29

யாரோ அவளது மார்பில் ஓங்கி அறைந்தார்கள்; தனது கண்ணில் படிந்திருந்த நீர்த்திரையின் வழியாக, அவள் அந்தச் சிவந்து கனன்ற குட்டி அதிகாரியின் முகத்தைத் தன் எதிரே கண்டாள்.

“ஏ. பெண் பிள்ளை ! தூரப்போ !” என்று அவன் கத்தினான்.

அவள் அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவனது காலடியில் கொடியின் கம்பு இரண்டாக முறிந்து கிடப்பதையும் அதன் ஒரு முனையில் சிவப்புத் துணித்துண்டு கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவள் குனிந்து அதை எடுத்தாள், அந்த அதிகாரி அவளது கையிலிருந்து அதைப் பிடுங்கி, தூரப்பிடித்துத் தள்ளி, பூமியில் ஓங்கி மிதித்தவாறு சத்தமிட்டான்.:

“நான் சொல்கிறேன். போய்விடு!”

அந்தப் சிப்பாய்களின் மத்தியிலிருந்து அந்தப் பாட்டு ஒலித்தது:

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

எல்லாமே சுற்றிச் சுழன்று நடுங்கி மிதந்தன. காற்றில் தந்திக் கம்பிகளின் இரைச்சலைப் போல, ஒரு முணுமுணுப்புச் சத்தம் நிரம்பி நின்றது. அதிகாரி விடுவிடென்று ஓடினான்.

“உங்கள் பாட்டை நிறுத்துங்கள்” என்று அவன் வெறிபிடித்துக் கூவினான். “ஸார்ஜெண்ட் மேஜர் கிராய்னவ்......”

கீழே போட்ட உடைந்து போன கொடிக்கம்பை நோக்கி, தாய் தட்டுத் தடுமாறிச் சென்றாள். மீண்டும் அதைக் கையில் எடுத்தாள்.

“அவர்களது வாயை மூடித் தொலை!”

அந்தப் பாட்டுக் குரல் திமிறியது, நடுங்கியது, உடைந்தது. பின் நின்றுவிட்டது. யாரோ ஒருவன் தாயின் தோளைப் பற்றிப் பிடித்துத் திரும்பிவிட்டு முதுகில் கைகொடுத்து முன்னே நெட்டித் தள்ளிக் கத்தினான்:

“போ, போய் விடு”

“தெருவைக் காலி செய்யுங்கள்!” என்று அந்த அதிகாரி கத்தினான்.

சுமார் பத்தடிக்கு முன்னால் அவள் வேறொரு கூட்டத்தைப் பார்த்தாள். அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும். திட்டிக்கொண்டும், சீட்டியடித்துக்கொண்டும் தெருவை விட்டு விலகிச் சென்று, வீட்டு முற்றங்களில் மறைந்துகொண்டிருந்தார்கள்.

“விலகிப்போ -ஏ, பொட்டைப் பிசாசே!” என்று அந்த மீசைக்காரக் குட்டிச் சிப்பாய் தாயின் காதிலேயே சத்தமிட்டு அவளைத் தெருவோரமாகப் பிடித்துத் தள்ளினான்.

தாய் கொடிக்கம்பின் பலத்தின் மீது சாய்ந்தவாறே நடந்து சென்றாள். ஏனெனில் அவளது பலமெல்லாம் காலைவிட்டு ஒடிப்போய்விட்டது. மற்றொரு கையால் அவள் சுவர்களையும். வேலிகளையும் பிடித்துக்கொண்டு கீழே விழுந்து விடாதபடி நடந்தாள். அவளுக்கு முன்னால் நின்ற ஜனங்கள் அவள் மீது சாடிச் சாய்ந்தார்கள். அவளுக்குப் பின்னாலும், பக்கத்திலும் சிப்பாய்கள் நடந்து வந்தார்கள்.

“போங்க, சீக்கிரம் போங்கள்!”

