தான்பிரீன் தொடரும் பயணம்/பின் நிகழ்ச்சிகள்

11
பின் நிகழ்ச்சிகள்.


மற்ற விஷயங்களைக் கவனிப்பதற்கு முன்னால் ஸீன் ஹோகன், பிலர்கள் கையில் அடைந்த துன்பங்களைச் சிறிது பார்ப்போம்.

பால்லாக் நகரில் நடனக் கச்சேரி முடிந்ததும், அதிகாலையில் ஸீன் ஹேகன் ஆன்பிக்டில் இருந்த மீகர் குடும்பத்தார் வசித்து வந்த வீட்டுக்குக் சென்றான். அவனுடன் பிரிஜிட் என்னும் பெண்ணும் துணையகச் சென்றாள். அவள் மீகருடைய உறவினள். அவளுடைய சொந்த வீட்டி வீட்டில்ன் டிரீஸி, தான்பிரீன் முதலியோர் அன்றிரவு படுத்திருந்தனர்.

ஹோகன் காலையுனைவு சாப்பிட உட்கார்ந்தான். உணவை மறந்து அப்படியே கண்ணயர்ந்த மேசையின் மேல் சாய்ந்து விட்டான். ஐந்து நாள் இரவு தொடர்ந்து தூக்கம் விழித்த களைப்பு அவனைக் கீழே உருட்டிவிட்டது. பின்னர் ஒருவாரு மீண்டும் கண்னை விழித்துக் கொஞ்சம் உணவு அருந்திவிட்டு அவன் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்து உறங்க ஆரம்பித்தான். அவனுடைய ரிவால்வரும் இடுப்பில் கட்டும் கச்சை வாரும் பக்கத்திலே கழற்றி வைக்கப்பட்டிருந்தன. மீகரும் அவருடைய இரண்டு பெண்களும் பால் கறப்பதற்காகத் தொழுவத்திற்குச் சென்றனர்.

'போலீஸார் வீதியில் வருகிறார்கள், வருகிறார்கள்!' என்று திடீரென்று சத்தம் கேட்டது. ஹோகன் திடுக்கிட்டெழுந்து கச்சையை இறுகக்கட்டி ரிவால்வரை எடுத்துக்கொண்டு வாயிற்படிக்குச் சென்றான்.

போலிஸார் வெகுதூரத்தில் வரும்போழுது யாரோ ஓடிவந்து தகவல் கொடுத்துவிட்டதால், ஹோகன்தப்பி ஓடுவதற்குப் போதுமான நேரம் இருந்தது. அவன் வீட்டிலிருந்தே வெளியில் எட்டிப் பார்த்தான். போலிஸார் தென்படவில்லை. உடனே அவன் வெளியேறி, போலிஸார் வடபக்கத்திலிருந்து வருவதாக எண்ணிக்கொண்டு தென்புறம் திரும்பி வயல்களில் குதித்து ஒடலானான். வீதி மேட்டிலிருந்ததால், அங்கிருந்து பார்த்தால் வயல்களில் நடப்பது நன்றாகத் தெரியும். வீதியில் ஆறு போலிஸ்காரர் நின்று கொண்டு ஹோகன் ஓடிவருவதைக் கவனித்தனர். அவன் அதிவேகமாய் வயல்களைத் தாண்டி அவர்கள் நின்ற இடத்திற்கே போய் மேட்டில் ஏறிவிட்டான் போலிஸ்கார்கள் உடனே அவனைப் பிடித்துக் கொண்டனர். ஹோகன் தனக்கு மேற்கொண்டு அபாய மில்லை என்று கருதியிருந்ததால் ரிவால்வரை இடுப்பில் மாட்டியிருந்தான். ஆதலால் அதை உடனே எடுக்க முடியவில்லை.

