8

அதை ஒரு விசிறிக் கடை என்று சொல்வது சரியல்ல. விசிறிக் கடல் என்பதே பொருத்தம். கண்ணுக் கெட்டிய தூரம் விசிறிகள், விசிறிகள், விசிறிகள்தான். நம் ஸூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கூட அத்தனை விசிறிகள் உண்டா என்பது சந்தேகமே!

கான்வாஸ் போன்ற போர்டு ஒன்றைப் பொருத்தி அதில் விசிறியை விரித்து வைத்துக் கொண்டு, அதன்மீது பல தினுசான பூக்களையும் இயற்கைக் காட்சிகளின் எழிலையும் வரைந்து கொண்டிருந்தார்கள் சில பெண்கள்.

பச்சை வண்ணத்தில் தூரிகையைத் தோய்த்து விசிறியின் மீது லேசாக அங்குமிங்கும் மொத்தினால் பச்சைப் பசேரென்ற மரங்கள் இலை விரிக்கின்றன. இன்னொரு பிரஷ்ஷை எடுத்து அங்கே இங்கே நாலு கோடுகள் இழுத்தால் குடிசையும் படகும் காட்சி அளிக்கின்றன! நீல வண்ணத்தில் தூரிகை தோயும் வேகத்திலேயே அலைகள் தலை விரிக்கின்றன.

ஆசை தீரப் பார்த்த போதும் சலிப்பு தோன்றவில்லை.

‘நேரமாகிறது, உம்’ என்ற துரிதப்படுத்தினார் சொம்பட். அப்புறம்தான் சாங்மாய் நோக்கிப் புறப்பட்டோம். சில்லென்று குளிர் காற்று வீசிக் கொண்டிருந்ததால் விசிறியை உபயோகிக்க வாய்ப்பு இல்லை.

“இதெல்லாம் அலங்காரமாக மாட்டி வைக்கும் அழகு விசிறிகள்தான்“ என்றார் சொம்பட். வழியில் புத்த பிட்சுக்கள் சிலர் கும்பலாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

“தாய்லாந்தில் மொத்தம் இருபத்தேழாயிரம் பெளத்த ஆலயங்கள் இருக்கின்றன. இருபத்தைந்தாயிரம் புத்த பிட்சுக்கள்

இந்த நாடு முழுதும் இரைந்து கிடக்கிறார்கள். புத்த நாகரிகத்தின் தொட்டில் இந்த சாங்மாய்தான்” என்றார் சொம்பட்.

பிட்சுக்கள் எங்கும் தனியாகப் போகமாட்டார்களாம். இரண்டு பேராகவோ அல்லது கும்பலாகவோ சேர்ந்தேதான் போவார்களாம். தனிமையில் செல்வது பிரம்மசரியத்துக்குச் சோதனையாக முடியலாம் என்ற அச்சமே காரணமாம்.

“யாராவது ஒரு புத்த பிட்சுவைப் பார்த்துப் பேசவேண்டும். அது முடியுமா?” என்று சொம்பட்டிடம் கேட்டேன். அந்த ஆசை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே நிறைவேற்றி விட்டார் அவர்.

யாம் அரிசி உலகப் பிரசித்தமானது. அந்த அரிசி விளைவது இங்கேதான். பல நிலங்கள் வானம் பார்த்தவை. வங்கிகள் விவசாயிகளுக்கு நிறையக் கடன் தருகின்றன. ஆனாலும், வங்கியின் பிடியில் சிக்கிக் கொண்டு விவசாயிகள் ரொம்ப வும் சங்கடத்துக்கு ஆளாகிறார்கள் என்று சொல்லி கொண்டே வந்த சொம்பட் காரை ஓரிடத்தில் நிறுத்தி இங்கேதான் புகழ் பெற்ற தாய்ஸ் உதேப் கோயில் உள்ளது. இறங்கிப் போய்ப் பார்க்கிறீர்களா என்று கேட்டார் சொம்பட்.

“கோயிலா? அது எங்கே?“ என்று கேட்டேன்.

“அதோ... மேலே பாருங்கள், தெரியும்...”

பார்த்தேன். தலை சுற்றியது.

“முன்னூறு படிகள் எறிச் செல்ல வேண்டும். முடியுமா?” என்று கேட்டார் சொம்பட்.

