தாவிப் பாயும் தங்கக் குதிரை/6
வில்லழகன் இறந்து பலப்பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. அப்போது உலகின் வேறொரு பகுதியில் இருந்த ஒரு நாட்டையாண்ட மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை ஆண் குழந்தை. அதன் பெயர் வெற்றிவேலன். வெற்றி வேலன் கற்றுத் தேர்ந்து முற்றும் வளர்ந்து ஒரு கட்டழகுடைய இளைஞனாக வளரும் முன்னாலேயே ஒரு நாள் திடீரென்று அவனுடைய சிற்றப்பன் பெரும் படையுடன் வந்து நாட்டைக் கவர்ந்து கொண்டான். ஆண்டு கொண்டிருந்த அண்ணனையும் அவர் குடும்பத்தையும் காட்டுக்கு விரட்டியடித்துவிட்டு அந்தச் சிற்றப்பன் நாட்டைக் கவர்ந்து கொண்டான்.
உயிருக்குத் தப்பி ஓடிய அரசனும் அரசியும் அவர்களின் செல்ல மகனான வெற்றி வேலனும், ஏழைகளாய்ச் சிற்றுார்களில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்கள், கடைசியில், அந்த அரசர் ஒரு சிற்றுாரில் நிலையாகத் தங்கி அங்கு ஒர் உழவனிடம் வேலைக்குச் சேர்ந்து கொண்டார்.
உழைத்துப் பிழைக்க வேண்டிய ஏழையாக மாறிவிட்ட போதிலும் அரசர் தன்மகன் வெற்றி வேலனை ஓர் இளவரசனை வளர்க்க வேண்டிய முறை தப்பாமல் வளர்த்து வந்தார். தமக்கு ஓய்விருந்த போதெல்லாம் அவனுக்குக் கல்வியும், கலையும், வாட்பயிற்சியும், வேற்பயிற்சியும் கற்றுக் கொடுத்தார்.
வெற்றிவேலன் வலிவும் பொலிவும் உடைய இளைஞனாக வளர்ந்துவிட்டான். ஆற்றலும் வீரமும் அஞ்சா நெஞ்சும் கொண்ட காளை போல் அவன் தோன்றினான். எந்தச் செயலிலும் வெற்றி காணக் கூடிய தனித் திறமை தன் மகனுக்கு வந்துவிட்டது என்பதை அரசர் கண்டு கொண்டார். இனி இவனை நாம் இங்கே வைத்திருக்கக் கூடாது என்று அவர் முடிவு கட்டினார்.