9

நாங்கள் சந்தித்த புத்த பிட்சுவின் பெயர் கிர்த்திகுலோ. முப்பதே வயது நிரம்பிய அந்தத் துறவியின் முகத்தில் இளமையைவிட அறிவு முதிர்ச்சியே அதிகம் பளிச்சிட்டது.

நீண்டகாலமாக என்னுள் முடங்கிக் கிடந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினேன்.

“புத்த மதமோ அகிம்சையைப் பிரதானமாகப் போதிக்கிறது. ஆனால், புத்தமதம் ஆழமாகப் பரவியுள்ள தாய்லாந்திலோ பெரும்பாலான மக்கள் அசைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது முரண்பாடாக இல்லையா?”

இந்தக் கேள்வி கிர்த்திகுலோவிடம் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. புன்முறுவலோடு என்னைப் பார்த்தார்.

“உணவுப் பழக்கம் என்பது அவ்வளவு எளிதாக வளைந்து கொடுத்து விடக் கூடியதல்ல. மேலும் புத்தமதக் கோட்பாடுகள் ஒருவரின் உணவுப் பழக்கத்தின் மீது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அவரவர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறது என்பதைத் தவிர வேறு விளக்கம் ஏதுமில்லை“ என்றார்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நான் தெரிந்து கொண்ட சில விவரங்கள்:

இருபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட எவரும் புத்த பிட்சுவாக மாறலாம். இதற்குச்சில அடிப்படைப் பயிற்சிகள் தேவை. பிட்சுவாக மாறியபின் அவர்கள் குடும்பத்தாருடன் சேர்ந்திருக்க அனுமதி இல்லை. எனினும், இனி புத்த பிட்சு வாழ்க்கை வேண்டாம் என்று எப்போது முடிவெடுத்தாலும் அப்போதே அவர்கள் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம்.

பெண்கள் பிட்சுக்களாக மாற அனுமதி இல்லை.

நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களில் பிட்சுக்கள் நாட்டம் கொள்ளக் கூடாது. ஆயினும் டி.வி.யில் உலகச் செய்திகளைப் பார்த்து, தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

இதையெல்லாம் அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே, அடுத்து அவரை என்ன கேள்வி கேட்கலாம் என்று யோசித்து வைத்துக் கொண்டேன்.

‘இப்படி இளம் வயதில் பிட்சுக்களாக மாறுகிறவர்கள் என்னதான் மனக் கட்டுப்பாட்டோடு இருந்தபோதிலும் இளமை உணர்வுகள் ஏதேனும் ஒரு தருணத்தில் தலைதூக்கி அவர்களைச் சலனப்படுத்தாதா? எப்படி அவர்கள் இந்தச் சலனங்களை வெல்கிறார்கள்?’ என்பதே அந்தக் கேள்வி.

பிட்சுவின் குழந்தை முகத்தில் ஒரு சிரிப்பு தவழ்ந்தது!

“அப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் தடுமாறி விடக் கூடாது என்பதால்தான் நாங்கள் எங்கேயும் தனித்துப் போவதில்லை. தடுமாற்றத்துக்குள்ளாக நேரிடும் துறவியை உடன் செல்லும் துறவி எச்சரித்துக் காப்பாற்றுவார்.“

“புத்தமதம் போதிக்கும் முக்கிய உபதேசங்கள் என்ன என்று சொல்ல முடியுமா?”

“கொல்லாமை, பொய் சொல்லாமை, திருடாமை, மது அருந்தாமை, பிறன் மனை நோக்காமை. இந்த ஐந்தும் முக்கியமானவை.“

ந்தக் கோவிலில் நாங்கள் இருந்த இரண்டு மணி நேரமும் உள்ளத்தூய்மையும் உன்னத உணர்வும் பெற்றோம்.

‘என்ன, புறப்படலாமா?’ என்பதற்கு அடையாளமாக சொம்பட் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.

“மலை இறங்கி நெடுந்துரம் பயணம் செய்து ஊர் போய்ச் சேர வேண்டும். நாளை காலை நீங்கள் பாங்காக்கில் இருக்க வேண்டும் அல்லவா?“ என்றார்.

கோயிலிலிருந்து திரும்புகிறவர்களும், கோவிலுக்குள் போகிறவர்களுமாக அந்தப் பகுதியே கலகலப்பாக இருந்தது. சர்வதேச மக்களின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம். பல்வேறு உடைகளில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த டூரிஸ்ட்டுகளுக்கு இடையே அங்கங்கே ஆரஞ்சு வண்ண ஆடையில் பளிச்சிடும் புத்த பிட்சுக்கள்!

கீழே இறங்கியபோது அதுவரை நாங்கள் காணாத காட்சி ஒன்றைக் கண்டோம்.

