தாய்லாந்து/12
நாங்கள் ஓட்டலில் தங்கியிருந்த நாட்களில் நண்பர் ஹுமாயூன், எங்களை வேறு எங்கும் சாப்பிட விடவில்லை.
காலை ஆறுமணிக்கெல்லாம் அவர் வீட்டிலிருந்து பெட் காபி வந்து எங்கள் அறைக் கதவைத் தட்டும். பிறகு குளித்து முடிவதற்குள் இட்லி தோசை அதை அடுத்து போன் கால், ஹுமாயூன்தான் பேசுவார்.
“இன்றைக்கு எங்கே போகப் போகிறீர்கள்?”
நாங்கள் எங்கே போகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி உணவு தயார் செய்து அழகான அட்டைப் பெட்டிகளில் ‘பாக்’ செய்து அனுப்பி விடுவார்.
ஹுமாயூன் மயிலாடுதுறையில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகன் சுந்தரை (பிராம்மண இளைஞர்) பாங்காக்குக்கு அழைத்துப் போய் தம்முடைய ‘பெனின்ஸுலா கலர் ஸ்டோன் கம்பெனி’யில் வேலையில் அமர்த்தியிருக்கிறார்.
நீடூர் நஸிம் சகோதரர்களில் ஒருவரான ஹுமாயூனிடம் எனக்குப் பிடித்த அம்சம் அவரது ஒழுக்கம். வசதியாக இருக்கிறோம் என்பதற்காக ஊதாரித்தனத்துக்கோ துர்ப் பழக்கங்களுக்கோ அவர் தம்மை அடிமையாக்கிக் கொள்ளவில்லை. சகோதரர்கள் நால்வருமே தனித்தனியாக ஜெம் வியாபாரம் செய்து வந்த போதிலும் மிக ஒற்றுமையோடு வாழ்கிறார்கள். நாலுவிதமான கற்கள் ஓர் ஆபரணத்தில் சேர்ந்து ஜொலிப்பதைப் போல விசேஷ நாட்களில் எல்லோரும் ஒன்றாய்க் கூடி மகிழ்கிறார்கள். ஒருநாள் பாங்காக்கில் குரான் ஓதும் போட்டி நடந்தது. அப்போட்டியைக் காண இரவு ஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் கிளம்பினார்கள்.
புறப்படும்போது ‘நானும்’ என்றார் சுந்தர். “சரி, புறப்படு!” என்றார் ஹுமாயூன். லுங்கியும் குல்லாயும் அணிந்து கொண்ட சுந்தர் நெற்றியில் விபூதியும் பூசிக் கொண்டு உற்சாகத்தோடு புறப்பட்டு விட்டார்!
அவரை அந்தக் கோலத்தில் பார்த்தபோது நாங்கள் சிரித்துவிட்டோம். மத நல்லிணக்கத்தின் ஒரு சின்னமாகக் காணப்பட்ட சுந்தரை அப்போது நம் ஊர் பாரதீய ஜனதா கட்சி பார்க்காமல் போனார்களே என்று வருத்தமாயிருந்தது!
தாய்லாந்துக்குப் போய் வந்து ஸயாம் அரிசி பற்றிச் சொல்லாவிட்டால் திருமணப் பத்திரிகையில் மணமக்கள் பெயர் விட்டுப் போன மாதிரி ஆகிவிடும் தாய்லாந்தின் பூர்விகப் பெயர்தான் ஸயாம். அந்தப் பெயர் இப்போது அரிசியில் மட்டுமே ஒட்டிக் கொண்டுள்ளது. ஸயாம் அரிசி உலகப் பிரசித்தமானது. அதன் வெண்மையோ திண்மையோ, ருசியோ வேறு எந்த நாட்டு அரிசிக்கும் வராது. பாசுமதியெல்லாம் அதற்கப்புறம்தான் அடுத்த ஜென்மம் என்று ஒன்று உண்டென்றால் நான் தாய்லாந்தில் பிறக்கவே விரும்புகிறேன். இத்தனை ருசியான அரிசியும், இளநீரும், ஆரஞ்சு ஜூஸும் அமைதியான ஆட்சியும் உள்ள நாட்டை விட்டு விட்டு வேறு எந்த நாட்டில் பிறக்கத் தோன்றும்!
சாலையில் போகும்போது அந்த நாட்டின் விளை நிலங்களை வழி நெடுகப் பார்த்துக் கொண்டே போனேன். தலையில் தொப்பி அணிந்த உழவர்கள் எந்த நேரமும் நடவு நட்டுக் கொண்டிருந்தார்கள். சிற்சில இடங்களில் பெருமளவில் கரும்பு சாகுபடி நடந்து கொண்டிருந்தது.
தாய்லாந்துக்காரர்களுக்கு அரிசி வெறும் உணவு மட்டுமல்ல. அதை ஒரு தெய்வமாகவே வழிபடுகிறார்கள். நெல்லையோ அரிசியையோ கீழே சிந்தினால் அவர்களுக்கு மிகுந்த கோபம் வந்துவிடுமாம். ஒரு குழந்தை கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டு விட்டு வயிற்றுவலி என்று சொல்லி அழக்கூடாதாம். அப்படி அழுதால் அது அரிசியைப் பழிப்பதாகுமாம்.
“அரிசி மீது இவ்வளவு அக்கறை காட்டும் அந்த மக்கள் அதே அக்கறையை உயிரைக் குடிக்கும் ஓபியெம் செடிகளை வளர்ப்பதிலும் காட்டுகிறார்களே, அதுதான் விந்தையாக இருக்கிறது!“ என்றேன்.
