தான்பிரீன் தொடரும் பயணம்/பாதிரி வேஷம்

12
பாதிரி வேஷம்


தொண்டர்கள் மேற்கு லிமெரிக்கில் இருக்கும்போது போலிஸாரும் பட்டாளத்தாரும் அவர்களைப் பிடிக்க எத்தனையோ முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர். அந்தப் பிரதேசம் முழுவதையும் வளைத்துக்கொண்டு, வீடு வீடாகச் சோதனை செய்து வந்தார்கள். தொண்டர்களைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ஏராளமான பொன் பரிசளிப்பதாக நடெங்கும் பறைசாற்றப்பட்டு வந்தது. அவர்களுடைய அங்க அடையாளங்களை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது.

1919ஆம் ஆண்டு கோடை காலத்தில் பிரிட்டிஷ் கவண்மெண்டார் பழைய கிழட்டு ஐரிஷ் சிப்பாய்களையெல்லாம் ஒன்று சேர்த்து புதிய ரகசிய இலாகா அமைத்துப் பலப்படுத்திக் கொண்டனர். அடுத்த இரண்டு வருஷங்களில் அவர்கள் எத்தனை பேர் இந்த உத்தியோகம் பார்ப்பதற்காக உயிரை இழந்தார்கள் என்பதை அக்காலத்துப் பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியவரும். ஐரிஷ் தொண்டர்கள் தங்கள் தேசத்தாரேதங்களைக் காட்டிக்கொடுக்கும் நீசத் தொழிலைச் செய்வதற்கு முன் வந்ததைக் கண்டு சந்தித்த இடத்திலெல்லாம் அவர்களைப் பரலோகத்திற்கு அனுப்பி வந்தனர். அரசின் ரகசிய இலாகாவிலுள்ளவர்கள் தீவிரமாக எதையும் செய்யமுடியாதபடி அந்த இலாகாவையே முறித்து வந்தசர்கள்.

அக்காலத்தில் தெருப்புறங்களில் ரகசியப் போலிஸாருடைய பிரேதங்கள் அடிக்கடி கிடப்பது வழக்கம். அவற்றின் கழுத்துக்களிலே சீட்டுக்கள் கட்டப்பட்டிருக்கும். அச்சீட்டுக்களிலே ஐரிஷ் தொண்டர் படையினரால் தண்டிக்கப்பட்டவர்கள். ஒற்றர்களே எச்சரிக்கை என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒற்றர்களா இல்லையா என்று சந்தேகப்படக்கூடிய நபர்களுக்கு மட்டும் உயிர்ப் பிச்சை கொடுத்தனுப்பி விடுவதே வழக்கம்.

கடைசியாகத் தொண்டார்கள் மீண்டும் ஷன்னான் நதியைத் தாண்டித் தென்திப்பெரரிக்குச் சென்றனர். அவர்களுக்குச் செலவுக்குப் பணம் இல்லாமல் கஷ்டமேற்பட்டது. பலர் பணம் கொடுக்கத் தயாராயிருப்பினும், அவர்களைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தொண்டர்கள் தங்களைப் போன்ற ஏழைகளுடைய வீடுகளிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தார்கள். பல்லாக் நகர வாசியான சம்ன் ஒ டிபிர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்த நண்பருடைய வீட்டில் தான் முன்பு நடனக் கச்சேரி நடந்து, பின்னர் ஸீன் ஹோகன் வெளியேறும் போது கைது செய்ப்பட்டான்.

வெகு காலமாக மறைந்து திரிந்து கொண்டு, தீவிரமான காரியங்களைச் செய்வதற்கு வழியில்லாமல் பொழுதுபோவதைக் கண்டு தான்பிரீன் மனம் வருந்தினான். அவன் ஸோலோஹெட்பக்கிலும், நாக்லாங்கிலும் ஆரம்பித்துக் கொடுத்த காரியங்களைத் தேசத்தார் பின்பற்றி ஆங்காங்கே பெரும் போர் தொடுப்பார்கள் என்று நம்பியிருந்தான். சிற்சில இடங்களில் மட்டும் போலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டும், உதிரியான போலிஸாரிடமிருந்து ரிவால்வர்களும் துப்பாக்கிகளும் பறிக்கப்பட்டும் வந்ததே தவிர எங்கும் ஒரேயடியான வேலை நடக்கவில்லை. ஆதலால் மேலும் தீவிரமான காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று தான்பிரினும் தோழர்களும் முடிவு செய்தனர். டப்ளினுக்குப் போனால்தான் தொண்டர்படையின் நிலையும், தேசமக்களின் அபிப்பிராயமும் நன்கு புலப்படும் என்று அவர்கள் கருதினார்கள். அதன்படி ராபின்ஸனையும் ஹோகனையும் வடதிப்பெரரியில் விட்டு விட்டு தான்பிரீனும் டிரீஸியும் இரண்டு சைக்கிள்களை எடுத்துக்கொண்டு டப்ளினுக்குச் சென்றனர்.

டப்ளினில் அவர்கள் ஷனாகனுடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். ஷனாகன் அவர்களுடைய பழம்பெரும் தோழன். எந்தத் தொண்டர் டப்ளினுக்குச் சென்றாலும் அவருடைய வீட்டுக்குத்தான் செல்வது வழக்கம். தொண்டர் படையின் சேனாதிபதிக்கு உதவியாகக் கடிதப் போக்குவரத்தைக் கவனித்து வந்தமைக்கேல் காலின்ஸைக் கண்டு தான்பிரீனும் டிரீஸியும் பல சமயம் விவாதம் செய்தார்கள். டப்ளினில் தங்குவதற்கு அவர்களுக்கு வேண்டிய உதவி செய்வதாய் காலின்ஸ் வாக்களித்தார். அவ்வுறுதியைப் பெற்றுக் கொண்டு அவர்கள் ராபின்லனையும், ஹோகனையும் அழைத்துக்கொண்டு வருவதற்காக மீண்டும் நாட்டுப்புறம்சென்றனர்.