சுற்றுலாப் பயணிகள் சிலர் தங்கள் கையில் சிறிய கூண்டு ஒன்றை வைத்திருந்தார்கள். சில கம்பி வலையாலும், சில மூங்கில் குச்சிகளாலும் ஆனவை. அந்த கூண்டுகளுக்குள் சிறைப்பட்டிருந்த தாய்லாந்துக் குருவிகள் கீச்சுக் கீச்சென்று மெலிதான குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. கூண்டைக் கையில் ஏந்திக் கொண்டு நின்ற சிலர் கண்களை மூடி ஏதோ தியானம் போல் செய்துவிட்டு அந்தக் கூண்டைத் திறக்கவும் அந்தக் குருவிகள் விடுதலை பெற்று வானில் பறக்கின்றன.

“என்ன இது?“ என்று கய்டைக் கேட்டேன்.

“மலையடிவாரத்தில் இந்தப் பறவைகளைக் கூண்டோடு விற்பனை செய்கிறார்கள். அதைச் சிலர் விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து ஏதேனும் ஒரு காரியம் கைகூட வேண்டுமென வேண்டிக் கொண்டு கூண்டைத் திறந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் வேண்டிக் கொண்ட காரியம் நிறைவேறும் என்பது தாய்லாந்துக்காரர்களின் நம்பிக்கை” என்றார் சொம்பட்.

“சரி, இங்கே தாய்லாந்து மக்களை விட மற்ற நாட்டு மக்கள்தானே அதிகமாக இருக்கிறார்கள்?”

“கய்டுகள்“ இப்படிச் செய்யுங்கள் என்று பயணிகளுக்குச்

சொல்வார்கள். அல்லது பயணிகளே புத்தகம் எதிலாவது இந்த நம்பிக்கை பற்றிப் படித்து விட்டு வந்திருப்பார்கள்.”

“நீங்கள் மட்டும் ஏன் எங்களிடம் இதைச் சொல்ல வில்லை” என்று கேட்டேன்.

இது ஒரு மூட நம்பிக்கைதான். எதையோ சொல்லிப் பறவைகளை விற்க வேண்டும். ஒரு வியாபார யுக்தி. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. எனவேதான் நான் இதைப் பற்றி யாரிமும் விவரிப்பதில்லை”

சாங்மாய் புறப்படுமுன் நண்பர் சொம்பட் அவசர அவசரமாக மலர்ச்செண்டு விற்கும் கடையை நோக்கி விரைந்தார்.

சில வினாடிகளில் அழகாக ‘பாக்’ செய்யப்பட்ட மலர்க் கொத்து ஒன்றைக் கையோடு கொண்டு வந்தார்.

“திஸ் இஸ் ஃபார் மை கேர்ள் ஃப்ரண்ட்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

“ஓ! உங்களுக்கு கேர்ள் ஃப்ரண்ட் இருக்கிறாளா!”

“எஸ்; நான் அவளை வெகுவாக நேசிக்கிறேன். அடுத்த ஆண்டு திருமணம். இதோ பாருங்கள்” என்று தன் பர்ஸைத் திறந்து அதிலிருந்த அந்தப் பெண்ணின் போட்டோவைக் காட்டினார்.

கள்ளம் கபடின்றி வெளிப்படையாகப் பேசுவது தாய்லாந்து மக்களின் பண்புகளில் ஒன்று.

பாங்காக் நண்பர் ஒருவர் சொன்னது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

“இந்த நாட்டு மக்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுவார்கள். நான் இங்கே வந்த புதிதில் என் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருத்தியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் கம்பெனியில் நான் அப்போதுதான் சேர்ந்திருந்தேன். ஒருநாள் அந்தப் பெண், ரொம்பச் சோர்வாகக் காணப்பட்டாள். ‘ஏன் சோர்வாக இருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?’ என்று கேட்டேன்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. வழக்கமான சோர்வுதான். இப்போது எனக்கு மாதத் தொந்தரவு. மூன்று நான்கு நாட்கள் இப்படித்தான் இருக்கும். அப்புறம் சரியாகிப் போய்விடும்’ என்று வெகுளியாகச் சொன்னாள்.” மலைப் பாதை வளைவுகளைக் கடந்து சமவெளிக்கு வந்ததும் சாங்மாய் நோக்கி வேகமாகப் பறந்தது லிமோஸின்.

வழியெங்கும் தென்னந்தோப்புகள். கரும்பு சாகுபடி சீசன் ஆனதால் கரும்பு லாரிகள் சாலையில் சாரி சாரியாய் விரைந்து கொண்டிருந்தன. ஒரு தோப்பின் ஓரமாக எங்கள் கார் போய்க் கொண்டிருந்தது. ஆள்நடமாட்டம் எதுவும் காணோம். ஆனால் தொப் தொப் என்று தேங்காய்கள் மரத்திலிருந்து விழும் சப்தம் மட்டும் கேட்டது.

