16

அன்று மாலையில் அவள் தேநீர் பருகிக்கொண்டிருக்கும்போது வெளியே சக்தி தெறிக்க வரும் குதிரைக் குளம்புகளின் ஓசையும் அதைத் தொடர்ந்து ஒரு பழகிய குரலும் கேட்டது. அவள் துள்ளியெழுந்து கதவைத் திறப்பதற்காக சமையல் கட்டுக்குள் ஓடினாள். யாரோ வாசல் பக்கத்தில் அவசர அவசரமாக நடந்து வருவதாய்த் தெரிந்தது. அவளது கண்கள் திடீரென இருண்டன; அவள் கதவைக் காலால் தள்ளித் திறந்துவிட்டு, கதவு நிலைமீது சாய்ந்து நின்று கொண்டாள்.

‘வணக்கம் அம்மா!’ என்ற பழகிய குரல் கேட்டது; அதே சமயம் மெலிந்து நீண்ட கரங்கள் அவள் தோள்களில் மீது விழுந்தன.

அவளது இதயம் ஏமாற்றத்தால் கலங்கியது. அந்த ஏமாற்றத்தோடு அந்திரேயைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தமும் பொங்கியது. அந்த இரு உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று முயங்கி, ஒரு பேருணர்ச்சியாகத் திரண்டு அவளை மகிழ்ச்சி பரவசத்துக்கு ஆளாக்கி உந்தி எழச்செய்து, அந்திரேயின் தோள்மீது முகத்தைப் புதைத்துக் கொள்டாள். நடுநடுங்கும் கைகளோடு அவளை இறுக அணைத்துக்கொண்டான் அவன். தாய் அமைதியாக அழுதாள்; அவளது தலைமயிரைத் தடவிக் கொடுத்துக்கொண்டே சொன்னான் அவன். “அழாதீர்கள். அம்மா! வீணாக மனத்தை நோகச் செய்து கொள்ளாதீர்கள், என்னை நம்புங்கள். அவர்கள் பாவெலைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள். அவனுக்கு எதிராக அவர்களுக்கு ஒரு சாட்சியமும் கிடையாது. வெந்து போன மீனைப் போல்., எல்லோரும் ஊமையாகவே இருக்கிறார்கள்.....”

தன் கரத்தைத் தாயின் தோள்மீது வைத்தவாறே அவளை அடுத்த அறைக்குள் அழைத்துச்சென்றான்; அவனோடு ஒட்டித் தழுவிக்கொண்டாள் அவள். ஒரு அணிற்குஞ்சின் சுறுசுறுப்போடு அவள் தன் கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினாள்.

“பாவெல் உங்களுக்குத் தன் அன்பைத் தெரிவிக்கச் சொன்னான். அவன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்சாகமாகவும், நன்றாகவும் இருக்கிறாள். சிறையிலே ஒரே கூட்டம்! சுமார் நூறு பேரைக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள். நம் ஊர் ஆட்களும் இருக்கிறார்கள். நகரிலிருந்து வந்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு சொட்டடிக்கு மூன்று அல்லது நாலு பேராகப் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். சிறை அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள். இந்தப் பிசாகப் பிறவிகளான போலீஸ்காரர்கள் கொடுத்துள்ள வேலையினால் அவர்கள் இளைத்துக் களைத்து ஓய்ந்து போயிருக்கிறார்கள். அதிகாரிகள் ரொம்பக் கடுமையாக இல்லை; அவர்கள் எங்களைப் பார்த்து ‘பெரியோர்களே, அமைதியாக மட்டும் இருங்கள். வீணாய் எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்’ என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே எல்லாம் நன்றாய்த்தான் நடக்கிறது. நமது தோழர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள்; புத்தகங்களைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள், சாப்பாட்டையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். அது ஒரு நல்ல சிறைதான். ரொம்பப் பழசு. அட்டுப் பிடித்த சிறை; என்றாலும் கைதிக்கு மோசமாக இல்லை. கிரிமினல் கைதிகளும் ரொம்ப நல்லவர்கள், அவர்கள் நம்மவர்களுக்கு எவ்வளவோ உதவி செய்கிறார்கள். நானும் புகினும் இன்னும் நால்வரும் விடுதலையாகிவிட்டோம். பாவெலும் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவான் என்பது மட்டும் எனக்கு நிச்சயம்தான். நிகலாய் வெஸோவ்ஷிகோவ் தான் கடைசியாக வருவான். அவன் அவர்களிடம் தாறுமாறாக நடந்து கொள்வதால், அவன்மீது அவர்களுக்கு ஒரே கோபம். அவனைப். பார்க்கக்கூட போலீஸ்காரர்கள் பயப்படுகிறார்கள். அநேகமாக அவனைச் சீக்கிரம் விசாரணைக்குக் கொண்டு செல்வார்கள்; இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் அடித்துத் தள்ளுவார்கள்! "நிகலாய், நிறுத்து. உன் வசவுகளால் ஒரு பயனும் இல்லை” என்று பாவெல் அடிக்கடி கூறிக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் நிகலாயோ போலீசாரைப் பார்த்து “உங்களையெல்லாம் பொருக்காடிப்போன புண்ணைத் துடைக்கிற மாதிரி பூமியிலிருந்தே துடைத்துத் தீர்த்துவிடுவேன்!” என்று கத்துகிறான். பாவெல் நன்றாக நடந்துகொள்கிறான். உறுதியோடும் நிதானத்தோடும் இருக்கிறான். அவனைச் சீக்கிரம் வெளியே விட்டுவிடுவார்கள் என்பதுதான் என் எண்ணம்....