உடனே அவனுக்கு விலங்கிடப்பட்டது; அவனுடைய ரிவால்வர் பறிக்கப்பட்டது. போலிஸார் அவனை மீகருடைய வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கே அதற்கு முன்னால் சென்று வீட்டைச் சோதனை போட்டுக் கொண்டிருந்த பல போலிஸார் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அங்கு கூடியிருந்த போலிஸார் அனைவருக்கும் தங்களிடம் கைதியாக அகப்பட்டிருந்த பேர்வழி யார் என்பதே தெரியவில்லை. அவன் பெயர் என்ன என்று கேட்டார்கள். ஹோகன் பீலர்களை மதித்துப் பதில் சொல்வது வழக்கமில்லை. பீலர்கள் அவனை வெளியே கொண்டு செல்லும்போது அவனுடைய தோழி பிரிஜிட் அவ்விடத்திற்கு ஓடிவந்து, 'ஸீன் போய்வா! வந்தனம்! என்று கூறினான். அப்பொழுதுதான் போலிஸாருக்கு அவனுடைய பாதிப் பெயர் தெரிய வந்தது!

அந்தப் போலிஸ் கூட்டத்திற்கு சார்ஜென்டு வாலஸ்தான் தலைமை வகித்திருந்தான். கான்ஸ்டபிள் ரெய்லியும் அவனுடன் இருந்தான். கடையில் போலிஸார் ஹோகனை தர்லஸ் போலிஸ் நிலையத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்ந்தனர். அங்கு ஒரு போலிஸ்காரன் ஹோகனைப் பார்த்தவுடன், அவன் ஸோலோ ஹெட்பக் கொலைகள் சம்பந்தமாகப் பிடிபட வேண்டியவர்களில் ஒருவன் என்பதைக் கண்டுபிடித்து விட்டான்!

பிலர்கள் ஹோகனைப் பலவிதமாகத் துன்புறுத்தினார்கள். கைகளாலும் தடிகளாலும் அடித்தார்கள். அடிமேல் அடிவிழுந்ததும், அவன் வாய் திறந்து ஒரு வார்த்தைகூடச்சொல்லவில்லை. ஒரு போலிஸ்காரன் தான்பிரீனும், டிரீஸியும் கைது செய்யப்பட்டிருப்பதாயும் அவர்கள் உள்ளதையெல்லாம் ஒளிக்காமல் சொல்லி விட்டதாயும் தெரிவித்தான். அவனும் உள்ளதைச் சொன்னால் தூக்கிலிடப்படாமல் லண்டனுக்குத் தப்பிப்போக வழி உண்டு என்பதையும் அவன் குறிப்பாக எடுத்துக்காட்டினான். ஸின் ஹோகன் போலிஸ்காரர்களின் வார்த்தைகளை நம்புவானா? அவனுடைய நண்பர்கள் உயிரை இழப்பினும் , மானத்தையும், கொள்கைகளையும் இழக்க மாட்டார்கள் என்பது அவனுக்கு வெகு நன்றாகத்தெரியும். ஆதலால் அவன் முற்றிலும் மெளனமாக இருந்துவிட்டான். போலிஸார் மேலும் பயமுறுத்தினார்கள், அடித்தார்கள், ஏசினார்கள், ஏமாற்றிப் பார்த்தார்கள், ஒன்றும் பயன்படவில்லை. பின்னால் 13ஆம் தேதி அவனைக் கார்க் ஜெயிலுக்குக் கொண்டிபோகையில்தான் ரயிலில் தோழர்கள் வந்து அவனை விடுதலை செய்தனர்.

வழியில் சார்ஜென்ட் வாலஸ் அடிக்கடி, 'தான்பிரீன் எங்கே? எங்கே?, என்று கேட்டு, ஒவ்வொரு கேள்வி கேட்கும் போதும் அவனைக் கத்தி முனையால் குத்தி வந்தானாம். ஹோகனுடைய உடம்பிலிருந்த புண்களே போலிஸாரின் திருவிளையாடல்களை எடுத்துக்காட்டின. ஆனால் சார்ஜென்ட் வாலஸ் மேற்கொண்டு உயர்ந்த உத்தியோகத்தைப் பெறமுடியாதபடி இவ்வுலகத்தை விட்டே புறப்பட நேர்ந்து விட்டது.

இனி, தான்பிரீன் முதலானவர்களைக் கவனிப்போம். கடைசியாக கான்ஸ்டபிள் ரெய்லி ஓடிய பிறகு, தான்பிரீனும் நண்பர்களும் ஸ்டேஷனை விட்டு வெளியேறினார்கள். அவர்களுடைய உடம்புகளிலும் உடைகளிலும் ரத்தம் கொட்டுவதைக் கண்டு மக்கள் திடுக்கிட்டுப் பல இடங்களிலும் சிதறி ஓடி மறைந்தனர். அந்த ஸ்டேஷனில் இம்மாதிரியான சம்பவத்தை அவர்கள் முன்னர் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. ஒருவரும் புரட்சிக்காரரை நெருங்கவேயில்லை. புரட்சி வீரர்களையும் கைதியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர்களிருந்தனர்.

