தாய்மொழி காப்போம்/ஞாயிறு போற்றுதும்
45.ஞாயிறு போற்றதும்
தென்பால் உளது, தேன்வளர் சாரல்
[1]மென்கால் உலவும் திண்கால் [2]ஆரம்
குதிதரும் அருவி மருவிய மாமலை
மதியந் தவழும் பொதியம் ஒன்று;
வடபால் உளது, வானுயர் கொடுமுடி
தொடருங் கருமுகில் படருஞ் சாரல்
உறைதருந் தண்பனி நிறைதரும் மாமலை
பரிதியை மறைக்கும் பனிமலை ஒன்று;
பெருமலை இரண்டும் ஒருமலை யாக்கக்
கருதிய ஒருசிலர் உறைபனி கொணர்ந்து
தென்றல் தவழும் குன்றின் தலையில்
அன்றவர் வைத்தனர்; அடடா என்றனர்;
பனியால் நடுக்குறும் பயனே கண்டனம்;
இனிய தென்றலும் எழில்நலங் குறைந்தது;
விடுத்தஅப் பனிதான் விரைந்திவண் விலக
நடுக்கிய பனியின் நலிவும் அகல
ஒரு நூற்றாண்டின் முன்னர் ஒருநாள்
மறைமலை என்னும் மறுபெயர் பூண்டு
கடலலை மோதும் கரைபெறும் மூதூர்
இடமகல் நாகை எனும் பெயர்ப் பட்டினத்
தெழுந்ததோர் ஞாயிறு கரைந்தது வெண்பனி;
தொழுதனர் மாந்தர் தோன்றுசெங் கதிரை;
இரியா இருளை இரியச் செய்வான்
பெரியார் அண்ணா பெரும்பணி புரிநாள்
இடையறா அப்பணி இடையூ றின்றி
நடைபெறப் பேரொளி நல்கிய தக்கதிர்;
இருளால் மறைபடும் இனமொழி உணர்வுகள்
தெரிதர லாயின தெளிந்தனம் யாமே;
தெளிந்தனம் ஆதலின் குழைந்துள பனியில்
விழுந்தினி அழியோம் விழிப்புடன் நடப்போம்;
விழியொளி பெற்றும் வீழ்ந்ததில் மூழ்கின
பழிபெறும் எம்மினும் இழிந்தவர் இலையால்;
விழியுளார் படுகுழி வீழ்வதும் உண்டோ?
ஒருகால் உடையவன் ஊன்றுகோல் பெறலாம்
இருகால் உடையோன் எவனதை விழைவான்?
வளமிலாமொழிகள் வருமொழிச் சொற்களைக்
கொளலாம் அதனாற் குற்றமொன் றில்லை;
உயர்தனிச் செம்மொழி ஒப்பிலாத் தமிழ்மொழி
அயன்மொழிச் சொற்களை அணுகுதல் முறையோ?
முட்டிலாச் செல்வர் மற்றவர் பாற்கடன்
பெற்றிட முனைதல் பேதைமை யன்றோ?
அதனால்
சந்தனப் பொதியச் செந்தமிழ் மாமலை
தந்தருள் தென்றலில் தனிநடை பயில்வோம்;
தளர்நடை தவிர்த்துத் தனிநடை கொடுத்த
வளரிளங் கதிரை வாயுற வாழ்த்துவம்;
பலமொழி பயின்றும் பைந்தமிழ்ச் சோலையுள்
உலவிய தென்றலை உள்ளுறப் போற்றுவம்;
இசைத்தமிழ் கவைத்திட ஈகுவர் பெரும்பொருள்;
நாடகத் தமிழ்க்கும் நல்குவர் அவ்வணம்;
இயற்றமிழ் எனினோ ஈயார் ஒருபொருள்;
மயற்படும் மாந்தர்தம் மதிதான் என்னே!
இந்நிலை நிலவிய இம்மா நிலத்தில்
அந்நாள் வெண்பொன் முந்நூ றளித்திட
இயற்றமிழ் மதிப்பை ஏற்றிய புலவன்,
செயற்றிறம் புரிந்து செந்தமிழ் வளர்த்தவன்
கொள்கையிற் பிறழாக் குணக்குன் றவனைச்
கள்ளவிழ் மலர்கொடு கைகுவித் தேத்துவம்;
மறைமலை என்னும் மறையா மலையை
நிறைதர நெஞ்சினில் நிறுத்துவம் யாமே;
செறிபுகழ்ச் செந்தமிழ் செழித்திட அவன்றன்
நெறியறிந் தொழுகுவம் நிலைபெறும் பொருட்டே.
27.11.1976