11

மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து விட்டுத் திரும்பும் போது நண்பர் சரவணன் சொன்னார்:

“இன்று நீங்கள் இல்யாஸைச் சந்திக்கிறீர்கள். அவர் வீட்டில்தான் உங்களுக்குப் பகல் சாப்பாடு!”

ஹாங்காங்கில் அய்யூப், சிங்கப்பூரில் யாகப், பாரிஸில் ஜமால், பாங்காக்கில் ஹுமாயூன் என்று ஏற்கனவே பல முஸ்லிம் அன்பர்களின் நட்பைப் பெற்றிருக்கிறேன். இப்போது இல்யாஸும் அந்தப் பட்டியலில் சேரப் போகிறார் என்பதை எண்ணியபோது என் மகிழ்ச்சி இரட்டிப்பாயிற்று.

நண்பர் ஹுமாயூன்தான் எங்களை உட்லண்ட்ஸ் இன் ஒட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அது மிக வசதியான ஓட்டல் என்றும், அதன் சொந்தக்காரர் இல்யாஸ் தமிழ் நாட்டைச் சேர்ந்த சிதம்பரத்துக்காரர் என்றும் நாங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரமுகர் என்றும் கூறியிருந்தார். இல்யாஸ் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரி என்றும் தெரிந்து கொண்டேன்.

திரு இல்யாஸ் அவர்களைப் பார்க்க அவர் ஆபீஸுக்குப் பேர்யிருந்தோம். அங்கே, பட்டை தீட்டப் பெறாத பல ரகமான ஆபரணக் கற்கள் குவிந்து கிடந்தன. அவை பளபளக்கவும் இல்லை. வண்ணங்களை வாரி வீசவும் இல்லை, மேக்கப் போடாத ஒரு சினிமா நடிகை போல மிகச் சாதாரணமாகவும் அடக்கமாகவும் இருந்தன.

அவற்றை சைஸ் வாரியாக வெட்டி, எந்திரங்கள் மூலம் பாலிஷ் போட்டுக் கொண்டு வந்து மேஜையில் வைக்கும்போது தான் பளபளப்பாய் டாலடிக்கின்றன.
இல்யாஸ்

அந்த மதிப்பு மிக்க கற்கள் பட்டை தீட்டப்படுமுன் எப்படி அடக்கமாக, சாதாரணமாக இருக்கின்றனவோ அப்படித்தான் திரு இல்யாஸும் அடக்கமாய்த் தோற்றமளித்தார். நம் ஊரில் சில பணக்காரர்கள் தன்னைப் பணக்காரன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். தான் ஒரு பணக்காரன் என்று தெரிந்தால் டொனேஷன் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள் என்ற பயம் தான்! ஆனால் இல்யாஸ், “எனக்குப் பணம் ஒரு பிரச்னையே இல்லை. கோடிகளில் சம்பாதிக்கிறேன். நிறையச் செலவும் செய்கிறேன்“ என்று ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிக் கொள்கிறார்.

தாராளமாகச் செலவு செய்கிறேன் என்று அவர் கூறுவது தமது சொந்தச் செலவை அல்ல. சமுதாயத்துக்குச் செய்யும் உதவிகளையே அப்படிச் சொல்கிறார். நிறையச் செலவு செய்கிறேன் என்று அவர் சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. He is a gem of a person என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அப்படிச் சொல்வதற்கு இல்யாஸ் பொருத்தமான மனிதர் என் றால் அது மிகையாகாது.

“படித்துப் பட்டம் பெற்றவர்கள் பொதுவாக ஏதேனும் வேலையில் சேர்ந்து சம்பாதிப்பதைத்தானே விரும்புவார்கள்? தாங்கள் மட்டும் ஏன்...” என்று இழுத்தேன்.

“ஒரு கிளார்க் அல்லது ஆபீஸராகி, மேலதிகாரிகளுக்குக் கைகட்டி பதில் சொல்லி வாழும் சராசரி மனிதனின் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பவில்லை நான்.

பெயர் சொன்னால் பல நாடுகளுக்கும் தெரிய வேண்டும். பணத்தை நமக்கு அடிமையாக வைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு வியாபாரம் தொடங்கி அதை ஆல்போல் வளரச் செய்ய வேண்டும். இதுவே என் லட்சியம். என் உழைப்பும் விடா முயற்சியும் வீண் போகவில்லை என்றார் இல்யாஸ்.

“நீங்கள் மாணிக்கக் கல் வியாபாரத்தில் சர்வதேச அளவில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறீர்கள். அப்படியிருக்க, அதிலேயே இன்னும் கிளை விரிக்காமல் ஹோட்டல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?”

