தாய்/41
12
மறுநாள் காலையில் ஆஸ்பத்திரியின் வெளிவாசலுக்கருகே சுமார் முப்பது நாற்பதுபேர் நின்றுகொண்டிருந்தார்கள்; தங்கள் தோழனின் சவப்பெட்டியைப் பெற்றுத் தூக்கிச் செல்வதற்காக அவர்கள் காத்து நின்றார்கள். அவர்களைச் சுற்றிலும் உளவாளிகள் திரிந்து கொண்டிருந்தார்கள். ஜனங்கள் பேசுகின்ற பேச்சையும், முகபாவங்களையும் நடவடிக்கைகளையும் அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெருவுக்கு அப்பால் எதிர்த்திசையில் ஒரு போலீஸ்படை இடைகளிலே ரிவால்வர்கள் சகிதம் நின்றுகொண்டிருந்தது. அந்த உளவாளிகளின் துணிச்சலைக் கண்டும்; போலீஸ்காரர்களின் ஏளனமான புன்னகையைக் கண்டும் ஜனங்களுக்கு ஆத்திரம் மூண்டுகொண்டு வந்தது; போலீஸ்காரர்கள் எந்த நிமிஷத்திலும் தம் சக்தியை வெளியிடத் தயாராய்த் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்களது ஆத்திரத்தைக் கேலியும் கிண்டலுமாகப் பேசி மறைக்க முயன்றார்கள். சிலர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருக்க விரும்பாமல், தங்கள் தலைகளைத்தொங்கவிட்டு, தரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தங்களது உணர்ச்சிகளை அடக்க முடியாமல், வாய்ச் சொல்லைத் தவிர எந்தவித ஆயுதமுமற்ற மக்களைக் கண்டு பயந்து நடுங்கும் அதிகாரிகளை நோக்கிக் குத்தலாகப் பேசினார்கள். மக்களது காலடியிலே காற்றினால் பறந்துவந்து விழுந்த பழுத்து வதங்கிய இலைகள் பரவிக்கிடந்த தெருவின் சாம்பல் நிறச் சரளைகளின் மீது இலையுதிர்காலத்தின் வெளிறிய நீலவானம் பளபளத்து ஒளிர்ந்தது.
தாய் கூட்டத்தினிடையே நின்று, தன்னைச் சுற்றியுள்ள பரிச்சயமான முகங்களைக் கண்டு வருத்தத்தோடு நினைத்துக் கொண்டாள்.
“நீங்கள் ஒன்றும் அதிகம்பேர் வரவில்லை. தொழிலாளர்களே ரொம்ப ரொம்பக் குறைச்சல்.....”
கதவுகள் திறந்தன, சிவப்பு நாடாக்களால் கட்டப்பெற்ற மலர் வளையங்கள் சுற்றிய சவப்பெட்டியின் மேற்பகுதியைச் சிலபேர் வெளியே கொண்டுவந்தார்கள். குழுமி நின்ற ஜனங்கள் உடனே தங்கள் தொப்பிகளை அகற்றி அதற்கு மரியாதை செலுத்தினார்கள்; அவர்கள் செய்த இந்தச் செய்கை ஒரு பறவைக்கூட்டம் திடீரென கணத்தில் சிறகை விரித்துப் பறக்கத் தொடங்குவதுபோலத் தோன்றியது. சிலந்த முகத்தில் கறுத்த பெரிய மீசைகொண்ட ஒரு நெட்டையான போலீஸ் அதிகாரி விறுவிறென்று கூட்டத்தினரை நோக்கி நடந்துவந்தான். அவனுக்குப் பின்னால் ஜனங்களைப் பிளந்து தள்ளிக்கொண்டும், தங்களது பூட்ஸ் கால்களை ஓங்கி மிதித்துக்கொண்டும் சிப்பாய்கள் சிலர் வந்தார்கள்.
“அந்த நாடாக்களைத் தூர எடு!” - என்று கரகரத்த குரலில் உத்தரவிட்டான் அந்த அதிகாரி.