அவள் அந்தச் சிப்பாய்கள் தன்னைக் கடந்து போக விட்டுவிட்டு நின்றாள், சுற்றுமுற்றும் பார்த்தாள். தெருக்கோடியில் மைதானத்துக்குச் செல்லும் வழியை மறித்துச் சிப்பாய்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மைதானமோ காலியாய் இருந்தது. சாம்பல் நிற உருவங்கள் அந்த ஜனங்களை நோக்கி மெதுமெதுவாக முன்னேறி வரத்தொடங்கின. அவள் திரும்பிப் போய்விட எண்ணினாள். ஆனால் தன்னையுமறியாமல் அவள் முன்னாலேயே போக நேர்ந்தது. கடைசியில் அவள் அப்படியே நடந்து நடந்து ஒரு வெறிச்சோடிப்போன குறுகிய சந்துப்பக்கமாக வந்து சேர்ந்தாள், அதனுள் நுழைந்தாள்.

மீண்டும் அவள் நின்றாள். ஆழ்ந்த பெருமூச்செறிந்தவாறே காது கொடுத்துக் கேட்டாள். எங்கிருந்தோ கூட்டத்தின் இரைச்சல் கேட்டது.

அந்தக் கம்பின் மீது சாய்ந்தவாறே, அவள் மீண்டும் நடந்தாள். அவளது உடம்பெல்லாம் வியர்த்துப் பொழிந்தது: அவளது புருவங்கள் நடுங்கின; உதடுகள் அசைந்தன; கை அசைந்தது. தீப்பொறிகளைப் போல் பளிச்சிடும் சில தொடர்பற்ற வார்த்தைகள் மனத்தில் வரவர வளர்ந்து பெருகி, ஒரு பிரம்மாண்டமான ஜோதிப் பிழம்பாக விரிந்து விம்மி, அந்த வார்த்தைகளை வெளியிட்டுச் சொல்லிக் கூக்குரலிடத் தூண்டுவது மாதிரி இருந்தது.

அந்தச் சந்து திடீரென இடதுபுறமாகத் திரும்பியது. அங்கு ஒரு கோடியில் ஜனங்கள் பெருந்திரளாக கூடி நிற்பதை அவள் கண்டாள்.

“என்னடா தம்பிகளா! துப்பாக்கிச் சனியன்களை எதிர்நோக்கிச் செல்வது என்ன, வேடிக்கையா, விளையாட்டா?” என்று பலத்த குரலில் ஒருவன் சொன்னான்.

“நீ அவர்களைப் பார்த்தாயா? அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் அவர்கள் அசையாது நின்றார்கள். மலையைப்போல் நின்றார்கள். தம்பிகள்! கொஞ்சம்கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்!”

“பாவெல் விலாசவை எண்ணிப்பார்!”

“அந்த ஹஹோலையும்தான்!’

“அவன் தன் கைகளைப் பின்னால் கோத்துக் கட்டியவாறு அப்போதும் புன்னகை செய்தான். அஞ்சாத பேய்ப் பிறவி அவன்!”

“நண்பர்களே!” என்று அவர்கள் மத்தியிலே முண்டியடித்துச் சென்று கொண்டே, தாய் கத்தினாள். ஜனங்கள் அவளுக்கு மரியாதையுடன் வழிவிட்டு ஒதுங்கினார்கள். யாரோ சிரித்தார்கள்:

“பாரடா, அவள் கொடி வைத்திருக்கிறாள்; கொடி அவள் கையில் இருக்கிறது!”

“வாயை மூடு” என்றது ஒரு கரகரத்த குரல்.

தாய் தனது கரங்களை அகல விரித்தாள்.

