்ஸ். இடுப்பிலே ரிவால்வர். இத்தனையும் சேர்த்து ஒன்றாய்க் கருதிப் பார்த்தால் தெரியக்கூடிய உருவந்தான் அந்தப் போலீஸ் வீரன். அவன் வீதியில் நின்றுகொண்டு யாரையும் நடமாடவிடாமல் தடுத்துக் கொண்டிருந்ததால், யாரோ ஒரு பெரிய அதிகாரி அங்கு வருவதற்கு ஏற்பாடு நடப்பதாகத் தோன்றியது.

ஆம்! அன்று ஒரு பெரிய அதிகாரி அங்கு விஜயம் செய்வதாக இருந்தார். அவர்தான் அயர்லாந்தின் வைசிராய். அவர் அயர்லாந்திலிருந்து தமது தலை நகருக்கு அப்பொழுது விஜயஞ்செய்ய ஏற்பாடாயிருந்தது. இந்த ஏற்பாடு பொது ஜனங்களுக்கும் இதர அதிகாரிகளுக்கும் பல ரகசியப் போலீஸாருக்குமே தெரியாது. வைசிராயின் மெய்க்காப்பாளர் எவர் எவருக்குத் தெரியவேண்டியது அவசியமோ அவர்களுக்கு மட்டும் அவரது வருகை கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. வைசிராயின் விஜயம் இத்தனை ரகசியமாக்கப்பட்டது ஏன்? ஏனெனில் காலநிலை அப்படி இருந்தது. அயர்லாந்து முழுவதும் ஆங்கிலேயர் மீதான துவேஷம் உச்சநிலையைடைந்திருந்தது. புரட்சிக்காரர்கள் போலிஸ் அதிகாரிகளை எங்கு கண்டாலும் சுட்டுத்தள்ளி வந்தனர். சாதாரண வெள்ளையர்களில் இவ்வளவு வன்மம் செலுத்தி வந்தவர்கள் அவர்கள். அயர்லாந்தின் அரசாங்கத் தலைவரான வைசிராயின் மீது அது தப்பமுடியுமா? அப்பொழுதிருந்த வைசிராய் அயர்லாந்தில் பிறந்தவராயினும் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்காகவே உழைத்தவர். தாம் புறப்படும் நேரத்தையும் செல்லும் பாதையையும் முன்கூட்டித் தெரிவிப்பார். கடைசி வேளையில் எல்லாம்வற்றையும் மாற்றி விடுவார். ரயிலில் போவதாகச் சொல்லி மோட்டாரில் போய்விடுவார். பல வேஷங்கள் தரித்துப் பிறர் அறியமுடியாமல் செல்வார். ரஷ்யச் சக்கரவர்த்தியான ஜார் அரசன் இதுபோல்தான் செய்வது வழக்கமாம். ஜாருக்கு நாடெங்கும் பகை. பிரஜைகள் எல்லோரும் விரோதிகள். அவன் உயிரை யார் எந்த நேரத்தில் பழிவாங்குவார் என்பது நிச்சயமில்லாமல் இருந்தது. அதுபோலவே அயர்லாந்து ஜனங்கள் தங்கள் தேசத்தில் ஏற்பட்டிருந்த ஆங்கில அரசாங்கத்தைப் பகைத்து வெளிப்படையாகக் கலகஞ் செய்யக் கிளம்பிவிட்டதால் லார்ட் பிரெஞ்ச் (அதுதான் வைசிராயின் பெயர்) மிகுந்த கவனத்துடன் நடமாடவேண்டிய அவசியம் நேர்ந்தது. அவர் வருகை மிகவும் அந்தரங்கமாக வைக்கப்பட்டிருந்த போதிலும், அது சம்பந்தமான இடம் காலம் முதலியவை எவர்களுக்குத் தெரியக்கூடாதோ அவர்களுக்கு மட்டும் எப்படியோ தெரிந்திருந்தது. கெல்லியின் விடுதியில் தங்கிக்கொண்டிருந்த பதினொரு பேர்களுக்கும் பகல் 11-40 மணிக்கு ஆஷ்டவுன் ரயில் நிலையத்தில் வைசிராய் தங்குகிறார் என்பது தெரியும். அதற்காகத்தான் அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே அவர்கள் புறப்பட்டு வந்து விடுதியில் காத்திருந்தனர்.