ஆணும் பெண்ணும் அவளைச் சுற்றி நெருங்கிச் சூழ்ந்தார்கள், ஆத்திரத்தோடு பேசினார்கள்: தங்கள் கைகளை அசைத்து வீசி ஒருவரையொருவர் முண்டியடித்து முன்னேறினார்கள். தாயிள் கண் முன்னால் உணர்ச்சிவசப்பட்டு வெளுத்துப்போன முகங்களும் துடிதுடிக்கும் உதடுகளும் பிரகாசித்தன, ஒரு பெண்ணின் கன்னங்களில் அவமானத்தால் ஏற்பட்ட கண்ணீர் பொங்கி வழிந்து உருண்டோடியது.
“அடக்குமுறை ஒழிக!” என்று ஒரு இளங்குரல் கோஷமிட்டது. எனினும் அந்தக் கோஷம் அங்கு நடந்துகொண்டிருந்த வாக்குவாதத்தில் அமிழ்ந்து அடங்கிவிட்டது.
தாயின் உள்ளத்தில் சுருக்கென்று வேதனை தோன்றியது. அவள் தனக்கு அடுத்தாற்போல் நின்றுகொண்டிருந்த எளிய உடைதரித்த இளைஞனைப் பார்த்தாள்."சவச் சடங்கைக்கூட தோழர்களின் இஷ்டம்போல் நடத்துவதற்கு விடமாட்டேனென்கிறார்கள்” என்று அவள் ஆக்ரோஷத்தோடு சொன்னாள். “இது ஓர் அவமானம்!”
வெறுப்புணர்ச்சி மேலோங்கியது. ஜனங்களது தலைகளுக்கு மேலாகச் சவப்பெட்டியின் மூடி அசைந்தது; அதிலுள்ள சிவப்பு நாடாக்கள், காற்றில் அசைந்தாடின. அந்தப் பட்டுநாடாக்கள் ஜனத்திரளுக்கு மேலாகப் படபடத்து ஒலித்தன.
போலீசாருக்கும் ஜனக்கூட்டத்துக்கும் கலவரம் ஏற்படக்கூடும் என்ற பயம் தாயின் மனத்தில் ஏற்பட்டது. எனவே அவள் ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டே அங்குமிங்கும் விறுவிறென நடந்து திரிந்தாள்.
“அவர்கள் அப்படி விரும்பினால் அவர்கள் இஷ்டப்படியே நடந்து தொலையட்டுமே! வேண்டுமானால், அவர்கள் அந்த நாடாக்களை எடுத்துக்கொள்ளட்டுமே! நாம்தான் கொஞ்சம் விட்டுக்கொடுப்போமே!”
யாரோ ஒருவனின் கூர்மையும் பலமும் கொண்ட குரல் அங்கு நிலவிய சப்தத்தை விழுங்கி மேலோங்கி ஒலித்தது:
“எங்களது தோழனை, உங்களது சித்திரவதையால் உயிர் நீத்த எங்களது தோழனை கல்லறைக்கு வழியனுப்பி வைக்கும் எங்கள் உரிமையைத்தான் நாங்கள் கோருகிறோம்......”
ஓர் உரத்த பாட்டுக்குரல் ஒலிக்க ஆரம்பித்தது:
இணையும் ஈடும் இல்லாத
இந்தப் போரில் நீங்களெல்லாம்
பணயம் வைத்தே உம்முயிரைப்
பலியாய்க் கொடுத்தீர் கொடுத்தீரே!.
“நாடாக்களை எடு! அவற்றை வெட்டித்தள்ளு, யாகவ்லெவ்!”
உருவிய வாள்வீச்சு ஒலித்து இரைந்தது. கூச்சல்களை எதிர்பார்த்து தாய் தன் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் ஜனங்களோ முணுமுணுக்கத்தான் செய்தார்கள்; சீற்றங்கொண்ட ஓநாய்களைப்போல் உறுமினார்கள். பிறகு அவர்கள் மௌனமாகத் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டவாறே விலகி நடந்தார்கள். அவர்களது காலடியோசை தெரு முழுதும் நிரம்பி ஒலித்தது.
