22

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தாய் கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்ததும் கதவைத் திறந்தாள்; திறந்தவுடனேயே வாசல் நடையில் அப்படியே நின்றுவிட்டாள்; வேனிற்கால மழையிலே நனைந்துவிட்டதைப் போன்ற குதூகலத்தில் முங்கித்திளைத்து தன்னிலை மறந்து அப்படியே நின்றுவிட்டாள். ஏனெனில் வீட்டினுள் பாவெலின் வலுவான குரல் கேட்டது.

"இதோ அவளும் வந்துவிட்டாளே” என்று கத்தினான் ஹஹோல், திடீரெனத் திரும்பிய பாவெலின் முகத்தில் ஏதோ ஆறுதல் தரும் உறுதிமிக்க உணர்ச்சி பிரகாசிப்பதாக அவளுக்குத் தோன்றியது.

“வந்துவிட்டான் - வீடு வந்து சேர்ந்துவிட்டான்” என்று அவள் தடுமாறிக் குழறினாள். அவனது எதிர்பாராத வரவினால் அவள் மெய்மறந்து நிலைகுழம்பிப்போய் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

அவன் தனது வெளிறிய முகத்தை அவள் பக்கமாகக்கொண்டு போனான். அவனது உதடுகள் துடித்து நடுங்கின. கண்ணின் கடையோரத்தில் ஈரம் பளபளத்துக் கசிந்தது. ஒரு கண நேரம் அவன் எதுவுமே பேசவில்லை. அவளும் அவனை மௌனமாக வெறித்துப் பார்த்தாள்.

ஹஹோல் அவர்களைவிட்டு விலகி வெளி முற்றத்துக்கு வந்து சீட்டியடிக்கத் தொடங்கினான்.

“நன்றி, அம்மா!” என்று தணிந்த குரலில் தளதளத்துக்கொண்டே தனது நடுங்கும் விரல்களால் அவளது கரத்தைப் பற்றி அழுத்தினான் பாவெல், “என் அன்பே! மிகுந்த நன்றி.”

“அவனது முகத்திலே தோன்றிய உணர்ச்சியையும், சொல்லிலே தொனித்த இனிமையையும் கண்டு புளகாங்கிதம் அடைந்து தன்னை மறந்து போன அந்தத் தாய், மகனின் தலையைத் தடவிக் கொடுத்தாள், தனது இதயத்தின் படபடப்பைச் சாந்தி செய்ய முயன்றாள்.

“அட, கடவுளே, எனக்கு எதற்காக நன்றி கூறுகிறாய்?” என்றாள் தாய்.

“எங்களது மகத்தான கருமத்தில் நீ ஒத்துழைத்ததற்காக! உனக்கு நன்றி, அம்மா!” என்று திரும்பச் சொன்னான்: “தானும் தன் தாயும் ஒரே மாதிரி உணர்ச்சிகொண்டவர்கள், ஒரே கொள்கை வசப்பட்டவர்கள் என்று ஒருவன் கூறிக்கொள்வது கிடைப்பதற்கரிய பேரானந்தம், அம்மா!”

அவள் மௌனமாக இருந்தாள் அவனது வார்த்தைகளைத் திறந்த மனத்தோடு, ஆர்வத்தோடு அள்ளிப் பருகினாள். தன் முன்னே மிகவும் நல்லவனாக, அன்புருவமாக நின்ற தன் மகனைக் கண்டு வியந்துகொண்டிருந்தாள் தாய்.

“அம்மா, உனக்கு எவ்வளவு சிரமமாயிருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏதேதோ உன் மனத்தைப் பிடித்து இழுத்தது என்பது எனக்குத் தெரியும். நீ எங்கள் கருத்துக்களோடு ஒத்துவரமாட்டாய், எங்கள் கருத்துக்கள் உன்கருத்துக்களாக என்றுமே ஆகப்போவதில்லை. என்றெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால், நீ உன் வாழ்க்கை முழுவதையும் எப்படிப் பொறுத்துச் சகித்து ஏற்றுவந்தாயோ, அது போலவே மௌனமாகப் பொறுத்துவிடுவாய் என்றுதான் நான் நினைத்தேன். அதுவே எனக்குச் சங்கடமாயிருந்தது.”

