தாய்மொழி காப்போம்/புரட்சிப் பாவலன்

44. புரட்சிப் பாவலன்

ஒப்பரிய யாப்பென்னும் அணையைக் கட்டி
உணர்ச்சியெனும் பெரும்புனலைத் தேக்கி வைத்தான்;
அப்புனலுள் மூழ்கியதன் ஆழங் காணல்
அரிதெனினும் கரையோரம் நின்று கொண்டு
செப்புகின்றேன் சிலமொழிகள்; புதிய பாங்கில்
செய்தமைத்த பாட்டுக்குள் வெறியை ஏற்றும்
அப்பனவன் பரம்பரையில் நானோர் பிள்ளை
ஆதலினால் அவன் பெருமை பாடு கின்றேன்.

பயில்கின்ற நெஞ்சமெலாம் வண்டாய் மொய்க்கப்
பைந்தமிழ்த்தேன் சுவைநல்கும் முல்லைக் காடு;
மயில்திரியும் தென்பொதிகைக் குற்றா லத்து
மலையிறங்கும் தேனருவி; துன்ப மென்னும்
[1]மயலிரிய நம்முளத்தை இளமை யாக்கி
மகிழ்வுதரும் இசையமுது; பாட்டின் வேந்தன்
இயல்பினிலே அமைதியினன்; எழுச்சி கொண்டால்
இரணியன்தான்; எதிர்நிற்க எவரு மில்லான்

குருட்டுலகில் இருட்டறையில் வாழ்வோர்க் கெல்லாம்
குடும்பவிளக் கேற்றியறி வொளியைத் தந்தான்;
திருட்டுமனப் போக்கர்தமைச் செருக்க டக்கித்
தீந்தமிழை வளர்ப்பதற்கு வழியைச் சொல்லித்
தெருட்டுகிற தமிழியக்கம் ஒன்று தந்தான்;
தெரிகின்ற கதிர்திங்கள் மலர்க ளுக்குள்
உருக்கொண்டு சிரிக்கின்ற அழக னைத்தும்
உருவாக்கி நமக்களித்தான் உலகம் போற்ற.

கூத்தடிக்க நாடகநூல் தந்தா னல்லன்
கொள்கைக்கே நாடகங்கள் எழுதித் தந்தான்
பூத்தொடுத்த குழல்மடவார் தம்மைத் தாழ்த்தும்
புன்மைகளை மாய்ப்பதற்கு வீரம் மிக்க
பாத்திறத்தான் தமிழச்சி ஏந்துங் கத்தி
படைத்தளித்தான்; நினைந்துநினைந் துள்ளம் பொங்க
ஏத்தெடுக்கும் முத்திரையாய் விளங்கும் வண்ணம்
எதிர்பாரா முத்தமொன்று தந்து வந்தான்.

காவியங்கள் எனும் பெயரில் நல்ல நல்ல
கருத்தெல்லாம் உள்ளடக்கி நிலைத்து நிற்கும்
ஓவியங்கள் பலதந்தான்! பரிசி லாக
உயர்பாண்டி யன்பரிசில் எனும் நூல் தந்தான்;
பூவிளங்கும் செழுந்தேனோ கரும்பின் சாறோ
புரட்சிக்கு நடும்வித்தோ என்று மக்கள் நாவியந்து
போற்றும்வணம் தொகுதி யாக
நல்லகவி மலர்தொடுத்து நமக்க ளித்தான்.

பாவேந்தன் தீப்பிழம்பின் வெம்மை சேர்த்துப்
படைத்தளித்த தீந்தமிழின் உணர்ச்சிப் பாட்டை
நாவேந்திப் பாடிவிடின் உடலி லுள்ள
நரம்பனைத்தும் முறுக்கேறும்; மொழிக ளெல்லாம்
[2]ஏவேந்திப் போர்தொடுக்கும்; விழிக ளெல்லாம்
எரிகக்கும்; தோள்விம்மும்; போரில் எந்தக்
கோவேந்தன் வந்தாலும் எதிர்த்து நிற்கக்
கொடுங்கோலைப் புறங்காண உணர்ச்சி நல்கும்

விழுதுவிட்ட ஆலமரம் சாதி என்றால்
வேர்பறியச் சாய்ந்துவிழச் செய்த பாட்டு;
பழுதுபட்ட கண்மூடிக் கொள்கை என்னும்
பழங்கோட்டை சரிந்துவிழச் செய்த பாட்டு;
தொழுதுகெட்ட தமிழினத்தார் நிமிர்ந்து நிற்கத்
துணிவுதனை உணர்ச்சிதனைத் தந்த பாட்டு;
பொழுதுபட்டுப் போனாலும் உணர்ச்சி பட்டுப்
போகாமல் நிலைத்திருக்கும் புலவன் பாட்டு.

