தாய்/5
தூரத்து உறவினர்களாக, நெருங்கியவர்களாக மீண்டும் அவர்கள் இருவரும் தங்கள் மோன வாழ்க்கையையே நடத்திவந்தார்கள்.
வாரத்தின் இடையில் வந்த ஒரு விழா நாளன்று, பாவெல் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் சமயத்தில் தாயிடம் சொன்னான்.
“சனிக்கிழமையன்று நகரிலிருந்து சிலர் என்னைப் பார்க்க வருவார்கள்” என்றான்.
“நகரிலிருந்தா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுத் திடீரென அவள் தேம்பினாள்.
“எதற்கென்று அழறே?” என்று பதறிப்போய்க் கேட்டான் பாவெல்.
ஆடையால் அவள் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“தெரியாது. சும்மா.......”
“பயமா இருக்கா?”
“ஆமாம்” என்று அவள் ஒப்புக்கொண்டாள்.
அவளருகே குனிந்து அவளது தந்தை பேசுகிற மாதிரி கரகரத்த குரலில் அவன் சொன்னான்.
“பயம்தானம்மா நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது. நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே, அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறார்கள். மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.”
“கோபப்பட்டுக் கொள்ளாதே” என்று உவகையற்றுப் புலம்பினாள் அவள். “நான் எப்படிப் பயப்படாமல் இருப்பது? என் வாழ்க்கை பூராவுமே நான் பயந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆத்மாவே பயத்திலேயேதான் வளர்ந்து வந்திருக்கிறது’.
‘என்னை மன்னித்துவிடு. இதைத்தவிர வேறு வழி கிடையாது’ என்று மெதுவாகவும், மென்மையாகவும் சொன்னான் அவன்.
பிறகு அவன் போய்விட்டான்.
மூன்று நாட்களாக அவளது இதயம் துடியாய்த் துடித்தது. தன் வீட்டுக்கு வரப்போகும் அந்த அதிசயமான, பயங்கரமான மனிதர்களைப் பற்றி எண்ணும்போதெல்லாம் அவள் பயத்தால் செத்துக் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்......
சனிக்கிழமையன்று மாலையில் பாவெல் தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு வந்தான்; முகம் கை கழுவினான். உடைகளை மாற்றினான். உடனே வெளியே கிளம்பிச் செல்லும் பொழுது சொன்னான்.
“யாராவது வந்தால், நான் இதோ வந்துவிடுவேன் என்று சொல்”. என்று தாயின் முகத்தைப் பார்க்காமலே சொன்னான் அவன், “நீ தயவுசெய்து பயப்படாமல் இரு”.
அவள் சோர்ந்துப்போய் ஒரு பெஞ்சில் சரிந்து தொப்பென்று உட்கார்ந்தாள். பாவெல் அவளை உம்மென்று பார்த்தான்.
“வேண்டுமானால், நீ வேறு எங்கேயாவது போய் இரு', என்று யோசனை கூறினான் அவன்.
அவனது பேச்சு அவளைப் புண்படுத்திவிட்டது.
“இல்லை. எதற்காகப் போக வேண்டும்?”
அது நவம்பர் மாதத்தின் இறுதிக்காலம். பனிபடிந்த பூமியில் ஈரமற்ற வெண்பனி லேசாகப் பகல் முழுதும் பெய்து பரவியிருந்தது. நடந்து செல்கின்ற தன் மகனது காலடியில் அப்பனி நெறுநெறுப்பதை அவளால் கேட்க முடிந்தது. இருட்படலம் ஜன்னல் சட்டங்களின் மீது இறங்கித் தொங்கி வேண்டா வெறுப்பாக நிலைத்து நின்றது. அவள் பெஞ்சுப் பலகையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தவாறு அங்கேயே உட்கார்ந்திருந்தாள், வாசலையே கவனித்துக் கொண்டிருந்தாள்.
அதிசயமான ஆடையணிகளோடு தீய மனிதர்கள் நாலா புறத்திலிருந்து இருளினூடே ஊர்ந்து ஊர்ந்து வருவது போல அவளுக்கு ஒரு பிரமை தட்டியது. அரவமில்லாத கள்ளத்தனமாய் நடந்து வரும் காலடியோசை தன் வீட்டைச் சூழ்ந்து நெருங்கிவிட்டதாகவும், சுவரில் விரல்கள் தட்டுத்தடுமாறித் தடவுவதாகவும் அவள் உணர்ந்தாள்.