அலங்கோலமாக்கப்பட்ட சவப்பெட்டியின் மேலிருந்து கசங்கிப்போன பூமாலைகள் ஜனக்கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக உதிர்ந்து மிதந்தன. அவர்களுக்குப் பக்கத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள் பாராக் கொடுத்து உலாவிக்கொண்டிருந்தார்கள். தாய் நடைபாதை வழியாக நடந்து வந்தாள். அவளால் இப்போது சவப்பெட்டியைக்கூடக் காண முடியலில்லை. அந்தச் சவப்பெட்டியைச் சுற்றிலும் தெரு முழுவதுமே முன்னும் பின்னும் ஜனத்திரள் பெருகி வந்தது. சாம்பல் நிறம் படைத்த குதிரைப் போலீஸ்காரர்கள் பின்புறத்திலும் வந்துகொண்டிருந்தார்கள், ஆனால் அதே சமயம் இருமருங்கும் போலீஸ்காரர்கள் தங்களது உடைவாளின் கைப்பிடியில் கைகளைப் போட்டவாறே நடந்து வந்துகொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் துப்பறிபவர்களின் கூரிய கண்கள் ஜனங்களின் முகங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே வருவதைத் தாய் கண்டாள்.
சென்று வாராய், தோழனே!
சென்று வாராய், தோழனே!
என்று இருசோகக் குரல்கள் பாடின.
“பாட்டில்லாமலே போகலாம்” என்று யாரோ கத்தினார்கள், “பெரியோர்களே, நாம் மௌனமாகவே செல்வோம்.”
அந்தக் குரலில் ஏதோ ஓர் உறுதியும் அழுத்தமும் இருந்தது. அந்தச் சோக கீதம் திடீரென்று நின்றது; பேச்சுக்குரல் அடங்கியது. சரளைக் கற்கள் பாவிய தெருவில் ஒரே கதியில் செல்லும் மங்கிய காலடியோசை மட்டுமே கேட்டது. இந்த ஓசை ஜனங்களுக்கு மேலாக எழுந்து நிர்மலமான வானமண்டலத்தில் மிதந்து. எங்கோ தூரத்தொலைவில் பெய்யும் புயல் மழையின் இடியோசையைப் போல், காற்றை நடுக்கி உலுக்கியது. ஒரு பலத்த குளிர்காற்று உரத்து வீசி. தெருப்புழுதியையும் குப்பை கூளங்களையும் வாரியள்ளி ஜனங்களின் மீது எரிச்சலோடு வீசியெறிந்தது. அவர்களது தலைமீதும், சட்டை துணிமணிகள் மீதும் வீசியடித்து கண்களை இறுக மூடச்செய்தது. மார்பில் ஓங்கியறைந்தது; காலைச்சுற்றி வளைத்து வீசியது.....
அந்த மௌன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. அந்த ஊர்வலமும், ஊர்வலத்தில் தோன்றிய சிந்தனை தோய்ந்த முகங்களும், நெரிந்த நெற்றிகளும் தாயின் உள்ளத்தில் பயங்கர உணர்ச்சியை நிரப்பின. மெது மெதுவாகப் பல சிந்தனைகள் அவள் மனத்தில் வட்டமிட்டன. அந்தச் சிந்தனைகளை அவள் சோகம் தோய்ந்த வார்த்தைகளால் பொதிந்து தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
“உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை....”
அவள் குனிந்த தலையோடு நடந்து சென்றாள். அவர்கள் இகோரைப் புதைக்கச் செல்வதாகவே அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் தனக்கு மிகவும் அத்தியாவசியமான அருமையான நெருங்கிய ஏதோ ஒன்றைத்தான் அவர்கள் புதைக்கப் போவதாக அவளுக்குப்பட்டது. அவன் நிராதரவான உணர்ச்சிக்கு ஆளானாள்; அந்தக் காரியத்துக்கு, தான் அன்னியமாகப் போனது மாதிரி உணர்ந்தாள். இகோரை வழியனுப்பும் இந்த மனிதர்களுடன் ஒத்துப்போகாத ஒரு சமனமற்ற கவலையுணர்ச்சி அவள் இதயத்தில் திரம்பி நின்றது.
“உண்மைதான், இகோர் கடவுள் இருப்பதாக நம்பியதில்லை; இந்த மனிதர்களும்தான் நம்பவில்லை.....” என்று அவன் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.
அந்த எண்ணத்தையே மேலும் மேலும் தொடர விரும்பவில்லை. தனது இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் பெரும் பார உணர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு முயன்றவாறே அவள் பெருமூச்செறிந்தாள்.
