4

காஞ்சனபுரி ‘லெமெட்ரி'க்குள் நுழையும்போதே ஒரு சோகம் நம்மைக் கவ்விக் கொள்கிறது. பயணம் செய்து வந்த சொகுசு வேனின் ஏ.ஸி. இதம், காதில் ஒலித்துக் கொண்டிருந்த இன்னிசையின் சுகம் எல்லாமே சட்டென்று மறைந்து மனம் பாறையாய்க் கனத்துப் போகிறது.

ஏறத்தாழ ஏழாயிரம் கல்லறைகள் கொண்ட அந்த இடம் ஓர் அழகிய நந்தவனம் போலக் காட்சி தந்தாலும், அந்தச் சூழ்நிலையில் ஓர் ஆழ்ந்த சோகமும் இழையோடிக் கொண்டிருக்கிறது.

கல்லறை ஒவ்வொன்றிலும் ஒரு வீரனின் பெயர், வயது. அவன் வகித்த பதவி போன்ற விவரங்களுடன், சின்னஞ்சிறு வாசகம் ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்லறையில், “ஹி ஈஸ் நாட் டெட். ஹி ஈஸ் ஜஸ்ட் அவே” என்று எழுதப்பட்டுள்ளது.

லான்ஸ் நாயக்கரம்தான், லான்ஸ் நாயக் என். நயனமூர்த்தி, சிப்பாய் அப்துல் காலிக் போன்ற பெயர்களை அங்கே பார்த்த போது பெருமையாகவும், அதேசமயம் வேதனையாகவும் இருந்தது. இவர்கள் மூவரும் பஞ்சாப் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த இளம் வீரர்கள் என்று கல்லெழுத்து சொல்லியது.

வரிசை வரிசையான கல்லறைகளுக்கு இடையே பச்சைப் பசேலென்ற புற்கள் பாய் விரித்திருக்கின்றன. தாய்லாந்து மண்ணில் தோன்றும் பச்சையின் அழகே தனி. ஒவ்வொரு கல்லறைக்கும் பக்கத்தில் வண்ண வண்ண மலர்களாய்ப் பூத்துச் சிரிக்கும் செடிகள்!

எவ்வளவுதான் மலர்களும், பசுமையும் சூழ்ந்திருந்த போதிலும் கல்லறை என்று வரும்போது கூடவே ஒரு அச்சமும்

சோகமும் இருக்கத்தான் செய்கின்றன. ‘இங்கே இரவில் பேய், பிசாசுகள் நடமாட்டம் இருக்குமா?’ என்று அங்கே பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பெண் ஒருத்தியிடம் கேட்டோம்.

“சாயங்காலம் ஐந்து மணிக்கு மேல் இங்கே யாரும் தங்குவதில்லை. இரவு நேரங்களில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. பகல் நேரங்களில் அவை நிச்சயம் வருவதில்லை. ஒரு வேளை உயிருள்ள மனிதர்களின் நடமாட்டத்துக்கு அஞ்சியோ என்னவோ!” என்று சிரித்தார் அந்தப் பெண்மணி.

சற்றுத் தொலைவில் ஒரு கல்லறையின் முன் சோகமே வடிவமாக அமர்ந்திருந்தார் வயதான ஓர் அம்மையார்.

அருகில் சென்று பார்த்தபோது அவரது கண்களில் நீர்த் திரையிட்டிருப்பது தெரிந்தது. பூச்செண்டு ஒன்றைக் கல்லறை யின் முன் வைத்து விட்டுக் குனிந்து முத்தமிட்டாள். பிறகு மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்துவிட்டு மெல்ல எழுந்து கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினோம். நேரில் விசாரிப்பதற்குத் தயக்கமாயிருந்ததால். அவர் போன பிறகு அந்தக் கல்லறையில் காணப்பட்ட பெயரைப் பார்த்தோம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு போர் வீரன் என்று தெரிந்தது. அன்று அந்த வீரனின் பிறந்த நாளாம். அவனது கல்லறைக்கு வந்து மலர் வைத்துப் போன அந்தப் பெண்மணியின் துயரம் தோய்ந்த முகத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. இம்மாதிரியான காட்சி அந்த இடுகாட்டுக்குப் புதிதல்லவாம். ஏதாவது ஒரு கல்லறை முன் உறவுக்காரர்கள் யாராவது வந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சியாம்!