“நான் பல நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறேன். எங்கே சென்றாலும், நட்சத்திர ஓட்டல்களில் மற்ற நாட்டவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும், உபசரிப்பும் கீழ்த் திசையினருக்குக் கிடைப்பதில்லை. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த அனுபவம் நிறையவே ஏற்படுகிறது. காரணம் இவர்கள் மற்ற நாட்டவர்களைப் போல் மிக தாராளமாகச் செலவு செய்ய முடியாதவர்கள் என்பதாயிருக்கலாம்.

சர்வதேச மக்கள் கூடும் இந்த பாங்காக் நகரத்துக்குப் பல நாட்டவர்கள் தினம் தினம் வந்து போகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் நண்பர்களை வி.ஐ.பி.க்களாக வரவேற்று உபசரிக்கும் நோக்கில் ஒரு ஹோட்டலைத் தொடங்க வேண்டும் என்பது என் நீண்டகால ஆசை. அந்த ஆசையின் செயல் வடிவம்தான் இந்த உட்லண்ட்ஸ் இன்” என்றார் இல்யாஸ்.

 எழுபத்திரண்டு அறைகள் கொண்ட அவருடைய உட்லண்ட்ஸ் இன் நம்மைப் போன்றவர்களின் சொர்க்கமாக இருந்து வருகிறது. பாங்காக் ஜெனரல் போஸ்ட் ஆபீஸுக்குப் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பான பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் வரவேற்பரையில் எந்நேரமும் தமிழோசையைக் கேட்க முடிகிறது. ரெஸ்ட்டாரண்டில் சுடச்சுட இட்லி, தோசை கிடைக்கிறது.

யூசுப், ஹமீத், கான், பிலால், இதயதுல்லா, உத்ராபதி ஆகிய இளைஞர் பட்டாளம் ஒன்று இந்த ஓட்டலைச் சீரும் சிறப்புமாக நிர்வகித்து வருகிறது.

உள்ளே நுழையும் போதே ஏதோ ரொம்ப காலமாய்த் தெரிதந்தவர்கள் மாதிரி அன்பு காட்டி உபசரிக்கிறார்கள். இதை நான் இல்யாஸிடம் சொன்னபோது, “உண்மையில் இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்தான்“ என்று மகிழ்ந்து போனார்.

திரு இல்யாஸ் தமது சொந்த ஊரான சிதம்பரத்தையும் மறந்துவிடவில்லை. சிதம்பரத்தில் நடராஜர் கோவிலுக்கருகே ஒரு கல்யாண மண்டபம் கட்டியிருக்கிறார். அந்த மண்டபத்தை இந்துக்களின் உபயோகத்துக்காக மட்டுமே ஒதுக்கியிருக்கிறார்.

ஏற்கனவே தாய்லாந்து முஸ்லிம் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் இவர் இப்போது பாங்காக் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் ஆகியிருக்கிறார்.

பாங்காக் நகரில் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடக்கும் முன்னூறு தமிழக் குடும்பங்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கிடையே ஒரு நேச உணர்வை உண்டாக்குவதே இந்தக் கழகத்தின் நோக்கமாம். நண்பர் ஹுமாயூன் செயலாளராகவும், நண்பர் சலாவுதீன் பொருளாளராகவும் இந்தக் கழகத்தின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார்கள். பொங்கல், ரம்சான், ஈத், தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடத் திட்டமிட்டிருப்பதுடன் இல்யாஸை ஆசிரியராகக் கொண்டு ‘தமிழ் மலர்’ எனும் மாத இதழ் ஒன்றும் நடத்த முனைந்திருக்கிறார்கள்.

“இல்யாஸ் என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?” என்று அவரிடமே கேட்டேன்.

“இறைவனின் தூதன்“ என்று சொல்வார்கள் என்றார்.

வெளிநாடுகளில் சிலர் வாழ்ந்து வரும் முறையில், செய்கின்ற பணியில், அடைந்துள்ள புகழில், செல்வாக்கில் அவர்களை ‘அன் அஃபிஷியல் அம்பாஸ்டர்ஸ்’ என்று குறிப்பிடுவதுண்டு. இறைவனின் தூதர் என்று பெயர் கொண்ட இல்யாஸ் தாய்லாந்தின் அதிகார பூர்வமற்ற இந்தியத் தூதராகவே செயல் படுவதாக எனக்குப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்லாந்து/11&oldid=1058412" இலிருந்து மீள்விக்கப்பட்டது