யாரோ சீட்டியடித்து ராகம் இழுப்பது அவளுக்குக் கேட்டது. அந்த சீட்டிக்குரல் அமைதியினூடே மெல்லியதாகப் பாய்ந்து வந்தது. அது சோகமும், இனிமையும் கொண்டதாகப் பாழ் இருளுக்குள் எதையோ தேடித் தேடித் திரிவதாகப் பட்டது. வரவர அந்தக் குரல் நெருங்கிவந்து, கடைசியில் அவளது வீட்டு ஜன்னலைக் கடந்து சுவரின் மரப்பலகையையும் துளைத்து ஊடுருவி உள்ளே நுழைந்துவிட்டதாகத் தோன்றியது.
பலத்த காலடியோசை வாசற்புறத்தில் கேட்டது. தாய் திடுக்கிட்டு எழுந்து நின்றாள். அவளது புருவங்கள் உயர்ந்து நெளிந்தன.
கதவு திறந்தது. பெரிய கம்பளிக் குல்லாய் தரித்த ஒரு தலை முதலில் தெரிந்தது. அதன்பின் அந்தச் சின்ன வாசல் வழியாக ஒரு உயரமான ஒல்லியான உடம்பு குனிந்து நுழைந்தது. உள்ளே வந்தபின் அந்த உருவம் நிமிர்ந்து நின்று தனது வலது கையை உயர்த்தி மரியாதை செலுத்திற்று. பிறகு பெரு மூச்சுவிட்டு, அடித்தொண்டையில் பேசியது.
“வணக்கம்",
தாய் பதில் பேசவில்லை; வணங்கமட்டும் செய்தாள்.
“பாவெல் இல்லையா?”
வந்தவன் மெதுவாகத் தனது கோட்டை அகற்றினாள். ஒரு காலை லேசாக உயர்த்தி அதில் படிந்திருந்த பனித்துளிகளைக் குல்லாயினால் துடைத்துவிட்டான்: மறு காலையும் உயர்த்தி இது மாதிரியே செய்தான். பிறகு தொப்பியைக் கழற்றி ஒரு மூலையில் விட்டெறிந்தான். அறைக்குள் உலாவ ஆரம்பித்தான். ஒரு நாற்காலியை, அதற்குத் தன்னைத் தாங்கச் சக்தியுண்டா என்று பார்ப்பதுபோல, அப்படியும் இப்படியும் பார்த்துவிட்டு, பின்னர் அதில் உட்கார்ந்தான். வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு கொட்டாவிவிட்டான். அவனது தலை அழகாகவும் உருண்டையாகவும் கட்டையாகவும் வெட்டிவிடப்பட்ட கிராப்புடனும் இருந்தது. அவனது முகம் மழுங்கச் சவரம் செய்யப்பட்டு கீழ் தொங்கிப் பார்க்கும் முனைகளைக் கொண்ட மீசையுடனிருந்தது. துருத்தி நிற்கும் தனது சாம்பல் நிற அகலக் கண்களால் அவன் அந்த அறையைக் கவனத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தான்.
“இது என்ன சொந்தக் குடிசையா? இல்லை, வாடகை இடமா? என்று கால்மேல் கால் போட்டு, நாற்காலியை முன்னும், பின்னும் ஆட்டிக்கொண்டே கேட்டான் அவன். "வாடகை தான் கொடுக்கிறோம்” என்று அவனுக்கு எதிராக இருந்த தாய் சொன்னாள்.
“இடம் ஒன்றும் விசாலமில்லை” என்றான் அவன்.
“பாஷா சீக்கிரமே வந்துவிடுவான். கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்”
“ஏற்கெனவே காத்துக்கொண்டுதானே இருக்கிறேன்” என்றான் அந்த நெட்டை ஆசாமி.