வைசிராயின் ரயில் வருவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்னால் துப்பாக்கிகள் ஏந்திப் பட்டாளத்தார் நான்கு ராணுவமோட்டார் லாரிகளில் பீனிக்ஸ் தோட்ட வாயிலிருந்து வெளியேறி கெல்லியின் விடுதிப்பக்கமாக ரயில் நிலையத்திற்குச் சென்று அணிவகுத்து நின்றனர். இவர்களைத் தவிர வேறு பல ஆயுதந்தாங்கிய டப்ளின் நகரப்போலீஸார் பீனிக்ஸ் தோட்டவாயிலிலிருந்து வைஸ்ராய் லாட்ஜ் வரையிலும் வீதியைப் பாதுகாத்து வந்தனர். குறித்த நேரத்தில் ரயில் வண்டி ஆஷ்டவுன் ஸ்டேஷனில் வந்து நின்றது. இரண்டு மூன்று நிமிஷங்கள் கழிந்தன. ஸ்டேஷன் வீதியில் மோட்டார் கார் கிர்... கிர் என்று வேகமாய் ஓடி வரும் சத்தம் கேட்டது. விடுதியிலிருந்த பதினொரு பேர்களும் மெதுவாக வெளியே வந்து முன்னதாகவே ஏற்பாடு செய்திருந்தபடி, தத்தமக்குரிய இடத்தில் போய் நின்றனர். அவ்விடுதிக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த ஓர் உர வண்டியின் பக்கம் தான்பிரீனும், கியோக்கும், லாவேஜூம் சென்று அதை இழுத்தனர். அது மிகக் கனமான வண்டியாதலால் மிகவும் சிரமப்பட்டு இழுக்கவேண்டியிருந்தது. அவர்கள் அதைப் பலமாக இழுத்து ஸ்டேஷன் வீதிக்குக் கொண்டு சென்றனர். அப்பொழுது முதன் முதலில் அங்கு வந்து நின்று கொண்டிருந்த போலீஸ்காரன் கூக்குரல் போட ஆரம்பித்தான். 'யார் அங்கே வைசிராய் வரப்போகிறார் விலகு விலகு என்று அவன் கூறினான். அந்த ஆசாமிகளோ, தாங்கள் மட்டுமின்றி உரவண்டியையும் சேர்த்து இழுத் துச்சென்றனர்.

அவர்களுக்கு வைசிராய் வரப்போவது நன்றாய்த் தெரியும். தெரிந்ததினால் தான் சரியான சமயத்தில் வண்டியை இழுத்தார்கள். அவர்களுக்கு வைசிராயினிடத்தில் வேலை இருந்தது. அது போலிஸ்காரனுக்கு எப்படித் தெரியும்? நேரமோ பறந்து கொண்டிருந்தது. ஒரு விநாடி ஒரு யுகமாகத் தோன்றியது. கரணம் தப்பினால் மரணம். உரவண்டியை வீதியின் மத்தியில் உருட்டினால்தான் வைசிராயின் கார் நிற்கும். அதற்குத் தடை ஏற்பட்டால் அவர்கள் காரியம் வீணாகிவிடும். போலீஸ்காரன் கண்டித்து ஏசிக்கொண்டேயிருந்தான். தான்பிரீன் இடைவிடாது வண்டியை இழுத்துக்கொண்டே யிருந்தான். அவனும் நண்பர்களும் கைகளில் துப்பாக்கி வைத்திருந்ததைப் போலிஸ்காரன் கண்டு பிடிக்கவில்லை...

