தாய்லாந்து/5
தாய்லாந்து மக்கள் எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்வார்கள். ஆனால், தங்கள் அரசரைப் பற்றிய அவதூறான பேச்சை மட்டும் ஒருநாளும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
இப்போது ஆட்சி புரியும் மன்னர் பூமிபால் அவர்களை அந்த மக்கள் ஒரு தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.
பல்வேறு சாம்ராஜ்யங்கள் தாய்லாந்து மண்ணை ஆண்டு வந்தன என்றாலும், 1782ல் தொடங்கிய சக்ரி சாம்ராஜ்யம்தான் தாய்லாந்து சரித்திரத்தின் முதல் அத்தியாயமாய்க் கருதப்படுகிறது. “ராமா மன்னர்களின் வரிசை ஆரம்பமே அது முதல்தான்” என்றார் வழிகாட்டி.
“ராமா மன்னர்களா?”
“ஆமாம்... அவர்களை கிங் ராமா ஒன், கிங் ராமா டூ என்று தான் குறிப்பிடுகிறார்கள். இங்கிலாந்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், ஆறாம் ஜார்ஜ் மன்னர் என்று சொல்கிற மாதிரி இப்போதைய மன்னர் பூமிபால் ஒன்பதாவது ராமா.”
ராமாயணத்தின் செல்வாக்கு எந்த அளவுக்குத் தாய்லாந்தில் வேரூன்றி இருக்கிறது என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று வேண்டியதில்லை.
முதலாம் ராமாதான் தாய்லாந்தின் தலையெழுத்தை மாற்றி எழுதிய பிரம்மா என்றும், தாய்லாந்து மொழிக்கு வரிவடிவம் கொடுத்த பெருமையும், தலை நகரைப் பாங்காக்குக்கு மாற்றிய சாதனையும் அவருடையதுதான் என்றும் சொன்னார்கள்.
அவருக்கு அடுத்தபடி மக்களால் மிகவும் போற்றப்பட்டவர் ஐந்தாம் ராமா மன்னர் புரட்சிகரமான திட்டங்களைப் புகுத்தி, மேற்கத்திய தொழில் நுட்பங்களைத் தம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்த ஐந்தாம் ராமாதான் என்றும் சொன்னார்கள்.
தென்கிழக்கு ஆசியாவிலேயே காலனி ஆதிக்கத்துக்கு உட்படாமல் தப்பிய ஒரே நாடு தாய்லாந்து என்பதைக் கேள்விப்படும்போது சற்று வியப்பாகவே உள்ளது.
அதே போல் கம்போடியா, லாவோஸ், வியட்நாம் போன்ற கம்யூனிஸ் நாடுகள் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் நிலையிலும் கம்யூனிஸ விதை தாய்லாந்து மண்ணில் விளையாமல் பார்த்துக் கொண்டதும் இந்த மன்னர்கள்தானாம்!
ஐந்தாம் ராமா வாழ்ந்த அரண்மனை இப்போது கண்காட்சியாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டதும் அந்த அரண்மையைப் பார்க்கும் ஆவலில் உடனே அங்கு போனோம்.
”இந்த அரண்மனை முழுவதும் தங்கத் தேக்கு மரத்தால் கட்டப்பட்டது. தேக்கு மரங்களால் ஆன இவ்வளவு பெரிய கட்டிடம் உலகில் வேறு எங்குமே கிடையாது” என்று அடித்துச் சொன்னார் அரண்மனையைச் சேர்ந்த ஒரு சிப்பந்தி.
முப்பத்திரண்டு அறைகள் கொண்ட மிகப் பெரிய ராஜ மாளிகை குளுகுளுவென்ற சூழ்நிலை. இதைவிட பிரம்மாண்டமான அரண்மனைகளை ரஷ்யா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நான் பார்த்திருந்தாலும் தேக்கு மரங்களின் முழு ஆக்கிரமிப்பை இந்த அரண்மனையில்போல் வேறெங்கும் காண முடியவில்லை. தாய்லாந்தின் தேசிய சொத்தான இந்த தேக்கு மரச் செல்வத்தைப் பற்றி நிறையச் சொல்ல வேண்டும்.
அரண்மனையைச் சுற்றிக்காட்டிய பெண் கய்டு பேசியது ஆங்கிலம் என்பதைப் புரிந்து கொள்ளவே சிறிது நேரமாயிற்று.
அப்படி துண்டு துண்டாகக் கொத்திக் கொத்திப் பேசினார்.
அரண்மனையில் ஓரிடத்தில் மாட்டப்பட்டிருந்த விக்டோரியா மகாராணியாரின் இளம் வயது புகைப்படம் ஒன்றைச் சுட்டிக்காட்டி, ”இந்தக் குழந்தை யாரென்று உங்களால் சொல்ல முடியுமா?” என்று ஒரு புதிர் போட்டாள் அந்த கய்டு.