“கடவுளே! அருமை ஏசுநாதரே! நானும் கூடவா இப்படி இருப்பேன்......”
அவர்கள் இடுகாட்டை அடைந்தார்கள். சமாதிகளுக்கு மத்தியில் செல்லும் ஒடுங்கிய நடைபாதைகளைச் சுற்றி வளைத்து நடந்து, கடைசியாக, சிறு வெள்ளைநிறச் சிலுவைகளாகக் காணப்படும் ஒரு பரந்த வெட்ட வெளிக்கு வந்து சேர்ந்தார்கள். சவக்குழியைச் சுற்றி அவர்கள் மௌனமாகவே குழுமினார்கள், சமாதிகளுக்கு மத்தியில் வந்துசேர்ந்த அந்த உயிருள்ள மனிதர்களின் ஆழ்ந்த மௌனம், வெகு பயங்கரமாக தோன்றியது. இந்தப் பயங்கரச் சூழ்நிலை தாயின் இதயத்தை நடுக்கியது. அந்தச் சிலுவைகளுக்கு ஊடாகக் காற்று ஊளையிட்டு, இரைந்து வீசிற்று; சவப்பெட்டியின் மீது கிடந்த கசங்கிய மலர்களை உலைத்தெறிந்தது.
போலீஸ்காரர்கள் அணிவகுத்து நின்று தங்கள் தலைவனையே பார்த்தவாறு நின்றார்கள். கரிய புருவங்களும், நீளமான தலைமயிரும், நெடிய தோற்றமும்கொண்ட ஒரு வெளிறிய வாவிபன் சவக்குழியின் தலைமாட்டருகே போய் நின்றான். அதே சமயத்தில் அந்தப் போலீஸ் அதிகாரியின் முரட்டுக் குரல் சத்தமிட்டது!
“பெரியோர்களே.....”
“தோழர்களே!” என்று அந்தக் கரிய புருவமுடைய இளைஞன் தெளிந்த உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.
“ஒரு நிமிஷம்” என்றான் அதிகாரி, “இங்கு நீங்கள் எந்தவிதமான பிரசங்கமும் செய்ய நான் அனுமதிக்க முடியாது. எனவே உங்களை எச்சரிக்கிறேன்.”
"நான் ஒரு சில வார்த்தைகள் மாத்திரம் கூறிமுடித்துவிடுகிறேன்” என்று அந்த இளைஞன் அமைதியாகச் சொன்னான். பிறகு பேசத் தொடங்கினான்: “தோழர்களே! நம்முடைய நண்பனும் நல்லாசிரியனுமாக விளங்கிய இந்தத் தோழனின் சமாதியருகே நாம் ஒரு பிரதிக்ஞை செய்வோம். அவனது கொள்கைகளை நாம் என்றும் மறக்கமாட்டோம். நாம் அனைவரும், நம்மில் ஒவ்வொருவரும் நமது தாய்நாட்டின் சீர்கேட்டுக்கெல்லாம் மூலகாரணமான இந்தத் தீமையை, இந்த அடக்குமுறை ஆட்சியை, ஏதேச்சாதிகார ஆட்சியை சவக்குழி தோண்டிப் புதைப்பதற்கே நமது ஆயுட்காலம் முழுவதும் என்றென்றும் இடையறாது, போராடிப் பாடுபடுவோம்!”
“அவனைக் கைது செய்!” என்று அதிகாரி கத்தினான்; ஆனால் அவனது குரல் அப்போது எழுந்த கோக்ஷப் பேரொலியில் முங்கி முழுகிவிட்டது.
“ஏதேச்சதிகாரம் அடியோடு ஒழிக!”
போலீஸ்காரர்கள் ஜனக்கூட்டத்தைப் பிளந்துகொண்டு அந்தப் பிரசங்கியை நோக்கிச் சென்றார்கள். அவனோ தன்னைச் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி நின்று தனக்குப் பாதுகாப்பளித்துக்கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்துக்கு மத்தியிலிருந்து கைகளை வீசி ஆட்டிக் கோஷமிட்டான்.
“சுதந்திரம் நீடூழி வாழ்க!”