“வேண்டாம்; நான் இங்கிருந்தபடியே பார்த்து விடுகிறேன்“ என்றேன்.

கடகடவெனச் சிரித்தார் கய்டு.

அவர் சிரிக்கும்போதே, பழனி மலையில் உள்ளது போன்ற இழுவை ரயில் (விஞ்ச்) ஒன்று வந்து எங்களருகில் நின்றது.

அதில் ஏறிக் கொண்டதுதான் தாமதம்; அடுத்த சில நிமிடங்களில் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

கோயில் வாசலில் கண்டாமணிகள் எழுப்பிய ‘டாங் டாங்’ ஓசையில் ஊரே அதிர்ந்தது.

வெளிப்பிராகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கையில் ஒரு போர்டில், “ஒழுங்கற்ற உடைகள் அணிந்துள்ளவர்கள் உள்ளே போகக்கூடாது“ என்று எழுதப்பட்டிருந்தது.

“ஒழுங்கற்ற உடைகள் என்றால் என்ன?“ என்று விளக்கம் கேட்டேன் சொம்பட்டிடம்.

“மினி ஸ்கர்ட், அரை நிஜார், தொடை தெரிகிறாற்போன்ற உடை இதெல்லாம்தான்“ என்றார் அவர்.

“டூரிஸ்ட்களில் முக்காலே மூணு வீசம் பேர் முக்காலே மூணு வீசம் உடம்பு தெரிகிற மாதிரி ஒழுங்கற்ற உடை அணிந்து கொண்டு திரிபவர்களாய்த்தானே இருக்கிறார்கள்? அவர்களெல்லாம் கோவிலுக்குள் போய்ப் பார்க்க முடியாதா?”

“முடியும்?”

“எப்படி?"

“அதோ பாருங்கள்“ என்று சற்று தூரத்தில் கும்பலாய்த் தெரிந்த சிலரைச் சுட்டிக் காட்டினார்.

அவர் காட்டிய இடத்தில் பர்மூடா ஸ்டைல் அரை நிக்கர்களில் நாலைந்து ஐரோப்பியப் பெண்கள் நின்று கொண்டிருக்க அவர்கள் இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ள பெட்ஷீட், போன்ற துணியைக் கொடுத்துக் கொண்டிருந்தார் அந்தக் கோயிலைச் சேர்ந்த ஒருவர்.

அதைக் கட்டிக் கொண்டால் உள்ளே போகலாமாம்.

அந்தப் பெண்கள் ஒரு வழியாக தத்தக்கா பித்தக்கா என்று பெட்ஷீட்டைக் கட்டிக் கொண்டு உள்ளே போனார்கள்.

தாய்ஸ் உதேப் கோயில் உருவான விதமே தனி, புத்தர் பெருமானின் எலும்பு ஒன்றை இங்கே கொண்டு வந்து வைத்து அதன் மீது கோயில் கட்ட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டதாகவும், கோயிலை எங்கே கட்டுவது என்ற பிரச்னை எழுந்த போது அந்த எலும்பை ஒரு வெள்ளை யானையின் மீது வைத்து அனுப்பி, அந்த யானை எங்கே போய் நிற்கிறதோ அங்கே கட்டுவது என்றும், அப்படி புத்தரின் எலும்பைச் சுமந்து வந்த யானை இந்த இடத்தில் நின்றதால் இங்கேயே தாய்ஸ் உதேப் கோயில் உருவானதாகவும் ஒரு செய்தியைச் சொன்னார்கள்.

உயரமான இந்தக் கோயிலுக்குப் போவதில் இரண்டு லாபம் உண்டு. ஒன்று, கோயிலைப் பார்ப்பது. இன்னொன்று அந்த உயரமான இடத்திலிருந்து சாங்மாய் நகரை முழுமையாகப் பார்த்து விடுவது.

“அது என்ன அங்கே? பெரிதாக மாட்டு வண்டி ஒன்று நிற்கிறதே! என்று விசாரித்தேன்.

“இந்தக் கோயில் கட்டப்பட்டபோது தொழிலாளர்களைத் தினமும் இந்த மாதிரி வண்டிகளில்தான் மேலே கூட்டி வருவார்கள். பின்னர் இரவு வீடு கொண்டு போய்ச் சேர்ப்பார்கள். கட்டிட வேலைக்கான சாதனங்களும் இந்த வண்டிகளில்தான் வரும். அந்த வண்டிகளில் ஒன்றை மட்டும் நினைவுச் சின்னமாக இங்கே வைத்திருக்கிறோம். கிட்டத்தட்ட அறுநூறு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட சரித்திர கால வண்டி இது!” என்று விவரித்தார் சொம்பட்.