“கேளுங்கள்–ஆண்டவனின் பெயரால், கேளுங்கள்! நல்லவர்களான நீங்கள் எல்லாம், அன்பான நீங்கள் எல்லாம் என்ன நடந்தது என்பதைப் பயமின்றிப் பாருங்கள்! நம்முடைய சொந்தப் பிள்ளைகள், நமது ரத்தத்தின் ரத்தமான குழந்தைகள், நியாயத்தின் பேரால் இந்த உலகில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நம் அனைவருக்கும் உரிய நியாயத்துக்காக! உங்கள் அனைவரது நலத்துக்காக, உங்களது பிறவாத குழந்தைகளின் நலத்துக்காக, அவர்கள் இந்தச் சிலுவையைத் தாங்கி, ஒளிபொருந்திய எதிர்காலத்தைத் தேடிச் செல்லுகிறார்கள். அவர்கள் வேண்டுவது வேறொரு வாழ்க்கை– சத்தியமும் தர்மமும் நியாயமும் உள்ள வாழ்க்கை ! சகல மக்களுக்காகவும் அவர்கள் நன்மையை நாடுகிறார்கள்!”

அவளது இருதயம் நெஞ்சுக்குள் புடைத்து நின்றது; தொண்டை சூடேறி வறண்டது: அவளது நெஞ்சாழத்துக்குள்ளே பெரிய பெரிய, புதிய புதிய வார்த்தைகள் பிறந்தன; அந்த வார்த்தைகள்; பரிபூரண அன்பு நிறைந்த அந்த வார்த்தைகள், அவளது நாக்குக்கு வந்து அவளை மேலும் அதிகமான உணர்ச்சியோடு, மேலும் அதிகமான சுதந்திரத்தோடு பேசுமாறு நிர்ப்பந்தித்தன.

எல்லோரும் தான் கூறுவதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதை அவளால் காண முடிந்தது. அவளைச் சுற்றிலும் சகல மக்களும் நெருக்கமாகச் சூழ்ந்து, ஆவலும் சிந்தனையும் நிறைந்தவர்களாகக், குழுமி நின்றார்கள். அவனிடம் காணப்பட்ட ஆவலுணர்ச்சியானது அவளது மகனுக்குப் பின்னால், அந்திரேய்க்குப் பின்னால், சிப்பாய்களின் கையில் சிக்கிவிட்ட அத்தனைப் பேர்களுக்குப் பின்னால், நிராதரவாக விடப்பட்ட அந்த வாலிபர்களுக்குப் பின்னால் சகல மக்களும் ஓடிச்செல்ல வேண்டும் என்று தூண்டும் உணர்ச்சிதான் என்பதைத் தாய் கண்டுகொண்டாள்.

முகத்தைச் சுழித்துக் கவன சிந்தையராக நிற்கும் அவர்களது முகங்களை ஒரு முறை பார்த்துவிட்டு, அவள் அமைதி நிறைந்த பலத்தோடு மேலும் பேசத் தொடங்கினாள்:

“நமது பிள்ளைகள் இன்பத்தைத் தேடி இந்த உலகுக்குள் புகுந்துவிட்டார்கள். நம் அனைவரது நலத்துக்காக, கிறிஸ்து பெருமானின் சத்தியத்துக்காக, நம்முடைய முதுகில் அறைந்து, நமது கைகளைக் கட்டிப்போட்டு, நம்மை இறுக்கித் திணற வைத்த கொடுமையும், பொய்மையும் பேராசையும் கொண்ட பேர்களின் சகல சட்டதிட்டங்களுக்கும் எதிராக, அவர்கள் சென்றுவிட்டார்கள். அன்பான மக்களே! நம் அனைவருக்காகவும் சர்வதேசங்களுக்காகவும். உலகின் எந்தெந்த மூலையிலோ இருக்கின்ற சகல தொழிலாளர் மக்களுக்காகவும்தான் நமது இளம்பிள்ளைகள், நமது வாலிபர்கள் எழுச்சி பெற்றுச் செல்கிறார்கள். அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். அவர்களை வெறுக்காதீர்கள், உங்கள் குழந்தைகளைத் தன்னந்தனியாகச் செல்லுமாறு செய்யாதீர்கள்! நீங்கள் உங்கள் மீதே அனுதாபம் கொள்ளுங்கள். உண்மைக்குப் பிறப்பளித்து, அந்த உண்மைக்காகத் தங்கள் உயிர்களையும் இழக்கத் தயாராயிருக்கும் உங்கள் குழந்தைகளின் இதயங்களின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களை நம்புங்கள்!”

