தாவிப் பாயும் தங்கக் குதிரை/7



வீரமகனின் உறுதிமொழி


கடுமையாக உழைத்து அவர் சிறிது பணம் சேர்த்தார். போதுமான அளவு பணம் சேர்ந்தவுடன் ஒருநாள் காலையில் அவர் தன் மகனை அழைத்தார்.

அவர் கண்கள் கலங்கியிருந்தன. ஆனால், அவற்றிலே ஒரு நம்பிக்கை ஒளி வீசியது. ஓர் உறுதி வெளிப்பட்டது.

“வெற்றி வேலா, என் அன்பு மகனே! நீ நினைத்துக் கொண்டிருப்பது போல் நீ ஓர் உழவனின் மகனல்ல; நீ ஓர் இளவரசன்!” என்று கூறினார்.

வெற்றி வேலன் வியப்படைந்தான். “நான் இளவரசனா? அப்படியானால் என்னைப் பெற்ற அரசர் யார்? அரசி யார்?” என்று கேட்டான்.

“மகனே! உன்னைப் பெற்றவர் நாங்கள் தான்! ஆனால், நாங்கள் வஞ்சகத்தால் வாழ் விழந்தோம்!” என்று கூறிக் கோவென்று கூவி அழுதாள் அரசி,

“அம்மா அழாதீர்கள்! என் உடலில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும் வரையில், நான் நம்முடைய நாட்டை மீட்கப் போராடுவேன். உங்களை மீண்டும் அரியாசனத்தில் வைத்துப் பார்ப்பதே இனி என் இலட்சியம்” என்று சூளுரைத்தான் வெற்றி வேலன்.

“மகனே, நான் இன்று தான் உன்னைப் பெற்றதன் பலனை அடைந்தேன். உன் இலட்சியம் வெற்றியடையுமாக!” என்று வாழ்த்தித் தாங்கள் வாழ்விழந்த கதையைக் கூறினார் அரசர்.

"மகனே,எப்போதும் உண்மையே பேசு; என்றும் உண்மைக்கே பாடுபடு; எவரிடத்திலும் அன்பாயிரு; உன்னை யண்டி வந்தவர்களுக்கு உதவி புரி” என்று அறிவுரைகள் கூறி விடைகொடுத்து வழியனுப்பினாள் அரசி.

இளவரசன் புறப்பட்டான். அரசனும் அரசியும் தங்கள் பிரிவுத் துயரத்தை யடக்கிக் கொண்டார்கள்.