“சீக்கிரமா?” என்று அன்பு ததும்பும் புன்னகையோடு திருப்பிக் கேட்டாள் தாய்: “அவன் சீக்கிரம் வந்துவிடுவான், அது நிச்சயம்.”

“அதனால் விஷயங்கள் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கின்றன. சரி எனக்கு முதலில் ஒரு குவளைத் தேநீர் கொடுங்கள். அப்புறம், நீங்கள் எப்படிக் காலந் தள்ளினீர்கள்? சொல்லுங்கள்.”

அவன் சிரித்துக்கொண்டே, அவளை ஏற இறங்கப் பார்த்தான். அன்பும் அமைதியும் ததும்பப் பார்த்த அவனது பாசம் ஒளி வீசம் கண்களில் ஒரு கணம் சோகத்தின் சாயை படர்ந்து மறைந்தது.

“உங்கள்மேல் எனக்கு ரொம்பப் பிரியம். அந்திரியூஷா!” என்று கூறிப் பெருமூச்செறிந்தாள் தாய். மண்டி வளர்ந்திருந்த தாடிக்குள் தெரியும். அவனது மெலிந்த முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

“என்னை நீங்கள் கொஞ்சமாக நேசித்தாலும் எனக்குத் திருப்திதான்” என்று கூறிக்கொண்டே தான் அமர்ந்திருந்த நாற்காலியை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டான் அவன். “உங்களுக்கு என் மேலே பிரியம் என்பதும் எனக்குத் தெரியும். உங்கள் இதயம் பரந்தது: நீங்கள் எல்லோரையுமே நேசிக்கிறீர்கள்.”

“ஆனால் உங்களை பிரத்தியேகமாக நேசிக்கிறேன்” என்று அவள் அழுத்திக் கூறினாள். “உங்களுக்கு ஒரு தாய்மட்டும் இருந்தால், உங்களை மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்காக, எல்லோரும் அவள்மீது பொறாமை கொள்வார்கள்.” அந்த ஹஹோல் தலையை அசைத்தான்; தன் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கரகரவென்று தேய்த்து விட்டுக் காண்டான்.

“எனக்கும் எங்கோ எவ்விடத்திலோ ஒரு தாய் இருக்கத்தான் செய்கிறாள்” என்றான். அவன் குரல் தணிந்து போயிருந்தது.

“இன்றைக்கு நான் என்ன செய்தேன் தெரியுமா?” என்று தொடங்கினாள் தாய். பிறகு மிகுந்த உணர்ச்சிப் பரவசத்தோடு அன்று அவள் தொழிற்சாலைக்குள் பிரசுரங்களைக் கொண்டு சென்ற விவரத்தைக் கொஞ்சம் மூக்கும் முழியும் வைத்துச் சொல்ல முனைந்தாள். எனினும் அவளது ஆனந்தத்தாலும், ஆர்வத்தாலும் சொல்லுக்கு வளையாமல் அடிக்கடித் தடுமாறிக் குழறியது நாக்கு.

முதலில் அவன் தன் கண்களை வியப்போடு அகல விரித்தவாறே இருந்தான். பிறகு வாய்விட்டுக் கலகலவென்று சிரித்தான்.

