தான்பிரீன் தொடரும் பயணம்/முடிவுரை

23
முடிவுரை


தான்பிரீன் டப்ளின் நகருக்குச் சென்றபொழுது வீர அயர்லாந்து பிளவுபட்டுக் கிடந்ததைக் கண்டான். பழைய குடியரசுப் படை இரண்டு பிரிவாகப் பிரிந்து, 'பிரீஸ்டேட் படை', 'குடியரசுப் படை என்ற இரண்டு பெயர்களுடன் விளங்கியது. பிரிட்டிஷ் துருப்புகளால் காலி செய்யப்பட்ட படை வீடுகளை எல்லாம் இரு படைகளும் பிடித்துக்கொண்டன. தேசம் முழுவதும் இரு படைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் போராடத் தயாராய் நின்றன.

தான்பிரீன் இரு கட்சியாரிடமும் சென்று அடிக்கடிசமாதானப்படுத்த முயன்றான். அவர்களை அழைத்துக்கூட்டங்கள் நடத்தினான். அவனுடைய நன்முயற்சியால் இரு கட்சித் தலைவர்களிலும் சிலர் ஒன்றுகூடி விவாதம் செய்து, கடைசியில் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர். அந்த உடன்படிக்கையின் விவரம் முழுவதும் மே 1ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. தொண்டர்களுக்குள் பிளவு ஏற்பட்டுக் கலகம் நேருமானால், அதனால் அயர்லாந்து பல நூற்றாண்டுகள் தலைதுாக்கமுடியாதபடி பெரும் நஷ்டமடையும் என்பதும், எல்லாத் தொண்டர்களும் உடனேவேற்றுமைகளை மறந்து ஐக்கியப்பட வேண்டும் என்பதும், தலைவர்கள் யாவரும், பொது மக்களும், யுத்த வீரர்களும் தேசத்தின் நிலைமையை உணர்ந்து தங்கள் வலிமையைத் தொலைக்கக்கூடிய எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பதும் உடன் படிக்கையில் வற்புறுத்தப்பட்டிருந்தன.

இந்தச்சமாதான உடன்படிக்கை நெடுநாள் அமுலில் இல்லாமற் போயிற்று. குடியரசுப் படையைச் சேர்ந்த சில அதிகாரிகள் அதைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர். அதற்குக் காரணமாயிருந்த தான்பிரீனும் பலமாய்க் கண்டிக்கப்பட்டான். அரசியல் தலைவர்களுக்குள்ளும் ராணுவத் தலைவர்களுக்குள்ளும் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வழியில்லாது போயிற்று. ஆயினும் இருகட்சித்தலைவர்களிலும் முக்கியஸ்தராய் விளங்கிய டிவலராவும் மைக்கேல் காலின்ஸும் புதிதாய் நடக்கவேண்டியிருந்த பொதுத் தேர்தலில் இரு கட்சிகளையும் ஒன்று சேர்த்து ஒரே ஸின்பீன்கட்சியின் சார்பாகப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டுமென்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், அந்த ஒப்பந்தமும் சிதைந்து போயிற்று. கிழக்குத் திப்பெரரி அங்கத்தினர் ஸ்தானம் காலியாயிருந்ததால், அதற்கு எந்தக்கட்சி அங்கத்தினரை அபேட்சகராக நியமிக்கலாம் என்பதைப் பற்றிப் பலத்த விவாதம் ஏற்பட்டதால் இப்படி நேர்ந்தது.

மேலும் விவசாயிகளும் தொழிலாளர்களும் குடியரசுக் கட்சியையும் பிரீஸ் டேட் கட்சியையும் எதிர்த்துத் தங்களுடைய பிரதிநிதிகளைச் சுயேச்சையாக நறுத்த முற்பட்டனர்.

உள்நாட்டுக் கலகம் ஏற்படாமல் தடுப்பதற்குத் தான்பிரீன் தன்னால் இயன்றளவு முயற்சிசெய்து பார்த்தான். அவன் முயற்சிகள் பயனற்றுப்போயின. சகோதரர்களுக்குள்ளேயே பூசல் விளைந்தது. ஒருவரையொருவர் சுட்டுத்தள்ள முற்பட்டனர். கொடிய கலகம் மூண்டுவிட்டதால், தான்பிரீன் குடியரசுப் படையுடன் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமற் போயிற்று. டின்னி லேவலி, லியாம் லிஞ்ச் முதலிய பல வீரர்களை இழக்க நேர்ந்ததைக் குறித்துத் தான்பிரீன் வருந்தினான்.