அவனது அமைதி, மிருதுவான குரல், எளிய முகம் முதலியவற்றைக் கண்டு அவளுக்கு ஓரளவு தெம்பு வந்தது. அவனது பார்வை கள்ளம் கபடமற்றதாகவும் நட்புரிமை கொண்டதாகவும் இருந்தது. தெளிந்த கண்களின் ஆழத்திலே ஆனந்தச் சுடர்கள் தாண்டவமாடிக்கொண்டிருந்தன. நெடிய கால்களும் சிறிதே சாய்ந்திருக்கும் கோலமும் கொண்ட அவனது முகத்தோற்றத்திலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதுபோலத் தோன்றியது. அவன் ஒரு நீல நிறச் சட்டையும், பூட்சுகளுக்குள்நுழைக்கப்பட்டிருந்த அகன்ற நுனிப்பாகம் கொண்ட கால்சராயும் அணிந்திருந்தான். அவன் யார் எங்கிருந்து வருகிறான், தன் மகனை அவனுக்கு ரொம்ப நாட்களாகவே தெரியுமா என்பனவற்றையெல்லாம் அவள் கேட்க விரும்பினாள். ஆனால் திடீரென அவனே தன்னை முன்னே தள்ளிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.
“நெற்றியிலே என்ன இத்தனை பெரிய வடு? யார் அடித்தார்கள் அம்மா[1]?”
அவனது குரல் இனிமையாயிருந்தது, கண்கள் கூடச் சிரிப்பதுபோலக் களிதுள்ளிக்கொண்டிருந்தன. ஆனால் அவளோ அந்தக் கேள்வியால் புண்பட்டுப் போனாள்.
“உங்களுக்கு எதற்கப்பா அந்தக் கவலை எல்லாம்?” என்று உதடுகளை இறுக்கிக்கொண்டு கடுப்பு கலந்த மரியாதையுடன் கேட்டாள் அவள்.
“இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே அவன் அவள் பக்கமாக இன்னும் குனிந்து கொண்டு சொன்னான். நான் எதற்காகக் கேட்டேன் என்றால் எனது வளர்ப்புத் தாயின் நெற்றியிலும் இதைப்போலவே ஒரு வடு இருந்தது. அவள் யார் கூட வாழ்ந்தாளோ அந்த மனுஷன் கொடுத்தது அது. அவன் செருப்புத் தைக்கிறவன். அவளை ஒரு இரும்புத் துண்டால் அவன் அடித்துவிட்டான். அவள் துணி வெளுக்கிறவள்; அவனோ செருப்பு தைக்கிறவன். அவள் என்னைத் தன் மகனாக ஸ்வீகாரம் செய்துகொண்டபின் அவனை எங்கேயோ பிடித்திருக்கிறாள். அவளது தொலையாத துயரத்துக்கு கேட்க வேண்டுமா; அவனோ ஒரு விடாக் குடியன்; அவன் எப்படி அவளை அடிப்பான் தெரியுமா? அவன் அடிக்கிற அடியில், பயத்தால் என் தோல் விரிந்து பிய்வதாகத் தோன்றும்.
அவனது வெகுளித்தனமான பேச்சு தாயைச் செயலற்ற வளாக்கியது. தான் அவனிடம் கடுப்பாகப் பேசியதற்கு பாவெல் தன்மீது கோபப்படுவானோ என்று அவள் பயந்தான்.
“நான் ஒன்றும் நிஜமாகக் கோபப்படவில்லை” என்ற ஒரு குற்றப் புன்னகையுடன் சொன்னான் அவன். “ஆனால், நீங்கள் திடீரென்று என்னை இப்படிக் கேட்டுவிட்டீர்கள். எனக்கும் என்னைக் கட்டியவரால்தான் இந்தக் காயம் ஏற்பட்டது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். சரி நீங்கள் என்ன தாத்தாரியா?[2]”
அவன் தன் கால்களை ஆட்டிக்கொண்டே சிரித்தான். அந்தச் சிரிப்பால் அவனது காதுகள்கூட அசைவது மாதிரி தோன்றியது. ஆனால் மறுகணமே அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான்;
“இல்லை. நான் இன்னும் அப்படியாகவில்லை!”
“ஆனால், உங்கள் பேச்சு ருஷிய பாஷை மாதிரியே ஒலிக்கவில்லை” அவன் சொன்ன ஹாஸ்யத்தை அனுபவித்தது. சிறு புன்னகை செய்துகொண்டே சொன்னான் அவன்.
“ஆமாம். ருஷ்ய பாஷையைவிட இது மேலானது” என்று உற்சாகத்தோடு சொன்னான் அந்த விருந்தாளி, “தான் ஒரு ஹஹோல்”[3] கானேவ் நகரப் பிறவி”.