“சற்று தூரத்தில் jeath மியூஸியம் இருக்கிறது. அங்கே போகலாமா?” என்று அழைத்தார் கய்டு.

தாய்லாந்து மக்களின் ஆங்கில உச்சரிப்பிலும், ஸ்பெல்லிங்கிலும் நிறைய வித்தியாசம் உள்ளன. ஆர் என்ற எழுத்தை அவர்கள் சரியாக உச்சரிப்பதில்லை. ராமா என்றால் லாமா என்கிறார்கள். அதுபோல் ‘டெத் மியூஸியம்’ என்பதில் ஸ்பெல்லிங்கை ‘டி’ போடுவதற்குப் பதிலாக மாற்றி “ஜெ” போட்டிருக்கிறார்களோ என்று நினைத்தேன்.

“D க்குப் பதில் J போட்டிருக்கிறார்களே, இது தவறு இல்லையா?” என்று கேட்டேன்.

“தவறு ஒன்றுமில்லை. யுத்தத்தில் பங்கேற்ற ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஹாலந்து ஆகிய நாடுகளின் முதலெழுத்துக்களைத் தொகுத்த போது உருவான சொல்லைத்தான் அப்படி jEATH என்று போட்டிருக்கிறார்கள்’ என்றார் கய்டு.

போர்க்காலத்தில் கைதிகள் எந்த மாதிரி மூங்கில் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தார்களோ அதே வடிவத்தில் அதே அளவில் ஒரு மூங்கில் வீட்டை உருவாக்கி அதிலேயே வீரர்கள் உபயோகித்த ஆயுதங்களையும், தட்டு, கரண்டி போன்ற பாண்டங்களையும் வைத்திருக்கிறார்கள்.

ஒரு போர்க் கைதியின் வாழ்க்கை அந்த நாளில் எத்தகைய கொடுரம் நிறைந்தது என்பதை அக்கண்காட்சி விளக்கமாய்க் காட்டுகிறது.

குறிப்பாக க்வாய் நதியின் மீது பாலம் கட்டப்பட்ட போது அக்கைதிகள் பட்ட கஷ்டங்களையும் அனுபவித்த துன்பங்களையும் பெரிய அளவில் என்லார்ஜ் செய்து வைத்திருக்கிறார்கள். நிர்வாணமாக அவர்களை நிற்கவைத்து அடிப்பது, ஒரு குவளை குடிநீருக்காக அவர்கள் காத்திருக்கும் பரிதாபம், பசி பட்டினியாலும் சத்துணவு இல்லாமையாலும் கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டு அல்லல்படுவது, இப்படிப் பல்வேறு புகைப் படங்கள்.

மோசமான அரிசிச் சோற்றுடன் கொஞ்சம் உப்பு மட்டுமே தருவார்களாம்.

ஓரிடத்தில் கோயில் மணிபோல் கட்டிவிடப்பட்டிருந்த உலோகப் பொருளைப் போய்ப் பார்த்தோம்.

க்வாய் நதியின் அடியில் புதைந்து கிடந்த ஒரு வெடி குண்டை மீனவர்கள் கண்டெடுத்ததாகவும், பின்னர் அது பாதியாக வெட்டப்பட்டு ஒருபாதி இங்கேயும் இன்னொரு பாதி வாங்யாய் ஆலயத்துக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டதாகக் குறிப்பு கூறுகிறது.

மியூசியத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது ‘ஃபர்கிவ், பட் டோண்ட் ஃபர்கெட்’ என்று ஒரு வாசகம் வாயிலில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாசகத்தை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“மறப்போம், மன்னிப்போம்” என்று அண்ணா கூறிய வாசகம் இதைக் காட்டிலும் உயர்வானதல்லவா, பொருள் செறிந்ததல்லவா - என்று எண்ணிக் கொண்டேன்.

“இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் பாங்காக் போய்ச் சேர்ந்து விடலாம்” என்றார் டிரைவர். உடலில் சோர்வையும், உள்ளத்தில் சோகத்தையும் சுமந்துகொண்டிருந்த எங்களுக்கு தாகம் நாக்கை வறட்டியது. “தாய்லாந்தில் ஆரஞ்சு ஜூஸ் தேனாய் இனிக்குமே! எங்காவது ஜூஸ் சாப்பிடலாமா?” என்று கேட்டேன். எங்கள் கார் பழக்கடை ஒன்றின் முன் போய் நின்றது. தாய்லாந்தில் விளையும் அத்தனை பழரகங்களையும் கொலு வைத்தாற்போல் இருந்தது அந்தக் கடை.