தாய் ஒரு புறமாக நெருக்கித் தள்ளப்பட்டாள். அவள் பயத்தால் ஒரு சிலுவையின் மீது போய்ச் சாய்ந்து ஏதோ ஓர் அடியை எதிர்நோக்கி கண்களை மூடி நின்றாள். குழம்பிப்போன குரலோசை அவளது காதுகளைச் செவிடுபடச் செய்தது. பூமியே அவளது காலடியை விட்டு அகன்று செல்வதாக ஒரு பிரமை. பயத்தினால் அவளுக்கு மூச்செடுக்கவே முடியாமல் திக்கு முக்காடியது. போலீஸ் விசிலின் சப்தம் ஆபத்தை அறிவித்து ஒலித்தது: முரட்டுக் குரல்கள் உத்தரவு போட்டன; பெண்களின் கூச்சல் பீதியடித்துக் கதறின; வேலிக் கம்பிகள் முறிந்து துண்டாயின, கனத்த பூட்ஸ்காலடிகள் வறண்ட பூமியில் ஓங்கியறைந்து ஒலித்தன. இந்தக் களேபரம் அதிக நேரம் நீடித்தது; எனவே அவள் இந்தப் பயபீதியால் அஞ்சி நடுங்கிப்போய் கண்களை மூடியவாறே அதிக நேரம் நின்றுகொண்டிருக்க இயலவில்லை.
அவள் ஏறிட்டுப் பார்த்தாள்; கூச்சலிட்டுக்கொண்டும் தன் கைகளை முன்னே நீட்டிக்கொண்டும் பாய்ந்து ஓடினாள். கொஞ்ச தூரத்தில், சமாதிக் குழிகளுக்கு இடையேயுள்ள குறுகிய சந்தில், போலீசார் அந்த நீண்டகேசமுடைய இளைஞனைச் சுற்றி வளைத்துக்கொண்டு நின்றார்கள். அவனைக் காப்பாற்றுவதற்காக நாலாபுறத்திலிருந்தும் சாடி முன்னேறி வரும் ஜனங்களை அடித்து விரட்டிக்கொண்டிருந்தார்கள். உரிய வாள்கள் மனிதத் தலைகளுக்கு மேலாகப் பளபளத்து மின்னி, திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் குதித்துப் பாய்ந்தன. ஒடிந்த வேலிக் கம்பிகளும், கம்புகளும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கூச்சலிடும் ஜனங்கள் வெளுத்த முகமுடைய அந்த இளைஞனைச் சுற்றிலும் வெறியாட்டம் ஆடிக்கொண்டு குமைந்து கூடினார்கள். இந்த வெறியுணர்ச்சிக் களேபரப்புயலுக்கு மத்தியில் அந்த இளைஞனது பலம் வாய்ந்த குரல் ஓங்கி ஒலித்தது:
“தோழர்களே! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள்?”
அவனது வார்த்தைகள் தெளிவு தருவனவாக ஒலித்தன. “ஜனங்கள் தங்கள் கைகளிலிருந்த கழிகளையும் கம்புகளையும் விட்டெறிந்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் தாயோ ஏதோ ஒரு தடுக்க முடியாத சக்தியால் தூண்டப்பெற்று முன்னோக்கி முண்டிச் சென்றுகொண்டிருந்தாள். பின்னால் சரிந்துபோன தொப்பியோடு நிகலாய் இவானவிச் அந்த வெறிகொண்ட ஜனக்கூட்டத்தை விலக்கித் தள்ளிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா? அமைதியாயிருங்கள்!” என்று கத்தினான் அவன்.
அவனது ஒரு கை செக்கச் சிவந்து காணப்படுவதாகத் தாய்க்குத் தோன்றியது.
‘நிகலாய் இவானவிச் இங்கிருந்து போய்விடுங்கள்” என்று அவனை நோக்கி ஓடிக்கொண்டே கத்தினாள் தாய்.
“நீங்கள் எங்கே போகிறீர்கள்? அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்!”
அவளது தோள்மீது ஒரு கரம் விழுந்தது திரும்பினாள்; அவளுக்கு அடுத்தாற்போல் தலையிலே தொப்பியற்றுக் கலைந்துபோன தலைமயிரோடு சேர்பியர் நின்றுகொண்டிருந்தாள்; அவள் ஒரு பையனைத் தன் கையில் பிடித்துக்கொண்டு நின்றாள், அந்தப் பையன் இன்னும் வாலிப வயதை எட்டிப்பிடிக்காத, பால்மணம் மாறாதவனாயிருந்தான், அவன் தன் முகத்திலுள்ள ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, துடி துடிக்கும் உதடுகளால் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
“என்னைப் போகவிடுங்கள்...... எனக்கு ஒன்றுமில்லை......”