“பெரும்பாலும் இந்த போதை மருந்துச்செடிகள் பயிரிடப்படுவது வடக்கு தாய்லாந்தில்தான். அந்த மலைக்காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் மொத்தம் மூன்று லட்சம் பேர் என்றால் அவர்களில் இரண்டு லட்சம் பேரின் வயிற்றுப் பிழைப்பே இந்த ஓபியம் செடிகள் பயிரிடுவதுதான்” என்றார் சொம்பட்.
“அரசு இதை ஏன் தடை செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது?“ என்ற என் கேள்விக்குச்சரியான பதில் யாராலும் சொல்ல
முடியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இதற்குத் தடை விதிக்கப்பட்டதாம். ஆனாலும் தாய்லாந்து அரசின் நடவடிக்கை இதுவரை பலன் தரவில்லை என்றுதான் சொன்னார்கள்.
தாய்லாந்து, பர்மா, லாவோஸ் ஆகிய மூன்று நாடுகள் சேருமிடத்தைத் தங்க முக்கோணம் (கோல்டன் ட்ரையாங் கிள்) என்று வர்ணிக்கிறார்கள். இந்த முக்கோணப் பகுதிதான் ஓபியெம் வியாபாரத்தின் கேந்திரமாக உள்ளது. ஓபியெம் செடிகளைப் பயிரிட்டு வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்லும் இந்தக் கேந்திரம் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளதால் ஹெலிகாப்டரில் பறந்து போய் இந்தச் செடிகள் பயிரிடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஓபியம் செடிகளைப் போலவே பூ பூக்கும் வேறு வகைச்செடிகளையும் பக்கத்தில் பக்கத்தில் நெருக்கமாகப் பயிரிட்டு அசல் தெரியாதபடி ஏமாற்றி விடுகிறார்கள்.
“இவர்களைக் கண்டு பிடித்து தண்டிக்கவே முடியாதா?” என்று கேட்டேன்.
“இந்தக் காடுகள் நிறைந்த மலைப் பகுதியில் ஈ காக்கை நுழைய முடியாது” என்றார் சொம்பட்.
“நம் ஊரில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க முடிகிறதா, அந்த மாதிரிதான்” என்றார் ஸ்ரீவே.
தாய்லாந்தின் தேசியச் செல்வமாகக் கருதப்படுவது தேக்கு மரங்கள்.
“இந்த ராட்சத மரங்களை ரயிலும் லாரியும் இல்லாத காலத்தில் எப்படி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு போனார்கள்?” என்று கேட்டேன்.
“தேக்கைப் படைத்த இறைவன் மிகுந்த முன்யோசனையுடன் தாய்லாந்து முழுவதும் நதிகளையும் யானைகளையும் ஏராளமாகப் படைத்திருக்கிறார். ஆகவே கவலை இல்லை“ என்றார் சொம்பட்.
ஆங்காங்கே காடுகளில் வெட்டி வீழ்த்தப்படும் தேக்கு மரங்களை நூற்றுக்கணக்கான யானைகள் தங்களது துதிக்கையால் தள்ளிக் கொண்டு போய் நதிக்கரைகளில் உள்ள படகுகளில்
ஏற்றிக்கொண்டிருந்த காட்சி பிரம்மாண்டமான சினிமா ஸ்கோப் படம் பார்க்கிற மாதிரி இருந்தது.
கோடி கோடியாக அந்நியச்செலாவணியை ஈட்டித்தருவது இந்தத் தேக்குச் செல்வம் என்றால் அந்தப் பெருமையில் பெரும் பங்கு இந்த தும்பிக்கைக் காரர்களுக்குத்தான் சேரவேண்டும்!
“ஐயா, உங்கள் விமானம் நாலரை மணிக்கு. ஆகவே, நீங்கள் இப்போதே புறப்பட வேண்டியதுதான்“ என்றார் ஹுமாயூன்.
“இப்போது மணி பன்னிரண்டுதானே ஆகிறது?”
“இங்கிருந்து விமான கூடம் போய்ச் சேரக் குறைந்தது இரண்டு மணிநேரமாவது தேவைப்படும். போக்குவரத்து நெரிசலையும் ஸிக்னல் தடைகளையும் கடந்து செல்ல வேண்டும் அல்லவா!’ என்றார்.
தாய்லாந்து சுற்றுப் பயணம் முற்றுப் பெற்று ஊருக்குத் திரும்பும் நேரம் நெருங்கியதும், அந்தச் சிரித்த முக மக்கள், ஹுமாயூன் வீட்டுச் சாப்பாடு, இல்யாஸின் விருந்தோம்பல், ‘தாய்’ கலாசாரம், கலைச்செல்வம், க்வாய் நதி பாலம், பெரிய பெரிய புத்த ஆலயங்கள், கூட்டம் கூட்டமாய் பிட்சுக்கள், இனிக்கும் இளநீர், ஆரஞ்சுஜூஸ், நடிகைபோல் தோற்றமளித்த அந்தப் பழக்கடை அழகி என்று ஏராளமான காட்சிகள் என்கண் முன் ஒடி மறைந்தன. நண்பர் ஹுமாயூனிடமும் இல்யாஸிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டபோது உணர்ச்சி வசமாகிக் கண்களில் நீர்த்திரையிட்டது.
முடிவுரை: இத்தனை வாரம் எழுதியது போக தாய்லாந்தைப் பற்றி எழுத வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. கடலோரம் நின்று சற்றே கால் நனைத்திருக்கிறேன். அவ்வளவுதான்.