அந்தப் பழங்களைப் போலவே பளிச்சென்று காணப்பட்ட இளம் பெண் ஒருத்தி சிரித்த முகத்துடன் இருகரம் கூப்பி எங்களை வரவேற்றாள்.

நம்மூர் சினிமா டைரக்டர்கள் கண்ணில் பட்டிருந்தால் இந்நேரம் குஷ்பு இரண்டாம் இடத்துக்குப் போயிருப்பார்!

அந்தப் பெண் இனிமையாய் இங்கிலீஷ் பேசினாள். குரலில் குளுமை வீசியது. படிக்கும் நேரம் போக வியாபாரத்தைக் கவனிப்பதாய்ச் சொன்னாள். இளநீர்க் காய்களை லாகவமாய்ச் சீவி, ஸ்ட்ரா போட்டுக் கொடுத்தாள். ஒவ்வொருவரும் இரண்டு இளநீர் சாப்பிட்டோம். பை நிறையப் பழங்கள் வேறு

வாங்கிக் கொண்டோம். பல்வேறு பழங்களுக்கிடையே விதை நீக்கிய புளியம்பழமும் இடம் பெற்றிருந்தது. “இதென்ன வேடிக்கை? புளியைக் கொண்டு வந்து வைத்திருக்கிறீர்களே?” என்று கேட்டேன்.

“இதைச் சாப்பிட்டுப் பாருங்கள்” என்று கொஞ்சம் சாம்பிள் கொடுத்தாள் அந்தப் பெண். வாயில் போட்டுப் பார்த்தேன். கற்கண்டாய் இனித்தது.

“இது ஒரிஜினல் புளியம்பழமாக இருக்க முடியாது. புளிய மரத்துக்கும் பேரீச்சை மரத்துக்கும் எங்கோ தப்புத் தண்டா நடந்திருக்கிறது” என்றேன் நான்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த ஊர் மண்ணில் விளையும் புளியம் பழம் இப்படித்தான் இனிக்கும்” என்றார் டிரைவர்.

ஹோட்டலை அடைந்து படுக்கையில் சாய்ந்த பின்னும் ஸ்ரீ.வே. சோகமாக, எதையோ பறிகொடுத்தவர் போலக் காணப்பட்டார்.

“என்ன ஆச்சு உமக்கு? கல்லறைச் சோகமா?”

“இல்லை; அந்த ஸ்வீட் புளியம்பழத்தில் ஒரு கிலோ வாங்கி வராமல் போய் விட்டோமே என்ற சோகம்தான்.”

“உங்களுக்கு அந்தப் பழக்கடை அழகியை இன்னொரு முறை பார்க்க வேண்டும். அதற்குப் புளியம்பழம் ஒரு சாக்கு. அதுதானே!” என்றேன்.

லகப் போரின் போது போர்க் கைதியாகப் பிடிபட்ட ஜார்ஜ் வோகஸ் என்ற டச்சு ராணுவ வீரர் பின்னொரு சமயம் பாங்காக் ரோட்டரி கிளப் விழாவொன்றில் பேசியிருக்கிறார். அந்த உரையிலிருந்து சில வரிகள்:

ன்னையும் என்னுடைய தந்தை, என் சகோதரர்கள் எல்லோரையும் ஜப்பானிய ராணுவம் 1942 மார்ச் மாதம் எட்டாம் தேதியன்று சிறைபிடித்தது. நாங்கள் அப்போது ஜாவா தீவில் இருந்தோம். எங்கள் ராணுவத்திலும் கிட்டத்தட்ட அறுபதாயிரம் வீரர்கள் இருந்தனர். ஏதோ புற்றீசல் கிளம்பியது போல லட்சக்கணக்கில் இந்த ஜப்பானியர் சின்னச் சின்ன சைக்கிள்களில் எங்களை நோக்கி வந்தார்கள். இந்தக் ‘குள்ளர்கள்’ ஏன் எங்களைக் கைது செய்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

நானும் என்னைப் போன்ற போர்க் கைதிகளும் கடல் வழியாக முதலில் சிங்கப்பூர் சிறைச்சாலைக்குச் கொண்டு போகப்பட்டோம். பின்னர் அங்கிருந்து காஞ்சனபுரிக்குக் கால்நடையாகவே போய் சேர்ந்தோம்.