“ஓஹோ!” என்று ஆனந்த மிகுதியினால் கத்தினான். “நீங்கள் செய்ததும் நல்ல காரியம்தான். இது விளையாட்டல்ல. பாவெல் கூடச் சந்தோஷப்படுவான், அம்மா, நீங்கள் செய்த வேலை எவ்வளவு பிரமாதம் தெரியுமா? பாவெலுக்கும் அவன் தோழர்களுக்கும் அது ரொம்ப உதவும்!”

அவளது உடம்பு முழுவதுமே முன்னும் பின்னும் அசைந்து குலுங்கியது. அவன் தன் விரல்களை முறித்துச் சொடுக்குவிட்டான்; உற்சாகத்தால் புளகாங்கிதம் அடைந்து சீட்டியடித்தான். அவனது உவகையைக் கண்ட தாய்க்கு இன்னும் பேச வேண்டும் என்ற ஆசை உந்தியெழுந்தது.

“என் அருமை அந்திரியூஷா!” என்று ஆரம்பித்தாள் அவள். அவளது இதயமே திறந்துகொண்டதுபோல், திறந்த இதயத்திலிருந்து பரிபூரண உவகையோடு முன்னிட்டுத் தெறிக்கும் வார்த்தைகள் மளமளவென்று பொழிந்து வழியப்போவதுபோலத் தோன்றியது. “நான் என் வாழ்வையே நினைத்துப் பார்த்தால்—அட, ஏசுவே! நான் எதற்காகத்தான் உயிர் வாழ்ந்தேனோ, தெரியவில்லை, ஓயாத வேலை.... பயத்தைத் தவிர வேறு எதையுமே நான் அறிந்ததில்லை. ஓயாது உதை, அடி... என் புருஷனைத் தவிர வேறு யாரையுமே நான் கண்டதில்லை! பாவெல் எப்படி வளர்ந்தான் என்பது கூட எனக்குத் தெரியாது. என் புருஷன் உயிரோடிருந்தபோது, நான் பாவெலை நேசித்தேனோ, நேசிக்கவில்லையோ என்பதும் எனக்குத் தெரியாது. என் சிந்தனைகள் என் கவலைகள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்—என்னைக் கட்டிக்கொண்ட மிருகத்துக்கு இரை போடுவதும், உடனடியாக அவன் சௌகரியத்தைக் கவனிப்பதும்தான் என் கவலை. அப்படிக் கவனிக்காது மெத்தனமாக இருந்தால் அவன் கோபங்கொண்டு என்னைப் பயமுறுத்துவானே, அடிப்பானே என்ற பயத்தால், அந்த அடிக்கு ஆளாகாமல் ஒரு நாளாவது தப்பி வாழ வேண்டுமே என்ற கவலையால் தான் நான் அப்படி வாழ்ந்தேன். ஆனால் அவன் என்னை அடிக்காத நாளே கிடையாது. அவன் என்னை அடித்து உதைக்கும்போது தன் மனைவியை அடிப்பதாக அவன் நினைத்துப் பார்ப்பதே இல்லை. யார் யாரோ மீது உள்ள கோபத்தையும் காட்டத்தையும் என்மீது காட்டித் தாக்குவான். இருபது வருஷ காலம் நான் இப்படியேதான் உயிர் வாழ்ந்தேன். என் கல்யாணத்துக்கு முன்னால் நான் எப்படியிருந்தேன் என்பதுகூட எனக்கு நினைவில்லை. என் கடந்த காலத்தைப்பற்றி நினைத்தாலே நான் குருடாகிப் போவது மாதிரி இருக்கிறது. எதுவுமே தெரிவதில்லை. இகோர் இவானவிச் இங்கே வந்திருந்தான். அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள் அவன் எதை எதைப்பற்றியெல்லாமோ பேசினான். எனக்கோ அங்குள்ள வீடுகள் ஞாபகத்துக்கு வந்தன; ஜனங்கள் நினைவுக்கு வந்தனர். ஆனால் அந்த ஜனங்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன பேசினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் என்ன ஆனார்கள்—இதெல்லாம் நினைவுக்கு வரவேயில்லை. எப்போதோ தீப்பிடித்து எளிந்த சம்பவம்—இல்லை இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. எனக்கு என்னவோ என் இதயத்தையே பூட்டிவிட்டது போல், என் ஆத்மாவுக்கே முத்திரையிட்டு இறுக மூடிவிட்டது போல் இருக்கிறது. கண்ணும் தெரியவில்லை, காதும் கேட்கவில்லை...”

