திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்/008-011

தொத்துக்கிளி

ன்றைய ‘எக்ஸிபிஷன்’ அண்ணாமலைக்குச் சுவைக்கவில்லை. ஏனெனில் அன்று அழகிகள் வரவில்லை.எழிலரசிகளின் அதரங்களிலே தவழும் புன்னகையிலே பூரிப்புப் பெறுபவன் அண்ணாமலை. அழகற்ற பெண்கள் இந்த உலகத்தில் வாழ லாயக்கற்றவர்கள் என்பது அவனது கொள்கை. பிரம்மா சரசாவுடன் இன்பப் பொழுது போக்கிக் கொண்டிருந்தபோது தனது படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டுமேயென்ற எரிச்சலோடு சில மாமிசப் பிண்டகளைப் படைத்தானாம். அவர்கள்தான் அழகற்ற பெண்களாகி இந்த உலகத்தில் தொல்லை கொடுப்பவர்களென்று அண்ணாமலை அடிக்கடி சொல்லுவான். அவனுக்கு வாழ்வு ஒரு பூஞ்சோலை; அதில் பறந்து திரியும் கிள்ளைகள்தான் பெண்கள்!

“சே! என்ன ‘எக்ஸிபிஷன்’ இது! அழகிகளில்லாத ‘எக்ஸிபிஷன்’ குஷ்டரோகம் பிடித்த ஜூலியட்டுக்குத்தான் சமம். ரோமியோகூட அவளைத் தீண்ட மாட்டானே. இந்த உலகிலேயே அழகானவன் தமிழன் என்கிறார்களே; ஒரு அழகான தமிழச்சியை இங்கே காணமுடியவில்லையே...” என்றெல்லாம் முனகிக் கொண்டிருந்தான் அண்ணாமலை. வளையல் கடைகளையும். ரிப்பன் கடைகளையும் வலை போட்டுத் தேடினான். சேல் கெண்டைக்கு வலைபோட்டான். வரால் குஞ்சுகள்தான் சிக்கின. அங்கே காணப்பட்ட பெண்கள் தாங்கள் எவ்வளவு விகாரமாய் இருக்கிறோம் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஆனால் அழகான வளையல்களைப் பொறுக்குவதில் மட்டும் என்னவோ தயங்கவில்லை! உலகமே அப்படித்தானே! தான் அழகாயில்லை என்பதற்காக குயில் பாடாமலிருந்தால்... அழகாயிருக்கிறோம் என்பதற்காக மயில் கானம் இசைக்கத் துவங்கினால்... இயற்கையே மாறியிருக்குமே!

துவண்ட உள்ளத்தோடு சுற்றிக்கொண்டிருந்தான் அண்ணாமலை. ‘களுக்’ என்று சத்தம் கேட்டுத் திரும்பினான். ஆம்... சேல் கெண்டையே சிக்கிவிட்டது. அவளுடைய அலையும் விழிகளிலே அவன் அற்புதத்தைக் கண்டான். தன் புருவ வில்லினால் அண்ணாமலையை அக்கக்காகக் குத்திக் கொன்றுவிட்டாள். அந்த மாதுளை மலர் போன்ற அதரங்கள் அண்ணாமலையின் உள்ளத்திலே உணர்ச்சிப் புயலைத் தூண்டிவிட்டன. கண்டாரைக் கவரும் அவள் அண்ணாமலையையா விட்டு வைப்பாள்?

அண்ணாமலையை மட்டுமென்ன; அவன் போன்ற மற்ற ஆண்களையும்தான் அவள் தன் புன்சிரிப்பினால் கவர்ந்தாள். அண்ணாமலை ஒவ்வொரு திக்கிலும் சென்று, ஒவ்வொரு கோணத்திலும் அவளை ரசித்தான். ஆனால் அந்தப் ‘பூங்கோதை’ அந்த வளையல் கடையை விட்டு அசையவில்லையே! அழகியாயிருந்தாலென்ன, கல்லூரி மாணவியாயிருந்தாலென்ன, கம்பனின் சூர்ப்பனகையாயிருந்தாலென்ன, அவர்கள் அனைவரையும் கவர்ந்து விடுகிறார்கள் துணிக்கடைக்காரரும். வளையல், ரிப்பன் கடைக்காரரும்! அவர்கள் பொறுக்கும் ‘டிசை’னில் தான் வித்யாசமே தவிர. அவர்கள் வாங்குவது என்னவோ கண்ணாடி வளையல்களும், ‘இமிட்டேஷன்’ நகைகளும் தான்!