அக்காலத்தில் ஜனங்கள் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள உரிமை கிடையாது. போலீஸ்காரனோடு வாதாடுவதில் பயனில்லை யெனினும் அவன் வாயை மூடுவதாகவும் இல்லை. துப்பாக்கியை எடுத்து அவன் வாயை அடக்கலாம் என்றால் ஒரு விஷயம் அறியாத அவனைச் சுடுவதால் என்ன பயன்? மேலும் குண்டோசைகேட்டவுடன் வைசிராயின் பாதுகாப்புக்காக நிற்கும் பட்டாளத்தார் அங்கு ஓடிவந்திருப்பார்கள். இவ்வாறெல்லாம் எண்ணமிட்டான் தான்பிரீன். போலீஸ்காரனை வார்த்தைகளால் பயமுறுத்திக்கொண்டே வேலையை நிறைவேற்றிவந்தான். அவன் வேலை என்ன? உரவண்டியை விதியில் இழுத்துச்சென்று ஸ்டேஷனிலிருந்து கார்கள் வரும்பொழுது முதல் மோட்டாரை விட்டு விட்டு, இரண்டாவது மோட்டாருக்கு முன்னால் வண்டியைத் தள்ளி வழியை மறித்து நிறுத்திவிட வேண்டும். அதற்கு உதவியாக மற்ற இரு நண்பர்களும் கூட இருந்தனர். போலீஸ்காரன் கடைசிவரை தன்னுடைய கூக்குரலை நிறுத்தாததைக் கண்டு வீதியின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒருவன், தான்பிரீனுக்கு உதவி செய்யவேண்டுமென்று தன்கையிலிருந்த ஒரு வெடி குண்டைப் போலிஸ்காரன் மீது குறிவைத்து எறிந்துவிட்டான். இது பொருத்தமில்லாத வேலை. ஏனென்றால் குண்டோசைகேட்டால் லார்ட் பிரெஞ்ச் அந்தப்பாதையிலேயே வராமல் மாற்றப்பட்டுவிடும். இவை ஒன்றையும் கவனியாது அவ்வாலிபன் ஆத்திரத்தில் குண்டை எரிந்துவிட்டான். நல்லவேளையாக அது போலீகாரனுக்கு அதிக காயத்தை உண்டாக்கவில்லை. அவன் தலையில் மட்டும் சிறிது காயப்படுத்தியது. தான்பிரீனும் அவன் நண்பர்களும் ஒரு நிமிஷத்தையும் வீணாக்கக் கூடாதென்றும், வருவது வட்டும் என்றும் துணிந்து நின்றனர். வைசிராயின் சாரணன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் முன்னதாகச் சென்றான். அடுத்தாற்போல் ஒருகார் வந்தது. பதினொரு பேர்களும் பல திசைகளிலிருந்தும் அதன்மேல் சுட ஆரம்பித்தனர். உடனே வண்டியிலிருந்தவர்களும் எதிர்த்துச் சுட்டனர். ஒரு குண்டு தான்பீரினுடைய தலையில் பட்டு அவனுடைய தொப்பியை அடித்துக் கொண்டு போய்விட்து. தலையில் காயமில்லை. கார்சென்ற வேகத்தில் அதனுள் யார் யார் இருந்தனர் என்பதைக் கவனிக்கமுடியாது போயிற்று. வெளியே நின்றவர்களுக்கு அவர்களைப் பற்றிய கவலையும் இல்லை. ஏனெனில் இரண்டாவது காரிவில்தான் வைஸ்ராய் வருவார் என்று அவர்களுக்குத் தெரியும். முதல் காரைச் சுட்டால் அதிலுள்ளவர்கள் அதை வேகமாய் ஓட்டிச் சென்று விடுவார்கள். பின் சாவகாசமாக இரண்டாவது காரை எதிர்க்கலாம் என்பது அவர்கள் வண்ணம் அவர்கள் எண்ணியபடியே முதல் கார் வாயு வேகத்தில் பறந்து சென்றது. தான்பியின் வண்டியை வீதியை மறித்து நிறுத்திவிட்டான். இரண்டாவது காரும் வந்துவிட்டது. தான்பிரீனும் அவனுடைய கூட்டத்தாரும் நாலு பக்கத்திலுமிருந்து அதன் மேல் ரிவால்வர்களால் சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசி எரிந்தனர். கார்மீது நெருப்பு மழை பெய்வது போலிருந்தது. ஆனால் காருக்குள்ளிருந்தவர்களிடம் யந்திரத்துப்பாக்கியும் இருந்தது. அதனாலும் நீண்ட துப்பக்கிகளாலும் அவர்கள் சுட்டனர். வெளியே நின்றவர்களிடம் ரிவால்வர்களும் வெடிகுண்டுகளுமே இருந்தன. தான்பிரீனும் அவனுடன் வண்டிப் பக்கம் நின்ற இருவரும் மிகுந்த அபாயகரமான நிலையிலிருந்தனர். பகைவர்கள் துப்பாக்கிகள் அவர்களைக் குறிவைத்துச் சுட்டன. அத்துடன் ஓடைப்புறத்திலும், மற்ற இடங்களிலும் சூழ்ந்து நின்று கொண்டிருந்த அவர்களுடைய நண்பர்களின் குண்டுகளே அவர்களைக் கொன்றுவிடக்கூடும். ஆயினும், அவர்கள் பகைவர்களுக்கு மிக நெருக்கமாக நின்று போராட வேண்டியிருந்தது.

