தாய்மொழி காப்போம்/மீண்டது பொற்காலம்

46. மீண்டது பொற்காலம்

பண்சுமந்த பாட்டொலிபோல், அருவி பாடப்
பனிமலரும் சந்தனமும் சூழ்ந்து நிற்க
விண்சுமந்த முகில்தவழ்ந்து துளிகள் தூவி
விளையாடும் தண்பொதியம் தந்த தாயைக்
கண்சுமந்த கருமணியைத் தமிழைத் தேனைக்
கனிசுமந்த சுவைச்சாற்றைத் தூய்ம னத்துக்
கண்சுமந்த பெரும்புலவீர்! நல்லீர்!
கைகுவித்து நல்வரவு கூறு கின்றோம்.

கண்ணுதலோன் தலைமைகொளப் புலவர் கூடிக்
கழகமென ஒருமூன்று நிறுவி ஆங்குப்
பண்ணுறவே பசுந்தமிழை வளர்த்து நிற்கப்
பாண்டியரின் துணையோடு வளர்ந்த சங்கம்
மண்ணிடையே இலக்கியங்கள் இலக்க ணங்கள்
வளமுறவே பெருகிவர ஆய்ந்த தென்பர்;
எண்ணரும்அப் பொற்காலம் மீண்டும் இங்கே
எழுந்ததெனப் புலவர்குழு தோன்றக் கண்டோம்.

அன்றிருந்த புலவரெலாம் ஒன்று கூடி
அன்னைமொழி வளர்வதற்கு வழிகள் கண்டார்;
ஒன்றுபடு கருத்தினையே மொழிந்து நின்றார்
உயர்வுற்றார் தமிழ்மொழியின் உயர்வுங் கண்டார்;
இன்றவர்போற் புலவர்பலர் இணைந்து நிற்கும்
ஏற்றத்தைக் காணுகின்றோம் மகிழ்வுங் கொண்டோம்;
என்றுமுள தென்றமிழ்க்கு மேன்மை ஒன்றே
இனிவருமென் றெண்ணிமனங் களித்து நின்றோம்.

கார்முகிலின் வருகையினால் மயில்கள் ஆடும்
கருவானில் மழைவரால் பயிர்கள் கூடும்
ஏர்முனையின் வருகையினால் நிலம்சி ரிக்கும்
எழில்வண்டின் வருகையினால் மலர் சிரிக்கும்
ஊர்மதியம் விண்வரலால் இன்பம் பொங்கும்
உயர்புலவீர் நும்வரவால் எங்கள் நெஞ்சம்
கூர்மகிழ்வு கொண்டின்பம் பெருக நின்றோம்
குழுமிவரும் தமிழ்ப்பெரியீர் வருக வாழ்க!

பாரெல்லாம் தமிழ்நெறியே செழிக்க வேண்டும்
பல்வகைய புதுநூல்கள் தோன்ற வேண்டும்
ஊரெல்லாம் புலவர்தமைப் போற்ற வேண்டும்
உயர்வதனால் தமிழ்மொழிக்குச் சேர்தல் வேண்டும்
சீரெல்லாம் மேவிவர வலிமை கொண்ட
செயற்குழுவாய்ப் புலவர்குழு வளர்தல் வேண்டும்
பேரெல்லாம் பெற்றபெரும் புலவீர் வாழ்க!
பேணுமுயர் நாடுமொழி வாழ்க! வாழ்க!

காரைக்குடிக்கு வருகை தந்த தமிழகப் புலவர் குழுவிற்கு வரவேற்பு - 18.10.1969