“அந்திரியூஷா எனக்கு எவ்வளவோ விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவி செய்தான்” என்றாள் அவள்.

“அவன் உன்னைப்பற்றிச் சொன்னான்” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.

“இகோரும் கூடத்தான். அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அந்திரியூஷா எனக்கு எழுதப்படிக்கக்கூடக் கற்றுக்கொடுக்க விரும்பினான்.”

“ஆனால் நீ வெட்கப்பட்டுப்போய், யாருக்கும் தெரியாமல் இரகசியத்தில் எழுதப் படிக்க முனைந்தாய். இல்லையா?”

“அதுகூட அவனுக்குத் தெரியுமா?” என்று வியந்தாள் அவள். தனது இதயத்தில் பொங்கிய ஆனந்தத்தோடு அவள் பாவெலை நோக்கிச் சொன்னாள்.

“அவனை உள்ளே கூப்பிடு நம்மிருவருக்கும் இடையில் தானும் இருக்கவேண்டாம் என்றுதான் அவன் வெளியே போனான். பாவம், அவனுக்கு என்று ஒரு தாய் இல்லை.....”

“அந்திரேய்!’ என்று வாசற்கதவைத் திறந்துகொண்டே கூப்பிட்டான் பாவெல்; “நீ எங்கே இருக்கிறாய்?”

“இங்கேதான். கொஞ்சம் விறகு தறிக்க வேண்டும்..”

“வா இங்கே!”

அவன் உடனே வந்துவிடவில்லை. சிறிது நேரம் கழித்து சமையல் கட்டுக்குள் வந்து வீட்டு விஷயங்களைப் பேசத் தொடங்கினான்:

“நிகலாயிடம் சொல்லி கொஞ்சம் விறகு கொண்டுவரச் சொல்லவேண்டும். இங்கு விறகு அதிகமில்லை. அம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.”

தாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள். அவள் இன்னும் ஆனந்தத்தில்தான் திளைத்திருந்தாள். அவளது இதயம் இன்பகரமாகத் துடித்தது என்றாலும் தன் மகனை அவனது வழக்கமான அமைதியில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வ உணர்ச்சி அவளுக்கு உந்தியெழுந்தது. எல்லாமே அவளுக்கு அதிசயமாக இருந்தது. அவளது வாழ்க்கையில் முதன்முதலாக ஏற்பட்டுள்ள இந்தப் பேரானந்தம் என்றும் எப்போதும், இன்றிருப்பது போலவே, வலிவும் வனப்பும் பெற்று நிலைத்திருக்க வேண்டும் என அவள் விரும்பினாள். அந்தப் பேரானந்தம் எங்கே கரைந்தோடிவிடப் போகிறதோ என்று பயந்து, அவள் அந்த ஆனந்தத்தை வெளியிடாமல் தன்னுள்ளேயே அடக்கிச் சிறை செய்ய முயன்றாள். அபூர்வமான பறவையொன்று எதிர்பாராதவிதமாகக் கண்ணியில் சிக்கிவிட்டால். ஒரு பறவை பிடிப்பவன் அது பறந்துபோய்விடாமல் எப்படி பிடித்து அடைப்பானோ அந்த மாதிரி இருந்தது அவளது பரபரப்பு.

“சரி, நாம் சாப்பிடலாம், நீ இன்னும் ஒன்றும் சாப்பிடவில்லையே, பாஷா?” என்று பரபரப்போடு கேட்டாள் அவள்.