1923ஆம் ஆண்டு லியாம் லிஞ்சின் மரணத்திற்குப் பின்னால் நைர் பள்ளத்தாக்கில் நடக்கக்கூடிய ஒரு சமாதானக் கூட்டத்திற்குத் தான்பிரீன் சென்றான். இடைவழியில் பிரீ ஸ்டேட் பட்டாளத்தார் அவனையும் அவனுடன் சென்ற நண்பர்களையும் பார்த்து சுட ஆரம்பித்தனர். அப்பொழுது அவர்கள் பல திசைகளைப் பார்த்து ஒடிமறைந்துகொள்ள நேர்ந்தது. தான்பிரீன் இரண்டு நாள் காட்டுப்புறத்தில் சுற்றித்திரிந்து, பின்னால் பூமிக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு பாசறைக்குள் பதுங்கியிருந்தான். களைப்பு மிகுதியால் அவன்.அங்கே விழுந்து உறங்கிவிட்டான். சிறிது நேரத்தில் பிரீஸ்டேட் பட்டாளத்தார் அங்கு சென்று, அவனைத் திடீரென்று சூழ்ந்து கொண்டு கைது செய்தனர். அவன் விழித்துப் பார்க்கையில் நாலு புறத்திலும் பட்டாளத்தார் துப்பாக்கிகளைத் தன்னை நோக்கிப் பிடித்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். ஐந்து வருஷகாலம் வல்லமை மிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, எந்த நேரத்திலும் பகைவர்களுடைய கையில் சிக்காமல் சாமர்த்தியத்துடன் தப்பிவந்த தான்பிரீன், தன் தாட்டுச் சகோதரர்களுடைய கையில் எளிதாக அகப்பட்டு விட்டான் அவன்

அளவற்ற துக்கமடைந்து பரிதவித்த போதிலும், எதிரிகள் முன்பு தைரியத்தைக் கைவிடாதது போல் பாவனைசெய்து கொண்டான்.

பிறகு, அவன் கால்பல்லிக்குக் கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து திப்பெரரிக்குக் கொண்டு போகப்பட்டான். திப்பெரரியிலிருந்த பிரீஸ்டேட் அதிகாரிகள் அவனை லிமெரிக் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவன் இரண்டுமாதம் வைக்கப்பட்டிருந்தான். அந்தச் சிறையில் அவன் முன்னால் ஆஷ்டவுன் போராட்டத்தில் காயப்படுத்திய லார்ட் பிரெஞ்சினுடைய கார் டிரைவரைக்காண நேர்ந்தது. அந்த டிரைவர் லிமெரிக் சிறையில் ஓர் உத்தியோ கஸ்தனாயிருந்தான்.

லிமெரிக்கிலிருந்து தான்பிரீன் மெளண்ட்ஜாய் சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே ஒரு வசதியுமில்லை. எனவே அவன் உண்ணவிரதம் இருக்க நேர்ந்தது. 12நாள் உண்ணாவிரதமும், 6நாள் (நீரே பருகாமல்) தாகந்தனியா விரதமும் இருந்த பிறகு, விடுதலை செய்யப்பட்டான்

அவன் சிறையிலிருந்த பொழுது திப்பெரரி வாசிகள் அவன்பால் நன்றி செலுத்தி, அவனையே தங்களுடைய குடியரசுக் கட்சியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தனர்.

சமாதான உடன்படிக்கைப்படி பிரிட்டிஷ் பார்லிமென்டால் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திர ஐரிஷ் ஆட்சி 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி ஏறபடுத்தப்பட்டது. அதன்படி அயர்லாந்துக்கு பிரிட்டிஷ் உறவு இருந்து வந்த போதிலும், ஐரிஷ் பார்லிமென்டான டெயில் ஐரானின் தலைவர் ஈமன் டிவலரா நாளடைவில் அந்த உறவு இல்லாமல் செய்துவிட்டார். அதனால் குடியேற்ற நாடு குடியரசாகிவிட்டது. ஆயினும் தொண்டர்படையினருக்குள் இடையில் ஏற்பட்ட பூசல்களால் என்றும் மறக்கமுடியாத பல கஷ்டங்கள் அயர்லாந்துக்கு ஏற்பட்டன. டப்ளினில் தொண்டர்படைத் தலைமையில் நின்று, எண்ணற்ற வீரத்தியாகங்கள் செய்து போராடிய மைக்கேல் காலின்ஸ் தன்னுடைய பழைய நண்பர்கள் கையாலேயே மடிய நேர்ந்தது! நண்பரை நண்பரே வதைத்தனர். சொத்துக்கள் நெருப்புக்கு இரையாயின. எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்தனர்!

ஆனால் ஐரிஷ் தலைவர்கள் அரசாங்கத்தை அமைத்ததோடு நில்லாமல், வெகு வேகமாக முற்போக்கான திட்டங்களைக் கையாண்டதால் நிலைமையை மாற்றமுடிந்தது.