இவர்கள் மூவரும் வண்டிக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தார்கள். அந்த வண்டி எதிரிகளுடைய குண்டுகளால் துள்துளாகப் பிய்ந்து ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது. ஒரு பக்கம் கூரிய அம்புகள் போன்ற மரக்குச்சிகள் பாய்ந்தன. ஆனால் குண்டுகள் ஆட்களைத் தவிர மற்றெல்லாவற்றையுமே துளைத்தன. அந்த வேளையில் எதிர்ப்பக்கத்திலிருந்து பகைவர்களுக்கு உதவியாக வேறோரு கார் விரைந்து வந்தது. அதிலிருந்தவர்களும் சுட ஆரம்பித்தார்கள். தான்பிரீன் கூட்டத்தார் இரண்டு கொள்ளிக்கட்டைகளுக்கு இடையில் அகப்பட்ட எறும்புக் கூட்டத்தைப்போல் ஆகிவிட்டனர். ஆயினும் சிறிதும் மனம்தளராது அவர்கள் அரும்போர் புரிந்துவந்தனர். அப்பொழுது திடீரென்று பகைவரின் குண்டொன்று தான்பிரீனுடைய இடதுகாலில் பாய்ந்தது. அவன் காலில் குண்டு பாய்ந்ததை உணர்ந்தானேயொழிய அது பாய்ந்த இடத்தைக் கூடக் குனிந்து பார்க்கவில்லை. சுடுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தான். கார்களிலிருந்து ஆங்கிலேயர் பன்னிரண்டு நீண்ட குழல் துப்பாக்கிகளாலும் ஒரு யத்திரத்துப்பாக்கியாலும் சுட்டு வந்தனர். தான்பிரீன் கூட்டத்தார் ரிவால்வர் முதலிய சிறு ஆயுதங்களுடன் சிறிதும் தளராது எதிர்த்து நின்றனர். ஆங்கிலேயர் சரியாகக் குறிவைத்துச் சுட்டால், வெளியே நின்ற பதினோரு பேர்களும் ஒரு கணத்தில் இறந்து வீழ்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களுடைய கைகளும் கால்களும் நடுங்கும்பொழுது அவர்களுக்குக் குறி எப்படி வாய்க்கும்!

இவ்வாறு வெகுநேரம் அருஞ்சமர் நடந்தது. திடீரென்று பகைவரின் ஒருவன் குறிபார்த்து மார்ட்டின் லாவேஜைச் சுட்டுவிட்டான். குண்டு அவன் உடலில் தைத்து, அவன் குற்றுயிராய் சாய்ந்து விட்டான். சில நிமிஷங்களுக்கு முன்னால் அயர்லாந்தைப் பற்றியும் அதன் விடுதலையைப் பற்றியும் ஆனந்தமாய்ப்பாடிக் கொண்டிருந்த இளஞ்சிங்கம் போன்ற லாவேஜ், ஆங்கிலேயரின் குண்டால் அடிப்பட்டு அருகே நின்ற தோழன் தான்பிரீனுடைய கைகளில் சாய்ந்தான். தான்பிரீன் அவனை மார்போடு அனைத்துக் கொண்டான். சுற்று முற்றும், எங்கனும் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பு மழையின் நடுவே தாய்நாட்டுக்காகப் போராடி, அந்நியனுடைய குண்டை மார்பிலேந்தி வீரமரணம் அடையவேண்டுமென்று விரும்பிய லாவேஜ்தன் தோழனின் கைகளிலே வீழ்ந்து கிடந்தான். தான்பிரீன் அவனை விதிப்புறத்தில் கொண்டு கிடத்தினான். ஸாவேஜின் மெல்லிய இதழ்கள் அசைவதைக் கண்டு அவன் ஏதோ சொல்ல விரும்புவதாக எண்ணி, அவன் வாயில் செவி வைத்துக் கேட்டான். 'என் காரியம் முடிந்து போயிற்று தோழா போரை விடாது நடத்துங்கள்!' என்று மெல்லி குரலில் ஸாவேஜ் கூறினான். ஆயிரம் இடிகள் விழுவதுபோல் நாலு பக்கத்திலும் குண்டுகள் விழுகின்றன. காது செவிடுபடும்படியான ஓசை. இரத்த வெள்ளத்திலே ஒரு வாலிபன் மிதந்து கொண்டிருக்கிறான். சில நிமிஷங்களில் அவன் அந்தமில்லாத உறக்கத்தில் ஆழ்ந்து போகின்றான். இடையில் 'தோழா போரை விடாது நடத்துங்கள் என்று மெல்லக் கர்ஜிக்கிறான். இந்தக் காட்சியை யாரால் மறக்கமுடியும். இருபத்தொரு வயதான இளஞ்செல்வன் ஸாவேஜ் தேசத்திற்கு உழைக்கவே ஜன்மமெடுத்ததாகக் கருதி, தேசத்திற்காக உயிர்பலி கொடுக்க முன்வந்தவன், மூன்று வருடங்கள் அரும் போராட்டங்கள் செய்துவிட்டு இப்பொழுது மார்பிலே குண்டு தாங்கி வீழ்ந்துவிட்டான்.