“இங்கே வந்து ரொம்ப நாளாச்சோ?" “நகரில் சுமார் ஒரு வருஷம் வாழ்ந்தேன். பிறகு ஒரு மாசத்துக்கு முன்னர்தான் உங்கள் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தேன், உங்களுடைய மகனும் வேறு சிலரும் இங்கு அருமையான தோழர்களாயிருக்கிறார்கள். எனவே இங்கேயே கொஞ்ச காலம் இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மீசையை இழுத்து விட்டுக்கொண்டான்.
அவளுக்கு அவனைப் பிடித்துப் போயிற்று. தன் மகனைப் பற்றி அவன் கூறிய நல்ல வார்த்தைகளுக்குப் பிரதியாக, தானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று அவள் விரும்பினாள்.
ஒரு கோப்பை தேநீர் கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டாள்.
“அந்த ஆனந்தம் எனக்கு மட்டும்தானா?” என்று தன் தோளை ஒருதரம் குலுக்கிக்கொண்டே சொன்னான் அவன். “மற்றவர்களும் வரட்டும். அதுவரையில் பொறுத்திருக்கலாம். அப்புறம் நீங்கள் எங்கள் எல்லோருக்குமே தாராளமாகப் பரிமாறலாம்” அவனது பேச்சு மீண்டும் அவளது பயபீதியை நினைப்பூட்டிவிட்டது.
“மற்றவர்களும் இவனைப்போலவே இருந்துவிட்டால்!” என்று அவள் நினைத்தாள்.
மீண்டும் வாசல் புறத்தில் காலடியோசைகள் கேட்டேன. கதவு அவசர அவசரமாக திறக்கப்பட்டது; மீண்டும் அவள் எழுந்து நின்றாள். ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக சமையலறைக்குள் ஒரு இளம்பெண் வந்து சேர்ந்தாள். அவள் சின்னஞ் சிறுசாக, கள்ளங்கபடமற்ற முகத்தோடு இருந்தாள்; அவள் தனது அடர்த்தியான் வெளுத்த கூந்தலை முடித்து பின்னலிட்டிருந்தாள்.
“நான் பிந்தி வந்து விட்டேனா? என்று அவள் மென்மையாகக் கேட்டாள்.
“இல்லை. பிந்தவில்லை ” என்று வாசற் புறமாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் அந்த ஹஹோல். “நடந்தா வந்தீர்கள்?”
“பின்னே? நடந்துதான் வந்தேன். நீங்கள்தான் பாவெல் மிகாய்லவிச்சின் அம்மாவா? வணக்கம். என் பெயர் நதாஷா!”
“உங்கள் தந்தை வழிப் பெயர் என்ன?” என்றாள் தாய.
“வசீலியவ்னா. உங்கள் பெயர்?”
‘பெலகேயா நீலவ்ன.”
“சரி. நாம் அறிமுகமாகிவிட்டோம்”.
“ஆமாம்” என்று ஆசுவாசமாகச் சுவாசித்துவிட்டு, அந்தப் பெண்ணைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே சொன்னாள் தாய், அந்தப் பெண்ணின் மேலுடைகளைக் கழற்றுவதற்கு உதவிக்கொண்டே கேட்டான் அந்த ஹஹோல். “குளிராயிருந்ததா?”
“வயல் வெளியில் வரும்போது மகா பயங்கரம்! அந்த ஊதைக் காற்று–அப்பப்பா!”
அவளது குரல் செழுமையும் தெளிவும் பெற்றிருந்தது. வாய் சிறியதாகவும், உதடுகள் பருத்ததாயும் இருந்தன. மொத்தத்தில் உடற்கட்டு உருண்டு திரண்டு புதுமையோடு இருந்தது. மேலுடையைக் களைந்த பிறகு, அவள் தனது சிவந்த கன்னங்களை, குளிரால் நிறைந்த சின்னங்சிறு கரங்களால் தேய்த்துவிட்டுக்கொண்டாள், அதன் பின்னர் செருப்புக் குதிகள் தரையில் மோதி ஓசை செய்ய, அவள் அந்த அறைக்குள்ளே நடமாடிக்கொண்டிருந்தாள்.
“ரப்பர் ஜோடுகள் அணியக் காணோம்” என்று தாய் மனதுக்குள்ளாக நினைத்துக்கொண்டாள்.