தமிழ்மொழியைத் தமிழ்மகனைப் பழித்து ரைக்கும்
தருக்குடையார் முதுகெலும்மை நொறுக்கிக் காட்டும்
அமிழ்தனைய பாட்டுரைத்தான்; சினந்தெ ழுங்கால்
அன்னைவந்து தடுத்தாலும் விடவே மாட்டேன்
 நிமிர்ந்தெழுந்து போர்தொடுப்பேன் எனவெ குண்டு
நினைத்தாலும் மெய்சிலிர்க்கும் பாட்டு ரைத்தான்;
இமைகுவியா வீரத்தை எடுத்துக் காட்டி
எக்களிக்கும் போர்ப்பாட்டை நமக்களித்தான்.

இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றான்;
இனியுலகம் விழித்தெழவே அவ்விருட்டை
வெருட்டுகின்ற வழிசொன்னான்; ஒளியுந் தந்தான்;
விளக்கெடுத்து வெளிச்சத்தால் உலகைக் காணத் தருட்கிற
தெருட்டுகின்ற பாட்டுரைத்தான்; அந்தப் பாட்டைத்
தெளிந்துணர மனமின்றிப் பாட்டிற் காணும்
கருத்தெடுத்துப் பரப்புதற்கு முயற்சி யின்றிக்
கண்மூடித் துயில்கின்றோம் உணர்வே இன்றி.

மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக
வன்பாறை நிலமாகக் கிடக்கின் றோம்நாம்;
கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக்
களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்;
விழைவெல்லாம், பாவேந்தன் எண்ண மெல்லாம்
வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால்
நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம்
நொந்தழிந்து போகானோ? நன்றே சொல்வீர்.

பாரதிக்குத் தாசன்தான் எனினும் அந்தப்
பாவலனை விஞ்சிநிற்கும் பாட்டு வேந்தன்
காருதிர்க்கும் மழைபோலப் பொழிந்த பாட்டுக்
கற்பனைக்கு நிகரேது? பாடல் தந்த
சாறெடுத்துக் குடித்தவர்தாம் உண்மை காண்பர்;
சாற்றிடுவர் அவனுலகப் புலவன் என்றே;
வேறெடுத்துக் குடித்தவரோ புழுதி வாரி
வீசிடுவர் மயங்கிமிகத் தூற்றி நிற்பர்.

வங்கத்திற் பிறந்திருப்பின், இலக்கி யத்தை
வளர்த்து வருங் கேரளத்திற் பிறந்திருப்பின்;
எங்கட்குத் தலைவனவன் மேலை நாட்டில்
எங்கேனும் பிறந்திருப்பின் அங்கு வாழ்வோர்
சிங்கத்தை நிகர்கவிஞன் புகழைப் போற்றிச்
சிறப்பனைத்தும் உலகெங்கும் செப்பிச் செப்பிப்
பொங்கித்தம் உளங்களிப்பர்; தன்னே ரில்லாப்
புலவனிவன் தமிழ்நாட்டிற் பிறந்து விட்டான்.

ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டின் வரிக ளெல்லாம்
அணிவகுத்து நிற்கின்ற படையின் கூட்டம்;
சீர்ப்பாட்டைத் தொட்டதொட்ட இடத்தி லெல்லாம்
சீறியெழும் உணர்ச்சியைத்தான் காணல் கூடும்;
வேர்ப்பாட்டாம் அவன்பாட்டு விளைத்தி ருக்கும்
வீரமிகும் உணர்ச்சிக்குக் குறைவே யில்லை;
சாப்பாட்டுக் கலைந்துவரும் நம்மி டந்தான்
சற்றேனும் உணர்ச்சியிலை மான மில்லை.

மானமெனும் ஒருணர்ச்சி இருந்தி ருப்பின்
மதிகெட்டுத் தமிழ்மொழியைத் தமிழர் நாட்டில்
ஈனமுற எதிர்ப்போமா? நமக்கு முன்னே
எதிர்ப்பிருக்க விடுவோமா? இசைய ரங்கில்
வானமுதத் தமிழிருக்க அதைவிடுத்து
வந்தமொழிப் பாடல்களைப் பாடு வோமா?
ஏனுயர்வு தமிழ்க்கில்லை தமிழர் நாட்டில்?
இனியேனும் மானத்தைக் காப்போம் வாரீர்.

 

பாவேந்தர் விழா, உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர் 25-8-1979

  1. மயல் இரிய - மயக்கம் விலக.
  2. ஏவேந்தி - அம்பேந்தி