திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்/002-011

ஏழை

ழக்கம் போல் பானுவின் தள்ளு வண்டி ‘பார்க் நோக்கிப் புறப்பட்டது. பானுவின் சின்னஞ்சிறு வாயிலிருந்து சிதறிக் கொண்டேயிருக்கும் மழலை மொழிகட்குப் பதில் பேசியவாறு வண்டியைத் தள்ளிக் கொண்டு போனாள் பார்வதி. பானுவுக்கு வயது ஆறு கூட ஆகவில்லை. வீட்டில் ‘துரு துரு’ என்று சும்மாயிருப்பதில்லை, முக்கியமாக அப்பா அம்மாவைப் பேச விடுவதில்லையென்றால் பாருங்களேன். காலையிலிருந்து கிராமக் கணக்குவழக்கு, குத்தகைதார் பணம் பட்டுவாடா, கிசான் தொல்லை, வியாபாரப் பிரச்சனை இவ்வளவையும் கவனித்துவிட்டு, மாலை ஆறு மணிக்கு மேல்தான் நல்லக்கண்ணுப்பிள்ளைக்கு ஓய்வு. அந்த ஓய்வு நேரத்தில் ஒரு விநாடிகூட வீணாகப் போய்விடக் கூடாது என்பது பிள்ளையின் நோக்கம். ஆறு மணி எப்பொழுதுவரும் என்று எதிர்பார்த்திருக்கும் கருணாம்பாள்-ஆமாம் அவரது மனைவி-அந்த அம்மையாரும் அந்த ஓயா உல்லாசத்தைத்தான் விரும்பினார்கள். அவர்களின் இனிய பொழுதை, அந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளை... தொடர்ச்சி கெடும்படி நடுநடுவே அறுத்துவிடும். என்னதான் புத்திரபாசமிருந்தாலும் சற்று நேரம் யாருடைய தொந்தரவுமின்றி இருக்கத்தான் கருணாம்பாளின் மனம் விரும்பியது. அதுவுமென்ன? அந்தத் தம்பதிகள் ஏழைகளா?-- இன்பம் என்ன நிறம் என்று கேட்க? குடிசை மன்னர்களுக்கும் ராணிகளுக்கும்தான் தங்கள் வறுமை ராஜ்யத்தில் இன்பத்துக்காக ஒரு சில நிமிடங்கள்கூட ஒதுக்க முடியவில்லை. கடன்காரர் படையெடுப்பு; தயிர்க்காரி முற்றுகை- இவ்வளவையும் சமாளித்துவிட்டு இரவு, கருணை கூர்ந்து தருகிற சில மணி நேரங்களில் கர்ம வினையை நினைத்துப் புலம்பவும்-கடவுளை எண்ணி அழவும், போனது போக, மிச்ச நேரத்தை எப்போதாவது பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் ஏழை சாம்ராஜ்யத்தில் பிரஜைகள் அதிகம். ஏழெட்டுக் குழந்தைகளுக்குக் குறையாது. ஏழாவது குழந்தை முதல் குழந்தையைவிட ஆறு வயதுதான் இளையதாயிருக்கும். கருணாம்பாளைப் போலக் காசைத் தூசியாக மதித்துக் கர்ப்பப்பையை மாற்றிப் போட வசதியா படைத்திருக்கிறார்கள் அந்தப் பரிதாப ஜந்துக்கள்!

இளமை தேயாதவன்; எழில் குறையாதவன். இப்பேர்பட்டவனைத்தான் பார்வதி கணவனாகப் பெற்றிருந்தாள். அவன் மில் வேலை முடிந்து ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திருப்பான். அவனை வரவேற்று உபசரிக்க அவளுக்கு வேலை ஒழியவில்லை. எஜமானுக்கும் எஜமானிக்கும் தேவையான ஓய்வுக்காக-அந்த ஏழையின் இளம் மனைவி-பார்வதி-தன் பருவ உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு பானுவைப் ‘பார்க்கு’க்குஅழைத்துச் சென்றாள். ஒருநாள் மட்டுமா? இல்லை.நாள்தோறும். அவள் பெண்ணல்ல; இந்த உலகத்தில் ஒரு மாடு பகல் முழுவதும் எலும்பு முறிய உழைப்பதுபோல வீட்டு வேலைகள். அவளுக்கு. எஜமான் மாளிகைதானே வீடு! மாலையில் சூரியனுக்குக்கூட வேலை முடிகிறது. ஆனால் பார்வதிக்கு..? இதை அவளால் நினைக்கத்தான் முடியவில்லை. நெஞ்சைத்தான் படைத்தானே- அந்த நேர்மையற்றவன்-வயிற்றையும் ஏன் படைத்தான்?

யார், யாரைக் கேட்பது?