தான்பிரீனால் நடக்கவே முடியவில்லை. அத்துடன் அவனுடைய ரிவால்வரில் குண்டுகளும் காலியாகிவிட்டன. அவன் பக்கத்தில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். வெளியிலிருந்து ஸ்டேஷனைப் பார்த்து ஒரு மோட்டார் கார் வந்து கொண்டிருந்தது. உடனே அவன் வெற்று ரிவோல்வரை நீட்டி அதை வழிமறுத்தி நிறுத்தினான். அந்த நிலையில் அவனைக் கண்ணுற்ற யாரும் இரக்கப்படாமலிருக்கமுடியாது. அவனுடைய தலை 'கிர்.. கிர்..' என்று சுழன்று கொண்டிருந்தது; உடம்பெல்லாம் இரத்தம் வழிந்தது; வழியில் ஒரு சுவரில் முட்டித் தலையிலிருந்து கண்னை மறைத்து இரத்தம் பொழிந்து கொண்டிருந்தது. அவனுடைய கால்கள் தள்ளாடி வீழ்ந்ததால் அவன் ஒரு கையால் பூமியைத் தடவிக் கொண்டே உருளலானான். அவனைப் பார்த்த சில மக்கள் அலறிக் கொண்டு ஓடினார்கள். கடைசியாக ஒரு புண்ணியவான் ஓடி வந்து உதவி செய்யலானான். அவன் காக்கியுடை தரித்திருந்த அரசாங்கப் பட்டாளச் சிப்பாய்! தான்பிரீன் அவன் கைமீது சாய்ந்து கொண்டே வீதியில் நடக்கலானான். அவனுடைய மூளையும் கலங்கியிருந்தது. முடிவில் ரிவால்வரைக் காட்டி நிறுத்திய காரை உபயோகிக்க அவனுக்கு ஞாகபமில்லை. வழியில் மற்ற நண்பர்கள் வீதியோரமாகக் காத்திருந்தனர். அவர்கள் ஒரு கசாப்புக்கடைக்காரனுடைய கத்தியை வாங்கி ஹோகனுடைய கைவிலங்குகளை உடைந்தெறிந்னர். நான்கு தொண்டர்கள் அவனை மிகவும் பந்தோபஸ்தான இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.

தான்பிரீன், டிரீஸி, ஈமன் ஓபிரியன், ஸ்கான்லன் ஆகிய நால்வரும் ஷனாகனுடைய வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். சுற்றிலும் மையிருட்டாக இருந்ததால் பாதை சரியாய்த் தெரியவில்லை. இடையில் சில வாலிபர்கள் அவர்ளுக்கு வழிகாட்டி உதவி செய்தனர்.

வீடு சேர்ந்ததும் தான்பிரீன் ஒரு படுக்கையில் படுக்கவைக்கப்பட்டால், அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு பாதிரியாரும் வைத்தியம் செய்யப் புகழ்பெற்ற ஒரு வைத்தியரும் அழைத்து வரப்பட்டார்கள். வைத்தியருடைய பெயர் டாக்டர் ஹென்னெஸ்ஸி. அவ்விருவரும் நோயாளி 24 மணி நேரத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டார் என்று அபிப்பிராயப்பட்டனர். ஏனென்றால் தான்பிரீனுடைய சுவாசப்பையில் குண்டு பாய்ந்து மறுபுறத்தால் வெளியே போயிருதது. அத்துடன் உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியாகியிருந்தது. தான்பிரீன்தான் உயிரோடிக்கக்கூடிய 24 மணி நேரத்திலுமாவது அமைதியாய் இருப்புதற்கு வழியில்லையே என்று வருந்தினான்.