கரையில் இழுத்துப் போட்ட மீனைப் போல், அவள் மூச்சுக்காக வாயைத் திறந்து திணறினாள். முன்புறமாகக் குனிந்துகொண்டு மீண்டும் அவள் தணிந்த குரலில் பேசத் தொடங்கினாள்.

“என் கணவன் இறந்தான். நானும் என் மகனைக் கவனிக்கத் தொடங்கினேன். ஆனால் அவனோ இந்த மார்க்கத்தில் ஈடுபட்டு விட்டான். எனக்கு மிகவும் சங்கடமாயிருந்தது. அவனுக்காக அனுதாபப்பட்டேன். அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், நான் எப்படி வாழ்வது என்ற கவலை எனக்கு. நான் எப்படிப் பயந்து நடுங்கினேன் தெரியுமா? அவனுக்கு என்ன நேரக்கூடும் என்று நான் நினைத்துப் பார்த்தபோது என் இதயமே வெடித்துவிட்ட மாதிரி இருந்தது....”

அவள் ஒரு கணம் மௌனமாயிருந்தாள். பிறகு மீண்டும் தலையை ஆட்டிவிட்டுப் பேசத் தொடங்கினாள்.

“பெண்களாகிய எங்கள் அன்பு பரிசுத்தமான அன்பு அல்ல. நாங்கள் எங்களுக்காகத்தான் பிறரை நேசிக்க வேண்டியிருக்கிறது. இதோ நீங்கள் இருக்கிறீர்கள். தாயை எண்ணித் துக்கப்படுகிறீர்கள். எதற்காக நீங்கள் அவளை விரும்புகிறீர்கள்? இதோ இங்கே எத்தனையோ இளைஞர்கள் சகல மக்களின் க்ஷேமத்துக்காகவும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்; சிறைக்குச் செல்கிறார்கள்; சைபீரியாவுக்குச் செல்கிறார்கள்; சாகிறார்கள்; இளம்பெண்கள் தன்னந்தனியாக வெகுதூரம் நடந்து செல்கிறார்கள். இருட்டிலே, மழையும் பனியும் கொட்டுகின்ற குளிரிலே, சேறு நிறைந்த பாதை வழியே ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கும் நடந்து செல்கிறார்கள்; அவர்களை இப்படிச் செய்யச் சொல்வது யார்? அவர்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? ஏனெனில், அவர்கள் கொண்டுள்ள அன்பு, பரிசுத்தமான தூய்மையான அன்பு அவர்களிடம் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கை ஒன்றிருக்கிறது. அந்திரியூஷா! ஆனால் எனக்கோ, அந்த மாதிரி நேசிக்க முடியவில்லை! எனக்குச் சொந்தமானவர்களையே மிகவும் நெருங்கியவர்களையே நான் நேசிக்கிறேன்!”

“நீங்களும் நேசிக்க முடியும்” என்று ஒரு புறமாகத் திரும்பிக்கொண்டு சொன்னான் ஹஹோல். அப்படிச் சொல்லும்போது வழக்கம்போலவே தன் கைகளால் தலையையும் கன்னத்தையும் கண்களையும் பரபரவென்று தேய்த்துவிட்டுக் கொண்டான்.” எல்லோரும் தம்மோடு நெருங்கியிருப்பதையே மிகவும் நேசிக்கிறார்கள்; ஆனால் ஒரு பரந்த இதயம், தனக்கு வெகுதொலைவில் உள்ள பொருள்களைக்கூட, தன்னருகே கவர்ந்திழுத்து நெருங்கச் செய்யும் சக்தி வாய்ந்தது. நீங்களும் மகத்தான காரியங்களைச் செய்ய முடியும் —ஏனெனில் உங்களிடம் மகத்தான தாய்மை அன்பு ததும்பி நிற்கிறது!”

“அப்படியே ஆகட்டும்” என்று பெருமூச்சோடு சொன்னாள் அவள். “இந்த மாதிரி வாழ்வதும் ஒரு நல்ல வாழ்வுதான் என்பதை நான் உணர்கிறேன், அந்திரேய்! நான் உங்களை நேசிக்கிறேன்; ஒரு வேளை பாவெலைவிட. உங்களை நான் அதிகம் நேசிக்கவும் செய்யலாம். அவனோ என்னிடம் திறந்துகூடப் பேசுவதில்லை, நீங்களே பாருங்கள். அவன் சாஷாவைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான். ஆனால் என்னிடம் அவன் தாயிடம், இதுவரை ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை.....”