“ஆம்”..... என்று நடுங்கிக்கொண்டே இழுத்தாள் அந்த யுவதி. “நான் எவ்வளவு தூரம் விறைத்துப் போனேன் என்பதை உங்களால் கற்பனைக் கூட பண்ண முடியாது!”
“இதோ. உனக்குக் கொஞ்சம் தேநீர் போடுகிறேன்” என்று தாய் சமையலறைக்கு விரைந்தாள். இந்தப் பெண் தனக்கு வெகுகாலமாகத் தெரிந்தவள் போலவும் எனவே தாய்மையின் பரிவோடும் பாசத்தோடும் அவளை நேசிப்பது போலவும் தாய்க்குத் தோன்றியது. அடுத்த அறையில் நடந்துகொண்டிருந்த சம்பாஷணையைக் கேட்கும்போது அவள் தன்னுள் புன்னகை செய்துகொண்டாள்.
“நஹோத்கா[4]! உங்களுக்கு என்ன கவலை” என்று கேட்டாள் அந்தப் பெண்.
“பெரிய கவலை ஒன்றுமில்லை” என்று அமைதியுடன் பதில் சொன்னான். அந்த ஹஹோல். “இந்தப் பெரியம்மாவுக்கு நல்ல கண்கள் இருக்கின்றன. எனது அம்மாவுக்கும் இந்த மாதிரித்தான் கண்கள் இருந்திருக்குமோ என்று யோசித்தேன். நான் அடிக்கடி என் தாயைப் பற்றியே நினைக்கிறேன். அவள் இன்னும் உயிரோடிருப்பதாகவே நான் கருதுகிறேன்!”
“உங்கள் தாய் செத்துப்போய்விட்டதாகச் சொல்லவில்லை?”
“ஆனால், என்னுடைய வளர்ப்புத் தாய்தான் செத்துப் போனாள். நான் என்னைப் பெற்றெடுத்த தாயைப்பற்றிச் சொல்லுகிறேன். ஒருவேளை அவள் கீவ் நகரத் தெருக்களில் பிச்சையெடுத்துத் திரிந்து கொண்டிருக்கிறாளோ என்று எண்ணுகிறேன், பிச்சையெடுப்பதும், ஒட்கா குடிப்பதும்... அவள் குடித்திருக்கும்போது, போலிஸார் அவள் முகத்தில் ஒங்கியறையவும் கூடும்:... “
“உம். என் அருமைப் பையனே!” என்று பெருமூச்சுவிட்டபடி நினைத்துக் கொண்டாள் தாய்.
நதாஷா விரைவாகவும் மென்மையாகவும், உணர்ர்ச்சி மயமாகவும் ஏதோ பேசினாள். மீண்டும் அந்த ஹஹோல் பேச ஆரம்பித்துவிட்டான்.
“நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளை, உங்களுக்கு உலக ஞானம் போதாது. உலகத்துக்குள் ஒரு மனிதனைக் கொண்டு வருவதே சிரமம். அவனை நல்லவனாக வாழச் செய்வது அதை விடச் சிரமம்!”
“என்னமாய்ப் பேசுகிறான்!” என்று தனக்குத்தானே வியந்துகொண்டாள் தாய். அந்த ஹஹோலிடம் ஏதாவது அன்பான வார்த்தையாகப் பேசிவிட வேண்டும் என்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. ஆனால் திடீரெனக் கதவு திறக்கப்பட்டது. உள்ளே பழைய திருட்டுப்புள்ளியான தனிலோலின் மகன் நிகலாய் விஸோவ்ஷிகோல் வந்து சேர்ந்தான். நிகலாய் மனிதரை அண்டி வாழாத தனிக் குணத்தால் அந்தக் குடியிருப்பு முழுவதிலுமே பிரபலமான புள்ளி. அவன் எப்போதுமே யாரிடமும் ஒட்டிப் பழகுவதில்லை: எட்டியே நிற்பான். எனவே மற்றவர்கள் அவனைக் கேலி செய்து வந்தனர்.
“ஊம். என்னது நிகலாய்!” என்று வியப்புடன் கேட்டாள் அவள்.
அவளுக்கு வணக்கம் கூடக் கூறாமல், அம்மைத் தழும்பு விழுந்த தனது அகலமான முகத்தை உள்ளங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டு வறட்டுக் குரலில் கேட்டான் அவன், “பாவெல் இல்லையா!”