“இவனைப் பார்த்துக்கொள்ளுங்கள், நம் வீட்டுக்குக் கொண்டு போங்கள். இதோ கைக்குட்டை; அவன் முகத்தில் ஒரு கட்டுப்போடுங்கள்” என்று படபடத்துக் கூறினாள் சோபியா. பிறகு அவள் அந்தப் பையனின் கையைத் தாயின் கையில் பிடித்து ஒப்படைத்துவிட்டு ஓடினாள். ஓடும்போதே சொன்னாள்:
“சீக்கிரமாகப் போய்விடுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களைக் கைது செய்துவிடுவார்கள்!”
இடுகாட்டின் நாலாபுறங்களிலும் ஜனங்கள். சிதறியடித்து ஓடினார்கள்; போலீஸ்காரர்கள் சமாதி மேடுகளின் மேலெல்லாம் ஏறிக் குதித்து ஓடினார்கள். அவர்களது நீண்ட சாம்பல் நிறச்சட்டைகள் முழங்கால்வரையிலும் தொங்கி, முட்டிக் கால்களைத் தட்டின; அவர்கள் தங்கள் வாள்களைச் சுழற்றிக் கொண்டும், வாய்க்கு வந்தபடி சத்தமிட்டுக்கொண்டும் தாவித் தாவிப் பின் தொடர்ந்தார்கள். அந்தப் பையன் அவர்களை உர்ரென்று முறைத்துப் பார்த்தான்.
“சீக்கிரம், சீக்கிரம், புறப்படு” என்று அவனது முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே கத்தினாள் தாய்.
“என்னைப்பற்றிக் கவலைப்படாதே இது ஒன்றும் வலிக்கவில்லை” என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் வாயிலிருந்த ரத்தத்தைக் கக்கினான். “அவன் வாளின் கைப்பிடியால் என்னை ஓர் அடிகொடுத்தான். ஆனால் பதிலுக்கு என்னிடம் அவனும் வாங்கிக் கட்டிக்கொண்டான். நான் ஒரு கழியினால் அவனை ஒரு விளாசு விளாசினேன்; பயல் கதறி ஊளையிட்டான். நீங்கள் கொஞ்சம் பொறுங்கள்", என்று அவன் தனது ரத்தம் தோய்ந்த முஷ்டியை உலுக்கியாட்டிக்கொண்டே கத்தினான். “வரப்போகிற சண்டையை நினைத்துப் பார்த்தால், இது என்ன பிரமாதம்? நாங்கள் - தொழிலாளர்களாகிய நாங்கள் அனைவரும் கிளர்ந்தெழும்போது, உங்களையெல்லாம் - சண்டை போடாமலே துடைத்துத் தூர்த்துவிடுகிறோம்!”
“புறப்படு சீக்கிரம்!” என்று அவனை அவசரப்படுத்திக்கொண்டே இடுகாட்டின் வேலிப்புறமாகவுள்ள சிறு வாசலை நோக்கி நடந்தாள் தாய். வெளியேயுள்ள பரந்த வயல்வெளியில் போலீஸ்காரர்கள் பதுங்கிக் காத்திருந்து, ஜனங்கள் இடுகாட்டைவிட்டு வெளியே வந்ததும், பாய்ந்து தாக்குவதற்குத் தயாராக இருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அவள் அந்த வாசலுக்கு வந்ததும், ரொம்பவும் ஜாக்கிரதையோடு இலையுதிர் காலத்தின் இருள் போர்வை போர்த்திருந்தவெளியைப் பார்த்தாள். அங்கு யாரையும் காணோம்; மௌனமே நிலலியது. அவளுக்குத் தைரியம் வந்தது.
“சரி, இப்படி வா. முகத்தில் ஒரு கட்டுப்போடுகிறேன்” என்று சொன்னாள் தாய்.
“அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்—இதைக் கண்டு நான் ஒன்றும் வெட்கப்படவில்லை” என்றான் அவன். “இது ஒரு சரியான நேர்மையான சண்டை அவன் என்னை அடித்தான்; பதிலுக்கு நானும் அவனை அடித்துவிட்டேன்!”