இறந்த தோழனுக்கு அனுதாபம் காட்டி நிற்கவேண்டிய நேரம் அதுவன்று. ஆதலால் தான்பிரீன் மறுபடியும் போராடச் சென்றான். அவனுடைய காலிலிருந்து ரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. எவ்விடத்தில் தப்பி நின்று போராடலாம் என்று பார்த்தால் எங்கும் வழி காணப்படவில்லை. எனினும் தைரியத்தைக் கைவிடாது அவன் கெல்லியின் விடுதிக்குப் பின்னால் சென்று அங்கிருந்து சுட ஆரம்பித்தான். அவனுடைய நண்பர்களிடம் வெடிகுண்டுகள் தீர்ந்துபோயின. சிலருடைய ரிவால்வர்களில் குண்டுகளில்லை. ஆனால், எதிரிகளிடமிருந்தும் குண்டுவரக் காணோம். ஆங்கிலத் துருப்புகள் பீனிக்ஸ் தோட்டத்தைப் பாதுகாக்க விரைந்தோடிவிட்டன.

அவ்வளவு நேரம் நடந்த போராட்ட முடிவில் களத்தில் உடைந்து சிதறிப்போன இரண்டாவது மோட்டார் வண்டியும் அதை ஒட்டுபவனான மாக்இவாய் என்றவனும், முதல் முதலில் குண்டுபட்ட போலிஸ்காரன் ஒருவனும் இறந்துபோன மார்ட்டின் லாவேஜின் உடலுமே தான்பிரீன் கூட்டத்தார் கையில் சிக்கிய பொருள்கள். டிரைவருக்கு மிகுந்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவனை அவர்கள் விடுதலை செய்து விட்டார்கள்.

தான்பிரீனும் தோழர்களும் வைசிராயைச் சுட்டுத்தீர்த்து விட்டதாக உறுதியுடன் நம்பினர். அவரைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியாத முறையில், வைசிராப் பலருக்கு மத்தியிலே மாறுவேஷத்துடன் இருந்தார். இறந்தவர் யார் யாரென்றும், விலக்கப்பட்டவர்கள் விவரம் என்ன என்றும் தெரியவில்லை, போராட்டம் முடிந்தவுடனே தான்பிரீன் கூட்டத்தார் ஒரு விநாடியும் விண்போக்காது நகருக்குள் சென்றுவிட வேண்டும் என்று கருதினர். ஏனென்றால் சில நிமிஷ நேரத்தில் அங்கு பல்லாயிரம் பட்டாளங்கள் வந்துவிடும். எங்கும் லார்ட்பிரெஞ்ச்சுடப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவிநிற்கும். எனவே அவர்கள் சைக்கிள் வண்டிகளில் ஏறிக்கொண்டு ஆஷ்டவுனை விட்டு வெகு வேகமாய் வெளியேறினர். ஸாவேஜ் களப்பலியாக களத்திலே விடப்பட்டான். அவன் உடல் கெல்லியின் விடுதியில் வைக்கப்பட்டது. தோழர்கள் புறப்படு முன்னால் அவனுடைய ஆன்மா சாந்தியடையும்படி பிரார்த்தித்தனர். அதுவே அந்தப் போர் வீரனுக்குத் தோழர்கள் செலுத்திய கடைசி மரியாதை.