அவன் படுத்திருந்த ஷனாகனுடைய வீட்டைச்சுற்றிலும் கிளான்ஸி என்பவனுடைய தலைமையின் கீழ் ஒரு தொண்டர்படை காவலுக்காக வைக்கபட்டிருந்தது. வேறு பல தொண்டர்கள் ஊரைச் சுற்றியுள்ள வீதிகளில் நிறுத்தப் பட்டிருந்தனர். போலிஸாருடைய தலை எங்காவது காணப்பட்டால் உடனே, தகவல் கொடுப்பதற்கும், அவர்கள் வீட்டுப் பக்கம் நெருங்கினால் எதிர்த்து போராடுவதற்குமே தொண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தான்பிரீன் உயிரேடிருக்கும் வரை பகைவர்கள் அவனைத் தொட்டுவிடாமல் இருப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தொண்டர்கள் செய்து வைத்திருந்தனர். இங்கே இந்நிலையிருக்க, நாக்லாங்கிலும் அதன் சுற்றுப்புறத்திலும் டுன், ஊலர், கால்பல்லி முதலான பல கிராமங்களிலும் நகரங்களிலும் ஏராளமான பட்டாளத்தார்களும் போலிஸ்கார்களும் கொண்டுவரப்பட்டனர். தென் திப்பெரரியிலும், கிழக்கு லிமெரிக்கிலும் வீடு வீடாய்ச் சோதனை போடப்பட்டது. புதியதாய் மண் போடப்பட்டிருந்த சவக்குழிகள் எல்லாம் தோண்டிப் பார்க்கப்பட்டன. ஏனென்றால் இரண்டு புரட்சிக்காரர்கள் படுகாயமடைந்ததாயும் அவர்கள், இறந்து போய்ப் புதைக்கப்பட்டிருப்பார்கள் என்றும் போலிஸாருக்குத் தகவல் கிடைத்ததாம்.

தான்பிரீன் அதிக நேரம் ஓய்வெடுத்துக்கொள்ள வழியில்லை. சில மணி நேரம் கழியும் முன்பே தொண்டர்கள் போலிஸார் அங்கு வருவதாகத் தெரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள் ஒரு மோட்டார் காரைக் கொண்டுவந்து அதில்தான்பிரீனை ஏற்று வைத்து கில்மல்லக் நகரத்தின் வழியாக ஓட்டிச் சென்றனர். வழியில் போலிஸாருடைய வீடுகளிருந்தன. அவற்றின் வழியாகவே கார் சென்றது. எப்படியாவது அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டியது அவசியமாயிருந்தது. கடைசியாக அவர்கள் மேற்கு லிமெரிக்கில் ஸீன்பின்னுடைய வீட்டையடைந்து அங்கு தான்பிரீனைச் செளகரியமாய்ப் படுக்கவைத்தனர். ஸீன் பின் அவனுடைய பழைய நண்பன். ஆதலால் அவனையும் அவன் தோழர்களையும் மிக்க அன்புடன் உபசரித்து வந்தான். பக்கத்திலிருந்து மற்றக் குடும்பத்தார்களும் அவர்களை அடிக்கடி வந்து பார்த்து வேண்டும். உதவிகள் செய்து வந்தார்கள்.

அங்கு தான்பிரீன் வெகுநாள் அமைதியாயிருக்க முடியவில்லை. பகைவர்கள் அவனைப் பற்றித் துப்பறிந்து நாலு பக்கத்திலும் நெருங்கி வந்து கெண்டிருந்தனர். தொண்டர்களில் பலர் தாங்களும் பல இடங்களிலிருந்து எதிரிகளைப் பற்றிய ரகசியங்களை அறிந்து வந்தனர். தான்பிரீன் அங்கிருந்து கெர்ரிக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அங்கு போன பின்பு வெகுவிரைவாகக் குணமடைந்து வந்தான். அவன் அடைந்த காயங்களால் இறந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வழியாகக் காணப்பட்டபோதிலும், அவன் பிடிவாதமாக இறக்க மறுத்து உயிர் வாழ்ந்து வந்தான். கெர்ரியிலிருக்கும் பொழுது அவன் சிறிது தூரம் நடக்கவும் முடிந்தது.