தினமும் இரவில் நடை. இதுபோல் பன்னிரண்டு இரவுகள் நடந்தோம். பகல் நேரத்தில் ஒப்புக்குக் கொஞ்சம் ஓய்வு எடுக்க அனுமதித்தார்கள்.

க்வாய் நதியோரம் பர்மா எல்லைவரை போர்க் கைதிகளின் முகாம்கள் நிறுவப்பட்டிருந்தன. ஒரு முகாமைக் கட்டி முடிக்க இருநூறு கைதிகள் நியமிக்கப்பட்டார்கள். மூங்கில் கழிகளும் மரத்துண்டுகளும்தான் எங்கள் குடியிருப்புக்கான சாதனங்கள். ரயில்பாதை அமைக்கப் பல மாதங்களாயின. குறுக்கே ஏறத்தாழ எண்பது பாலங்களைக் கட்ட வேண்டியதாயிற்று.

எங்கள் முகாமைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகள் ஏதுமில்லை. இருந்தாலும் எங்களால் தப்பியோட முடியாது. எங்களுக்குத் தரப்பட்ட சாப்பாடு படுமோசம். காலராவும், மலேரியாவும் எங்களைப் பற்றிக் கொண்டன. எங்களில் ஆஸ்திரேலியர்கள், ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள், டச்சுக்காரர்கள் எனப் பல்வேறு நாட்டினரும் இருந்தோம். வியாதி வந்தால் மருந்து மாத்திரை ஏதும் கிடையாது. ஒருநாளைக்குப் பதினாறு மணி நேரம் கடும் உழைப்பு. விடுமுறை என்ற சொல்லுக்கே விடுமுறை தந்துவிட்டார்கள்.

என்னுடைய ஜப்பானிய நண்பர் ஒருவர் எப்போதாவது உப்புடன் கலந்த மீன்துண்டுகளைக் கொஞ்சம் தருவார். அவை தான் என் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன.

1943 ஆகஸ்டில் ரயில்பாதை முடிவுற்றதும் நாங்கள் காஞ்ச

னபுரிக்குத் திரும்ப அனுப்பப்பட்டோம். ‘நாங்பிளாதுக்’ என்ற இடத்தில் ஒரு முகாமில் நான் வைக்கப்பட்டேன். அங்கே ஜப்பானியர் வந்து வெள்ளைத் தோல் கொண்டவர்களைப் பிடித்து ஜப்பானுக்குக் கொண்டு போனார்கள். குளிரையும், பனியையும் வெள்ளைத் தோல் தாங்கும் என்பது அவர்களின் கணிப்பு.

ஆயில் டாங்க்கர் கப்பல் ஒன்றில் நாங்கள் மூவாயிரம் பேர் அமர்ந்து ஜப்பான் போனோம். கிட்டத்தட்ட ஒரு மாதம் துறை முகத்திலேயே உட்கார்ந்திருந்தோம். சாப்பாடு கிடையாது. அழுக்கு கப்பியிருந்த எங்கள் துணிகளை அகற்றித் துவைக்கக் கொண்டு போனார்கள். நிர்வாணமாக நின்ற எங்களை நீச்சல் குளம் ஒன்றில் குளிக்க வைத்தார்கள். குளத்தின் விளிம்புகளில் ஜப்பானியப் பெண்கள் கையில் கழிகளோடும், துடைப்பங்களோடும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கையால் நாங்கள் அடிபட்டோம்.

ஜப்பானிய விதிகளுக்கேற்ப நாங்கள் ‘சுத்த'மானதும் ஃபகுவோகா என்ற பகுதிக்குக் கொண்டு போகப்பட்டோம். நிறையப் பேர் தலையில் தொப்பியுடனும், விளக்கோடும் காணப்பட்டனர். அவர்களெல்லாம் சுரங்கத் தொழிலாளர்கள் என்பது புரிந்தது. விரைவில் நாங்களும் அவர்களோடு சேர்ந்து பூமிக்கடியில் முன்னூறு அடி ஆழத்தில் பணிபுரிந்தோம்.

கடைசியாக ஒருநாள் அமெரிக்கர்கள் எங்களை விடுதலை செய்தார்கள். வழியில் நான் அணுகுண்டு விழுந்த நாகஸாகியைப் பார்த்தேன்.

எனக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையான அனுபவங்கள் உங்களில் யாருக்கும் நேர்ந்திருக்காது. நேரவும் கூடாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்லாந்து/4&oldid=1058405" இலிருந்து மீள்விக்கப்பட்டது