ஆம்! பெண்கள் ‘இமிட்டேஷ’னில் உள்ளத்தைப் பறி கொடுத்து விடுகிறார்கள். இதைப்போலத்தான் விமலாவும் அண்ணாமலையிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தாள் அவன் ஒரு ‘இமிட்டேஷன்’- ‘டால்’ அடிக்கும் பட்டை தீட்டப்பட்ட கண்ணாடி-என்பதை அறியாமல்! பெண்களைப் போலத்தான் சில ஆண்களும் அவளுடைய அழகையும் ‘மேக்-அப்’ பையும் அளக்கிறார்களேயன்றி உள்ளத்தை, அவளுடைய பண்பை அளப்பதில்லை. சிலர் காதல் செய்யப் பழகிக்கொள்கிறார்கள்; பழக்குகிறார்கள். ஆனால் இதற்கு எத்தனை பேர் பலியாகிறார்கள் தெரியுமா?

பாவம்! விமலா அண்ணாமலைப் படுமடுவிலே வீழ்ந்து விட்டாள், குளிர் நீரோடை என்றெண்ணி! அவள் மேலும் தப்பில்லை. அவள் என்ன செய்வாள்? அவள் ஒரு காம்பொடிக்கப்பட்ட குண்டு மல்லிகை. மலர் செடியிலிருந்து பறிக்கப்பட்டதேயொழிய, மணத்திலிருந்து பறிக்கப்படவில்லை... இன்னும் வாசனை வீசிக்கொண்டேதான் இருக்கிறது.ஆம்.. அவள் ஒரு இளம் விதவை. ஆனால் அவளுடைய பெற்றோர்கள் புத்திசாலிகள்; அஞ்சாத நெஞ்சர்கள். அதனால்தான் கல்லூரியிலே சேர்த்து விட்டனர், விமலாவை!

இந்தக்கன்னிகல்லூரியிலேதான் சிக்கினாள் அண்ணாமலையிடம். அவனுடைய அழகை ரசிக்கும் தன்மைக்கு இரையானாள் விமலா விமலாவின் மனோ நிலையை அறியாது அழகி வேட்டையாடுகிறான் அண்ணாமலை. அவன் ஒரு குண்டுமல்லிகையை முகர்ந்து கொண்டிருக்கும் போதே மற்றொரு ரோஜாவுக்கு ஆசைப்பட்டான். அங்கேதான் அண்ணாமலை ஒரு பெருத்த கொலை செய்து விட்டான். ஆம்! அந்த மலரைக் கசக்கிவிட்டான்.

பாவம்! விமலா கெடுக்கப்பட்டாள். இன்னும் ஒன்பது மாதத்தில் அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகி விடுவாள்.

இப்போது அண்ணாமலை விமலாவைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவனுக்குத்தான் எத்தனையோ விமலாக்கள் ‘சந்தை’யிலே கிடைக்கிறார்களே!

விமலா அழுதாள்; புரண்டாள். ஆனால், பலன்...? அண்ணாமலை அவளைத் திரும்பியே பார்ப்பதில்லை. வகுப்பு முடிந்ததும் அவளைப் பார்க்காமலே எழுந்து சென்றுவிடுவான், வேறொரு பக்கமாக!

கிளி பாய்வதில்லையா மரத்துக்கு மரம்! எந்த மரம் பச்சையாக இருக்கின்றதோ, அந்த மரத்துக்குத்தான் தாவும் பச்சைக் கிளி. அண்ணாமலையும் அப்படித்தான்! அவன் அழகியாகப் பார்த்துத் தாவுகிறான். அவன் ஒரு தொத்துக்கிளி. அந்த மரம் அல்லவா முன்பே ஆராய்ந்து தெளிய வேண்டும். அது நிரந்தரமாகத் தங்கக் கூடிய கிளியாவென்று. எண்ணத் தவறினாள் விமலா; அந்தோ. அவதிப்படுகிறாள்!

விமலா மெள்ள மெள்ள அறிந்துகொண்டாள் அண்ணாமலையின் ரகசியத்தை. அவள் புலியானாள்! அவள் முன்னே கண்ணகியும், மாதவியும் வந்து வந்து போயினர். மணிமேகலை அமுதசுரபியுடன் காட்சிதந்தாள். நல்லதங்காள் தற்கொலைக்கு முயற்சிப்பதையும் பார்த்தாள். அவள் உடம்பு ஒருமுறை வியர்த்துப் பின் சில்லிட்டது. அவள் இதயத்திலிருந்து இரத்தம் புது வேகத்துடன் பாய்ந்தது உடலிலெல்லாம்.