ஹால் போன்ற ஓர் அறைக்குள் அந்தக் கோயிலின் வரலாறு கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

அங்கே பல்வேறு நாட்டு கரன்ஸி நோட்டுகளைக் கண்ணாடிப் பெட்டி ஒன்றில் வைத்திருந்தார்கள்.

டூரிஸ்ட்டுகள் தங்கள் நாட்டு கரன்ஸிகளை அங்கே போட்டு விட்டுப் போவார்களாம். நம் நாட்டு நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகள் கூட அங்கே இருந்தன. இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் நோட்டுகளை மட்டும் காணவில்லை. ஒரு ரூபாய் நோட்டு ஒன்றையும் இரண்டு ரூபாய் நோட்டு ஒன்றையும் மட்டும் அந்தப் பெட்டியில் போட்டுக் குறைந்த செலவில் அந்தக் குறையைப் பூர்த்தி செய்து விட்டு வந்தேன் நான்!

உள்ளே போனபின்பு அடுத்த முக்கால் மணி நேரத்துக்கு எங்களை ஆக்ரமித்துக் கொண்ட உணர்வு பிரமிப்புதான்.

ஏராளமான புத்தர் சிலைகள்! நம்மூர் கோவில்களில் அறுபத்து மூவர் சிலைகளை வரிசையாக வைத்திருப்பார்களே, அந்த மாதிரி!

ஓரிடத்தில் பெரிய புத்தர்சிலை ஒன்று தனியாக இருந்தது. தங்கக் காகித ரேக்குகள் அந்தச் சிலை மீது பளபளத்துக் கொண்டிருந்தன!

“இதெல்லாம் அசல் தங்கமா?“ என்று கேட்டேன்.

“ப்யூர் கோல்ட் ஷீட்! அசல் தங்கத்திலான மெல்லிய காகிதம். விலை பத்து பாட்டிலிருந்து ஐம்பது பாட் வரை. அவரவர்கள் தங்கள் சக்திக்குத் தக்கபடி வாங்கி வந்து ஒட்டிவிட்டுப் போகிறார்கள் என்றார் கய்டு.

‘பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது என்று சொல்வார்கள். இங்கே பூ வைக்கிற இடத்தில் பொன் வைக்கிறார்கள்’ என்று எண்ணிக் கொண்டேன்.

“சரி; இந்தத் தங்கத்தையெல்லாம் என்ன செய்வார்கள்?”

“கோவில் நிர்வாகத்துக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது சிலை மீதுள்ள தங்கத்தைச் சுரண்டியெடுத்து. ஆலயப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றார் கய்டு.

“இங்கேயும் ‘சுரண்டல்’ உண்டா?” என்று வியந்தார் ஸ்ரீவே.

“சுரண்டல் உண்டு. கோயில் தங்கத்தைக் கோயில் அதிகாரிகளே அதிகார பூர்வமாக நாலு பேர் அறியச் சுரண்டி எடுப்பார்கள்“ என்றார் சொம்பட்.

“எங்கள் ஊர் சுரண்டல் வித்தியாசமானது. கண் திருஷ்டிப் பட்டுவிடும் என்பதால் ரகசியமாக யாரும் பார்க்காத நேரத்தில் சுரண்டி எடுத்து விடுவார்கள்!“ என்றேன்.

கோயிலுக்குப் போய் பிராகாரத்தைச் சுற்றி வந்தவுடன், சற்று இளைப்பாறுவதற்காக ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டோம்.

“அதே நாலைந்து புத்த பிட்சுக்கள் வருகிறார்களே, அவர்கள் யாருடனாவது பேசமுடியுமா, கேட்டுப் பாருங்களேன் என்று சொம்பட்டிடம் ஞாபகப்படுத்தியதுதான் தாமதம், அடுத்த நிமிடம் வேகமாகப் போய் புத்த பிட்சு ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார் அவர்

63

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்லாந்து/8&oldid=1058409" இலிருந்து மீள்விக்கப்பட்டது