துன்பங்களின் நடுவே தான்பிரீனுக்கும் மற்றத் தோழர்களுக்கும் ஒரு பெரிய இன்பம் மட்டும் எப்பொழுதும் இருந்துவந்தது. எத்தனையோ துயரங்களின் நடுவிலும் அவர்களுடைய ஆருயிர் நண்பன் ஸீன் டிரீஸி வேடிக்கையாகப் பேசி அவர்களுடைய கவலைகளை மாற்றிச் சந்தோசப்படுத்தி வந்தான். நாக்லாங்கில் டிரீஸியில் வாயில் குண்டு பட்டதால், அவன் வெகுநாள் துன்பப்பட தேர்ந்துது. தான்பிரீனோ சுவாசப்பையிலும் உடம்பிலும் குண்டு பட்டுக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். டிரீஸி ஒருநாள் அவனைப் பார்த்து, நண்பா உன்னுடைய தலையை எனக்குக் கொஞ்சநாள் இரவல் கொடுத்து வாங்குவாயா என் வாய் புண்ணாயிருப்பதால் சாப்பிட முடியவில்லை. நம்வாய்களை மாற்றிக் கொள்வது நலம் என்று கூறினான். யாவரும் கொல்லென்று சிரித்தனர். மற்றொரு நாள் இரவில் அவர்கள் கல்வென் வழியாகத் திப்பெரிக்குச் சைக்கிள்களிற் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பிரதேசம் முழுவதும் ராணுவச் சட்டம் அமுலில் இருந்ததால் பட்டாளத்தார் எங்கும் திரிந்துக்கொண்டிருந்தானர். ஆதலால் அனைவரும் அதிக வேகமாய் சைக்கிள்களை ஓட்டிக்கொண்டு சென்றனர். அந்நிலையில் டிரீஸி 'ஒரு குண்டுசி வேண்டும் கழுத்தில் கட்டியுள்ள 'டை' காற்றில் பறக்கிறது. அதைச்சட்டையோடு சேர்த்துக் குத்துவதற்கு யாரிடமாவது ஒரு குண்டுசி இரக்குமா?’ என்று கேட்டான். கொஞ்சம் கூடப் பயமில்லாமல் நடு வீதியில் அவன் எல்லோரையும் நிறுத்தி விட்டதற்காக நண்பர் நண்பர்கள் வருத்தப்பட்டனர். ஆயினும் டிரீஸியின் கவலையற்ற இன்பகரமான தமாஷை யாவரும் அதுபவித்ததிலும் குறைவில்லை! இதுபோல் டிரீஸி தாடி தீப்பற்றி எரியும்போது பிடிக்கு நெருப்புக் கேட்பது வெகு நாள் பழக்கமாய்ப் போய்விட்டது.

கெரியில் தான்பிரீன் முதலானவர்கள் அடிக்கடி பத்திரிகை படிப்பது வழக்கம். அவற்றில் நாக்லாங் சம்பவத்தைப் பற்றிப் பலபொய்யும் புளுகுகளும் புனைந்துரைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் தொண்டர்களுடைய செயலைக் கண்டித்து அறிக்கைகளும் அபிப்பிராயங்களும் வெளிவந்தன. அரசர் பெருமான் தம்மிடம் கூலிக்கு வேலைபார்த்து நாக்லாங்கில் உயிர் கொடுத்தவர்களுடைய பந்துக்களுக்கும் ஐரீஷ் வைசிராய்க்கும் அனுதாபச் செய்தி அனுப்பியிருந்தார்.

கெர்ரியிலிருந்து தொண்டர்கள் ஷன்னான் நதிக்கரையின் வழியாக லிமெரிக் பகுதிக்குத் திரும்பினார்கள். அங்கு தினசரி ஆற்றில் முழுகுவதும் ஒய்வெடுத்துக் கொள்வதும் பழைய விஷயங்களையும் புதிய விஷயங்களையும் பற்றிச் சிந்திப்பதுமாகப் பொழுதைப் போக்கி வந்தனர். அவர்களுடைய காயங்களும் விரைவாகக் குணமடைந்து வந்தன. சும்மாயிருக்கும் நேரங்களில் அவர்கள் பிடித்து வந்த மீனுக்கு அளவேயில்லை. சுற்றிலும் ரகசியப் போலிஸ், கடியடிப் போலிஸ், பீரங்கிப் பட்டாளம், பற்பல அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து, அவர்களைப் பிடிப்பதற்காக எள்ளிருக்கும் இடத்தையும் விடாது தேடிக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் அவர்கள் ஸ்நானமும் பானமும் தவறாமல் மிக்க மனஅமைதியுடன் மீன் பிடித்து மகிழ்ந்து வந்தனர்!