அச்சமயம் தான்பிரீன் ஒரு பாதிரியாரைப் போல வேஷம் போட்டுக்கொண்டிருந்தான். பல புரட்சிக்கார்கள் பாதிரிவேஷம் பூணுவது அக்கால வழக்கம். அயர்லாந்தில் போலிஸார் பாதிரிமார்களிடம் பணிவுடன் நடப்பார்கள். ஆனால் புரட்சிக்காரர் பலரும் பாதிரிகளைப் போல் மாறு வேஷம் தரித்து வருகிற விஷயம் அவர்களுக்குத் தெரியும். யாரை உண்மையான பாதிரி என்றும் யாரைப் போலிப் பாதிரி என்றும் நம்புவது? அவர்கள் ஒருவரையும் தடுத்துக் கேள்வி கேட்க விரும்பவில்லை. ஏனெனில் உண்மைப் பாதிரியை வழிமறித்தால் ஜனங்கள் மிகவும் கோபடைவார்கள். போலிப்பாதிரியை வழிமறித்தால் துப்பாக்கிக்குப் பலியாக நேரும்!

டப்ளினில் இருந்தபோது ஒருசமயம் தான்பிரீன் மேனுத் என்ற இடத்திற்குப்போக நேர்ந்தது. வழியில் அவனுடைய சைக்கிளில் ஒரு சக்கரத்தில் காற்று இறங்கி ரப்பர் சக்கரம் சிறிது கிழிந்தும் போய்விட்டது. அதை ஓட்டுவதற்கு ரப்பர் துண்டும் பசையும் தேவையாயிருந்தன. அவன் சைக்கிள் கடைக்குச் சென்று ஒட்டித்தரும்படி கேட்டான். சிலமணிநேரம் காத்திருந்தால்தான் முடியும் என்று கடைக்காரன் சொன்னான். பக்கத்தில் மேனுத் கலாசாலையிருப்ப தாயும், அங்கே இளம்பாதிரிமார்கள் படித்து வருவதாயும். அவர்களிடம் போனால் ஒட்டித்தருவார்கள் என்றும் தெரிவித்தான். போலிப் பாதிரியான தான்பிரின் உண்மைப் பாதிரியார்களின் முன் எப்படிப் போக முடியும் கடைக்காரனிடம் கோபப்பட்டுக் கொண்டு எங்கே செல்வதென்று தான்பிரீன் யோசித்தான். ஆபத்துக் காலத்தின் போலிஸாரே தனக்கு உதவி செய்வது வழக்கம் என்பது அவன் ஞாபகத்திற்கு வந்தது. உடனே பக்கத்திலிருந்த போலிஸ் நிலையத்திற்குச் சென்றான். அங்கு சென்றதும் காவலிலிருந்த போலிஸ்காான் முன்னால் ஓடிவந்து 'சலாம்' செய்தான். பாதிரியும் மிகுந்ததாாாள விந்தையுடன் ஆசிர்வதித்து, வந்த காரியத்தைக் கூறினான். உடனே பல போலிஸாரும் ஓடிவந்து சைக்கிள் சக்கிரத்தில் கிழிந்த இடத்தை ரப்பரை ஒட்டிக் காற்றடைத்துக் கொடுத்தனர். அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, பாதிரி, நிலையத்துள் சுவரில் ஒட்டப்பட்டிருந்த அச்சிட்ட அறிக்கைகளை ஜன்னல் வழியாகக் கவனித்துப் பார்த்தான். அவற்றில் ஒன்றில் பின்கண்டவாறு எழுதப்பட்டி ருந்தது:

போலிஸ் நிலையம்
1000 பவுண்டு இனாம்
அயர்லாந்தில் கொலை செய்த கொலைகாரன் தேவை!
டானியல் பிரீன் (தான்பிரீன்)
மூன்றாவது திப்பெரரித்தொண்டர் பட்டாளத்தின் தளகர்த்தர்
என்று அழைக்கப்படுகின்றவர்

வயது 27. உயரம் 5அடி 7 அங்குலம், சிறிது கபிலநிறம். கறுத்த மயிர் (முன்னால் நீண்டிருக்கும்). சாம்பல் நிறமான கண்கள், குட்டையான வளைந்த மூக்கு, தடித்த உருவம், கனம் சுமார் 12 ஸ்டோன் (168ராத்தல்). முற்றிலும் சவரம் செய்யப்பட்டிருக்கும் முகம், கோபமுள்ள 'புல்டாக்' தோற்றம், வேலை செய்து விட்டு வருகிற கருமான் போன்ற உருவம், தொப்பி நெற்றிவரை இழுத்து மாட்டப்பட்டிருக்கும்.

அவரைக் கைது செய்வதற்கு உதவியாகப் 'பொதுஊழிய இலாகா' வைச் சேராத எந்த நபராவது துப்புச்சொல்லும் பட்சத்தில் அவருக்கு மேற்படி பரிசு ஐரிஷ் அதிகாரிகளால் கொடுக்கப்படும். தகவலை எந்தப் போலிஸ் நிலையத்திலும் கொடுக்கலாம்.

அந்த அறிக்கையைப் படிக்கும் போது தான்பிரீன் சிறிதும் சிரிக்கவேயில்லை. உள்ளத்தில் தோன்றிய உவகையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான். பிறகு பீலர்கள் செய்த உதவிக்குப் பலமுறை வந்தனம் கூறிவிட்டு, மெதுவாக வெளியே வந்து கம்பி நீட்டினான்.