“அவன் அழகாயிருப்பதால் தானே அவன் வலையில் நான் வீழ்ந்தேன். தத்தளிக்கிறேன். அவன் அழகாயிருப்பதால் தானே பல பெண்களைக் கெடுக்கிறான். அவன் அழகைக் கெடுத்துவிட்டால்...?” என்னென்னவோ எண்ணிக்கொண்டே சென்றாள், விமலா கல்லூரிக்கு.

‘கெமிஸ்ட்ரி பிராக்டிகல்’ நடந்துகொண்டிருந்தது. பையன் ஒருவன் கண்ணாடிக் குவளையை உடைத்ததைப் பற்றி விசாரணை செய்து கொண்டிருந்தார் பேராசிரியர். விமலா முக்கி முனகிக் கொண்டே சோதனையைச் செய்து கொண்டிருந்தாள். என்ன வென்று கேட்டவர்களுக்கு வயிற்றுவலியைக் காரணமாகச் சொல்லிக் கொண்டிருந்த அவளுக்கல்லவா தெரியும் நடந்ததும், இனி நடக்கப்போவதும்.

அண்ணாமலை ஒரு மூலையில் சோதனை செய்து கொண்டிருந்தான். முன்பு போல இப்போது அவன் விமலாவைக் கவனிப்பதில்லை. விமலா மெதுவாகத் தன்னிடத்தை விட்டு நகர்ந்தாள். அணையப் போகும் விளக்கு பிரகாசத்துடன் எரிவதில்லையா? அதைப்போல அவள் முகத்திலே ஒரு ஒளி ; சிறு மகிழ்ச்சி காணப்பட்டது. அவள் கையிலே ஒரு பாட்டில் இருந்தது. விமலாவை மாணவர் யாரும் கவனிக்கவில்லை.

விமலா பாட்டிலை மெதுவாகத் திறந்தாள். கொஞ்சம் தயங்கினாள். நெருப்புக் குழியில் விழப்போகுமுன் அனலைக் கண்டு அஞ்சலாமா? கடலிலே குதிக்கத் தீர்மானித்தபின் அலையைக் கண்டா மனங் குலைவது? பாட்டிலில் உள்ளதை அண்ணாமலையின் முகத்திலே கொட்டினாள். ‘ஆ’ வென்று அலறி விழுந்தான் அண்ணாமலை. அவன் முகத்திலே கடுகு தாளிக்கப்பட்டது. அதே சமயத்தில் விமலாவும் கீழே சுருண்டு விழுந்தாள். ஆம்! அண்ணாமலை முகத்திலே விமலா ‘நைட்ரிக் ஆசிடை’க் கொட்டினாள், அவன் அழகு மடிவதற்காக. அவளும் குடித்து விட்டாள் குடல் அறுபடும் அளவுக்கு அக்கினித் திராவகத்தை! கெமிஸ்ட்ரி ஆய்வுக்கூடத்தில் ஒருத்தி இந்த உலகிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டிருந்தாள். ஒருவன் —தாமரையன்ன முகமுடையோன்— தன் அழகினால் அழகிகளைக் கெடுத்த அண்ணாமலை—குரூபியாக்கப்பட்டுக் கீழே கிடந்தான். இனி அவனைப் பெண்ணினம் திரும்பியே பார்க்காது; உதைத்துத் தள்ளிவிடும்!

எல்லா மாணவர்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. திகைத்துப் போனார்கள், அந்தத் தொத்துக்கிளி அண்ணாமலைக்கு மட்டும் தெரியும் அந்தக் காரணம்! அவன் முன்னே புதுவைப் புரட்சிக் கவிஞர் சிரித்தபடி நின்றார். அவர் உதடு அசைந்தது. “செல்வப் பிள்ளாய்! இன்று புவியில் பெண்கள் சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக்கொண்டனர்! விளையாட நினைத்து விட்டாய் ஊர்ப்பெண்கள் மேல்! பொல்லாத மானிடனே. மனச்சான்றுக்குள் புகுந்து கொள்வாய்! நிற்காதே!” கவிஞர் மறைந்துவிட்டார். அண்ணாமலை கண்களை இறுக மூடிக் கொண்டான், எரிச்சல் தாங்க மாட்டாமல்