தாவிப் பாயும் தங்கக் குதிரை/4



வந்தது வந்தது தங்கக் குதிரை

அப்போது வானில் ஓர் இடி முழக்கம் கேட்டது. கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல் பளிச்சிட்டது. அந்த மின்னலைத் தொடர்ந்து ஓர் இறக்கை முளைத்த தங்கக் குதிரை, தரையை நோக்கித் தாவிப் பாய்ந்து பறந்து வந்து கொண்டிருந்தது. அந்தத் தங்கக் குதிரை பலிபீடத்தின் மீது வந்து இறங்கித் தன் பின்னங்காலால் பூசாரியை ஓர் உதை உதைத்துக் கீழே தள்ளியது.

அந்தத் தங்கக் குதிரையைக் கண்டவுடன் இளவரசன் வில்லழகன் அதன் முதுகில் பாய்ந்து ஏறினான். தன் தங்கை பொன்னழகியையும் கையைப் பிடித்து இழுத்துத் தூக்கித் தனக்குப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டான். அவர்கள் இருவரும் ஏறிக் கொண்டதும் அந்தத் தங்கக் குதிரை இறக்கைகளை அசைத்து அசைத்துக்கொண்டு மேலெழும்பிப் பறந்தது. கீழே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அரசனையும் மாயக்காரி வசீகர சுந்தரியையும் பழித்துப் பேசிக் கொண்டும், அந்த அருமைக் குழந்தைகளைக் காப்பாற்றிய தெய்வங்களைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும் தங்கள் தங்கள் வீடு நோக்கிக் கலைந்து சென்றார்கள்.

அரசி முகிலி, தன் குழந்தைகளைப் பிரிந்து சென்றாலும் அவர்களைக் கவனிக்காமல் விட்டுப் போய்விடவில்லை. அவள் மேலேயுள்ள மேகமண்டலத்திலிருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவள் தான் கடைசி நேரத்தில், மேகமண்டலத்தில் இருந்த தங்கக் குதிரையை யனுப்பித் தன் குழந்தைகளைக் காப்பாற்றினாள்.