“இல்லை ”
அவன் அந்த அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தான்.
வணக்கம். தோழர்களே!” என்றான் அவன்.
“இவனும் கூடவா?” என்று வெறுப்புடன் நினைத்தாள் தாய். “ நதாஷா கொஞ்சமாயும், மகிழ்ச்சியுடனும் கரம் நீட்டி அவளை வரவேற்றது அவளுக்குப் பேராச்சரியம் விளைத்தது.
நிகலாயிக்குப் பின்னர் வேறு இருவர் வந்தனர். அவர்கள் இருவரும் பருவம் முற்றாத வாலிபர்கள். தாய்க்கு அவர்களில் ஒருவனைத் தெரியும். கூர்மையான முகமும் சுருண்ட தலை மயிரும், அகன்ற நெற்றியும் கொண்ட அந்தப் பையனின் பெயர் பியோதர்; தொழிற்சாலையின் பழைய தொழிலாளியான சிஸோவ் என்பவனின் மருமகன். அடுத்தவன் கொஞ்சம் அடக்கமானவன். அவன் தன் தலைமயிரை வழித்துவாரிவிட்டிருந்தான். அவளுக்கு அந்தப் பையனைத் தெரியாது. எனினும் அவனைப் பார்த்ததும், அவளுக்கு எந்த பயமும் தோன்றவில்லை. கடைசியாக பாவெல் வந்து சேர்ந்தான், அவனோடு, தாய்க்கு இனம் தெரிந்த வேறு இரு தொழிலாள இளைஞர்களும் வந்து சேர்ந்தனர்.
“நீ தேநீருக்குத் தண்ணீர் வைத்துவிட்டாயா?” என்று அன்போடு கேட்டான் பாவெல், “மிக நன்றி!”
“நான் போய்க் கொஞ்சம் ஓட்கா வாங்கி வரட்டுமா?” என்று கேட்டாள் அவள். காரணம் தெரியாத ஏதோ ஒன்றுக்கு தான் எப்படி நன்றி செலுத்துவது என்பது தெரியாமல்தான் இப்படிக் கேட்டாள் அவள்.
“இல்லை, தேவையில்லை’ என்று அன்பு ததும்பும் புன்னகையோடு சொன்னான் பாவெல்.
அவளைக் கேலி செய்வதற்காகவே, தன் மகன் இந்தக் கோஷ்டியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாய்க் கூறிப் பயங்காட்டி விட்டதாக அவள் திடீரென நினைத்தாள்.
“அது சரி, இவர்கள்... இவர்கள் தானா: அந்த சட்டவிரோதமான நபர்கள்?’ என்று மெதுவாகக் கேட்டாள் அவள்.
“இவர்களேதான்!” என்று பதில் கூறிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தான் பாவெல்.
“ஐயே!... “ என்று அன்பு கலந்த வியப்புடன் சொன்னாள் அவள். பிறகு தனக்குள்ளே இளக்காரமாக நினைத்துக்கொண்டாள்: “இன்னும் இவன் குழந்தைதான்!”
- ↑ மூலத்தில் ‘அம்மா’ என்பதற்கு ‘நேன்க்கோ’ என்ற சொல் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. நேன்க்கோ என்பது உக்ரேனியச் சொல். அம்மா என்பதை மேலும் அருமையாக அழைப்பது–மொ-ர்
- ↑ பழந் துணிகளை வாங்கிப் பிழைக்கின்றவர்களை ‘தாத்தாரியன்’ என்று சொல்லுவதுண்டு–மொ-ர்
- ↑ ஹஹோல் - உக்ரேனியப் பிரதேச மக்களுக்கு, ருஷ்யர்கள் இட்டுள்ள கேலிப் பெயர். (கதை முழுவதிலும் ஹஹோல் என்ற சொல் அந்திரேயையே குறிக்கிறது. எனவே அந்திரேய் என்பதும் ஹஹோல் என்பதும் ஒருவரே.)–மொ-ர்
- ↑ அந்திரேய் நஹோத்யா என்பது முழுப்பெயர். அந்திரேய் என்றும் நஹோத்கா என்றும் தனித்தனியே அழைப்பதுமுண்டு–மொ-ர்