வைசிராயைத் தாக்கச் சென்ற பதினொரு வாலிபரில் ஒன்பது பேருக்குக் காயமில்லை; லாவேஜ் வீரசுவர்க்கம் புகுந்தான்; தான்பிரீன் காலில் அடிபட்டு ரத்தம் பெருகிக் கொண்டேயிருக்கவும், சைக்கிளில் சவாரி செய்துக் கொண்டு சென்றான். உயிர்தப்பிய பதின்மரில் ராபின்ஸனுடைய சைக்கிள் இடையில் உடைந்து பிரயாணத்திற்கு உதவாது போயிற்று. எனவே அவன் ஸின்டிரீஸியின் சைக்கிளில் அவனுக்குப் பின்னால் ஏறி நின்று கொண்டு சென்றான். ஒரு சைக்கிளில் இருவரைத் தாங்கி வேகமாகச் செல்லமுடியாது. வேகமாய்ச்செல்லாவிடின் பகைவர்கள் எட்டிப் பிடித்து விடுவார்கள். அந்நிலையில் எதிரே ஒருவன் கைக்கிளில் வந்து கொண்டிருந்தான். ராபின்ஸன் கீழே குதித்து, ரிவால்வரை அவனுக்கு நேராகப் பிடித்து, அவனைக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டான். வந்தவன் மறுப்பேச்சில்லாமல் சைக்கிளைக் கொடுத்துவிட்டான். ராபின்லன் தான் திருடனில்லை என்றும், தனக்கு அந்த சைக்கிள் தேவை என்றும், அன்று மாலையில் அதை 'கிரெஷாம் ஹோட்ட'லில் வைத்து விடுவதாயும், அங்கு வந்து அவன் எடுத்துக் கொள்ளலாம் என்றுக் கூறினான். பிறர் சைக்கிளைப் பிடுங்கினாலும் அதிலும் ஒரு மரியாதை இருந்தது: திருட்டுச் சொத்து வேண்டாமென்று ராபின்ஸன் சொன்ன வாக்குப்படியே பின்னால் செய்து விட்டான். சொந்தக்காரன் அந்த ஹோட்டலுக்குச் சென்று சைக்கிளை எடுத்துக் கொண்டானோ, இல்லையோ என்பது தெரியாது. பிறகு பத்துப் பேர்களும் செளக்கியமாக டப்ளின் நகருக்குள் சென்று மறைந்துவிட்டனர்.

இவர்கள் யார்? எதற்காக இம்மாதிரிக் காரியங்களைப் புரிந்தார்கள்? இவர்கள் ஜரிஷ் புரட்சிக் கூட்டத்தார். அயர்லாந்தைக் கொடுமையாக ஆண்டுவந்த ஆங்கில அரசாங்கத்தை அழித்து, அங்கு குடியரசை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் புரட்சி செய்து வந்த கூட்டத்தாரில் இவர்கள் முக்கியமானவர்கள். தான்பிரீன் இவர்களுடைய தலைவன். இவர்கள் அனைவரும் யுத்தப் பயிற்சி பெற்று, புரட்சிப் பட்டாளத்தில் பதவிகள் வகித்து வந்தார்கள்.

லார்ட் பிரெஞ்ச் அரசாங்கத் தலைமைப் பதவி வகித்து வந்ததால், அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டால், ஆங்கில அரசாங்கத்தை அயர்லாந்து மக்கள் விரும்பவில்லை என்பது உலகமெங்கும் விளக்கமாய்த் தெரிந்துவிடும் என்பதும், அதிலிருந்து உள்நாட்டில் புரட்சி கொழுந்து விட்டெரியும் என்பதுமே புரட்சிக் காரர்களின் கருத்து.

புரட்சிக்காரர்கள் வைசிராயைச் சுட்டுக் கொன்றதாக எண்ணிக் கொண்டார்களே தவிர, அவர் இறக்கவில்லை, காயப்படவுமில்லை, ஏனெனில், வழக்கத்திற்கு விரோதமாக அவர் அன்று முதல் காரிலேயே சென்று விட்டார்.