அவளது குரல் உடைபட்டுத் தடைப்பட்டது. அவள் ஆடியசைந்தாள்: மயங்கி விழும் நிலையில் தடுமாறினாள், யாரோ அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டார்கள்.

“அவள் பேசுவது ஆண்டவனின் உண்மை ; கடவுளின் சத்தியம்!” என்று யாரோ ஒருவன் உணர்ச்சி வேகத்தில் கத்தினான். “கடவுளின் சத்தியம், ஜனங்களே! அதைக் கேளுங்கள்!”

“அவள் எப்படித் தன்னைத்தானே சித்ரவதை செய்து கொள்கிறாள் என்பதைப் பாருங்கள்” என்று இன்னொருவன் பரிவோடு பேசினான்.

“அவள் தன்னைத்தானே சித்ரவதை செய்யவில்லை” என்று மற்றொருவன் பேச ஆரம்பித்தான்.” ஆனால் முட்டாள்களே! அவள் நம்மைத்தான் சித்ரவதைக்கு ஆளாக்குகிறாள். அதை நீங்கள் இன்னுமா அறியவில்லை?”

“உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள்!” என்று ஒரு பெண் நடுநடுங்கும் உரத்த குரலில் கத்தினாள்; “என் மீத்யா-அவன் ஒரு களங்கமற்ற புனித ஆத்மா! அவன் என்ன தவறைச் செய்தான்? தான் நேசிக்கும் தோழர்களைத்தானே அவன் பின்பற்றினான். அவள் சொல்வது ரொம்ப சரி. நாம் ஏன் நமது பிள்ளைகளை நிராதரவாய் நிர்க்கதியாய் விடவேண்டும்? அவர்கள் ஏதாவது தவறு செய்தார்களா?”

இந்த வார்த்தைகளைக் கேட்ட தாய் நடுநடுங்கினாள். அமைதியாக அழுதாள்.

“வீட்டுக்குப்போ, பெலகேயா நீலவ்னா!” என்றான் சிஸோவ்; “வீட்டுக்குப் போ, அம்மா, இன்று நீ மிகவும் களைத்துவிட்டாய்!”

அவனது முகம் வெளுத்து, தாடி கலைந்து போயிருந்தது. திடீரென அவன் நிமிர்ந்து நின்று சுற்றுமுற்றும் ஒரு கடுமையான பார்வை பார்த்துவிட்டு, அழுத்தமாகப் பேச ஆரம்பித்தான்:

“என் மகன் மத்வேய் எப்படித் தொழிற்சாலையிலே கொல்லப்பட்டான் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவன் மட்டும் உயிரோடிருந்தால், நானே அவனை அவர்களுக்குப் பின்னால் அனுப்பி வைப்பேன். ‘நீயும் போது, மத்வேய்! அது ஒன்றுதான் சரியான சத்திய மார்க்கம்; நேர்மையான மார்க்கம்!’ என்று நானே அவனிடம் சொல்வேன்”.

அவனும் திடீரெனப் பேச்சை நிறுத்தி அமைதியில் ஆழ்ந்தான்: எல்லோருமே ஏதோ ஒரு புதிய, பெரிய உணர்ச்சியால், அந்த உணர்ச்சியைப் பற்றிய பயத்திலிருந்து விடுபட்ட உணர்ச்சியின் பிடியில் அகப்பட்டு, மோன சமாதியில் ஆழ்ந்து போனார்கள். சிஸோவ் தன் முஷ்டியை ஆட்டிக்கொண்டு மேலும் பேசத்தொடங்கினான்:

“கிழவனான நான் பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். ஐம்பத்தி மூன்று வருஷ காலமாக நான் இந்தப் பூமியில் வாழ்கிறேன், முப்பத்தொன்பது வருஷமாக இந்தத் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன், இன்றோ அவர்கள் என் மருமகனை மீண்டும் கைது செய்தார்கள். அவன் ஒரு நல்ல பையன், புத்திசாலி. அவனும் பாவெலுக்குப் பக்கமாக, கொடிக்குப் பக்கமாக முன்னேறிச் சென்றான்...”