“அது உண்மையல்ல” என்று ஆட்சேபித்தான் ஹஹோல். “அது உண்மையல்ல என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அவன் அவளைக் காதலிக்கிறான்; அவளும் அவனைக் காதலிக்கிறாள். அதுவும் உண்மைதான். ஆனால் அவர்கள் என்றுமே கல்யாணம் செய்து கொள்ளப்போவதில்லை. அவள் விரும்பலாம். ஆனால் பாவெல் விரும்பமாட்டான்.”

“அப்படியா செய்தி!” என்று; சிந்தனை வசப்பட்டவளாய்ச் சொன்னாள் தாய். அவளது துயரம் தோய்ந்த கண்கள் ஹஹோலின் முகத்தையேப் பார்த்தன; “இப்படியா இருப்பது? நீங்கள் உங்கள் சொந்த சுகத்தை எதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்....”

“பாவெல் ஒரு அபூர்வப் பிறவி” ஹஹோலின் குரல் மிருதுவாயிருந்தது. “அவன் ஒரு இரும்பு மனிதன்”.

“ஆனால். இப்போது அவன் சிறையில் இருக்கிறான்” என்று மீண்டும் சிந்தனையிழந்தவாறே பேசினாள் தாய்; அதை நினைத்தாலே பயங்கரமாயிருக்கிறது; ஆனால் முன்பிருந்தது போல் அவ்வளவு பயமில்லை. என் வாழ்க்கையும் மாறிவிட்டது; என் பயங்களும் மாறிவிட்டன. இன்றோ நான் ஒவ்வொருவருக்காகவும் பயந்து கொண்டிருக்கிறேன். இப்போது என் இதயமே புதிது. ஏனெனில் என் ஆத்மா இதயத்தின் கண்களைத் திறந்து விட்டுவிட்டது. அந்தக் கண்கள் அகலத் திறந்து பார்க்கின்றன, சோகம் கொள்கின்றன. அதே வேளையில் மகிழ்வும் கொள்கின்றன. எனக்குப் புரியாத விஷயங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. நீங்கள் கடவுளையே நம்பாமலிருப்பது எனக்குக் கசப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நீங்கள் எல்லோரும் மிகவும் நல்லவர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மக்களின் நல்வாழ்வுக்காகத் துன்ப வாழ்வு வாழ்கிறீர்கள். சத்தியத்துக்காகச் சங்கடமான வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள்; இப்போதுதான் உங்கள் சத்தியம், உங்கள் உண்மை எனக்குப் புரிகிறது. பணக்காரர்கள் என்று ஒரு வர்க்கம் இருக்கிறவரையில், சாதாரண மக்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை—மகிழ்ச்சியோ, நியாயமோ—எதுவுமே கிட்டப்போவதில்லை. இப்போதோ நான் உங்களைப் போன்ற இளைஞர்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சில சமயங்களில் இரவு நேரத்தில் எனது கடந்த காலத்தைப் பற்றி, பூட்ஸ் காலால் மிதித்து நசுக்கப்பட்ட எனது இளமையின் பலத்தைப் பற்றி, கசக்கிப் பிழியப்பட்ட எனது இளம் இதயத்தைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு; அந்த நினைவினால் எனக்கே என்மீது அனுதாபம் பிறக்கிறது; கசப்புணர்ச்சி பிறக்கிறது. ஆனால் இப்போதோ எனக்கு வாழ்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுக சிறுக நான் என்னையே உணர்ந்துவரத் தொடங்குகிறேன்....

நெட்டுவிட்டு வளர்ந்து மெலிந்திருந்த ஹஹோல் எழுந்தான், சிந்தனை வசப்பட்டு, காலடியோசையே கேட்காதவண்ணம் எழுந்து உலவத் தொடங்கினான்.

“எவ்வளவு நன்றாகச் சொன்னீர்கள்!” என்று அதிசயித்தான், எவ்வளவு தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். கேர்ச் நகரில் ஒரு வாலிப யூதன் இருந்தான். அவன் ஒரு கவி. ஒரு நாள் அவன் ஒரு பாட்டு எழுதினான்.


அறியாது கொலையுண்ட
அனைவரும். உண்மை
நெறிகொள்ளும் பலத்தாலே
உயிர் பெற்று நிற்பார்!.