ஆனால் தாய் விறுவிறென்று அவனது முகத்திலிருந்த காயத்துக்குக் கட்டுப்போட்டாள். ரத்தத்தைக் கண்ணால் கண்டதும் அவள் மனத்தில் ஓர் அனுதாப உனர்ச்சி ஏற்பட்டது. அவளது கைவிரல்கள் வெதுவெதுப்பான அந்தச் செங்குருதியின் பிசுபிசுப்பை உணர்ந்தபோது, அவளது உடம்பெல்லாம் ஒரு குளிர்நடுக்கம் பரவிச் சிலிர்த்தோடியது. அவசர அவசரமாக, வாயே பேசாமல் அவள் அந்தச் சிறுவனை வயல் வெளியின் குறுக்காக இழுத்துக்கொண்டு ஓடினாள்.
“தோழரே, என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று தன் வாயின் மீது போட்டிருந்த கட்டை அவிழ்த்துக்கொண்டே கிண்டலாகக் கேட்டான். அவன். “உங்கள் உதவியில்லாமலே, நான் போய்விடுவேனே.”
ஆனால் அவனது கரங்கள் நடுநடுங்குவதையும், கால்கள் பலமிழந்து தடுமாறுவதையும் அவள் கண்டாள். பலமற்ற மெல்லிய குரலில் அவன் பேசிக்கொண்டும் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விரைவாக வந்தான்; தான் கேட்கும் கேள்விகளின் பதிலுக்காகக்கூட அவன் காத்திராமல் பேசினான்:
“நீங்கள் யார்? நான் ஒரு தகரத் தொழிலாளி. என் பேர் இவான். இகோர் இவானவிச்சின் கல்விக்குழாத்தில் நாங்கள் மூன்றுபேர் இருந்தோம். மூன்று பேரும் தகரத் தொழிலாளிகள்; ஆனால் நாங்கள் மொத்தத்தில் பதினோருபேர். எங்களுக்கு அவர்மீது ஒரே பிரியம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் - எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட.....”
ஒரு தெருவுக்கு வந்ததும் தாய் ஒரு வண்டியை வாட்கைக்கு அமர்த்தினாள். இவானை அதில் ஏற்றி உட்காரவைத்தவுடன் அவள்: “இனிமேல் ஒன்றும் பேசாதே” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் கைக்குட்டையால் அவனது வாயில் ஒரு கட்டுப்போட்டாள்.
அவன் தன் கையைத் தன் முகத்துக்குக் கொண்டுபோனான். அந்தக் கட்டை அலைத்து அவிழ்க்கச் சக்தியற்று மீண்டும் தன் கையை மடிமீது நழுவவிட்டான். இருந்தாலும் அந்தக் கட்டோடேயே அவன் முணுமுணுத்துப் பேசத் தொடங்கினான்:
“அருமைப் பயல்களா, இதை மட்டும் நான் மறந்துவிடுவேன் என்று நினைக்காதீர்கள்..... முன்னால் தித்தோவிச் என்ற ஒரு மாணவர் எங்களுக்கு வகுப்பு நடத்தினார்.... அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிப் பாடம் சொன்னார்.... பிறகு அவர்கள் அவரையும் கைது செய்துவிட்டார்கள்......”
தாய் இவானைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு, அவனது தலையை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். திடீரென அந்தப் பையன் கிறங்கி விழுந்து மௌனமாகிக்கிடந்தான். பயபீதியால் செய்வது இன்னதென்று அறியாமல் திகைத்தாள் தாய். ஒவ்வொரு பக்கத்திலும் பார்த்துக்கொண்டாள். எங்கோ ஒரு மூலையிலிருந்து கிளம்பி, போலீஸ்காரர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாக அவளுக்குத் தோன்றியது. அவர்கள் ஓடோடியும் வந்து, இவானின் கட்டுப்போட்ட தலையைப் பிடித்து இழுத்துப்போட்டு அவனைக் கொல்லப் போவதாகத் தோன்றியது.
“குடித்திருக்கிறானா?” என்று வண்டிக்காரன் தன் இடத்தைவிட்டுத் திரும்பி புன்னகை செய்துகொண்டே கேட்டான்.
