தாவிப் பாயும் தங்கக் குதிரை/5
இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அந்தத் தங்கக் குதிரை காற்றினும் வேகமாகப் பறந்து சென்றது. காடும் மேடும் கடலும் மலையும் மாறி மாறிக் கடந்து மிகத் தொலைவில் உள்ள தேன்கதலி நாட்டில் போய் இறங்கியது. அங்கு இறங்கியவுடன் நெடுந்தூரம் பறந்து வந்த களைப்பில் அந்தக் குதிரை சோர்ந்து விழுந்தது. அப்படியே அதற்கு மூச்சு நின்று அது இறந்து போய் விட்டது. வில்லழகன், அதை ஒரு மரத்தடியில் நிறுத்திவைத்து, அதற்கு ஒரு வேதாளத்தைக் காவல் வைத்தான்.
தேன்கதலி நாட்டு அரசனுக்கு ஆண் பிள்ளைகள் கிடையாது. அவனுக்கு மகள் ஒருத்திமட்டும் இருந்தாள். தேன்கதலி நாட்டு அரசன் வில்லழகனையும் பொன்னழகியையும் விரும்பி வரவேற்றுத் தன் அரண்மனையிலேயே வளர்த்து வந்தான். வில்லழகன் ஆற்றலும் வீரமும் மிகுந்த இளைஞனாக மாறியவுடன் அவனையே தன் நாட்டின் அரசனாகப் பட்டம் சூட்டி அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். பொன்னழகியையும் அருகில் இருந்த ஒரு நாட்டின் இளவரசனுக்கு மணம் செய்து கொடுத்தான்.
வில்லழகன் தேன்கதலி நாட்டைச் சீரும் சிறப்புமாக அரசு புரிந்தான். அவனுக்குப் பின் அவன் வழியில் வந்த மக்களும் பேரரும் தொடர்ந்து அரசாண்டு வந்தார்கள். பிற்காலத்தில் அந்த நாட்டில் இருந்த தங்கக் குதிரை உலகத்துப் பெருஞ் செல்வங்களிலே ஒன்றாக மதிப்பிடப்பட்டது.