“அவனையும்கூட கேர்ச் நகர போலீசார் கொன்றுவிட்டார்கள். நான் அதைச் சொல்ல வரவில்லை. அவன் உண்மையை உணர்ந்தான் அந்த உண்மையை அவன் மக்களிடம் பரப்பினான். அவன் சொன்ன மாதிரி அந்த ‘அறியாது கொலையுண்ட’ பேர்களில் நீங்களும் ஒருவர்.”

“இப்பொழுதெல்லாம் நானே பேசிக் கொள்கிறேன். அதை நானே கேட்டுக் கொள்கிறேன். என்னை நானே நம்புவதுமில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் ஒன்றே ஒன்றைப் பற்றித்தான் சிந்தித்தேன் ஒவ்வொரு நாளையும் யார் கண்ணிலும் படாமல் ஒதுக்கமாய் எப்படிக் கழிப்பது—யார் கையிலும் படாதபடி பார்த்துக்கொள்வது இதுதான் என் சிந்தனை, ஆனால் இப்போதோ என் மனதில் பிறரைப் பற்றிய சிந்தனைகளே நிரம்பி நிற்கின்றன. உங்களது கொள்கையை நான் முழுக்க முழுக்க அறியாது இருக்கலாம்; ஆனால், நீங்கள் அனைவரும் என் அன்புக்கு உரியவர்கள். உங்கள் அனைவருக்காவும் நான் வருந்துகிறேன். அனைவரின் நலத்தைப் பற்றியும் முக்கியமாக உங்கள் சுகத்தைப் பற்றி நான் மிகுந்த அக்கறை கொள்கிறேன். அந்திரியூஷா!” - அவன் அவள் பக்கம் வந்தான்.

“ரொம்ப நன்றி” என்றான் அவன். அவள் கரத்தை எடுத்து ஆர்வத்தோடு அழுத்திப் பிடித்தான். பிறகு விரைவாக விலகிச்சென்றுவிட்டான். அவள் தன் உணர்ச்சியினால் நிலை குலைந்துபோய், மிகவும் மெதுவாகவும் மௌனமாகவும் பண்ட பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள். அப்போது அவள் மனம் தன் இயதயத்தின் அமைதி நிறைந்த ஆனந்தத்தையே எண்ணியெண்ணி புளகித்துக்கொண்டிருந்தது.

ஹஹோல் அறைக்குள் மேலும் கீழும் நடந்தவாறே அவளைப் பார்த்துப் பேசினான்.

“அம்மா! நீங்கள் வெஸோல்ஷிகோவிடம் சிறிது அன்பு காட்டுங்களேன். அவனது தந்தை—அந்த உதவாக்கரையான குடிகாரமட்டை—சிறையில் இருக்கிறான்; தன் தந்தையின் முகத்தை ஜன்னலோரமாகக் கண்டாலும் போதும் உடனே நிகலாய் தன் தந்தையைச் சரமாரியாகத் திட்ட ஆரம்பிக்கிறான். அது ரொம்ப மோசமான செய்கை, நிகலாய் இயற்கையில் கருணையுள்ளம் படைத்தவன். அவன் நாய்களை, எலிகளை, சகல மிருகங்களையும் நேசிக்கிறான். அன்பு காட்டுகிறான்; ஆனால், மனிதர்கள் மட்டும் பகைத்து ஒதுக்குகிறான்; ஆமாம், மனிதன் எப்படியெல்லாம் கெட்டுப்போகிறான்?

“அவன் தாய் எங்கோ தொலைந்து போனாள். அப்பனோ குடிகாரன், திருடன்...” என்று முனகிளாள் தாய்.

அந்திரேய் படுக்கைக்குச் சென்ற பிறகு, தாய் மிகவும் ரகசியமாக அவன் பக்கம் சென்று அவன் தலைக்கு மேலாகச் சிலுவைக் குறியிட்டு விட்டு வந்து படுத்தாள். அவன் படுத்து அரைமணி நேரம் கழித்த பின்னர் அவள் அவனைப் பார்த்து மெதுவாகக் கேட்டாள்;

“தூங்கி விட்டாயா, அந்திரியூஷா?”

“இல்லையே, ஏன்?”

“நள்ளிரவு!”

“நன்றி; அம்மா, நன்றி”—என்று நன்றியுணர்ச்சியோடு சொன்னான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/16&oldid=1293057" இலிருந்து மீள்விக்கப்பட்டது