ஐரிஷ் தலைவர்களில் முதலாவதாக டி வலராவைக் குறிப்பிடவேண்டும். அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவர். 1913லேயே அவர் சுதந்திரப் பட்டாளத்தில் சேர்ந்தவர். 1916ஆம் வருடம் நடந்த ஈஸ்டர் சண்டையில் அவரும் தலைமைவகித்து போராடினார். அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 1917ஆம் ஆண்டு நடந்த சமாதான உடன்படிக்கையின்படி அவர் ஜான் மாதம் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பெற்றார். அடுத்தவருடம் டப்ளினில் கூடிய குடியரசுச்சட்ட கபைக்கு அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடி அவரை அரசாங்கத்தார் கைது செய்து லிங்கன் சிறையில் அடைத்தனர். அங்கிருந்து அவர்தப்பி வெளிவந்து, அமெரிக்கா சென்று அயர்லாந்துக்கு அரும்பெரும் வேலைகள் செய்தார். கடைசிச் சுதந்திரப் போருக்கு வேண்டிய பணத்தையும் அங்கேயே திரட்டிக்கொண்டார். பின்னால், தாய்நாடு திரும்பி, சுதந்திர நாட்டிற்காக அல்லும் பகலுமாக உழைத்து வந்தார். அவருடைய ஆசைக்கனவுகள் ஒவ்வொன்றாகப் பலித்துவிட்டன. பின்னால் பிரிட்டிஷார் சூழ்ச்சியால், அல்ஸ்டர் மாகாணம் வேறு, அயர்லாந்து வேறு என்று அயர்லாந்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டதை மட்டும் அவரால் மாற்றவே முடியவில்லை! அல்ஸ்டர்தான் அயர்லாந்தின் பாகிஸ்தான்.

ஆர்தர் கிரிபித் என்று அரசியல் ஞானியையும் அயர்லாந்தின் விடுதலைப் போரின் வீரச்சரித்திரத்தில் குறிப்பிடவேண்டியது அவசியம். அவர் நடத்திய பத்திரிகைகளும், எழுதிய நூல்களும் மக்களுக்கு வீரத்தை ஊட்டின தாய்மொழியாகிய கெயிலிக் மொழியின் மீது மட்டற்ற அன்பை வளர்த்தன. 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி அவர் தமது காரியாலயத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் களைப்பினால் இறந்து விழுந்துவிட்டார். அவருடைய கடுமையான உழைப்பே அவரைக் கொன்றுவிட்டது.

இளம் சிங்கம் மைக்கேல் காலின்ஸையும் அயர்லாந்து ஒரு நாளும் மறக்காது. சிரித்த முகமும், செவ்விய உள்ளமும் கொண்டவர். பயம் என்பது அவரைக் கண்டு பயப்படும். ஊர் முழுவதும் அவரைப் பிடிக்கப் போலிஸ்காரர்களும், பட்டாளத்தார்களும் திரியும்பொழுது, அவர் பெரிய வீதிகளின் முனையில் நின்று தொண்டர்களுக்கு வேலைத்திட்டம் வகுத்துக் கொண்டிருப்பார். அவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு 10,000 பவுண்டு பரிசலிப்பதாக அதிகாரிகள் கூவிப்பார்த்தார்கள். கடைசிவரை அந்தப் பதினாயிரம் பவுண்டை வாங்க அயர்லாந்திலே ஆள்கிடைக்கவேயில்லை.

இத்தகைய தலைவர்களின் பெருமையாலும் தான்பிரீன், ஸீன் டிரீஸி, லியாம் லிஞ்ச், ஹோகன், மார்ட்டின் லாவேஜ் போன்ற பல்லாயிரம் வீரத் தொண்டர்களின் தியாகத்தாலும் அயர்லாந்து விடுதலை பெற்றது. உலக சரித்திரத்தில் ஒரு பொன் ஏட்டில் எழுதவேண்டிய சரித்திரம். 43 லட்சம் ஐரிஷ் மக்கள் ராட்சத வலிமையுள்ள ஓர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்றது விசித்திரமேயாகும்!

சுதந்திர ஜோதியில் அடிமை இருளும், அறியாமை இருளும் அகன்றன: ஒவ்வொருநாளும் ஒரு முன்னேற்றம், பற்பல சீர்திருத்தங்கள் ஐரிஷ் மக்கள் மற்ற நாட்டவரைப்போல், தலைநிமிர்ந்து மிடுக்குடன் வாழுகிறார்கள்

வாழ்க சுதந்திரம்

வாழ்க வையகம்!