பூஞ்செடிகளின் அசைவை- பூங்கொத்துகளின் அழகை-பானுவுக்குக் காட்டித் தானும் ரசித்துக் கொண்டிருக்கையில்...... வானம் கறுத்துக் கொண்டு வருவதைக் கண்டாள். மாதம் முடிந்து சம்பளம் கேட்கும்போது அதைவிட அதிகமான கறுப்பை எஜமானின் முகத்தில் பார்வதி அடிக்கடி பார்த்திருக்கிறாள். பழகிப் போனபடியால்... வானத்தின் மாற்றத்தை லட்சியம் செய்யாமலே வீடு நோக்கி நடந்தாள். அவள் மன அலைகள் எல்லாம் அன்று அத்தான், மூக்குத்தி, முத்தப்போட்டி... இவைகளிலே மோதிக் கொண்டிருந்தன. இன்பக் கனவு இல்லாவிட்டால் அவள் உலர்ந்த உதடுகளில் புன்னகை தலை நீட்டியிருக்காதல்லவா? சுவையான கனவு என்பதால் தான் கண்கள் அப்படி மின்னிக்கொண்டிருக்க வேண்டும். அத்தான் முத்தம் தருவது போன்ற கனவோ, அல்லது முதல்நாள் தந்த நினைவோ... அவள் கன்னங்கூட குப்பென்று சிவந்துவிட்டது.

ஒன்றுமில்லை... மூக்குத்தி வாங்கி வருகிறான் அத்தான், பல நாளாகச் சேர்த்த காசு... மூக்குத்தியாக உருவெடுக்கிறது. துடைப்பக் குச்சியை எடுத்துத் தூர எறிந்துவிட்டு பார்வதியின் மூக்கில் அவனே அந்த ஆபரணத்தை அணிவிக்கிறான். கறுத்த மேனியில் அந்த வெள்ளை மூக்குத்தி பளிச்சிடுவது, நீலவானத்தில் நிலா கிளம்புவதை நினைவூட்டுகிறது. “பார்வதி... எங்கே?” என்று அத்தான் உதடுகளை மொக்காக ஆக்குகிறான். பார்வதியின் இதழ்களும் குவிகின்றன. மொட்டுகள் மோதி மலர்ந்து விடுகின்றன. ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரலில்’ ஒரு முக்கிய பகுதி நடந்தேறுகிறது.

கனவு மங்களம் பாடுகிறது. பார்வதி சுய நினைவுபெறுகிறாள். வண்டியில் பானு “மழை வருது. மழை வருது” என்று பாட ஆரம்பித்து விடுகிறது. இரண்டு கனமான மழைத்துளிகள் பார்வதியின் முகத்தில் விழுந்து சிதறின.

உலகை அதிரச் செய்யும் இடிகள்-வான மனிதனின் அகோரச் சிரிப்பு-பயங்கரக் கண்வீச்சு-கடலைக் கவிழ்த்து விட்டதுபோல மழை இமயம் உருண்டு விந்தியத்தில் மோதிடுவது போன்ற அதிர்ச்சி!

பார்வதிக்கு பானு நனைந்து விடுவாளே என்ற பயந்தான். பாவம், அந்த ஏழைக்கு எஜமான் வீட்டில்-இல்லை. இல்லை.... குழந்தையின் மேல் அவ்வளவு பாசம். மனிதவர்க்கம் என்பது ஏழைக் கும்பல் தானே. பணக்காரமனிதர் மிருகக் கூட்டம். அதில் மனிதர்களும் தவறிப் பிறப்பதுண்டு. ஏழை மனிதர் குழுவில் துன்பம் தாங்கமாட்டாமல் மிருக வளர்ச்சியடைவோருமுண்டு. அந்த வளர்ச்சி இன்னும் பார்வதியைப் பிடிக்கவில்லை. இதெல்லாம் ரஷ்யப் பேச்சு என்பார் நல்லகண்ணப்பிள்ளை. ரஷ்யா என்றால் அவருக்கு விஷயம் சாப்பிடுகிற மாதிரி.

பார்வதி நன்றாக நனைந்து விட்டாள். குழந்தைக்கு ஒரே பயம்; அலற ஆரம்பித்துவிட்டது. மரத்தடியில் நின்றுவிட்டாள் பார்வதி. அவ்வளவு கஷ்டத்திலும், பயங்கரத்திலும் வரப்போகிற அந்த இன்ப இரவு அவள் முகத்தில் தனித் தெளிவை அதிகப்படுத்தியபடி இருந்தது.

திடீரென்று அந்த மரத்தின் பெரிய கிளை முறிந்து விழுந்தது.

மழை நின்றுவிட்டது. புயல் ஓய்ந்து விட்டது.

நல்லகண்ணுப் பிள்ளையின் மோட்டார் வெகு வேகமாகச் சாலையில் பறந்து வந்தது.

முறிந்து கிடக்கும் அந்த மரத்தடியில்... “பானு” என்று சத்தம் போட்டபடி இறங்கினார் பிள்ளை. பானு மயக்கமாய்க் கிடந்தது. தூக்கி மூர்ச்சை தெளிவித்தார். ‘அப்பா’ என்று கண் விழித்தது குழந்தை. காரில் குழந்தையோடு ஏறி உட்கார்ந்தார். கார் புறப்பட்டுவிட்டது, டாக்டர் வீட்டை நோக்கி.

மரத்தடியில் கிடந்த இன்னொரு உருவம் கண் விழித்தது. “அத்தான்...அய்யோ...” - நீண்ட பெருமூச்சு.

கண்கள் மூடிக் கொண்டன.

யார் அது?

ஏழை!