காரை நிறுத்திவிட்டு, “உங்களுக்கு ஒரு வேடிக்கை காட்டுகிறேன். வாருங்கள்” என்று கய்டு எங்களைத் தோப்புக்குள் அழைத்துப் போனார்.

தேங்காய் விழுந்து கொண்டிருந்த மரத்தைக் காட்டி “அங்கே பார்த்தீர்களா?” என்று கேட்டார்.



மரத்தின் மீது பெரிய குரங்கு ஒன்று ஜம்மென்று காய்களைத் திருகித் திருகிக் கீழே போட்டுக் கொண்டிருந்தது.

தேங்காய்களைப் பறித்துப் போடுவதற்கென்றே இங்கே குரங்குகளைப் பழக்கியிருக்கிறார்கள். எஜமான் உத்தரவு கிடைத்ததும் இவை மரத்தின் மீது வேகமாக ஏறிப் போய் தேங்காய்களைப் பறித்துப் போட்டபடி மரத்திற்கு மரம் தாவும். ஆட்கள் கூடவே போய் தேங்காய்களைச் சேகரித்துக் கொள்வார்கள். சில ஆட்கள் காய்களைப் பொறுக்கிக் கொண்டுபோய் பெட்டி வண்டியில் போட்டுக் கொண்டிருந்தனர்.

இங்கே நம் ஊரில் குரங்காட்டிகள் குரங்குக்குக் குங்குமம் பூசி, சட்டை போட்டு “ஆடு ராமா, ஆடு ராமா” என்று ஆட்டி வைத்துப் பணம் பண்ணுகிற மாதிரி, அங்கே “ஏறு ராமா... மரம் ஏறு ராமா” என்று மரம் ஏறித் தேங்காய் பறிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்!

பொழுது சாயும் நேரம். ஓரிடத்தில் நைட் பஜார் ஒன்று அன்றைய பரபரப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த நைட் பஜாரில் பழங்குடி மக்களின் கடைகள் நிறைய இருந்தன. சின்னச் சின்னதாய்ப் பலவகை பொருட்கள். மரத்தில் சின்னச் சின்ன யானைகள் செய்து விற்பார்கள் என்றும், விலை கேட்டால் அசல் யானை விலை சொல்வார்கள் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். பேரம் பேசி வாங்கவேண்டும் என்றார் சொம்பட் பேரம் பேச நேரம் இல்லாததால் ஓரமாகக் கடைகளைப் பார்த்துக் கொண்டே வேகமாக வந்து விட்டோம்.

மீண்டும் பணிப்பெண் உபசாரம், அட்டைப் பெட்டியில் உணவு, வாசனை டவல்...

நீண்ட நெடுந்துரப் பயணத்துக்குப் பின் விடியற்காலை பாங்காக் போய்ச் சேர்ந்தோம். அலுப்பு, களைப்பு எதுவுமே தெரியவில்லை. தலைக் கிராப்புக் கூடக் கலையவில்லை.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வரவேற்பறையில் எங்களுக்கு ஒரு செய்தி காத்திருந்தது.

“இன்று காலை பதினொரு மணிக்கு திரு மறைக்காடன் அவர்கள் தங்களைச் சந்திக்க வருகிறார்.”

மறைக்காடன் அவர்களைப் பற்றி பாங்காக்கில் தெரியாத

வர்களே இல்லை. நான் சந்தித்த எல்லாத் தமிழ்ப் பிரமுகர்களுமே முதல் கேள்வியாக ‘மறைக்காடனைப் பார்த்து விட்டீர் களா?’ என்று கேட்கத் தவறவில்லை.

ஏற்கனவே, மறைக்காடன் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திப்பு நேரம் கேட்டிருந்தோம்.

“போன் செய்துவிட்டு நானே வந்து தங்களைச் சந்திக்கிறேன்” என்று அவர் சொல்லியிருந்தார்.

அந்தச் செய்திதான் இப்போது வரவேற்பறையில் காத்திருந்தது.

மறைக்காடன் எனும் இத்தனை சுத்தமான தமிழ்ப் பெயருக்கு ஏதேனும் பின்னணி இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவர் யார் என்கிற விவரம் தெரிந்ததும் அந்தப் பெயரின் பின்னணியும் புரிந்தது.

தமிழ் மொழியோடு இணைந்து வாழ்ந்த அற்புதமான ஒரு குடும்பத்தின் வாரிசுதான் மறைக்காடன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்லாந்து/9&oldid=1058410" இலிருந்து மீள்விக்கப்பட்டது