“இல்லை, நேற்று சிறையதிகாரி என்னை விடுதலைபண்ணப் போகும் செய்தியைச் சொன்னார். அதிலிருந்து எனக்குச் சாப்பாடும் செல்லவில்லை; தண்ணீர்கூட இறங்கவில்லை” என்றான் பாவெல்.

“சிறையை விட்டு வெளியே வந்ததும் முதன்முதல் நான் சந்தித்தது சிஸோவைத்தான்” என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தான் பாவெல், “என்னைக் கண்டவுடன் வரவேற்றுப் பேசுவதற்காக அவன் தெருவைக் கடந்து வந்தான். நான் அவனை எச்சரிக்கையாய் இருக்கும்படி சொல்லிவைத்தேன். ‘இப்போதுதான் நான் ஒரு பயங்கர ஆசாமியாச்சே! அதிலும் போலீஸ் கண்காணிப்பிலுள்ள ஆசாமி’ ‘சரி. அந்தக் கவலை வேண்டாம்’ என்றான் அவன். அவனது மருமகனைப் பற்றி அவன் விசாரித்ததை நீ கேட்டிருக்க வேண்டும். ‘பியோதர் ஒழுங்காக இருக்கிறான் அல்லவா?’ என்று கேட்டான். ‘சிறையில் எப்படியப்பா ஒழுங்காக இருப்பது? என்றேன் நான். “சரி, அவன் தன் தோழர்களுக்கு எதிராக ஏதாவது உளறிக் கொட்டுகிறானா?” என்று கேட்டான் சிஸோவ். பியோதர் ரொம்பவும் நல்லவன், யோக்கியன், புத்திசாலி என்று நான் சொன்னேன். உடனே அவன் தன் தாடியைத் தடவிக் கொடுத்துக்கொண்டு, ‘எங்கள் குடும்பத்தில் மோசமானவர்கள் பிறப்பதில்லை!’ என்று பெருமையோடு சொல்லிக்கொண்டான்.”

“அந்தக் கிழவனுக்கும் மூளை இருக்கிறது” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.. “அவனோடு நான் எத்தனையோ முறை பேசியிருக்கிறேன். ரொம்ப நல்லவன். சரி, அவர்கள் பியோதரையும் சீக்கிரம் விடுதலை செய்யப் போகிறார்களா?”

“எல்லோரையுமே விட்டுவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கிழட்டு இஸாய் சொல்லும் சாட்சியத்தைத் தவிர, அவர்களுக்கு எதிராக எந்தச் சாட்சியமும் கிடையாது. அவன்தான் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறான்?”.

மகனின்மீது தன் பார்வையைச் செலுத்தியவாறே தாய் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தாள். அந்திரேய் தன்னிரு கைகளையும் பிடரியில் கோத்துக்கொண்டு ஜன்னலுக்கு நேராக நின்று பாவெல் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான். பாவெல் அங்குமிங்கும் உலவினான். அவனுக்குத் தாடி அதிகம் வளர்ந்து போயிருந்தது. அழகான கருமயிர்ச் சுருள்கள் கன்னம் இரண்டிலும் சுருண்டு வளர்ந்து அவனது கரிய சருமத்தை இதப்படுத்திக் காண்பித்தன.

“உட்காருங்கள்” என்று சாப்பாட்டைக் கொண்டுவந்தவாறே சொன்னாள் தாய்.

சாப்பிடும்போது அந்திரேய் பாவெலிடம் ரீபினைப்பற்றிச் சொன்னான்; அவன் பேசி முடித்ததும், பாவெல் வருத்தத்தோடு பதிலுரைத்தான்:

“நான் மட்டும் இங்கிருந்தால், அவனை நான் போகவிட்டிருக்கமாட்டேன். அவன் செல்லும்போது என்னத்தைக் கொண்டு போனான்? மனக்கசப்பையும் மனக் குழப்பத்தையும்தான் சுமந்து சென்றான்.”