அவன் கையை உதறினான். பின் குறுகிப் போய் தாயின் கரத்தைப் பற்றிப் பிடித்தவாறு பேசினான்:

“இந்தப் பெண் பிள்ளை சொன்னதுதான் உண்மை. நமது குழந்தைகள் மானத்துடன் வாழ விரும்புகிறார்கள்; அறிவோடு வாழ விரும்புகிறார்கள். ஆனால் நாம்தான் அவர்களை நிராதரவாய் நிர்க்கதியாய் விட்டுவிட்டோம்! சரி வீட்டுக்குப் போ, பெலகேயா நீலவ்னா.”

“நல்லவர்களே!” என்று அழுது சிவந்த கண்களால் சுற்றிப் பார்த்துவிட்டு அவள் சொன்னாள்; “நமது குழந்தைகளுக்கு வாழ்வு உண்டு; இந்த உலகம் அவர்களுக்கே?”

“புறப்படு, பெலகேயா நீலவ்னா. இதோ, உன் கம்பு” என்று கூறிக்கொண்டே, முறிந்துபோன அந்தக் கொடிக்கம்:மை எடுத்து அவள் கையில் கொடுத்தான் சிஸோவ்.

அவர்கள் அவளை மரியாதையுடனும் துக்கத்துடனும் கவனித்தார்கள்; அனுதாபக் குரல்களில் கசமுசப்பின் மத்தியிலே அவள் அங்கிருந்து அகன்று சென்றாள். சிஸோல் அவளுக்காக, கூட்டத்தினரை விலகச் செய்து வழியுண்டாக்கினான், ஜனங்கள் ஒன்றுமே பேசாது வழிவிட்டு ஒதுங்கினர். ஏதோ ஒரு இனந்தெரியாத சக்தியினால் அவர்கள் இழுக்கப்பட்டு, அவள் பின்னாலேயே சென்றார்கள்; செல்லும்போது தணிந்த குரலில் ஏதேதோ வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

அவளது வீட்டு வாசலை அடைந்ததும் அவள் அவர்கள் பக்கமாகத் திரும்பினாள்; தன் கைத்தடியின் மீது சாய்ந்தவாறே தலை வணங்கினாள், நன்றியுணர்வு தொனிக்கும் மெதுவான குரலில் சொன்னாள்:

“உங்கள் அனைவருக்கும் நன்றி!”

அந்தப் புதிய எண்ணம், அவள் இதயம் பெற்றெடுத்ததாகத் தோன்றிய அந்தப் புதிய எண்ணம் மீண்டும் நினைவு வந்தது. எனவே அவள் சொன்னாள்.

“கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாக்குவதற்காக, ஜனங்கள் தங்கள் உயிர்களை இழக்காதிருந்தால், கிறிஸ்துவே இருந்திருக்கமாட்டார்!”

ஜனக்கூட்டம் வாய் பேசாது அவளையே பார்த்தது.

அவள் மீண்டும் ஜனக்கூட்டத்துக்குத் தலை வணங்கிவிட்டு, வீட்டுக்குள் சென்றாள். சிஸோவ் தானும் தலை வணங்கியவாறு அவளைப் பின் தொடர்ந்தான்.

சிறிது நேரம் அந்த ஜனங்கள் அங்கேயே நின்றவாறு ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.

பிறகு அவர்களும் மெதுவாகச் செல்ல ஆரம்பித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/29&oldid=1293106" இலிருந்து மீள்விக்கப்பட்டது