தாய்மொழி காப்போம்/பொய்த்த வாய்மொழி போதும்

16. பொய்த்த வாய்மொழிபோதும்

[1]ஏழு மாநிலம் ஆளவோ? - பதி
னேழு மாநிலம் தாழவோ?
பாழும் அந்நிலை காணவோ? - யாம்
பாரி லேபழி பூணவோ?

உங்கள் தாய்மொழி இந்தியாம்-நீர்
ஒம்பிப் போற்றுதல் நன்றியாம்
எங்கள் தாய்மொழி செந்தமிழ் - அதை
எத்திக் காத்திடல் எம்கடன்.

கட்டில் ஏறிட இந்தியோ? -எமைக்
காக்குந் தாய்மொழி பிந்தியோ?
கட்டு வீழ்த்தினும் விட்டிடோம்-உயிர்
சோரு மாகினும் கட்டுனோம்

வஞ்ச வாய்மொழி நம்பினோம்-பயன்
வாய்த்த லின்றியே வெம்பினோம்
நெஞ்சில் உண்மையைக் காட்டுவீர் - அதை
நேரில் சட்டமென் றாக்குவீர்

பெற்ற விடுதலை பொய்க்கவோ? அப்
பேறு நீங்களே துய்க்கவோ?
மற்ற வர்க்கது கைக்குமோ? - இம்
மாநிலம் யாவும்நும் கைக்குளோ?

அவ்வம் மாநிலத் தாய்மொழி - சமம்
ஆக நினைப்பது நேர்வழி
தெவ்வர் போலெதிர் நிற்பிரேல்-இத்
தேயம் துண்டுற முற்படும்

கெஞ்சல் தானினித் தேவையோ? - எம்
கேளிர் நும்விரற் பாவையோ?
அஞ்ச லின்றியே ஆர்த்தனம்- இனி
அங்கங் கே எழும் போர்க்களம். (9-3-1987)

  1. (இந்தி பேசும் மாநிலங்கள்)