“சரி, ஆனால் ஒரு மனிதன் நாற்பது வயதை எட்டிய பிறகு, அத்தனை காலமும் தன் இதயத்துக்குள்ளே வேண்டாத விஷயங்களோடு முண்டி முண்டிப் போராடிக்கொண்டிருந்த பிறகு, அவனைச் சீர்திருத்தி வழிக்குக் கொண்டுவருவது என்ன, லேசுப்பட்ட காரியமா?” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.

அவர்கள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். அந்த விவாதத்தில் வார்த்தைகள்தான் மலிந்திருந்தனவாகத் தோன்றியதே ஒழிய, அதிலிருந்து எந்த விஷயத்தையும் தாயால் கிரகித்துக்கொள்ள இயலவில்லை சாப்பாடு முடிந்தது. என்றாலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தடபுடலான வார்த்தையலங்காரத்தோடு வாதாடிக்கொண்டிருந்தார்கள். சில சமயங்களில்தான் அவர்கள் தெளிவாகவும் எளிமையாகவும் பேசினார்கள்.

“நாம் நமது கொள்கையில் ஓரடிகூடப் பின்வாங்காது நிலைத்து நின்று முன்னேற வேண்டும்” என்று உறுதியோடு சொன்னான் பாவெல்.

“ஆமாம் நம்மையெல்லாம் தங்களது எதிரிகள் என்று கருதும் பல்லாயிரங்கோடி மக்களிடையே நாம் கண் மூடித்தனமாக முன்னேற வேண்டும். இல்லையா?....”

அவர்கள் விவாதித்துக்கொள்வதைக் கேட்ட தாய்க்கு, ஒன்று, மட்டும் புரிந்தது. விவசாய மக்களால் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லையென்பது பாவெலின் கட்சி. எது உண்மை, எது நியாயம் என்பதை முஜீக்குகளுக்கும் கற்றுக்கொடுக்க முயலத்தான் வேண்டும் என்பது ஹஹோலின் கட்சி, அவளுக்கு அந்திரேயின் வாதம்தான் புரிந்தது. அவன்தான் உண்மையோடு ஒட்டி நிற்பதாக அவளுக்குத் தோன்றியது. எனவே, அவன் பாவெலிடம் பேசத்தொடங்கும் போதெல்லாம் அவள் ஆர்வத்தோடும் பாதுகாப்புணர்ச்சியோடும் அவன் பேச்சைக் கவனித்துக் கேட்டாள். ஹஹோலின் பேச்சு பாவெலைப் புண்படுத்திவிடவில்லை என்பதைத் தன் மகனது பதிலைக் கொண்டுதான் தெரிந்துகொள்ள முடியும் என்று கருதி, மகனது பதிலுக்காக மூச்சுக்கூட விடாமல் காத்திருந்து பார்த்தாள் தாய். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் விபரீதமாகவோ குற்றமாகவோ கருதாமல் காரசாரமாக இருவரும் கத்திக்கொண்டிருந்தார்கள்.

சமயங்களில் தாய் தன் மகனைப் பார்த்துச் சொல்லுவாள்:

“அப்படியா பாவெல்?”

அவனும் ஒரு சிறு புன்னகையோடு பதிலளிப்பான்:

“ஆமாம். அப்படித்தான்.”

“ஆஹா. என் அன்பே” என்று சிநேக பாவமான கிண்டலோடு பேசத் தொடங்கினான் ஹஹோல். “கனவானே, நீங்கள் வயிறுமுட்டச் சாப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நன்றாக அசைபோட்டுத்தான் தின்னவில்லை. அதனால் தொண்டைக்குழியில் ஏதோ கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது; முதலில் அதைக் கழுவித் துடைத்துவிட்டு வருக.”

“என்னை அசடாக்கப் பார்க்காதே” என்றான் பாவெல்,

“விளையாட்டில்லை அப்பனே!”

தாய் சிரித்தவாறே, தலையை ஆட்டிக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/22&oldid=1293071" இலிருந்து மீள்விக்கப்பட்டது