தாய்மொழி காப்போம்/அந்த நாள் வந்தே தீரும்

24. அந்த நாள் வந்தே தீரும்

'உறவுக்குக் கைகொடுப்போம் எங்கள் நாட்டின்
உரிமைக்குக் குரல்கொடுப்போம்' என்று பல்கால்
குரல்கொடுத்தும் பயனொன்றும் விளைய வில்லை;
கொதித்தெழுந்தே உயிர்கொடுப்போம்' என்று சொன்னோம்;
விரலெடுத்துச் செவிவழியை அடைத்துக் கொண்டார்;
'விடுதலையாற் பெறும்பயனை நமக்கு மட்டும்
தரமறுத்தால் உயிரெடுப்போம்', எனமு ழங்கும்
தமிழ்த்திருநாள் ஒன்றிங்கு வந்தே தீரும்!

ஆண்டமொழி அடிமையென ஆவ தென்றால்
ஆர்பொறுப்பர்? தன்மான உணர்வு நெஞ்சில்
பூண்டறுந்து போனதுவோ? , எனவெ தும்பிப்
பொறுமையுடன் இசையரங்கில் தமிழிற் பாட
வேண்டுமென ஆண்டுபல வேண்டி நின்றோம்
வீணரினும் பிறமொழியே பாடு கின்றார்;
ஈண்டினியும் பாடுவரேல் இசைய ரங்கை
இடித்தெறியும் நாளொன்று வந்தே தீரும்!

எவர்படைத்தார் கற்சிலையை? கோவில் தம்மை
எவரெடுத்தார்? தமிழ்புகுதத் தடையா? அந்தத்
தவறிழைத்தார் யாரிங்கே? ஆண்ட வர்க்குத்
தமிழென்றால் நச்சுமிழும் எட்டிக் காயா?
கவரெடுத்துத் தமிழுரிமை தடுப்ப தென்றால்
சுடுகாட்டுப் புதைகுழியின் பிணமா நாங்கள்?
உவர்நிலத்தில் இடும்வித்தா? அவற்றை யெல்லாம்
உடைத்தெறியும் நாளொன்று வந்தே தீரும்!

ஆகாச வாணிக்குக் கால்க ளான
அரியதமிழ் வானொலியைத் திருப்பி விட்டால்
வேகாத மொழிகளிலே எழுதி வைத்த
விளங்காத பாடல்களே செவியில் வீழும்;
சாகாமல் இருக்கிறதே எனும்நி னைப்பில்
தமிழிசைக்குச் சிறுபொழுதை ஒதுக்கி வைக்கும்;
நோகாமல் முறையிட்டோம் பயனே இல்லை;
நொறுக்குகிற நாளொன்று வந்தே தீரும்!

'பொறுக்கும் வரை பொறுத்திருந்தோம் பொறுத்த நம்மைப்
புழுவென்று கருதுகின்றார்; குனிந்து கொண்டே
இருக்கும்வரை ஏறுபவர் ஏறிப் பார்ப்பர்;
இளைஞர்படை நிமிர்ந்தெழுந்து விறு கொண்டால்
தருக்குடையார் தலையுருளும் உடல்கள் சாயும்
தன்மானப் போர்முரசம் முழங்கும்' என்று
வெறுப்படைந்தோர் எழுச்சிகொளா முன்னர் இங்கே
விடுதலையைத் தமிழ்நாட்டிற் பரவச் செய்வீர்.

 

(29.9.1979)