“ரொம்ப ரொம்பக் குடித்துவிட்டான்!” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.
“இது யார் உங்கள் மகனா?”
“ஆமாம். ஒரு செருப்புத் தொழிலாளி, நான் ஒரு சமையற்காரி.”
“கஷ்டமான வாழ்க்கைதான், இல்லையா?”
அவன் தன் சாட்டையை ஒரு சுண்டுச் சுண்டி வாங்கினான். மீண்டும் அந்த வண்டிக்காரன் திரும்பவும் பேசினான்:
“கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இடுகாட்டில் நடந்த கலவரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டீர்களா? அவர்கள் யாரோ ஓர் அரசியல்வாதியை, அதிகாரிகளுக்கு எதிராக வேலை செய்த ஓர் அரசியல்வாதியைப் புதைக்கச் சென்றார்கள் போலிருக்கிறது. அங்கு அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சண்டை. அந்த அரசியல்வாதியைச் சேர்ந்த நண்பர்கள்தாம் அவனைப் புதைக்கப் போனார்களாம். அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள், ‘மக்களை ஏழைகளாக்கும் அதிகாரிகள் ஒழிக’ என்று அவர்கள் கத்தினார்களாம். உடனே போவீஸார் வந்து, அவர்களை அடிக்கத் தொடங்கினார்களாம். சிலர் படுகாயம் அடைந்ததாகக் கூடச்சொல்லிக்கொள்கிறார்கள், போலீஸ்காரர்களுக்கும் அடி விழுந்ததாம்!” அவன் ஒரு கணநேரம் மௌனமாயிருந்தான். பிறகு விசித்திரமான குரலில், வருத்தத்துடன் தலையை ஆட்டிக்கொண்டே பேசத்தொடங்கினான். “செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!”
வண்டிச் சரளைக் கற்களில் ஏறி விழும்போது, இவானின் தலை தாயின் மார்போடு மெதுவாக மோதிக்கொண்டது. வண்டிக்காரன் பெட்டியில் பாதி திரும்பியவாறு உட்கார்ந்து ஏதேதோ பேசி வந்தான்:
“ஜனங்களுக்குப் பொறுமையின்மை ஏற்பட்டுவிட்டது. உலகில் எங்கு பார்த்தாலும் ஒரே களேபரம்தான் தலைதூக்கி வருகிறது. நேற்று ராத்திரி என் அடுத்த வீட்டுக்காரன் வீட்டுக்குப் போலீஸார் வந்து; விடியும்வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் சோதனை போட்டார்கள். அப்புறம் ஒரு கொல்லுலைத் தொழிலாளியைத் தங்களோடு கொண்டுபோய்விட்டார்கள். அவனை இரவு வேளையிலே ஆற்றங்கரைக்குக் கொண்டுபோய் நீரில் அமுக்கிக் கொன்றுவிடுவார்கள் என்று ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள், அந்தக் கொல்லன் ரொம்ப நல்லவன்.”
“அவன் பேர் என்ன?” என்று கேட்டாள் தாய்.
“அந்த கொல்லன் பேரா? சவேல். சவேல் எல்சென்கோ, சிறு வயசுதான். இருந்தாலும். அவனுக்கு நிறைய விஷயம் தெரியும்.. விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே இங்கே அனுமதி கிடையாது என்றுதான் தோன்றுகிறது. அவன் எங்களிடம் வந்து பேசுவான்: ‘வண்டிக்காரர்களே! உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது?’ என்பான். ‘உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் வாழ்க்கை நாயினும் கேடான வாழ்க்கைதான்’ என்று நாங்கள் சொல்லுவோம்.”
“நிறுத்து” என்றாள் தாய்
வண்டி நின்றதால் ஏற்பட்ட குலுங்கலில் இவான் விழித்துக்கொண்டு லேசாக முனகினான்.
“விழித்துக்கொண்டானா?” என்றான் வண்டிக்காரன்; “தம்பி, ஓட்கா வேணுமா, ஓட்கா!”
மிகுந்த சிரமத்தோடு இவான் நடந்துகொண்டே, தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தாயை நோக்கிச் சொன்னான்.
“பரவாயில்லை. என்னால் முடியும்.”