அங்கே வந்திருந்த டுரிஸ்ட் ஒருவர் “பேபி விக்டோரியா” என்று சொன்னதும் கலெக்ட் என்று தாய்லாந்து உச்சரிப்பில் ஆமோதித்தார் கய்டு. அதாவது கரெக்ட் என்பதைத்தான் அப்படிச்சொன்னாள்! வீதிகளில் செல்லும் போது தாய்லாந்து மொழி. யில் எழுதப்பட்டுள்ள ஸைன்போர்டுகள் பலவற்றைக் காண முடிகிறது. அதைப் பார்த்துவிட்டு ”இதென்ன, ஆங்கில எழுத்துக்களைத் தலைகீழாக எழுதியிருக்கிறார்களே!“ என்று கமெண்ட் அடித்தானாம் ஒரு சின்னப் பையன். உண்மை; அந்த வினோதமான எழுத்துக்களைப் பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது.
அரண்மனையைச் சேர்ந்த அத்தனை அறைகளையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பார்த்து முடிக்கவே ஒரு முழுநாள் தீர்ந்து போயிற்று.
“ஐயோ, ஒரு முழு நாள் போய்விட்டதே!” என்று அங்கலாய்த்தார் நண்பர் ஸ்ரீவே.
“எப்படியோ, நமக்கு ஒரு முழுநாள் அரண்மனை வாசம் கிடைத்ததே, அதற்காகச் சந்தோஷப்படுங்கள்!“ என்றேன் நான்.
பாங்காக்கின் பிரதான வீதிகள் எல்லாம் ராமா ஒன், ராமா டூ, ராமா த்ரீ என்று மன்னர்களின் பெயர்களைத் தாங்கியே அமைந்திருக்கின்றன. சின்னச் சின்னத் தெருக்கள் ஆங்காங்கே இந்த முக்கிய வீதிகளோடு சங்கமிக்கின்றன.
“மக்கள் அனைவரும் மன்னருள் அடக்கம் என்பதைச் சிம்பாலிக்காகக் காட்டியிருக்கிறார்களோ, என்னவோ!“ என்றேன்.
“இல்லை, மகாராஜாதான் மக்களைத் தம்மோடு அப்படி அணைத்துக் கொண்டு செல்கிறார். நடுநாயகமாகச் செல்வது ராஜவீதி. அதோடு ஒட்டியுள்ள சின்னஞ்சிறு வீதிகளெல்லாம் மக்கள்!” என்று விளக்கம் தந்தார் உடன் வந்த நண்பர்.
“பழைய மன்னர்களுக்கும் இப்போதைய ஒன்பதாவது மன்னரான பூமிபால் மகாராஜாவுக்கும் என்ன வித்தியாசம்?”
“பழைய மன்னர்களிடம் முழு அதிகாரமும் இருந்தது. இப்போது அப்படி இல்லை. இதை ‘கான்ஸ்ட்டிட்யூஷனல் மானார்க்கி’ என்கிறார்கள். அதாவது அரசியல் சட்டத்துக்குட்பட்ட அரச பரிபாலனம்” என்று விளக்கம் தந்தார் கய்டு.
தாய்லாந்து அரசியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் ஒரு முகம். அதன் சிபாரிசின் பேரில் மன்னர் நியமிக்கும் செனட் எனப்படும் ஆட்சிக்குழு இன்னொரு முகம்.
ஆக ஜனநாயகமும் மன்னராட்சியும் கைகோத்து இயங்கும் ஓர் அற்புதக்கலவைதான் தாய்லாந்தின் இப்போதைய ஆட்சி முறை. தேர்தல், எம்.பி. என்பது பற்றியெல்லாம் மக்கள் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. அவர்களுக்கு மன்னர்தான் எல்லாமே. அவர் பேச்சுக்கு மறு பேச்சில்லை. மன்னர் வருகிறார் என்றால் மிக்க மரியாதயோடு நடுரோடில் மண்டியிட்டு வணங்குவதை மனப்பூர்வமாய் மகிழ்ச்சியோடு செய்கிறார்கள். அரசர் தம்பதியரின் படம் இல்லாத வீடுகளோ, கடைகளோ, தொழிற்சாலைகளோ, அரசு அலுவலகங்களோ, பொது மண்டபங்களோ கிடையாது. முதலில் அரசர் படத்தைக் கொண்டு வந்து வைத்துவிட்டு அப்புறம்தான் கட்டட வேலையே தொடங்குகிறார்கள்!இப்போதைய மன்னர் தம் அரண்மனையில் தங்கி இருக்கும் நேரத்தைக் காட்டிலும் மக்களிடையே கலந்து பழகும் நேரமே அதிகமாம். கிராமங்களுக்குப் போய் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். விழாக்களில் கலந்து கொள்கிறார். பாராளுமன்றம் செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள் தவிர, தாமும் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகிறார்.
ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் அரண்மனை வாசலில் விவசாயிகளுக்கு விதை வழங்கு விழா என்று ஒரு பெரிய விழா நடைபெறுகிறது. ஏராளமான கிராம மக்களும் விவசாயிகளும் அந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். சம்பிரதாயமான சடங்குகளுக்குப் பின்னர், மன்னரே தம் கையால் வழங்கும் விதையை வாங்கிக் கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு முண்டியடித்துக் கொண்டு செல்வார்களாம்! தாங்கள் சேமித்து வைத்துள்ள விதைகளுடன் அரசரிடமிருந்து பெற்றுச் செல்லும் விதையையும் கலந்து விதைத்தால் விளைச்சல் பல மடங்காகப் பெருகுவதாக ஒரு நம்பிக்கையாம். நாம் இங்கே ஆடிப்பட்டம் தேடி விதைப்பது மாதிரி அங்கே அரசர் தொட்ட விதையை ஓடிப் பெற்று விதைக்கிறார்கள்.
“எங்கள் மன்னருக்கு விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதைப் போலவே இசைக் கலையிலும் ஈடுபாடு அதிகம். பல இசைக் கருவிகளை மீட்டி இசைப்பதில் விற்பன்னர். குறிப்பாக ஜாஸ் இசையில் வல்லவர். அருமையாகப் பியானோ வாசிப்பார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவராயிற்றே!” என்று பெருமைப்பட்டுக் கொண்டார் கய்டு.
டி.வி.யில் ஒருநாள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மன்னர் பூமிபால் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளை மக்கள் ஆர்வத்தோடு பார்த்து மகிழ்ந்தார்கள்.
டி.வி. காமிராகூட அவரை நேருக்கு நேர் சந்திக்காமல் சற்றுத் தள்ளி நின்றே பவ்யமாகப் பின் தொடர்கிறது.
தாய்லாந்தின் உயர் அதிகாரிகள், தளபதிகள் எல்லாருமே மன்னரின் முன்நின்று பேசும் போது ஒரு தனி மரியாதை காட்டுகிறார்கள். மன்னர் எப்போதும் ஜூம் லென்ஸ் பொருத்தப் பட்ட ஒரு காமிராவைக் கூடவே எடுத்துச் செல்கிறார். சிற்சில நிகழ்ச்சிகளை அவரே படம் எடுக்கிறார். மற்ற நேரங்களில் காமிராவைக் கணவரிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்கிறார் கூடவே செல்லும் அவரது மனைவி. ராஜாவும், ராணியும் எங்கும் சேர்ந்தேதான் போகிறார்கள். அப்படிப் போகும்போது சிற்சில சமயங்களில் ராணி தமக்குரிய தனி அந்தஸ்தோடு அரசருக்குச்சற்றுப் பின்தள்ளியே வெண் கொற்றக் குடையின் கீழ் நடந்து செல்கிறார்.
இப்போதைய மன்னர் பூமிபால்தான் அதிக ஆண்டுகள் தொடர்ந்து (46 ஆண்டுகள்) ஆட்சி நடத்தி வருகிறவராம். ராஜ குடும்பத்தின் பெருமையும் கெளரவமும் எள்ளளவும் குறைய பூமிபால் அனுமதிப்பதில்லையாம். அதற்கு சாட்சியாக அரச குடும்பத்தின் குரூப் ஃபோட்டோ ஒன்றைக் காட்டினார்கள்.
அதில் ராஜா இருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் ராணி. ராணிக்குப் பக்கத்தில் ஓர் இடம் காலியாக விடப்பட்டுள்ளது. அப்புறம் இளவரசிகளின் வரிசை.
“இந்தக் காலி இடத்தில் நின்றிருக்க வேண்டியவர் யார்? அவர் எங்கே?” என்று கேட்டேன்.
“ராணிக்கு அடுத்து மூத்த மகள் நிற்க வேண்டிய இடம் அது. ஆனால் அவரோ அரச குடும்பத்திலிருந்து சாதாரண ஒருவரை மணம் புரிந்து கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். அதனால் அவரை அரச குடும்பத்திலிருந்து விலக்கி விட்டார்கள். அரச குடும்ப குரூப் போட்டோவை எங்கே பார்த்தாலும் அதில் மூத்த மகள் நிற்க வேண்டிய இடம் காலியாகவே
இருக்கும்” என்று விளக்கம் கொடுத்தார் கய்டு அபிதீன்.(Upload an image to replace this placeholder.)
(Upload an image to replace this placeholder.)
(Upload an image to replace this placeholder.)
(Upload an image to replace this placeholder.)
(Upload an image to replace this placeholder.)
(Upload an image to replace this placeholder.)
(Upload an image to replace this placeholder.)